54 – அகரநதி
சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது.
டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர்.
சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது.
நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.
அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு கட்டுகள் போடப்பட்டு இருந்தது.
அகரன் அப்பொழுது தான் கண் முழித்தான்.
எழுந்தவன் நேராக நதி இருக்கும் அவசரப்பிரிவு அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்று அவளின் கரம் பற்றி அமர்ந்துக் கொண்டான்.
அவனை தடுத்த நர்ஸை அமைதி படுத்தி சரண் வெளியே அனுப்பினான்.
ரஹீம் நதியாள் ஆபத்து கட்டத்தை தாண்டியதை அறிந்தவுடன் வினயை நோக்கி புறப்பட்டான்.
அகரன் அடித்த அடியில் பூரணனுக்கு உயிர்சுவாசம் தவிர மற்றது செயல்படாமல் போயிருந்தது.
வினயை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்துச் சென்றனர்.
மதுரனும் ரஹீமும் அவனைத் தனியாக தங்கள் கஸ்டடியில் வைக்க ஏற்பாடுச் செய்திருந்தனர்.
மதுரனும் ரஹீமுடன் கிளம்பும் சமயம் சரணும் வந்தான்.
“நீ இங்கயே இரு சரண்”, ரஹீம்.
“அவன என் கையால தான் கொல்லணும் ரஹீம். ஊருல தாலி கட்ட ட்ரை பண்ணப்பவே கொன்னிருக்கணும். இப்ப வேற எதுவும் யோசிக்கப் போறது இல்லை”,எனக் கூறி முன்னே நடந்தான் சரண்.
மூவரும் வினய் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் இடத்தை நெருங்கும் சமயம் அகரன் தேவ்வுடன் இன்னொரு காரில் இருந்து இறங்கினான்.
உள்ள சென்றவன் கை ஓயும் வரை அவனை நார் நாராக கிழித்துவிட்டே வெளியே வந்தான்.
சரண், மதுரன், ரஹீம் மூவரும் அவர்கள் ஆத்திரம் தீரும்வரையில் அடித்தனர்.
தேவ் அவனை அடிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை.. அவன் விபத்தில் இறந்து விட்டதாக ஏற்கனவே ஊருக்கு தகவல் அனுப்பிவிட்டான். ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் பறந்தபின் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தான்.
வினயின் மணரச் செய்தி சரிதாவை பித்துப் பிடிக்கச் செய்திருந்தது. அவனின் தாய் ஏதும் கூறாமல் கண்ணீரோடு அமர்ந்துவிட்டார்.
மரகதம்மாளும், மதியும் வளர்த்த பாசத்தினால் அழுது கரைந்தனர்.
பெண்களைக் கடத்தியதால் தான் வினய் இறந்தான் என்று சந்திரகாந்தனுக்கு மட்டும் தேவ் கூறினான் ஆனால் யார் எவர் என்ற விவரம் கூறவில்லை.
அவன் அப்பனை போலவே தவறான வழியில் சென்று இறந்து விட்டான் என சந்திரகாந்தனும் நினைத்து வருந்தினார்.
வினயின் உடலை தேவ் அன்று மாலை திருச்சிக்குக் கொண்டுச் சென்றான். அன்றே இரவோடு இரவாக அத்தனை காரியங்களும் செய்து முடித்துவிட்டனர்.
சரிதாவை மனநல மருத்துவரிடம் காட்ட அடுத்த நாள் அழைத்துச் சென்று அவளுக்கு மருத்துவம் ஆரம்பிக்கப்பட்டது.
நதியாள் அடுத்த நாள் மாலையில் தான் கண் திறந்தாள்.மீண்டும் உடனே மயக்கநிலைக்கு சென்றுவிட்டாள். அவள் கண் முழித்த பிறகே சரண் தங்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்து வரச்சொன்னான்.
மீனாட்சி பாட்டியும், சரோஜா பாட்டியும் அலறிக்கொண்டே ஓடி வந்தனர். சுந்தரம் தாத்தா மனமெல்லாம் வலி சுமந்தபடி வந்தார்.
செல்லாமாளும் ராதாவும் அழுதழுது மயங்கி இருந்தனர். திலகவதியை ஒரு பக்கம் துக்கம் அடைத்தாலும் தன் குடும்ப நபர்களை கவனிக்கும் பொருட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அனைவரையும் சமாதானம் செய்தபடி இருந்தார்.
கண்ணன் தாள முடியா வேதனையில் அமர்ந்து இருக்க , பரமசிவம் துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீராய் வழியவிட்டார்.
சிதம்பரமும் கண்ணில் துளிர்த்த நீரை துடைத்துக்கொண்டு அனைவரும் உடனே நதியாளைக் காண புறப்பட்டனர்.
“டாக்டர்…. நதி எப்படி இருக்கா? நாங்க பாக்கலாமா?”, அகரன் சிறிது தன்னை நிலைப்படுத்தியபடிக் கேட்டான்.
டாக்டர் ஒரு நொடி அவனை கூர்ந்து பார்த்தவர் ,” உங்க வைப் மேல அவ்ளோ லவ்வா? அவங்களுக்கு இனி எந்த பிரச்சினையும் இல்ல. ரொம்பவே மனதைரியம் இருக்கறதால தான் இவ்வளவு சீக்கிரம் ரெக்கவர் ஆகிட்டு வராங்க. இன்னிக்கு நைட் ஆர்டினரி வார்ட்க்கு மாத்திடுவோம். இப்ப போய் பாத்துட்டு உடனே வெளியே வந்துடுங்க….யூ டூ டேக் கேர்”, என அவன் தோள்களில் தட்டிக்கொடுத்துச் சென்றார் அவர்.
அகரன் முதலில் உள்ளே நுழைந்தாலும் சுவரோரமாக நின்று தன்னவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
சரண் மதுரன் முதல் அத்தனை பேரும் அவளைப் பார்த்து விட்டு வெளியே வந்தனர்.
அகரன் மெல்ல நடந்து அவளருகே சென்று அவள் தலையைக் கோதி முன்நெற்றியில் இதழ் பதித்து அவளின் வயிற்றில் தலைவைத்து அவளுக்கு நோகாமல் படுத்துக் கொண்டான்.
மூன்றாம் நாள் காலையே மொத்த குடும்பமும் மருத்துவமனையில் வந்து குவிந்து இருந்தது.
மீனாட்சி பாட்டியும், சரோஜா பாட்டியும் வைத்த ஒப்பாரியில் நர்ஸ் முதல் டாக்டர்கள் வரை வந்து சத்தம் போடாமல் இருக்கும்படி கூறிச் சென்றனர்.
பின் மெதுவாய் நதியாள் கண் விழித்ததும், அனைவரையும் கண்டு புன்னகைத்தாள்.
“சுந்தா…. ராதா…. அப்பா…. திலாத்தை…”, என வரிசையாக அழைத்தாள்.
“ஏன் கண்ணு ஜாக்கிரதையா இருந்து இருக்கலாம்ல டா? பாரு எப்படி அடிபட்டிருக்குன்னு…. எங்களுக்கு உசுரே இப்பதான்டா வருது”, என திலகவதி அவளை மெல்லமாக அணைத்து முத்தமிட்டார்.
“யார்கிட்டயும் வம்புக்கு போகாம இருன்னு சொன்னா கேக்கறியா நீ? பாரு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்குன்னு…. ஏன்டி இப்படி பண்ற?”, என ராதா திட்டினார்.
“ம்மா…. நானா வம்புக்கு போனேன். என்னை கடத்திட்டாங்க மா…. “, சிணுங்கியபடி கூறினாள் நதி.
“என்ன… கடத்திட்டாங்களா…. இந்த பையன் யாரோ ஆக்சிடெண்ட் பண்ணிட்டாங்கன்னு தானு சொன்னான்? “, மீனாட்சி பாட்டி சரணைப் பார்த்தார்.
“யாருடா அவன் என் புள்ளைய கடத்தினது? “, பரமசிவம் மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்தார்.
“என்ன எல்லாரும் இப்பதான் புதுசா கேக்கறாங்க….”, நதியாள் மனதில் நினைத்தபடி சரணனைப் பார்க்க அவன் அவளை முறைத்துக்கொண்டு இருந்தான்.
“எரும….சார் ஆக்ஸிடண்ட் ஆகிரிச்சின்னு தான் சொன்னாரு..நீ ஏன்டி உளர்ற? “, ஸ்டெல்லா அவள் காதைக் கடித்தாள்.
“அது எனக்கு எப்படி தெரியும்? முன்னயே சொல்லணும்ல …”, நதியாள்.
“யாரு தம்பி அவன்? சொல்லுங்க ஊருக்கு தூக்கிட்டு போய் அவன நம்ம நிலத்துக்கு உரமாக்கிடறோம்”, சிதம்பரம் கோபமாகக் கேட்டார்.
“அவனுங்கள்ள ஏற்கனவே ஒருத்தன புதைச்சாச்சு… இன்னொருத்தன் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கு “, எனக் கூறியபடி தேவ் உள்ளே வந்து, “எப்படி இருக்க யாள்? இப்ப வலி குறைஞ்சிடுச்சா?”, என அவள் தலையை மெதுவாக கோதியபடிக் கேட்டான்.
“பைன் தேவ்….. யார என்ன பண்ணீங்க?”, நதியாள் கூர்மையாக பார்த்தபடிக் கேட்டாள்.
“குடுக்க வேண்டியத தான் குடுத்தோம் யாள்…. நீ ஒன்னும் நினைக்காம ரெஸ்ட் எடு”, எனக் கூறியபடி மதுரனும் ரஹீமும் அனைவருக்கும் காலை உணவு வாங்கி வந்தனர்.
அவள் எழுந்து பேச ஆரம்பித்தது முதல் தன்னவளையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தானே தவிர இன்னும் அவள் அருகில் செல்லவில்லை.
அவளும் அவனை நொடிக்கு ஒரு முறைப் பார்த்தபடி தான் இருந்தாள். அவன் அமர்ந்திருக்கும் நிலையே கூறியது அவன் வேதனையின் அளவை.
நதியாள் அகரனையே பார்த்தபடி இருப்பதை உணர்ந்த சரண் அனைவரையும் கிளப்பினான் .
“வாங்க எல்லாரும் வீட்டுக்கு போய் பிரஸ் ஆகி வரலாம். அதுவரை அகர் நதியாள பாத்துப்பான்”, எனக் கூறி அனைவரையும் விரட்டினான்.
“புள்ள கூட நான் இருக்கேன் டா. அவசரத்துக்கு புள்ள சங்கடம் படும்….”, என ராதாவும் செல்லம்மாவும் வர மறுத்தனர்.
“அம்மாங்களா… அவளே அவ புருஷன் இன்னும் அவ கிட்ட வரலன்னு கடுப்புல இருக்கா … நீங்க கிளம்பிலன்னா அவளே துரத்திவிட்றுவா … நாமலே மரியாதையே கிளம்பிடலாம். அவங்க இரண்டு பேரும் பாத்துப்பாங்க நீங்க கிளம்பி வாங்க. நாம கொஞ்ச நேரம் கழிச்சி வரலாம்”, என அவர்கள் இருவரையும் இழுத்துக்கொண்டுச் சென்றான் சரண்.
“சரண்… நானும் மீராவும் இங்க இருக்கோம். நீங்க போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க போதும்”, என தாமிரா அவனை அழைத்துக் கூறினாள்.
“ஆமா டா. நானும் இங்க வெளியவே இருக்கேன். எதாவதுன்னா அவசரத்துக்கு ஆள் இருக்கணும்”, என தேவ் மீராவைப் பார்த்தபடிக் கூறினான்.
“சரிடா. ரூம் விட்டு வெளியே இருங்க அதான் நமக்கு மரியாதை”, என அனைவரும் இருவருக்கும் தனிமை கொடுத்துச் சென்றனர்.
அத்தனை நேரம் அகரனும் இடம் விட்டு அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.
நதியாள் மேலும் நில நிமிடங்கள் அவனை பார்த்துவிட்டு, “இவன இப்படியே விட்டா சரிவராது”, என தனக்கு தானே சொல்லி கொண்டு அவனை அழைத்தாள்.
“அகன்….. அகன்……”, நதியாள்.
அவன் பதிலேதும் கூறாமல் அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டு இருந்தான்.
“அகன்……. இங்க வா”, நதியாள்.
மீண்டும் பதிலில்லை அவனிடத்தில்.
“இப்ப நீ இங்க வரியா நான் அங்க வரட்டா”, எனக் கூறியும் பதில் இல்லாது போக அவள் காலை கீழே மெல்ல ஊன்றவும் வலி சுருக்கென்று தைக்க வலியில் கத்தியபடி கீழே விழும் சமயம் அகரன் அவளை தன் கைகளில் தாங்கி இருந்தான்.
அவன் கழுத்தில் கைகளை கோர்த்தபடி அவனையே பார்த்தபடி இருந்தவள், அவளை கட்டிலில் உட்காரவைத்தும் அவன் கழுத்தை விடவில்லை.
“என்னை பாரு அகன்…. ஏன் இப்ப இப்படி பேசாம இருக்க? “, நதியாள்.
அகரன் அமைதியாக அவளை முறைத்தான்.
“கட்டின பொண்டாட்டி செத்துப் பொலச்சி வந்திருக்காளே, பக்கத்துல வந்து எப்டி இருக்க? உடம்பு பரவால்லயா? ன்னு கேக்கறது இல்ல… ஒரு ஆப்பிளோ ஆரஞ்சோ ஜூஸ் பிழிஞ்சி தரலாம்னுலாம் உனக்கு தோணுதா டா? புடிச்ச வச்ச பிள்ளையாராட்டம் செவுத்தோரமா உட்காந்துட்டு இருக்க”, என அவள் வாய்மூடாமல் பேசவும் அவனுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
அவன் அவளிடம் எப்போதும் எதிர்பார்ப்பது இதைத் தானே .. தன் நதி ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் அவள் இருந்த நிலையை நினைத்து மனம் உடைந்தவன் இன்று தான் உயிர் பெறுகிறான்.
அவன் கண்களில் நீர் வழிவதைக் கண்ட நதி அவனை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
தன் உடல் காயத்தைவிட அவனின் மனக்காயம் உடனே ஆற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் உடல்வலியை பொருட்படுத்தாது அவனை தன்னுள்ளே புதைத்துக் கொண்டாள் அவனின் நதி.
“வேணாம் நதிமா…உனக்கு வலிக்கும்….”, என அவளை பிரிந்து எழ நினைத்தவனை அவள் விடவில்லை.
“உன் மனசுல இருக்கற வலிய வெளிய கொட்டிடு அகன்….. இரண்டு நாளா சாப்டியா இல்லையா ? இப்டி இளைச்சிட்ட…. “, என நதி சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
“ஐ ஹேட் யூ போடி”, அகரன் சிறுபிள்ளையாய் மாறி அழுதபடிக் கூறினான்.
“ஏன்டா? நான் என்ன பண்ணேன்?”, நதியாள் உதட்டில் புன்னகையை தவழவிட்டபடிக் கேட்டாள்.
“ஏன்டி இப்படி பண்ண? நான் தான் சொன்னேன்ல என்னை விட்டு போகாதன்னு…. எனக்கு உயிரே இல்ல நதிமா… நீ கண் முழிச்சி பாக்கறவரை நான் உயிரோடவே இல்ல டி. பொணமா தான் உட்கார்ந்து இருந்தேன்”, எனக் கூறி அவளைக் கட்டிக்கொண்டு தன் வேதனையைக் கண் வழியாக வழியவிட்டான் அவளின் அகன்.
“அவ்ளோ சீக்கிரம் உன்ன ரிலீஸ் பண்ணிட மாட்டேன் அகன்… இன்னும் உன்ன படுத்த வேண்டியது எவ்வளவு இருக்கு அதுக்குள்ள நீ ப்ரீ ஆகிடுவியா? எனக்கு எதுவும் இல்ல…. நீ எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சிட்டு மருகாம இரு . அது போதும் எனக்கு”, என அவள் அவன் முதுகை ஆதரவாகத் தடவியபடிப் பேசினாள்.
“இனிமே நீ என்னை விட்டு எங்கயும் போககூடாது நதிமா”, அகரன்.
“போகமாட்டேன்”, நதியாள்.
“எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போயிடு டி…. நீ இல்லாம நான் இருக்கமாட்டேன்”, அகரன்.
“இத்தனை வருஷமா நான் இல்லாம தான்டா இப்படி பனைமரமாட்டம் வளர்ந்து நிக்கற… இப்ப மட்டும் இப்படி சொல்ற”, நதியாள் கிண்டல் செய்தாள்.
“உனக்கு இப்ப கூட கிண்டல் கேக்குதா…”, என அவளை அடிக்க கை ஓங்கினான்.
“அய்யோ அம்மா… காப்பாத்துங்க… என் புருஷன் என்னை அடிக்கறான்…. கொடுமைபடுத்துறான் “, எனக் கத்தினாள்.
அகரன் அவள் போடும் சத்தத்தை கை வைத்து அடைக்க, அவன் கையை கடித்து வைத்தாள்.
வலியில் அவனும் அய்யோ அம்மா என கத்தவும் வெளியே அமர்ந்திருந்த தாமிரா, மீரா, தேவ் மூவரும் உள்ளே செல்லலாமா ? வேண்டாமா? எனத் தங்களுக்குள் விழித்தபடி நின்றிருந்தனர்.
தொடர்ந்து உள்ளே இருவரும் கத்திக்கொண்டு இருந்ததால் தேவ் தான் உள்ளே சென்றான்.
அங்கே அவன் பார்த்தக் காட்சியில் வயிற்றைப் பிடித்துக்கொண்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.
நதியாள் அகரனின் கையை கடிக்க ஆரம்பித்தவள் அவன் அருகில் நெருங்கி அமரவும் அவன் கன்னத்தை கடித்து இருந்தாள்.
அவளை அடிக்கவும் முடியாமல், வலியை பொறுக்கவும் முடியாமல் தான் அகரன் வாய்விட்டு கத்திக்கொண்டிருந்தான்.
இவர்கள் போட்ட சத்தத்தில் டாக்டரும் உள்ளே வந்து பார்க்க இவர்கள் இருக்கும் நிலையைக்கண்டு ,” என்ன மிஸ்டர் அகரன்… உங்க வைப் ரொம்ப பசியா இருக்காங்க போல எதுவும் தரலன்னு உங்கள கடிச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்களா?”, எனக் கிண்டல் செய்தார்.
டாக்டர் உள்ளே வந்ததும் நதியாள் அகரனின் கழுத்தில் இருந்து கையை எடுத்தாள்.
“மிஸஸ் அகரன் இப்ப எப்படி பீல் பண்றீங்க?”, என டாக்டர் அவளை பரிசோதித்தபடி கேட்டார்.
“சிவ பூஜைல கரடி வந்த மாதிரி பீல் பண்றேன் டாக்டர்”, என நதியாள் கூற , அகரன் திருதிருவென விழிக்க, டாக்டர் முதலில் புரியாமல் பார்த்தவர் பின் அர்த்தம் புரிந்து ,” வெரி நாட்டி “, என அவளைப் பார்த்துக் கூறிவிட்டு அகரனைத் தனியே அழைத்துச் சென்றார்.
“ஏய் லூசு… டாக்டர்கிட்ட இப்படியா சொல்லுவ? “, என மீரா திட்டினாள்.
“ஏய்… என்னடி எல்லாரும் என்னை திட்டிட்டு இருக்கீங்க? கொஞ்சமாது புள்ள அடிபட்டு செத்துபொலச்சி வந்து இருக்கான்னு அக்கறை இருக்கா உங்களுக்கு? கண்ணு முழிச்சதுல இருந்து திட்டியே இருக்கீங்க ஆள் மாத்தி ஆள்… அதுக்கு தான் நேத்துலாம் நான் கண்ணே தொறக்கல”, என படபடவென பொறிந்து தள்ளினாள் நதி.
“என்ன சொன்ன? நீயே கண்ணு திறக்கலியா? அப்ப நினைவு வந்தும் சும்மா கண்ண மூடிட்டு இருந்தியா?”, தாமிரா கேட்டாள்.
“அய்யய்யோ…. ஒளரிட்டேனோ…. “, எனக் கூறி நாக்கைக் கடித்தாள் நதி.
டாக்டர் அகரனை அழைத்துச் சென்று,” அவங்க கால் பிராக்சர் சரியாகற வரைக்கும் நடக்காம பாத்துக்கோங்க. அவங்க ஆக்டிவ்நெஸ் பாத்தா இப்பவே ஓட ஸ்ட்ர்ட் பண்ணிடுவாங்க போல இருக்கு. கொஞ்ச நாள் கவனமா பாத்துக்கோங்க. இரண்டு நாள்ல டிஸ்ஜார்ச் பண்ணிடலாம்”, டாக்டர்.
“தேங்க்யூ டாக்டர்..தலை காயம் ஒன்னும் பிரச்சினை இல்லையே”, அகரன்.
“அதுலாம் பிரச்சினை இல்ல ஸ்கேன் பண்ணி பாத்துட்டோம். கிளாட் ஆன பிளட்டும் எக்சஸ் ப்ளோல வந்துரிச்சி சோ நோ வர்ரிஸ்”, டாக்டர்.
“ஓக்கே டாக்டர். அடுத்து எப்ப கூட்டிட்டு வரணும்?”, அகரன்.
“15 நாள் கழிச்சி கூட்டிட்டு வாங்க. டெய்லி டிரஸ்ஸிங் பண்றத நர்ஸ் சொல்லி குடுப்பாங்க இல்லைன்னா நர்ஸ் வச்சி கூட நீங்க பாத்துக்கலாம் கொஞ்ச நாள்”, டாக்டர்.
“வேணாம் டாக்டர் நானே பாத்துக்கறேன். டிரஸ்ஸிங் பண்றதும் கேட்டுக்கறேன். தேங்க்யூ சோ மச் டாக்டர்”,எனக் கூறி திரும்பியவன் காதில் தான் நதி உளறியது விழிந்தது.
“ஏன்டி இப்படி பண்ண? நீ இன்னும் கண்ணு முழிக்கலன்னு எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா?”, மீரா கோபமாக கேட்டாள்.
“நான் சாயந்திரம் முதல்ல முழிச்சப்ப அந்த நர்ஸ் ஊசி போட்டா டி. அதுல தூங்கிட்டேன். அதான் நைட் முழிச்சி பாத்தேன்ல” நதியாள் ஆப்பிளை சாப்பிட்டபடிக் கூறினாள்.
“இவள என்னடி பண்றது?”, தாமிரா ஆயாசமாகக் கேட்டாள்.
“நல்லா பண்றமா….. உன் புருஷன் வந்துட்டான் அவன்கிட்ட பேசிட்டு இரு. வாங்க தாமிரா நாம வெளியே போலாம்”, என தேவ் கூறிவிட்டு வெளியே சென்றான்.
அவன் சென்றதும் அகரன் அந்த அறையைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தான்.
நதியாள் ஈஈஈ என பல்லைக் காட்ட அவளை அடிக்க முடியாமல் என்ன செய்வது என யோசித்தான்.
“ஆப்பிள் சாப்பிடறியா அகன்?”, நதியாள் அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
அவள் கைகளை பிடித்துக் கடித்து வைத்தான் ஆப்பிள் சாப்பிட்டபடி , வலியில் அவள் கத்தவும் அவளின் இதழணைத்து விட்டான்.
எத்தனை நொடிகள் , நிமிடங்கள் கரைந்ததோ தெரியவில்லை.
நதியாள் மூச்சிற்காக படபடத்து அவனை தள்ளி விடவும் தான் விட்டான்.
“இடியட்…. மூச்சே விட முடியல டா”, நதியாள்.
“இப்ப மூச்சு விட முடியுதில்ல”, அகரன்.
“ம்ம்…. “, என அவள் கூறி முடிக்கும் முன் மீண்டும் இதழடைத்து விட்டான் அவளின் அகன்.
அவனின் ரணம் முழுதும் இதழணைப்பில் மருந்தெடுத்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் இருவரும் அணைத்தபடியே படுத்து இருந்தனர்.
வெளியே சரண் சத்தம் கொடுக்கவும் தான் கவதைத் திறந்தான் அகரன்.
அகரன் முகம் பழையபடி உயிர்ப்போடு இருப்பதைக் கண்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
இரண்டு நாளும் அனைவரும் அவளுக்கு மாறி மாறி எதாவது ஊட்டிவிட்டபடியே இருந்தனர்.
அகரன் இரவெல்லாம் அவனே கவனித்துக்கொண்டான்.
டிஸ்ஜார்ச் செய்ததும் நேரடியாக அவள் இருந்த வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றான்.
நதியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது எப்படியும் அவனுடன் தான் வைத்துக்கொள்வான் என நினைத்திருந்தாள்.
இங்கே அழைத்து வரவும் அவளின் முகம் வாடியது. அகரன் அதைக் கண்டும் காணாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான். மற்றவர்களும் எதுவும் வாய் திறக்கவில்லை.
நேராக அவளது அறைக்கு அவளைத் தூக்கிக்கொண்டு சென்றவன் அவளை கட்டிலில் அமரவைத்தான்.
அதன்பிறகு அவளை அன்று அவன் வந்து காணவில்லை.
நதியாளின் மனமோ அவனையே சுற்றிக்கொண்டு இருந்தது.
“எங்க போனான் இவன்? அங்க கூட்டிட்டு போவான்னு பாத்தா இங்க கூட்டிட்டு வந்துட்டான். காலைல இங்க விட்டுட்டு போனதோட சரி இன்னும் என்னை பார்க்க வரல…. சோ….. அகன்….. எங்கடா இருக்க?”, என வாய்விட்டுப் புலம்பினாள்.
“இந்தா கண்ணு சாப்பிடு டா”, என செல்லம்மாள் அவளுக்கு டிபன் எடுத்துக்கொண்டு அங்கே வந்தார்.
“வேணாம் பெரியம்மா… “, நதியாள் சலிப்பாகக் கூறினாள்.
“ஏன்டா…. சாப்பிட்டு மருந்து சாப்பிடனும்ல… கொஞ்சமா சாப்பிடு டா”, செல்லம்மாள்.
“எனக்கு அகன பாக்கணும் பெரியம்மா. வரசொல்லுங்க… அப்பறமா சாப்பிடறேன்” , நதியாள்.
“தம்பி இன்னும் வரல டா. வந்தா உடனே உன்ன பாக்கதானே வரும். இப்ப சாப்பிடு”, செல்லம்மாள்.
“வேணாம் பெரியம்மா. நான் அகன் கூட சாப்பிடறேன்… நீங்க எல்லாரும் சாப்பிடுங்க”, எனக் கூறி அடமாக மறுத்துவிட்டாள்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் அகரன் அங்கே வந்தான்.
வந்தவன் அவள் கப்போர்டை திறந்து தன் மாற்றுடை எடுத்துக்கொண்டு குளித்து உடைமாற்றி வெளியே வந்தான்.
அவன் வரும்போது அவள் உட்கார்ந்தபடியே தூங்கி இருந்தாள்.
அவளை பார்த்து மென்னகைப் புரிந்துவிட்டு கீழே சென்று சாப்பிட்டுவிட்டு அவளுக்கு உணவு எடுத்துக்கொண்டு மேலே வந்து எழுப்பினான்.
“நதி….. நதிமா…. எழுந்திரு”, என அவளை தட்டி எழுப்பினான்.
“ம்ம்…. “, என முனகியபடி கண்ணை கசக்கிக்கொண்டே விழி திறந்துப்
பார்த்தாள்.
“அகன்….எப்ப வந்த? ஏன் காலைல இருந்து என்னை பாக்கவே வரல”, என சிறுகுழந்தைப் போல கேட்டாள்.
“ஏன் சாப்பிடல நீ இவ்வளவு நேரமா?”, அகரன் முறைத்தபடிக் கேட்டான்.
“நீ ஏன் என்னை பார்க்க வரல?”, அவளும் கேட்டுவிட்டு முறைத்தாள்.
“நேரத்துக்கு டேப்லட் போடணும்ல… இனியொரு தரம் சாப்பிடாமா இருக்காத இவ்ளோ நேரம்”, என திட்டிவிட்டு அவளுக்கு உணவை ஊட்ட முனைந்தான்.
அவள் அவனை முறைத்தபடி வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“வாய தொற நதிமா”, அகரன்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”, நதியாள்.
“வேலை இருந்தது…. “, விட்டேத்தியாக கூறிவிட்டு மீண்டும் உணவை அவள் வாயருகில் கொண்டு சென்றான்.
அவனை கடிக்கவேண்டும் என்கிற நினைப்பில் கடித்தவள் பல் தான் வலி எடுத்தது. அவன் உசாராக ஸ்பூனில் ஊட்டினான். அவளோ அதை கவனியாமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இதைக் கவனிக்கவில்லை.
“அம்மா…..”, என அவள் வலியில் கத்தினாள்.
“என்னாச்சி தங்கம்? ஏன்டா புள்ள கத்தறா? காலு ரொம்ப வலிக்குதா ராசாத்தி? நான் ஆட்டுக்கால் சூப் வச்சி தரவா?”, என ஆளாளுக்கு ஓடி வந்து கேட்டனர்.
“அகன் ஸ்பூன வாயில அழுத்திட்டான் சுந்தா”, என அவள் சரியாக அவனை மாட்டிவிட்டாள்.
“டேய்… புள்ள நீ வந்தா தான் சாப்பிடுவேன் உட்கார்ந்து இருக்கா அவ வாயில ஏன்டா ஸ்பூன அழுத்தற? ஒழுங்கா கைல ஊட்டிவிடுடா”, என சுந்தரம் தாத்தா அவனை அதட்டினார்.
“ராட்சசி….. அவ வேலைய மட்டும் சரியா பாக்கறா”, என முனகியவன் அவளுக்கு கையில் எடுத்து ஊட்டிவிட்டான்.
அவன் ஊட்டி முடிக்கும் வரை சுந்தரம் தாத்தா அருகிலேயே அமர்ந்து கொண்டார் மற்றவர்களை அனுப்பிவிட்டு.
“தாத்தா … அகன் என்னை முறைச்சிட்டே இருக்கான். சிரிக்கமாட்டேங்கறான்… ஏன்னு கேளுங்க”, நதியாள்.
“ஏன்டா புள்ள கிட்ட பேச மாட்டேங்கற?”, சுந்தரம் தாத்தா.
“அப்படில்லாம் ஒன்னுமில்ல… நீங்க போய் தூங்குங்க”,என எழுந்து கீழே சென்றான் அகரன்.
“பாருங்க தாத்தா…. நான் வேணும்னே அடிபட்ட மாதிரி கோச்சிட்டு போறான்… “, நதியாள் சிணுங்கினாள்.
“எங்கள விட அவன் தான் ராசாத்தி ஆடி போயிட்டான். அவனுக்கு அச்சாரம் நீ தானு…. அதான் இன்னும் கொஞ்சம் நீ ஜாக்கிரதையா இருந்து இருக்கலாம்னு கோவம். நீ இருந்த நிலைமையும் குறை சொல்ல முடியாது. கத்தியோட பத்து பேர் துரத்துறப்ப நீ இந்த அளவுக்கு இருக்கறதே பெருசு தான். அவன மடில படுக்க வச்சி கொஞ்சு சரியாகிடுவான். மீனு அப்படி தான் சமாதானம் பண்ணுவா அவன… ஆனா உன் கால்ல படாம அவன சாச்சிக்க கண்ணு…. வரான்… நான் போய் தூங்கறேன். நாளைக்கு ஊருக்கு அவங்கள அனுப்பிட்டு நானும் செல்லம்மாளும் இங்கனயே இருக்கோம் உனக்கு குணமாகற வரை. பத்து நாளைக்கு ஒரு முறை அவங்க மாறிக்குவாங்க… நான் இங்கயே தான் இருப்பேன் நீ லண்டன் போற வரைக்கும் .. சரியா?”, சுந்தரம் தாத்தா.
“சூப்பர் சுந்தா… ஆனா வயலெல்லாம் மாமாவே பாக்கணும்னா சிரமம்ல”,நதியாள்.
“அதான் உன்ற அப்பனும் பெரியப்பனும் இருக்காங்கல்ல… எல்லாம் பாத்துக்குவாங்க… நீ எதுவும் நினைக்காம தூங்கு கண்ணு”,என அவளை வாஞ்சையாய் தலைகோதிவிட்டு சென்றார் சுந்தரம் தாத்தா.
அகரன் உள்ளே வந்து அவளுக்கு மாத்திரை கொடுத்துவிட்டு அவளின் காயங்களுக்கு மருந்திட்டு விட்டு ஒரு போர்வையும் தலகாணியும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த புது சோபாவில் படுத்துக்கொண்டான்.
நதியாளுக்கு அதைப் பார்த்ததும் ஒரே குஷி வந்துவிட்டது. அவனும் இங்கேயே தங்கிவிட்டான் அல்லவா….
“அகன்…. இங்க வா… இவ்ளோ இடம் இருக்குல்ல நீ ஏன் அங்க தூங்கணும்?”, நதியாள்.
“நான் இங்கயே படுத்துக்கறேன். நீ தூங்கு”,என கண்மூடிப் படுத்துக் கொண்டான்.
“அகன்…. அகன்…..”, நதியாள் அழைத்தபடியே இருந்தாள்.
அவன் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான்.
“நீ வரமாட்டியா… போ நான் வெளிய போறேன் “,என தனக்கு கொடுக்கப்பட்ட ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு எழுந்தாள் நதியாள்.
அகரன் கோபம் வந்து அவளை அப்படியே தூக்கி பெட்டில் படுக்கவைத்து கதவைப் பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக்கொண்டான்.
“விடு … நீ வரலல்ல… நான் போறேன்….சாவி குடு”,என கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் செய்கை அவனுக்கு பள்ளி செல்லும் நதியை நியாபகப்படுத்த அவன் மென்னகை புரிந்தான்.
“ஏன்டா சிரிக்கற? சாவிய குடு. நான் வாக்கிங் போகணும்”, என மீண்டும் முறைத்தாள்.
“இந்த கால வச்சிட்டு வாக்கிங் ஒன்னு தான் குறைச்சல் உனக்கு. கம்முனு படு டி”, என அவள் அருகிலேயே அவளின் இடையை அணைத்தபடி உறங்கினான் அகரன்.
நதியாள் தன்னுள்ளே மென்னகைப் புரிந்துகொண்டு அவனை அணைத்தபடி உறங்கினாள்.
அகரனும் மர்மமாக புன்னகைத்துவிட்டு ,” கேடி”,என அவளை செல்லமாக திட்டிவிட்டு உறங்கினான்.
இப்படியாக தினமும் மோதலும் காதலுமாக நாட்கள் பறந்தது.
நதியாளின் கால் குணமாகி அவள் ஓடவும் ஆரம்பித்து விட்டாள்.
கல்லூரி இறுதி பரிட்சை முடிந்து இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.
இதற்கு நடுவில் மதுரன் ஸ்டெல்லா திருமணமும் இரு வீட்டினரின் முறைப்படி விமரிசையாக நடந்து முடிந்தது.
தேவ் மீரா இன்னும் இணையவில்லை என்றாலும் விலகவும் இல்லை.
சரிதாவை குணமாக்கி அவளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தி கொடுத்தபின் யோசிக்கலாம் என்று மீரா கூறியதால் தேவ் சரிதாவை குணமாக்கும் வேலையை துரிதப்படுத்தினான்.
“என்னது லண்டன் போறியா? ஏன் இங்க படிச்சா ஆகாதா? “, என ராதா நதியாளைத் திட்டிக்கொண்டு இருந்தார்.
“அம்மா… அது பெரிய யுனிவர்சிட்டிம்மா… அங்க சீட் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். உன் பொண்ணு மெரீட்ல வாங்கி இருக்கேன்னு சந்தோஷப்படாம திட்டிட்டே இருக்க”, நதியாள் சண்டை போட்டாள்.
“தம்பிய இரண்டு வருஷம் தனியா விட்டுட்டு அப்படி என்ன உனக்கு படிப்பு வேண்டி இருக்கு?”,ராதா.
“அம்மா….. நீயே தான படி படின்னு உயிர எடுப்ப. படிப்பு தான் ஆதாரம்னு சொல்லிட்டு இப்ப இப்படி மாத்தி பேசற… கல்யாணம் ஆகிட்டா கனவு எல்லாத்தையும் விட்றனுமா? அப்பறம் எதுக்கு எங்கள அப்படி ஆகு இப்படி ஆகுன்னு தாளிச்சி எடுக்கறீங்க? என் கனவு இது தான். நான் கண்டிப்பா படிக்க போவேன்”, நதியாள் திட்டவட்டமாக கூறிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டாள்.
“பாத்திங்களா பெரியம்மா… என்ன பேச்சு பேசறா? நாமலே ஆறுமாசம் அவங்கள பிரிச்சி வச்சிட்டோம்னு சங்கடமா இருக்கு. இப்ப இன்னும் இரண்டு வருஷம் தம்பிய தனியா தவிக்க விடணுமா? வேணாம்னு சொல்லுங்க. நீங்க அனுப்பாதீங்க.. பெரியப்பா நீங்க சொன்னா அவ கேட்பா… “, என ராதா புலம்பினார்.
“ராதா… புள்ளை கேக்கறதுல என்ன தப்பு? அவ கனவ அவ உழைச்சி அடைய நினைக்கறா… நாமலே கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தாலும் இரண்டு வருஷம் கழிச்சி தானே வச்சிக்கறதா பேசினோம். இப்ப அவன் தாலி கட்டிட்டான்ங்கிறதுக்காக அவளோட கனவை கலைக்க கூடாது. அவ படிச்சிட்டு வந்தப்பறம் அவங்க வாழ்க்கைய ஆரம்பிக்கட்டும் ராதா”, என மீனாட்சி பாட்டி ராதாவை சமாதானம் செய்தார்.
“ராதா…. அம்மா சொல்றது தான் சரி. நதி படிச்சிட்டு வந்தா ஒன்னா தானே வேலை பாக்க போறா. இது அவ முயற்சில கிடைச்ச வாய்ப்பு அதை தவற விட வேணாம். என்ன திலகா?”, என சிதம்பரமும் நதியாளுக்கு சாதகமாகப் பேசினார்.
“ஆமா அண்ணி. அவ படிச்சிட்டு வரட்டும். அகரனும் அதே தான் சொல்றான்”, திலகவதியும் சமாதானம் செய்தார்.
“மாமா…. நீங்க அமைதியா இருக்கீங்க”,என கண்ணனும் பரமசிவமும் கேட்டனர்.
“அவ படிக்க போறா .. அவ்வளவு தான். இத நான் நாலு மாசத்துத்துக்கு முன்னயே முடிவு பண்ணிட்டேன். அகரன் தான் என்கிட்ட சொல்லி உங்க சம்மதம் வாங்க சொன்னான். இதோ அவனே வரான் கேட்டுக்கோங்க”, என அவர் கூறி அமைதியாக அமர்ந்து விட்டார்.
“தம்பி… “, என செல்லம்மாள் ஆரம்பிக்கவும் அகரன் அவரைத் தடுத்து ,” அத்தை மாமா… எல்லாரும் கேட்டுக்கோங்க…. நதி இன்னும் பத்து நாள்ல லண்டன் கிளம்பறா…. அவ மட்டும் இல்ல அவளோட எல்லாமுமே எனக்கு முக்கியம் தான். நான் அப்ப அப்ப லண்டன் போய் பாத்துக்கறேன். இதோட இந்த பேச்ச விட்டுட்டு அவள சந்தோஷமா வழியனுப்பி வைக்க தயாராகுங்க”,எனக் கூறிவிட்டு தன் ஆசை மனைவியைத் தேடிச் சென்றான்.
“நதிமா… நாம நாளைக்கு சென்னை கிளம்பறோம். இப்ப தான் மது கால் பண்ணான் . விசா கன்பர்மேசனுக்காக வரசொல்லி இருக்காங்களாம். வேண்டியது எல்லாம் எடுத்து வச்சிக்க. உனக்கு பர்சேஸ் எல்லாம் அங்க பாத்துக்கலாம். மீராவுக்கு கால் பண்ணி வரசொல்லிடு இன்னிக்கே இங்க. நாளைக்கு விடியக்காலைல கிளம்பணும்”,எனக் கூறிவிட்டு கீழே சென்றுவிட்டான்.
நதியாள் மனதில் காதலும் தன்னவனின் மேல் கர்வமும் ஏற்பட்டு இதழில் புன்னகையாக வெளிபட்டது.
அனைவரும் ஒரு மனதாக அவளை லண்டன் செல்ல அனுமதித்தனர்.
அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அகரன், நதியாள் , சுந்தரம் தாத்தா, கண்ணன் நால்வரும் சென்னைக் கிளம்பினர்.
நதியாள் லண்டன் கிளம்பும் வரை கண்ணன் அவளுடனேயே தங்கிவிட்டார். அவள் ஊருக்கு செல்லும் நாள் அனைவரும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர்.
அகரன், நதியாள், மதுரன், ஸ்டெல்லா, மீரா, தேவ் என அறுவரும் லண்டன் கிளம்பினர்.
சரிதா குணமடைந்து திருமணம் செய்துகொண்டபின் , மீரா தேவ்வை ஏற்றுக்கொண்டாள். ஆதலால் அவர்களுக்கு அவள் படிப்பு முடிந்து வந்ததும் திருமணம் என்றும் நிச்சயம் மட்டும் இப்போது முடித்திருந்தனர்.
ரஹீமுக்கும், ரிஸ்வானாவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. இவர்களை வழியனுப்ப இருவரும் ஏர்போர்ட் வந்திருந்தனர்.
பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் பத்திரம் கூறி, யாரிடமும் வம்பு சண்டைக்கு செல்லாதே என நதியாளை லட்சம் முறையாக ராதா வசைபாட, சுந்தரம் தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் கண்கள் கலங்க அவர்களை ஆசிர்வதித்தனர், அனைவரிடமும் பிரியாவிடைப் பெற்று நதியாள் கண்களில் நீரைத் தேக்கியபடி விமானம் ஏறினாள் தன் கனவின் அடுத்த படியைக் கடக்க…
எத்தனை சண்டை, எத்தனை போராட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம் எல்லாம், எல்லாமே ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பினாலும் நேசத்தினாலும் தானே….
சஞ்சயும், திலீப்பும் அகரன் சரணுக்கு உதவியாளராக அங்கேயே பணியில் சேர்ந்துக் கொண்டனர்.
மைக்கேல் மேற்படிப்பிற்காக வெளி மாநிலம் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான்.
லண்டனில் பெண்கள் மூவருக்கும் அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்து ஒரு வாரம் அங்கிருந்து விட்டு தான் ஆண்கள் மூவரும் இந்தியா திரும்பினர்.
நடுவில் இரண்டு மூன்று முறை தேவும், அகரனும் வந்து போக , மதுரன் மட்டும் ஒரு வருடம் அங்கேயே தங்கிவிட்டான் பிஸ்னஸைக் காரணம் காட்டி.
அதில் அகரனும், தேவ்வும் அவனை வறுத்தபடி இருந்தனர்.
ஒரு வழியாக இரண்டு வருடம் சிறப்பாக தங்களின் மேற்படிப்பை முடித்துவிட்டு அனைவரும் இந்தியா திரும்பினர்.
ஊருக்கு வந்ததும் தேவ் திருமணம் ஏற்பாடு செய்திருந்த படியால் ஒரு வாரம் சென்னையில் இருந்து விட்டு தங்களின் சொந்த ஊருக்கு திரும்பினர். மதுரன் ஸ்டெல்லா இருவரும் நதியுடன் கிராமத்திற்கு கூடவே வந்து விட்டனர்.
தேவ்வின் திருமணம் அந்த ஊரில் தான் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்.
மீராவின் தாய் தந்தை ஸ்தானத்தில் கண்ணன் ராதாவை நிறுத்தியே அனைத்து விஷேசங்களும் நடத்தினார் மீராவின் தாயார்.
இரண்டு வருட பிரிவிற்கு பிறகு அனைவரும் ஒன்று கூடுவதால் அங்கே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை.
சரண் தாமிராவிற்கும் திருமணம் செய்ய நதியாள் பரமசிவத்திடம் சண்டையிட்டு சம்மதம் வாங்கி விட்டாள்.
தாமிராவும் சரணுக்கு மாமா குடும்ப வகையில் தூரத்து உறவு தான் என அறிந்ததும் பரமசிவம் ஒத்துக்கொண்டார்.
“ஹேய் கல்யாண பொண்ணு…. என்ன பண்ற?”, என ஸ்டெல்லா மீராவை கிண்டல் செய்தாள்.
“என்ன அதிசயம் மது அண்ணா எப்படி உன்ன தனியா விட்டாரு?”, மீரா அவளை கிண்டலடித்தாள்.
“எங்க கதைய விடு… நதியாள் கதைய கேளு”,ஸ்டெல்லா அவள் காதில் கிசுகிசுத்தாள்.
இருவரும் சத்தமாக சிரிக்க நதியாள் உள்ளே வந்தாள்.
“ஏய் என்னடி இன்னும் ரெடி ஆக ஆரம்பிக்காம உட்கார்ந்து இருக்க? அங்க தேவ் மதியமே ரிஷப்சன் டிரஸ் போட்டுட்டு உட்கார்ந்து இருக்கான்”, நதியாள்.
“அது இருக்கட்டும். அண்ணன கடிச்சி வச்சிட்டியாமே நேத்து அப்படியா?”, ஸ்டெல்லா.
“உனக்கு யார் சொன்னா?”, நதியாள் கேட்டாள்.
“அப்ப அது நிஜம் தானா?”, என ஸ்டெல்லா சிரிக்க மீராவும் சிரித்தாள்.
“போதும் டி. ஓவரா ஓட்டாதீங்க… நானும் ஓட்டுவேன்… “, நதியாள் வெட்கப்பட்டுக்கொண்டே சிரித்தாள்.
“ஹோய்ய்ய்….. பாருடா எங்க நதியாளுக்கு வெட்கம் எல்லாம் வருது…. அச்சச்சோ.. இத அண்ணா பாக்கலியே…. அப்படியே இன்னொரு முறை வெட்கப்படு யாள் நான் போட்டோ வீடியோ எல்லாம் எடுத்துக்கறேன்”,என ஸ்டெல்லா மேலும் அவளை முகம் சிவக்க வைத்தாள்.
தாமிராவும் வர மீண்டும் கலகலப்பு இரட்டிப்பானது…
இரவு ரிஷப்சன் நன்றாக ஏற்பாடு செய்திருந்தார் சந்திரகாந்தன். தன் ஒரே மகனின் திருமணத்தை அவனின் மனம் கவர்ந்த மங்கையுடன் நடத்துவதில் அந்த தாய் தந்தைக்கு தான் எத்தனை ஆனந்தம்……
மரகதம்மாளும் சிரித்த முகமாகவே வலம் வந்தார். இதில் இன்னோர் ஆச்சிரியம் சரிதாவும் சிரித்த முகமாகவே அனைத்து வேலைகளையும் எடுத்துச் செய்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் முகூர்த்தமும் குறித்தபடி நல்ல நேரத்தில் சிறப்பாக நடைபெற, சக்ரதேவ் மீராவின் கழுத்தில் பொன்தாலியிட்டு அவளனவனாக, அவளின் சரிபாதியாய் தன்னை நிலைநிறுத்திக்கொண்டான்.
மணமக்களை தனிமையில் விட்டபின் நதியாளும் அகரனும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.
அன்று தான் அவர்களுக்கும் தாம்பத்ய வாழ்வை ஆரம்பிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
நதியாளும் அகரனும் கீழே தனித்தனி அறையில் குளித்து தயாராகி பெரியவர்களிடம் ஆசி வாங்கியபின் தங்களின் இல்லற வாழ்வைத் தொடங்கினர்.
பல வருட அன்பு, நான்கு வருட காதல், ஆழமான புரிதல், நட்பான அனுசரிப்பு, குழந்தைத் தனமான சண்டை, அதற்குப்பின் சந்தோஷம் என இத்தனை நாட்கள் அவர்கள் வாழ்வை அனைத்தும் கலந்த கலவையாக கடந்திருந்தனர்.
இன்று அவன் அவளையும், அவள் அவனையும் முழுமையாக உணர்ந்து தங்களை ஒன்றாக உணர்ந்தபின் இல்லறவாழ்வில் அடி எடுத்து வைத்தனர்.
இத்தனைக் கால காத்திருப்பு, அன்பு, காதல்,நேசம் , தவிப்பு, ஏக்கம் என அனைத்தும் தங்களை ஒருவர் ஒருவர் உணர்கையில் தொலைத்துக் கொண்டிருந்தனர்.
அகரனின் நதியாக, அவனின் ஜீவநதியாக இருப்பாள்….
இன்று அகரநதியாக அவனுள் கலந்துவிட்டாள்….
இந்நதி என்றும் வற்றாத அமிர்தநதியாக, அகரநதியாய் ஓடிக்கொண்டு இருக்கும் காலம் உள்ள வரையிலும்…..
சுபம்.
உங்கள் அன்பான,
ஆலோன் மகரி.
இத்தனை நாள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்….
அடுத்த கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்… உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வருவேன்… நன்றி .
Super kadhai akka…
Nalla kudumba suzhal..
Enna namma Nadhi dhaan perusa sadhichannu oru adhyaayam edhir pathen
Also Sanjayum Dhileepum romba paavam avanagalukku yaarum illaa🤭
I love this story.. I like agaran and nadhiyal characters…. nice 😍