14 – அகரநதி
பார்ச்சூனர் காரில் இருந்து இறங்கியவன் பின் கதவைத் திறந்து உள்ளிருப்பவர்கள் இறங்க உதவி செய்தான்.
உள்ளிருந்து நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும், ஐம்பதை கடந்த ஆணும் இறங்கினர். பின் எழுவது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவரும் இறங்கினார்.
“வணக்கம் மரகதம்மா…. வாங்க…எப்படி இருக்கீங்க? வா சந்திரகாந்தா… வாம்மா… வாங்கப்பா”, என சுந்தரம் தாத்தா எழுந்து நின்று வரவேற்றார்.
“மச்சான் இவனுங்க தான் இன்னொரு குடும்பமா?”, சரண் அகரனின் காதைக் கடித்தான்.
“அப்படி தான் போல மச்சான். இவங்களை இதுவரை நான் பார்த்ததா நியாபகம் இல்லை. அந்த பாட்டிய மட்டும் எங்கயோ பாத்தமாதிரி இருக்கு”, அகரன் யோசனையுடன் கூறினான்.
“அப்ப உனக்கு வில்லன் வந்துட்டான்”, சரண் சிரித்துக்கொண்டே கூறினான்.
“எனக்கு வில்லன் வந்தா உனக்கு நான் தான் வில்லனா மாறுவேன். மூடிட்டு என்ன நடக்குதுன்னு பாக்கலாம் வா”, அகரன் சரணை இழுத்துக் கொண்டு முன் கட்டிற்கு வந்தான்.
“அகன்….. புடவை வந்துடிச்சி வந்து செலக்ட் பண்ணு”, எனக் கத்திக்கொண்டே நதியாள் முன்கட்டிற்கு ஓடி வந்தாள்.
அவள் கத்தலில் அங்கிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
“யாள் குட்டி பாட்டியையும் அத்தையையும் கூப்பிடு டா. குடிக்க எதாவது கொண்டு வர சொல்லு”,சுந்தரம் தாத்தா கூறினார்.
“சரி தாத்தா”, என வந்தவர்களுக்கு முகமனாக தலையசைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.
“என்ன அண்ணே நல்லா இருக்கீங்களா? மதனி எப்படி இருக்காங்க? இன்னும் இளமையாவே இருக்கீங்களே அந்த இரகசியம் என்ன?”, என கேட்டபடி மரகதம்மா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“ஏன்மா வந்ததும் அண்ணன கிண்டல் பண்ற? நீயும் அப்படியே தானே இருக்க மகாராணி கணக்கா….. இன்னும் அதே கம்பீரம் முகத்துல சுருக்கமே இல்ல”,சுந்தரமும் தன் வாய்ஜாலத்தைக் காட்டினார்.
“அண்ணனும் தங்கச்சியும் வந்ததும் ஆரம்பிச்சிட்டீங்களா? இரண்டு பேரும் கல்லு குண்டாட்டம் இன்னும் அப்படியே தான் இருக்கீங்க. எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பழக்கம் உங்கள விட்டு போகாது”, எனக் கூறியபடி மீனாட்சி பாட்டி வந்தார்.
“வாங்க மதினி. எங்கள விட நீங்க தான் இன்னும் சின்ன பொண்ணாட்டம் இருக்கீங்க. எப்படி இருக்கீங்க? ஊருக்கு வாங்கன்னு எத்தனை தடவை கூப்பிடறேன் வரதே இல்ல”, மரகதம்மா மீனாட்சியை ஆரத்தழுவிக்கொண்டு நலம் விசாரித்தார்.
“நான் நல்லா இருக்கேன். வாய்யா காந்தா எப்படி இருக்க? திருவிழான்னைக்கு மட்டும் தலைகாட்டிட்டு ஓடறீங்க…. ஒரு வாரம் முன்ன வந்து எங்கள எல்லாம் பாத்து பழக கூடாதா? ஏன்மா மதி நீயாவது முன்னவே வரலாம்ல? எங்க உம் புள்ளை? இந்த வருஷமாது கூட்டிட்டு வந்தியா?”, மீனாட்சி.
“எங்க அத்தை இவர் வந்தா தானே…எப்ப பாரு வியாபாரம் தான். பையனாவது வருவான்னு பாத்தா அவன் அவருக்கு மேல இருக்கான். இவன் தான் என் மகன் சக்ரதேவ்”, மதி.
“நல்ல பேரு. யாரு மரகதம் வச்சதா?”, மீனாட்சி.
“இல்ல அவர் வச்சாரு”, மரகதம் தன் கணவரின் நினைவில் மென்னகை பூத்தார்.
“தம்பி அகரா சரண்… இங்க வாங்க”, என மீனாட்சி அழைத்தார்.
“இவன் தான் என் பேரன் அகரன். அவன் பரமசிவம் பையன் சரண் அவனும் என் பேரன் தான்”, மீனாட்சி அறிமுகம் செய்து வைத்தார்.
அகரனும் சக்ரதேவும் கைக்குலுக்கிக் கொண்டனர்.
“நான் சக்ரதேவ் உங்கள்ள யார் அகரன்,சரண் ?”,சக்ரதேவ்.
“நான் அகரன். இவன் சரண்”, எனத் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டான்.
“வாங்கண்ணா… வாங்க பெரியம்மா… வாங்க மதினி”, என கைகளில் காப்பியோடு திலகவதி வந்தார்.
அவரின் பின்னே நதியாளும் இனிப்பு வகைகள் எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள்.
அகரனிடம் கொடுத்தவள்,”அகன் சீக்கிரம் உள்ள வா. புடவை வந்தாச்சி எல்லாரும் வரதுக்குள்ள நீ வந்து எனக்கு செலக்ட் பண்ணு”, எனக் கூறினாள்.
அகரனின் அருகில் அமர்ந்திருந்த தேவ் நதியாளை அப்பொழுது தான் கவனித்தான்.
“யார் இவங்க?”, என அகரனைப் பார்த்துக் கேட்டான்.
“அவ கண்ணனோட பொண்ணு நதியாள். திருவிழாகக்காக லீவு போட்டு வந்திருக்கா”, சுந்தரம்.
“நம்ம கண்ணன் பொண்ணா? நல்லா வளந்துட்டாளே. சின்ன குழந்தையா இருந்தப்ப பாத்தது. அம்மா அப்பா நல்லா இருக்காங்களாம்மா?”, சந்திரகாந்த் கேட்டார்.
“நல்லா இருக்காங்க. கொஞ்ச நேரத்துல வருவாங்க”, நதியாள் பதிலளித்தாள்.
“என்னம்மா யாரோகிட்ட பேசற மாதிரி பேசற. உரிமையா மாமான்னு கூப்பிடு”, சந்திரகாந்த் கூறிச் சிரித்தார்.
“சரிங்க மாமா”, நதியாள் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
“மாமாவா? என்னடா அவரும் மாமா முறைன்னா இவன் அத்தான் முறையா?”, எனச் சக்ரதேவைச் சுட்டிக் காட்டினான் சரண்.
“மூடிட்டு எந்திரிச்சி வா உள்ள போலாம்…. அவனே அவள கண்டுக்காம இருக்கான் நீயா கோர்த்து விடாத”, அகரன் பற்களுக்கிடையில் நறநறத்து வார்த்தைகளைத் துப்பினான்.
“சரி வா”, சரணும் அகரனும் எழுந்திரிக்க சுந்தரம் தாத்தா ,”என்னப்பா எந்திரிச்சிட்டீங்க?”, எனக் கேட்டார்.
“இல்ல யாள் கூப்டா”,சரண்.
“சரி சரி”, சுந்தரம்.
“தேவ் நீயும் உள்ள போ. அவங்க கூட பேசிட்டு இரு”, என மரகதம்மாள் கூறினார்.
“சரி பாட்டி”, என தேவும் யாரின் அழைப்பிற்கும் காத்திருக்காமல் எழுந்து உள்ளே செல்ல திரும்பினான்.
“சின்ன பசங்க பேசிட்டு இருக்கட்டும். நம்ம பேசறது அவங்களுக்கு போர் அடிக்கும்”, மரகதம்.
“ஆமா. இப்பதானே பாத்துக்கறாங்க பேசட்டும். அப்பறம் காந்தா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?”, சுந்தரம்.
“நல்லா போகுது மாமா. பையனும் இப்ப வந்துட்டான் அதனால தெம்பு கூடி இருக்கு. சிதம்பரம் எங்க ஆள காணோம்”,சந்திரகாந்த.
“திருவிழா விஷயமா தான் கோவில் வரைக்கும் போயிருக்கான் இப்ப வந்துடுவான்”, என சுந்தரம் தாத்தா கூறினார்.
“அதோ எல்லாரும் வந்துட்டாங்களே…. வாங்க அண்ணே… வாங்க மதினி…. வா கண்ணா ராதா… பரமசிவம் எங்க உன் பொண்டாட்டி?”, மீனாட்சி.
“வரேன்னு சொன்னாத்தை…இப்ப வந்துடுவா. அடடே வாடா சந்திரா… எப்படி இருக்க? வாங்க மரகதம்மா… வா மதி…”என பரமசிவம் அவர்களை வரவேற்றார். அவரை தொடர்ந்து அனைவரும் அவர்களை வரவேற்றனர்.
“வாங்க அத்தை… வாங்க அத்தான்… வாங்க அக்கா…”, என கண்ணனும் அவர்களை வரவேற்றார்.
“என்னப்பா நாலு குடும்பமும் ஒன்னா இருக்கீங்க போலவே. இப்ப தான் திருவிழா மாதிரி இருக்கு”, எனக் கூறியபடி மாந்தோப்பு தாத்தா வந்தமர்ந்தார்.
“ஆமா… திருவிழாக்கு மட்டும் தான் இவங்க இந்த ஊருக்கே வராங்க. நம்மள எல்லாம் மறந்துட்டாங்க”, என சரோஜா தேவி பாட்டி குறைபட்டார்.
“என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க? உங்கள மறந்தா எப்படி இப்ப மட்டும் பாக்க வருவோம்? அத்தான் தான் கிண்டல் பண்றாருன்னா நீயும் இப்படி சொல்ற?”, மரகதம்மாள்.
“பின்ன… போன இரண்டு வருஷமும் திருவிழா அன்னைக்கு மட்டுமே வந்துட்டு உன் பையனும் மருமகளும் ஓடிட்டாங்க. வீட்டுக்கு வரல ஒரு வாய் சாப்பிடல. கெடாவிருந்து வரைக்கும் கூட தங்கல. அப்படி என்ன சோலி? ஊர் உறவக்கூட பாக்க நேரமில்லாம?”, சரோஜாதேவி.
“பெரியம்மா அதான் இந்த வருஷம் இப்பவே வந்துட்டேன்ல குடும்பத்தோட. கெடாவிருந்து வரைக்கும் இங்க தான் இருப்போம். உங்க கையால சாப்பிடாம போகப்போறது இல்ல என்ன மதி?”, சந்திரகாந்த்.
“நல்லா பேசுவியே இத மட்டும். என்னமோ மாசக்கணக்கா இங்க தங்க போற மாதிரி. மூனு நாளுக்கு இத்தனை அலப்பறையா?”, சரோஜாதேவி கழுத்தைத் திருப்பிக்கொண்டார்.
“சரி எல்லா வேலையும் என் பையன் கிட்ட குடுத்துட்டு நிரந்தரமா இங்க இருக்கற வீட்லயே வந்து தங்கிக்கறேன். அவனுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சி குடுத்துட்டா எனக்கும் நிம்மதி தான்”, சந்திரகாந்த்.
“சரி சரி. சண்டை போட்டது போதும். திருவிழா விஷயமா நாங்க எல்லாரும் பேசணும். உங்களுக்கு புடவை எடுக்க வரச்சொன்னேன் உள்ள போய் பாருங்க. பிடிச்சத எடுத்துக்கங்க இந்த வருஷம் துணி நான் எடுத்து குடுக்கறேன்”, சுந்தரம் பெண்களை உள்ளே அனுப்பினார்.
அவங்க உள்ள வரதுக்குள்ள ஏற்கனவே உள்ள வந்தவனுங்க என்ன பன்றானுங்கன்னு பாக்கலாம் வாங்க மக்களே…
“நீங்க என்ன பண்றீங்க அகரன்?”, சக்ரதேவ்.
“நான் ஆர்கிடெட். சொந்தமா ஒரு கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கேன். இவனும் ஆர்கிடெட் என் கம்பெனில பார்ட்னர். நீங்க?”, அகரன்.
“பைன். அப்பா ஆட்டோஸ்பேர் பார்ட்ஸ் பண்ணிட்டு இருக்காரு. நான் இப்ப ஷோரூம் டீலர்ஷிப் எடுத்து இருக்கேன். அந்த வர்க் போயிட்டு இருக்கு. மே பீ நெக்ஸ்ட் மன்த் ஓபனிங் இருக்கும்”, சக்ரதேவ்.
“தட்ஸ் குட்”,எனக் கூறி அகரன் அமைதியாக உள்ளே வந்தான்.
“நதியாள் என்ன பண்றாங்க?”, சக்ரதேவ்.
“அவ இப்பதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கா”, சரண்.
“ஹோ…என்ன படிக்கறாங்க?”, சற்று ஆர்வமாக வினவினான் சக்ரதேவ்.
“என்னைபத்தி என்கிட்ட கேளுங்க மிஸ்டர்”,நதியாள் அவர்களின் முன் நின்றிருந்தாள்.
கைகளை கட்டிக்கொண்டு கண்களில் சற்று கோபத்துடன் நின்றிருந்தாள்.
“அகன்…உன்ன உள்ள வரசொல்லி எவ்வளவு நேரம் ஆச்சி? ஆடி அசஞ்சி இந்த மைதா மாவு கூட பேசிட்டு வர…கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல”, அகரன் காதில் அவனை மைதா மாவு என்று கூறியதை மட்டும் சத்தத்தைக் குறைத்துக் கூறினாள்.
அவளின் பேச்சில் வந்த சிரிப்பை வாயிற்குள் அடக்கினான் அகரன்.
“இல்ல மிஸ். நீங்க முன்ன இருந்தா கேட்டு இருப்பேன் இல்லன்னு தான் அவங்க கிட்ட கேட்டேன்”, சக்ரதேவ்.
“ஓகே. ஐ ம் நதியாள். பைனல் ஆர்கி அன்ட் இன்டீரியர் டிசைனிங் படிக்கறேன்”, நதியாள் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்.
“தட்ஸ் கூல். என்ன எல்லாருமே ஆர்கி படிச்சி இருக்கீங்க?எல்லாமே பிளானா?”, சக்ரதேவ்.
“அவங்கவங்க அவங்களுக்கு பிடிச்சத படிக்கறாங்க மிஸ்டர்”,நதியாள்.
“ஐ ம் சக்ரதேவ்”.
“பைன் மிஸ்டர் சக்ரதேவ் நீங்க இங்கயே உட்கார்ந்து டிவி பாருங்க நாங்க வந்துடறோம்”, என அகரனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ… நானும் வரலாமா ?”, எனக் கேட்டான் சக்ரதேவ்.
“வாங்க தேவ்…”, என அகரன் அழைத்தான்.
“அவன ஏன் கூப்பிடற?”, சரண்.
“நதிகிட்ட அவன் நெருங்க முடியாது மச்சான். அதான் வரசொன்னேன்”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“என்ன டிரஸ் பர்சேஷிங் இப்ப?”, சக்ரதேவ்.
“திருவிழாக்காக . சுந்தரம் தாத்தா எடுத்து குடுக்கறாரு”,சரண்.
“ஹோ…. பைத வே சரண் உங்கள நான் எப்படி கூப்பிடணும்?”, சக்ரதேவ்.
“நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம்”, சரண்.
“அவன் உனக்கு அத்தான் தேவ். அகரனும் உனக்கு அத்தான் தான். நதியாள் உனக்கு மாமா பொண்ணு”,எனக் கூறியபடி மரகதம்மாள் உள்ளே வர அவரின் பின்னே மகளிர் அணி உள்ளே நுழைந்தது.
“ஹோ…. மாமா பொண்ணா?”, சக்ரதேவ் சற்று இதமாக கூறிக்கொண்டான்.
“என்ன நதியாள்? என்ன பண்ற?”, மரகதம்மாள்.
“அகன எனக்கு சேரி செலக்ட் பண்ண சொல்லிட்டு இருக்கேன் பாட்டி”, நதியாள்.
“யாள் குட்டி”, என அழைத்தபடி பரமசிவத்தின் மனைவி செல்லம்மாள் உள்ளே வந்தார்.
“பெரியம்மா…..”, என ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டாள் நதி.
“ஏய் வாலு… இன்னும் சின்ன பொண்ணு மாதிரி கத்திட்டு இருக்க. அமைதியா பேசு”, ராதா அதட்டினார்.
“விடு ராதா. இவ இல்லாம வீடே வெறிச்சோடி போய் கெடக்கு. கலகலன்னு இருக்கத்தான் பொம்பள புள்ள வேணும்”,செல்லம்மாள்.
“அப்படி சொல்லு செல்லம்மா… இவ வந்தப்பறம் தான் எனக்கு தோப்பே நல்லா இருக்கு. எத்தனை வருஷம் தான் படிப்பு படிப்புன்னு புள்ளைய வெளியூர்ல தங்க வைப்ப? போதும் இதோட நிறுத்திடு”, சரோஜா தேவி.
“ஹேய் தேவி சரோஜா”, நதியாள்.
“யாள்…”, ராதா அதட்டவும் ,” சரி சரி. இங்க பாரு பாட்டி நான் இன்னும் நிறைய படிக்கணும் வேலைக்கு போகணும். சம்பாதிக்கணும். இப்பவே நீ என்டு கார்ட் போட பாக்கறியா?”, நதியாள் முறைத்தபடிக் கேட்டாள்.
“நீ ஏன் இன்னொருத்தன் கிட்ட வேலைக்கு போகணும் உன்ற அப்பனே இருநூறு பேருக்கு வேலை குடுக்கறான்”, சரோஜாதேவி.
“அது என் அப்பா சம்பாதிக்கறது. நான் என் சொந்த கால்ல நிக்கணும் சம்பாதிக்கணும். அது தான் அவங்களுக்கு பெருமை”, நதியாள்.
“ஹாஹாஹா… நல்லா வாயடிக்கிறா ராதா. எப்படி வச்சி சமாளிக்கற?”, மரகதம்மாள்.
“அவங்க எங்க சமாளிக்கறாங்க. நான் தான் எல்லாரையும் சமாளிக்கறேன் பாட்டி”, நதியாள்.
“மதி… இப்படி ஒரு பொண்ணு தான் வேணும்னு சொல்றது. பாத்தியா எப்படி பேசறான்னு? சரி நீ படிச்சிட்டு சம்பாதிக்க ஆரம்பிச்சதும் கல்யாணம் பண்ணணும்ல அப்ப எந்த ஊருக்கு போகலாம்னு இருக்க?”, மரகதம் ஒரு வித ஆர்வமும் எதிர்பார்ப்புடன் கேட்டார்.
இப்படி ஒரு கேள்வி கேட்டதும் அகரனும், திலகவதியும், மீனாட்சியும், சரோஜாதேவியும் அவளது பதிலுக்காக கூர்ந்துப் பார்த்தனர்.
“அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு பாட்டி. அத அப்ப பாத்துக்கலாம். அகன் இப்ப நீ எனக்கு புடவை செலக்ட் பண்ணு”, நதியாள்.
அவளின் பதிலில் ஏமாற்றம் அடைந்தாலும், அகரனை புடவை எடுத்து தர சொன்னதில் அவர்கள் சந்தோஷம் கொண்டனர். மரகதம்மாள் மட்டும் சற்றே ஏமாற்றத்துடன் முகம் சுளித்தார்.
“இந்த கலர் ஓக்கேவா நதிமா?”, என அகரன் ஒரு நேவிபுளூ கலரும் ராயல் புளூவும் கலந்தாற்போன்ற புடவையை எடுத்தான்.
சின்னதாக பார்டர் வைத்து, அழகாக பெரிய புட்டாவாக சக்கரம்புட்டா வைத்து, முந்தானையில் பெரிதாக அன்னத்தின் உருவம் நெய்யப்பட்டு இருந்தது. அவளது நிறத்திற்கு மிகவும் பொறுத்தமாகவும், அவளுக்கு பிடித்தாற்போல் சிம்பிளாகவும் இருந்தது.
“சூப்பர் செலக்சன் அகன்”, நதியாள்.
“அகரா.. இன்னொரு புடவை எடுத்துடு பூக்குழி திருவிழா அன்னைக்கு புதுசு தான் கட்டணும் “,மீனாட்சி.
“அது நான் எடுக்கறேன்”, சரண்.
“சரணா….”, நதியாள்.
“இப்ப நீ செலக்ட் தான் பண்ணப்போற”, நதியாள்.
“ஆமா”, சரண்.
“எடுத்து தரல”,நதியாள்.
“எடுத்து தானே தரேன்”, சரண்.
“இது தாத்தா தான் எடுத்து தராங்க. நீ இல்ல. சொ எனக்கு பிராமிஸ் பண்ணமாதிரி எனக்கு நீ, நான் கேக்கறப்ப டிரஸ் எடுத்து தரணும்”, நதியாள்.
“ஹேய்… இதுல்லாம் போங்கு. நீ எனக்கு செலக்ட் பண்ணமாதிரி நானும் பண்றேன் அவ்வளவு தான்”,சரண் பதறியபடிக் கூறினான்.
“அதுல்லாம் ஒத்துக்க முடியாது. நீ ப்ராமிஸ் பண்ணிட்ட. அகனும் சுந்தாவும் சாட்சி. இப்ப செலக்ட் பண்ணு நான் கேக்கறப்ப எடுத்து குடு. என்ன அகன் கரெக்ட் தானே?”, நதியாள்.
“ஆமா நதி. கரெக்ட் தான்”, என அகரனின் தன் இரு கைகளின் கட்டை விரலையும் உயர்த்திக் கூறினான்.
“டேய்…இது அநியாயம் டா”, சரண்.
“எல்லாம் நியாயம் தான்”, அகரன்.
“அம்மா… இங்க பாரும்மா”, சரண் தன் அம்மாவை அழைத்தான்.
அவர்கள் இந்த உலகத்தில் இருந்தால் தானே அனைவரும் புடவை எடுப்பதில் மூழ்கி இருந்தனர். இனி எத்தனை நேரம் ஆகுமோ?
“என்னடா? சும்மா நொய் நொய்னு…. புள்ள கேட்டா எடுத்து குடுக்கணும். இப்ப என்னை புடவை எடுக்க விடு”, செல்லம்மாள்.
ராதா அவர்களை பார்த்துச் சிரித்தபடி தானும் புடவை எடுக்கத்தொடங்கினார்.
சரண் நதிக்கு எடுத்துக்கொண்டிருக்க, நதியாள் ராதா, செல்லம்மாள், சரோஜாதேவி, மீனாட்சி ,திலகவதியென அனைவருக்கும் தானே அவர்களுக்கு ஏற்றதாக எடுத்து கொடுத்தாள்.
“நதியாள்…எனக்கும் ஒன்னு எடுத்து குடுடா”, மதி.
“கண்டிப்பா…. உங்களுக்கு….. ம்ம்… இந்த கலர் சூப்பரா இருக்கும். பிடிச்சி இருக்கா உங்களுக்கு”, நதியாள்.
“ஏன்டா என்னை அத்தைனு கூப்பிடமாட்டியா?”, மதி சற்றே ஏக்கத்துடன் கேட்டார்.
“இல்ல சடனா கூப்பிட வரல. இனிமே கூப்பிடறேன் அத்தை”, நதியாள்.
“நைஸ் செலக்சன்”, சக்ரதேவ் அவளைப் பார்த்தபடிக் கூறினான்.
“தேங்க்ஸ்”, நதியாள் விட்டேத்தியாக பதிலளித்தாள்.
“ஏன் எனக்கு எடுத்து தரமாட்டியா?”, மரகதம்மாள்.
“நீங்க தான் ஆல்ரெடி எடுத்துட்டீங்களே பாட்டி”, நதியாள்.
“இருந்தாலும் நீ ஒன்னு எடுத்து குடு.எல்லாருக்கும் எடுத்து குடுத்த எனக்கு குடுக்கமாட்டியா?”,மரகதம்.
“செலக்ட் தானே பண்ணிட்டா போச்சி பாட்டி”, எனக் கூறியவள் அடர்பச்சை புடவையை அவருக்கு எடுத்து கொடுத்தாள்.
எல்லாரும் புடவை எடுத்து முடிக்கவும் ஆண்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“எல்லாரும் எடுத்துட்டீங்களா?”, சுந்தரம்.
“டன் சுந்தா. பில் மட்டும் தான் பாக்கி”, நதியாள்.
“யாள்…. தாத்தாவ பேர் சொல்லி கூப்பிடாத”, ராதா கண்டித்தார்.
“விடு ராதா. அது எங்களுக்குள்ள அப்படிதான்”, சுந்தரம்.
“எல்லாரும் இப்படி செல்லம் குடுத்தா எப்படி பெரியப்பா? நாளைக்கு போற இடத்துல இப்படி பேசினா என்னை தானே குறை சொல்வாங்க”, ராதா.
“நீ ஏன் குறை சொல்ற இடத்துக்கு அனுப்பற?”, மாந்தோப்பு தாத்தா.
“இங்க பாருங்க. ஏன் எல்லாரும் என்னை பேக் பண்றதுலயே இருக்கீங்க? இப்பதான் யூஜி படிச்சிட்டு இருக்கேன். இன்னும் படிக்கறது நிறைய இருக்கு. நானா சொல்ற வரை யாரும் இந்த பேச்சு எடுக்கக்கூடாது”, நதியாள் சற்றே கோபத்துடன் கூறினாள்.
“நீயா கேட்டப்பறமா கல்யாணம் பண்ணுவாங்க? அதுல்லாம் காலாகாலத்துல நடக்கணும்”,மரகதம்.
“அது நடக்கறதுக்கான காலம் இது இல்ல பாட்டி. இந்த பேச்ச விட்டுட்டு வேற பேசுங்க எல்லாரும். வா சரணா. அகன்”, என அவர்களை அழைத்துக்கொண்டு மேலே சென்றாள் நதியாள்.
“எம்மாடி எவ்ளோ கோவம் வருது? ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோவமும் தைரியமும் இருக்ககூடாதுத்தா. எல்லார் முன்னாடியும் இப்படி பேசிட்டு போறா”,என மரகதம் குறைக் கூறினார்.
“அவ அப்டி தான். எதையும் மனசுல வச்சிக்கமாட்டா. விடு மரகதம். நீங்க பிரயாணம் பண்ணதுல அலுப்பா இருப்பீங்க. வீடு சுத்தம் பண்ணியாச்சி போய் ஓய்வெடுங்க .நாளைக்கு பிரம்ம முகூர்த்தத்துல தீர்த்தம் எடுக்க போகணும்ல”,மாந்தோப்பு தாத்தா பேச்சை மாற்றி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
அவர்கள் சென்ற பிறகு தான் இவர்கள் சற்று ஆசுவாசமாக அமர்ந்தனர்.
“யப்பா…. இன்னும் இந்த மரகதம் அப்படியே தான் இருக்கா. எப்படிதான் மதி பொண்ணு சமாளிக்குதோ?”, சரோஜாதேவி.
“ஆமா மதினி. இன்னும் மாறவே இல்ல. திருவிழா முடிஞ்சி நல்லபடியா அனுப்பி வச்சா போதும் இப்ப”, மீனாட்சி.
“விடுங்க அத்தை அவங்க சுபாவம் அப்படி”, பரமசிவம்.
“இல்ல சிவம். அவ இருக்கற இடத்துல அவ மட்டும் தான் முக்கியம்னு நினைப்பா. அவள தவுத்து மத்தவங்க கூட கொஞ்சம் அதிகம் பேசினாலும் அவளுக்கு பொறுக்காது… எதாவது செஞ்சி அந்த இடத்த ரணகளம் ஆக்கிறுவா. எப்படிதான் என் கொழுந்தன் இவள இத்தனை வருஷம் சமாளிச்சாரோ தெர்ல”, சரோஜாதேவி.
“அவ்வளவு பேசுவாங்களா அத்தை?”, செல்லம்மாள்.
“ஆமாம்மா. நல்லவ தான் ஆனா அகங்காரம் அதிகம். அவ இருக்கற இடத்துல அவளுக்கு தான் முதல் மரியாதை குடுக்கணும் அவள தான் கவனிக்கணும்”, சரோஜாதேவி.
“பாத்தா அப்படி ஒன்னும் தெரியலியே அத்தை”, ராதா.
“மீனாட்சிய கேளு அவளுக்கு நல்லா தெரியும்.இந்த வருஷம் இவ வந்து இருக்கா. இந்த திருவிழா எப்படி பிரச்சினை இல்லாம நடக்குமோ தெர்ல”,, சரோஜாதேவி சற்று விசனத்துடன் கூறினார்.
“திருவிழால அவங்க என்ன பிரச்சினை பண்ணப்போறாங்க அத்தை?”, கண்ணன்.
“அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளும் வரா இந்த வருஷம். அவளுக்கு ஒரு பொண்ணு பையன். அந்த பொண்ண இந்த வருஷம் திருவிழால முதல் மரியாதைக்கு நிக்க வைக்கலாம்னு முடிவோட தான் வந்து இருக்கா”, சரோஜாதேவி.
“என்னத்தை சொல்றீங்க? நம்ம குடும்பத்து பொண்ணுக்கு தானே இந்த வருஷம் முதல் மரியாதை குடுக்கணும். அவங்க பேத்திக்கு எப்படி குடுக்க முடியும்?”, சிதம்பரம்.
“கண்ணனுக்கு மட்டும் தான் பொண்ணு மத்த மூனு பேருக்கும் பசங்கன்னு இத்தனை வருஷம் இந்த வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தானே மரியாதை பண்ணோம். இந்த வருஷம் நதி வந்துட்டா. அவ கல்யாணம் ஆகி போறவரை அவளுக்கு தான் அத குடுக்கணும். அது தான் முறையும் கூட. பதினெட்டு வயசு முடிஞ்சிட்டுல்ல ராதா அவளுக்கு?”, சரோஜாதேவி.
“முடிஞ்சிட்டு வர ஆவணி மாசம் வந்தா இருபது”, ராதா.
“அப்ப சரி. நதியாளுக்கு தான் நேரடி உரிமை இருக்கு. இத்தனை வருஷம் வயசு போதலன்னு மருமகங்கள நிக்கவச்சோம். இந்த வருஷம் நதியாளுக்கு தான் முதல்மரியாதை குடுக்கோணும். மரகதம் நிச்சயம் நாளைக்கு பிரச்சினை பண்ணுவா. ஜாக்கிரதையா இருக்கணும் எல்லாரும்”, சரோஜாதேவி.
“விடு தேவி. அதுக்கும் மீறி பிரச்சினை வந்தா நாம பேசிக்கலாம். நதிக்கு தான் முதல் மரியாதை இந்த வருஷம் மட்டுமில்ல இனி எல்லா வருஷமும்”, சுந்தரம்.
“அது எப்படி மாமா எல்லா வருஷமும் குடுக்க முடியும்? கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போற புள்ளைல”, பரமசிவம்.
“எல்லாரும் இங்க இருக்கீங்க இப்பவே கேட்டுடறேன். அகரனுக்கு நதியாள கட்டி குடுக்க சம்மதமா கண்ணா?”, சுந்தரம் நேரடியாக விஷயத்தை உடைத்தார்.
அவர் அப்படி கேட்டதும் கண்ணனும் ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.
“என்ன ராதா அமைதியா இருக்க? எங்க பேரன புடிக்கலியா?”, மீனாட்சி.
“அப்படி இல்ல பெரியம்மா. சட்டுன்னு கேட்டதும் எனக்கு ஒன்னும் புரியல. நம்ம வீட்டுக்கு அவள அனுப்ப எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். அவர் என்ன சொல்றாருன்னு கேக்கணும்”, ராதா தன் சம்மதத்தை கூறினார்.
“என்ன சிவம் உனக்கு?”, சுந்தரம்.
“எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா. நதி நம்மகூடவே இருப்பா. கண்ணா சொல்லுடா”, பரமசிவம்.
“எனக்கும் சந்தோஷம் தான் மாமா ஆனா ….” என இழுத்தார் கண்ணன்.
“என்னப்பா..?”, சுந்தரம்.
“மச்சானும் தங்கச்சியும் அமைதியா இருக்காங்க”, கண்ணன்.
“எங்களுக்கு பரிபூரண சம்மதம் அத்தான். பசங்களுக்கு பிடிச்சா தாராளமா செஞ்சிடலாம்ங்கிறது எங்க முடிவு”, சிதம்பரம்.
“நதிய ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு உங்களுக்கு சம்மதம் சொல்றேன் மாமா. வாக்கு குடுத்தா மாறக்கூடாதுல்ல”, கண்ணன்.
“உண்மை தான். ஆனா அவ இப்ப அதப்பத்தி யோசிக்கக்கூட தயாரா இல்ல கண்ணா. நீ வேற இடம் பாக்கறதுக்கு முன்ன நாங்க உன்கிட்ட கேக்கணும்னு தான் கேட்டோம். அகரனுக்கும் இன்னும் நாங்க விஷயத்த சொல்லல. இப்ப ஜாதகம் பாக்கலாம். ஒத்து வந்தா மேற்கொண்டு பசங்க கிட்ட பேசலாம்னு தான் இப்பவே கேட்டேன்”, சுந்தரம்.
“சரிங்க மாமா. பசங்க விருப்பம் தான் இதுல முக்கியம். இங்க கட்டிகுடுத்தா நானும் ராதாவும் . அவளபத்தி கவலைபடாம நிம்மதியா இருப்போம் “,கண்ணன் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
“சரி. நாளைக்கு ஜோசியர பாத்து பொருத்தம் பாத்துறலாம். அப்பறம் மத்தத யோசிக்கலாம்”, மாந்தோப்பு தாத்தா.
“சரி. நேரமா தீர்த்தம் எடுக்க வந்துடுங்க எல்லாரும். ராதா நதிக்கு காலைல தாவணி போட்டு அனுப்பிவிடு. மதிய பூஜைக்கு புடவை கட்டி நல்லா அலங்காரம் பண்ணிடு”, மீனாட்சி.
“அவகிட்ட இந்த விஷயத்துக்கு தான் போராடணும் பெரியம்மா. ஒரு நெக்லஸ் இல்லைன்னா மெல்லிசா ஒரு செயின் அதுக்கு மேல போடமாட்டேங்கறா. அன்னிக்கு ஆசையா ஒட்டியாணம் குடுத்தா இதுல்லாம் புடவைக்கு போட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்லி போட்டுக்கல. எத்தனை நகை எடுத்து வச்சி இருக்கேன் ஒன்ன கூட பாக்கறது இல்ல”, ராதா சலிப்புடன் கூறினார்.
“நான் வரேன் நாளைக்கு. அவள அலங்காரம் பண்றது என் பொறுப்பு. நீ நகைய எடுத்து வை நான் மாட்டி விடறேன் அவளுக்கு. இந்த புடவைக்கு ரவிக்கை இருக்கா?”, செல்லம்மாள்.
“ம்ம். எல்லா கலரும் வராப்புல பூ டிசைன் போட்டு வாங்கி வச்சி இருக்கேன். எல்லா கலருக்கும் பொருந்தும். இல்லைன்னாலும் பத்து ரவிக்கை இருக்கு அவளுக்கு புதுசா”, ராதா.
“அப்ப சரி. நாளைக்கு காலைல வரேன், அவர கோவிலுக்கு அனுப்பிட்டு”, செல்லம்மாள்.
“சரிக்கா. வாங்க…”, ராதா.
“என்ன மதினி?”, மீனாட்சி அமைதியாக கண் மூடி அமர்ந்து இருந்த சரோஜாதேவியை தொட்டுக் கேட்டார்.
“நம்ம புள்ளைங்க இரண்டும் ஒன்னு சேரணும்னு தான் வேண்டிகிட்டேன் மதினி. இரண்டும் இன்னிக்கு வீட்டுக்கு வந்துச்சி. இரண்டையும் பாத்து புருஷன் பொண்டாட்டின்னு தான் நினைச்சேன்….. அத்தனை பொருத்தம் ஒத்துமை இருக்கு அவங்களுக்கு. எல்லாம் நல்ல படியா நடக்கட்டும் ஊருக்கே விருந்து வச்சிடுவேன்ல”, சரோஜாதேவி.
“நானும் அதான் சொன்னேன் இன்னிக்கு”,மீனாட்சி கூறிச் சிரித்தார்.
இவர்கள் கீழே பேசிக்கொண்டு இருக்க மேலே வழக்கம் போல சரணும் நதியும் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தனர். அகரன் நதியை கண்களால் அவளைத் தழுவிக்கொண்டு இருந்தான்.
அடுத்த நாள் காலை பிரம்ம முகூர்தத்தில் முதல் தீர்த்தம் எடுக்க அனைவரும் கோவிலில் இருந்து புறப்பட்டனர். சரோஜாதேவி பாட்டி கூறியது போலவே மரகதம்மாள் ஒரு பிரச்சினையுடன் ஆற்றங்கரையில் நின்றிருந்தார்.