8 – அர்ஜுன நந்தன்
சேரலாதனைக் காணச் சந்தனபாண்டியனும், சந்திரகேசவனும் அவனுடைய மரக்குடோனிற்குச் சென்றனர்.
அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்த செந்திலும் பரத்தும், மரக்குடோனில் அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ஒளிந்து நின்றனர்.
செந்தில் அந்த இடத்தைப் பரிதிக்கு அனுப்பிய பின் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.
அது மாலை நேரம் என்பதாலும் ஆட்கள் யாரும் அதிகம் இல்லாது இருந்தது அவர்கள் இருவரும் மறைந்துக் கொள்ள தோதாய் ஆனது.
“வா பாண்டியா , வா சந்திரா”, சேரலாதன்.
“வணக்கம் சேரா… “,சந்திரகேசவன்.
சந்தனபாண்டியனும் தன் வணக்கத்தை தெரிவித்தப் பின் அங்கிருந்தச் சேரில் அமர்ந்தான்.
“வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு பாண்டியா?”, சேரலாதன்.
“அது ஒன்னும் பிரச்சினை இல்லைங்க சார். நம்ம கோவில் விஷயம் தான் கொஞ்சம் பிரச்சனை ஆகும் போல…”, சந்தனபாண்டியன்.
“கேள்விபட்டேன் . நீ வச்ச குறி தப்பிடிச்சின்னும் தெரியும். அவள இப்ப ஒன்னும் பண்ண வேணாம். அவ என்ன பண்றானு கவனிக்கச் சொல்லி இருக்கேன். அந்த டிஐஜி தான் இவகூட சுத்திட்டு இருக்கான். அத பொறுமையா தான் டீல் பண்ணனும்”, சேரலாதன்.
“நல்லா சொல்லு சேரா… நானும் அத தான் சொல்லிட்டு இருக்கேன் இவன் ஆள தூக்கறதுலயே குறியா இருக்கான்”, சந்திரகேசவன்.
“சரி அத விடுங்க. மேல் இடத்துல இருந்து தகவலும் மூட்டையும் வந்து இருக்கு”, சேரலாதன்.
“என்ன சொன்னாங்க?”, சந்திரகேசவன்.
“சுரங்கபாதை என்னாச்சுனு தான் கேட்டாங்க. அந்த கோவிலோட கருவறைகுள்ள போக முடியுமானு கேட்டாங்க,”சேரலாதன்.
“அது கஷ்டம் முடியாதுனு அந்த ஆராய்ச்சிகாரன் சொல்லிட்டான்ல. அந்த ஒரு வழி தான் சரி பண்ணி இருக்கு”, சந்தனபாண்டியன்.
“அந்த ஆராய்ச்சிகாரன் நம்ம கிட்ட நிறைய விஷயத்த மறைச்சிட்டான்னு சொல்றாங்க. அவனோட அசிஸ்டண்ட்அ பிடிக்கச் சொல்லி இருக்காங்க. நானும் ஆள அனுப்பி இருக்கேன். இன்னும் 2 மாசத்துல போக்குவரத்து அந்த சுரங்கப் பாதைல ஆரம்பிக்கணும்”, சேரலாதன்.
“இப்ப அந்த கலெக்டரும் ,டிஐஜியும் கண்கொத்தி பாம்பாட்டம் காத்திருக்காங்க சார். அந்த கோவில்ல ஜன சஞ்சாரமும் அதிகம். இராத்திரில கூட கூட்டம் குறையாது. போக்குவரத்து ஆரம்பிக்கறது கஷ்டம்”, சந்தனபாண்டியன்.
“அப்படி என்னத்த அதுல கொண்டு போயிட்டு வருவாங்க சேரா? என்கிட்ட பொக்கிஷம் இருக்குன்னு தானே சொன்ன?!”,சந்திரகேசவன்.
“பொக்கிஷமும் இருக்கு சந்திரா. அத தொறக்க தான் வழி தெரியல. சோழன் காலத்து நகைங்க காசுன்னு எல்லாமே அதுல இருக்கு. அந்த சுரங்கப்பாதை கடற்கரைல முடியுதுல அவங்க கப்பல்ல சரக்கு கொண்டுப் போக வேணும்னு தான் சரி பண்ணச் சொன்னாங்க. என்ன வெவரம்னு முழுசாத் தெரியல”,சேரலாதன்.
“என்னமோ நமக்கு கிடைக்க வேண்டியது சரியா கிடைச்சா சரி. பாண்டியனுக்கு குடுக்கறத குடுத்தா அவன் அடுத்த வேலைய பாப்பான்”, சந்திரகேசவன்.
“அதுக்கு தான் வர சொன்னேன். பாண்டியா அந்த பாதை முடியற இடம் வேளாங்கண்ணி பக்கம் இருக்கற மீனவ குப்பத்துல முடியுது. அந்த இடத்த காலி பண்ண வைக்கனும். இந்தா இதுல 50கோடி இருக்கு. விஷயம் வெளியே தெரியாம காலி பண்ண வைக்கனும். யாருக்கு எவ்வளவு வேணா குடு ஆனா இடம் நம்ம பேர்ல கெரயம் பண்ணிடனும் பாத்துக்க”, சேரலாதன்.
“இத வச்சி ஆபீஸர்களுக்கு தான் சரிகட்ட முடியும். அந்த ஏரியா கருப்பையாவோட கோட்டை. யாரும் நெருங்கறது கஷ்டம் தான். நான் கவனிக்கறேன்”, சந்தனபாண்டியன்.
“இன்னும் எவ்வளவு கேட்டாலும் குடுக்கத் தயாரா இருக்காங்க மேலெடத்துல. காரியம் ஆகணும் அவ்வளவு தான்”, சேரலாதன்.
“நமக்கு சேர வேண்டிய பங்கு சேரா?”, சந்திரகேசவன்.
“இந்த மூட்டைல 70 கோடி இருக்கு. போக்குவரத்து ஆரம்பிச்சதும் மத்தது வரும்”, சேரலாதன்.
“அந்த கலெக்டர இப்ப எதுவும் பண்ண வேணாமா?”, சந்தனபாண்டியன்.
“இப்ப வேணாம். நான் பாத்துக்கறேன். எதுக்கும் இத அவங்ககிட்டயும் சொல்லி வைக்கறேன்”, சேரலாதன்.
“இத சொன்னா ஒரு கலெக்டர கூட நம்மனால சமாளிக்க முடியலனு நினைப்பாங்க சேரா. பாண்டியனும் ஒரு பக்கம் நோட்டம் விடட்டும். சமயம் கிடைக்கறப்ப போட்டு தள்ளிடலாம்”, சந்திரகேசவன்.
“அதுவும் சரிதான். எதாவது விஷயம்னா போன் பண்ணுங்க,” சேரலாதன்.
“சரி நாங்க கிளம்பறோம்”, சந்தனபாண்டியனும் சந்திரகேசவனும் கிளம்பினர்.
செந்தில் ,பரத்தை அவர்களை பின்தொடர அனுப்பிவிட்டு அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தான்.
சேரலாதன் அவனுடைய பி.ஏ வை கூப்பிட்டு அடுத்து செய்ய வேண்டிய பணிகளை கூறித் துரிதப்படுத்தச் சொன்னான்.
பின் அவன் வீட்டிற்கு புறப்பட்டான். அவனை செந்திலும் பின்தொடர்ந்து சென்றான்.
ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பங்களா வீட்டிற்குள் சேரலாதன் கார் சென்றது.
செந்தில் அந்த வீட்டைப் புகைபடம் எடுத்துக்கொண்டு, அந்த ஏரியா லோகேசனைப் பரிதிக்கு அனுப்பினான்.
பின் தனக்கென டிஐஜி குடுத்த வீட்டிற்குச் சென்றான்.
வீட்டிற்கு வந்த பின் பரத்திற்கு போன் செய்து தன் வீட்டிற்கு வரச் சொன்னான்.
செந்தில் தனது பேக்கை ஏற்கனவே டிஐஜியிடம் கொடுத்துச் சென்றதால் அதுவும் அந்த வீட்டின் படுக்கை அறையில் இருந்தது. அவன் கேட்ட துப்பாக்கி தோட்டாக்களும் தேவையான அளவு இருந்தது.
அதை கண்டதும் செந்தில் டிஐஜிக்கு போன் செய்தான்.
“ஹாய் அங்கிள் சாப்பிட்டீங்களா? ஆன்ட்டி என்ன செஞ்சி இருக்காங்க?”, செந்தில்.
“இப்ப தான் வீட்டுக்குள்ள போறேன். நீ வீட்டுக்கு போய்டியா? நீ கேட்டது எல்லாம் வச்சிருக்கு ஓகே தானே?”, டிஐஜி.
“நீங்க செம சார்ப் அங்கிள். நானும் அதபத்தி சொல்லத் தான் போன் பண்ணேன். இதுலாம் எங்க அங்கிள் பிடிச்சிங்க? எல்லாமே லேட்டஸ்ட் மாடல்”,செந்தில்.
“போன மாசம் ஒருத்தன மதுரைல பிடிச்சாங்க. அவன் வச்சி இருந்ததுல கொஞ்சம் தனியா வச்சி இருந்தேன். அது தான் இதுலாம். ஆனா அவனும் பாய்சன் சாப்பிட்டு செத்துட்டான் ஜெயில்லயே”, டிஐஜி.
பின் ஒருசில வார்த்தைகளைப் பேசிவிட்டு போனை வைத்தார் டிஐஜி.
பரிதி தன் அறையில் வெளியேச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ஆணைப் போல் உடையணிந்து தலைத் தெரியாத வண்ணம் துணியால் மறைத்தாள்.
நள்ளிரவு சமயம் தன் அறையின் பின் ஜன்னல் வழியாக வெளியே வந்து பைப் மூலமாக சத்தம் செய்யாமல் கீழே இறங்கினாள். வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீதேறி குதித்து சிறிது தூரம் இருட்டில் பதுங்கி பதுங்கிச் சென்று ஒரு குடிசைக்கு அருகில் இருந்தப் பைக்கில் செந்தில் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்றாள்.
செந்தில் வீட்டிற்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் பைப் வழியாக மேலே ஏறி பால்கனியில் குதித்தாள். பின் அங்கிருந்த ஜன்னலை கழற்றி உள்ளே போனதும், அது முன்பு இருந்த இடத்தில் வைத்துவிட்டு கீழேச் சென்றாள்.
பரத்தும் செந்திலும் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
“அந்த பணத்த எப்ப பட்டுவாடா பண்ணுவாங்கனு தெரியல சார். சந்திரகேசவன் அவர் வீட்டுக்கு கொண்டு போயிட்டார். சந்தனபாண்டியன் குவாரில வச்சிட்டு போயிட்டார்”, பரத்.
“அவங்க பண்றத பாத்த நமக்கு எல்லா பக்கமும் சந்தேகம் மட்டும் தான் வருது. அந்த சுரங்கப்பாதை வழியா என்னத்த கொண்டு போக போறாங்க? ஒரு மீனவ குப்பத்த 2 மாசத்துக்குள்ள காலி பண்ண வைக்க முடியுமா?”, செந்தில்.
“அப்ப கண்டிப்ப வெளிநாட்டு சவகாசம் தான் செந்தில். சரக்கு என்னனு தெரியல அவ்வளவு தானே?”, கூறிக்கொண்டே அவர்களின் அருகில் இருந்தச் சேரில் அமர்ந்தாள் பரிதி.
“ஏன் லேட் பரிதி?”,செந்தில்.
“எப்படி மேம் வந்தீங்க? வண்டி சத்தம் கூட கேக்கல ?”, பரத்.
“மேல ஜன்னல கழட்டி வந்தியா?”, செந்தில்.
“ஆமா. என் பின்னாடியே ரெண்டு பேரு எப்பவும் சுத்திட்டு இருக்கானுங்க . வீட்ல நான் தூங்கறேன்னு நம்ப வைக்கணும்ல. பைக்ல வந்தேன்”, பரிதி.
“இப்படி வெளிய வராதனு சொன்னா நீ கேக்கவா போற?”,செந்தில்.
“அதயேன் சொல்லிட்டு இருக்கீங்க செந்தில் விடுங்க. வேலைய பாப்போம்”,பரிதி.