1 – காற்றின் நுண்ணுறவு
பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம்.
அதுவே காற்று …
எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், ‘சுவாசம்’ அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம்.
காற்று ……
அது எங்கிருந்து வருகிறது?
அது எப்படி உருவாகிறது?
அதில் என்ன என்ன உள்ளன?
அதனால் என்ன பயன்?
இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் தான் கடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறோம்.
முதலில் காற்று எப்படி உருவாகிறது என்பதைக் காண்போம்….
பூமியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களினால் காற்று உருவாகிறது. அதை மரம் செடிகள் இடம் விட்டு இடம் கடத்துகிறது…
அது வீசும் வேகத்தில் இருந்து பல பெயர்களும் அதற்கேற்றார் போல கொண்டுள்ளது. தென்றல், வாடை, மேலை, கொண்டல் என வீசும் திசை மற்றும் வேகம் பொருத்து தனிப்பெயர் பெற்று விளங்குகிறது.
கடலில் உண்டாகும் காற்றழுத்தத்தினால் புயல் உருவாகி, மழையாகக் காற்றுக் கடத்திக்கொண்டு நிலப்பரப்பிற்கும் கொண்டு வருகிறது.
காற்றில் தான் அனைத்தும் பதிவாகி இருப்பதாக நம் முன்னோர்கள் கூறியிருப்பதாக ஒரு கூற்றும் உண்டு.
காற்றில் இருக்கும் அணுக்களைக் கொண்டு மாயாஜாலங்கள் நிகழ்த்தலாம். அதை மாயை என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அதற்கு அணுவைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
இதே காற்றில் தான் நம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் பதிவாகியுள்ளது.
ஒரு மிகப்பெரிய க்ளவுட் மெமரியாக நம் அத்தனைப் பேரின் வாழ்க்கையும் பதிவாகி நம் கண்முன்னே அலைந்துக் கொண்டிருக்கிறது.
காற்றில் இருக்கும் அணுக்களைப் படிக்க முடியுமா?
அப்படி படிக்க முடிந்தால்?
காற்றைப் படிப்பதா?
அப்படி என்றால் ?
காற்றை அறிந்துணர்வது…..
முழுக்க முழுக்க எனது கற்பனையில் தான் எழுதப் போகிறேன்.
இக்கதை காப்புரிமை பெற்றது..
இக்கதையில் வரும் பெயர்கள், மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே.. யாரையும் எந்த செயல்களையும் குறிப்பிடுவன அல்ல.
இனி காற்றுடனான நமது உறவு ஆரம்பமாகிறது…..
“அந்திமாலை நேரம்…..
ஆற்றங்கரையோரம்….
நிலா வந்ததே…. – என்
நிலா வந்ததே…..”, என சித் ஶ்ரீராம் குரல் அந்த கானகத்தில் ஒலித்தபடி நகர்ந்துக் கொண்டே இருந்தது.
அந்தப் பாடலை முணுமுணுத்தபடியே முன்னே அந்த உருவம் செல்ல, அதை இன்னொரு உருவம் கொலைவெறியுடன் பின்தொடர்ந்தபடி இருந்தது.
“ஹேய் ரவுடி பேபி….. எங்கடி இருக்க? நீ சொன்ன மாதிரி மலையடிவாரத்துல இருந்து உள்ள வந்துட்டு இருக்கேன்”, என அக்குரலுக்குச் சொந்தமான வேதகீதன் கைப்பேசியில் பேசியபடி நடத்துச் சென்றுக் கொண்டிருந்தான்.
“டேய் மலமாடே…. நான் இளவெழிலி பேசறேன். அவ போன் வச்சிட்டு எங்கயோ போனா இன்னும் காணோம்…. நீ எந்த இடத்துல இருக்க கரெக்டா சொல்லு”.
“மலையடிவார கேட்ல இருந்து ஒரு இருநூறு அடி உள்ள வந்திருப்…….”, என அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் பின்னால் வந்த உருவம் அவனின் வாய்பொத்தி அடித்து மயங்கச்செய்து தன் தோளில் தூக்கிக் கொண்டுச் சென்றது.
“ஹலோ….ஹலோ…. டேய் மலமாடே…. இருக்கியா செத்துட்டியா டா?”, இளவெழிலி அந்த பக்கம் இருந்துக் கத்திக்கொண்டே இருந்தாள்.
எந்த பதிலும் இல்லாது போகவும் லைன் கட் செய்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“ஹேய் இளா.… அந்த மலமாடு வந்துட்டானா இல்லையா ? “,எனக் கேட்டபடி அவள் உள்ளே வந்தாள்.
“இல்ல எழில்….. கால் பண்ணான். பேச பேச கட் ஆகிடிச்சி…. நீ ட்ரைப் பண்ணிப் பாரு”, கூறிவிட்டு தன் வேலையில் மும்முறமானாள் இளவெழிலி.
“ஹேய் ரவுடி….. இங்க வந்து கொஞ்சம் பாரேன்…. நாம கிட்ட வந்துட்டோம்னு நினைக்கறேன்”, என ராகவி வந்து அழைத்தாள்.
“வரேன்….”, கைப்பேசியில் ஏதோ செய்தபடிக் கூறினாள்.
“ஹேய்…. சீக்கிரம் வாயேன்… என்னதான் பண்ற?”, ராகவி பொறுமையில்லாது கேட்டாள்.
“ஐ செய்ட் ஐ வில்…. ஷட் அப் ரா”, என உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவளின் கத்தலில் அனைவரும் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர்.
மீண்டும் மீண்டும் அவள் கீதனுக்கு முயற்சித்தபடியே இருந்தாள் எதையும் கண்டுகொள்ளாமல்.
“என்னாச்சி ?”, மற்றொரு கரகரப்பான குரல் கூட்டத்தில் இருந்து வந்தது.
“…………”, அவளிடம் பதில் வரவில்லை.
“சுடரெழில் நாச்சியார்…… உன்னை தான் கேட்டேன்”, அக்குரலின் உஷ்ணம் உணர்ந்து தலை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவள் கண்களில் எப்போதும் மின்னும் சுடரை விட இன்று கோபம் அதிகமாய் தெரிந்தது.
“என்னாச்சி ?”, மீண்டும் அதே குரல்.
“வேதகீதன் மிஸ்ஸிங்”, அவளின் ஒற்றை வார்த்தையில் பிரச்சினையின் வீரியம் தெறித்தது.
“ஓ…… சரி …. அடுத்து ஆகறத பாரு”, எனக் கட்டளையிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தது அக்குரல்.
“விமல்…..பேக் அப்….. லெட்ஸ் மூவ்”, என கட்டளையிட்டு விட்டு ராகவியை அழைத்துக்கொண்டு வெளியேறினாள் நாச்சியார்.
ராகவியின் கண்கள் பயத்தில் கண்ணீர் சுரக்கத் தயாராய் இருந்தது.
“எழில்….. “, குரல் கம்ம அழைத்தாள்.
“நீ எதையோ பாத்ததா சொன்னியே அத காட்டு ரா….. “, வேறெதுவும் பேசாதே என்ற தொனி அதில் இருந்தது.
நடுசாம வேலையில் காட்டின் ஒரு ஓரத்தில் மூன்று டென்டில் இருந்த அத்தனைப் பேரும் வேக வேகமாக அத்தனையும் எடுத்து பைகளில் திணித்துவிட்டு தாங்கள் இருந்த தடையத்தை அழிக்க ஆயத்தமாயினர்.
“எந்த இடம் ரா ?”, சற்று தூரம் நடந்தபின்னே கேட்டாள் எழில்.
“அந்த இரண்டு மரத்துக்கும் நடுவுல இருக்கு பேபி”, ராகவித் தன்னைக் கட்டுப்படுத்தியபடிக் கூறினாள்.
“ரவுடிய விட்டுட்ட ரா”, என குரலில் கிண்டல் காட்டி ராகவி கூறிய திக்கில் நடந்தாள் எழில்.
“உனக்கு பயம் வரலியா ? நம்ம கீதன் எங்கப் போனான்னு? அவனுக்கு எதாவது….”, அவள் வார்த்தையை முடிக்கும் முன் சுடர்விழியாள் ராகவியின் வாயை அடைத்திருந்தாள்.
“நாம செய்ற வேலைக்கு தகுந்த மாதிரி நம்மல தயார் படுத்திக்கணும் ரா. இங்க செண்டிமெண்ட் வேலைக்கு ஆகாது…. இந்த பாறையா சொன்ன…. இதுல என்ன இருக்கு?”, அந்தப் பாறையை ஆராய்ந்தபடிக் கேட்டாள்.
“அத நகர்த்தி பாரு…. அடில ஒரு குறிப்பு மாதிரி இருக்கு …”,ராகவியும் உடன் வந்து அந்த பாறையைத் திருப்பிக் காட்டினாள்.
“நிலபூதம் பிறழ்ந்த ஈராறாம் திங்களில் தென்துருவதத்தின் நேர்கீழே வளித்துவாரம் திறந்திருக்க…….”
அதற்கு மேல் ஏதும் புரியும்படியாக இல்லை.
சிறு பாறை தான் ஆனால் அதை அசைப்பது மிகவும் கடினமாக இருந்தது. சறுகுகள் அந்த இடத்தில் மற்ற இடத்தை விட அதிகமாக இருப்பதாகத் தோன்றியது இருவருக்கும்.
ஒரு அளவுக்கு மேலே அதைத் திருப்பவும் முடியவில்லை , நகர்த்தவும் முடியவில்லை.
நேரம் ஆவதை உணர்ந்தவர்கள்,கிளம்ப நினைத்து, பின் மீண்டும் அந்த இடத்திற்கு வர நேர்ந்தால் அடையாளம் காண, அந்த பாறைக்கும் அருகில் இருந்த மரங்களுக்கும் இணை ஏற்படுத்துவது போல சிற்சில பாறைக் கற்களைச் சுற்றி போட்டுவிட்டு இருவரும் திரும்பினர்.
இவர்கள் சென்ற பத்து நிமிடத்தில் டென்ட் இருந்த இடம் எந்த தடையங்களும் இன்றி சாதாரணமாகவே காட்சியளித்தது.
அங்கிருந்த கிளம்பிய குழு காட்டு வழியாகவே நடந்து அடுத்த நாள் இரவு தாங்கள் தங்க ஓர் இடத்தைத் தேடி அழைந்தது.
அங்கிருந்து சற்று தூரத்தில் ஏதோ ஒரு கிராமம் இருப்பதாகத் தோன்ற சுடரெழில், விமல், இளவெழிலி மற்றும் ரிஷி, நால்வரும் சத்தம் செய்யாமல் சற்று தூரத்தில் கொட்டடிக்கும் சத்தத்தை நோக்கி நடந்தனர்.
“நாச்சியா….. “, விமல்.
“ம்ம்”
“வாய தொறந்து பேசினா முத்து கொட்டுமா வைரம் கொட்டுமா?”, ரிஷி கடுப்புடன் கேட்டான்.
“ரிஷி….. “, இளவெழிலி அடக்கினாள்.
“அவள சொன்னா வந்துடுவாளே…. “, தனக்குள் முணுமுணுத்துவிட்டு, “நான் கேக்கறதுக்கு பதில் சொல்லச் சொல்லு இளா”, என இளவெழிலியிடம் வந்தான்.
“என்ன கேக்கணும் ரிஷி ?”, எழில் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் கேட்டாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த காட்டுக்குள்ளயே சுத்திட்டு இருக்கப் போறோம்?”, ரிஷி.
பதில் கூறாமல் ஓர் இடத்தில் நின்று ரிஷியைப் பார்த்தாள்.
“பதில் சொல்லு நாச்சியா”, விமலும் கேட்டான்.
“தெரியாது …. நாம எங்க போகணும் ? என்ன பண்ணணும் ? எல்லாமே அந்த ஆளுக்கு மட்டும் தான் தெரியும்”, குரலில் தெரிந்த உஷ்ணமும், அழுத்தமும் அவளின் மனநிலையைக் காட்டியது.
“இன்னும் இப்படியே நாம எத்தனை நாளைக்கு இருக்க முடியும் எழில்?”, ரிஷி.
“தெரியல ரிஷி. நமக்கு கீதன் தான் அவுட்சைட் வேர்ல்ட் கான்டாக்ட்ல இருந்தான். இப்ப அவனும் இல்ல… காட்ட விட்டு நாம வெளிய போனா நம்மள்ல ஒருத்தர் உயிர் கூட மிஞ்சாது”, அவள் குரலில் தெரிந்த உறுதி மற்ற மூவரையும் அசைத்துப் பார்த்தது.
மௌனமே சற்று நேரம் அவ்விடம் நிலைக்கொண்டிருந்தது. சத்தம் வந்து கொண்டிருந்த திக்கல் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் நினைத்தது போலவே அது பழங்குடி மக்கள் வாழும் ஒரு கிராமம் தான். காட்டின் தன்மையை மாற்றாமல் இயற்கையை பாதுகாத்து வருகின்றனர் என்று அவ்விடம் பார்த்ததும் உணர முடிந்தது. மொத்தமே ஒரு நூறு பேர் தான் இருப்பார்கள் போல, அங்கிருந்த குடில்களும் குறைவாகத் தான் இருந்தது.
தூரத்தில் இருந்து பைனாகுலரில் நால்வரும் அவ்விடத்தை மரத்தில் ஏறிப் பார்த்துவிட்டுத் திரும்பினர்.
“நாங்க யாராவது வெளியே போக ட்ரை பண்ணவா?”, விமல்.
“வேணாம்… நானே போறேன்… என்னை அவன் வர சொல்லி இருக்கான். நீங்க மூனு பேரும் தான் நம்ம டீம்ம இனி ஜாக்கிரதையா பாத்துக்கணும். முதலை இருக்குன்னு தெரிஞ்சி இறங்கிட்டோம். இனி உயிர் தப்பறது நம்ம திறமைல மட்டும் இல்ல இயற்கையும் மனசு வைக்கணும்”, எனக் கூறி டென்டை அந்த கிராமத்தில் இருந்து சற்றித் தள்ளி ஆறு ஓடும் நெருக்கமான காட்டுப் பகுதியில் நிறுவச் செய்தாள்.
அந்த பகுதியில் மிருகங்கள் நடமாட்டம் குறைவு என்பதை அறிந்தபின்பே தங்கும் ஏற்பாடுகளை ஆரம்பித்தனர்.
அக்குழுவில் இருந்த ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் சுடரெழிலை அழைத்தார்.
“எப்ப கிளம்பற ?”, என்ற அவர் குரலில் வெறுமை மட்டுமே இருந்தது.
“இன்னும் இரண்டு நாள்ல சார்”.
“நான் நீ வர்ற வரைக்கும் இருப்பேனா தெரியாது… உனக்கு வேண்டியது மட்டும் இல்லாம எல்லாத்தையும் ஒரே தொகுப்பா செஞ்சி வைக்கறேன்…. என் ட்ரஸ்ஸ மட்டும் நீயே எடுத்துக்க”, எனக் கூறி அவளை அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.
மூத்தவர் கூறிய வார்த்தைகள் ஓனாய் கூட்டத்திற்கு நடுவில் தான் மட்டும் தனியாக நிற்பதாகத் தோன்ற வைத்தது. தன்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராகத் தன்னைத் தனியாக நிற்கவைத்துச் செல்வதாக உணர்ந்தாள். மேலும் ஏதேதோ நினைவுகள் வரிசைக்கட்டித் தோன்றவும், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ராகவியை தேடிச் சென்றாள்.
“டேய் கதவ திறங்கடா….. நான் என்னடா பண்ணேன்? என்னை ஏன்டா கடத்தினீங்க? டேய்…. யாராவது இருக்கீங்களா? “, என வேதகீதன் தான் அடைபட்டிருக்கும் அறையில் சுற்றிச் சுற்றி வந்துக் கத்திக்கொண்டிருந்தான்.
“ஷட் அப்”, என்ற குரல் கனீரென ஒலித்தது…….