5 – அகரநதி
இரண்டு மூன்று நாட்களில் நதியாள் உடல்நிலை தேறிவந்தாள். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியது.
அகரன் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்விற்காக நன்றாக தயாராக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வந்தான்.
நதியாள் ஐந்தாம் வகுப்பு. அதே இரட்டை ஜடை, நிற்காது ஓடும் கால்கள், சலிக்காத சண்டைகள் என பள்ளியில் காலடி எடுத்து வைத்தாள். முதல் நாள் பள்ளி சென்றதும் நேராகச் சென்றது அகரனைக் காணத்தான்.
“அகன்… அகன்….”, என அழைத்தபடி அவனின் வகுப்பில் நுழைந்தாள்.
“ஏய்… வந்ததும் ஆரம்பிச்சிடியா? விடாது கருப்புன்னு சொல்றமாதிரி விடாம தொரத்திட்டே இருக்க அவன”, என சரண் அவளிடம் வம்பிலுத்தான்.
“உனக்கு என்ன? நான் அகன் கூட விளையாட வந்தேன். வா அகன் போலாம்”, என அகரன் கைபிடித்து இழுத்தாள்.
அந்த சமயம் உள்ளே வந்த கம்ப்யூட்டர் டீச்சர் ,”ஹாய் யாள் குட்டி… இங்க என்ன பண்றீங்க? உங்க கிளாஸ்க்கு போலியா?”, எனக் கேட்டார்.
“நான் அகன் கூட விளையாட வந்தேன் சார். நாங்க வெளியே போய் விளையாடலாமா?”, நதியாள்.
“காலைல வந்ததும் விளையாட்டா? இங்க பாருங்க யாள் குட்டி. இந்த வருஷம் அகரனுக்கு பெரிய பரிட்சை இருக்கு. நிறைய படிக்கணும். நிறைய மார்க் வாங்கணும். அப்ப தான் நல்ல காலேஜ் போய் படிக்க வாய்ப்பு கிடைக்கும்”, கம்ப்யூட்டர் டீச்சர்.
“ஏன் இங்கயே அகன் படிக்க கூடாதா?”, நதியாள் முகம் வாட கேட்டாள்.
“இங்க 12த் வரைக்கும் தானே இருக்கு. காலேஜ் நம்ம ஊர்ல இல்ல டா. அவன் நல்லா படிச்சா யாள் குட்டி ஹேப்பி தானே ?”, கம்ப்யூட்டர் டீச்சர்.
“ஆமாம்” , என தலையாட்டியபடிக் கூறினாள் .
“அப்ப அகரன விளையாட கூப்பிட்டு அடிக்கடி தொந்தரவு பண்ணக் கூடாது. அவன படிக்க வைக்கணும் . சரியா?”, கம்ப்யூட்டர் டீச்சர்.
“அப்படியா…. சரி நான் அவன படிக்க வைக்கிறேன். தொந்தரவு பண்ணமாட்டேன். ஆனா அகன் பக்கத்துல நானும் இருப்பேன்”, நதியாள் கண்டிசனுடன் கூறினாள்.
“சரி . இப்ப உங்க கிளாஸ் போங்க. பிரேக்ல அகரன பாக்கலாம்”, கம்ப்யூட்டர் டீச்சர்.
“ஓகே சார். டாடா அகன் நல்லா படி. சரணா கூட சேராத அவன் படிக்கவிடமாட்டான். நான் அப்பறம் வரேன்”, எனக் கூறிவிட்டு ஓடினாள் தன் வகுப்பறை நோக்கி.
“குட்டிபிசாசு … ஏன்டா நான் உன்ன படிக்கவிடலயா? நீங்க ரெண்டு பேரும் சேந்துட்டு என்னை படிக்க விடறது இல்ல. இனிமே படிக்கறப்ப அவ வரட்டும் தொரத்திவிடறேன் இரு”, என சரண் பொங்கினான் அகரனிடம்.
“விட்றா… குழந்தை தானே. சொன்னதும் எவ்வளவு அழகா புரிஞ்சிகிட்டா. நீயும் தான் இருக்கியே… இன்னும் உனக்கு சி லாங்குவேஜ் புரியலன்னு என் உயிர எடுக்கற”, என அகரன் சரணை வாரினான்.
“அந்த குட்டிபிசாசுக்கு சி சொல்லிகுடு, அவ புரிஞ்சிட்டா நான் ஒத்துக்கறேன்… எனக்கு புரிஞ்சிக்க தெரியலன்னு”, சரவணன்.
“அதுக்கு ஏன்டா இவ்வளவு கஷ்டப்படணும்? அதான் எங்க எல்லாருக்கும் ஆல்ரெடி தெரியுமே. அந்த குழந்தை கிட்ட அசிங்கம் படாத பெட் கட்டி”, எனக் கம்ப்யூட்டர் டீச்சரும் சரணை வாரினார்.
“சார்…..”, சரண் கோபத்தில் கத்தினான்.
“சரி இங்க வா. போய் லேப் கீ பிரின்ஸி ரூம்ல இருந்து வாங்கிட்டு வா”, எனச் சரணை அனுப்பினார் கம்ப்யூட்டர் டீச்சர்.
அங்கே நதியாள் அவளது வகுப்பில் மீராவை சுரண்டிக் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களுடன் விளையாடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது உள்ளே வந்த ரேவதி டீச்சர் நதியாள் இங்கே அமர்ந்து இருப்பதைப் பார்த்து,”என்ன யாள் அதிசயமா இருக்கு. இங்க உக்காந்து இருக்க? எப்பவும் அகரன் கூட தானு இருப்ப”, எனக் கேட்டார்.
“குட் மார்னிங் மிஸ். அகன் நிறைய படிக்கணுமாம், விளையாட கூப்டு தொந்தரவு தரக்கூடாதுன்னு சார் சொன்னாங்க”, எனக் கூறினாள்.
“பரவால்லையே யாள் சொல் பேச்சு கேக்கற”, ரேவதி டீச்சர்.
“அகன் படிச்சி நிறைய மார்க் வாங்கணும் அதான்”, நதியாள்.
“சரி நீ எப்ப படிக்கலாம்னு இருக்க? இனிமே நீயும் நல்லா படிச்சி நிறைய மார்க் வாங்கணும்ல”, ரேவதி.
“நானும் பெரிய பரிட்சை எழுதனுமா?”, என கண்களை விரித்துக் கேட்டாள்.
“ஆமா”, ரேவதி.
“அப்ப நானும் அகன் கூடவே உக்காந்து படிக்கறேன் இனிமே”, என ஓடப் பார்த்தாள்.
“ஏய்.. நில்லு நில்லு. இப்ப நான் பாடம் நடத்தி, குடுக்கிற வீட்டுபாடம் எல்லாம் சரியா முடிக்கணும். அப்பறம் அகரன் கூட உக்காந்து படிக்கலாம்”, என அவளை அமரவைத்தார் ரேவதி டீச்சர்.
“சரி மிஸ்”, என மனமே இல்லாமல் அவள் வகுப்பில் அமர்ந்தாள்.
இப்படியாக நாட்கள் ஓட அறையாண்டு தேர்வும் வந்தது. அதற்கு முன்னர் இருந்தே 12ஆம் வகுப்பு மாணவர்களை அவர்கள் இஷ்டப்படும் இடத்தில் அமர்ந்து படிக்க பிரின்ஸி அனுமதி வழங்கினார்.
அகரன், சரண், நதியாள், மீரா என நால்வரும் ஒன்றாகவே இருந்தனர்.
அகரன் சொன்னால் மட்டுமே தன் வகுப்பிற்குச் செல்வாள், இல்லையேல் அவன் அருகில் இருந்தபடி மீராவுடன் விளையாட்டு, இல்லையேல் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள்.
அதில் நிறைய சண்டை சச்சரவு வர அகரன் வந்து பிரித்து விட்டு அவளை தூக்கி செல்வது என நேரம் தெரியாத அளவிற்கு நாட்கள் பறந்தது.
நாட்கள் செல்ல செல்ல நதியாள் விளையாட்டாகவே அனைவரிடமும் பேசுவது விளையாடுவது என பள்ளியில் அனைவருக்கும் பரிச்சயமானாள்.
அவளின் கொழு கொழு கன்னத்தை பிடித்து தினமும் இழுக்க ஒரு கூட்டம் இருந்தது எனக் கூறலாம். அந்த சமயங்களில் அவள் ஓடி ஒளிவது அகரனின் முதுகில் தான். அவனும் மெல்லமாக அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு தன்னருகில் அமர்த்திக் கொள்வான்.
“ஏன் அகன் எல்லாரும் என் கன்னத்தை கிள்ளறாங்க?”” நதியாள்.
“அது ரொம்ப அழகா கொழு கொழுன்னு இருக்குல்ல அதான்”, அகரன்.
“கிள்ளினா எனக்கு வலிக்கும்ல”, நதியாள்.
“சரி இனிமே நதிக்கு வலிக்காம கிள்ள சொல்றேன்”, அகரன்.
“வேணாம். அந்த அக்காங்க எல்லாம் பிச்சி எடுக்கறாங்க அகன் பாரு”, என தன் கன்னத்தைக் காட்டினாள்.
கன்னம் நன்றாக சிவந்து இருந்தது, பாவம் வலி அதிகம் தெரிகிறது போல இல்லையென்றால் இப்படி கூறமாட்டாள் நதியாள்.
“அச்சச்சோ… யாரு என் நதிமா கன்னத்தை இப்படி கிள்ளினது?”, அகரன் தடவி விட்டுக் கொண்டு கேட்டான்.
“அந்த கிளாஸ்ல இருக்கும்ல சந்தியா அக்கா அவங்க தான்”, நதியாள்.
“யாரு டா?”, அகரன்.
“அதான் அன்னிக்கு உன்கிட்ட ஒரு அக்கா லெட்டர் குடுக்க சொன்னாங்கன்னு வந்து குடுத்தேன் ல. அந்த அக்கா”, நதியாள்.
“அவளா.. சரி நான் திட்டறேன். இனி நீ அந்த அக்கா பக்கத்துல போகாத”, அகரன்.
“சரி. வலிக்குது அகன்”, என தன் கன்னத்தில் அழுந்த துடைத்தாள்.
“இங்க வா. என் நதிமாக்கு ஒரு முத்தம் குடுத்தா சரியா போயிடும்”, என அவள் கன்னத்தில் முத்தமிட்டான் அகரன்.
“ஆஆஆ…. உன் முடி குத்துது”, என அவனின் பாதி வளர்ந்த மீசையைக் காட்டினாள்.
“ஹாஹா… சரி நாளைக்கு சேவ் செஞ்சிடறேன். என் நதி குட்டிக்கு குத்தாத மாதிரி”, அகரன்.
“ம்ம்… நான் விளையாட போறேன் . நீ படி அப்பறம் வரேன்”, எனக் கூறி ஓடினாள்.
அவள் செல்வதை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டு இருந்தான் அகரன்.
“என்னடா அங்கயே பாத்துட்டு இருக்க?”, எனக் கேட்டபடி சரண் அருகில் வந்து அமர்ந்தான்.
“இல்லடா.. நதிய பார்த்து தான்”, அகரன்.
“என்ன அகர்?”, சரண்.
“இன்னும் மூனு மாசம் தான்… நாம எக்ஸாம் முடிஞ்சி போயிருவோம். இப்ப நம்ம கூடவே இரண்டு வருஷமா இருக்கா. நாம போனப்பறம் என்ன பண்ணுவாளோ தெர்ல”, என அகரன் கூறினான்.
“ஆமால… நீ சொன்னா புரிஞ்சிப்பா டா. ஆனா நமக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்ல இவள பாக்காம இருக்கிறது?”, சரண்.
“ஆமாடா..தினமும் நம்மகூடவே இருந்துட்டு திடீர்னு இல்லைன்னா கஷ்டமா தான் இருக்கும். அவளையும் நம்ம கூடவே கூட்டிட்டு போக முடியாதா?”,அகரன் ஏக்கமாகக் கேட்டான்.
“அவ நம்ம செட்டா இருந்தா ஒரே காலேஜ் கூட இழுத்துட்டு போயிடலாம் இப்ப எப்படி டா? வேணும்னா நீ போற ஊர்ல இருக்கிற ஸ்கூல்ல சேத்திவிடலாம்”, சரண்.
“நல்ல ஐடியா தான் ஆனா அவ வீட்ல ஒத்துக்கணுமே”, அகரன்.
“டேய் இது டூமச் டா. நான் வெளாட்டுக்கு சொன்னா அதையே செய்ய வைக்கலாமான்னு கேக்கற நீ?”, சரண்.
“என்னடா பண்ண. இந்த ஒன்றரை வருஷத்துல ரொம்ப ஒட்டிகிட்டா டா. பிரிஞ்சி இருக்க எனக்குமே கஷ்டம் தான். சரி பாக்கலாம். நீ என்ன பண்ண போற காலேஜ்க்கு?”,அகரன்.
“நான் இங்கயே தானே இருக்க போறேன். நீ தான் வெளியூர் போய் படிக்கறதா சொன்ன”, சரண்
“ஆமாம் டா. என் கனவுகள நிஜமாக்க போகணும். நம்ம ஊர்ல தானே இருக்கா. பாத்துக்கலாம். இப்ப படிக்கலாம் வா. அவ வந்தா எவ்வளவு படிச்சேன்னு வேற கேப்பா”,என படிப்பதில் மும்முறமாகினர் இருவரும்.
சிறிது நேர்ததில் வந்த நதியாள் அகரனை, “எவ்வளவு படிச்ச அகன். அந்த புக் முடிச்சிட்டியா?”, என கேட்டாள்.
“இன்னும் கொஞ்சம் இருக்கு டா நதி”, அகரன்.
“சீக்கிரம் படி சார் உனக்கு டெஸ்ட் வைக்கறேன்னு சொன்னாரு நான் போய் கூட்டிட்டு வரேன்”, என கூறி ஓடினாள்.
“அடேய்… என்ன டெஸ்ட் டா?”, சரண் முதற்கொண்டு அனைத்து மாணவர்களும் கேட்டனர்.
“தெர்ல டா”, அகரனும் முழித்தான்.
“அவள கூப்பிடு டா”, சரண்.
“நதி இங்க வா”, அகரன்.
“சார் கூட்டிட்டு வரேன் அகன்”, நதியாள்.
“இங்க வா முதல்ல”, என அகரன் அதட்டினான்.
அவள் அருகில் வந்து நின்றாள்,
“எந்த சார் எப்ப டெஸ்ட் சொன்னாரு?”, அகரன்.
“கம்ப்யூட்டர் சார் தான் சொன்னாரு. உனக்கு தெரியாதா?”, நதியாள்.
இல்லையென அனைவரும் தலையசைக்க,”அச்சச்சோ… அகன் நான் மறந்துட்டேன் உன்கிட்ட சொல்ல. என்கிட்ட தான் சொல்லிவிட்டாரு அந்த புக் படிக்க சொல்லி டெஸ்ட் இருக்குன்னு. அதான் உனக்கு அந்த புக் படிக்க எடுத்து குடுத்தேன்”,எனக் கூறினாள்.
அனைவரும் அவளை முறைக்க சரண் அவளை தன்னருகே அழைத்தான்.
“குட்டிபிசாசு குட்டிபிசாசு… இப்ப சொல்ற. அவன் மட்டும் தான் அந்த புக் படிச்சான் நாங்க எல்லாம் வேற புக் படிச்சோம் இப்ப டெஸ்ட் வச்சா நாங்க எப்படி எழுதறது”, என அவள் காதைத் திருகினான்.
“ஆஆஆஆஆ… சார்…… “, என நதியாள் கத்த கம்ப்யூட்டர் சார் வந்தார்.
“டேய் ஏன்டா குழந்தைய அழ வைக்கற? விடு அவள”, எனக் கம்ப்யூட்டர் சார் கூறினார்.
“சார் இவ எங்கிட்ட டெஸ்ட் இருக்குன்னு சொல்லவே இல்ல”, என மற்றொரு மாணவன் கூறினான்.
“சரி விடு . இப்ப யார் யார் எது எது படிச்சி இருக்கீங்க?”, என கேட்டார்.
தோராயமாக மூன்று சப்ஜெட் அனைவரும் கூற அவரவர் படித்ததில் டெஸ்ட் வைத்தார் அவர்.
வேகமாக இப்படி சிறு சிறு கலாட்டா சண்டை என நாட்கள் பறந்து, பொது தேர்வும் நெருங்கியது.
“அகன்… ஆல் த பெஸ்ட்”, என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினாள்.
“சரணா உனக்கும் ஆல் த பெஸ்ட். மாட்டிக்காம பாத்து எழுது”, என வாரியபடி கூறினாள்.
அகரன் பரிட்சை முடிந்து அடுத்து படிக்கப்போகும் பாடங்கள் பற்றியும் கல்லூரி பற்றிய தேடுதலிலும் இறங்கினான்.
நதியாளுக்கும் முழுஆண்டு தேர்வு வந்தது. அவளை அடுத்த வருடம் பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் சேர்க்கலாம் என கண்ணன் முடிவு செய்தார்.
நதியாளுடன் மீராவும் உடன் அனுப்பப்பட்டாள். தேர்வு முடிந்து விடுமுறையில் பாட்டி ஊருக்கு செல்வது என நதியாள் குஷியாகிப் போனாள்.
“அகன்….. அகன்…..”, நதியாள் அழைத்தபடி வீட்டிற்குள் வந்தாள்.
“வாங்க நதி குட்டி….. இப்ப தான் அத்தைய பாக்க வரமுடிஞ்சதா?”, திலகவதி.
“திலாத்தை…. நான் பாட்டி ஊருக்கு போயிட்டு இன்னிக்கு தான் வந்தேன். ஊருக்கு போறதுக்கு முன்ன வந்தேன்ல”, எனத் திலகாவிடம் பேசியபடி அவரைக் கீழே அமரவைத்து அவர் மடியில் அமர்ந்துக் கொண்டாள் நதியாள்.
“அப்படியா… அம்மாச்சி எப்படி இருக்காங்க? மாமா அத்தை எல்லாம் என்ன பண்றாங்க?”,திலகவதி.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. அகன் எங்க திலாத்தை”, நதியாள்.
“அவன் ஊருக்கு போய் இருக்கான் டா. காலேஜ்ல சேரணும்ல அதான் சுந்தா தாத்தா மாமா அகரன் எல்லாரும் பாக்க போய் இருக்காங்க”, திலகவதி அவளைக் கட்டியபடி கூறினார் .
“நானும் அடுத்த வருஷம் ஹாஸ்டல் போறேன் திலாத்தை”, நதியாள்.
“அப்படியா? ஏன் ஹாஸ்டல் போறீங்க? நம்ம ஊரு ஸ்கூல்ல படிக்கலியா?”, திலகவதி.
“நான் இங்க படிக்க மாட்டேங்கறேனாம் அம்மா திட்டறாங்க. அதான் நானும் மீராவும் ஹாஸ்டல் போறோம். நானும் இனி அடிக்கடி இங்க வரமுடியாது. நீங்க என்னை பாக்க வாங்க “, நதியாள்.
“கண்டிப்பா டி செல்லமே. நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும் சரியா?”,திலகவதி.
“சரி திலாத்தை. அகன் கிட்ட சொல்லுங்க நான் அப்பறம் வரேன்”, என கிளம்பினாள்.
“இரு நதி குட்டி மீன் செஞ்சி இருக்கேன் சாப்டு போலாம். நான் அம்மா கிட்ட வந்து சொல்றேன்”, என நதியாளுக்கு சாப்பாடும் மீனும் எடுத்து வந்து ஊட்டி விட்டார் திலகவதி.
பின் நதியாளை வீட்டில் விட்டுவிட்டு, ராதாவிடம் உரையாடிய பின் தன் இல்லம் திரும்பினார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அகரன் இல்லம் சென்றாள் அவன் மேற்படிபிற்காக வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறவும், சற்று வருத்தமடைந்து பின் படிக்கத்தானே எனத் தேற்றிக் கொண்டாள் முன்னமே அகரன் கூறியதால்.
அதன் பின் காலங்கள் உருண்டோட நதியாளும் அகரனும் சந்திக்கமுடியாதபடி கடந்தது. இருவரும் தத்தமது படிப்பு மற்றும் சூழ்நிலைகளில் மறந்துவிட்டனர் என்றே கூற வேண்டும்.
இப்பொழுது அகரன் படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக ஒரு கம்பெனி ஆரம்பித்து இருக்கிறான். அவன் இருக்கும் அதே ஊரில் ஒரு கல்லூரியில் நதியாளும் இளங்கலை கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் மீண்டும் சந்திப்பார்களா? சந்தித்தால் பழைய நினைவுகள் வருமா? அவர்கள் இடையில் இருந்த ஆழமான அன்பை உணர்ந்து புதுப்பிப்பார்களா?