30 – அர்ஜுன நந்தன்
ஆர்யனை வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டவர்கள் அவன் கை காயத்திற்கு மருந்திட்டு மயக்க ஊசியும் போட்டுவிட்டனர்.
அவன் மயங்கிய பின் செந்தில்,” என்ன பிளான் யாத்ரா? எதுக்கு இவன தூக்கிட்டு வந்தீங்க ?” .
“அது செழியன் பிளான் சீனியர் அவன கேளுங்க”, யாத்ரா.
“இவன ஏன்டா கடத்திட்டு வந்த? இவன் அப்பன் என்ன ஆட்டம் ஆடுவானோ தெர்ல இனிமே?”, செந்தில்.
“அவன் ஆடணும்னு தான் தூக்கிட்டு வந்தோம். இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் புல் பேக்கிரவுண்ட் ஓட வேலை பாக்கறாங்க. நாம கேஸ்அ உயிர குடுத்து பாலோ பண்ணி மேல் இடத்துக்கு அனுப்பினா ஈஸியா டிராப் பண்ண சொல்வானுங்க. இப்ப இவன நாங்க அரெஸ்ட் பண்ணல. இவன் காணாம போய்டான்னு தெரிஞ்சா பயம் வரும் நம்மல கை காட்டவும் முடியாது இந்த கேப்ல நாம கேஸ முடிச்சிறலாம் மக்களுக்கு நல்லது நடக்கணும்”, அர்ஜுன்.
“இவ்வளவு நீ பேசுவியா செழியன் ? பட் குட் பாயின்ட் . கண்டினியூ பண்ணு”, யாத்ரா.
“அவன் என்ன சொற்பொழிவா நடத்திட்டு இருக்கான் இப்படி ஸ்நாக்ஸ் ஓட உக்காந்துட்டு கேக்கற?”, நரேன்.
“உனக்கும் ஸ்நாக்ஸ் வேணும்னா கேளு தரேன்”, யாத்ரா நரேன் பக்கம் நீட்டினாள்.
அவனும் எடுத்து சாப்பிடுவதைப் பார்த்த அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டான்.
“நீங்க எல்லாம் நல்லா கொட்டிகிட்டீங்க என்னைய யாராவது கேட்டீங்களா டா?”, நரேன்.
“சரி இந்தா அழாத சாப்பிடு”, யாத்ரா.
“என்ன நீ அவர கேஜி பையன் மாதிரி டிரீட் பண்ற? அவர் தான் ஹெட் தெரியுமா?”, செந்தில்.
“பசி வந்தா அவன் அவனா இருக்க மாட்டான் அங்க பாரு”, என விளம்பர பாணியில் பேசி நரேனைச் சுட்டிக் காட்டினாள். அவனோ யாரோ யாரைப் பற்றியோ பேசுகிறார்கள் நமக்கு என்ன என்பதை போல சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
“சரி பாயிண்ட்க்கு வாங்க. அடுத்த பிளான் என்ன?”, யாத்ரா.
“எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டு தானே அவனுங்க கிட்ட மாட்டின அப்பறம் என்ன எங்கள கேக்கற?”, செந்தில்.
“அடப்பாவிகளா…. யாரு அந்த நாதாரி கூட்டத்துக்கு தலைவன்னு தெரியணும்னு சொன்னீங்க நானும் விருந்துக்கு போறப்ப பண்ற ஏற்பாடு போல செஞ்சிட்டு போனேன் இப்ப யாருன்னு தெரிஞ்சிரிச்சி. இனி நீங்க தான் பாக்கணும். உங்க ரோல கரெக்ட்ஆ பண்ணுங்க டா. இத்தனை பேர் இருக்கீங்க. எல்லாருக்கும் ஏகபட்ட பில்டப் வேற”, கூறிவிட்டு வேறொரு பாக்கெட் ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடத் தொடங்கினாள் யாத்ரா.
“சொல்லு அர்ஜுன் என்ன பிளான்?”, நரேன்.
“இவன இப்போதைக்கு சென்னைல படுக்க வைக்கலாம். கண்டிப்பா அந்த மூனு பேர்கிட்டயும் நம்மல பத்தி நியூஸ் போய் இருக்கும் மதுரை பக்கம்னா ஈஸியா கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு. இவன்கூட ஒருத்தர் எப்பவும் பக்கத்துல பாத்துக்கற மாதிரி இருக்கணும். இடத்த நந்து அரேஞ்ச் பண்ணுவான்”, அர்ஜுன்.
“கிளம்பி வர சொல்லிட்டியா?”, செந்தில்.
“ஆமாம். அந்த அசிஸ்டண்ட்அ பிடிச்சிட்டானாம். அவனயும் சென்னைல வச்சிக்கலாம்னு சொன்னான்”, அர்ஜுன்.
“நோ நோ.. அந்த அசிஸ்டண்ட் தஞ்சைல இருந்தா தான் பரவால்ல. அவன நான் பாத்துக்கறேன். அவன வச்சி தான் சுரங்க பாதைய தொறக்கணும்”, யாத்ரா.
“சரி சொல்லிக்கலாம். அந்த குப்பத்து ஹெட் கருப்பசாமி எங்க இருக்கான்?” அர்ஜுன்.
“அவன வேளாங்கண்ணில இருக்கச் சொன்னேன். நாம கூப்பிடறப்ப வந்தா போதும்னு. அவன் இல்லாம குப்பத்த காலி பண்ண வைக்கிறது கஷ்டம் . அடாவடியா அவனுங்க இறங்கினா நாமலும் அதுக்கு நாலு மடங்கு அடாவடியா நின்னா தான் சமாளிக்கலாம் அத நாம பாத்துக்கலாம்”, யாத்ரா.
“சரி அந்த ஆராய்ச்சிகாரனோட குடும்பம் எங்க இருக்கு?”,அர்ஜுன்.
“அந்த சந்தனபாண்டியன் கஸ்டடில இருந்தவங்கள இந்தா நிக்கறானே அவன் நொண்ணன் இடத்துல தங்க வச்சிட்டு போனேன் இப்ப என்ன ஆச்சோ தெர்ல”,சிவியைக் காட்டிக் கூறினாள்.
“சரி தேனிக்கு எதுக்கு போன?”, அர்ஜுன்.
“அதான் பரத் ஆளோட பிரண்ட் அங்க இருக்காம் விசாரிக்க போனேன். நன்முகை இதழி . பேர் நல்லா இருக்குல்ல. அந்த பொண்ணுக்கு ரெண்டு அண்ணனுங்க. ஒருத்தன் அங்கயே தொழில் பாக்கறான். இன்னொருத்தன் ஏதோ சென்னைல வேலைல இருக்கானாம். மதுரை வரதா சொல்லிச்சு செந்தில் தான் போய் பாத்தாரு. என்ன பேசினாங்கன்னு அவருக்கு தான் தெரியும்”, யாத்ரா.
“அவ்வளவு தானா இன்னும் எதாவது இருக்கா?”, செந்தில்.
“அவ்வளவு தான்”, யாத்ரா கூறிவிட்டுச் சாப்பிடுவதில் மும்முறமானாள்.
“எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி உக்காந்து இருக்கா பாரு?”, என செந்தில் முனகினான்.
“அவ இதெல்லாம் பண்ணது உனக்கு எப்படி தெரியும்?”, என நரேன் அர்ஜுனைக் கேள்வி கேட்டான்.
“சிம்பிள் அவள மாதிரி யோசிச்சேன் ஒரு சில சந்தேகத்தையும் இப்ப கிளியர் பண்ணிகிட்டேன். இனி நாம கிரிஸ்டல் கிளியரா ஆக்சன் எடுக்கலாம்”, அர்ஜுன்.
“சரி பரிதி கிட்ட இப்ப மெஸேஜ் குடுத்தறலாமா?”, செந்தில்.
“வேணாம்”, என அர்ஜுனும் யாத்ராவும் கோரசாய் கூறினர்.
“ஏன்டா?”, நரேன்.
“இவன் நம்மகிட்ட இருக்கறது நம்மல தவிர யாருக்கும் தெரியக் கூடாது”, யாத்ரா.
“ஏன்?”, செந்தில்.
“காரணமா தான்”, அர்ஜுன்.
நரேன் செந்தில் சிவி கதிர் ஜான் என ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இதுங்க ரெண்டும் எப்ப சேந்துச்சி? ஒரே மாதிரி யோசிக்குதுங்க சொல்லுதுங்க.அவன் விடற இடத்தில இவ ஆரம்பிக்கறா. இவ விட்டா அவன் கன்டினியூ பண்றான். ஏதோ சரியில்லையே”, செந்திலும் நரேனும் பேசிக் கொண்டனர்.
“போதும் பேசினது . ஜான் நான் சொன்னது எங்க?”, யாத்ரா.
“அந்த பிளாக் பாக்ஸ் ல இருக்கு பூவழகி”, ஜான்.
“என்ன அது?”, செந்தில்.
“கொஞ்ச நேரத்தில அட்டாக் பண்ண வருவாங்க அப்ப இத வச்சு தான் சமாளிக்கணும்”, என ஒரு துப்பாக்கியை எடுத்தாள் யாத்ரா.
“நல்ல கலெக்க்ஷன் ஜான்”, செந்திலும் பார்த்து விட்டுக் கூறினான்.
சிவி அவன் பங்கிற்கு ஒன்றை எடுத்து கொள்ள நரேனும் கதிரும் அர்ஜுனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்ன அப்படி பாக்கறிங்க?”, செந்தில்.
அவர்கள் அர்ஜுனை கைகாட்ட அங்கு பார்த்த செந்தில் யாத்ரா துப்பாக்கியை பிடித்து சந்தோஷத்தில் துள்ளும் குழந்தையாய் இருப்பதை இவன் இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
“விடுங்க நரேன் ஏதோ நல்லது நடந்தா சரிதான்”, செந்தில்
“என்ன நல்லது? யாருக்கு நல்லது? “, யாத்ரா கேட்டபடி அருகில் வந்தாள்.
“ஒன்னும் இல்ல மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்னு சொன்னோம்”, செந்தில்.
“சரி இப்ப எதுக்கு இத்தனை துப்பாக்கி?”, நரேன்.
“நிஜமாகவே நீ சி.பி.ஐ ஆ?”, யாத்ரா நரேனைப் பார்த்துக் கேட்டாள்.
“ஏன் இப்படி கேக்கற?”, நரேன்.
“பீல்ட் வர்க் போனது இல்லியா நீ?”, யாத்ரா.
“அர்ஜுன் வந்தப்பறம் அவன் தான் போறான். அதுக்கு முன்ன நான் போனேன்”, நரேன்.
“சுத்தம். நாம இப்ப எங்க இருக்கோம்?”, யாத்ரா.
“விஜயவாடா”, நரேன்.
“யார தூக்கிட்டு போறோம்?”, யாத்ரா.
“ஆர்யன”, நரேன்.
“அவன் யாரு?”, யாத்ரா.
“கிரிமினல்”, நரேன்.
“அவன் ஒரு குட்டி டான் சரியா?”, யாத்ரா.
“ஆமா”, நரேன்.
“டான்அ தூக்கிட்டு போனா என்ன பண்ணுவாங்க?”,யாத்ரா.
“தேடுவாங்க”, நரேன்.
“அப்படி தேடி வரப்ப நாம சிக்கினா என்ன ஆகும்?”,யாத்ரா.
“சங்கு தான்”, நரேன்.
“ஸ்ஸ்ஸ்ப்பாபாபா… அத உன் காதுல ஊத இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு . யப்பா செழியா நீ கடவுள் டா”, யாத்ரா அர்ஜுனைப் பார்த்துக் கூறினாள்.
இவர்கள் சம்பாஷனையை கேட்டவர்கள் வாயிற்குள் சிரித்தனர்.
“அவனுங்க எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியுமா ?”, நரேன்.
“சாரி யோகி அந்த அளவுக்கு இன்னும் என்கிட்ட டிஸ்கஸ் பண்ண ஆரம்பிக்கல”, சிரிக்காமல் பதிலளித்தாள் யாத்ரா.
“நரேன் அண்ணா கம்முனு வாங்க. வீட்ல அண்ணிகிட்ட வாங்குற பல்ப இங்க மொத்தமா வாங்கிட்டு இருக்கீங்க”, அர்ஜுன் அவனை அமைதிப்படுத்தினான்.
“வந்துட்டானுங்க டா. சிவி, வண்டிய நீ ஓட்டு. செழியன் ரெடியா இருங்க . இன்னும் இரண்டு கி.மீல பாரஸ்ட்குள்ள புகுந்துறலாம் அதுவரை தாக்குபிடிக்கணும் “, என தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேனின் டாப்பை திறந்து மேலே நின்றாள்.
பின்னால் ஒரு 10 கார்கள் இவர்களை விரட்டியபடி வந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டவர்கள் ஆளுக்கு ஒரு துப்பாக்கியை தூக்கிக் குறிப் பார்க்கத் தொடங்கினர்.
“கார் கொஞ்சம் கிட்ட வந்தப்பறம் சுடுங்க அப்பதான் புல்லட் வேஸ்ட் ஆகாது”, அர்ஜுன்.
யாத்ரா தான் முதலில் ஆரம்பித்தாள். பின்னால் வந்துக் கொண்டு இருந்த வாகனத்தின் டிரைவரை குறிப் பார்த்துச் சுட்டதும், அந்த கார் அதற்கு பின் வந்த இரண்டு காருடன் மோதி உருண்டது.
“குட் சாட்”, அர்ஜுன்.
“தேங்க் யூ செழியா”, என அடுத்தக் குறியைப் பார்த்தாள்.
பின்னர் வந்த வண்டியை தாக்கியதும் முன்னால் வந்தவர்கள் வேகமாக அருகில் வர அர்ஜுன் இரண்டு பேரைச் சுட்டு பின் பக்கமாக வந்த டிரைவரையும் சுட்டான்.
நரேன் கதிர் ஜான் செந்தில் என அனைவரும் அவரவர் பங்கிற்குச் சுட்டுதள்ள சிவி வேனின் வேகத்தைக் குறைத்தான் .
வேகம் குறைந்ததை உணர்ந்த யாத்ரா, “என்னாச்சி சிவி?”.
“முன்னாடி இரண்டு லாரி வருது”, சிவி.
“இருங்க பாக்கறேன்”, அர்ஜுன் தலையை வெளியே நீட்டி பார்க்க அதில் முழுக்க ஆட்கள் கைகளில் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டான்.
“மினி ராக்கெட் லான்ச்சர் யூஸ் பண்ணலாமா?”, ஜான்.
“வேணாம் ஜான். அத்தனை பேர் உயிரும் போயிரும். நாம அவங்கள டைவர்ட் பண்ணிட்டு போலாம்”, யாத்ரா.
“டைவர்ட் பண்ண இத பண்ணனும்”, என அர்ஜுன் யாத்ராவிற்கு நேர் எதிரில் அருகில் வந்து அவள் கைகளில் இருந்த ஸ்நைப்பரை வாங்கி லாரி டயரை குறிப் பார்த்துச் சுட்டான்.
அந்த இடத்தில் ஒருவர் மட்டுமே நிற்க முடியும் அந்த இடத்தில் இருவர் நிற்பது மிகவும் சிரமமே. அவன் அவளின் முன்புறம் துப்பாக்கி வாங்கி நின்றபடியே குறிபார்க்க தொடங்கவும் யாத்ராவிற்கு என்னவென்று அறியாத உணர்வு தோன்ற அப்படியே நின்றாள் மூச்சு விடவும் மறந்து.
அர்ஜுன் யாத்ராவைக் கட்டியபடி தான் குறிபார்த்தான் அவனின் அருகாமையில் யாத்ரா தன்னிலை இழக்கத் தொடங்கினாள்.
அவளின் பார்வை மாற்றத்தை பார்த்த அர்ஜுனின் பார்வையும் மாறியது.
இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து அப்படியே பார்த்துக் கொண்டு நிற்க, லாரி கவிழ்ந்த சத்தத்தில் தான் தன்னிலை அடைந்தனர்.
“ஏன்டா ராசா அங்க எவ்ளோ ஆக்சன் சீன் போயிட்டு இருக்கு. உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண இது தான் நேரமா?”, செந்திலும் நரேனும் கோரசாகக் கேட்டனர்.
இருவரும் அசடு வழிந்தபடி கீழே இறங்க அர்ஜுன் அவளைவிட்டு சற்று தள்ளி நின்றான்.
வந்த லாரியில் ஒன்று கவிழ்ந்து விட மற்றொன்று எதிரே வேகமாக வந்தது.
“யாத்ரா”, சிவி.
“இரு நான் சுட்றேன்”, என யாத்ரா அர்ஜுனிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி அந்த லாரியின் டயரிகளில் சுட்டதும் அதுவும் நின்றது.
“சிரஞ்ஜீவ் அந்த லாரிக்கு முன்ன ஒரு லெப்ட் வரும் அதுல புகுந்துடுங்க”, அர்ஜுன்.
“சரி அர்ஜுன்”, என அவனும் வேனை திருப்பத்தில் திருப்பினான்.
“எங்க போறோம் செழியன்?”, யாத்ரா.
“அப்பறம் சொல்றேன். ஏ.. என்ன உன் கைல காயம். இங்க வா. செந்தில் லைட் போடுங்க”, என யாத்ராவை அருகில் அமரவைத்து அவளது கை காயத்தை பரிசோதித்தான்.
“அது ஒன்னும் இல்ல செழியன் இந்த ஆர்யன் லூசு இழுத்துட்டு வந்தப்ப ஆகிரிச்சி”, யாத்ரா.
“மருந்து போட்டா தான் சரி ஆகும். கைய குடு”, அர்ஜுன் அவளை முறைத்துக் கொண்டு கையை இழுத்தான்.
அந்த சமயம் வேன் ஒரு மேடு பல்லத்தில் ஏறி இறங்க யாத்ரா அர்ஜுனின் மடியில் அமர்ந்து இருந்தாள்.
“அவன் கைய தான் கேட்டான்”, நரேன்.
“கம்முன்னு போடா அறிவில்லாதவனே”, யாத்ரா நரேனைத் திட்டினாள்.
“எல்லாம் என் நேரம். நடத்துங்கடா நடத்துங்க”, என நரேன் தலையில் கை வைத்துச் சொன்னான்.
அர்ஜுன் யாத்ராவின் இடைச்சுற்றி கை போட்டு இன்னும் அருகில் அமர்த்தி அவளது காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டுக் கொண்டிருந்தான். யாத்ரா அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
செந்திலும் ஜானும் யாத்ராவை வைத்த கண் வாங்காமல் பார்க்க, கதிரும் அர்ஜுனைப் பாத்துக் கொண்டிருந்தான். சிவி கண்ணாடி வழியாக அர்ஜுனையும் யாத்ராவையும் பார்த்துப் புன்னகைப் புரிந்துக் கொண்டான்.
அங்கிருந்த அனைவர் மனதிலும் இந்த இருவரைப் பற்றிய எண்ணங்களே ஓங்கி நின்றது. இவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்கிற வேண்டுதலுடன் கூடிய ஆசிர்வாதமாக நினைத்தனர்.
நாமலும் ஆசிர்வாதம் பண்ணிட்டு போலாம் தஞ்சைக்கு, அங்க என்னாச்சோ தெரியல….
அங்கே பரிதியின் முன் சேரலாதன் அமர்ந்து இருந்தான். அவனின் கோபமான பார்வையை அஞ்சனை தீட்டிய விழிக் கொண்டு சாதாரணமாக எதிர்க் கொண்டாள்.
“நீங்க ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டிங்க கலெக்டர் மேடம். தொடக்கூடாத இடத்துல தொட்டுடிங்க. விளைவுகள் மோசமானதா இருக்கும்”, சேரலாதன்.
“அப்படியா… சரி அதை வரப்ப பாக்கறேன். இப்ப கிளம்புங்க எனக்கு வேலை இருக்கு”, பரிதி கூறிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
நாற்காலியில் கையை குத்திவிட்டு அங்கிருந்து சென்றான் சேரலாதன்.
செல்பவனை அமர்த்தலான சிரிப்புடன் பரிதி பார்த்தாள்…