50 – அகரநதி
ஸ்டெல்லாவின் தந்தை அகரனிடம் கோபமாக பேசிய சமயம் நம் மகளிர் அணி அங்கே சென்றது.
“ஸ்டெல்லா… இது தான் நீ படிக்கற லட்சனமா?”, என ஸ்டெல்லாவின் தாய் அவளை சாடினார்.
“ஆண்டி….”, என நதியாள் பேசும் சமயம் ஸ்டெல்லா தடுத்து தானே பேசினாள்.
“நீங்க ஏன் எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றத சொல்லலம்மா? “, என ஸ்டெல்லா எதிர்கேள்வி கேட்டாள்.
“ஸ்டெல்லா…. எங்களையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா? உன்ன பெத்து வளர்த்த எங்களுக்கு உன்னை யாருக்கு தட்டித் தரணும்னு தெரியாதா?”, ஸ்டெல்லாவின் தந்தை ஆவேசமாக கேட்டார்.
“அது ஏன்ப்பா எல்லாரும் ஒரே மாதிரி கேக்கறீங்க ? நீங்க தான் பெத்து இத்தனை வருஷம் என்னை நல்லா வளத்தீங்க… ஆனா எனக்கும் மனசு இருக்கு. அதுல ஆசை இருக்கும்னு ஏன் உங்களுக்கு தோணாம போச்சு? என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம அடுத்த மாசம் என் கல்யாணத்துக்கு தேதி குறிச்சி இருக்கீங்க… இதை நான் என்ன சொல்றது? அப்படி என்ன அவசரம் இப்ப என் கல்யாணத்துக்கு?”, ஸ்டெல்லா நேர்பார்வை பார்த்து கேட்டாள்.
பெற்றவர்கள் இருவரும் ஒரு நொடி தயங்கி அவளைப் பார்த்தனர்.
“உனக்கு இத யார் சொன்னா?”, என ஸ்டெல்லாவின் தாய் குரல் கமறக் கேட்டார்.
“நீங்க வாக்கு குடுத்த அந்த குடிகாரன் தான் நேத்து நைட் எனக்கு போன் பண்ணி சொன்னான். அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏன் இப்படி என்னை அவனுக்கு கட்டிவைக்க ஏற்பாடு பண்றீங்க?”, ஸ்டெல்லா.
“அவன் நம்ம குலம் … நம்ம மதத்தை சேர்ந்தவன்…. “, என ஸ்டெல்லாவின் தந்தை குரல் நடுங்க கூறினார்.
“இதை நீங்க சொன்னா நான் நம்பனுமாப்பா?”, ஸ்டெல்லா தன் தந்தையை வாள்முனையில் நிறுத்தியதுப் போல பார்த்தாள்.
“அது…. அது தான்… அவன் உன்னை விரும்பறதா சொன்னான்”, ஸ்டெல்லாவின் தந்தை.
“ஓ… அப்படியா….. ஒரு நிமிஷம்”, என ஸ்டெல்லா கீழே சென்று மதுரனை அழைத்து வந்தாள்.
“இவர் பேர் மதுரன். இவரும் தான் என்னை விரும்பறாரு. நானும் விரும்பறேன். அப்ப இவருக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?”, என மதுரனை கொண்டு வந்து நிறுத்தினாள் ஸ்டெல்லா.
“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்… நம்ம வழக்கத்துல இது இல்ல”, என ஸ்டெல்லாவின் தாய் தீவிரமாக மறுத்தார்.
“அங்கிள்…. உங்க சொந்த அக்கா காதல் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதையும் நீங்க தான் முன்ன நின்னு நடத்தி இருக்கீங்க. ஆண்டி…. உங்க தம்பியும் ஒரு முஸ்லீம் பொண்ண காதலிச்சி கல்யாணம் பண்ணி இருக்காரு. முக்கியமா நீங்க இரண்டு பேரும் ஜாதி மதம் பாக்கவே மாட்டீங்க. இப்ப ஏன் இந்த திடீர் கல்யாண ஏற்பாடுன்னு எனக்கு தெரியும். உங்கள இக்கட்டான நிலைல நிக்க வச்சி தான் ஏற்பாடு நடக்குதுன்னும் தெரியும். நாங்க இப்ப உண்மைய உங்க கிட்ட சொல்லிட்டோம். நீங்களும் சொன்னா பிரச்சினைய முடிச்சிட்டே கையோட எங்க கல்யாணத்த நடத்திடலாம்”, என மதுரன் தெளிவாக கூறி அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
ஸ்டெல்லாவின் தாயும், தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ,” எங்கள மிரட்டி தான் இதை செய்யறாங்க தம்பி. அவ காதலிக்கற விஷயமும் அவன் மூலமா தான் எங்களுக்கு தெரிஞ்சது. இதுக்கு நாங்க ஒத்துக்கலன்னா ஸ்டெல்லாவோட மானம் போயிடும்ப்பா… “, என அவளின் தந்தை கூறி கண்ணீர் வடித்தார்.
“என்ன சொல்றீங்க அங்கிள்?”, மதுரன் கோபம் ஏற கேட்டான்.
“போன தடவை ஸ்டெல்லா ஊருக்கு வந்தப்ப அவ துணி எடுக்க அவனோட கடைக்கு போயிக்கா. அங்க அவ துணி மாத்தறத வீடியோ எடுத்து வச்சி மிரட்டி தான் இப்ப கல்யாண ஏற்பாடு நடக்குது. அவன் குடும்பத்துல கல்யாணம் பண்ணா தான் சொத்து தருவோம்னு சொல்லிட்டாங்களாம். அதனால பொண்ணு தேடினா யாரும் குடுக்கலன்னு அவன் வச்ச குறில எங்க பொண்ணு சிக்கிட்டா… “, என ஸ்டெல்லாவின் தாய் கூறிமுடித்து குலுங்கி குலுங்கி அழுதார்.
“ஏம்மா இப்படி? வெறும் உடம்பு பாத்து மானம் போறத விட அவன நான் கட்டினா உயிரோட இருப்பேனான்னு யோசிச்சிங்களா ?”, ஸ்டெல்லா கண்ணீரை அடக்கியபடிக் கூறினாள்.
“ஸ்டெல்…. அவங்க பயந்து போய் இப்படி பண்ணிட்டாங்க. மது…. பிரச்சினை தெரிஞ்சிரிச்சி”, நதியாள் கூறி முடிக்கும் முன் அங்கிருந்து கிளம்பியவன் நேராக அவன் ஆட்கள் பிடித்து வைத்தவன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
அகரன் அவன் பின்னோடே ஓடினான்.
“ஆள பிடிச்சிட்டு தான் இங்க நின்னுட்டு இருந்தியா டா?”, அகரன்.
“ஆமா. ஆனா என்ன பிரச்சினைனு தெரியல அதான் உங்கள பேச வர சொன்னேன். இன்னிக்கு அவன் செத்தான்”, என காரை வேகமாக ஓட்டியவன் பத்தே நிமிடத்தில் ஒரு பேக்டரி குடோனிற்கு வந்து சேர்ந்தான்.
“டேய் மது… நில்லு டா… அவன கொன்னுடாதடா”, என அகரன் அவனை அழைத்தபடி ஓடினான்.
“நீ வெளியவே இரு அகர்”, என அவனை வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்று அவனை அடித்து துவம்சம் செய்தான்.
மதுரனின் இன்னோர் முகத்தை அன்று அகரன் முழுதுமாக கண்டான். காதல் மதுரனை மென்மையாக்கி இருந்தது. இன்று அதே காதல் அவனை மிருகமாக்கி இருந்தது அந்த காதலை காப்பாற்றிக் கொள்வதற்காக….
பீட்டர்…. அவன் தான் அந்த அயோக்கியன்.
“சார்… போதும் விடுங்க… அவன்கிட்ட இருக்கற செல் லேப்டாப் எல்லாத்தையும் பார்மேட் பண்ணிட்டேன். இனி அவன் உங்க வழில வரமாட்டான்”, என அருகில் இருந்தவன் மதுரனை பிடித்து இழுத்தான்.
“அதை உடைச்சி எரிச்சி போடுங்க… இவன் இனிமே இந்த நாட்லயே இருக்க கூடாது …”, என கத்திவிட்டு வெளியே வந்தான் மதுரன்.
“மது….. ரிலாக்ஸ்”, என அகரன் அவனை சமாதானப்படுத்தினான்.
“இல்லடா… அவனை கொன்னா கூட எனக்கு மனசு ஆறாது…. எப்படியெல்லாம் பொண்ணுங்கள டார்கெட் பண்றாங்க… சே…”, என மதுரன் அங்கிருந்த டேபிள் சேர் என அனைத்தும் தூக்கி வீசினான்.
பின்னர் தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
“அகர்… நான் என் அப்பா அம்மாவை கூட்டிட்டு வரேன். இன்னிக்கே இங்கையே கல்யாணம் பேசி முடிக்கலாம். அவங்க பிக்ஸ் பண்ண டேட் முன்னவே எங்க கல்யாணம் நடக்கணும்”, என அகரனை அந்த வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றான்.
“என்னாச்சி அகன்? மது எங்க?”, நதியாள் ஓடிவந்து கேட்டாள்.
“அவன் ஏற்கனவே ஆள பிடிச்சி வச்சிட்டு தான் இங்க வந்து இருக்கான் நதிமா. பிரச்சினை இதுன்னு தெரிஞ்சதும் அவனை அடிச்சி துவச்சிட்டான். கல்யாணம் பேச அவங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வரானாம். வா நாமலும் ஏற்பாட கவனிக்கலாம்”, என உள்ளே அழைத்துச் சென்றான் அகரன்.
“தம்பி என்னாச்சி?”, ஸ்டெல்லாவின் தந்தை ஆவலாக அவன் முகத்தைப் பார்த்தபடிக் கேட்டார்.
“மதுரன் அவங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வர போய் இருக்கான். இப்பவே நிச்சயம் பண்ண வராங்க அங்கிள். நீங்க தயாராகுங்க. மத்த ஏற்பாட்ட நாங்க பாத்துக்கறோம்”, என அகரன் கூறினான்.
“தம்பி… அந்த தம்பி யார் என்னனு எதுவும் தெரியாது.. திடீர்னு கல்யாணம்னு சொன்னா எப்படி?”, என ஸ்டெல்லாவின் தாய் கேட்டார்.
“சென்னைல இருக்கற டாப் டென் பிஸ்னஸ்மேன்ல ஒருத்தர் தான் உங்க மருமகன். மதன் இன்டஸ்டீரீஸ் ஓனர் மதனோட ஒரே மகன் மதுரன்”, எனக் கூறியபடி சரண் அங்கே வந்தான்.
“தம்பி…அவங்க எப்படி எங்க பொண்ண ஏத்துக்குவாங்க?”, ஸ்டெல்லாவின் தந்தை.
“அதுல்லாம் அவங்க எப்பவோ ஏத்துகிட்டாங்க அப்பா. உங்க பொண்ணு தான் அவங்க மருமகள்ன்னு எப்பயோ வாக்கு குடுத்துட்டாங்க. படிப்பு முடிஞ்சதும் உங்க கிட்ட விஷயத்த சொல்லலாம்னு இருந்தோம் அதுக்குள்ள இப்பவே சொல்ற சூழ்நிலை வந்துரிச்சி”, நதியாள் .
“அப்ப ஏற்கனவே எல்லாத்தையும் செஞ்சிட்டு தான் ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தியா ஸ்டெல்லா?”, என அவளின் தாய் அவளின் காதை பிடிக்க, ஸ்டெல்லா அலற ,மீரா அவளின் வாய் மூட, ஸ்டெல்லாவின் தந்தை அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டார்.
“அப்பா…. என்மேல கோவம் இல்லையே”, ஸ்டெல்லா.
“அதுல்லாம் இல்லடா.. உனக்கு எங்க மேல இருந்த கோவம் போயிரிச்சா?”, ஸ்டெல்லாவின் தந்தை.
“வருத்தம் இருக்குப்பா. இதுதான் பிரச்சினைன்னு நீங்க முன்னயே சொல்லி இருக்கலாம். அவனுக்கு பயந்து கல்யாண ஏற்பாடு பண்ணது தான் என்னால ஒத்துக்க முடியல…”, ஸ்டெல்லா.
“அது அவங்க இடத்துல இருந்து யோசிச்சி பாரு ஸ்டெல். அப்பா அம்மா மட்டும் என்ன பண்ணுவாங்க? அவங்களும் மனசுல புளுங்கிட்டு தான் இருந்திருப்பாங்க”, என மீரா கூறினாள்.
“இதுக்கு மட்டும் வந்துடு”, என ஸ்டெல்லா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“என்ன சொல்லுங்க மீரா அளவுக்கு ஸ்டெல்லாக்கு பொறுமையும் இல்ல, யோசனையும் இல்ல”, என அவளின் தாய் கூறினார்.
“அம்மா”, என ஸ்டெல்லா கத்தினாள்.
அகரனும், ரஹீமும், சரணும் ஸ்டெல்லாவின் தந்தைக்கு மதுரனைப் பற்றிய அனைத்து விவரங்களும் கூறி அவரை சமாதானப்படுத்தினர்.
பின்னர் படுவேகமாக மதுரன் ஸ்டெல்லா நிச்சயம் நிகழத் தேவையான பொருட்கள் வாங்கச் செல்லும் சமயம், அகரன் தன் வீட்டில் இருக்கும் பெரியவர்களை இங்கே வரச் சொல்லிவிட்டான்.
ஒரு மணி நேரத்திற்குள் அனைவரும் அவ்வீட்டில் நிறைந்து இருந்தனர்.
“என்னப்பா ஒரு கல்யாணத்துக்கு வந்தா அடுத்த கல்யாணம் முடிவாகி இருக்கு… இப்படி இருந்தா நாங்க எப்ப தான் ஊருக்கு போறது?”, என அகரனின் சொந்தக்காரர் ஒருவர் சுந்தரம் தாத்தாவிடம் கேட்டார்.
“இது வழக்கம் தானே கருப்பு. இன்னிக்கு மதியம் உங்கள நான் வண்டி ஏத்தி விட்டுடறேன் கவலைப்படாத… “, என சுந்தரம் தாத்தா கூறிவிட்டு வேலைகளை கவனிக்கச் சென்றார்.
அவரின் மனதுக்கு பிடித்தமான இருவரின் நிச்சயம் அவரையும் குஷிப்படுத்தியது.
“எலேய் டல்லு… இந்தா இந்த புடவைய கட்டிட்டு இத போட்டுக்க… மீரா… யாள்…. மாப்ள வீட்டுக்காரங்க வந்தப்பறம் கூப்பிடுவோம் அப்ப வந்தா போதும்”, என மீனாட்சி பாட்டியும், சரோஜா பாட்டியும் அவர்களை மேல் இருந்த அறையில் இருக்க சொல்லிவிட்டு வந்தனர்.
தாமிராவையும் நதியாள் போனில் அழைந்திருக்க அவளும் தன் பையுடன் கிளம்பி வந்தாள்.
தாமிராவைக் கண்ட செல்லம்மாவும் ராதாவும் ,” வா கண்ணு…. எல்லாரும் மேல ரூம்ல இருக்காங்க… போய் ரெடி ஆகு”, என அனுப்பி வைத்தனர்.
“ஏன்க்கா… இந்த பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கு. . இதையே நம்ம சரணுக்கு கட்டி வச்சா என்ன?”, என ராதா கேட்க செல்லம்மாள் காலையில் நடந்ததை சொல்லி முடித்தார்.
“மாமா ஏன் அவசரப்பட்டு வாக்கு குடுத்தாங்க? சரணுக்கும் இந்த புள்ளைய புடிச்சி இருக்குக்கா. நீ பேசி மாமாவ சமாதானம் பண்ணி இவங்க கல்யாணத்த நடத்தற வழிய பாரு”, என ராதா கூறினார்.
“அட ஏன் ராதா….. அந்த மனுசன்கிட்ட யார் பேசறது? நதியாளும் அகரனும் தான் பேசணும். வா பாத்துக்கலாம் “, என பேசியபடி அடுத்த வேலையை கவனிக்கச் சென்றனர் இருவரும் .
“எலேய்… யாருப்பா அங்க? மாப்ளவீட்டு காரங்களுக்கு குடிக்க ஏற்பாடு பண்ணிட்டீங்களா?”, எனக் கேட்டபடி கண்ணன் அங்கே வந்தார்.
பரமசிவம், சிதம்பரம், சுந்தரம் தாத்தா, மாந்தோப்பு தாத்தா நால்வரும் ஸ்டெல்லாவின் தாய் தந்தையிடம் உரையாடிக் கொண்டு இருந்தனர்.
“இப்ப எந்த முறைல விஷேசத்த நடத்தறது? நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி பண்ணிக்கலாம்… பையன் இரண்டு முறைக்கும் சம்மதம் சொல்லிட்டானாம். உங்க வழக்கப்படி நிச்சயம் எப்படி செய்வீங்க?”, என சிதம்பரம் அவர்களிடம் கேட்டார்.
“எங்களுக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியலீங்க. எங்க சொந்தகாரங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்காங்க. அவங்க வந்தப்பறம் தான் கல்யாணம் வைக்கணும். சர்ச்ல வச்சி தான் கல்யாணம் நடக்கும். நிச்சயம் வீட்டோட முடிச்சிடுவோம். எங்களுக்கும் எல்லா முறையும் சம்மதம் தான். இப்ப நீங்க மாப்ளவீட்டு முறைப்படியே எல்லாத்தையும் செஞ்சிடுங்க ஐயா”, என ஸ்டெல்லாவின் தந்தை கூறினார்.
“சரி…. மாப்ள வீட்லயும் கேட்டுக்கலாம். நீங்க வெரசா தயாராகுங்க. கொஞ்ச நேரத்துல விஷேசம் ஆரம்பிச்சிறும்”, என சுந்தரம் தாத்தா கூறி மற்றவர்களை வேலையை துரிதப்படுத்தச் சென்றார்.
ஸ்டெல்லாவின் தாயும் தந்தையும் ஒருவித சந்தோஷத்துடன் கலக்கமும் கொண்டபடி தயாராகினர்.
மதுரன் தன் தாய் தந்தை மற்றும் சில நெருங்கிய உறவினர்களுடன் வந்திறங்கினான்.
தன் காதல் கைக்கூடி கல்யாணத்தில் நிற்பதில் முகத்தில் பொலிவு கூடியிருந்தது.
அனைவரும் மாப்பிள்ளை வீட்டினரை முறையாக வரவேற்று உபசரித்தனர்.
அவர்கள் அருந்த குளிர்ந்த நீரும், பழரசமும் வழங்கப்பட்டது.
“நான் மதன். மதுரனோட அப்பா. இவங்க என் மனைவி சுமித்ரா”, என தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
“நான் ஜோசப். இவங்க என் மனைவி மேரி. திடீர்ன்னு எல்லாம் நடக்கவும் எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல. உங்க வசதிக்கு நாங்க பெருசா எதுவும் செய்ய முடியாது ஆனா என் பொண்ணு ஆசைபட்ட சில விஷயங்களையும், பொருளையும் குடுக்கவிரும்பறோம்”, என ஸ்டெல்லாவின் தந்தை கூறினார்.
“எல்லாமே நம்ம புள்ளைங்களுக்கு தானே சம்பந்தி. ஏன் அதுலாம் இப்ப பேசிட்டு ? எங்க மருமகள கூப்பிடுங்க வந்து அரைமணி நேரம் ஆகுது இன்னும் பொண்ண கண்ல காட்டாம இருக்கீங்க. பாவம் எங்க பையன் பாருங்க எல்லா பக்கமும் சுத்தி சுத்தி பாத்துட்டு இருக்கான்”, என மதன் சிரிப்புடன் மதுரனை வாரினார்.
“டேட்…. “, என மதுரன் கூற, ஜோசப் முதல் மற்ற அனைவரும் சிரித்தனர்.
“சரி சரி பொண்ண கூட்டிட்டு வாங்கம்மா…. ஐயா கல்யாணம் எந்த முறைப்படி செய்யப்போறீங்க மத்த இத்யாதி எல்லாம் பேசிக்கோங்க. நாங்க வெளியூர்காரங்க எங்களுக்கு உங்க முறைலாம் தெரியாது எங்களுக்கு தெரிஞ்ச வகைல எல்லாத்தையும் இப்ப தயார் பண்ணி வச்சிருக்கோம்”, சுந்தரம் தாத்தா.
“எங்களுக்கு இரண்டு முறையும் சம்மதம் ஐயா. இரண்டு முறைப்படியும் கல்யாணம் வச்சிக்கலாம். உங்களுக்கு சம்மதமா சம்பந்தி?”, என மதன் கேட்டார்.
ஜோசப் மேனியை பார்த்துவிட்டு தன் சம்மதத்தைக் கூறினார். பின்னர் இப்போது நிச்சயம் முடித்து இன்னும் இருபது நாட்களில் வரும் முகூர்தத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது.
மண்டபத்தில் ஹிந்து முறைப்படி தாலி கட்டியும், அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் ஊர் சர்ச்சில் கிறுஸ்த்துவ முறையிலும் திருமணம் செய்ய ஒருமனதாக இருவீட்டாரும் முடிவெடுத்தனர்.
ஸ்டெல்லா தழைய காஞ்சி பட்டு உடுத்தி தலை நிறைய பூ வைத்து, நெற்றியில் பொட்டும் வைத்து , நகைகளின் ஒளியை விட அவளின் முகத்தில் வெளியான தேஜஸ் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.
சந்தன குங்குமம் இட்டு மாப்பிள்ளை பெண்ணிற்கு மோதிரம் கொடுத்து மாற்றிக் கொள்ளக் கூறினர்.
“அதான் இப்பவே மோதிரம் மாத்திகிட்டாங்களே, இன்னொரு தடவை சர்ச்சல எந்த விரல்ல மோதிரம் போட்டுக்குவாங்க… கணக்குபடி இப்பவே கல்யாணம் முடிஞ்சிடிச்சுல்ல தாத்தா”, என திலீப் தன் சந்தேகத்தை மாந்தோப்பு தாத்தாவிடம் கேட்டான்.
“வாய மூடு டா”, என சஞ்சய் அதட்டினான்.
“உண்மை தான். எங்க முறைப்படி கல்யாணம் முடிஞ்சது”, என மேரி கூறி கண்கலங்கினார்.
“மேரி….”, என ஜோசப் ஆறுதல் படுத்தினார்.
ஸ்டெல்லாவும் மதுரனும் அவ்வுலகத்திலேயே இல்லை எனலாம். மோதிரம் போடும் பொழுது கைப்பிடித்தவர்கள் இன்னும் கையை இறுகப் பற்றி இருந்தனர்.
அவர்கள் வாழ்வு முழுதும் இதே போல் அன்பும் காதலும் நிறைந்து இருக்க நாம் இறைவனை பிராத்திக்கலாம்…
அகரனும் நதியும் ஒருபுறம் நின்று தங்களை மறந்து ஒருவர் மற்றவரை பார்த்தபடி இருந்தனர். அவர்களுக்கு அவர்களின் நிச்சய தினம் நியாபகம் வந்திருக்குமோ?
ஒரு பக்கம் சரணும் தாமிராவும் கண்டும் காணாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தனர்.
இதையெல்லாம் கண்ட திலீப் ,” மச்சி நமக்கு எப்படா ஆளுங்க கிடைப்பாங்க? எல்லாரும் அவங்கவங்க ஜோடியோட இருக்காங்க டா. நாம மட்டும் சோலோவா நிக்கறோம். ஒரே பீலிங்கா இருக்கு மச்சி”, என சஞ்சயின் தோளில் சாய்ந்து கண்ணீர் துடைப்பதைப் போல பாவனை செய்தான்.
“நீ முதல்ல டிகிரி வாங்கற வழிய பாருடா… வா அங்க பரமசிவம் அங்கிள் கூப்பிடறாரு”,என சஞ்சம் அழைத்தான்.
“அச்சோ…. அவர கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுடா. விடாம நம்மலயே வேலை வாங்கி டயர்ட் ஆக்கறாரு மனுசன். ஆனாலும் சரண் சார் பாவம்டா எப்படித்தான் இத்தனை வருஷம் இந்த மனுசன் கூட காலத்த ஓட்டுனாரோ தெர்ல”, என புலம்பியபடி திலீப் சஞ்சயை பின் தொடர்ந்தான்.
அகரனுக்கு சற்று நேரத்தில் அழைப்பு வர எடுத்து பேசியவன் முகம் செவ்வானமாய் சிவந்தது……