வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த எழுத்தாளர் ரொம்பவே இனிப்பானவங்க.. இவங்க கதைகள்ல காதல் வழிந்து நம்மளையும் இழுத்துட்டு போகும்.. இவங்க கதை மட்டும் இல்ல ஆளும் ரொம்ப ஸ்வீட்..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப் பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – தேன் நிலா
2. இயற்பெயர் – தேன் நிலா
3. படிப்பு – spm
4. தொழில் – செப், எழுத்தாளினி
5. பிடித்த வழக்கங்கள் –
கதை படிப்பது, பிடித்தவர்களோடு நேரம் செலவிடுவது.
6. கனவு –
என் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, என்னவனுக்கு நல்ல மனைவியாக, என் குழந்தைகளுக்கு அன்பான தாயாக இருக்க விரும்புகிறேன்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
எப்பொழுதுமே எனக்கு எழுத்துக்களின் மீது ஒரு போதை உண்டு. அது ஒரு தெளியாத போதை.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
சிறு வயதிலிருந்தே நிறைய கதை புத்தகங்கள் வாசிப்பேன். புத்தகத்தின் மேல் இருந்த மோகம் தான் என் வாசிப்பு அனுபவத்தின் முதற்படி.
9. உங்களை எழுத தூண்டியது எது?
உயிரான உறவு என்று நான் நம்பி இருந்த ஒன்று எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தது. அந்த ஏமாற்றத்தின் வேதனையில் இருந்து வெளிவர, நான் தேர்ந்தெடுத்த வழி தான் எழுதுவது. என்னை எழுத தூண்டியது ஒரு ஏமாற்றம் தான்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2018ல் இருந்து
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிறைய வாசகர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். என் கதைகளைப் படித்தால் கண்டிப்பாக அழுகை வரும் என்று. ஆனால் நான் அழுதுகொண்டே எழுத மாட்டேன். ஒரு வேகத்தில் எழுதி முடித்து விடுவேன். ஆனால் அந்த கதை வாசகர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது எனக்கே தெரியாத விஷயம்.
12. எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
கண்டிப்பாக முடியும். இஞ்சி இடையழகி என்ற கதையை படித்துவிட்டு வாசகி ஒருவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரும் அந்தக் கதையில் வரும் நாயகி போல பருமனாக இருப்பவர்,மேலும் அன்பு செலுத்தும் கணவனின் அன்பை புரிந்து கொள்ளாமல் கணவனை காயப்படுத்தி வந்துள்ளார், அவரின் தாழ்வு மனப்பான்மையால். இஞ்சி இடையழகி கதையை வாசித்து விட்டு, நானும் அந்த நாயகி போல் தான் இருக்கிறேன் என் கணவனின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவரை மிகவும் காயப்படுத்தி விட்டேன். இப்பொழுது நான் என் கணவனின் அன்பை புரிந்து கொண்டேன் உங்கள் கதை மூலம் எனக்கு ஞானோதயம் வந்து விட்டது. இம்மாதிரி ஒரு கதையை எழுதி அதற்கு உங்களுக்கு நன்றி என்று அந்த குறுஞ்செய்தியில் அவர் கூறியிருந்தார்.
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
நான் எழுத வந்ததே ஆன்லைன் எழுத்துலகில் தான்.. ஒரு புத்தகத்தை கடைக்கு சென்று பணம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, மின்நூல்கள் இந்த காலத்தில் நமக்கு மிகுந்த பாதுகாப்பானவை. சிலருக்கு பதிப்பு புத்தகம் படித்தால் தான் ஒரு கதையை வாசித்தது போல இருக்கும். எனக்குமே ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் அடுக்கி வைத்து அதில் குடித்தனம் நடத்த வேண்டுமென்று கனவுகள் உள்ளது.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
தீண்டாய் முளரிப் பகையே (இரட்டை ரோஜா போட்டியில் பரிசு வென்ற கதை)
புத்தகத்தினை தபால் / கொரியர் மூலம் பெறுவதற்கு
புத்தகத்தின் விலை-290
மேலும் தகவல்களுக்கு – 7038304765 / 08050785817
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஆடியோ புத்தகங்களுக்காக எனது கதைகளையும் நான் கொடுத்துள்ளேன். ஆனால் அவற்றின் மீது எனக்கு ஆர்வம் சற்று குறைவுதான்.
16. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
நாம் எழுதும் எழுத்தின் தாக்கம் முதலில் வாசகர்களுக்கு இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நம் கதையின் நடை எளிமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு எழுத்தாளரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா?
நிச்சயமாக இல்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எனது முதல் கதை : இந்த நொடி போதுமே
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
பொதுவாக நான் கதைக்கரு பற்றி அலட்டிக்கொள்ள மாட்டேன். ஒரு கதையை முடித்த பிறகு அடுத்து எதைப்பற்றி எழுதலாம் என்று ஒருமுறை சிந்திப்பேன். அந்த நேரத்தில் எனக்கு எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதை தான் நான் என் கதையின் கருவாக கை கொள்வேன். முதலில் கதையின் தலைப்பை திட்டமிடுவேன். ஹீரோ ஹீரோயின் இவர்கள் இருவரின் பெயர்களை அடுத்து திட்டமிடுவேன்.. அதோடு எழுத ஆரம்பித்துவிடுவேன், கதை எந்த போக்கில் நகர்கிறதோ அந்த போக்கில் கதையை முடித்துக் கொள்வேன். குறிப்பெடுத்து அல்லது கதையை பற்றி சிந்தித்து நான் எப்பொழுதும் கதை எழுதியது கிடையாது. அந்த நிமிடம் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அன்றைக்கான அத்தியாயம்.
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
சங்கமம் தளத்தில் இரட்டை ரோஜாக்கள் போட்டியில் கலந்துக் கொண்டதின் பரிசாக என் கதை புத்தகமாக வெளிவந்தது.
பிரதிலிபி கதை திருவிழாவில் நான் எழுதிய நான்கு கதைகளும் நூறுக்குள் வந்தது.
அதில் மூன்று ஐன்பதுக்குள் வந்தது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
கதையைப் பற்றி மட்டும் விமர்சித்தால் முடிந்த அளவு விளக்கம் சொல்வேன். அப்படி இல்லை என்றால் நன்றி தெரிவித்து கடந்து செல்வேன். ஆனால் என்னைப் பற்றி எனது கேரக்டர் பற்றி ஒரு வன்மத்தோடு விமர்சித்தால், அது யாராக இருந்தாலும் என் பதிலால் கட்டாயம் அவர்கள் வேதனை அடைவார்கள்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை மற்றும் நாவல். அதன் மேல் தான் எனக்கு அதிக நாட்டம் உள்ளது.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
பொதுவாக நம் கதைகளை அதிகம் படிப்பவர்கள் பெண்கள். அதிலும் பெரும்பாலோர் இல்லத்தரசிகள். கிடைக்கும் நேரத்தில் அவர்கள் காதல் சொட்டும் கதைகளை தான் படிக்க விரும்புகிறார்கள். மாறுபட்ட சிந்தனைகள் எல்லாம் எழுதும் கதைகளை உணர்ந்து படித்து புரிந்து கொள்ள அவர்களுக்கு நேர அவகாசம் கிடைப்பதில்லை. அந்த மன நிலையும் இல்லை. அது ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
24. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
நல்ல கருத்துக்களை கொண்ட எந்த கதையாக இருந்தாலும் அதனை அனைவரும் படிக்கலாம். ஒரு பொழுது போக்கிற்காக குப்பை கதைகளை படித்து நேரத்தை வீணாக்குவது நேர விரயம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
நம் எண்ண ஓட்டத்தின் முடிவுதான் வார்த்தைகளின் அளவு.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
யாரு என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காமல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை இந்த சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு ஒரு கருத்தைக் கூறும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அந்தக் கருத்தை யார் தடுத்தாளும் கேளாமல் தைரியமாக எழுதுங்கள். ஒரு கருத்தை எந்த மாதிரி வாசகர்களிடையே வைத்தால் அது வாசகர்களால் பேசப்படுமோ அதன்படி அதன் எழுத்து நடையைக் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் கதைகள் பேசப்படும்.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
என் தனிப்பட்ட வாழ்க்கையில் சில முடிவுகள் என்னால் எடுக்கப்படவில்லை. எடுக்கவும் விடவில்லை. ஆனால் கதைகளை பொறுத்த வாக்கில் நான் எழுதுவது தான். என் வாசகர்களில் சிலர் இந்த மாதிரி எழுதாதீர்கள், கதையை இப்படி கொண்டு செல்லாதீர்கள் என்று என் கதைகளுக்கு அவர்கள் கதை எழுதுவார்கள். அதை நான் தவறு என்று கூறவில்லை என் கதையின் தாக்கம் அவர்களுக்குள் அந்த அளவிற்கு இறங்கியுள்ளது என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் கதை என்று எடுத்துவிட்டால் நான் எழுதுவது தான். யார் என்ன சொன்னாலும் என்னைப் பற்றி என்ன விமர்சனம் செய்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான் சொல்ல வந்ததை சொல்லியே ஆவேன்.
29. உங்களது கவிதை, பிடித்த வாக்கியம், பழமொழி (பைனல் பஞ்ச்).
விடு விடு எல்லாம் பாத்துக்கலாம்..
இந்த ஒரு வார்த்தையை வைத்து தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
30. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி :
Blog :
Youtube :
https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw
Amazon kindle :
நான் சொன்னேன்ல இவங்க ரொம்ப ஸ்வீட்ன்னு.. ரொம்பவும் இனிமையான நேர்காணல் நிலா சிஸ்..
உங்க கனவு மெய்பட என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்.. சொந்த வாழ்க்கை மட்டும் இல்லாம எழுத்துளையும் நீங்க பெரிய பெரிய உயரங்களை அடையவும் எங்க எல்லாரோட வாழ்த்துகள்..
நீங்க எழுத ஆரம்பிச்சத்துக்கான உண்மையான காரணம் சொல்லி, இதுல இன்னிக்கி நீங்க நிக்கற நிலை எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு..
“இஞ்சி இடுப்பழகி” உங்க பெயர சொல்ல வைக்கற ஸ்டோரின்னு சொல்வேன் நான் படிச்சவரை.. இப்ப சமீபமா நான் படிக்க முடியல.. ஆனா படிக்கற ஆசை நிறைய இருக்கு ..
அந்த கதைல உங்க கரு, அதை நீங்க சின்ன வயசுல இருந்து பெரியவங்க ஆனதுக்கப்பரம் வரை, அந்த மோதல் , அதன் பிறகான காதல், நீங்க வச்ச திருப்புமுனைகள், கடைசில அந்த கதைய முடிச்ச விதம்.. எல்லாமே நல்லா இருந்தது.
உடல் இளைக்க நிறைய பேர் செய்யற பைத்தியக்கார தனமான விஷயங்களையும் சொன்னது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தர மாதிரி இருந்தது.
ருத்ர சண்டிகால உங்க கற்பனை வலம் அபாரம். நிகழ்வுகளை கொண்டு வந்த சேர்த்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அந்த சாம்பல் நிற கண்களும், தங்க நிற கண்களும் எங்களை ஈர்த்து கட்டி வச்சது அப்படி.. சிங்கத்தை அவ வளர்த்த விதமும், பீமா ன்னு கூப்பிட்டா அது வந்து நிக்கறதும், போர் காட்சிகள அழகா கட்டி இருந்தீங்க..
உங்க தமிழும், உங்க எழுத்து நடையும் நிச்சயம் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும்.
இன்னும் நல்ல நல்ல கதைகளை நீங்க எழுதணும், நிறைய இயல்பை, நிறைய வித்தியாசமான கதைகளை நீங்க குடுத்துக்கிட்டே இருக்கணும்.
உங்களோட எல்லா முயர்ச்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்..
இந்த எழுத்தாளரோட நம்ம போன பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்ன்னு நினைக்கறேன் .. அடுத்து ஒரு அழகான தமிழ்ல கதை எழுதும் எழுத்தாளர கூட்டிட்டு வரேன்..