29 – அர்ஜுன நந்தன்
பூவழகி கதிரிடம் பேசிக் கொண்டே யோகியைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அர்ஜுனிடம் நடந்த உரையாடல் முதற்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள். அவன் ஒருவனை இழுத்து வரச் சொன்ன போது கதிரும் கண்களில் சற்று அதிர்ச்சியைக் காட்டி பின் சமாளித்ததைக் கண்டாள். அதன்பின் அமைதியாக அங்கு நடப்பதைக் கவனித்தாள்.
“என்ன அர்ஜுன் இவன் எப்படி இங்கன்னு யோசிக்கறியா?”, யோகி சிரித்துக் கொண்டே கேட்டார்.
“லீவ்ல கூட தனியா இருக்க விடாம இப்படி தான் இம்சை பண்ணுவியா நீ?”, அர்ஜுன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
“நான் வேணும்னா உன்கிட்ட வந்தேன்? இவனுங்கள கேளுடா. சும்மா இருந்தவன இங்க தூக்கிட்டு வந்துட்டானுங்க”, முகத்தில் இருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கூறினான் அவன்.
“ஏன் யோகி கொஞ்ச நாள் இந்த மூஞ்ச பாக்க கூடாதுன்னு, நானே வாலன்டியரா லீவ் போட்டுட்டு ஊர சுத்தி பாக்க கிளம்பினா இப்படி வந்து இவன நிறுத்தறீங்க? அந்த மூஞ்சில அப்படி என்ன இருக்கு?”, அர்ஜுன்.
“அதான் அர்ஜுன் எனக்கும் புரியல. பாரு எப்படி அடிச்சி இருக்கானுங்க? என் கிளாமர டேமேஜ் பண்ண பாக்கறாங்க டா”, அவன்.
“ஏய்…. நிறுத்துங்க… நாங்க உங்கள கன்ட்ரோல்ல வச்சி இருக்கோம். இப்படி வாய் அடிச்சிட்டு இருக்கீங்க? கொஞ்சம் கூட பயமே இல்லியா ?”, ஆர்யன்.
“நாங்க ஏன் பயப்படணும் ஆர்யன்? நீ கடத்திட்டு வந்த அந்த பொண்ணே பயம் இல்லாம அது இஷ்டத்துக்கு இருக்கு. அதுவே அப்படி இருக்கறப்ப நாங்க சி.பி.ஐ பயப்படலாமா? எங்க இமேஜ் என்ன ஆகறது?”, அர்ஜுன் சிரித்துக் கொண்டேக் கூறினான்.
“நான்சென்ஸ் என்ன பிளான் பண்ணிட்டு இப்படி பேசறிங்க நீங்க? நரேன் இங்க வந்தப்ப உன் பேஸ்ல நான் அதிர்ச்சிய பாத்தேன். அப்பறம் சமாளிச்சிட்டு இப்படி பேசிட்டு இருக்கீங்க. வாட்ஸ் யுவர் பிளான் டேம்மிட்?”, ஆர்யன் பொறுமையை இழந்துக் கொண்டு இருந்தான்.
“ஹாஹாஹா…. அத ஏன் என்கிட்ட கேக்கற ஆர்யன் உங்க அப்பாகிட்ட கேளு”, நரேன்.
“என்ன நடக்குது டேட். இவ்வளவு திமிரா பேசிட்டு இருக்காங்க?”, ஆர்யன் தன் தந்தையை வினவினான்.
“தெரியல .ஏதோ பிளான் பண்ணிட்டு தான் இப்படி பேசறாங்க . பொறுமையா இரு”, என மகனைப் பார்த்துக் கூறினார் யோகி.
“பூவழகி என்ன நடக்குது இங்க?”, ஜான்.
“நானும் உன்கூட தானே நிக்கறேன் ஜான் எனக்கு மட்டும் எப்படி தெரியும்?”, பதில் தந்தாள் பூவழகி.
“இங்க பாரு அர்ஜுன் நீங்க கைல எடுத்து இருக்கற கேஸ இப்படியே விட்டுட்டு ஓடிடுங்க. அதான் உங்க எல்லாருக்கும் நல்லது. இல்ல ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க”, யோகி.
“நான் எந்த கேஸையும் எடுக்கல மிஸ்டர் யோகி. நான் நிஜமா ஊர் சுத்தி பாக்கத்தான் வந்தேன்”, அர்ஜுன்.
“அப்பறம் எதுக்கு உன்கூட வந்தவன தனியா அனுப்பி இருக்க? அவனும் அதோ அங்க நிக்கிறானே ஒருத்தன் குக்ங்கிற பேர்ல ரெண்டு பேரும் சேர்ந்து காலைல எங்க போனானுங்க?”, ஆர்யன்.
“அது எனக்கு எப்படி தெரியும் ? அவனயே கேளு”, எனக் கூறிவிட்டு அர்ஜுன் ஹாயாக உட்கார்ந்து ஜுஸ் குடிக்க ஆரம்பித்தான்.
“ஜான் ரெடியா இரு பயபுள்ள பிளான் பண்ணி அந்த பையன இழுத்து விட்றான், அடுத்தது நாம தான்”, பூவழகி ஜானின் காதில் மெதுவாகக் கூறினாள்.
ஜான் திருதிருவென்று விழித்தபடி அவளைப் பார்க்க ,”லூசு பக்கி நீயே காட்டி குடுத்துருவ போல? உன்னலாம் எவன் இங்க வேலைக்கு சேத்தான். நார்மலா வையி இல்லையா முறைக்கறமாதிரி வை”, பூவழகி.
ஆர்யன் கதிரை இழுத்து வந்து நரேனின் அருகில் நிறுத்தச் சொன்னான்.
கதிர் நரேனையும், அர்ஜுனையும் முறைத்துக் கொண்டே அருகில் வந்து நின்றான்.
“என்னடா முறைக்கற? நான் உன் ஹையர் ஆபீசர் சல்யூட் வைக்காம முறைக்கக் கூடாது “, நரேன்.
“கம்முன்னு இருங்க பாஸ் நானே அடுத்து என்ன நடக்கும்ங்கற யோசனைல இருக்கேன் நீங்க காமெடி பண்ணிகிட்டு”, கதிர்.
“அடேய் சல்யூட் வைக்க சொன்னா காமெடி பண்ணாதன்னு சொல்ற. உனக்கும் பயம்விட்டு போச்சிடா”, நரேன்.
“யார் இப்ப உங்களுக்கு பயந்தா? சும்மா நீங்களே கற்பனை பண்ணிகிட்டு ஒலறாதீங்க”, கதிர்.
“டேய் அப்ப பர்ஸ்ட்ல எனக்கு பயந்து அவன் ஓடினது எல்லாம் பயம் இல்லாம என்னடா?”, அர்ஜுனைக் கைக்காட்டிக் கேட்டான் நரேன்.
“பாஸ் இப்பகூட கூலா ஜுஸ் குடிச்சிட்டு இருக்காரு, அவரா உங்கள பாத்து பயப்படுவாரு? மேல் எடத்துல திட்டு வாங்க ஆள் வேணாம்? அதான் உங்கள வச்சிட்டு இருக்காரு”, கதிர்.
“அடேய் அது உண்மையா இருந்தாலும் இப்படியா பொசுக்குன்னு சொல்வ? மனசு வலிக்கும் டா”, நரேன்.
“கம்முனு நில்லுங்க அடிச்சி மூஞ்ச எல்லாம் கிளிச்சி இருக்காங்க அப்ப வலிக்காதது இப்ப வலிக்குதா உங்களுக்கு?”, கதிர்.
அருகில் நின்ற இரண்டு நிமிடத்தில் இத்தனை உரையாடலும் நடந்தேறியது.
இவர்கள் பேசிக் கொண்டு இருந்த சமயம் ஒரு கருப்பு உடை அணிந்த உருவம் அங்கு வந்ததையோ, அது யாத்ரா அருகில் மறைந்து நின்றதையோ, யாரும் அறியவில்லை யாத்ராவையும் அர்ஜுனையும் தவிர.
“சரி மொத்தமா உங்கள மேல அனுப்பிட்டு மிச்சம் இருக்கற உங்க கேங் ஆளுங்களையும் பின்னாடியே அனுப்பி வைக்கறோம். டேய் அவன பிடிச்சி இழுத்து இந்த பக்கம் கொண்டு வா”, என அடியாள் ஒருவனுக்கு பணித்தான் ஆர்யன்.
அர்ஜுன் சிரித்துக் கொண்டே கதிர் அருகில் சென்று நின்றான்.
அவன் தானே சென்று நிற்பதைக் கண்ட யோகியும் ஆர்யனும் அவர்களை யாத்ராவிற்கு முன் பக்கம் நிறுத்தினர்.
அங்கு நின்றதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்ட அர்ஜுனை கண்டதும் அங்கேயே நிற்கவைத்து சுட உத்திரவு இட்டனர் யோகியும் ஆர்யனும்.
யாத்ரா இருப்பது அந்த பக்கம் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை போதிய வெளிச்சமும் இல்லாததால் அவள் பொறுமையாக அவளின் அருகில் நின்ற ஒருவனை சத்தம் இல்லாமல் தலையில் அடித்து படுக்க வைத்தாள். அந்த கருப்பு உருவமும் இன்னொரு பக்கம் இருந்தவனை அதே பாணியில் அடித்து படுக்க வைத்தது.
மெதுவாக அந்த கருப்பு உருவத்திடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய யாத்ரா வைபவை குறி வைத்தாள்.
ஜானையும் துப்பாக்கி எடுத்துக் கொள்ளக் கூற அவர்கள் மூவரையும் சுடும் சமயம் அவர்களை சுடச் சொல்லி ஆணையிட்டாள்.
அர்ஜுன் நரேன் கதிர் மூவரின் நெற்றியில் துப்பாக்கியை பிடித்தபடி நின்றனர் அடியாட்கள்.
ஆர்யன் சூட் என கூறவும் யாத்ரா ஆர்யன் அருகில் இருந்த வைபவை சுடவும் சரியாக இருக்க குண்டடிபட்ட வைபவ் கீழே சரிந்தான்.
அந்த குழப்பத்தில் ஜானும் அந்த கருப்பு உருவமும் அர்ஜுனுக்கு நேராக நின்றவனையும் ,கதிரை குறிவைத்து நின்றவனையும் சுட்டுத் தள்ளினர். யாத்ரா தன் பங்கிற்கு அங்கு நின்ற மற்றவர்களை சுட்டு வீழ்த்தினாள்.
நரேனை தன்னருகில் இழுத்த ஆர்யன், ” ஹே… துப்பாக்கிய கீழே போடு”, என ஜானையும் கருப்பு உருவத்தையும் பார்த்துக் கூறினான்.
“முடியாது ஆர்யன். அவன வேணும்னா சுட்டுக்க ஒன்னும் எங்களுக்கு பிரச்சனை இல்ல”, என யாத்ரா கூறியபடி முன்னே வந்தாள்.
ஆர்யன் சற்று அதிர்ந்தாலும் அவன் இதை ஒருவாறு எதிர்பார்த்தே காத்திருந்தான் என்பதால் உடனே தன்னிலை அடைந்தான்.
யோகி எதையும் முகத்தில் காட்டாமல் சிரிப்புடனே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“உன் பேர் என்ன? நீ எந்த டிபார்ட்மெண்ட்?”, யோகி.
“எனக்கு எந்த டிபார்ட்மெண்ட் வேலை குடுக்கும் யோகி? உங்களவிட வைபவ் என்ன சரியா எடைபோட்டு வச்சி இருக்கான். சொல்லு வைபவ்”, யாத்ரா.
வைபவ் தோளில் குண்டடிபட்டதில் வலியில் துடித்தபடி யாத்ராவை முறைத்து கொண்டிருந்தான். பதில் கூற விழையவில்லை.
“ஹோ… ரொம்ப வலிக்குதா? சாரி வைபவ். இவனுங்கள காப்பாத்த உன்ன சுட வேண்டியதா போச்சி”, எனக் கதிரையும் அர்ஜுனையும் கைக் காட்டிக் கூறினாள் யாத்ரா.
“சரி அடுத்த உன் பிளான் என்ன?”, ஆர்யன்.
“இவனுங்கள கூட்டிட்டு கிளம்புறது தான் ஆர்யன். வேற எதுவும் நான் பிளான் பண்ணல”, தோளைக் குலுக்கி பதில் கொடுத்தாள்.
“எப்படி கூட்டிட்டு போவன்னு நானும் பாக்க ஆவலா இருக்கேன் பொண்ணு”, யோகி.
“நீங்க தான் பெர்பக்ட் வில்லனா இருக்கீங்க யோகி. உங்க பையன் இன்னும் வளரணும். சந்தேகபட்டு கடத்திட்டு வந்த என்னை தங்கவச்சி ராஜ உபசாரமும் ,கேட்டது எல்லாமும் வாங்கி குடுத்து நல்லாவே கவனிச்சிகிட்டான். ஆனாலும் கொஞ்சம் உஷார் தான் டிரஸ் பொம்மை சாப்பாடு தவிர ஒன்னும் குடுக்கல. வைபை கனக்சன் கூட என் ரூம்ல கட் பண்ணிட்டான் பட் சாமர்த்தியம் பத்தல .என்கிட்ட வேணா டிரைனிங் அனுப்புங்க நான் வில்லத்தனத்த சொல்லி தரேன்”, சிரித்துக் கொண்டு கூறினாள்.
“ஹாஹாஹா…. நல்லா பேசற”, யோகி.
“ஆமா. நீங்க சிரிச்சிட்டே இருங்க நாங்க கிளம்பறோம்”, என அர்ஜுனையும் கதிரையும் வரச்சொல்லி சைகைக் காட்டிவிட்டு ஜானை நோக்கி நடந்தாள்.
“நரேன் இல்லாம எப்படி போறது? அவனையும் கூட்டிட்டு தான் போகணும்”, அர்ஜுன்.
“நீயே அவன தூக்கிட்டு வா போலாம் டைம் ஆச்சி”, யாத்ரா.
“போறதுக்கு முன்ன இவங்களுக்கு பதில் சொல்லிட்டு போங்க “,ஆர்யன் தன் பின்னால் வரிசைகட்டி வரும் ஆட்களை காட்டி கூறினான்.
“அடடா…. என்ன ஆர்யன் நீ? இப்படி சின்னபுள்ள தனமா இருக்க. இவ்வளவு பண்றவ நீங்க ஹோட்டல் சுத்தி ஆள நிக்கவச்சிட்டு பேக்அப் ம் வச்சி இருப்பீங்கன்னு யோசிக்காமயா இருப்பேன்”, யாத்ரா.
கூறிக்கொண்டே அவன் அருகில் வந்தவள் அவன் காலில் ஒரு அடி கொடுத்து நரேனை அர்ஜுன் பக்கம் தள்ளிவிட்டாள்.
யாத்ராவைப் பிடித்துக் கொண்டு ஆர்யன் அங்கிருந்து நகர முற்பட, அர்ஜுன் மற்றவர்களை அங்கிருந்து கிளம்பும்படி கூறிவிட்டு ஆர்யன் பின்னால் ஓடினான்.
அந்த கருப்பு உருவம் கதிரையும் நரேனையும் அழைத்து கொண்டு அங்கிருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு கீழே குதிக்க மற்ற இருவரும் அதையே பின்பற்றினர்.
ஆர்யனை பின்தொடர்ந்த அர்ஜுன் தடுத்தவர்களை அடித்து நொருக்கியபடி முன்னேறினான்.
யோகி அந்த இடத்தில் இருந்து முன்பே வெளியேறிவிட ஆர்யன் யாத்ராவை இழுத்துக் கொண்டு கீழே ஓடினான்.
“டேய் மெதுவா போடா… ஓடாத… “, யாத்ரா ஆர்யனிடம் கத்திக் கொண்டே கூட ஓடினாள்.
“சட் அப்”, ஆர்யன்.
“நீ எங்க என்னை கூட்டிட்டு ஓடினாலும் அவன் வருவான். அங்க பாரு ஹல்க் மாதிரி ஆளுங்கள தூக்கி வீசிட்டு இருக்கான். வைட் பண்ணு அவனும் வரட்டும்”, யாத்ரா.
“உன்மேல அவனுக்கு அவ்ளோ பாசமோ? முடிஞ்சா அவன் உன்ன கூட்டிட்டு போகட்டும்”, ஆர்யன் கூறியபடி லிப்டில் ஏறி கீழே வந்து காரைக் கொண்டு வரச் சொன்னான்.
அர்ஜுன் வருவதற்குள் ஆர்யன் லிப்டில் ஏறியதால் மேலே இருந்து தொங்கிய கயிற்றை பிடித்தபடி கீழே குதித்தான்.
சரியாக கார் நகர்வதற்கும் அர்ஜுன் கீழே தரையில் விழுவதும் ஒரே சமயத்தில் நிகழ யாத்ரா கண்களை விரித்துக் கொண்டு பார்த்தாள் அர்ஜுனை.
“வாவ்…. என்னை காப்பாத்த இப்படி ஒருத்தன் இருக்கானா? ஹீரோன்னு இப்பதான் புரூஃ பண்றான். ஆர்யன் அங்க பாரு செமயா இருக்கான்ல அவன்”, யாத்ரா.
“சட் அப்”, எனக் கூறி காரை வேகமாகச் செலுத்தினான் ஆர்யன்.
அர்ஜுனும் காரின் பின்னால் ஓட அந்த சமயம் செந்தில் சரியாக வந்து அர்ஜுனை வேனில் ஏற்றிக் கொண்டு அந்த காரை பின்தொடர்ந்தனர்.
ஹைவேயில் இருந்து ஒற்றை பாதைக்கு திரும்பிய ஆர்யன் காட்டு பகுதியில் காரை செலுத்தினான்.
“அடேய்… ஹைவேல போனா என்ன உனக்கு? இப்படி குலுங்குது கார். நான் சாப்டதெல்லாம் வெளிய வந்துடும் போலயே…”, யாத்ரா.
பின்னால் வேன் ஒன்று தங்களை துரத்திக் கொண்டு வருவதைக் கவனித்த ஆர்யன் இன்னும் வேகத்தைக் கூட்டினான்.
செந்திலும் வேகமாக வேனை ஓட்ட கார் அவர்களிடம் இருந்து நலுவியபடி சென்றது.
தன் முகத்தில் இருந்தக் கருப்பு முகமூடியை கழட்டிய சிரஞ்ஜீவ் செந்திலை நகரச் சொல்லி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
5 நிமிடத்தில் ஆர்யனின் காரை தடுத்து நிறுத்தி ஆர்யனின் கார் நகராதபடி வேனை கொண்டு நிறுத்தினான்.
வேனில் இருந்து இறங்கிய அர்ஜுன் ஆர்யனை கீழே இறங்கக் கூற, தப்பிக்க வழி இல்லாத காரணத்தால் யாத்ராவை கைபிடியில் வைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
“ஸ்ஸ்ஸ்ப்பாபாபா….. எவ்வளவு நேரம் தான் துரத்துவீங்க? யாரு வண்டிய ஓட்னது?”, என செந்திலைப் பார்த்துக் கேட்டாள்.
“நான் தான் ஓட்டினேன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் சிவி வாங்கிட்டான்”, செந்தில்.
“அதான் உடனே மடக்கிட்டான். உங்கள விட்டா நாள் முழுக்க துறத்துவீங்க”, செந்திலை வாரினாள் யாத்ரா.
“வாய மூடு. ஒழுங்கா எங்கள போக விடு அர்ஜுன்”, ஆர்யன்.
“அடேய் நானா உன்ன போகாதன்னு சொன்னேன்? நீ போ யார் வேணாம்ன்னு சொன்னா?”, அர்ஜுன்.
“விளையாடாத அர்ஜுன் இவள கொன்னுடுவேன்”, யாத்ரா நெற்றியில் துப்பாக்கி வைத்து அழுத்தினான்.
“தாராளமா கொல்லு. ஒரு இம்சை எங்களுக்கு குறையும்”, சிரஞ்ஜீவ்.
இவர்கள் பேசிக் கொண்டு இருந்ததில் யாத்ரா தன் உடையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆர்யனின் கைகளில் வெட்டினாள்.
வலியில் கைகளை உதறிய ஆர்யன்,” ஹே….. ஏன் இப்படி பண்ற?”.
“வேண்டுதல்… போடாங்… ஏன்டா அங்க அத்தனை பேர் இருக்கறப்ப இவனுங்கள காப்பாத்த சுட்ட எனக்கு நீ இழுத்துட்டு வரப்ப எதும் பண்ணாம ஏன் கம்முனு வரேன்னு யோசிக்க மாட்ட?”, யாத்ரா.
“ஏன்?”, ஆர்யன் முழித்தபடிக் கேட்டான்.
“யோசிக்கலாம் வந்து வேன்ல ஏறு ஊருக்கு போயிகிட்டே” ,கதிர் அவனின் கைகளைக் கட்டி வேனில் ஏற்றினான்.
“கிளம்பளாமா?”, சிரஞ்ஜீவ்.
“இரு என் ஜான் செல்லம் வரணும்”, யாத்ரா.
சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஜான் அவ்விடம் வந்து சேர்ந்தான். அவனையும் வேனில் ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டை நோக்கி பயணம் தொடங்கியது.
“எல்லாரும் டார்லிங் செல்லம் நம்மள மட்டும் இவ கண்டுக்க மாட்டேங்கறாளே”, அர்ஜுன் மனதில் அவளை வறுத்து எடுத்தான்.