4 – அகரநதி
அகரன் நடந்து வருவதற்குள் அங்கே நதியாள் ஒரு பையனுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் விடு அவள”, நதியாள்.
“நீ விடு”.
“நீ அவள விடு ஏன் அவள அடிக்கற?”, நதியாள்.
“அவ என் பால் எடுத்து வச்சிட்டு குடுக்க மாட்டேங்கறா”,அந்த பையன்.
“இரு நான் வாங்கி தரேன்”, நதியாள்.
“ஹேய் நீ அவன் பால் குடு. உனக்கு தான் வேற பால் இருக்குல்ல?”, நதியாள் இன்னொரு பெண் குழந்தையிடம் கேட்டாள்.
“அவன் பால் அது தான். இது என்னது”, சிறுபெண்.
“இல்ல இது என் பால் அது தான் அவளோடது,” அந்த பையன்.
மீண்டும் அந்த பையன் அந்த சிறுபெண்ணை அடிக்க கை ஓங்க, நதியாள் அந்த சிறுவனைத் தடுத்து கன்னத்தில் அறைந்தாள்.
பின் “ரெண்டு பாலும் இங்க வச்சிட்டு போங்க.. நான் பிடி சார கூட்டிட்டு வரேன்”, நதியாள் கூறிவிட்டு ஓடினாள்.
“ஹே யாள். வா நாம விளையாடலாம்”, மீரா.
“இரு மீரா. சண்டை முடிஞ்சதும் வரேன்”, எனக் கூறிவிட்டுப் பி.டி சாரைத் தேடி ஓடினாள் நதியாள்.
“என்னாச்சி மீரா?”, எனக் கேட்டபடி அகரன் வந்து நின்றான்.
“அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டாங்கன்னு சார கூப்பிட போய் இருக்கா யாள்”, மீரா.
“லீவ் நாள்ல கூட ஸ்கூல் விட்டு வர மனசில்லையா உங்க ரெண்டு பேருக்கும்”, எனக் கேட்டபடி வந்தான் சரண்.
“நாங்க இங்க தான் விளையாடுவோம். இல்லன்னா யாள் அம்மா எங்கயும் விடமாட்டாங்க”, மீரா.
“ஹேய். சார் பால் எல்லாம் ரூம்ல வைக்க சொல்லிட்டாரு. போய் வைங்க”, நதியாள் கூறியபடி வந்தாள்.
“ஏன் நீ போய் வைக்க மாட்டியா?”, சரண்.
“நீ போய் வை. ஐ… அகன்…. எப்ப வந்த?”, துள்ளிக் குதித்துக் கேட்டாள் நதியாள்.
“வாங்க அண்ணா பால் வச்சிட்டு வரலாம்”, மீரா கைகளில் இருந்தது போக மீதம் மூன்று இருந்தது, அதனால் சரணை அழைத்தாள்.
“நீ கூப்டதால வரேன். அந்த குட்டிபிசாச வந்து பேசிக்கறேன்”, நதியாளை முறைத்தபடிக் கூறினான் சரண்.
“போடா சரணா… அகன் வந்துட்டான். அவன் என்கூட விளையாடுவான்”, நதியாள்.
“ஏது டா வ? இங்க வா பல்ல ஒடைக்கறேன்”, சரண்.
“நான் உன் பல்ல உடைப்பேன் வா”, நதியாள்.
“அகரா அவள இந்த பக்கம் விடு இன்னிக்கு ஒரு முடிவு தெரியனும்”,சரண்.
“போடா. சின்ன குழந்தை கிட்ட மல்லுக்கு நின்னுகிட்டு”, அகரன் நதியை அவன் பக்கமாக இழுத்தபடிப் பேசினான்.
“அதுவா குழந்தை? குட்டி பிசாசு”, சரண்.
“நீ தான் பெரிய பிசாசு “, சரணைக் கூறினாள் நதியாள்.
“மறுபடியும் பாருடா”, சரண்.
“நீ போடா …. இங்க பாரு நதிமா. சரண் உன்னவிட பெரிய பையன் தானு. உனக்கு அண்ணன் தானே. அவன்கிட்ட இப்படி பேசக்கூடாது டா. சாரி கேளு”, அகரன்.
“சரணா… சாரி பூரி குப்பத்தொட்டி லாரி”, நதியாள் ஆடியபடிக் கூறினாள்.
“நதிமா….”,அகரன் சற்று முறைத்தான்.
“சரி… சாரி சரணா அண்ணா”, நதியாள்.
“நம்ம ஊர்ல இன்னிக்கு வெள்ளம் வர போகுது போ”,சரண்.
“நீயும் கம்முன்னு இருக்கமாட்ட. போய் பால் வச்சிட்டு வாங்க”, அகரன்.
“அகன் எப்ப வந்த?”, நதியாள்.
“இங்க வா”, என நதியை தன் மடியில் அமர்த்திக் கொண்டான் அகரன்.
“சொல்லு அகன். எப்ப வந்த?”, நதியாள்.
“இப்ப தான் கொஞ்சம் நேரம் முன்னாடி. என்ன சண்டை இங்க?”, அகரன்.
“அதுவா… ஆறு பால் சார் குடுத்தார். நானும் மீராவும் ஒரு பால் மத்த பால்ல மத்தவங்க விளையாடிட்டு இருந்தாங்க. அப்ப திடீர்ன்னு அந்த பையன் அந்த பொண்ண அடிச்சிட்டான். பால் மாறி போச்சு அந்த பொண்ணு ஒத்துக்கல. அதான் பால் வேணாம்னு சார் கிட்ட சொல்லிட்டு வந்தேன்”, நதியாள் கைகளை ஆட்டியபடி கண்களும் பேசக் கூறி முடித்தாள்.
“நீங்க சண்டை போட்டீங்களா?”,அகரன்.
“இல்லை.. சமாதானம் பண்ணேன்”, நதியாள்.
“நிஜமா?”, அகரன்.
“ஆமாம்”, எனத் தலையாட்டினாள் நதியாள்.
“அப்பறம் ஏன் அடிச்சீங்க?”, அகரன்.
திருதிருவென விழிந்துப் பின்,” அது அந்த பையன் அந்த பொண்ண அடிச்சதுல அழுதாளா, அதான் அவன அடிச்சேன். சின்ன பொண்ணுக்கு அடிச்சா வலிக்கும்ல? அவன் பெரிய பையன்”, நதியாள்.
“அப்படியா… நீங்க சின்ன பொண்ணு தானு?”, அகரன்.
“இல்ல.. பெரிய பொண்ணு”, நதியாள்.
“இப்ப தான் 4த் படிக்கறீங்க. நீங்களும் சின்ன பொண்ணு தான். இனிமே யாரையும் அடிக்க கூடாது சரியா?”, அகரன்.
“ம்ம்…. டிரை பண்றேன் அகன்”, நதியாள் சற்றுத் தலைச் சாய்த்து யோசித்துவிட்டுக் கூறினாள்.
“சரி. என்ன விளையாடலாம்”, அகரன்.
“கண்ணாமூச்சி”,நதியாள்.
“சரி அவங்களும் வரட்டும்”, அகரன்.
“ம்ம்…”, நதியாள்.
சற்று நேரம் விளையாடிய பின்னர் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். விடுமுறையும் வேகமாக கழிய பள்ளித் தொடங்கியது.
நதியாளின் சேட்டைகளும் தொடர்ந்தபடி இருக்க அகரனின் முன் மட்டும் சற்று அமைதியாக இருந்தாள்( இருப்பதைப் போல நடித்தாள்😜😜).
அகரனின் வகுப்பறை, பயிற்சியறை, விளையாடும் சமயம் என அனைத்திலும் கூடவே சுற்றிக் கொண்டு இருந்தாள்.
அகரனும் அவளுடன் நேரம் செலவழித்தபடி பாடத்தில் கண்ணாக இருந்தான்.
முழு ஆண்டுத் தேர்வு முடிந்தது. லீவில் நதியாள் அகரனை ஆற்றில் குளித்து விளையாட அடம் பிடித்து அழைத்துச் சென்றாள்.
அவர்களுடன் கண்ணனும், சிதம்பரமும் சென்றனர். நதியாள், மீரா, அகரன், சரண் நால்வரும் நீரில் விளையாடியபடி சற்று நேரம் கழித்தனர். நதியாளுக்கு நீச்சல் தெரியாது , அதனால் ஆழமான பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டு, ஆழம் குறைவான இடத்தில் இருந்தபடிக் குளிக்கச் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து அகரனும் சரணும் சற்றே ஆழமான பகுதிக்குச் சென்று நீச்சல் அடித்தபடி இருந்தனர். அங்கே அவர்கள் விளையாடுவதைக் கண்டவள் தானும் அங்கே செல்ல எழுந்து நடந்தாள். கால் தடுக்கி விழுந்து ஆற்று சுழலில் சிக்கிக் கொண்டாள்.
“மாமா… யாள் தண்ணில மாட்டிகிட்டா.. அண்ணா வாங்க”, மீரா கத்தியதும் பார்த்தவர்கள் பதட்டமாகினர்.
“மீரா நீ அங்கயே இரு”, என கூறிய அகரன் நதி விழுந்த இடத்திற்கு விரைந்து வந்து அவளை சுழலில் இருந்து மீட்டான். நதி குடித்த தண்ணீரை வெளியேற்றி அவளுக்கு மயக்கம் தெளிய வைத்தனர்.
சுழலில் சிக்கியதால் பயத்தில் ஜூரம் வந்துவிட்டது. அவளை சமாதானம் செய்து ஆஸ்பிட்டல் அழைத்துச் சென்று ஊசிப் போட்டனர்.
பின் இரண்டு நாட்கள் நதியாளைப் பார்க்கவில்லை அகரன். அவளைச் சென்று பார்த்து வரலாம் எனக் கிளம்பினான்.
“பாட்டி நான் நதிய போய் பாத்துட்டு வரேன்”, அகரன்.
“இரு ராசா நானும் வரேன்”, மீனாட்சியும் திலகாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
“பாட்டியும் பேரனும் எங்க கிளம்பிட்டீங்க?”, எனக் கேட்டபடி சுந்தரம் வந்தார்.
“நம்ம நதியாள பாக்க போறோம். காய்ச்சல் வந்து படுத்து இருக்கா”, மீனாட்சி.
“நானும் வரேன். புள்ள ஆத்துல விழுந்ததுல பயந்துட்டான்னு சிதம்பரம் சொன்னான்”, சுந்தரமும் கிளம்பினார்.
நதியாள் வீடு. அவளும் வீட்டிற்கு ஒரே வாரிசு. அகரன் குடும்பத்தை போலவே மதிப்பும் மரியாதையும் நிறைந்த குடும்பம்.
நிலபுலன்கள் விவசாயம் மற்ற தொழில் என வளமான இடம் தான். அகரன் வீட்டை போலவே இருக்கும் ஆனால் இரண்டு கட்டு உள்ள வீடு. வீட்டிற்கு முன்னால் பூந்தோட்டம் பின்னால் வயல் வெளி என ரம்மியமான சூழலில் இருக்கும்.
பூந்தோட்டம் முழுக்க நதியாளின் கைவண்ணம். அவளுக்கு செடி மரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனாலே கண்ணனும் ராதாவும் வித விதமான பூச்செடிகள் முதல் மரங்கள் வரை வீட்டில் நதியாள் கையால் நடப்பட்டு தினமும் பராமரிப்பதும் அவள் தான் பெற்றோர் உதவியுடன்.
“ராதா…. ராதா…..”, மீனாட்சி உள்ளே வந்தார்.
“வாங்க பெரியம்மா.. வாங்க பெரியப்பா.. வா அகரா”, ராதா உள்ளிருந்து வெளியே வந்து வரவேற்றார்.
“வாங்க மாமா அத்தை அகரா “, என கண்ணனும் வரவேற்று அமரச் சொன்னார்.
“எப்படி இருக்கீங்க மாமா?”, கண்ணன்.
“நல்லா இருக்கோம். நதியாள் எப்படி இருக்கா?”, சுந்தரம்.
“இன்னிக்கு தான் காய்ச்சல் விட்டு இருக்கு மாமா. பயந்துட்டா”, கண்ணன்.
“சின்ன குழந்தை சுழல்ல மாட்டினா என்ன பண்ணும்? சரியாகிடும்”, சுந்தரம்.
“சொன்னா எதாவது கேக்கணும் பெரியப்பா. நல்ல வேல அகரன் அன்னிக்கு சரியா பிடிச்சி இழுத்தான் இல்லன்னா.. எனக்கு ஈரக்குல நடுங்குது”, ராதா காப்பி கொடுத்துக் கொண்டே கூறினார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. என் பேத்திக்கு ஆயுசு கெட்டி. எல்லாரயும் கட்டி மேய்க்கர ஆளு. இதுல்லாம் பெருசா நினைச்சி நீ பயப்படாத ராதா”, மீனாட்சி.
“அத்தை நான் நதிய பாக்கலாமா?”, அகரன்.
“அந்த ரூம்ல தான் இருக்கா போய் பாரு பா”, ராதா அந்த கோடியில் இருந்த அறையைக் காட்டினார்.
அகரன் அறையில் நுழைந்துப் பார்த்தான். துரு துரு வென்று ஓடும் கால்கள் அமைதியாக இருந்தது, உடல் இளைத்து இருந்தாள். முகத்தில் காய்ச்சலின் சோர்வு தெரிந்தது. அவளை அப்படி பார்க்கவும் அகரனுக்கு மனது பாரமாகிப் போனது.
அவள் அருகில் அமர்ந்து நெற்றியில் நீவி விட்டு,”உனக்கு ஒன்னும் இல்ல நதிமா. சீக்கிரம் எந்திரிச்சு வா நாம விளையாடலாம். உனக்கு நான் நீச்சல் கத்து தரேன். அடுத்த வாரம் ஸ்கூல் திறந்திடுவாங்க. நாம ஜாலியா இருக்கலாம்”.
அகரனின் குரலில் கண்விழித்த நதியாள்,”அகன்…… எப்ப வந்த?”, என எழுந்தாள்.
“இப்பதான் நீ படுத்துக்க நதிமா…. இப்ப உடம்பு நல்லா இருக்கா?”,அகரன் அவள் அருகில் அமர்ந்து நெற்றியில் கைவைத்துக் கேட்டான்.
“ம்ம்ம்… எனக்கு காய்ச்சல் சரியா போச்சு. நீ எப்ப எனக்கு நீச்சல் சொல்லித்தர?”, நதியாள்.
“யாருக்கு நீச்சல் சொல்லி தரணும்?”, எனக் கேட்டபடி மீனாட்சி வந்தார்.
“ஐஐஐஐ…. மீனா….. எப்ப வந்த?”, என அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“என் ராசாத்திக்கு என்னாச்சி? ஏன் தண்ணில விழுந்தீங்க?”, மீனாட்சி.
“அகனும் சரணாவும் தூரமா போய் குளிச்சாங்களா.. நானும் போலாம்னு போனேன் அப்ப பாசி வளுக்கி விட்டு விழுந்துட்டேனா…. அங்க ரொம்ப ஆழமா இருந்தது அதுவும் இல்லாம என்னை சுத்தி சுத்தி உள்ள இழுத்துச்சா அதுல பயந்துட்டேன் மீனா. அப்பறம் அகன் தான் என்னை காப்பாத்தினான்”, நதியாள் அழகாக கைகளை ஆட்டி கண்களில் நவரசமும் தெளிக்கக் கூறினாள்.
அவள் அப்படி கூறும் அழகில் லயித்து, அங்கிருந்த அனைவரும் அசந்து அவளை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடித்தனர் என்று தான் கூறவேண்டும்.
சுந்தரம் தாத்தா அவளை அள்ளி அணைத்து , “என் மகாராணி டா நீ… நூறு வருஷம் உனக்கு எந்த குறையும் இல்லாத வாழ்க்கை வாழ்வ. மகராசியா இரு”, என ஆசிர்வதித்தார்.
“சுந்தா …. நீ ஏன் எனக்கு உன் காப்பு போட்டு விடல”, என அவரின் கைகளில் இருத்த காப்பை காட்டி உருட்டியபடிக் கேட்டாள்.
“அடியேய் அது எங்க பரம்பரை காப்பு ..உனக்கு குடுக்கணும்னா எங்க வீட்டுக்கு மருமகளா வா அப்ப தரேன்”, மீனாட்சி .
“அப்படின்னா?”, நதியாள் புருவத்தை தூக்கி யோசித்துக் கொண்டே கேட்டாள்.
“இவ ஒரு கூறு கெட்டவ. சின்ன புள்ள கிட்ட இதுல்லாம் சொன்னா எப்படி புரியும்? இங்க பாரு யாள் குட்டி. நீங்க பெரிய பொண்ணா வளருங்க அப்பறம் இந்த தாத்தா நீ எத கேட்டாலும் தரேன்”, சுந்தரம்.
“நான் அகன் மாறி வளந்தப்பறம் தருவியா சுந்தா?”, நதியாள் அவளுக்கு தெரிந்தவாறு கேட்டாள்.
“ஹாஹா…. ஆமா…. சும்மா இல்ல நல்லா படிச்சி கெட்டிகாரியா இருக்கோணும்”, சுந்தரம்.
“சரி சுந்தா. நான் நல்லா படிச்சி நீ சொல்றமாதிரி வளர்வேன்”,என நதியாள் கூறி அவரைக் கட்டிக்கொண்டாள்.
“என் தங்கம்”, என மீனாட்சி அவளை நெட்டி எடுத்தார்.
“அம்மா …. பசிக்குது. அகன்க்கு பால்கோவா பிடிக்கும் அது குடு. சுந்தாக்கு அதிரசம். மீனாக்கு முறுக்கு. அப்பறம் எனக்கு மூனும்”, நதியாள் கூறிக்கொண்டே தன் தாயைக் கொஞ்சினாள்.
“பாத்தீங்களா நம்ம பேத்திய எவ்வளவு கெட்டிகாரத்தனம்னு. அவளுக்கு வேணும்னு கேட்டா ராதா குடுக்கமாட்டான்னு, இப்படி நம்மளுக்கு குடுக்கற சாக்குல கேக்கறா” , என கூறி மீனாட்சி சிரிக்க அனைவரும் சிரித்தனர்.
அகரன் நதியாள் தன்னுள் ஆழமாக பதிந்துபோவது தெரியாமல் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்.