1 –அகரநதி
பச்சைக் கம்பளி விரித்து வரவேற்கும் வயல்கள், ஊரின் எல்லையில் இருந்து வயல் வரப்புகளிலேயே நடந்து அந்த ஊரைச் சுற்றி வந்துவிடலாம்………. அப்படி ஒரு அமைப்பு.
ஊரைச் சுற்றி ஓடும் வாய்க்கால், ஊரின் ஈசான பக்கம் ஓடும் ஆறு என அந்த இடத்தை ஒரு தீவாகவே எண்ண வைக்கும்.
உழைக்க தயாராக இருந்தால் போதும் நிச்சயமாக வருமானம் வரும் அப்படி ஒரு நில அமைப்புடன், நீர் வளமும் சேர்ந்து ஆண்டு முழுக்க நதியின் கலகலப்பும், வாய்காலின் சலசலப்புமாக பூமித்தாயை குளிர்ந்த மேனியாக வைத்திருக்கும் ஊர்வாசிகள்.
ஊர்கட்டுப்பாடு என்ற ஏதும் தேவையின்றி சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும் மக்கள் , சகமனிதத்துவம் உணர்ந்து அனைத்து வகையினரும் ஒன்றாய் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
ஓர் ஊரில் விவசாய நிலங்கள் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தபட்டு, விவசாயத்தை மதிக்கும் இடத்தில் பூமித்தாய் அகமும் புறமும் குளிர்ந்து அம்மக்களை தன் உள்ளங்கையில் தாங்குகிறாள்…. பூமித்தாயை நேசிக்க நேசிக்க, அங்கே விவசாயம் செழிக்க வழி வகுக்கும்.
வீடுகளை ஒட்டி இருந்த வரப்புகளின் வழியாக, அவ்வூரில் இருக்கும் பள்ளியை நோக்கி ஒரு வாண்டு எதிரில் வந்தவர்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டு இருந்தது.
“மணி 8 தான் ஆகுது அதுக்குள்ள ஏன் தான் இப்படி ஓடுறாளோ தெரியல…. படிக்கற வழிய காணோம் ஊர் வம்பு இழுக்கறதே வேலையா வச்சி இருக்கா உங்க பொண்ணு”, என மகளின் மேல் குற்றப்பத்திரிகை வாசித்தார் தாயார் ராதா.
“ஏன்டி …என் புள்ள பள்ளி கூடத்துக்கு தானு போறா? குஸ்திக்கு போற மாதிரி பேசிட்டு இருக்க? நேரமா வாத்தியார் வர சொல்லி இருப்பாங்க ஓடுறா”, மகளை விட்டுக் கொடுக்காமல் பேசினார் தந்தை கண்ணன்.
“4வது தான் படிக்கறா. அதுக்குள்ள எதுக்கு வாத்தியார் சீக்கிரம் வர சொல்ல போறாங்க? அப்படி என்ன இவ படிக்கறான்னு அங்கன போய் பாருங்க அப்பதான் தெரியும். எத்தனை சண்டை, எத்தனை வம்பு இழுக்கறா உங்க பொண்ணுன்னு. வெளியே போனாலே வந்து நிக்கறாங்க அத்தனை அம்மாக்களும் புகார் சொல்ல”, ராதா.
“அவங்க எதாவது தப்பு செஞ்சி இருப்பாங்க அதான் நம்ம பொண்ணு சண்டை போட்டு இருப்பா. நீ ஏன் நம்ம பொண்ணவே குறை சொல்ற?”, கண்ணன்.
மீண்டும் ராதா வாய் திறக்க,”இப்ப நான் போய் அங்க நடக்கறத பாக்கணும் அவ்வளவு தானே. பாத்துட்டு வரேன்”, எனக் கூறி சட்டையை மாட்டிக் கொண்டு பள்ளியை நோக்கிக் கிளம்பினார் கண்ணன்.
நாம வரப்ப ஒரு வாண்டு ஓடிச்சே வாங்க அத போய் நாம பாப்போம் …
“ஏய் மீரா நில்லு ஒழுங்கா என்கிட்ட வந்துரு”, அந்த வாண்டு.
“நான் வரமாட்டேன் . இன்னிக்கு நான் தான் முதல்ல வந்து இந்த பேட் எடுத்தேன்…… நான் தான் முதல்ல விளையாடுவேன்”, எனக் கூறிக்கொண்டு ஓடினாள் மீரா.
“ஏய் நில்லு அத என்கிட்ட குடு”, எனக் கூறித் துரத்தியபடி ஓடியவள் எதிரே வந்தவர்களைக் கவனியாமல் இடித்தாள்.
அவள் இடித்த வேகத்தில் எதிரே வந்தவன் கீழே விழப் போக, அதற்குள் இன்னொரு மாணவன் அவனை விழாதுப் பிடித்தான்.
“கண்ணு தெரியல உனக்கு நான் தான் துரத்திட்டு ஓடி வரேன்ல நகரமாட்ட”, என வசைபாடியபடி விழுந்தவள் எழுந்து நின்றாள்.
“ஹே பாப்பா…. நீ பாத்து ஓடிவரணும் அத விட்டுட்டு நீ கண்ணு தெரியாம ஓடி வந்து இடிச்சிட்டு விழுந்தா அவன் என்ன பண்ணுவான்?”, இன்னொரு மாணவன்.
“நான் அப்படி தான் வருவேன் நீங்க நகந்து போங்க. உன்னால என் பேட் அவ தூக்கிட்டு ஓடிட்டா. வா வந்து அந்த பேட் வாங்கி குடு”,என இடித்தவன் கைப் பிடித்து இழுத்தாள்.
நேர் வகிடு எடுத்து, இரட்டை ஜடைப் போட்டு ரிப்பன் வைத்து பின்னியிருந்தாள்.
அதிகாலை வெயிலின் மஞ்சள் நிறம். துரு துரு கண்கள், ஓயாது பேசும் வாய், கொலு கொலு கன்னம், பதிலுக்கு பதில் கொடுக்கும் துடுக்குத்தனம் என 8 வயது சிறுமிக்கே உரிய பாவனையுடன் இருந்தாள் அந்தச் சிறுபெண்.
அவள் உயரத்திற்கு கால் மடித்து அமர்ந்து “உங்க பேர் என்ன குட்டிமா?”, எனக் கேட்டான்.
“நதியாள்”.
“அழகான பேர். என்ன கிளாஸ் படிக்கறீங்க?”.
“4த் படிக்கறேன். நீ யாரு புதுசா இருக்க? உங்க பேர் என்ன?”,நதியாள்.
“என் பேர் அகரன். இங்க 11த் படிக்க வந்து இருக்கேன்”, .
“அகன் நியூ ஸ்டுடண்ட்ஆ?”, நதியாள்.
“ஆமா”,சிரித்துக் கொண்டே கூறினான் அகரன்.
“ஹே பாப்பா அகன் இல்ல அகரன் சொல்லு”, மற்றொரு மாணவன்.
“பாப்பா கூப்பிடாத நான் இப்ப 4த் படிக்கறேன். ஆமா உன் பேர் என்ன மறந்துட்டேன்?”, நதியாள் யோசனைச் செய்யும் பாவனையோடுக் கேட்டாள்.
“என் பேரு சரண்.. உன் பரமசிவன் பெரியப்பாவோட பையன்”.
“அது தெரியும். நீயும் அகன் கிளாஸா?”, நதியாள்.
“ஆமா”, சரண்.
அங்கே மீரா பேட்டை வைத்து விளையாட ஆரம்பித்ததை பார்த்ததும், “சரி அப்பறம் மீட் பண்ணலாம் நான் விளையாட போறேன்”, எனக் கூறிப் பறந்துவிட்டாள் நம் நதியாள்.
“சரியான வாலு”,சரண்.
“ஆமா.. ஆனா நல்லா பேசறா”, அகரன் புன்னகையுடன் கூறிவிட்டு பிரின்சிபால் அறை நோக்கிச் சென்றனர் இருவரும்.
அங்கே பிரின்சிபால் பதினொன்றாம் வகுப்பிற்கு அறையைக் காட்டி அனைவரும் நன்றாக படிக்க வாழ்த்திவிட்டு, தன் அலுவலக அறைக்குச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து பிரின்சிபால் அறைக்கு போன அகரன் அங்கே நதியாள் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளே வந்து ஓரமாக நின்றான்.
“என்ன பிரச்சினை நதியாள்? ஏன் மீராவ அடிச்ச?”, பிரின்ஸி.
“அவ என் பேட் எடுத்துட்டு ஓடிட்டா மிஸ். குடுக்க சொன்னா மாட்டேன் சொல்லிட்டா அதான் அடிச்சேன்”, நதியாள் கண்களை உருட்டி உருட்டி கையை ஆட்டி பதில் கூறினாள்.
“அதுக்காக அடிக்கலாமா நதியாள் ? உன் பிரண்ட் தானே மீரா? வலிக்கும்ல”, பிரின்ஸி.
“நான் 2 தடவை சொன்னேன் கேக்கல அதான் அடிச்சேன். அடுத்த டைம் நான் கேட்ட உடனே பயந்துட்டு குடுப்பால்ல மிஸ்?”, மீண்டும் அதே போல பதில் கூறினாள்.
“யார் சொன்னா அடிச்சா அடுத்த முறை பயம் வரும்ன்னு?”, பிரின்ஸி.
“ரேவதி மிஸ் தான் சொன்னாங்க மிஸ்”, நதியாள்.
அங்கே நின்ற அகரனை ரேவதி டீச்சரை அழைத்து வரும்படிக் கூறி அனுப்பினார்.
“மே ஐ கம் இன் மேம்”, ரேவதி.
“வாங்க மிஸ்.ரேவதி. நீங்க தான் இந்த முறை அடிச்சா அடுத்த முறை பயம் வரும்ன்னு சொன்னதா?”, பிரின்ஸி.
“கொஞ்சமாது பயம் வரணும்ன்னு சொன்னேன் மேம். ஆனா …”, ரேவதி.
“நீங்க சொன்னத வச்சி என்ன செஞ்சி இருக்கா பாருங்க”,என மீராவின் கைகளைக் காட்டினார் பிரின்ஸி.
“அச்சோ… இப்படி அடிபட்டு இருக்கு”, என ரேவதி கவலைப்பட்டார்.
“இனிமே எது சொல்லறதா இருந்தாலும் பாத்து கவனமா பேசுங்க .குழந்தைகள் நம்மல பாத்து தான் வளர்றாங்க”, எனக் கூறிக் குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூறினார்.
“என்ன அகரன் என்ன விஷயம்?”, பிரின்ஸி.
“கிளாஸ் டைம்டேபிள் வேணும். யார் கிட்ட கேக்கறது மேம்”, அகரன்.
“நான் குடுத்து விடறேன். இன்னிக்கு டீச்சர்ஸ் பாத்துட்டு விளையாட போங்க எல்லாரும்”, எனக் கூறி அனுப்பி வைத்தார்.
விளையாட வந்த அகரன் அங்கே மீராவும் நதியாளும் அருகருகே உட்கார்ந்து, மீராவின் காயத்தில் மருந்துப் போட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தான்.
அவர்கள் அருகில் சென்றவன் ,” என்னாச்சி நதி? ஏன் மீராவ அடிச்ச?”, எனக் கேட்டான் அகரன்.
“உன்னால தான் அகன் நான் மீராவ அடிச்சேன்”, நதியாள்.
“நான் என்ன பண்ணேன்?”, அகரன்.
“நீ ஏன் என்ன இடிச்சி தள்ளிவிட்ட? அதான் அவள அடிக்க வேண்டியதா போயிடிச்சி”, நதியாள்.
“ஹே வாலு… நீ அவள அடிச்சதுக்கு அகரன் மேல பழி போடாத”, எனக் கூறியபடி சரண் வந்து நின்றான்.
“அகன் இடிக்காம இருந்து இருந்தா நான் அப்பவே அவள பிடிச்சி இருப்பேன்.. கோவம் வந்து அடிச்சி இருக்கமாட்டேன்ல”, நதியாள் தன் வாதத்தைத் தொடர்ந்தாள்.
“அப்படியா? சரி சாரி நதி. இனிமே இப்படி நடக்காது.. நீ வரப்ப நான் ஓரமா போறேன் ஓகேவா?”, அகரன்.
“சரி மீராகிட்ட சாரி சொல்லு”, நதியாள்.
“மீராகிட்ட நீ தான் சொல்லணும் அகரன் ஏன் சொல்லணும்?”,சரண்.
“அவளுக்கு அடி விழ அகன் தான் காரணம்”, நதியாள்.
“சரி. சாரி மீரா. ரொம்ப வலிக்குதா?”, அகரன் காயத்தை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“இல்ல அண்ணா. யாள் மருந்து போட்டா இப்ப வலிக்கல”, எனக் கூறிச் சிரித்தாள் மீரா.
“சரி டாடா அகன் சரணா…… மீரா வா விளையாட போலாம்”, என நதியாள் மீராவை இழுத்துக் கொண்டு மைதானத்திற்கு ஓடினாள்.
“பாத்தியா எப்படி பேசுது இப்பவே? அவ செஞ்சதுக்கு நீ சாரி கேக்கணுமா டா?”, சரண் அகரனைப் பார்த்துக் கேட்டான்.
“சின்ன குழந்தைங்க டா. விடு .வா நாம விளையாட போலாம்”, என இன்னோரு பக்கம் சென்றனர் அகரனும் சரணும்.
“அந்த மீராவ கூட குழந்தைன்னு சொல்லு ஒத்துக்கறேன் அந்த நதியாள் இருக்கே அத குட்டிபிசாசுன்னு சொல்லு”, சரண்.
“சின்ன குழந்தைய அப்படி சொல்லாத டா”,அகரன்.
“உன்ன எத்தன தடவ பேர் சொல்லி கூப்பிட்டா தெரியுமா? அந்த மீரா பொண்ணு எவ்வளவு அழகா அண்ணா ன்னு கூப்பிடுது .அத பாத்து கூட தோணல பாரு அந்த குட்டிபிசாசுக்கு”, சரண்.
“உன்னையும் தான் பேர் சொல்லி கூப்டா…”, அகரன் சிரித்து கொண்டே கூறினான்.
சரண்,”அந்த குட்டிபிசாசு எல்லாரையும் பேர் சொல்லி தான் கூப்பிடுது. ஒரு நாள் நல்லா கவனிச்சி விடணும்”.
“ஹாஹா… விட்றா சின்ன பொண்ணு தானே. நாம போய் விளையாடலாம் வா”, என அகரன் அவனை இழுத்துச் சென்றான்.