15 – அர்ஜுன நந்தன்
மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள்.
அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள்.
நெடுமாறன் அவள் பின்னே வந்து நின்று ,” நீ தேடறது கிடைச்சுதா?”.
அவனைத் திமிராய் ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேணும்கிறது நான் நினைக்கறப்ப என் கைல இருக்கும். யார் தடுத்தாலும் யார் மறச்சாலும்”.
அவன் அவளை ஆழமாகப் பார்க்க, அவளும் அதே பார்வைப் பார்க்க அங்கிருந்து நகர்ந்தான்.
அவள் கிடைத்த விவரங்களை செந்திலிடம் குடுக்க வெளியே வந்தாள். அந்த சமயம் உள்ளே நுழைந்த சேரலாதன் அவளை அழைத்தான்.
“பூவழகி இங்க வா”, சேரலாதன்.
பைக்கில் ஏறப் போனவள் திரும்பி வந்தாள். “என்னங்க சார்?”.
“எங்க கிளம்பிட்ட? தம்பி கிட்ட பொருள் வாங்கிட்டியா?”, சேரலாதன்.
“வாங்கிட்டேன் சார். சாப்பிடலாம்னு வெளிய போறேன்.எதாவது அவசர வேலையா சார்?”, பூவழகி.
“ஆமா. நீ வீட்லயே சாப்பிட்டு சீக்கிரம் தம்பி கூட கிளம்பி வா. நான் முன்ன போறேன்” சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று நெடுமாறனிடமும் கூறிவிட்டுச் சென்றான்.
அவள் யோசனையாக வீட்டிற்குள் வந்தாள். பாண்டி அவளிடம்,” பூவு சீக்கிரம் போய் பின்னாடி பக்கம் சாப்பிட்டு வா”.
அந்தச் சமயம் நெடுமாறன், ”பாண்டி அவள இங்கயே சாப்பிடச் சொல்லு. நானும் சாப்பிடத் தான் போறேன்”.
“பரவால்ல நான் பின்னாடி பக்கம் போறேன் பாண்டி அண்ணா”, பூவழகி.
“சொல்றேன்ல. என் வார்த்தைக்கு என்ன மரியாதை? வந்து உக்காந்து சாப்பிட சொல்லு பாண்டி”, கோபமாகக் கூறிவிட்டு டைனிங் டேபிலுக்குச் சென்றுவிட்டான் நெடுமாறன்.
“பூவு… போ உள்ள…. தம்பி கோச்சிக்கும் அப்பறம்”, பாண்டி.
வேண்டா வெறுப்பாகச் சாப்பிட அமர்ந்தாள். டைனிங் டேபிள் நிறைய அசைவ உணவுகளை பரப்பி வைத்து இருந்தனர்.
செட்டிநாடு சிக்கன் பிரை, கல் தோசை, மட்டன் கைமா, நண்டு பிரை , மீன் பிரை, அப்பம் என இருக்க பூவழகி சாப்பிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
கைகழுவி வந்து அமர்ந்தவள் அங்கிருந்தவர்களை மறந்தாள்.
டேபிளில் இருந்த பாதியை சாப்பிட்டு விட்டு தலை நிமிர்ந்தாள், அப்பொழுது பாண்டி அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தவன்.
“என்ன அண்ணா அப்படி பாக்கற?”, பூவழகி.
“இல்ல ஒரு வாரமா நீ சாப்பிடலியா பூவு? “, மலைத்து விழித்து கேட்டான் பாண்டி.
“காலைல சரியா சாப்பிடல அண்ணே. அதான் ஐட்டம்லா நல்லா இருந்ததும் உள்ள போயிடிச்சி”, சிரித்துக் கொண்டு பதில் கூறினாள்.
நெடுமாறன், ”சரிதான். குடும்பத்துல கடன் எப்படி வந்ததுன்னு இப்பதானு தெரியுது. நீ பின்னாடி அனுப்பி இருந்த உங்க யாருக்கும் மதிய சாப்பாடு இல்லாம போய் இருக்கும். சாப்பிடறப்ப எதிரில இருக்கறவங்களையும் கொஞ்சம் கவனிக்கனும்னு யாரும் சொல்லி தரல போல”, நக்கலாகக் கூறினான்.
“பாண்டியண்ணே நான் பாட்டுக்கு வெளிய போய் சாப்பிட்டு இருப்பேன். நான் வேலை பாக்கறேன் சம்பளம் வாங்கறேன். எவ்வளவு சாப்பிட்டா யாருக்கு என்ன? இன்னொருவாட்டி இந்த நக்கல் பேச்சு வேணாம்னு உங்க தொம்பி கிட்ட சொல்லுங்க”, அவளும் கடுகடுத்தாள்.
பாண்டி இருவருக்கும் இடையில் முழித்தான். இவர்கள் பேச்சுமுறை அவனுக்கு சந்தேகம் வந்தது. ஏற்கனவே பரிச்சயமானவர்கள் போல அவர்கள் நடப்பதும், அவள் கோபம் கொள்வதும், அதை நெடுமாறன் கண்டுகொள்ளாமல் மேலும் ஏதோ சொல்வதும், எனப் போவதைக் கண்டு சந்தேகம் வலுவடைந்தது.
“பூவு உனக்கு ஏற்கனவே தம்பிய தெரியுமா?”, என வினவினான் பாண்டி.
“இல்ல அண்ணே. சாப்பிடற விஷயத்துல இப்படி பேசினா நா இப்படி தான் பதில் சொல்வேன். அய்யா அவசர வேலைன்னு வர சொல்லிட்டு போனாரு. வரேன் “, பேச்சைத் திசைத் திருப்பிக் கிளம்பி விட்டாள்.
நெடுமாறனும் அவன் பங்கிற்கு அவனுக்கு வேலைகள் கொடுத்து யோசிக்கவிடாமல் செய்து கிளம்பிவிட்டான்.
சேரலாதன் இருவரையும் தன் மர குடோனிற்கு வரச் சொல்லி இருந்தான். அங்கு சென்று சேர்ந்தவர்கள், ஏற்கனவே சந்திரகேசவன் மற்றும் சந்தனபாண்டியன் வந்து இருப்பதை பார்த்தனர்.
“அப்பா”, நெடுமாறனுடன் பூவழகியும் சேரலாதன் அருகில் சென்று நின்றாள்.
“வாங்க பா. சாப்பிட்டயா பொண்ணு?”, சேரலாதன்.
“சாப்டேன் சார். என்ன வேலை சார் ?”, பூவழகி முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டாள்.
“சந்திரா, பாண்டியா நான் சொன்னது இந்த பொண்ண தான். நல்ல சுறுசுறுப்பு புத்திசாலியும் கூட”, சேரலாதன்.
“பார்த்தா அப்படி தெரியலையே ஐயா. விளையாட்டு பொண்ணு மாதிரி தெரியுது. நம்ம வேலைக்கு செட் ஆகுமா?”, சந்தனபாண்டியன் அவளைப் பார்வையால் அளந்துக் கொண்டே கேட்டான்.
“விளையாட்டு மாதிரி வேலைய முடிச்சிரும் பாண்டியா. சந்திரா நீ என்ன சொல்ற?”, சேரலாதன்.
“வேலைய சரியா செஞ்சா போதும்”, சந்திரகேசவன் கூறிவிட்டுக் குழப்பமாகப் பார்த்தார்.
நெடுமாறன் சந்திரகேசவனிடம், ”என்ன மாமா முகம் குழப்பத்துல இருக்கு?”
“கடைல தான் மருமவனே சின்ன பிரச்சினை. யாரோ வந்துட்டு போய் இருக்காங்க போல. ஆனா பொருள் எல்லாம் அப்படியே தான் இருக்கு. எதுக்கு வந்து இருப்பாங்கன்னு தெரியல”, குழப்பமான யோசனைகளுடன் கூறினார்.
“யாரோ வந்துட்டு போனாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது சார்?”, பூவழகி.
“செக்யூரிட்டி பசங்க கேமரா கொஞ்ச நேரம் ஆப் ஆகி இருக்கு, ஆன் ஆகறப்ப ஒரு ஆளோட சட்டை மட்டும் கடைல இருந்து வெளியே போனது தெரிஞ்சதுனு சொன்னாங்க. அந்த சட்டை போட்டவன் உள்ள வந்தப்ப தான் கேமரா ஆப் ஆகி இருக்குன்னு சொன்னாங்க”, சந்திரகேசவன்.
“நான் உங்க கடைல வந்து பாக்கலாமா சார்?”, பூவழகி.
சந்திரகேசவன் யோசனையுடன் சேரலாதனைப் பார்க்க அவரும் தலையசைத்தார்.
சேரலாதன் தவிர மற்ற நால்வரும் காவ்யா ஜூவல்லர்ஸ் சென்றனர்.
“உங்க செக்யூரிட்டி ரூம் எங்க இருக்கு சார்?”, பூவழகி.
சந்திரகேசவன் கைக்காட்ட அங்கே சென்றாள்.
உள்ளே சென்றவள் தன் லேப்டாப்பை அங்கிருந்தக் கம்ப்யூட்டருடன் இணைத்தாள்.
எதையோ சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவள். “சார் உங்க கடைல பக் வச்சிட்டு போய் இருக்காங்க”, பூவழகி.
“பக் ஆ? அப்படின்னா?”, சந்திரகேசவன் பதற்றத்துடன் கேட்டார்.
“உங்க கடைல நடக்கிற விஷயத்த பத்தி வேற எங்கயோ இருந்து கண்காணிப்பு பண்றதுக்காக வைப்பாங்க. இப்ப கவர்மெண்டே இத பண்ணுது. இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட் தான் இப்ப சமீபமா பண்றதா பேப்பர்ல கூட வந்துச்சி”, விளக்கத்துடன் சிறிது பயத்தையும் கொடுத்து பேசினாள்.
“அத எப்படி கண்டுபிடிச்சி எடுக்கறது ?”, சந்திரகேசவன்.
“அத கண்டுபிடிச்சிட்டேன் சார். வாங்க போய் எடுத்தறலாம் இப்பவே”, பூவழகி.
“இப்ப கடைல கூட்டமா இருக்கு வெளிய தெரிஞ்சா பிரச்சினை ஆகிறாது?”, சந்திரகேசவன் சிறிது பயத்துடன் வினவினார்.
“உடனே எடுத்துட்டா பிரச்சினை இல்ல சார். இரண்டு இடத்துல இருக்கு. நான் முன்ன போறேன் நீங்க கடைய பாக்கற மாதிரி கூடவே வாங்க “, பூவழகி.
சரியென்று கிளம்பினர் நால்வரும். அவள் மீண்டும் கம்ப்யூட்டரில் எதையோ குறித்துக் கொண்டுத் திசைக் காட்டியைப் போனில் ஆன் செய்துக் கொண்டு முதல் இடத்திற்குச் சென்றாள்.
பெரிய பெரிய ஆரங்கள் இருந்தப் பகுதியில் டேபிளுக்கு அடியில் இருந்து ஒன்றை எடுத்தாள்.
இன்னொன்று வெள்ளி விற்கும் தளத்தில் இருந்தது.
இரண்டையும் சந்திரகேசவனிடம் காட்டினாள்.
“இது எந்த வெர்சன் பூவழகி?”, நெடுமாறன்.
“இது பழசு. பேசறது மட்டும் தான் கேக்கும்”, பதிலுரைத்தாள் பூவழகி.
“நல்ல வித்தை தெரிஞ்ச பொண்ணு தான் . பிரச்சினை சொன்னதும் சரி பண்ணிட்ட. சேரன் சரியா தான் சொல்லி இருக்கான். என்ன பாண்டியா ?”, சந்திரகேசவன் சிரிப்புடன் கூறினார்.
“ஆமா சந்திரா. நம்ம வேலைக்கு இந்த பொண்ணு தான் சரி. வாங்க குடோனுக்கு போலாம்”, சந்தனபாண்டியன்.
“சார் ஒரு பத்து நிமிஷம் இங்க செக்யூரிட்டி கேமராலயும் பிரச்சினை இருக்கு, அதை சரி பண்ணிடறேன்”, பூவழகி.
“சரி பண்ணு மா .நான் குடிக்க எதாவது அனுப்பறேன்”, சந்திரகேசவன் கூறிச் சென்றார். நெடுமாறனும் சந்தனபாண்டியனும் வேறு விஷயங்கள் பேச அங்கிருந்து தூரம் சென்றனர். அருகில் இருந்த செக்யூரிட்டியை தண்ணீர் கேட்டு வெளியே அனுப்பிவிட்டு அவளுக்கு வேண்டிய வேலைகளை செய்தாள்.
செக்யூரிட்டி வந்ததும் அவனை கேமராவை சரிபார்க்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து சந்திரகேசவன் அறைக்குச் சென்றாள்.
“என்னமா முடிச்சிட்டியா?”, சந்திரகேசவன்.
“நீங்க இப்ப கேமரா பாருங்க சார்”, பூவழகி அவனருகில் இருந்த கம்ப்யூட்டரில் பார்க்கச் சொன்னாள்.
“அடடே நல்லா தெளிவா இருக்கு, திருப்பவும் முடியுது. அந்த கேமராகாரன் கிட்ட சரி பண்ண சொன்னப்ப இனிமே திருப்ப முடியாதுன்னு சொல்லிட்டான். நீ பத்து நிமிஷத்துல சரி பண்ணிட்ட”, சிலாகித்துப் பேசினார் சந்திரகேசவன்.
“சரி கிளம்பலாம். அங்க வேலை இருக்கு”, சந்தனபாண்டியன் அவசரப் படுத்தினான்.
அனைவரும் குடோனிற்கு வர சேரலாதனிடம் பூவழகியின் திறமையைப் புகழ்ந்து பேசினார் சந்திரகேசவன்.
“இங்க என்ன வேலைன்னு என்னையும் வர சொன்னீங்க அப்பா “, நெடுமாறன் கேட்டான் .
“இன்னிக்கு தேதி பாரு .உன் கூட பிறந்தவன் கிட்ட இருந்து சேதி வந்து இருக்கா பாரு”, சேரலாதன் கசப்புடன் கூறினார்.
நெடுமாறனின் முகமும் ஒரு நொடி கசந்து மீண்டும் இயல்புக்கு வந்தது. பூவழகி இவையனைத்தும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
“சேரலாதனுக்கும் மத்த பசங்களுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும்”, என மனதில் எண்ணிக்கொன்டாள்.
அவனும் அங்கிருந்தக் கம்ப்யூட்டரில் ஏதோ பார்த்து விட்டு சேரலாதனை அழைத்துக் காட்டினான்.
அதை கண்ட சேரலாதன், ”சே… நான் பெத்ததுல இதுக ரெண்டும் வீணா போகுது. நான் சம்பாதிக்கறத எல்லாம் அழிக்கறதுக்குன்னே பொறந்து இருக்குதுங்க”, கோபமாக கத்திக்கொண்டே வெளியே வந்தான்.
“என்னாச்சி சேரா?”, சந்திரகேசவன் வினவினார்.
“நான் பெத்த மூனுல இவன் ஒருத்தன் தான் என் வாரிசு. மத்த ரெண்டும் இல்ல. சேவை செய்யறேன்னு அண்ணனும் தங்கச்சியும் சேந்துட்டு பணம் அனுப்பச் சொல்லி உயிர எடுக்கறாங்க. அவன் இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டு வெளிநாட்டுக்கு போய்டான். பொண்ணு வடநாட்டுல ஒக்காந்துட்டு அந்த சேவை இந்த சேவைன்னு பணத்த அழிச்சிட்டு இருக்கறா. அம்மா இல்லன்னு செல்லம் குடுத்து வளத்ததுக்கு அடங்காம சுத்துறாங்க ரெண்டு பேரும்”, பொறிந்து தள்ளினான் சேரலாதன்.
“அவங்க பண்ற சேவைய உங்களுக்கு பயன்படுத்திகோங்க ஐயா. இந்த தம்பி தான் பொறுப்பா எல்லாத்தையும் பாத்துகறாருல”, சந்தனபாண்டியன்.
“அவங்க பண்ற சேவைய நான் இதுவரை கண்ல பாக்கல பாண்டியா. ஆனா வேணும்கிறவங்களுக்கு உதவி மட்டும் போயிருது. அதுல எங்க நான் எனக்கு சாதகமா விளம்பரம் படுத்திக்க? மறைக்கறதுல மட்டும் என் மூளை அவங்களுக்கு, மத்தது எல்லாம் அவங்க அம்மா அத்தையோட மூளை”, சேரலாதன்.
“சரி இப்ப விஷயத்துக்கு வாங்க “, நெடுமாறன் இடைபுகுந்தான் பேச்சில்.
“இந்த பொண்ண வச்சு நம்ப தொழில் பண்ற இடத்துல இருக்கற கம்ப்யூட்டர் எல்லா சரி பாத்து கணக்கு எல்லாம் ஒரே இடத்துல பாக்கற மாதிரி ஏற்பாடு பண்ணு. வெண்பா ஆபீஸ்ல வீட்ல நடக்கறது நமக்கு தெரியணும். அப்பறம் சேட்டு குடுத்த அந்த தகவல் சீட்ட குடுத்து விளக்கச் சொல்லு”, சேரலாதன் வரிசைக்கட்டி கூறினார் பணியை.
“கம்ப்யூட்டர் எல்லாம் ஏற்கனவே பாத்தாச்சி அப்பா. கணக்கு தான் பாத்துட்டு இருக்கேன்ல. அந்த தகவல் சீட்ட குடுக்கறேன்”, நெடுமாறன் பாதி தவிர்த்து மீதி முடித்தான்.
அவளிடம் அந்தத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைக் கண்டவள் சற்று அதிர்ந்து தான் போனாள். அந்தத் தகவலையும் தன் மெமரி கார்டில் சேமித்தவள், இனியும் தாமதித்தால் நிலைமை கைமீறிவிடும் என முடிவுக்கு வந்தாள்.
அந்த தகவலில் பாதி உண்மையும் பாதி பொய்யும் சேர்த்து சேரலாதனிடம் கொடுத்தாள்.
அதில் சற்று குழப்பமடைந்த சேரலாதன், அவளை அனுப்பிவிட்டு அவனின் மேல் இடத்திடம் தொடர்புக் கொண்டான்.
சேரலாதன் கூறிய விவரங்களில் அங்கும் குழப்பங்கள் நிலவ, அடுத்த நாள் சந்தேகங்களை தீர்ப்பதாக பதில் வந்தது.
அடுத்த நாள் குழப்பம் தீர்ந்ததும் பூவழகி அந்த மேலிடத்தின் கஸ்டடியில் கிடந்தாள். அவள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, வாயில் இருந்து இரத்தம் ஒழுக அதே திமிரான பார்வையில், எதிரே இருப்பவர்களை பார்த்து தெனாவெட்டாக சிரித்தாள்.