44 – அகரநதி
ஊரில் இருந்து நேராக சரணும் அகரனும் நதியாளை அவள் தோழமைகள் தங்கி இருந்த வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தங்கள் இல்லம் வந்தனர்.
பையன் எவ்வளவோ முயற்சி செஞ்சும் நம்ம நதிகுட்டி கொஞ்சம் கூட இடம் குடுக்கல. அதான் தனி தனியாவே இருக்கட்டும்னு அத்தனை பெரிய தலையும் தீர்ப்பு சொல்லிட்டாங்க.
அகரன் சலிச்சிகிட்டே தான் அவள அங்க விட்டுட்டு வந்தான்.
அடுத்த நாள் பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் கூட மீட்டிங் அரேன்ஞ் பண்ணி இருக்காங்க. அதுக்கு தேவையானதை எடுத்து வச்சிட்டு சரண் தூங்கிட்டான்.
நதியாளும் இத்தனை நாளாக தன் வானரப்படையை விட்டுவிட்டு இருந்ததில் பாசமழையை பொழிந்தபடி ஆபீஸ் சமாச்சாரங்களை கேட்டுக்கொண்டாள்.
ஸ்டெல்லா முக்கியமான ஒரு விஷயத்தை தனியாக நதியாளிடம் கூற , அதை நதியாள் தக்க சமயத்தில் உபயோகப்படுத்த ஏதுவாக தயார்செய்யக் கூறிவிட்டு அவளும் படுக்கைக்கு சென்றாள்.
கண்ணாடியின் முன் நின்றவள் கழுத்தில் கனமான தாலிசரடு, நெற்றியில் குங்குமம் காலில் மெட்டி, கைகளில் வளையல் என ஆளே மாறிப்போய் இருந்தாள் . ஊரில் இருந்தவரையிலும் கைகள் நிறைய வளையல் கழுத்து நிறைய சங்கிலி என்று வளைய வந்தவள் இன்று எப்பொழுதும் அணியும் கழுத்தை ஒட்டிய வைரக்கல் சங்கலியுடன் தாலி அணிந்து இருந்தாள்.
மணமானதும் தன் தோற்றத்தில் இத்தனை மாற்றங்களா என்று எண்ணி வியந்தவள் , இத்தனை நாளாக நதியாள் கண்ணனாக இருந்தவள், இன்று நதியாள் அகரனாக தன் அடையாளம் மாறி இருப்பதை உணர்ந்து சிரித்தபடி தன் உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டு இருந்தாள்.
“மிஸஸ் அகரன் என்ன பண்றீங்க? “, எனக் கேட்டபடி ரிஸ்வானா உள்ளே வந்தாள்.
“ஹே ரிஸ்….. எப்படி இருக்க? அண்ணா எப்படி இருக்காங்க?”, நதியாள் அவளைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.
“நான் நலம் . வீட்லயும் எல்லாரும் நலம். ஆனாலும் நீங்க இப்படி அதிர்ச்சி குடுப்பீங்கன்னு நாங்க யாருமே நினைக்கல யாள். அகரன் எப்படி இருக்காரு?”, எனக் கூறியபடி ரஹீம் உள்ளே வந்தான்.
“ஹாய் பையா….. அது எனக்கே பெரிய ஷாக் தான் . நானும் எதிர்பாக்கல அகனும் எதிர்பாக்கல…. ஊருக்கு தான் நீங்க வரல, இங்க அடுத்த மாசம் ரிசப்ஷன் வச்சி இருக்கு அதுக்கு கண்டிப்பா நீங்க எல்லாரும் பேமிலியோட வரணும். இப்பவே சொல்லிட்டேன் அப்பறம் அந்த மீட்டிங் இருக்கு, இந்த வேலையா பறந்துட்டேன்னு சொல்லக்கூடாது”, நதியாள்.
“எல்லாம் ரிஸ் சொன்னா. சஞ்சயும் திலீப்பும் கூட சொன்னாங்க டா. நல்லவேலை அகரன் சுதாரிச்சிட்டாரு. எனிவேஸ் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததுல நாங்க ரொம்ப சந்தோஷப்படறோம். ஹேப்பி மேரீட் லைவ். ஆமா நீ ஏன் இங்க வந்துட்ட? அகரன் வீட்லயே கூடவே இருக்கலாமே?”, ரஹீம் வாழ்த்தை தெரிவித்து விட்டு கேட்டான்.
“டிகிரி முடியட்டும்னு தான் பையா. இன்னும் நாலு மாசம் தானே…. “, நதியாள் மலுப்பியபடிக் கூறினாள்.
“ஏன்டி அண்ணா படிக்கவிடமாட்டாறா என்ன?”, என ரிஸ் நதியாளைப் பார்த்து கண்ணடித்து காதில் கிசுகிசுத்தாள்.
“வாய மூடு. நீ ஏன் கல்யாணத்த தள்ளி வச்ச அந்த ரீசன்காக தான் இதுவும். அண்ணா இருக்கறப்ப என்கிட்ட அடி வாங்காத”, நதியாள் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
“என்ன இரண்டு பேரும் சீக்ரெட் பேசிக்கறீங்க?”, ரஹீம்.
“ஒன்னுமில்லன்னா வாங்க கீழே போலாம். டின்னர் எங்க கூட தான் நீங்க இன்னிக்கு சாப்பிடணும்”, என நதியாள் கண்டிப்பாக கூறிவிட்டு கீழே அழைத்து வந்தாள்.
ரஹீமும், ரிஸ்வானாவும் இரவு ஒன்பது மணி வரை இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
அடுத்த நாள் நதியாள் அனைவருக்கும் முன் தயாராகி காத்திருந்தாள்.
அகரன் நினைவு வர ,” அகன் இந்நேரம் சாப்பிட்டு இருப்பானா? கிளம்பி இருப்பானா? சரணா ஒழுங்கா அவன கவனிச்சிப்பானா? “, என கேள்வி மேல் கேள்வி தனக்குதானே கேட்டபடி சரணிற்கு போன் செய்தாள்.
“சொல்லு யாள்குட்டி…. என்ன பண்ற? சாப்டியா?”, சரண் .
“இல்ல இனிமே தான். நீங்க சாப்டிங்களா? கிளம்பிட்டீங்களா? மீட்டிங் எத்தனை மணிக்கு? அகன் ரெடியாகிட்டானா? டிபன் ரெடி ஆகிடிச்சா?”, என வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.
“இப்ப நீ என்மேல அக்கறை பட்டு கேக்கறியா ? உன் புருஷன் மேல அக்கறைபட்டு கேக்கறியா?”, சரண் வாயிற்குள் சிரித்தபடிக் கேட்டான்.
“இரண்டு பேர் மேலயும் தான் அக்கறைப் பட்டு கேக்கறேன். கேட்டா முதல் பதில் சொல்லுடா சரணா”, என நதியாள் சரணை அதட்டினாள் தான் அழைத்ததற்கான உண்மை காரணத்தை அறிந்து கொண்டானே என்று.
“அப்படியா ? இத்தனை நாள்ல எனக்கு ஒரு போன் பண்ணி இப்படிலாம் கேட்டியா? இரண்டு மாசமா ஆபீஸ் வர அங்க கூட இப்படி நீ என்னை கேக்கல… இப்ப மட்டும் என்ன புதுசா உனக்கு அக்கறை?”, சரண் கிடுக்கியாக கேள்வி கேட்டான்.
“அதான் இன்னிக்கு கேக்கறேன்ல. அதுக்கு முதல் பதில் சொல்லுடா எரும மாடே…. அதான் என் புருஷனுக்காக தான் கேக்கறேன்னு தெரியுதுல…. அதுக்கு பதில் சொல்லிட்டு போய் வேலைய பாரு. சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்டுட்டு… பெரிய நக்கீரன்னு நினைப்பு”, நதியாளும் எரிச்சலாக பேசினாள்.
“உன் புருஷனுக்காகன்னா அவனயே கேட்டுக்கோ போடி”, என சரண் போனை கட் செய்தான்.
“டேய் எரும…. பண்ணி…. வந்து பேசிக்கறேன் உன்ன….”, என சரணை திட்டியவள் ,” டேய் மலமாடே திலீப்…. பைக் கீ எங்கடா?”, என திலீப்கிடம் கேட்டாள்.
“பைக் கீ எதுக்கு ? இனிமே நீ கார்ல தான் ஆபீஸ் வரணும்னு ஊர்ல இருந்து சுந்தரம் தாத்தா கார் வாங்கி அனுப்பி இருக்காரு. இனிமே நாம எல்லாரும் ஒன்னா ஒரே கார்ல தான் ஆபீஸ் போகப் போறோம். கார் வெளிய நிக்குது. போய் பாரு”, என திலீப் குஷியுடன் கூறினான்.
“என்ன கார்ஆ? “, என கேட்டவள் வெளியே வந்து பார்த்தாள்.
சஞ்சயும், மீராவும், ஸ்டெல்லாவும் கார் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். எட்டு பேர் அமர்ந்து செல்லும் பெரிய கருப்பு கலர் கார் வாசலில் நின்று இருந்தது.
அன்று அவள் சொன்னதை நினைவு வைத்து தாத்தா வாங்கி கொடுத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவள், அவருக்கு உடனே கால் செய்தாள்.
“தாத்தாஆஆஆஆஆஆ…….. ஐ லவ் யூ சோ சோ சோ மச்…… எப்ப தாத்தா இத புக் பண்ணீங்க? என்கிட்ட சொல்லவே இல்ல”, என தன் சந்தோஷத்தை வெளிபடுத்தினாள் நதியாள்.
“ஹாஹாஹா….. உனக்கு பிடிச்சி இருக்கா? “, சுந்தரம் தாத்தா.
“ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு தாத்தா. மஹிந்தரா மரேசோ…. ஓசனிக் பிளாக் செம லூக் தாத்தா… இதுல நாங்க 10 பேர் உட்கார்ந்து போவோம்”, நதியாள் குதூகளித்தாள்.
“சரிடா முதல்ல கோவில்லுக்கு கொண்டு போய் பூசை போடுங்க. அப்பறம் ஆபீஸ் போங்க. உனக்கு இன்னொரு இன்பதிர்ச்சியும் இருக்கு. அத நான் சொல்லமாட்டேன்”, என சுந்தரம் தாத்தா பாதி விஷயம் மட்டும் கூறி வைத்துவிட்டார்.
“என்ன சுந்தா இப்படி பட்டுன்னு வச்சிட்டாரு. என்ன சர்ப்ரைஸ் இருக்கு இன்னும்? சரி வரப்ப பாத்துக்கலாம் இப்ப கார பாக்கலாம். முதல்ல கார் ஓட்ட கத்துக்கணும். இந்த அகன பிடிச்சி சொல்லித்தர சொல்லணும்”, என தனக்குள் பேசியபடி காரின் அருகில் சென்றாள்.
“ஹேய் யாள்…. கார் செமயா இருக்கு…. தாத்தா சூப்பரா செலக்ட் பண்ணி இருக்காரு…. “, என ஸ்டெல்லா கையை பிடித்துக்கொண்டு குதித்தாள்.
“ஆமா… இனிமே நாம ஒன்னாவே எல்லா இடத்துக்கும் போலாம் “, என இருவரும் மீராவைப் பிடித்து சுற்றினர்.
“லூசுங்களா…. விடுங்க டி……விடுங்க….. யாள் முதல்ல அகரன் அண்ணாக்கு கால் பண்ணி சொல்லு”, என மீரா கூறவும் அகரனை அழைத்தாள் நதி.
போன் சத்தம் அருகில் கேட்க திரும்பி பார்த்தால் அகரன் அவளின் பின்னே கைக்கட்டி நின்று கொண்டிருந்தான்.
“ஹேய் அகன்…. நீ எப்ப வந்த ? கார் பாத்தியா தாத்தா அனுப்பினாராம் டா…. செம்மயா இருக்குல்ல”, என அவனைக் கட்டிக்கொண்டு குதித்தாள் நதி.
இவள் அவனைக் கட்டி கொண்டதும் மீரா அங்கிருந்தவர்களை சைகையால் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
அகரனும் அவர்கள் செல்லும்வரை அமைதியாக இருந்தவன். அவர்கள் உள்ளே சென்றதை ஊர்ஜிதம் படுத்திக்கொண்டு, நதியாளை இடையோடு மேலே தூக்கிச் சுற்றினான்.
“ஹேய்…ஏய்…. அகன் …. “, என நதியாளும் குஷியாக கைவிரித்து அவள் தோளையும் பற்றியபடி சிரித்தாள்.
“கீழே இறக்கி விடு அகன்… போதும்”, எனக் கூற அவளை கீழே இறக்கிவிட்டான்.
அவள் கைகளில் காரின் சாவியை கொடுத்தான்.
“அகன் எனக்கு கார் ஓட்ட தெரியாது”, என நதியாள் உதடு பிதுக்கி கூற அகரன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“பைக் மட்டும் எப்படி கத்துகிட்ட?”, அகரன் இடுப்பில் கைவைத்து முறைத்தபடிக் கேட்டான்.
“அது ஸ்கூல்லயே கத்துகிட்டேன். கார் இன்னும் கத்துக்கல….நீ கத்துகுடேன்”, என அவனின் சர்ட் பட்டனை திருவியபடிக் கேட்டாள் நதி.
“உனக்கு கார் ஓட்ட கத்துக்கொடுக்கறது தான் எனக்கு வேலையா?”, என அகரன் மீண்டும் முறைத்தான்.
“சும்மா சும்மா முறைக்காத டா அகன். நீ தான் கத்துக்குடுக்கணும். எப்பனு நீயே டைம் பிக்ஸ் பண்ணிக்க… இப்ப வா உள்ள போய் சாப்டு கிளம்பலாம்”, என அவனை கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் நதி.
அகரனும் மௌனமாக சிரித்தபடி தான் கேட்காமலே தன்னவள் தன் எண்ணத்திற்கு சம்மதித்தது உற்சாகத்தை கொடுக்க, அதை வெளிக்காட்டாமல் அவளின் பின்னே அவள் கையைப்பிடித்து தன் தோள் வளைவில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
இருவரும் காதல் பார்வை பார்த்தபடி வருவதை மீராவும் சஞ்சயும் படம் எடுத்துக்கொண்டனர்.
“மீரா…. ஸ்டெல்…. டிபன் ரெடியா?”, நதியாள் கேட்டபடி கிட்சனில் நுழைந்தாள்.
“ஓஓஓ…எல்லாம் ரெடி… அண்ணாக்கு உன் லவ் லூக் மட்டுமே போதும்னு சொல்லிட்டாரு. நாங்க சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பறோம். நீங்க பொறுமையா சாப்டு வாங்க”, என ஸ்டெல்லா கீதம் பாட மீராவும் உடன் ஸ்ருதி சேர்த்தாள்.
“என்னடி நக்கலா ? நானும் இப்ப மதுரன இங்க வரசொல்றேன் அப்ப தெரியும் யாரு லவ் லூக் அதிகம் விடறாங்கன்னு”, என ஸ்டெவ்லாவை செல்லமாக மிரட்டினாள் நதி.
“ஹாஹாஹா…. அதுலாம் சான்ஸே இல்ல…. மதுரன் என் ஆளும் இல்ல…. அப்படியே இருந்தாலும் உங்க அளவுக்கு எல்லாம் முடியாது”, என ஸ்டெல்லா கூறி முடிப்பதற்குள் மதுரன் வீட்டினுள் நுழைந்தான்.
“வாடா மது …. ஏன்டா லேட்? “, என அகரன் அவனை வரவேற்று கட்டிக்கொண்டான்.
“உனக்கென்னப்பா நீ லைசன்ஸ் ஹோல்டர்.. நான் அப்படியா? இன்னிக்கு வேற வீட்ல பொண்ணுங்க போட்டோ காட்டி டென்சன் பண்ணிட்டாங்க. அங்க இருந்து தப்பிச்சி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரிச்சி”, என மதுரன் பதில் கூறியபடியே ஸ்டெல்லாவை பார்த்தான்.
“பாத்தியா மீரா…. நான் சொன்னேன்ல….லவ் லூக் அதிகம் குடுக்கறது யாருன்னு நீயே சொல்லு”, என நதியாள் கிசுகிசுத்தாள்.
“இதுல வேற உங்களுக்கு போட்டியா டி? ஒழுங்கா இரண்டு பேரும் அண்ணனுங்கள சாப்பிட கூட்டிட்டு வாங்க நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன்”, என மீரா இருவரையும் திட்டிவிட்டு கிட்சன் உள்ளே சென்றாள்.
அவள் பின்னோடு திலீப்பும் சஞ்சயும் அவளுக்கு உதவ வந்தனர்.
“நீங்க ஏன்டா வரீங்க ? அவங்க கூட பேசிட்டு இருங்க”, என மீரா கூற,” அங்க வந்து பாரு. நாங்க இருக்கறதே அவங்க நாலு பேருக்கும் கண்ணுக்கு தெரியல. அதான் இங்க வந்துட்டோம் “, என சஞ்சய் கூறினான்.
பாத்திரத்தை வைக்க வந்த மீராவும் பார்த்து சிரித்துவிட்டு ,”இவர்கள் வாழ்வு சிறக்க வேண்டும் “, என்ற வேண்டுதலை வைத்துவிட்டு அனைத்தையும் தயார் செய்தாள்.
“யாள்… ஸ்டெல்…. வாங்க எல்லாம் ரெடி…”, என மீரா அழைக்கவும் தன்னிலை பெற்றவர்கள் தன்னவர்களைப் பார்த்தனர்.
அவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்க ,அருகில் சென்ற சஞ்சயும், திலீப்பும் பிடித்து உலுக்கினர். அதில் தன்னிலை பெற்றவர்கள்,” ஏன்டா…. டேய் சஞ்சய் தீபி எப்படா வந்தீங்க?”, என மதுரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
“பாஸ்… நீங்க தான் எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க. நாங்க இங்கயே தான் இருக்கோம்”, என திலீப் முறைத்தபடிக் கூறினான்.
“சாரி பசங்களா…உங்க அண்ணிய பாத்ததும் மத்தத மறந்துட்டேன்…”, மதுரன் அசடு வழிந்தபடிக் கூற, அகரனும் தலையை அழுந்த கோதியபடி சிரித்துக்கொண்டே கைகழுவ சென்றான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் கைகழுவி வந்து சாப்பிட அமர்ந்தனர். ஒன்றாக அனைவரும் சாப்பிட்டு முடிக்க மதுரன் ஸ்டெல்லாவை அழைத்தான்.
“ஹே டால்…. நாம இந்த வாரத்துல நம்ம வீட்ல விஷயத்த சொல்லிடலாம்… இதுக்கு மேல லேட் பண்ணா கஷ்டம் டா. நீ என்ன சொல்ற?”, மதுரன் அவளை காதல் வழிய பார்த்துக் கொண்டே கேட்டான்.
“மனு… உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? எங்க வீட்லயும் சம்மதிப்பாங்களான்னு தெரியல…. எனக்கு பயமா இருக்கு”, ஸ்டெல்லா கலக்கத்துடன் கேட்டாள்.
“இனிமே எல்லாமே நம்ம வீடு… நாம புரிய வைக்கலாம் டால். அம்மா ரொம்ப தீவிரமா பொண்ணு தேடறாங்க. முதல்லயே சொல்லிட்டா பிரச்சினை வராதுன்னு தோணுது”, மதுரன் அவள் கைகளை பற்றியபடிக் கூறினான்.
“ஹ்ம்…. என்னிக்கி இருந்தாலும் நாம தானே சமாளிக்கணும்.. பட் நான் டிகிரி முடிச்சப்பறம் சொல்லலாம்னு இருந்தேன் மனு. படிப்பு கெடக்கூடாதுல்ல….”, ஸ்டெல்லா.
“அதுவும் சரிதான். நான் சும்மா இப்ப வேணாம்னு எதாவது சொல்லி நிறுத்தி வைக்கறேன். இன்னும் நாலு மாசம் இருக்கா முடிய?”, மதுரன் யோசித்தபடிக் கேட்டான்.
“ஆமா மனு”, என அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள் ஸ்டெல்லா.
“டால் நாம வெளிய எங்கயாவது போலாமா?”, மதுரன் மிகவும் மிருதுவான குரலில் கேட்டான்.
“அதுலாம் வேணாம்….”, ஸ்டெல்லா கொஞ்சலாக கூறினாள்.
“ஏன் வேணாம்?”, அவளைப் போலவே கேட்டான்.
“இப்ப வேணாம். வாங்க போலாம் நமக்காக கீழ வையிட் பண்ணிட்டு இருப்பாங்க…”, என ஸ்டெல்லா அவனை விட்டு விலகாமலே கூறினாள்.
“இப்படியே இருந்தா எப்படி போறது டால்”, என அவளின் இடைச்சுற்றி இறுக்கிக் கொண்டே கேட்டான்.
பட்டென அவனை விட்டு விலகியவள் வெட்கச் சிரிப்புடன் ஓடினாள். அவனும் காதலியின் காதலில் நனைந்த படி மந்தகாச சிரிப்புடன் ஹாலிற்கு வந்தான்.
“எல்லாரும் கிளம்பலாமா மதுரன்? எல்லாம் ஓக்கே தானே?”, அகரன் கிண்டல் குரலில் கேட்க, மதுரன் அவனைத் துறத்தவென அவ்விடம் ரம்யமாக காட்சியளித்தது.
“டேய் சின்னப்பசங்க நாமலே கம்முனு இருக்கோம்… இவங்க ஏன்டா இப்படி ஓடிபிடிச்சி விளையாட்றாங்க?”, திலீப்.
“அதான் நாம சின்னபசங்கன்னு சொல்லிட்டல்ல. அதுலாம் அப்படித்தான். வா நாம முன்ன போலாம்”, என சஞ்சய் சிரிப்புடன் அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
பின் அகரனும் நதியாளும் கோவிலுக்கு சென்று பூஜை போட்டு ஆபீஸ் சென்றனர். அகரனின் காரில் மற்றவர்கள் வந்தனர்.
அகரன், நதியாள், மீரா ,ஸ்டெல்லா, ரிஸ், சஞ்சய் திலீப் என அனைவரும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைந்தனர்.
அகரனுக்கும் நதியாளுக்கும் திருமணமாகிவிட்டது என ஏற்கனவே ஆபீஸில் இருப்பவர்களுக்கு அறிவித்திருந்ததால் , அவர்கள் வந்ததும் அனைவரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறினர்.
இருவரும் சிரித்தபடி அனைவருக்கும் நன்றி கூறி பெற்றுக்கொண்டனர்.
“நதிமா…. இன்னிக்கு மீட்டிங் யார் யார் உங்கள்ள வரதுன்னு நீங்க டிசைட் பண்ணிக்கோங்க”, எனக் கூறிவிட்டு தன்னறைச் சென்றான் அகரன்.
“எத்தனை பேர் வரணும்னு சொல்லலியே”, என நினைத்தவள் ஸ்வப்னாவைத் தேடிச் சென்றாள்.
“ஹாய் மேம்… ஹேப்பி மேரீட் லைஃப்”, என ஸ்வப்னா வாழ்த்துக் கூறினாள்.
“தேங்க்யூ ஸவ்பனா. மேம்லா வேணா எப்பவும் போல பேர் சொல்லி கூப்பிடுங்க. இன்னிக்கு மீட்டிங் நாங்க எத்தனை பேர் போகலாம்?”, நதியாள்.
“மூனு பேர். மீரா , ரிஸ்வானா, திலீப்கு டிசைனிங் வர்க் இருக்கு. நீங்க, ஸ்டெல்லா, சஞ்சய் போகலாம்… அப்பறம் இதுலாம் நம்ம தான் பர்ஸ்ட் ஆர்டர் வாங்கினோம்னு சொல்ல தேவையான எவிடன்ஸ்… அண்ட் இது நமக்கு வந்த கன்பர்மேஷன் லெட்டர்”, என ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தாள் ஸ்வப்னா.
“ஸ்வப் .. யூ ஆர் சோ ஸ்வீட்… எல்லாமே ரெடியா வச்சி இருக்கீங்க”, என நதியாள் சிரித்தபடிக் கூறினாள்.
“இது தானே என் வேலை… அதுவும் இல்லாம நம்ம கம்பெனி இந்த நிலைமைக்கு வரதுக்கு அகரனும், சரணும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்காங்க. அந்த பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ஸ இன்னிக்கு ஒரு வழி பண்ணிடனும்”, ஸ்வப்னா.
“விடுங்க ஸ்வப்னா மேடம் அந்த பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பல்ல உடைக்க நதியும் ஸ்டெல்லும் போதும். இன்னிக்கு கண்டிப்பா நாலு பல்லாவது உடைப்பாங்கன்னு நினைக்கறேன். நீங்க எனக்கு என்ன வர்க் இன்னிக்குன்னு சொல்லிட்டு டெமோ காட்டினா பரவால்ல”, எனக் கேட்டபடி திலீப் வந்து நின்றான்.
“டெமோவா? எதுக்கு?”, என ஸ்டெல்லா கேட்டபடி அருகில் வந்தாள்.
“அது எப்படி செய்யணும் ? எப்படியெல்லாம் செய்யலாம்னு ஸ்வப்னா மேடம் சொல்லி குடுப்பாங்க”, என திலீப் சிரித்தபடிக் கூறினான்.
“மேம் இவன்கிட்ட மட்டும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இல்லைன்னா மொட்டை அடிச்சிட்டு போயிடுவான்”, ஸ்டெல்லா ஸ்வப்னாவை எச்சரித்தாள்.
“ஹாஹா… அதுல்லாம் ஒன்னும் இல்ல ஸ்டெல்லா. ஹீ இஸ் டூயிங் குட். நீங்க கிளம்புங்க. டைம் ஆச்சி ஆல் த பெஸ்ட்”, என ஸ்வப்னா அவர்களை அனுப்பிவைத்தாள்.
மதுரன் தன் அலுவலகத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தான். அகரன், சரண், நதியாள், ஸ்டெல்லா மற்றும் சஞ்சய் ஐவரும் மதுரனின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
“வெல்கம் சார்.. வெல்கம் மேம்…”, என பொதுவாக அனைவரையும் வரவேற்று மீட்டிங் ரூம் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
அங்கே அவர்களுக்கு முன் பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் இடத்தில் வினய் அமர்ந்து இருந்தான்.
அவனைக் கண்டதும் சற்றே அதிர்ந்தவர்கள், பின் அமைதியாக தங்களுக்குள் ஒரு பார்வை பார்த்துக்கொண்டனர்.
“என்ன மிஸ்டர்.வினய்… உங்க மேனேஜர் எங்க ?”, எனக் கேட்டபடி மதுரன் உள்ளே வந்தான்.
“அவருக்கு உடம்பு முடியல சோ லீவ். அசிஸ்டண்ட் மேனேஜரா எங்க எம்.டி என்னை அனுப்பி இருக்காரு மிஸ்டர் மதுரன்”, என வினய் தான் எந்த விதத்தில் இங்கு வந்து இருக்கிறேன் என்று தெரியப்படுத்தினான்.
“ஓஓ…. உட்காருங்க…. அகரன் அண்ட் சரண் நாங்க உங்களுக்கு அனுப்பின லெட்டர்ஸ் கொண்டு வந்துட்டீங்களா?”, மதுரன் தொழில்முறையாக பேச ஆரம்பித்தான்.
“ஒரு நிமிஷம் சார்…. எங்க கம்பெனி சார்பா எங்க எம்டி வந்து இருக்கறப்ப, அவங்க எம்டி ஏன் வரல? “, நதியாள் உட்புகுந்தாள்.
“எங்க எம்டி இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் வந்து டைம் வேஸ்ட் பண்ணமாட்டாரு. இத நான் டீல் பண்ணா போதும்னு சொல்லிட்டாரு”, வினய் திமிராக பதில் கொடுத்தான்.
“சாரி மிஸ்டர் மதுரன். இந்த மாதிரி ஒரு பொஷிசன்ல இல்லாத ஆளுகிட்ட எல்லாம் நாங்க பேசணும்னு எந்த அவசியமும் இல்லை. ஒன்னு அவங்க எம்.டி வரணும் இல்லைன்னா ஜி.எம் இங்க வரணும். அப்ப தான் நாங்க பேசுவோம்”, நதியாளும் குறையாத திமிருடன் கம்பீரமும் சேர பதிலடி கொடுத்தாள்.
எங்களுக்கு நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை என்று பட்டவர்த்தனமாக கூறிவிட்டாள் நதி. அதில் அடிபட்டவன் அவளை வன்மத்துடன் பார்த்தான்.
“தட்ஸ் பைன் மிஸஸ் அகரன். மிஸ்டர் வினய் உங்க எம்டி ஆர் சம் ஹையர் ஆபீசர்ஸ் மஸ்ட் கம் ஹியர் நௌ “, என மதுரன் மிடுக்குடன் ஆணையிட்டான்.
வினய் அவர்களை முறைத்தபடி எழுந்து வெளியே சென்று தன் எம்டிக்கு அழைத்து வரச்சொன்னான்.
இருபது நிமிடத்தில் பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி பூரணன் உள்ளே வந்தான்.
ஐந்தே முக்கால் அடி உயரம், மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம் , கண்களில் கயமையும், புத்தியில் துர் எண்ணங்களும் கொண்ட முழு உருவமாக வந்து நின்றான் அவன்.
நதியாளையும், ஸ்டெல்லாவையும் அவன் பார்வையாலேயே துகிளுரிக்க, அதைக் கண்ட மதுரனும் அகரனும் புஜங்களை இறுக்கினர்.
சரண் அகரனை சமாதானம் படுத்த , மதுரனை சஞ்சய் கைபிடித்து நிதானப்படுத்தினான்.
“ஹலோ மிஸ்டர் மதுரன்…. ஐ ம் பூரணன். பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி”, என கைநீட்டினான்.
“ஹலோ…. டேக் யூவர் சீட்”, என மதுரன் பல்லைக் கடித்தபடி கூறினான்.
“இப்ப ஆரம்பிக்கலாமா நதியாள்”, என வினய் நக்கலாக கேட்டான்.
“மிஸஸ் நதியாள் அகரன். ஆரம்பிக்கலாம் மிஸ்டர் மதுரன். இவங்களுக்கு எப்ப நீங்க பிராஜெக்ட் குடுத்தீங்க? நாங்க சைட்ல பேஸ்மண்ட் போட்ட அப்பறம் இவங்க எதுக்கு பிரச்சினை பண்றாங்க.?”, என வினயை பார்வையால் எரித்துவிட்டு மதுரனிடம் கேள்வி கேட்டாள்.
“ஓஓ… கல்யாணம் ஆகிரிச்சா.? நீ ஏன் இத சொல்லல வினய்?”, பூரணன் நதியாளை கண்களால் மேய்ந்தபடிக் கேட்டான்.
“அதான் சொன்னேனே பாஸ் பஞ்சாயத்து வச்சி என்னை அடிச்சி துரத்தினாங்கன்னு”, வினய் கூறினான்.
“ஓஓ…. இவள நீ கட்டிக்க ஆசைபட்டது ரொம்பவே தப்பு டா. இவ எனக்கு வேணும். பக்கத்துல இருக்கறவளும். அதுக்கு ஏற்பாடு பண்ணு”, எனக் கூறியவன் மதுரனைப் பார்த்தான்.
“நாங்க உங்களுக்கு மட்டும் தான் குடுத்தோம் மிஸஸ் நதியாள். இவங்க ஏன் இப்படி சொல்றாங்கன்னு இவங்க தான் சொல்லணும்…”, என மதுரன் கூறிவிட்டு பூரணனைப் பார்த்தான்.
கண்களில் கயமையும் வன்மமும் வழிய அகரன் குழுவினரைப் பார்த்து பேசத் தொடங்கினான் பூரணன்…..