2 – அகரநதி
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியாளைக் கண்ட கண்ணன் ,”அவ அம்மா சரியா தான் சொன்னா. இங்க விளையாடனும்னு இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்திருக்கா”, மனதில் நினைத்துச் சிரித்தார்.
அந்தச் சமயம் ஒரு பால் அவர் கால் அருகில் விழ அதை எடுத்தவர், அகரன் வருவதைக் கண்டு ,”வா அகரா… எப்ப வந்த? இங்க தான் நீயும் சேர்ந்து இருக்கியா? “, எனக் கேட்டார்
“ஆமாம் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை எப்படி இருக்காங்க?”, அகரன்.
“நல்லா இருக்கோம். என் பொண்ணும் இங்க தான் படிக்கறா தினம் யார்கிட்டயாவது வம்பு இழுக்கறான்னு உங்க அத்தை சொன்னா அதான் பாக்க வந்தேன்”, கண்ணன்.
“அப்படியா… நான் இன்னிக்கு தான் இங்க சேர்ந்தேன் …யார் உங்க பொண்ணு? எத்தனாவது படிக்கறாங்க?”, அகரன்.
“அதோ அங்க விளையாடிட்டு இருக்கா பாரு அவ தான்.. நதியாள் என் பொண்ணு”, கண்ணன்.
“அந்த பொண்ணா… தெரியும் மாமா. இன்னிக்கு காலைல தான் பாத்தேன். நல்லா பேசறா”, அகரன் சிரிப்புடன் கூறினான்.
“நல்லான்னு இல்ல திமிரா பேசறா. மரியாதை குடுக்கறதே இல்லை சித்தப்பா”,எனக் கூறியபடியே சரண் வந்தான்.
“சும்மா இருடா. அப்படி எல்லாம் இல்ல மாமா. சின்ன குழந்தை தானு சொல்லி குடுத்தா கத்துக்குவா”, அகரன் நதியை காப்பாற்றும் பொருட்டுப் பேசினான்.
“என்ன ஆச்சி சரண்? என்ன பண்ணா நதியாள்?”, கண்ணன்.
காலையில் பார்த்தது முதல் சற்று முன் நடந்ததது வரை ஒப்பித்து முடித்தான் சரண்.
“ஹாஹா…. ஒரே பொண்ணுனு நானும் செல்லம் குடுக்கறேன், அவ அம்மா தான் கத்திகிட்டே இருப்பா. ஆனாலும் சமத்து, அவ வேலைய கரெக்ட்ஆ செஞ்சிக்குவா”, கண்ணன்.
“அதனால தான் இங்க ஸ்கூல்லயும் எல்லாரும் கம்முன்னு இருக்காங்க. இல்லன்னா டி.சிய எப்பயோ குடுத்து இருப்பாங்களே”, சரண்.
“யாருக்கு டிசி வேணும் சரண்?”,எனக் கேட்டபடி பிரின்ஸி வந்து நின்றார்.
“இல்ல நதியாள் பத்தி பேசிட்டு இருந்தோம் மேம்”, சரண்.
“அவ கொஞ்சம் வித்தியாசமான குழந்தை. சுட்டி தனம் அதிகம் அவ்வளவு தான். மத்தபடி எந்த குறையும் இல்ல கண்ணன் சார்”, பிரின்ஸி.
“வம்பு இழுக்கறதா அவ அம்மா சொன்னா. சட்டுன்னு அடிச்சிடறாலாம்”, கண்ணன்.
“உண்மை தான். வாய விட கை வேகமா பேசுது. சரி பண்ணிக்கலாம் பிரச்சனை இல்லை. இந்த வயசுல இப்படி தான் இருப்பாங்க எல்லா குழந்தைங்களும்”, பிரின்ஸி.
“படிப்பு தான் கொஞ்சம் கம்மியா வருது”, கண்ணன்.
“அவ கிளாஸ்ல உட்கார்ந்தா தானே முதல்ல”, சரண்.
“சரண்…. இங்க பாருங்க கண்ணன் அவளுக்கு ஒரு இடத்தில உட்கார்ந்து படிக்கறது முடியாத விஷயம். வெளி விஷயங்களை தான் அதிகம் தெரிஞ்சிக்க செய்றா. விளையாட்டு ஆர்வமும் அதிகம் அதான் வெளியவே சுத்திட்டு இருக்கா”, பிரின்ஸி.
“அவளுக்கு நீங்களே இவ்வளவு சப்போர்ட் பண்ணா அவ எப்படி பயப்படுவா மேம்?”, சரண்.
“அவ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. புரிஞ்சி நடந்துகிட்டா போதும். அவ கேக்கற கேள்விகளுக்கு சரியா பதில் சொன்னா அவ புரிஞ்சிக்க போறா”, பிரின்ஸி.
“நன்றி மேடம். தினம் வீட்ல அவ அம்மா பொலம்பிகிட்டே இருக்கா இவளபத்தி, அதான் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். வேற எதாச்சும் இருந்தா சொல்லுங்க நான் வரேன்”, கண்ணன் கைக்கூப்பி வணக்கம் கூறி கிளம்பினார்.
“பாத்துகங்க சரண், அகரன். வரேன்”, எனக் கூறிப் புறப்பட்டார்.
“ஏன்டா அந்த பொண்ண பத்தி கம்ப்ளைண்ட் பண்ணிட்டே இருக்க?”, அகரன் சரணைக் கேட்டான்.
“கம்ப்ளைண்ட் இல்ல டா.. அவள ஒரு இடத்துல உக்கார வைக்க முயற்சி பண்றேன். அவ ஒரு இடத்துல சேந்தாப்புல 10 நிமிஷம் நின்னு நான் பாத்ததே இல்ல டா. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவா, கோவம் வந்தா அடிச்சிருவா. இந்த ஸ்கூல்ல மட்டும் இல்ல நம்ம ஊர்ல எல்லாருக்கும் அவள தெரியும். அப்படின்னா எப்படி இருக்கான்னு யோசி”,சரண்.
“இன்ட்ரெஸ்டிங் கேர்ள்… போக போக சரி ஆகிடுவா டா. சரி வா நாம விளையாட போலாம்”, அகரன்.
அன்று மாலை பள்ளி முடிந்ததும் நம் வாண்டுகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்தது.
பிடி டீச்சர் ஷ்யாம் ,” ஏய்ய்… நில்லு மெதுவா போ. ஏன் இப்டி ஓட்ற யாள்?”.
“காலைல பேட் மீரா எடுத்துட்டா இப்ப எனக்கு தான். குடுங்க சார்”,எனக் கை நீட்டினாள் நதியாள்.
“யாள் இந்த பேட் ஐந்தாவது. இதயும் நீ கீழே தேய்ச்சா உனக்கு இனிமே பேட் குடுக்க மாட்டேன். இந்தா கார்க் சண்டை போடாம விளையாடுங்க போங்க”,என இருவருக்கும் பேட் குடுத்தார் ஷ்யாம்.
அவர்கள் இருவரையும் பார்த்த சரண் , “அங்க பாரு அகர்”.
“இந்த நேரத்துல பேட் வச்சிட்டு நிக்கிறாங்க. எப்ப வீட்டுக்கு போவாங்க”, அகரன்.
“அவங்க அம்மா சத்தம் இவளுக்கு கேக்கறப்ப தான் கிளம்புவா.எப்படியும் ஆறு மணிக்கு மேல ஆகிடும்”,என நதியாளை குறிப்பிட்டுக் கூறினான் சரண்.
“அதுவரை ஸ்கூல் திறந்து இருக்குமா?”, அகரன்.
“ஷ்யாம் சாரும், ஹிந்தி சாரும் இங்க தான் தங்குவாங்க. சோ இவள துறத்திட்டு தான் அவங்க ரூம்க்கு போவாங்க”, சரண்.
“ஓஓ…. ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்ததுல நிறைய மாறி இருக்கு போல”, அகரன்.
“ஆமா நீ வெளியூர் ஸ்கூல்ல படிச்சிட்டு ஹாஸ்டல்ல இருந்த. என்ன இப்ப மட்டும் இங்க சேந்துட்ட?”, சரண் விசாரித்தான்.
“அது ஒரு டீல் டா, என் அப்பத்தா கூட. இரண்டு வருஷம் வீட்ல இருந்த படிச்சா தான் காலேஜ் சென்னை இல்லைன்னா கோயம்புத்தூர்ல படிக்க விடுவேன்னு சொல்லிட்டாங்க டா”, அகரன்.
“அடப்பாவி இப்படி ஒரு பிளான்ல தான் இருக்கியா நீ?”, சரண்.
“என்னடா பண்ண? ஆர்கிடெக்சர் படிக்கணும். சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்”, அகரன் கண்களில் கனவு மின்னக் கூறினான்.
“வாவ் சூப்பர் டா. ஆல் தி பெஸ்ட்”, என சரண் கைக்குழுக்கினான்.
“சரி நீ என்ன படிக்கப்போற?”, அகரன்.
“இதுவரைக்கும் எந்த ஐடியாவும் இல்ல டா”,சரண்.
“சரி யோசி ஒரு கோல் செட் பண்ணு”, அகரன்.
இருவரும் பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்.
நாட்கள் ஓட ஸ்கூலில் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடக்கத் தொடங்கின.
வழக்கம் போல நதியாள் அனைத்திலும் கலந்து கொண்டாள். ஒரு சிலவற்றில் பரிசு பெற்று பல போட்டிகளில் ஆறுதல் பரிசு பெற்றாள்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடும் சமயம் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. அகரன் அவளை தூக்கி கொண்டு வந்து விளையாட்டு அறையில் மருந்தை எடுத்து தடவ வந்தான்.
“வேணாம் அகன். இந்த மருந்து எரியும். நான் வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கறேன்”, நதியாள்.
“இது எரியாது நதி. உனக்கு வலிச்சா என் கைய பிடிச்சிக்க”, அகரன்.
“வேணாம். அந்த பிளாஸ்திரி மட்டும் போட்டு விடு”, நதியாள்.
“இப்ப இந்த காயத்த சுத்தம் பண்ணலன்னா செப்டிக் ஆகிடும் அப்பறம் உனக்கு ஊசி போடுவாங்க”, அகரன்.
“செப்டிக்னா என்னா?”, நதியாள்.
“காயம் பட்ட இடத்துல மண் பட்டா பூச்சி வந்துரும். அந்த பூச்சிய எடுக்க உனக்கு ஊசி போட்டு பெரிய கட்டு போட்றுவாங்க மா”, அகரன் அவளுக்குப் புரியும் வகையில் கூறினான்.
“அப்படியா… சரி நீ மருந்து போடு நான் உன் கைய பிடிச்சிக்கறேன்”,எனக் கூறி அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் நதியாள்.
அப்பொழுது இருவருக்கும் தெரியவில்லை விதி அத்தருணத்தில் இருவரையும் பிணைத்துவிட்டதை. அவள் கையில் கசிந்த இரத்தம் தான் இருவர் கைகளிலும் பரவி இருவருக்கும் பிரியாத பந்தத்தை ஏற்படுத்தியதோ?
“நீ எரியாது சொன்ன.. எவ்வளவு எரியுது தெரியுமா? வலி கூட அவ்வளவு தெரியல எனக்கு”, நதியாள் அவனை முறைத்தபடிக் கூறினாள்.
“ஹாஹா ….சரி ஆகறப்ப எரியும் மா. கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும். வா வெளியே போலாம் “,என அவளைக் கூட்டிக் கொண்டுச் சென்றான் அகரன்.
அப்பொழுதிலிருந்து தினமும் அவனை வந்து காணத்தொடங்கினாள் நதியாள்.
ஏன் என்றே தெரியாத ஒரு பிணைப்பும் அன்பும் இருவருக்கும் ஏற்பட்டது. பின் தினமும் அகரனின் வகுப்பில் அமர்ந்து விளையாடத் தொடங்கி, காலை முதல் வீடு செல்லும் வரையும் அகரனுடன் தான் அவளுக்கு நாட்கள் சென்றது.
அகரனுடன் இருந்தாலும் அவளின் வழக்கமான சுட்டி தனமும் அடிதடியும் பஞ்சம் இல்லாமல் நடந்துக் கொண்டுதான் இருந்தது.
அகரன் அவளை பிரித்து விட்டு சமாதானம் செய்து தன் மடியில் அமர்த்திக் கொள்வான்.
அவளும் அவனின் தோள்களில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருப்பாள்.
“அகன்…. அகன்ன்ன்….”, நதியாள்.
“என்னடா?”, அகரன்.
“என்ன உப்பு மூட்டை தூக்கு”, நதியாள்.
“இப்பதானேடா தூக்கினேன். மறுபடியுமா?”, அகரன்.
“ஆமாம். தூக்கு”,என அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அடம்பிடித்தாள்.
“சரி வா. இது தான் கடைசி இன்னிக்கு. நாளைக்கி பரிட்சை இருக்கு. உன் அகன் நல்லா எழுதனும்ல”, அகரன்.
“அப்படியா… சரி நீ படி. நான் உன் மடில உக்காந்துக்கறேன்”, என மடியில் அமர்ந்துக் கொண்டாள் நதியாள்.
அந்த பக்கம் வந்த ரேவதி டீச்சர்,”ஹே நதியாள் அங்க என்ன பண்ற? உன் கிளாஸ்க்கு போ”.
“நான் போல மிஸ். அகன்க்கு நாளைக்கு பரிட்சை நான் அவன பாத்துக்கணும்”, நதியாள்.
“அவன் பரிட்சைக்கு அவன் படிச்சிப்பான். நீ போய் படி போ. உனக்கும் நாளைக்கு பரிட்சை இருக்கு”, ரேவதி டீச்சர்.
“நாளைக்கு எனக்கும் பரிட்சையா?”, விழியை உருட்டியபடி கேட்டாள் நதியாள்.
அவள் கேட்டதில் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட, வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
“சரி தான். அது கூட உனக்கு தெரியாதா? இரு உன் அம்மா கிட்ட சொல்றேன்”, ரேவதி.
“அய்யய்யோ வேணாம் மிஸ். அம்மா திட்டும். நான் இங்கயே அகன் கூட படிக்கறேன்”,எனக் கூறித் தன் புத்தகத்தை எடுக்க ஓடினாள்.
“அகரன் அவள பாத்துட்டு விளையாட்டா இருந்துடாத. கவனமா படி”, ரேவதி கூறிச் சென்றுவிட்டார்.
சரியென புன்னகைத்தவன் சரணுடன் அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தான்.
நதியாள் மீராவையும் இழுத்துக் கொண்டு வந்தாள் அங்கு.
“ஹேய் இப்ப ஏன் அந்த பாப்பாவ இழுத்துட்டு வர?”, சரண்.
“இவ என் டைரில பரிட்சை இருக்குன்னு சொல்லி எழுதவே இல்ல, அதான் அவ நோட் வாங்கிட்டு வந்தேன். அப்பறம் அவளும் படிக்கணும்ல அதான் அவளையும் கூட்டிட்டு வந்துட்டேன் சரணா”, நதியாள்.
“சரியான ரௌடி . படிக்கற புள்ளையையும் கெடுக்கற நீ?”,சரண்.
“நீ தான் என் அகன் நோட் புக்லாம் எடுத்துட்டு குடுக்கவே இல்ல. நீ தான் படிக்கவிடாம கெடுக்கற”, நதியாள்.
“ஏய்… நான் எப்ப அப்படி பண்ணேன்? ஏன் பொய் சொல்ற?”, சரண்.
“நான் பொய் சொல்லல.நீ தான் அன்னிக்கு அந்த பூ வரைஞ்ச நோட்அ வாங்கிட்டு போய் வீட்ல பஜ்ஜி சாப்பிடறப்ப அங்க வச்சிட்டு நோட்அ கிழிச்ச. அப்பறம் அகன் மறுபடியும் அந்த நோட்ல இருந்தத புதுசா எழுதினான் நான் பாத்தேன்”, நதியாள்.
“அய்யோ மச்சான். நான் வேணும்னு பண்ணல டா. அது தெரியாம நடந்தது இந்த குட்டிபிசாசு சொல்ற மாதிரி இல்ல டா”, சரண் அகரனிடம் கூறினான்.
“ஹாஹா… சரி விடு டா. நதிமா இங்க வாங்க”, அகரன்.
“என்ன அகன்?”, எனக் கேட்டபடி அவன் பின்னால் கழுத்தை கட்டியபடித் தொங்கினாள் நதியாள்.
“அகன் மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா?”, எனக் கேட்டபடியே அவளைத் தன் முன்னே இழுத்தான் அகரன்.
“ஆமாம்”, எனத் தலையாட்டினாள் நதியாள்.
“எவ்வளவு பிடிக்கும் என்னை?”, அகரன்.
“நிறைய பிடிக்கும்”,இரு கைகளையும் விரித்துக் காட்டி கூறியது.
“உங்களுக்கு சின்ன கை. சின்ன அளவு தான் காட்டும். உங்க கை அளவு தான் பிடிக்குமா ?”, அகரன் சற்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு கேட்டதும்.
“இல்ல அகன் அழாத. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஹான்.. அந்த வானம் எவ்வளவு பெருசு அவ்வளவு பிடிக்கும்”, நதியாள் அவன் முகத்தை கையில் ஏந்திக் கொண்டுக் கூறினாள்.
“எனக்கு ஒரு முத்தம் குடுங்க”, எனக் கன்னத்தைக் காட்டினான்.
“உம்மா… “,என இரு கன்னத்திலும் குடுத்தாள் நதியாள்.
“எனக்கு?”, சரண்.
“தெரியாதவங்களுக்கு முத்தம் குடுக்க கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க”,நதியாள்.
“நான் உன் அண்ணன் எனக்கு குடுக்கமாட்ட ஆனா அகரன்க்கு மட்டும் குடுப்பியா?”,சரண்.
“என் அகன் நான் குடுப்பேன்”, நதியாள் அகரன் கழுத்தைக் கட்டி கொண்டுக் கூறினாள்.
“இது ….”,என சரண் ஆரம்பிக்கும் முன் அகரன் அவனை அமைதி படுத்தினான்.
“நதிமா இங்க பக்கத்துல உக்காந்துட்டு சமத்தா படிக்கனும். நான் உன்ன கேள்வி கேட்பேன். சரியா?”,அகரன்.
சரியென கூறிவிட்டு படிக்க ஆரம்பித்தாள் நதியாள்.
படித்து முடித்ததும் பாதி கேள்விகளுக்கு பதில் கூறி, மற்றவைகளுக்கு முழித்து நின்று, அகரனிடம் ஐஸ் வைத்து எழுதிக் காட்டுவதாகக் கூறி அதிலும் ஒரு பகுதி படிக்காமல் இருந்தாள்.
அவளின் சேட்டைகள் அகரனை இம்சித்தாலும் சிரிப்புடனே பார்த்துக் கொண்டான் அவளின் அகன்.