10 – அர்ஜுன நந்தன்
அங்கே அலுவலகத்தில் சந்தனபாண்டியன் மற்ற அதிகாரிகளைக் காண வந்திருந்தான் .
பரிதியை கண்டதும் ,”எப்படி இருக்கீங்க மேடம்? மக்களுக்கு நிறைய நல்லது பண்றதா கேள்வி பட்டேன். ரொம்ப சந்தோஷம். எதாவது உதவி தேவைபட்டா கேளுங்க .நானும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படறேன் “, சந்தனபாண்டியன்.
“நீங்க பேசறத கேக்க சந்தோஷமா இருக்கு மிஸ்டர் சந்தனபாண்டியன். உங்க குவாரி ஆளுங்கள இன்னும் வெளிய எடுக்காம இருக்கீங்க போல? ஏன்? “,பரிதி பரிகசித்தச் சிரிப்புடன் வினவினாள்.
சந்தனபாண்டியனுக்கு சூடேற ஆரம்பித்தது,”அவங்க இதுக்கு முன்ன வேல பாத்தவங்க. அவங்கள எல்லாம் எப்பவோ நான் வேலைய விட்டு அனுப்பிட்டேன். யாரோ என் பேர கெடுக்க இப்படி செஞ்சி இருக்காங்க மேடம். அந்த பசங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல”.
“சரி தான். கோவிலுக்கும் உங்களுக்கும் தான் நிறைய சம்பந்தம் இருக்கு”, பரிதி.
“கோவிலுக்கு பக்தியா சாமி கும்பிடப் போறோம் அவ்வளவு தான். மத்தபடி ஒன்னும் இல்ல”, சந்தனபாண்டியன்.
“ஒன்னுமே இல்ல தான். அப்பறம் பாக்கலாம் மிஸ்டர் சந்தனபாண்டியன்”, ஒருமாதிரி சொல்லிவிட்டுச் சென்றாள் பரிதி.
சந்தனபாண்டியன் தன் அடியாளிடம் “இவள நோட்டம் விட ஆள அதிகப்படுத்து. ஏதோ பொறி வச்சு பேசறா”.
“சரிங்க ஐயா”, ராமு.
அங்கிருந்து புறப்பட்ட சந்தனபாண்டியன் நேராக நின்றது காவ்யா ஜூவல்லர்ஸ் முன்பு தான். மிகவும் பிரம்மாண்டமானக் கட்டிடம். 3 தளங்களைக் கொண்டு ஒரு நூற்றாண்டு காலமாகப் பிரசித்திப் பெற்ற நகைகடை. பரம்பரைப் பரம்பரையாக இதே தொழிலைத் தான் செய்து வருகின்றனர்.
சந்திரகேசவனுக்கு ஒரே மகன் மட்டும் தான் வாரிசு. அவனும் தன் தந்தையின் தொழிலைக் கையில் எடுத்து வந்துவிட்டான்.
தந்தையை சார்ந்து இல்லாமல் தனியாக ஜூவல் டிசைனிங் படித்து அவன் உருவாக்கும் நகைகளுக்கு தனி பிராண்ட் வாங்கி மற்ற நகை கடைகளுக்கு மட்டுமின்றி தந்தையின் கடைக்கு நகை செய்து கொடுத்து அதில் வந்த பணத்தை வைத்து தனியாக மதுரையில் ஒரு நகைகடை ஆரம்பித்து இருக்கிறான்.
சந்தனபாண்டியன் அவனுடைய மனைவிக்காக காத்திருக்கும் சமயம் சந்திரகேசவன் அவனை தன் அலுவலக அறைக்கு அழைத்தான்.
“வா பாண்டியா ஏன் அங்கயே நின்னுட்டு இருக்க?”, சந்திரகேசவன்.
“என் பொண்டாட்டி வரேன்னு சொன்னா அதான் காத்திட்டு இருக்கேன்”, சந்தனபாண்டியன்.
“தங்கச்சி வரட்டும் நீ உள்ள வா”, சந்திரகேசவன்.
அந்த சமயம் உள்ளே வந்தார் சந்தனபாண்டியன் மனைவி கஸ்தூரி.
“வாம்மா கஸ்தூரி. எப்படி இருக்க? ரொம்ப நாள் ஆச்சி கடைக்கு வந்து?” , சந்திரகேசவன்.
“நல்லா இருக்கேன் அண்ணே. இவர் வந்தா தானே நானும் வரமுடியும். நாளைக்கு கல்யாண நாள் அதனால இப்ப தான் கூட்டிட்டு வந்து இருக்காரு”,கஸ்தூரி.
“அடடே அப்படியா சந்தோஷம். உனக்கு பிடிச்சத எடுத்துக்க நான் பாத்துக்கறேன்”,சந்திரகேசவன்.
“ஏய் தம்பி இங்க வா. இவங்கள புது டிசைன் வந்து இருக்கற செக்ஷன் கூட்டிட்டு போய் எல்லாத்தலயும் எடுத்து காட்டு .நான் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்”, அருகே இருந்த கடை ஊழியனிடம் கூறினார் சந்திரகேசவன்.
அலுவலக அறையில் அமர்ந்தவுடன் குடிக்கப் பழரசம் வரவழைத்துக் கொடுத்தான் சந்திரகேசவன்.
டம்பளரை கையில் வைத்துக் கொண்டுக் குடிக்காமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தான் சந்தனபாண்டியன்.
“என்ன பாண்டியா குடிக்காம யோசனையில இருக்க? என்னாச்சு ?” , சந்திரகேசவன்.
“அந்த கலெக்டர இப்ப பாத்தேன். பொறி வச்சு பேசறா சந்திரா. என்னனு யோசிச்சிட்டு இருக்கேன். அவ ஏதோ பண்றா அது மட்டும் புரியுது”, சந்தனபாண்டியன்.
“நாம நேத்து சேரலாதன் கிட்ட விஷயத்த சொல்லிட்டோம்ல. அவனும் ரெண்டு பேர அவள நோட்டம் விட அனுப்பி இருக்கான். நீயும் அனுப்பி இருக்க. அவ எங்க போனாலும் வந்தாலும் நமக்கு தெரிஞ்சிடும். அப்பறம் ஏன் கவலை படற?”,சந்திரகேசவன்.
“இல்ல சந்திரா. மத்த கலெக்டர் மாதிரி இவ இல்ல அவ நினைக்கறத எப்படியாவது செஞ்சிட்டு தான் வேற வேல பாக்கறா. அவளுக்கு நம்ம மேல சந்தேகம் வந்து கூட கம்முனு இருக்கான்னு சொல்றத என்னால நம்ப முடியல”, சந்தனபாண்டியன்.
“அந்த டிஐஜியும் இவகூட சேந்துட்டான். ரெண்டு பேரும் சேந்து திட்டம் போடறாங்கன்னு நினைக்கறியா?”, சந்திரகேசவன்.
“ஆமா சந்திரா. அந்த கலெக்டர் கண் அசந்தாக் கூட நமக்கு தெரியனும். அதுக்கு ஒரு ஆள பிடிக்கனும். சேரலாதன்கிட்டச் சொல்லி அவ ஆபீஸ்ல இல்லன்னா அவ வீட்ல யாரையாவது பிடிக்கனும்”, சந்தனபாண்டியன்.
“சரி மத்தியானம் சேரலாதன் வீட்டுக்கு நான் போற வேல இருக்கு. அப்ப நீயும் வா. அங்க வச்சு பேசிக்கலாம். இப்ப தங்கச்சி நகைய எடுத்து இருக்கும் போய் பாக்கலாம் வா”, சந்திரகேசவன்.
கஸ்தூரி நான்கு ஐந்து நகைகளை தேர்ந்து எடுத்து இருந்தார். அவருக்கு எதை எடுப்பது எனக் குழப்பம். இந்த லேடீஸ்க்கு நகைக்கும் புடவைக்கும் குழம்பறது இருக்கே ஸ்ஸ்ஸப்ப்பப்பா…. அப்டி இருக்கும் கூட போறவங்களுக்கு.
“என்ன தங்கச்சி எது எடுத்து இருக்க?”, சந்திரகேசவன்.
“எத எடுக்கறதுனு குழப்பமா இருக்குண்ணே. எல்லாமே நல்லா இருக்கு புதுசாவும் இருக்கு டிசைன்லாம்”, கஸ்தூரி நகைகளைப் பார்த்துக் கொண்டேக் கூறினார்.
“உனக்கு எத்தனை நகை எடுத்தாலும் ஆசை கொறையாது. எதாவது ஒன்னு எடு சீக்கிரம்”, சந்தனபாண்டியன் சிடுசிடுத்தார்.
“என்ன பாண்டியா இப்படி சிடுசிடுக்கற. நீ எல்லாமே எடுத்துக்க மா. இது எல்லாமே என் பையன் டிசைன் பண்ணது தான்”, சந்திரகேசவன் .
“அச்சோ இத்தனை வேணாம் அண்ணே அவரு திட்டுவாரு. நீங்களே ஒன்ன சொல்லுங்க இது எல்லாமே எனக்கு பிடிச்சி இருக்கு”, கஸ்தூரி .
“சரி இத ரெண்டும் பேக் பண்ணுங்க”, சந்திரகேசவன் வேலையாள் காதினில் ஏதோ ஓதி அனுப்பினார்.
ஒரு நகைக்கு மட்டும் பில் போட்டுத் தரப்பட்டது. கஸ்தூரி புன்னகையுடன் பொன்னகையைப் பெற்றுக் கொண்டார்.
“அண்ணே உங்க பையன் எங்க இருக்காங்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு. வீட்டுக்கு ஒரு நாள் எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”, கஸ்தூரி.
“வரோம் மா. அவன் மதுரைல தனியா ஒரு கடை ஆரம்பிச்சி இருக்கான். அங்க பாக்கறான். சொந்த கால்ல நிக்கறேன்னு போய் இருக்கான். சரி நில்றானு நானும் அனுப்பிட்டேன். உன் அண்ணி மாசத்துல பாதி நாள் அங்க தான் இருக்கா. புள்ளய விட்டு இருக்க முடியலன்னுட்டு. நான் எடுப்பு சாப்பாடு சாப்பிட்டுகிட்டு இருக்கேன்”, சந்திரகேசவன்.
“நீங்க ஏன் அண்ணே வெளிய சாப்பிடனும் நான் சமைச்சி குடுத்தனுப்பறேன்”, கஸ்தூரி.
“பரவால்ல மா. வீட்லயே வேலைக்கு ஆள் வச்சு சமைக்கறாங்க. உன் அண்ணி சமைக்கற மாதிரி வராதுல அதான் அப்படி சொன்னேன். ஒரு நாள் வரேன் அப்ப நீ ஆக்கி போடு”, சிரித்துக்கொண்டேக் கூறினார் சந்திரகேசவன்.
“சரி அண்ணே நாங்க வரோம்”, கஸ்தூரி.
சந்தனபாண்டியனும் சொல்லிக் கொண்டுச் சென்றான்.
பரிதி ஆதிரையை தன் அறைக்கு அழைத்தாள்.
“குட் மார்னிங் மேம். இன்னிக்கு ப்ரோக்ராம் என்னனு சொல்லட்டுமா மேம்?”, ஆதிரை.
“அது இருக்கட்டும் . ஒரு பொண்ணோட நம்பர் கண்டுபிடிக்கணும் டூ அவர்ல”, பரிதி.
“மேம் “, ஆதிரைத் திருதிருவென விழித்தாள்.
“முழிக்காத ஆதி. நம்ம பண்ற விஷயம் தானே இது? “,பரிதி.
“வழக்கமா பிரச்சினை பண்ற ஆளுங்க நம்பர் அவங்க சம்பந்தப்பட்ட நம்பர் தான் கேப்பீங்க. இப்ப பொண்ணு நம்பர் கேக்கறீங்க. அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனை மேம்”, ஆதிரை.
“ஹாஹா இப்ப தான் நீ பார்ம்க்கு வந்து இருக்க ஆதி. பிரச்சினை என்னனு அப்பறம் சொல்றேன். வெண்பா குரூப் ஆப் கம்பெனிஸ் எம்டி வெண்பா நம்பர் வேணும்” , பரிதி.
ஆதிரைச் சற்று அதிர்ந்து பின் இயல்பாகி ,”ஓகே மேம். சீக்கிரமே சொல்றேன்”.
“ஆதி கூடவே அங்க என்ன நிலைமைன்னு முழு டீடைல்ஸ் வேணும். அந்த கம்பனிஸ் டீடைல்ஸ் யாரு எல்லாம் போர்ட் ஆப் மெம்பர்ஸ், ஷேர்ஸ் எல்லாமே”, பரிதி.
“ஓகே மேம்”, ஆதிரை.
டிஐஜி சர்வேஷ்வரன் பரிதியைக் காண வந்திருந்தார்.
“மே ஐ கம் இன்”, டிஐஜி.
“எஸ்”, பரிதி.
“என்ன பரிதி வேலை அதிகமா?”, டிஐஜி.
“வாங்க அங்கிள். என் வேலைய பிரிச்சி குடுத்து தானே பாத்துட்டு இருக்கேன். என்ன சாப்பிடறீங்க? டீ காப்பி?”, பரிதி.
“ஒன்னும் வேணாம்மா. அந்த ஆராய்ச்சிக்காரன் குடும்பம் எங்க இருக்குன்னு தெரிஞ்ரிச்சி. ஆளுங்கள தட்டிட்டு தூக்கிடலாமா?”,டிஐஜி.
“வேணாம் அங்கிள். அந்த அசிஸ்டண்ட் என்ன ஆனான்?”,பரிதி.
“அவன தேடி ஆள அனுப்பி இருக்கேன். இன்னும் தகவல் வரல. இங்க வேற வேலையா வந்தேன் அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு தான்.சரி நான் கிளம்பறேன் பரிதி”, டிஐஜி.
“ஓகே அங்கிள் பாய்”,பரிதி.
அவர் சென்றதும் ஆதிரை வெண்பா நம்பருடன் வந்து நின்றாள்.
பரிதி சிரித்து கொண்டே “குட் . இத்தனை நம்பர் இருக்கு இதுல எது வெண்பா நம்பர்?”.
“பின்னாடி இருக்கு மேம். இது எல்லாம் அந்த கமீபனி போர்ட் ஆப் மெம்பர்ஸ் நம்பர்ஸ். இன்னும் அரைமணி நேரத்துல மொத்த டீடைல்ஸ்யும் உங்க டேபிள்ல இருக்கும் “.
“ஓகே டூ இட் சூன்”, பரிதி.
அந்த நம்பரை அப்படியே செந்திலுக்கு அனுப்பினாள் பரிதி.
பரத்துக்கு வெண்பா நம்பர் கிடைத்ததும் துள்ளிக் குதித்தான்.
“பயபுள்ள இவ்ளோ நேரம் இருக்கற இடம் தெரியல அவன் ஆளு நம்பர் கிடைச்சதும் குதிக்கறதப் பாரு ” ,செந்தில் மைன்ட் வாய்ஸ்…
நம்மளதும் அதே தானே ….