வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சி இப்ப நம்ம மறுபடியும் எழுத்தாளர்கள் கூட பயணங்கள் போக போறோம்.
இவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச பேர் வச்சி இருக்கறவாங்க .. என்னமோ அந்த பேரோ , அவங்க எழுத்து நடையோ, இல்ல ரெண்டுமோ என்னை ரொம்ப கவர்ந்தது. கொற்கை அம்மன இவங்க எழுத்து மூலம் உயிர்ப்புடன் பாத்தேன். யாருன்னு தெரியுதா ? வாங்க உள்ள போய் பாக்கலாம்..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – தமிழ் வெண்பா
2. இயற்பெயர் – வினிதா
3. படிப்பு – இளங்கலை., வேளாண்மை
4. தொழில் – இல்லத்தரசி
5. பிடித்த வழக்கங்கள் –
அமானுஷ்யம், வரலாற்று புதினங்கள் படிப்பது மிகவும் பிடித்த பழக்கங்களுள் ஒன்று. பாடல் கேட்பது, கொரியன் சீரிஸ், வெப் சீரிஸ், படங்கள் பார்ப்பது, சமைப்பதும் ஏனைய பிடித்த வழக்கங்கள்.
6. கனவு –
கனவென்று பெரிதாக எதுவுமில்லை. பிடித்ததை செய்துக் கொண்டு இறுதிவரை மன நிம்மதியுடன் இருந்தாலே போதுமானது.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
எழுத்தின் மீதான தாக்கம் என் சிறுவயதிலிருந்தே ஏற்பட்டு விட்டது எனலாம். முதன் முதலில் தமிழ் மீதான தாக்கத்தை ஆர்வத்தை ஏற்படுத்தியது பள்ளி பாடப் புத்தகங்கள் தான். அதிலிருந்தே படிக்கும் ஆர்வம் தொடங்கிவிட்டது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, ரமணிசந்திரன், சுபா, சாண்டில்யன், சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, கஞ்சனா ஜெயதிலகர், ராணி தென்றல், ரியாமூர்த்தி, சரண்யா ஹேமா, என எழுத்தாளர் பட்டியல் மிகப் பெரியது. முன்பெல்லாம் பொழுது போக்குகாகவும், விருப்பத்திற்காகவும் படிக்க ஆரம்பித்து, இன்று கதை நகர்த்தும் விதம், சொல்லாடல், காட்சி அமைப்பு, கையாளும் விதம் என நித்தம் நித்தம் வாசிப்பில் இருந்து கற்றுக் கொள்கிறேன்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
தமிழ் மீது கொண்ட ஆர்வம் + தனிமை.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
சரியாக நினைவில்லை. பள்ளி காலங்களிலேயே கவிதைகள் எழுத தொடங்கி விட்டேன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தான் ஒரு தொடர்கதை எழுத தொடங்கினேன். பல காரணங்களால் அந்த கதையை தொடர முடியவில்லை. அந்த கதையின் நாயகியின் பெயர் வெண்பா. அந்த பெயரையே என் புனைப்பெயராக வைத்துக் கொண்டேன். முறையாக இணையத்தில் கதை எழுத தொடங்கியது பிரதிலிபி செயலியில் 2018 ஆம் ஆண்டு இறுதியில்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
உணர்ந்தது உண்டு.
12. எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
முயற்சித்தால் ஒரளவு சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது… ஆனால் முழுவதுமாக ஒருவரின் மனநிலையை கையாளுவது சமூகமே.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
எனக்கு மின்னூல்களை விட பதிப்பு புத்தகங்களே அதிக விருப்பம். கைகளால் தொட்டு, அதன் வாசத்தை நுகர்ந்து என இருக்கும் போது உணர்வோடு ஒன்றிப் போனதுப் போல் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு மின்னூல்களே ஏற்றது. கைக்குள் லட்ச கணக்கான புத்தகங்களை அடக்கி விடும் போது அது சிறந்தது தானே.
14. நீங்கள் பதிபித்த பதிப்புபுத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
கானல் நீரோ காதல் பிழையோ..!
இதுவரை இந்த புத்தகம் மட்டுமே பதிபிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ பதிப்பகத்தாரை தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம் – (+91 7038304765)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
படிக்க விரும்பாத / நேரமில்லாத ரசிகர்களுக்கான வரம்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
எழுத்தாளரின் மனநிறைவில் தான். எழுத்தின் மூலம் எதை சொல்ல நினைத்தோமோ அதை சொல்லி விட்டோம் என்ற மனநிறைவு தான் முதல் வெற்றி. அடுத்து மற்றவை எவ்லாம் வாசகர்களின் நிறைவைப் பொறுத்தது.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா?
அப்படி இதுவரை நினைத்ததில்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எனது முதல் தொடர்கதை. தென்றலே திரும்பி விடு. நான் எதிர்பாராத அளவிற்கு வாசகர்கள் அந்த கதைக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக் கருவை பொறுத்து அதற்கான மெனக்கெடுதல் இருக்கும். பெரும்பாலும் என்னை சுற்றி இருப்பவர்களின் அப்கிரேட் வெர்ஷன் தான் என் கதாபாத்திரங்கள். சில முழுக்க முழுக்க கற்பனையாகவும் இருக்கும்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
முதன் முதலில் கல்லூரி முதலாம் ஆண்டு என் கவிதைக்கு முதல் பரிசு கிட்டியது. எழுத்திற்கென்று அதுவே நான் பெற்ற முதல் பரிசு.
மூங்கிலிலை காடுகள் கதை சிவரஞ்சினி சிஸ் தளத்தில் குறுநாவல் போட்டிக்கான ஆறுதல் பரிசினை வென்றது.
கானல் நீரோ..! காதல் பிழையோ..! கதை சங்கமம் 2020 ல் முதல் பரிசு வென்றது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
அவர்கள் கருத்து சரியென்றால் என்னை சரிசெய்ய முயல்வேன். தவறென்றால் என் பக்கத்தை விளக்க முயல்வேன். சில தேவையற்ற கருத்துகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே கடந்து விடுவேன்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
கவிதை, தொடர்கதை. இரண்டின் மீதுமான அதிக விருப்பமாய் இருக்கலாம்.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
நல்ல கருத்துகள் நிச்சயம் வாசகர்களை சென்றடையும். என்ன அதற்கு கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
உண்டு.
1. சிறகை விரிக்கிறது சிறை பறவை – திருநம்பிகள் பற்றிய சிறுகதை.
2. மெழுகு பாவைகள் – திருமணமான ஒரு பெண்ணின் உரிமை போராட்டம், உணர்வு குவியலென கதை நகரும். குறுநாவல்.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
எல்லாமே தான். ஆகச் சிறந்த எழுத்தென்று தனியாக எதுவுமில்லை. இங்கே நிறைய கொட்டிக் கிடக்கிறது. கிடைக்கும் துண்டு காகிதத்தை கூட படித்துவிடும் மனநிலை என்னுடையது. அதனால் வாய்ப்பு கிடைக்கும் அத்தனையும் படியுங்கள் என்பதே என் கருத்து.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
கற்பனைக்கு அளவீடு வைக்க முடியாதல்லவா. தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கலாம்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
இங்கே வாசகர்களோட பாராட்டு தான் எழுத்தாளர்களோட முதல் பயனே. அது கிடைத்தாலே எழுத்தாளர்களுக்கு போதுமான ஊக்கம் கிடைத்துவிடும். முடிந்த அளவு வாசகர்கள் மனதார நிறைகளோடு குறைகளையும் எடுத்துக் கூறினாலே போதுமானது. ஒரு வார்த்தையில் கருத்திடுவதை தவிர்க்கலாம்.
அதை தவிர்த்து வருமானம் ஈட்டுவது குறித்து பெரிதாய் எனக்கு தெரியவில்லை.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
தனிதன்மைன்னு எதுவும் இருக்கானு தெரியல… இருந்தா அதை நான் சொல்லறத விட என் வாசகர்கள் சொல்றது தான் சரியாக இருக்கும்.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
இதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி –
https://tamil.pratilipi.com/user/lhvyhus8zs?utm_source=android&utm_campaign=myprofile_share
அமேசான் –
இதோ நம்ம தமிழ் வெண்பா அவர்களோட அருமையான நேர்காணல். உணர்வுகளை கடத்தும் எழுத்து எல்லாருக்கும் வசமாகறது இல்லை ஆனா இவங்களுக்கு அது இருக்கு.
இவங்க எழுத்துல அழுத்தம், காதல், அமானுஷ்யம், திகில்ன்னு எல்லாமே அற்புதமா வெளிவரும். மிகவும் தேர்ந்த எழுத்தாளர் போல தான் இவங்க முதல் கதை இருந்தது. அது முதல் கதைன்னு சொன்னா நம்பறது கொஞ்சம் கஷ்டம் தான்.
எந்தன் உள்ளம் எங்கும் உந்தன் பிம்பம் கதைக்கு கொஞ்சம் இடைவெளி அதிகமா வந்தது கதை போக்குல கொஞ்சம் தொய்வு கொடுத்தது. அதுல கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்ட உணர்வு எனக்கு படிக்கறப்போ வந்தது. ஆனா அவங்க கதை முழுக்க நகைச்சுவை கலந்த மர்மமான கதையம்சம் ரொம்பவே நல்லா இருந்தது.
இவங்க கதைகள்ல நான் கவனிச்ச இன்னொரு முக்கியமான விஷயம் எழுத்து பிழை இல்லாம எழுதறது. எல்லா விமர்சகர்கள் மற்றும் வாசகர்கள் சொல்ற விஷயம் இவங்ககிட்ட இருக்கு. கண்ணியமான காதல் காட்சிகள், லேசான கற்பனை கலந்த இயல்பு எல்லாம் இவங்களோட முக்கியமான பலம்-ன்னு சொல்லலாம்.
இவங்க எழுத்து நிச்சயம் பெரிய இடத்தை பிடிக்கும் அதுல எந்த சந்தேகமும் இல்லை. உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் சகி. உணர்வுகளை கடத்தும் உங்க எழுத்த எப்பவும் விட்றாதீங்க..
நம்ம வெண்பா சகியோட இந்த பயணம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன். மீண்டும் உங்கள இன்னொரு அருமையான lazy எழுத்தாளரோட உங்கள திரும்பவும் சந்திக்கறேன்.