“வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான்.
மதியூரன் .. அந்த கம்பெனி எம். டி ..
“குட் மார்னிங்.. “
“குட் மார்னிங்”, என துவாரகாவும், அதிதியும் எழுந்து நின்றனர்.
“ப்ளீஸ் உக்காருங்க.. “, என மெலிதான முறுவலுடன் கூறிவிட்டு அதிதியை பார்த்தான்.
“இவங்க துவாரகா மதி.. நேத்து நமக்கு வந்த மெயில்ல சொல்லி இருந்தாங்களே .. “, என விவரம் கூறினாள்.
“ஹோ .. ஓகே.. வெல்கம் துவாரகா.. இந்த ப்ராஜக்ட் தனிப்பட்ட முறைல நான் தான் லீட் பண்ணிட்டு இருக்கேன். உங்களுக்கு மொத்த ப்ராக்ரஸ் சார்ட் அனுப்பிடறேன். இன்னும் ரெண்டு மாசத்துல முடிக்க தான் நாங்க ட்ரை பண்ணிட்டு இருக்கோம். ஹோப் வீ வில்..”
“கண்டிப்பா ரெண்டு மாசத்துல முடிக்கணும் மிஸ்டர் மதியூரன் .. இந்த ப்ராஜக்ட் ஓட தான் நான் அங்க ஆபீஸ்குள்ள போக முடியும்.. எனக்கு என் கம்பெனில குடுத்த டீடெயில்ஸ் படி பாத்தா அல்மோஸ்ட் 70 பர்சண்ட் வொர்க் முடிஞ்சது .. இன்னும் முப்பது பர்சண்ட் தான் சோ ரெண்டு மாசம் அதிகம் தான். ஒரு மாசத்துல கூட முடிக்கலாம் தானே “, என நிமிர்வுடன் பேசினாள்.
இத்தனை நேரம் இல்லாத தெளிவும், திடமும் இப்போது அவளிடம் இருப்பதை அதிதி உணர்ந்தாள்.
“ஹாஹா.. மிஸ். துவாரகா .. லாஸ்ட் ஸ்டேஜ் ஆஃப் ப்ராஜக்ட் எவ்ளோ விஷயம் இருக்கும்னு உங்களுக்கு நல்லா தெரியும்ன்னு நெனைக்கறேன்.. எங்க டீம்க்கு தேவையான ரெஸ்ட் அண்ட் டைம் குடுத்து தான் நாங்க பண்ண முடியும். இன்னும் ரெண்டு மாசத்துல ப்ராஜக்ட் முடிஞ்சிடும். ரொம்பவும் நான் என் டீம நெருக்க முடியாது. எவ்ரிவொன் நீட் தேர் ஓன் டைம் டூ ரிலாக்ஸ் அண்ட் பூஸ்ட்அப் எனர்ஜி (Everyone need their own time to relax and boostup energy)”, என மதியூரன் சற்று அழுத்தமாகவே கூறினான்.
“ஓகே.. லெட்ஸ் வொர்க் டுகெதர் டூ அக்கம்பலிஷ் (accomplish) நான் நாளை மறுநாள் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்.. “, என எழுந்து நின்றாள் துவாரகா.
“வித் பிளஷர் ..”, என மதியூரன் அவளுக்கு விடைகொடுத்தான்.
அதிதி அவளுடன் வாசல் வரை வந்து அவளுக்கு வேண்டிய விவரங்களை கூறிவிட்டு மீண்டும் மதியூரன் அறைக்கு வந்தாள்.
“ரொம்ப அவசரப்படுத்துவாங்க போலவே மதி”, என கூறியபடி எதிரில் அமர்ந்தாள்.
“பாத்துக்கலாம்.. அவங்க ஏதோ அவசரத்துல இருக்காங்க போல.. நம்ம ஏற்கனவே போட்டு வச்ச ஷெட்யூல் ஃபாலோ பண்ணா போதும்”, என கூறிவிட்டு தனது வேலையில் மூழ்கிவிட்டான்.
அதன் பின் துவாரகா கடைகளுக்கு செல்ல ஒரு டாக்ஸி பிடித்து சென்றாள்.
நூறடி ரோட் செல்லாமல் ஏதேனும் ஒரு மால் செல்லலாம் என்று சென்றாள்.
ஃபன் மால் ..
நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றி கொண்டு இருந்தனர். அதற்கு அருகில் தான் பிரசித்திபெற்ற சில கல்லூரிகளும் அமைந்திருந்தன.
அதனால் பகல் ராத்திரி என அத்தனை நேரத்திலும் மாணவ மணிகளை அங்கே நாம் காணலாம்.
அவளும் முதலில் அனைத்தும் சுற்றி பார்த்துவிட்டு பின் தேவையான பொருட்களை வாங்கலாம் என பொறுமையாக நடந்து கொண்டு இருந்தாள்.
“ஹே .. நீ துவாரகா தானே?”, என கேட்டபடி ஒரு பெண் அருகில் வந்தாள்.
“ஆமா.. நீங்க ?”, எனக் கேட்டபடி அந்த பெண் யாரென தனது ஞாபக அடுக்குகளில் தேட ஆரம்பித்தாள்.
“நான் தான் சரண்யா .. உன்கூட காலேஜ்ல படிச்சேன் ல.. மறந்துட்டியா அதுக்குள்ள?”, என அந்தா பெண் கோபமுகம் காட்டினாள்.
“இல்ல .. இல்ல சரண்யா.. உன இப்ப டக்குன்னு அடையாளம் தெரியல.. ஆளே ரொம்ப மாறிட்ட .. எப்படி இருக்க?”, என சற்று தடுமாறி பேச ஆரம்பித்தாள்.
“ஆமா துவா.. கல்யாணம் ஆகிடிச்சி.. கொழந்தை பொறந்ததும் போட்ட வெயிட் இன்னும் கொறையல.. நானும் என்ன என்னமோ செஞ்சி பாக்கறேன் எங்க ஒண்ணுமே ரிசல்ட் இல்ல.. “, என சலித்துக்கொண்டு கூறினாள் சரண்யா.
“விடு உடம்பு முழுசா சரியானா தானா வெயிட் கொறஞ்சிடும் .. கொழந்தை எங்க? நீ மட்டும் தான் வந்தியா ?”, என துவாரகா கேட்டாள்.
“அம்மா வீட்ல விட்டுட்டு வந்தேன்.. ஒரு வயசு தான் ஆகுது .. அதான் வெளிய தூக்கிட்டு வரது இல்ல.. நீ இப்ப என்ன பண்ற? உனக்கு கல்யாணம் ஆகிடிச்சா ? இங்க என்ன பண்ற ?”, என அவள் இவளை பற்றி கேட்டதும், என்ன கூறுவது என தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
துவாரகா வாய் திறக்கும் முன் சரண்யாவிற்கு அவள் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு மா.. பாப்பா அதுக்குள்ள முழிச்சிட்டாளா ?”
“******************”
“சரி .. வந்துடறேன்.. “, என அழைப்பை தூண்டித்துவிட்டு துவாராகவிடம் திரும்பினாள், “ துவா.. பாப்பா அழ ஆரம்பிச்சிட்டா.. உன் நம்பர் குடு நான் அப்பறம் கூப்பிடறேன் “, என அவசரமாக நம்பர் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றாள் சரண்யா.
“யப்பாஆஆஆஆஆஆ .. இவங்களுக்கு எல்லாம் என்னனு பதில் சொல்றது? சே .. கொஞ்ச நேரத்துல செம டென்ஷன் பண்ணிட்டா ..”, என மனதிற்குள் முனகியபடி வேகமாக ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.
“வா ராகா.. ஆபீஸ் எப்டி இருக்கு ?”, என அன்பரசி அன்புடன் விசாரித்தார்.
“நல்லா இருக்கு ஆண்ட்டி.. பக்கமா தான் இருக்கு.. ஆபீஸ் கேப் வருது. சோ காலைல அந்த டைம்ல கெளம்பி ரெடி ஆனா போதும்.. “, என கூறியபடி தண்ணீர் எடுத்து அருந்தினாள்.
“நல்லது டா.. டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.. ஜூஸ் கொண்டு வரேன்..”
“நானே கீழ வரேன் ஆண்ட்டி.. எங்க யாரையும் காணோம்?”, என வீட்டின் அமைதியை கவனித்து கேட்டாள்.
“எல்லாரும் வெளிய போய் இருக்காங்க டா.. மதியம் நான் நீ அக்கா மட்டும் தான்.. “
“விகாஷ் ?”
“அவன் தூங்கறான் டா.. “
“ஓகே ஆண்ட்டி .. டென் மினிட்ஸ் வந்துடறேன்..”, என கூறி தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.
அன்பரசி அவளுக்கும் தனக்கும் ஜூஸ் கொண்டு வரும்படி கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார்.
“ஆண்ட்டி”
“இங்க வா ராகா”, என தனது அறையில் இருந்து குரல் கொடுத்தார்.
வசந்தி ஜூஸ் கொண்டு வருவது பார்த்து விட்டு தானே கொண்டு செல்வதாக வாங்கி கொண்டு அன்பரசியின் அறைக்கு சென்றாள்.
“வசந்தி எங்க?”, என அவள் டிரே கொண்டு வருவது பார்த்து கேட்டார்.
“நான் கீழ வரப்போ தான் வசந்தி அக்கா ஜூஸ் கொண்டு வந்தாங்க.. அதான் வாங்கிட்டு வந்தேன் ஆண்ட்டி”, என கூறிவிட்டு விகாஷ் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளை பார்த்து சிரித்துவிட்டு வசந்தியை அழைத்தார்.
“சொல்லுங்கம்மா”, என கேட்டபடி வந்து நின்றார் வசந்தி.
“மதியம் நாலு பேருக்கு மட்டும் சமைச்சா போதும்.. என்ன காய்கறி இருக்கு பாரு.. இல்லைன்னா இப்போவே போய் வாங்கிட்டு வந்துடு”
“நேத்து ராத்திரி நீங்க வருமுன்ன பெரியம்மா வாங்கிட்டு வந்துட்டாங்க ம்மா.. மதியத்துக்கும் அவங்களே செஞ்சி கொண்டு வரேன்னு சொல்லிட்டு தான் போய் இருக்காங்க.. “
“சரி.. கொழந்தைக்கு நான் சொன்ன சத்துமாவு செஞ்சிடு “, என கூறி அனுப்பிவைத்தார்.
“சரிங்கம்மா.. வேற ஏதாவது இப்ப சாப்பிட கொண்டு வரட்டுமா ம்மா?”
“ஏதாவது சாப்பிடறியா ராகா?”
“வேணாம் ஆண்ட்டி.. ஜூஸ் இன்னும் கைல இருக்கு”, என கிலாஸை தூக்கி காட்டிவிட்டு விகாஷ் தூங்குவதை ரசிக்க ஆரம்பித்தாள்.
“சரி அப்பறம் கூப்பிடறேன் .. நீ போ”, என வசந்தியை அனுப்பிவிட்டு துவாரகாவை பார்த்தார்.
“என்ன ராகா அவன் தூங்கறத ரசிச்சி பாத்துட்டு இருக்க?”, என சுவற்றில் தலையணை வைத்து சாய்ந்தபடி கேட்டார்.
“கொழந்தைங்க எல்லாரும் வரம்ல ஆண்ட்டி.. எவ்ளோ அமைதி அந்த முகத்துல, நிம்மதியான வாழ்க்கை.. கொழந்தையாவே இருந்து இருக்கலாம்ன்னு தோணுது”
“ஹாஹாஹா.. சரி தான்.. நீங்க ஜாலியா சாப்டு தூங்கிட்டு இருந்தா நாங்க வேலை செஞ்சிக்கிட்டே இருக்கணுமா?’, என அன்பரசி சிரித்தபடி கேட்டார்.
“ஹாஹாஹா.. அதுவும் சரி தான். பொறக்காமையே இருக்கறது தான் நல்லது..”, என துவாரகாவும் சிரித்தபடி கூறினாள்.
“உண்மை தான். வாழ்க்கைல எல்லாருக்குமே ஒரு கட்டத்துல இந்த எண்ணம் வரும்.. ஆனா அந்த சூழ்நிலைய ஜெயிச்சி வந்தா தான் நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம் வரும்..”, அமைதியாக விகாஷ் கைகளை பிடித்தபடி கூறினார்.
“நீங்களும் இப்படி யோசிச்சி இருக்கீங்களா ஆண்ட்டி?”, என அவரின முக வேதனை கண்டு கேட்டாள்.
“அவர் சாகும்போது மித்ரா ரெண்டு வயசு கொழந்தை ராகா. அதுக்கு அப்பறம் நெறைய ஏமாற்றம், தோல்வி, நஷ்டம், தனிமை, கஷ்டம் எல்லாமே வந்தது.. அந்த சமயங்கள்ல எனக்கு ரொம்பவே உறுதுணையா இருந்தது பத்மினி அக்கா தான்.. அவங்களும் அது போல பல விஷயங்களை கடந்து தான் வந்து இருக்காங்க..”, என கூறிவிட்டு அந்த நினைவுகளில் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
“சாரி ஆண்ட்டி.. பழச ஞாபகம் படுத்திட்டேனா ?”
“இல்ல மா.. அதுலாம் ஒரு படிப்பினையும் அனுபவமும் தான்.. அந்த அனுபவம் தான் இப்ப மித்ரா விஷயத்துல பொறுமையா கையாள உதவிச்சு.. நமக்கு நடக்கற எல்லா விஷயத்திலும் ஒரு காரணம் காரியம் இருக்கும்.. நம்ம நாட்டுல பொதுவா சொல்ற விஷயம் தான். ஆனா அதுக்கான அர்த்தம் புரிய நமக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுது.. ஆனாலும் இன்னும் நமக்கு அந்த அழுத்தமும் ஆழமும் சரியா புரிஞ்சதா இல்லையான்னு தெரியல..”, என கூறிவிட்டு துவாரகாவின் முகத்தை பார்த்தார்.
அவளும் அமைதியாக அவர் சொல்லும் சொற்களின் அர்த்தம் புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருந்தாள்.
“என்னாச்சி ராகா? இப்ப நீ அமைதியாகிட்ட?”
“நீங்க சொல்றத புரிஞ்சிக்க முயற்சி பண்றேன் ஆண்ட்டி.. “
“உன் அமைதிக்கு பின்னாடி வேற என்னவோ இருக்குன்னு தோணுது ராகா.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”, என கூறிவிட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தார்.
“சொல்லுங்க ஆண்ட்டி”
“உன் அப்பாகிட்ட பேசினேன் ராகா..”, என அவர் கூறியதும் அவள் திடுக்கிட்டு ஒரு நொடி பார்த்துவிட்டு, “ என்ன சொன்னாரு ஆண்ட்டி?”, என அமைதியாக கேட்டாள்.
“உன் விருப்பம் போல இருக்க சொன்னாரு.. நீ வெளிநாடு போறதுக்கு முன்ன மட்டும் ஒரு தடவை வீட்டுக்கு வர சொன்னாரு”
“வேற எதுவும் சொல்லலியா ஆண்ட்டி?”, என ஏதோ ஒரு எதிர் பார்ப்போடு அவரை பார்த்தாள்.
“உன் அண்ணனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடிவாகி இருக்காம்.. உன்ன..”, என அவர் வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார்.
“வரவேணாம்-ன்னு சொல்ல சொன்னாரா ஆண்ட்டி?”, என கண்களில் பெருகும் நீரை உள்ளிழுத்தபடி கேட்டாள்.