• Home
  • About us
  • Contact us
  • Login
Sunday, January 29, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

சித்ர விசித்திரம்

by aalonmagarii
June 11, 2022
in கதை, சிறுகதை
0
இயல்புகள்

 

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

 

 

அத்தனை சாதாரணமாக, நடைப்பயின்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, கையிலிருக்கும் டார்ச் லைட்டை ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள் இதயா.

 

 

ஊரின் எல்லையில் அய்யனார் ஒரு பக்கம் கண்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க, சிறிது தூரத்தில் இடுகாட்டில் ஏதேதோ சத்தங்கள் வந்தபடி இருந்தது.

 

 

“ஏண்டி வீணா போனவளே….. இந்த நேரத்துல தான் இங்க வரணுமா? கண்டது எல்லாம் கத்துது….. வாடி வீட்டுக்கு போலாம்”, பயத்தில் நடுங்கியபடி இருக்கும் கரங்களைச்  சால்வையினுள் ஒளித்துக் கொண்டு அழைத்தாள் தோழி சப்தனிகா.

 

 

“இரு சகா…. அவன் வந்துடுவான்… இன்னிக்கு விட்டா அப்பறம் அந்த ஆள பிடிக்கறது கஷ்டம்”, என ரோட்டைப்  பார்த்துக் கொண்டே பதிலளித்தாள் இதயா.

 

 

“இப்ப அந்த எழவெடுத்தவன ஏன்டி வரசொன்ன? இந்த கன்றாவி ஆராய்ச்சி பந்தயம் எல்லாம் தேவையா? இருக்கற ஏழரை பத்தாதுன்னு நீ மலை ஏறி வேற சுமந்துட்டு வரப்போறியா? இதுக்கு அந்த நாதாரி வேற உனக்கு ஹெல்ப் பண்றானா? வரட்டும் வச்சிக்கறேன் அவன…..”, என சப்தனிகா கடுகடுத்தாள்.

 

 

“உனக்கு ஓக்கேன்னா எனக்கும் ஓகே பேபி”, எனக் கூறியபடி அவளின் பின்னிருந்து குதித்தான் அவர்களின் நண்பன்  நாகேஷ்.

 

 

“அடி செருப்பால….. பண்ணாட …  பரதேசி….” இன்னும் பல நல்ல வார்த்தைகளில் அவனை அர்ச்சித்துவிட்டு ,” ஏன்டா அவ தான் அறிவில்லாம சொல்றான்னா நீயும் சேர்ந்துட்டு ஆடுரியா? எதாவது எக்குதப்பா நடந்தா யாருடா அவஸ்தை படறது ?”, சப்தனிகா மூச்சு வாங்க திட்டினாள்.

 

 

“சகா … ரிலாக்ஸ்…. நாகி ஆளு எங்க?”, இதயா.

 

 

“அமாவாசை அன்னிக்கு பகல்  பண்ணிரண்டு மணிக்கு அந்த மலைக்கு வரசொல்லி இருக்காரு. அந்த ஆள சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரிச்சி தயா. எதுக்குமே அசரல அவன். அப்பறம் பாட்டி ஆசை தாத்தா கனவுன்னு ரீல் ஓட்டி அங்க கூட்டிட்டு போக சம்மதம் வாங்கி இருக்கேன். மூனு பேர் வரலாம்னு சொல்லிட்டான்”, நாகேஷ்.

 

 

“சூப்பர் நாகி….. நாம மூனு பேரும் போலாம்”, இதயா கூறித் துள்ளிக் குதித்தாள்.

 

 

“நான்லா வரமாட்டேன்  உங்களையும் போக விடமாட்டேன். இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் தயா…. எல்லாமே உனக்கு விளையாட்டா இருக்கா? எதாவது தப்பா நடந்தா வீட்ல என்ன சொல்றது? “, சப்தனிகா அவள் மேல் இருக்கும் அக்கறையில் கேட்டாள்.

 

 

“சட்அப்  சகா. வீட்ட பத்தி பேசாத. நீங்க யாரும் வரவேணாம் நானே போய்க்கறேன்”, எனக் கூறி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள் இதயா.

 

 

“அப்படி எல்லாம் விடமுடியாது…  நீயும் போகாத… டேய் வெளங்காதவனே வாய தொறந்து சொல்லு அது எவ்ளோ ரிஸ்க்னு”, என நாகேஷை இடித்தாள் சப்தனிகா.

 

 

“தயா… சகா சொல்றதும் சரிதான். ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கணும்? நாம வேற பக்கம் பழங்கால பொருள தேடலாமே”, நாகேஷ்.

 

 

“நோ நாகி….  எனக்கு அந்த குகைல இருக்கற பொருள் தான் வேணும். இதுவரை நம்ம டிபார்ட்மெண்ட்ல எத்தனை பேர் எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்க முடியாமயே இருக்கு. அதை நாம எடுத்து காட்டணும்”, இதயா உறுதியாக கூறிவிட்டு தாங்கள் தங்கியிருக்கும் வீட்டை நோக்கி நடந்தாள்.

 

 

சப்தனிகா புலம்பியபடி வர, நாகேஷ் முழித்தபடி அவளிடம் வசை வாங்கியபடியே வந்தான்.

 

 

இதயா….. சுமாரான அழகுடன், சற்றே அதிகமான தைரியத்துடன், எப்போதும் சாகசத்தை விரும்பும் பெண்.

 

 

சப்தனிகா….. யாரையும் மறுமுறை  திரும்பி பார்க்க வைக்கும் பளிச்சென்ற முகம், சராசரியான குணாதிசயங்கள் நிறைந்தவள். இதயாவின் ஆருயிர் தோழி.

 

 

நாகேஷ்….. அவர்களுடன் பயிலும் மாணவன், தோழன்.

 

 

இவர்கள் மூவரும் வரலாறு படிக்கும் மாணவர்கள். முதுகலை கடைசி வருடம் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

 

அந்த வருடம் அவர்கள் ஏதேனும் ஒரு பண்டைய கால பொருளோ, பண்டை மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இடம்பற்றிய கட்டுரையோ, மேலும் அவர்கள் பாடத்தில் வராத ஏதேனும் சிறந்த வரலாற்றைக்  கூற வேண்டும்.

 

 

அவர்கள் காலேஜ் அருகில் இருக்கும் ஊரில் பல ஆண்டுகளாக ஒரு குகை இருப்பதாகவும், அக்குகை வாசல் வரை ஒரு பூசாரி மட்டும் சென்று வாரத்தில் ஒரு நாள் பூஜை செய்து விட்டு வருவதாகக்  கேள்விப்  பட்டனர்.

 

 

இன்றுவரை பலர் அக்குகைக்குள் செல்ல முயன்று தோற்றுத் திரும்பியுள்ளனர். இன்னும் பலர் புதையல் இருப்பதாகப்  பரவிய வதந்தியை நம்பி தங்களது உயிரைப் பறக்கவிட்டனர்.

 

 

ஏதோ ஓர் அமானுஷ்யம் அக்குகையில் இருப்பதாக அனைவரும் நம்பியதால் யாரும் அந்தப் பக்கம் செல்வதில்லை.

 

 

இதயா வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அவளின் மேல் வஞ்சம் வைத்து அவளை அவமானப்படுத்த எண்ணி, இக்குகையில் இருந்து ஒரு பொருளோ அல்லது உள்ளே சென்று ஒரு புகைப்படமோ எடுத்து வந்துவிட்டால் அவள் திறமைசாலி என ஒப்புக் கொள்வதாகப் பந்தயம் வைத்தான்.

 

 

சாகசத்தை விரும்பும் இவளும் பந்தயத்தை ஒப்புக் கொண்டு அக்குகை வாசலை அடைய அங்கு செல்லும் பூசாரியைப் பிடித்துவிட்டாள்.

 

 

சப்தனிகா தான் கவலையிலும், பயத்திலும்  இதயாவையும் நாகேஷையும் ஓயாமல் வசை பாடிக்கொண்டே இருந்தாள் அப்பொழுதிலிருந்து…

 

 

அமாவாசைக்காக இதயா காத்திருக்க ஆரம்பித்தாள்…

 

 

இரண்டு நாட்களில் அமாவாசையும் வர இதயா உற்சாகமாக வேண்டிய உபகரணங்களுடன் கிளம்பினாள்.

 

 

திட்டியபடியே சப்தனிகாவும் , நாகேஷையும் இழுத்துக் கொண்டு பதினோரு மணிக்கே மூவரும் இடுகாட்டில் காத்திருந்தனர் அந்த பூசாரிக்காக…..

 

 

“இப்பவே இங்க வந்து நிக்கணுமாடி? அந்த ஆளு 12 மணிக்கு தானே வர சொன்னான்”, சப்தனிகா சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கேட்டாள்.

 

 

“அந்த ஆளு விட்டுட்டு போயிட்டா என்ன பண்றது? அதான் சேப்டிக்கு முன்னாடியே வந்துட்டோம் சகா”, இதயா.

 

 

“வேற பக்கமாது போய் நிக்கலாம் தயா… “, சப்தனிகா.

 

 

“இது தான் வழி சகா. வேற பக்கம் நின்னா மிஸ் பண்ண வாய்ப்பு இருக்கு”, இதயா இதற்கும் பதில் கூறினாள்.

 

 

“இந்தா நிக்கறானே இவன இங்க நிக்க வச்சிட்டு நாம அந்த பக்கமா போய் நிக்கலாம்”, சப்தனிகா நாகேஷைக் காட்டிக்  கேட்டாள்.

 

 

“நோ நோ நோ….. மூனு பேரூம் ஒன்னா தான் நிக்கணும். என்னை தனியா விடற வேலை எல்லாம் வேணாம். இங்க பாரு தயா இப்பவே சொல்லிட்டேன், நான் வாசல் வரைக்கும் தான் வருவேன். வெளியவே போட்டோ எடுத்துட்டு நாம உடனே வந்துடனும்.. புரியுதா?”, நாகேஷ்.

 

 

“சரி சரி…. இன்னும் அந்த ஆள காணோம். அந்த ஆளுக்கு குடுக்க வேண்டியது எங்க?”, இதயா.

 

 

“இதோ இந்த பைல இரண்டு புல், நாலு சுருட்டு கட்டு, இரண்டு கவுளி வெத்தலை இருக்கு”,  நாகேஷ்.

 

 

“கொட்ட பாக்க ஏன் விட்ட? அதையும் வாங்க வேண்டியது தானு?”, சப்தனிகா கடுப்பாக கேட்டாள்.

 

 

“அட ஆமா அத மறந்துட்டேனே… அதுக்கு பதில் நிஜாம் பாக்கு வாங்கிட்டேன் சகா பேபி”, நாகேஷ்.

 

 

“டேய்… இன்னொரு தடவை என்னை பேபின்னு சொன்ன உன்ன இங்கயே புதைச்சிடுவேன் பாத்துக்க”,  சப்தனிகா விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

 

“இரண்டு பேரும் கம்முனு இருங்க”, இதயா அதட்டவும் அமைதியாகினர்.

 

 

அந்த பூசாரி 11.45க்கு வந்தான் கையில் சில பூஜை பொருட்களோடு….

 

 

அந்த பூசாரி வந்ததும் அனைவரும் அவரின் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.

 

 

முதலில் அவர் இடுகாட்டிற்கு நடுவே இருக்கும் ஒரு மண்டபத்தை நோக்கிச்  சென்றார்.

 

 

அதைக் கண்ட சப்தனிகா,”டேய் எரும… ஏன்டா அந்த ஆளு அங்க போறான்? மலைக்கு வழி இந்த பக்கம் தானே?”, என நாகேஷைக் கேட்டாள்.

 

 

“தெர்ல சகா… கேட்டு சொல்றேன் இரு”,  என அவளின் பின்னே வந்துக்கொண்டு இருந்தவன் அவளைக் கடந்து அந்த பூசாரியிடம் சென்றான்.

 

 

“ஏங்க சாமி இங்க போறீங்க?”, நாகேஷ்.

 

 

“மலைக்கு போறதுக்கு முன்னாடி நடுகாட்ல இருக்கற மண்டபத்துல பூசை பண்ணி அனுமதி வாங்கிட்டு தான் போவோணும் கண்ணு. நீங்க ஏதோ பெரியவங்க ஆசை , விடாம கனவுல வராங்க அது இதுன்னு சொன்னீய… அதான் நானும் அந்த ஆத்மா சாந்தியடைய உங்கள வரசொல்லிட்டேன். இங்க உத்தரவு கிடைக்கலன்னா அப்படியே நீங்க வீட்டுக்கு திரும்பிடணும். மீறி என்கூட மலைக்கு வரக்கூடாது .. புரியுதுங்களா?”, என பூசாரி விளக்கம் கொடுத்தார்.

 

 

இதைக் கேட்டதும் இதயா,”இது நீங்க நேத்து சொல்லி இருக்கலாம்ல ஐயா… இப்ப வந்து சொன்னா எப்படி? அனுமதி எப்படி கிடைக்கும்? நீங்க என்ன பண்ணுவீங்க? எங்கள மலைக்கு கூட்டிட்டு போறேன் வாக்கு குடுத்து இருக்கீங்க. நீங்க கூட்டிட்டு போய் தான் ஆகணும்”, இதயா படபடத்தாள்.

 

 

“ஏய்… அந்தாளு தான் பர்மிசன் கிடைக்கலன்னா கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்றாரே…. விடேன்டி…. ஏன் இப்படி வரிஞ்சி கட்டிகிட்டு நிக்கற போயே ஆகணும்னு”, சப்தனிகா மெல்லிய குரலில் அவளை திட்டினாள்.

 

 

“நான் முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கு அந்த குகைக்கு போயே ஆகணும். அந்த ஆளு கூட்டிட்டு போனாலும் சரி மாட்டேன்னு சொன்னாலும் சரி. நான் விட்றதா இல்ல”, இதயா தீவிரமாக கூறிவிட்டு முன்னே நடந்தாள்.

 

 

“பாவி பாவி… இவ கூட சேந்ததுல இருந்து ஒரு நாளாவது நிம்மதியா இருக்க விட்றாளா? எல்லாம் நேரம். வந்து சேர்ந்திருக்கா பாரு எனக்குன்னே….. இவள …. நில்லுடி… தனியா விட்டுட்டு போகாத… எங்க போனாலும் கூட்டிட்டே போ… தனியா சாவறதுக்கு உன் கூடவே வந்து சாவறேன்”, என கத்தியபடியே வேகமாக அவளை தொடர்ந்து ஓடி வந்தாள்.

 

 

“இங்க வடக்க பாத்து வரிசையா நில்லுங்க புள்ளைங்களா”, என பூசாரிக் கூற இதயா முதலில் சென்று நின்றாள், அவளருகில் சப்தனிகா கடைசியாக நாகேஷ் வந்து நின்றான்.

 

 

மூவரையும் வரிசையாக நிற்கவைத்து விட்டு, பூசாரி அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் இருந்த அறைக்குச் சென்று சில பொருட்களை கொண்டு வந்து முன்னால் வைத்து விட்டு, கொண்டு வந்த தேங்காய் இரண்டு வாழைப் பழம் ஊதுபத்தி கற்பூரம் எடுத்து காட்டினார்.

 

 

சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருட்களில் சதுரமாக இருந்த டப்பாவை திறந்து ஒரு பூவை உள்ளே வைத்து மூடி, இடதுபக்க தூணின் அருகில் சென்று அதை ஒன்பது முறை வலம் வந்து அந்த பெட்டியைத்  திறந்துப்  பார்த்தார்.

 

 

அவர் உள்ளே வைத்த பூ எட்டாக பெருகி இருந்தது. அதைப் பார்த்துக் குழம்பியவர் அவர்கள் அருகில் வந்தார்.

 

 

“இந்தாங்க தாயி…. வழக்கமா நான் வைக்கற பூ இரண்டா வரும் ஒன்ன இங்க வச்சிட்டு ஒன்ன கைல கொண்டு போவேன். இன்னிக்கு நீங்க அங்க வரதுக்கு உத்தரவு இருக்கறதால தான் இத்தனை பூவா வந்திருக்கு…. எல்லாரும் அவங்கவங்க குலசாமிய நினைச்சிகிட்டு இந்த பூவுல ஒன்ன கைல வச்சிட்டு, இன்னொன்ன இந்த தூணுல வைங்க”, எனக் கூறி ஆளுக்கு இரண்டு பூக்களைக் கொடுத்தார்.

 

 

இதயா சந்தோஷமாக ஒன்றை தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இன்னொன்றை அந்த தூணில் வைத்தாள். அதே போல அனைவரும் வணங்கிவிட்டு மலையேறும் பாதைக்கு திரும்பினர்.
பத்து கிலோமீட்டர் தூரம் அம்மலையில் ஏறியவர்கள் குகை அருகில் வந்ததும் அங்கிருந்த வித்தியாசமான சிற்பங்களைக் கண்டு அதிசயித்து நின்றனர்.

 

 

“ஏய்…. என்னடி நடுகாட்ல இப்படி ஒரு சிற்பம் நிக்குது….”, சப்தனிகா ஆச்சரியமாக இதயாவைப் பார்த்துக் கேட்டாள்.

 

 

“இது தான் வாசல தொறக்கற கீன்னு நினைக்கறேன் சகா. நாகி அந்த சிலைகிட்ட போய் பாரு எதாவது அழுத்தினா உள்ள போகுதான்னு”, இதயா கூறிவிட்டு அவளும் ஒருபக்கம் இருந்த சிலையைத்  தடவியபடி அழுத்தி அழுத்திப்  பார்த்தாள்.

 

 

சப்தனிகாவும் இன்னொருபக்கம் இருந்த சிலைக்கு அருகில் சென்று எதாவது அகப்படுகிறதா எனத் தேடினாள்.

 

 

அங்கே மொத்தம் மூன்று சிலைகள் இருந்தன. மூன்றும் மூன்று திசையில் திரும்பி நின்றிருத்தது.

 

 

அது ஆண்சிலையா பெண் சிலையா என்பதையே அவர்களால் யூகிக்கமுடியாத அளவிற்கு மூன்றும் அமைந்திருந்தது. மூன்று சிலைகளின் கைகளிலும் வாள், ராஜ அலங்காரம், தலையில் ஒரே போல முண்டாசு கட்டியிருந்தது. முகத்தில் மென்னகை தவழ்ந்தது. நம் முன்னோர்களால் மட்டுமே சிலைக்கும் உயிர்ப்பு கொடுத்து செதுக்க இயலும் என்று இதயா கோடி முறையாக இன்றும் சப்தனிகாவிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.

 

 

“பாத்தியா சகா எவ்வளவு அழகா உயிரோட்டத்தோட இருக்கு மூனு சிலையும்… ஆனா ஏன் மூனும் ஒவ்வொரு திசைல திரும்பி நின்னுட்டு இருக்கு?”, இதயா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

 

 

“எதாவது காரணம் இருக்கும் தயா. குகைக்கு சில அடி தூரம் முன்னாடி இப்படியொரு சிலையை வச்சிருக்கறதுக்கு முக்கியமான காரணம் இருக்கும்னு தான் தோணுது”, சப்தனிகா.

 

 

“கண்டிப்பா இருக்கு சப்தனிகா…. உன் பிரண்ட் இந்நேரம் இதை பத்தி நல்லா ஆழமா யோசிச்சி ஒரு முடிவுக்கும் வந்திருப்பான்னு நினைக்கறேன்”, எனக் கூறியபடி அவர்கள் பின்னே இருந்த புதரில் இருந்து வெளிவந்தான் அவன்.

 

 

“ஏய்… நீயா? நீ எதுக்கு இங்க வந்த?”,சப்தனிகா அவனைக் கேட்க, இதயா அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

 

 

“என்ன மச்சான்…. நான் முன்னயே இங்க வந்தது பத்தி உன் பிரண்ட்ஸ் கிட்ட நீ சொல்லவே இல்லியா?”, எனக் நாகேஷைப் பார்த்துக்  கேட்டான் அவன்.

 

 

“யாரு தம்பி நீ ? இங்க எப்ப வந்த? அனுமதி இல்லாம இங்கல்லாம் வரக்கூடாது தெரியுமா?”, பூசாரி அவனைக் கண்டுப்  பதற்றமாகக் கேட்டார்.

 

 

“நான் வேற வழில வந்தேன் பூசாரி ஐயா. இவங்களோட சிநேகிதன் தான் நானும். போலாம் வாங்க”, என அவன் முன்னே நடக்கத் தொடங்கினான்.

 

 

நாகேஷ் திருதிருவென்று முழித்தபடி இதயா அருகில் வந்து நின்றான்,“அவன் நம்ம சேப்டிக்காக வரேன்னு சொன்னான் தயா. நானும் அதான் சரின்னு சொல்லி டைம் சொல்லிட்டேன்”, நாகேஷ் தயங்கித்  தயங்கிக்  கூறினான்.

 

 

“என் வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டியா இல்ல இவனுக்கு மட்டும் சொன்னியா?”, இதயா கோபத்தில் கண்கள் சிவக்கக் கேட்டாள்.

 

 

“யாருக்கும் நான் எதுவும் சொல்லல தயூ…. நானும் யார்கிட்டயும் சொல்லாம தான் கிளம்பி வந்தேன்”, அவன் திரும்பி வந்து பதிலளித்தான்.

 

 

அவன்….. அவளின் அத்தை மகன்… அதியன் கோவர்த்தனகிரி….

 

 

அவர்கள் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் என நிறைய இருந்தது.

 

 

சிறுவயது முதலே அதையெல்லாம் வெறுத்தவள் அப்பொழுதே விடுதியில் தங்கிப்  படிக்க ஆரம்பித்தாள்.

 

 

அவள்…. இதயா என்கிற உதரதி இதய யாழிசைதேவி…..

 

 

பெருஞ்செம்பிய வேந்தன் அவள் தந்தை. தாயார் நித்திய ஞானிசைவள்ளியார்….. அவள் பிறந்ததும் பரலோகப் பதவி அடைந்து விட்டார்.

 

 

பெருஞ்செம்பியரும் தன் மகளே போதும் என மறுமணம் செய்யாமல் இருந்தார் சில வருடங்கள்.

 

 

அவளுக்கு 7 வயதான போது அவளின் பாட்டி, தந்தையைப் பெற்றவர் வற்புறுத்தி ஜமீனுக்கு வாரிசு வேண்டும் என சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைத்தார் பல போராட்டங்களுக்குப் பிறகு.

 

 

வழக்கமான சித்தியின் கொடுமை இல்லாவிட்டாலும், தாயிடம் எதிர்ப்பாக்கும் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடினாள்.

 

 

அந்த பெண்ணிற்கும் இரட்டை பெண் குழந்தைகளே பிறந்தது. அவளின் தந்தை அவளை விட அதிக நேரம் அந்த சிறுக் குழந்தைகளுடன் செலுத்தினார். அவளின் சித்தியும் அவளை நல்முறையிலேயே கவனித்துக் கொண்டார், ஆனாலும் அவளுக்குத் தேவையான அன்பு கிடைக்காமல் பாட்டியிடம் இருந்து தேவையற்ற ஏச்சும், பேச்சும் கட்டுப்பாடுகளும், அவளை அச்சிறுவயதிலேயே அந்த வீட்டையும் , வீட்டில் உள்ளவர்களையும் வெறுக்க வைத்தது.

 

 

10 வயதில்  விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தவள் இன்று வரை வெளியிலேயே தங்கிப் படிக்கிறாள்.

 

 

விடுமுறை விட்டாலும் வீட்டிற்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி விடுவாள். வருடம் ஒரு முறை தந்தையைப் பார்ப்பாள், அவளின் தங்கைகளைப் தூரமாக நின்று பார்த்துவிட்டு தன் அறைக்குள் வந்துவிடுவாள்.

 

 

சித்தியைப் பெற்ற தாயும் அங்கேயே தங்கியிருக்க , இதயாவிற்கு எங்கும் செல்ல முடியாத நிலை, பத்து நாட்கள் அவ்வீட்டில் இருந்தாலும் நரகமாய் தோன்றும்…

 

 

அந்த வயதில் அவளுக்கு பெரும் ஆறுதல் அதியன் தான்…..

 

 

அவள் விடுமுறைக்கு வந்தால் மட்டுமே அவனும் அந்த வீட்டிற்கு தன் தாயுடன் வருவான்.

 

 

அதியனின் தாய் காட்டும் பாசத்திற்காகவே இதயாவும் அவர்களுக்காக வீட்டிற்குச் செல்வாள்.

 

 

பத்து நாட்கள் இங்கிருந்தால் மற்ற விடுமுறை நாட்கள் அனைத்தும் அவள் அதியனின் வீட்டில் தான் இருப்பாள்.

 

 

அதியனும் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. அவனுக்கு அன்பு பாசம் எல்லாம் அளவிற்கு அதிகமாகவே கிடைத்தது செல்லும் இடமெல்லாம்.

 

 

மாமா சடையவர்மன் கோவர்த்தனகிரி….. அத்தை விஜயலஷ்மி தேவி…. அவர் ஒருவர் தான் அவளுக்கு அன்பு காட்டும் ஒரே ஜீவன். அவர் சொல்லுக்கு என்றும் கட்டுப்படுவாள்.

 

 

இதயாவின் தந்தை தொழிலில் கவனம் செலுத்த தொடங்கியதும் இதயாவிடம் பேசுவதே அரிதாகிப் போனது. அதிலும் அவள் வீட்டில் இருந்தாள் அவள் சித்தியின் தாயார் அவளை அவள் தந்தையைப் பார்க்கவே விடாமல் தடுத்துவிடுவார். அவருக்கு அவரின் பேத்திகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நினைப்பு…..

 

 

இறுதியாக இவள் இந்த விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றபோது நடந்த சம்பவம் தான் அவளை பெரிதும் பாதித்தது.

 

 

இம்முறை தந்தையிடம் தன் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக பேச வேண்டும் என்கிற முடிவோடு வீட்டிற்கு வந்தவள் தன் தங்கைகளைக் கண்டு அருகில் அழைத்தாள்.

 

 

“ஹாய்…. இரண்டு பேரும் என்ன க்ளாஸ் படிக்கறீங்க?”, என அருகில் அமர்ந்துக் கொண்டு விசாரித்தாள்.

 

 

இத்தனை ஆண்டுகளில் தன் அக்கா தங்களிடம் சிரித்துப் பேசி கண்டிராதவர்கள், அக்கா பேசுவதைக் கண்டு தங்கைகளும் அவளிடம் இயல்பாக ஒட்டிக் கொண்டு பத்தாவது படிப்பதாக கூறினர்.

 

 

“குட்…. நல்லா படிக்கணும். டென்சன் ஆகாம எக்ஸாம் எழுதுங்க… அடுத்து என்ன எடுத்து படிக்கப் போறீங்க?”, இதயாவும் இயல்பாக பேச ஆரம்பித்தாள்.

 

 

“அடுத்து என்ன எடுக்கறதுன்னு எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. இவ டாக்டர் படிக்க போறாளாம் பயாலஜி எடுக்கறா”, என உடன் பிறந்தவளைக் கைக்காட்டினாள் அவள்.

 

 

“சாரி…. உங்கள்ள யாரு ஶ்ரீமதி, ஶ்ரீநிதி?”, இதயா.

 

 

“நான் ஶ்ரீநிதி. இவ ஶ்ரீமதி….”, என தங்களைப் பிரித்துக் காட்டினர் இரட்டையர் இருவரும்.

 

 

“ஶ்ரீமதி டாக்டர் ஆகப்போற… ஶ்ரீநிதி என்ன படிக்கலாம்னு இருக்க?”, இதயா.

 

 

“அவ தான் நிர்வாகம் பண்ணப்போறா…. உன்னப்போல அவங்க ஒன்னும் பொறுப்பு இல்லாம சுத்தமாட்டாங்க…. தங்கங்களா…. இங்க வாங்க…. பள்ளிகூடத்துல இருந்து வந்ததும் அந்த வெளங்காதவ கிட்ட என்ன பேச்சு?”, என சித்தியின் தாயார் அவளை ஏசியபடி பிள்ளைகளை அழைத்தார்.

 

 

“போ பாட்டி. நாங்க அக்கா கிட்ட பேசிட்டு தான் வருவோம். எங்கள எப்பவும் அக்கா கூட சேரவிடாம பண்றதே நீ தான்…. இந்த முறை உன் பேச்ச நாங்க கேக்கப் போறது இல்ல”, என ஶ்ரீமதி எதிர்த்துப் பேசினாள்.

 

 

“ஐயோ ஐயோ ஐயோ….. நான் என்ன பண்ணுவேன்? ஐஞ்சே நிமிஷத்துல புள்ளைங்கள என்னமோ பண்ணிட்டாளே இந்த சண்டாளி…. இத்தனை வருஷமா என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம இருந்த தங்கங்கள இப்படி எதிர்த்து பேச சொல்லிக் குடுத்துட்டாளே”, என அந்த கிழவி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது.

 

 

அவரின் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே வர , சிறிது நேரத்தில் அந்த இடமே கலேபரம் ஆனது. அதைக் கண்டு இதயா எதிர்வாதம் புரிய அந்த கிழவி சத்தம் போட என இன்னும் சண்டை முற்ற, வேந்தன் மேலே இருந்து இறங்கி வந்தவர் இதயாவை ஒரு பார்வைப் பார்த்தார்.

 

 

“என்னாச்சி அத்தை? ஏன் இப்படி அழுதிட்டு இருக்கீங்க?”, வேந்தன்.

 

 

“நான் உடனே இந்த வீட்ட விட்டுப் போறேன் மாப்பிள்ளை. பொண்ண குடுத்த எடத்துல நிரந்தரமா தங்கினது தப்பு தான். உங்க மூத்த பொண்ணு என்னைப் பார்த்து என்ன என்னவோ கேட்டுட்டா…. பேசிட்டா…. இதுக்கு மேலயும் என்னால இங்க இருக்க முடியாது”, என கிழவி அப்படியே நடந்ததை மாற்றி ஒப்பாரி வைத்தது.

 

 

அதைக் கேட்ட பெருஞ்செம்பிய வேந்தன், ” வெளிய தங்கினா நம்ம பாரம்பரியம் மறந்து போகுமா யாழிசைதேவி? அவங்க உன் பாட்டி…. அவங்கள எதிர்த்து பேசற அளவுக்கு நீ வளர்ந்துட்டியா?”, என இதயாவிடம் தன் கோபத்தைக் காட்டினார்.

 

 

“இல்லப்பா… நான் தங்கச்சிங்க….”, என ஆரம்பித்தவளைப் பேச விடாமல் அந்த கிழவி மீண்டும் ஒப்பாரியை ஆரம்பித்தது, ” மாப்பிள்ளை அவளுக்கு என் பேத்திங்க மேல பொறாமை. அவங்க மேல  மட்டுமே நீங்க அன்பா இருக்கீங்களாம்…. அதனால அந்த சின்ன பொண்ணுங்க மனசுல நஞ்ச விதைக்கப் பாக்கறா மாப்பிள்ளை… இத்தனை வருஷம் சொல்பேச்சு கேட்டு நடந்த புள்ளைங்க இன்னிக்கு எதிர்த்து பேசுதுங்க…. ஏன் இப்படி தப்பான விஷயத்த சொல்லித்தரன்னு கேட்டதுக்கு என்னை என்னவெல்லாமோ சொல்லிட்டா மாப்பிள்ளை….”, என முந்தானையை வாயினில் வைத்து மூடியபடி அழ ஆரம்பித்தது.

 

 

“உதரதி இதய யாழிசை தேவி…. நீ இந்த ஜமீனோட வாரிசு. உன் தரம் எப்பவும் தாழ்ந்து போகாதுன்னு நினைச்சேன். ஆனா நீ….. இனிமே இந்த வீட்டுக்குள்ள நீ வரணும்னா நம்ம பாரம்பரிய போட்டில நீ ஜெயிக்கணும். இல்லைன்னா உன்ன இந்த ஜமீன் வாரிசு இல்லைன்னு சொல்ல வேண்டியதா இருக்கும்”, என கோபத்தில் வார்த்தையை விட்டார் வேந்தன்.

 

 

“அண்ணா…….”,என விஜயலஷ்மி தேவி சத்தம் போட்டார்.

 

 

“வாம்மா…. பிரயாணம் சவுகரியமா இருந்ததா? அதியன் எங்க?”, வேந்தன் பேச்சை மாற்றினார்.

 

 

“நீ இப்ப என்ன சொல்லிட்டு இருந்த? இவ இந்த வீட்டோட மூத்த வாரிசு…. என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்காம இப்படிதான் வார்த்தை விடுவியா?”, விஜயலஷ்மி கடுங்கோபத்தில் கேட்டார்.

 

 

“இல்லம்மா அவ அத்தையை…..”, என அவர் பேச ஆரம்பிக்க கைநீட்டி தடுத்தவள் ,ஶ்ரீமதியை அருகில் அழைத்து ,” நடந்தது என்னனு ஒன்னு விடாம சொல்லு மதி”, எனக் கூறினார்.

 

 

ஶ்ரீமதி இப்பொழுது நடந்தது மட்டுமின்றி இதயாவை எப்படியெல்லாம் இத்தனை ஆண்டுகள் நோகடித்தனர் என்பதையும் சேர்த்தே கூறினாள்.

 

 

வேந்தன் தன் மனைவியைப் பார்க்க , அவர் தலை குணிந்து கொண்டார்.

 

 

“உன்னை நம்பி தானே நான் வெளியவே இருந்துட்டேன்… உன்னால இதையெல்லாம் தடுக்கமுடியாதா? நீயும் அவள வதைக்கணும்னு தான் செஞ்சியா?”, எனக் கேட்டார்.

 

 

“இல்லைங்க…. என்னால என் அம்மாவை மீறி எதுவும் பேச முடியலைங்க. எங்கள தனியா விட்றுவீங்களோன்னு ஆரம்பத்துல நானும் அவங்க சொன்னதுக்கு தலையாட்டிட்டேன். அத்தையும் இதை தான் சொன்னாங்க. முடிஞ்சவரை அவள அவங்க திட்டுல இருந்து காப்பாத்த தான் விடுதில தங்கி படிக்கட்டும்னு உங்ககிட்ட சொன்னேன்…”, என அவர் கண்ணில் நீர் வழிந்தபடிக் கூறினார்.

 

 

“அம்மாவா? எங்க அவங்க?”, எனக் கேட்டார் வேந்தன் அதிர்ச்சியில்.

 

 

“இங்க தான் இருக்கேன் வேந்தா…. நான் தான் அப்படி அவள நடத்த சொன்னேன். அவ அம்மாவ நீ காதலிச்ச அதனால கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா அவள என்
மருமகளா எப்பவும் நான் ஏத்துகிட்டது இல்ல. அவள மாதிரியே இவளும் வளர்ந்தா, அதனால தான் உனக்கு கட்டாயப்படுத்தி இன்னொரு கல்யாணம் செஞ்சி வச்சேன். இவள இந்த குடும்பத்துல ஒருத்தியா என்னால நினைக்கவே முடியாது. அவள வெளிய அனுப்பிடு”, எனக் கூறினார் வேந்தனின் தாயார்.

 

 

“என்னம்மா பேசறீங்க? அவ என் பொண்ணு…. என்னோட இரத்தம்…. “, இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் கூறினார் வேந்தன்.

 

 

“அதுவே எனக்கு சந்தேகம் தான். உன் ஜாடையோ அவ ஜாடையோ அவ மூஞ்சில இருக்கா? அழகும் இல்ல ஒன்னும் இல்ல. ரொம்ப சுமாரா இருக்கா. யார் பெத்த புள்ளையோ? இவ பொறந்தத நானும் பாக்கல நீயும் பாக்கல. நாம போறப்ப உன் பொண்டாட்டி செத்துட்டா ஒரு நர்ஸ் தான் இந்த குழந்தைய கொடுத்தா… அதனால என்னால ஒத்துக்க முடியாது வேந்தா…. இவ இந்த வீட்டு வாரிசு இல்ல”, என மனதில் இத்தனை ஆண்டுகள் இருந்த வஞ்சத்தைக் கொட்டிவிட்டார் வேந்தனின் தாயார்.

 

 

“போதும் நிறுத்துங்க….. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேணாம். அந்த போட்டி என்ன? அத சொல்லுங்க… நான் உங்க இரத்தம் தான்னு நிரூபிச்சி காட்றேன்…”,, இதயா மனதின் வலியை முகத்திலும் காட்டாது கேட்டாள்.

 

 

“நீ படிக்கற ஊருக்கு பக்கத்துல இருக்கற மலைல ஒரு குகை இருக்கு அதை திறக்கணும். அங்க இருந்து ஒரு தங்க பாத்திரத்துல ரத்தினகற்கள் இருக்கும். இதுவரைக்கும் நாற்பத்தி ஒன்பது குடம் இங்க கொண்டு வந்துட்டாங்க. நீ இந்த குடும்ப வாரிசா இருந்தா ஐம்பதாவது குடத்த எடுத்துட்டு வரணும். இந்த குடும்ப வாரிசுங்களுக்கு மட்டும் தான் அங்க போக அனுமதி கிடைக்கும், போயிட்டு உயிரோடவும் திரும்பி வரமுடியும். ஒரே முயற்சில இதை நீ செஞ்சிட்டா நான் ஒத்துக்கறேன் இந்த குடும்ப இரத்தம் தான் உன் உடம்புல ஓடுதுன்னு”, எனக் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டார் அவர்.

 

 

வேந்தன் மனம் நொந்து தன் மகளைப் பார்க்க இதயா அப்பொழுதே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

 

 

“நல்லா கவனிக்கற அண்ணா உன் குடும்பத்த….  அவள இதுக்கு மேல நான் இங்க அனுப்ப மாட்டேன். அவ என் மருமக… நானே அவளோட எல்லா பொறுப்பையும் எடுத்துக்கறேன். வரேன்”, என கூறிவிட்டு வந்த வேகத்தில் திரும்பினார் விஜயலஷ்மி.

 

 

“ரதிக்குட்டி…. இருடா….அத்தை வரேன்…. நம்ம வீட்டுக்கு போலாம்….”, என அவளைத் துரத்தியபடி வந்தார் விஜயலஷ்மி.

 

 

“நான் காலேஜ் போறேன் அத்தை. அந்த குகைல இருந்து அவங்க சொன்னத எடுத்துட்டு வந்துட்டு உங்கள பாக்கறேன். என்னை கட்டாயப்படுத்தாதீங்க…. நான் போறேன்”, எனக் கிளம்பி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

 

 

அதன் பிறகு மூன்று மாதமாக யாரிடமும் பேசவில்லை. அதியனிடமும் பேசவில்லை.

 

 

இன்று இவன் வந்து நிற்கவும் நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்து அவளை கொதிநிலைக்கு ஆளாக்கியது …

 

 

அதியன் கூற சப்தனிகாவும் நாகேஷூம் இதைத் தெரிந்து கொண்டபின் தான் இவள் ஏன் இங்கே வருவதற்கு இத்தனை அடம் பிடித்தாள் என்பதைப் புரிந்துக் கொண்டனர்.

 

 

“சரி வாங்க போலாம். இங்கயே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி? அந்த பூசாரி வேற சீக்கிரமே திரும்பிடணும்னு சொல்லி இருக்காரு. ஆளுக்கு ஒரு கொடத்த எடுத்துட்டு போலாம் வாங்க”, என நாகேஷ் கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.

 

 

“முதல்ல அத தொறக்கணும் மச்சி. தெரியுமா அதுக்கு வழி? “, அதியன்.

 

 

“அதுல்லாம் தயா புல்லா ரிசர்ச் பண்ணிட்டு தான் வந்து இருக்கா. அவளுக்கு தெரியும்”, நாகேஷ்.

 

 

“இது எப்படா? நானும் உங்க கூடவே தானு சுத்திட்டு இருக்கேன்”, சப்தனிகா வினவினாள்.

 

 

“மூனு மாசமா இந்த வேலை தான் லைப்ரரில பண்ணிட்டு இருக்கோம். அவ வம்சத்தோட ஆணிவேறயே பாத்தாச்சி”, நாகேஷ்.

 

 

“சரி வாங்க போலாம்”, சப்தனிகா எழுந்து சென்றாள்.

 

 

ஆனால் இதயா இருக்கும் இடம் விட்டு நகராமல் அப்படியே அந்த சிலையோடு சிலையாக அமர்ந்து இருந்தாள்.

 

 

“தயூ…..”,என அதியன் அவள் அருகில் வந்து அழைத்தான்.

 

 

“ஏன் அதி ? நீ துணைக்கு வந்தன்னு தெரிஞ்சா இன்னும் என்னவெல்லாம் சொல்வாங்க? இதுக்கு மேலயும் நான் அவங்க கிட்ட அசிங்கப்பட விரும்பல…. “, இதயா.

 

 

“தயூ…. உனக்கு தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு….. உங்க ஜமீனும் எங்க ஜமீனும் காலம் காலமா ஒன்னா தான் இருக்கு. நமக்கு ஒரே குலதெய்வம். ஒரே போல தான் எல்லா பழக்க வழக்கமும். நீ இந்த குகைய திறக்க எங்க ஜமீன்ல இருந்து ஒருத்தரும் உன்கூட இருந்தா தான் உன்னால இந்த குகைய திறக்க முடியும்”, என தான் வந்த காரணத்தைக் கூறினான் அதியன்.

 

 

இதயா சந்தேகமாகப் பார்க்க , அவள் கைகளில் ஒரு ஓலைச்சுவடியைக் கொடுத்தான் அதியன்.

 

 

“இது இல்லாம யாரும் உள்ள போக முடியாது. இது எங்க ஜமீனுக்கு மட்டும் தான் தெரியும். ஏதோ ஒரு காரணத்துக்காக நம்ம இரண்டு பரம்பரையும் ஒன்னாவே இருக்கு. ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இருக்கமுடியாது”, எனக் கூறினான் அதியன்.

 

 

அந்தச் சுவடியைப் படித்தவள் தன்னிடம் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்து இரண்டும் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உள்ளதை உணர்ந்தாள்.

 

 

பின் அவனுடன் அவளும் எழுந்து குகை நோக்கி நடந்தாள்.

 

 

“என்ன புள்ளைங்களா? இவ்வளவு நேரம் அங்கயே இருந்தா நாம எம்ப கிளம்பறது? சீக்கிரம் வந்து உங்க வேலைய பாருங்க இருட்றதுக்குள்ள கிளம்பணும்”, எனப் பூசாரி அவசரப்படுத்தினார்.

 

 

“ஐயா…. நாங்க கிளம்ப நேரமாகும் . நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்கறோம்”, என அதியன் கூறினான்.

 

 

“அப்படில்லாம் உங்கள தனியா விட்டுட்டு போக முடியாது தம்பி”, பூசாரி மறுத்தார்.

 

 

“ஐயா… இது எங்க பரம்பரைக்கு சொந்தமான இடம் தான். இராத்திரி தான் இங்க பூஜை பண்ணணும். பாருங்க பூஜைப் பொருளோட வந்திருக்கேன். நீங்க கிளம்புங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி”, என அதியன் நாகேஷிடம் சைகைக் காட்டி அவரை அந்தப் பக்கமாக அனுப்பினான்.

 

 

நாகேஷ் தான் கொண்டு வந்த பையை கொடுத்துவிட்டு, சில ஐநூறு ரூபாய் தாள்களையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தான்.

 

 

“அந்த பூசாரி போய்ட்டாறா?”, சப்தனிகா.

 

 

“ம்ம்…. சரி அதி… இப்ப என்ன பண்ணணும்?”, நாகேஷ்.

 

 

“இங்க பக்கத்துல குளம் இருக்கான்னு பாக்கணும்”, இதயா தன் கையில் இருந்த ஓலையும் தான் சேகரித்த தகவல்களையும் பார்த்துக்கொண்டே கூறினாள்.

 

 

சப்தனிகா அவள் அருகில் சென்று தான் இதைப் பார்த்துக் கூறுவதாகக் கூறி அவளை எழுப்பித் தேட அனுப்பினாள்.

 

 

குகைக்கு இடதுபக்கம் பத்து நிமிட நடையில் ஒரு குளம் இருந்ததற்கான அடையாளம் தெரிந்தது.

 

 

நாகேஷ் அதைப் பார்த்துவிட்டு குரல் கொடுக்க மற்ற மூவரும் அங்கே சென்றனர்.

 

 

“இங்க தென்மேற்கு மூலைல ஒரு சிம்மயாளி உருவம் இருக்கணும்”, சப்தனிகா தகவல் காகிதங்களைப் பார்த்தபடிக் கூறினாள்.

 

 

“தென்மேற்கா? எது தெற்கு இங்க?”, அதியன்.

 

 

அவர்களுக்கு இடது பக்கம் இதயா வேகமாக புதரை விலக்கியபடி நடந்தாள்.

 

 

ஐந்து நிமிட நடைக்குப் பிறகு புதர்களை வெட்டி சாய்த்தபடி சென்றதில் யாளி உருவம் இருந்தது.

 

 

“இது சிம்மயாளியா? “, நாகேஷ்.

 

 

“இல்ல இது மகர யாளி…. சிம்ம யாளி அந்த பக்கம் இருக்கா பாரு”, என இதயா கூற மீண்டும் தேடினர்.

 

 

“இங்க ஒரு சிலை இருக்கு”, என அதியன் அழைத்தான்.

 

 

ஒரு ஆள் குனிந்து செல்லும் உயரத்திற்கு மேல் சிம்மயாளி முகம் இருந்தது.

 

 

“இது தான்… அந்த இரண்டு பல்லையும் உள்ள தள்ளி அழுத்து தயா”, சப்தனிகா.

 

 

அதே போல அழுத்த ஒரு கதவு மகர யாளி அருகில் திறந்தது. அங்கே நன்றாக நிமிர்ந்து நடந்து செல்லும் அளவிற்கு உயரமாகவும், இருவர் நடந்து செல்லும் அளவு அகலமாகவும் இருந்தது.

 

 

நால்வரும் உள்ளே நுழையும் முன்னே டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டனர்.

 

 

முதலில் அதியன் நுழைய, அடுத்து இதயா அவளையடுத்து சப்தனிகா கடைசியாக நாகேஷ் உள்ளே நுழைந்தவுடன் கதவு மூடிக்கொண்டது.

 

 

“என்னடா கதவு லாக் ஆகிரிச்சி?”, சகா.

 

 

“ஒழுங்கான வழிய கண்டுபிடிக்கலன்னா இங்கயே நமக்கு சங்கு தான் “,என நாகேஷ் கூறினான்.

 

 

“பிசாசு பிசாசு… நல்லதாவே உன் வாய்ல வராதா? வாய மூடிட்டு வா இல்ல உன்ன நானே கொன்னுடுவேன் பாத்துக்க… இவன ஏன்டி கூட்டிட்டு வந்த இங்க? “, என இதயாவிடம் முறையிட்டாள் சகா அவனைத் திட்டிக்கொண்டே.

 

 

“கொஞ்ச நேரம் அமைதியா வாடி. அடுத்து என்னனு பாத்து சொல்லு முதல்ல”, என இதயா எரிச்சலாக கூறினாள்.

 

 

“இரு படிக்கறேன் ‘நாழிகை நேரம் நடந்தபின்னே கடல்கன்னியின் பாதம் பணிய திரவக துவாரம் தென்படும்’ன்னு போட்டிருக்கு தயா” சகா.

 

 

“நாழிகைன்னா 24 நிமிஷம். நாம உள்ள வந்து எத்தனை நிமிஷம் ஆகுது?”, இதயா.

 

 

“ஐஞ்சு நிமிஷம் ஆகுது” அதியன்.

 

 

“சரி நடக்கலாம் வாங்க…. “, இதயா.

 

 

“என்னடி இது இப்படி நடக்க வைக்குது? என் வையிட் ஒரே நாள்ல குறைச்சிடும் இப்படி நடந்துகிட்டே இருந்தா….. வெளிய போனதும் எனக்கு எல்லா ஊரு பிரியாணியும் வாங்கி தரணும் இப்பவே சொல்லிட்டேன்”,சப்தனிகா.

 

 

“நாங்க உங்களுக்கு வீட்ல பெரிய விருந்தே செஞ்சு போடறோம் சப்தனிகா. கவலைபடாதீங்க. தயூம்மா டிரஸ் கொண்டு வந்தியா?”, அதியன்.

 

 

“டிரஸ் எதுக்கு மச்சான்? இங்கயே தங்கவா போறோம்?”, நாகேஷ்.

 

 

“தங்கப்போறது இல்ல. இவ குளிச்சிட்டு தான் உள்ள போக முடியும்”, அதியன்.

 

 

“குளிக்கனுமா?”, என நாகேஷ் அதிர்ச்சியடைந்தான்.

 

 

“உன்ன இல்ல டா. அவ தான் குளிக்கணும். நீ போன பொங்கலுக்கு குளிச்சவன் எப்படியும் அடுத்த பொங்கலுக்கு தான் குளிப்ப…. ஷாக்க குறை”,என சப்தனிகா அவனை வாரினாள்.

 

 

“அப்பாடா….. இப்ப தான் நிம்மதியா இருக்கு…. எங்க என் உடம்புலையும் தண்ணி பட்ருமோன்னு பயந்துட்டேன்”,என நாகேஷ் கூறிப் பெருமூச்சுவிட்டான்.

 

 

“கருமம் கருமம்…..பின்னாடி தள்ளி வாடா…. நாத்தம் இப்பவே குடலை பிறட்டுது…. குளிக்கறதுல உனக்கு என்னடா கஷ்டம்?”, சப்தனிகா.

 

 

“அதுலாம் ஆவாது…. “,நாகேஷ்.

 

 

இவர்கள் பேசியபடியே நடந்து கடல்கன்னியின் சிலைக்கு அருகில் வந்திருந்தனர்.

 

 

“இதோ சிலை. இதுல எங்க பாதம் இருக்கு? மீன் மாதிரில இருக்கு ? இதுக்கு கால காணோம்? “, நாகேஷ்.

 

 

“நாகி……”, இதயா பல்லைக் கடித்தபடி அழைக்க அமைதியாக பின்னால் சென்று நின்றுகொண்டான்.

 

 

“இரு தயூ…. நான் முதல்ல உள்ள போறேன். என் பின்னாடியே கேப் விடாம வாங்க எல்லாரும்”, என சிலையின் செதில் பகுதியை இருகரம் வைத்து பணிவதைப் போல அழுத்த சிலைக்கு எதிர்புறத்தில் வழி திறந்தது.

 

 

நாகேஷ் வாயை பிளந்த படி பார்த்துக்கொண்டிருக்க , அதியன் இதயாவின் கையைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.

 

 

“வா சகா”, என இதயா அவள் கையைப் பிடித்துக்கொள்ள , அவள் நாகியின் சர்ட்டை இழுத்தபடி உள்ளே நுழையவும் கதவு மூடியது.

 

 

அங்கிருந்ததை விட இப்பொழுது காற்றோட்டமும் வெளிச்சமும் நன்றாக இருந்தது. எங்கிருந்து வெளிச்சம் வருகிறது என்று தான் அனுமானிக்க இயலவில்லை.

 

 

“அடுத்து என்ன சகா?”,இதயா கேட்டாள்.

 

 

“இது எனக்கு புரியல தயா. நீயே பாரேன்”, என அவளிடம் நீட்டினாள் சகா.

 

 

‘காத்திருந்த காலங்கள் நிமிடமாய் கரைய , ……………………………………
குலதெய்வத்தை பூஜிக்க அடுத்த வாயில் திறக்கும்”,  என நடுவில் சில வரிகள் விடுபட்டு இருந்தது அந்த காகிதத்தில்.

 

 

இதயா அதியன் கொடுத்த சுவடியை திருப்ப விடுபட்ட வரிகள் அங்கே இருந்தது. அதை இணைத்து ஒன்றாய் படித்தாள் ,” காத்திருந்த காலங்கள் நிமிடமாய் கரைய, புது தடாகம் மேல் எழும், துர்க்கையின் காலடியில் எடுத்த மலரைக் கொண்டு, தடாக கரையின் நீரில் வைத்தால் புத்தொளியுடன் புதுவெள்ளம் பாய்ந்து பாரிஜாத மலர்களால் தழும்பிய குளத்தில் ஐந்து முறை மூழ்கி எழ உருமாறத்தொடங்குவர். புத்தாடை உடுத்தி குலதெய்வத்தை வணங்க அடுத்த வாயில் திறக்கும். குடம் எடுப்பவர் பேராளுமையும் பேராற்றலும் பெறுவர். குடத்தை கண்டதும் குலதெய்வத்தை மனதில் நிறுத்தி பெற்றவர்களைத் தொழுது கைநீட்ட குடம் உன் கைசேரும்”, என இரட்டையும் சேர்த்து படித்துகாட்டினாள் இதயா.

 

 

“தூர்க்கை எங்க இருக்கு இங்க?”, நாகேஷ்.

 

 

“தேடலாம்”, என அதியன் சுற்றும் முற்றும் தேடத்தொடங்கினான்.

 

 

“தயா…. நாம கீழ ஒரு தூண்ல பூ வச்சமே…அதுல தான் நான் துர்க்கை பார்த்தேன்”, என சப்தனிகா சிந்தித்தபடிக் கூறினாள்.

 

 

இதயா தன் பாக்கெட்டில் இருந்த பூவை எடுத்து கைகளில் வைத்து காத்திருக்க அவளின் அகவைப்படி நிமிடங்கள் கரையவும், தடாகம் மெல்ல மெல்ல உருவானது ஈசானிய மூலையில்.

 

 

“தயூ… நீ பூ வை அதோட கரைல “,என அதியன் அவளை அழைத்துக்கொண்டு அருகில் சென்றான்.

 

 

நடப்பதை சப்தனிகாவும், நாகேஷும் வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

 

“டேய்… என்னடா வெறுந்தரை  குளமா மாறுது”, சகா.

 

 

“அதான் எனக்கும் புரியல. இந்த இடத்துல நிஜமா என்னமோ இருக்கு சகா… “, நாகேஷ் எச்சிலை விழுங்கியபடிக் கூறினான்.

 

 

“ஆமாடா….. அப்ப இதுக்கு முன்ன இங்க வந்தவங்க காணாம போனதும் நிஜம் தான் போல. நல்லவேலை நமக்கு கேட்பாஸ் குடுத்தாங்க…. இல்லைன்னா நமக்கும் அட்ரஸ் இல்லாம போய் இருக்கும்”, என பேசிக்கொண்டே அவள் அந்த தடாகத்தின் அருகில் சென்றாள்.

 

 

“நீ போகாத பேபி… இங்க வா”,என நாகேஷ் அழைத்தான்.

 

 

“பேபின்னு சொன்ன உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவேன். மூடிட்டு அந்த பக்கம் போ. அவ குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணணும்ல”, என அவனை துரத்தினாள் சகா.

 

 

அவள் குளத்தின் கரையில் அந்த பூவை வைத்ததும் குளம் முழுக்க புத்தொளி பெற்று புது ஊற்று ஊறியது. பாரிஜாத பூக்களாக மிதக்கவும் இதயா அதியனைப் பார்த்துவிட்டு குளத்தில் இறங்கினாள்.

 

 

அதியனும் நாகேஷூம் வேறுபக்கம் சென்று நின்றுக்  கொண்டனர்.

 

 

வாசகத்தில் கூறியது போலவே இதயா ஐந்து முறை மூழ்கி எழுந்தவுடன் அவள் உடலில் மாற்றம் தோன்ற ஆரம்பித்தது.

 

 

அதை கவனியாமல் அவசரமாக இதயா உடைமாற்றிக்கொண்டு தயாராகி வந்தாள்.

 

 

“குலசாமிய கும்பிட்டு கெடா வெட்றதா சொல்றியோ கோழி வெட்றதா சொல்வியோ எங்களுக்கு தெரியாது. எப்படியாவது எங்கள வெளியே பத்தரமா கூட்டிட்டு போய் விட்று தாயே. உனக்கு கோடி புண்ணியம்”, என நாகேஷ் கூற அவனுக்கு பின்னால் இருந்து ஒரு கரம் அவனைத் தொட்டதும் பயத்தில் கத்தத் தொடங்கினான்.

 

 

இதயா அதியன் அருகில் நிற்க, சகா இதயாவுடன் ஒன்றி நின்றாள்.

 

 

“யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நான் இக்குகையினை காவல் காப்பவள்”, என ஒரு தேவதை முன்னே வந்தது.

 

 

“யாரு நீங்க? “, என அதியன் தைரியப்படுத்திக் கொண்டு கேட்டான்.

 

 

“என் பெயர் நித்தியபல்லவி. உங்கள் மூதாதையர் இந்த குகையை உருவாக்கிய காலம் தொட்டு நாங்கள் தான் இங்கு காவல் இருக்கிறோம். அனுமதி இல்லாமல் யாரும் இவ்விடம் வர இயலாது. மீறி வந்தால் மரணம் தான். இன்றோடு ஐந்தாவது சுற்று முடிகிறது. என் காவல் காலமும் முடிகிறது. ஐம்பது குடங்கள் இரத்தினங்களால் நிரப்பி வைப்பது எங்கள் வேலை. குலத்தின் உண்மையான இரத்தத்தைக் கண்டறியவே இதை உருவாக்கினர். அடுத்த ஐம்பது குடங்களுக்கு அடுத்த தேவதை உங்கள் முன்னால் வருவாள். அவளுக்கு நீங்கள் ஏதேனும் ஒன்றை பரிசாய் தந்து இங்கே காவல் இருக்க பணிக்கவேண்டும்”.

 

 

அந்த தேவதையையே  பார்த்துக்கொண்டிருந்த நாகேஷ்,” எங்கள எப்படி உள்ள விட்டீங்க? நாங்க ஜமீன் இல்லையே”,எனக் கேட்டான்.

 

 

“உண்மையான விசுவாசிகள் இங்கே அனுமதிக்கப்படுவர். நீயும் இந்த பெண்ணும் இளவரசியின் மீது உண்மையான அக்கறையும் அன்பும் அவருக்காக உயிரையும் கொடுக்க தயாராய் இருக்கிறீர்கள். அதனால் தான் உங்கள் இருவருக்கும் அனுமதி கிட்டியது “, நித்தியபல்லவி.

 

 

“நான் இப்ப என்ன செய்யனும்?”, இதயாவின் குரலில் ஏதோ மாற்றம் இருந்தது.

 

 

“குலதெய்வத்தை வணங்கி கைகூப்புங்கள் வழி திறக்கும். நான் விடைபெறுகிறேன்”, எனக் கூறி அந்த தேவதை மறைந்தது.

 

 

இதயா அதே போல வணங்க பக்கவாட்டில் வழி கிடைத்தது.

 

 

நால்வரும் உள்ளே நுழையும் சமயம் புது தேவதை எதிரே தோன்றியது.

 

 

“வணக்கம் இளவரசி…. நான் அனுராகவி. புதிய காவல் தேவதை”, என வணங்கியது.

 

 

“வணக்கம். உங்களுக்கு ஏதோ குடுக்கணும்னு நித்தியபல்லவி சொன்னாங்க. என்ன குடுக்கணும்?”, இதயா.

 

 

“உங்கள் விருப்பம். மனதார எதை கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு என் பணியை தொடங்குவேன்”, அனுராகவி.

 

இதயா தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டிக் கொடுத்தாள்.

 

 

“இது உங்கள் தாயின் கணையாழி. மகிழ்ச்சி”, என ஒதுங்கி வழிவிட்டது அந்த தேவதை.

 

 

“தயூ…. “, அதியன் அவளை அழைத்தான்.

 

 

“தெரியும் அதி. அது எந்தளவுக்கு எனக்கு முக்கியமோ நம்ம இரத்தம்னு நிரூபிக்க இங்க வரவங்க அத விட எனக்கு முக்கியம்”, என கண்களில் வலியோடு கூறினாள் இதயா.

 

 

“தாங்கள் குலதெய்வத்தையும் பெற்றவர்களையும் வணங்கி கைநீட்டுங்கள் இளவரசி”, என அந்த தேவதைக் கூற, இதயா அதே போல செய்தாள்.

 

 

அந்த ஐம்பதாவது குடம் அவள் கைகளில் தானாய் பறந்து வந்து அமர்ந்தது. அதில் தழும்ப தழும்ப இரத்தின கற்கள் நிரம்பி வழிந்தது.

 

 

இந்த கால கணக்குப்படி அது எல்லாம் கணக்கிடமுடியாத பொக்கிஷங்களே…..

 

 

ஐம்பதாவது குடத்திற்கு முக்கியத் தனிச் சிறப்பும் இருக்கிறது.

 

 

அந்த குடம் கையில் வந்ததும் இதயாவின் உடையமைப்பே முழுதாய் மாறியிருந்தது.

 

 

கண்மூடி திறப்தற்குள் நால்வரும் குகை வாயிலில் நின்றிருந்தனர்.

 

 

நாகேஷிற்கும் சப்தனிகாவிற்கும் என்ன நடந்தது என்றே புரியவில்லை.

 

 

“டேய்….நாம வெளிய வந்துட்டோம் டா”, சகா சந்தோஷமும் அதிர்ச்சியுமாக கூறினாள்.

 

 

“ஆமா சகா….. நம்ம முழுசா நம்ப உடம்போட வெளிய வந்துட்டோம்….”, என அவள் கைகளை பிடித்துக்கொண்டு குதித்தான் நாகேஷ்.

 

 

அதியனும் இதயாவும் சொல்லவொன்னா உணர்வில் சிக்குண்டு கிடந்தனர்.

 

 

இதயாவின் உறவு ஆழமாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. அவர்கள் அறிந்தவரையில் சென்ற பலதலைமுறைகளாக இக்குகைக்கு யாரும் வரவில்லை. இவர்கள் தான் வந்திருக்கின்றனர்.

 

 

இதயா அவளின் சுய அடையாளத்தை உருவாக்கி விட்டாள்.

 

 

இதயாவின் உடற்மொழியிலும், நடையில் பெரும் மாற்றமும், முகத்தில் அழுத்தத்துடன் கூடிய ஆளுமையும் நிரம்பி வழிந்தது.

 

 

அவளுக்கு இணையாக அதியன் முகத்திலும் நடையிலும் பெரும் பேராண்மை மிளிர்ந்தது.

 

 

இருவருமே ஒருவரை ஒருவர் புதிதாய் பார்த்துக் கொண்டனர்.

 

 

“தயூம்மா…..”, அதியன் அழைக்க இதயா அவனை அணைத்துக்கொண்டாள்.

 

 

அவள் கண்களில் வழியும் நீர் கூட அவளுக்கு கூடுதல் மிளிர்வையே கொடுத்தது.

 

 

எடுத்த காரியம் வெற்றியுடன் முடிந்ததும் நால்வரும் இதயாவின் வீட்டை நோக்கிச் செல்ல முடிவெடுத்தனர்.

 

 

அந்த குடத்தை பையில் போட்டுக் கொண்டு சென்றனர். நம் ஊரின் நிலவரம் தான் அனைவரும் அறிவோமே …

 

 

அவர்கள் முன்பிருந்த சிலைகள் அருகே வர அங்கே இன்னொரு திசையில் இதயாவின் உருவம் சிலையாக தானாய் உருவானது.

 

 

அதைக் கண்டு திகைத்தாலும் சப்தனிகாவிற்கு சந்தேகம் தோன்ற,” அப்ப இவங்க எல்லாரும் ஐம்பதாவது குடத்தை எடுத்தவங்களா?”, எனக் கேட்டாள்.

 

 

“ஆம்… “, என தேவதையின் குரல் கேட்டதும் அனைவரும் சிரிப்புடன் நடையைக் கட்டினர்.

 

 

இதயா ஆளுமை கலந்த நடையில் அழுத்தமாக பாதங்களைப் பதித்து நடுகூடத்திற்கு வந்து அனைவரையும் அழைத்தாள்.

 

 

இத்தனை வருடங்களாக இல்லாத கம்பீரம் அக்குரலில் குடிக்கொண்டு இருந்தது.

 

 

அவளின் ஒரு சத்தத்தில் அனைவரும் அவளருகே கூடி நின்றனர்.

 

 

சப்தனிகா பையை கொடுக்க , அதில் இருந்த குடத்தை எடுத்து தன் தந்தையிடன் கொடுத்துவிட்டு அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

 

 

அந்தப் பார்வையில் அவர் தலை தானாய் வேறுபக்கம் திரும்பியது.

 

 

அவளின் தந்தையைப் பெற்றவரும், சித்தியைப் பெற்றவரும் ஸ்தம்பித்து நின்றிருந்தனர் அவளின் தோரணையில்.

 

 

அதியன் அனைவரையும் அர்த்தமாக பார்த்துவிட்டு இதயாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்து மென்னகைப் புரிந்தான்.

 

 

இதயாவும் தன் வாழ்வில் முதல் முறையாக மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்திருக்க புன்கை புரிந்தாள்.

 

 

நாகேஷும், சப்தனிகாவும் இதயாவின் அருகில் நின்று அவள் தோள்பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

 

 

அங்கே உதரதி இதய யாழிசைதேவி புதிதாய் உதயமாகி இருந்தாள் அனைவரின் கண்களுக்கும்……

Click to rate this post!
[Total: 1 Average: 5]
Post Views: 732
Tags: adventuresuspenseஅமானுஷ்யம்
Previous Post

என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

Next Post

சர்க்கரை உளுந்து வடை

Next Post
இயல்புகள்

சர்க்கரை உளுந்து வடை

Please login to join discussion

34 – மீள்நுழை நெஞ்சே

January 27, 2023
0
இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

January 26, 2023
0
1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

January 25, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!