வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் நாம் நமது எழுத்தாளர்களுடன் பயணம் மேற்கொள்ளலாம்.
இன்னிக்கி நம்ம பயணம் யார் கூடன்னு தெரியுமா? இவங்கள எனக்கு ஒரு வருஷம் முன்னவே தெரியும் ஆனா என்னை விட சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் பாத்தா இவங்க எவ்ளோ பெரியவங்கன்னு அப்பறம் தான் தெரிஞ்சது.
கொஞ்ச நாள் கழிச்சி இவங்க கதைகள் amazon ல இலவசம் குடுத்தாங்க. அப்ப இவங்க கதைய நான் தரவிறக்கம் செஞ்சி வச்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் ஏற்பட்ட ஒரு நெருக்கடியான மண்டைகாயும் சூழ்நிலைல தான் அந்த கதைய படிக்க ஆரம்பிச்சேன். நிஜமா சொல்றேன் என் சூழ்நிலை எல்லாம் மறந்து போச்சி அந்த கதை படிக்கறப்போ..
அவ்ளோ அழகான எழுத்து நடை, விறுவிறுப்பான கதை போக்கு, அவங்க சொன்ன விஷயங்கள், கதாபத்திர அமைப்பு எல்லாமே பாத்து நான் விழுந்துட்டேன்..
என்னைய பெரிய கதை எழுதறன்னு திட்டு வாங்கிட்டு இருக்கும் நேரத்தில் நம்மல விட பெருசா கதை எழுதறவங்கல பாத்தா எவ்ளோ சந்தோஷம் வரும்? அப்புடி ஒரு சந்தோஷம் எனக்கு குடுத்தவங்க இவங்க.. ஒரு அழகான பூ பேர் இவங்க வச்சி இருக்காங்க..
யாருன்னு தெரிஞ்சதா?
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – தீபா செண்பகம்
2. இயற்பெயர் – தீபா @ தனலட்சுமி செண்பகநாதன் .
3. படிப்பு –
பலவற்றையும் கற்றால் பண்டிதன் ஆகலாமென்று, கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன். ஒரு டிப்ளமோ, டிகிரி எல்லாம் வச்சுருக்கேன்.
4. தொழில் –
பணம் சம்பாதிக்கிற மாதிரி, ஒரு தொழிலும் செய்யலை, ஆனால் எல்லாத்துறையிலும் கை வச்சுருக்கேன். தற்போது கிண்டில் ராயல்டியை கணக்கில் வச்சா, இப்போதைக்கு எழுத்து என சொல்லிக் கொள்ளலாம்.
5. பிடித்த வழக்கங்கள் –
பிடித்தது தொழிலாகி, தொழில் பிடித்ததாக மாறி விட்டது, மண்டை காய்கிறதோ ?
புத்தக வாசிப்பு பிடிக்கும், இப்போது எழுத்தாளர் ஆகிவிட்டேன்.
ஆடை வடிவமைப்பு தொழிலாக கற்றதை, பொழுது போக்காக மாற்றிக் கொண்டேன்.
6. கனவு –
கனவே, கதைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றன.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
என்னை, கற்பனையில் வாழும் பேத்தி என என் அம்மாச்சி சொல்வார்கள். அந்த கற்பனைகள் வாசிப்பின் தாக்கம் தான். அதே தாக்கமும் கற்பனையும் தான், என்னை எழுத்தாளர் ஆக்கி உள்ளது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
சிறுவர் மலரில் ஆரம்பித்தது. வாரப் பத்திரிகைகள், நாவல்கள் எனத் தொடர்ந்து, புத்தகங்களைத் தேடி, நூலகங்களுக்கு நடந்து வெறித்தனமாக வாசித்த வாசகி. குறைந்த பட்சமாக 30 வருட வாசிப்பு அனுபவம். மொழிபெயர்ப்பு கதைகளிலிருந்து எல்லாம் அடங்கும்.
9. உங்களை எழுதத் தூண்டியது எது?
ஆன் லைன் தட்டச்சு. Google transliterate .நிஜமா , 12 வருடத்துக்கு முன்பு, vanakkam என ஆங்கிலத்தில் அடித்து, அது தமிழில் வணக்கம் என வந்ததே முதல் ஆச்சரியம். பிறகு என்ன, மனதில் உள்ளதை கொட்ட வேண்டியது தானே. எழுத்து வரத்தை, இறைவன் கொடுத்திருக்கும் போது, நாமும் அதில் பயணித்துத் தானே ஆக வேண்டும்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
நாவலாசிரியராக உருவெடுத்தது 2020 தான். பிரதிலிபி மூலம் பிரவேசம். ஆனால் indusladies, எனும் வலைத்தளத்தில் தான் என் முதல் கிறுக்கல்கள் 2010 ஆம் ஆண்டே அரங்கேறியது. இந்த நாவல் உலகம் இருப்பதையே மிகவும் தாமதமாக அறிந்தவள் நான்.
11. உங்களது எழுத்தைப் படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
வாசகரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் வாழ்ந்த நிறைவைத் தருகிறது எனும் போது, பீல் குட் ஸ்டோரி கொடுத்திருக்கிறோம் என்ற நிறைவு உள்ளது.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
தொடர்ந்து நீங்கள் எந்த விதமான புத்தகத்தை வாசிக்கிறீர்களோ அதன் தாக்கம் கட்டாயம் உங்களிடம் இருக்கும். பெரிய புரட்சிகள், ஒரு சிறு தீ பொறியிலிருந்து தானே வந்திருக்கிறது. என் எழுத்து, வாசிப்பவர் மனதில் நிறைவைத் தந்தாலே போதும். எனக்கு மகிழ்ச்சி தான்.
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் புத்தகம், அதைப் பயன்படுத்தத் தெரிந்த பயனாளிகளோடு நின்று விடும். பதிப்பு புத்தகம் என்பது எல்லோருக்குமானது.
வளரும் எழுத்தாளர்களுக்கு மின்னூல் பெரிய வரப் பிரசாதம், ஆயிரக் கணக்கான வாசகரிடம் கொண்டு சேர்க்கிறது. ஆனால் பதிப்பு புத்தகம் வரும் பொழுது மட்டுமே, உலகம் எழுத்தாளராக ஒத்துக் கொள்கிறது. இப்போது பதிப்பு புத்தகம் என்பது, சிலநூறு பிரதிகள் மட்டுமே சாத்தியம். என்னைக் கேட்டால், வெகுஜன பத்திரிகையில் நிறைய எழுதி, வாசகர் மனதில் இடம் பெரும் போது மட்டுமே முழுமையான எழுத்தாளர் ஆகிறோம்.
14. நீங்கள் பதிப்பித்த பதிப்புபுத்தகங்கள் எத்தனை ? ( அவற்றைப் பெற தொடர்பு கொள்ள ) –
ஒண்ணே, ஒன்னு கண்ணே கண்ணுனு , ஒரு புத்தகம் தான்.
வைகை பதிப்பகம் வெளியிட்டுள்ள – “நீயே எந்தன் மகளாய்”
வைகை பதிப்பகம் – +91 9486802859
பிரியா நிலையம் – +91 9444462284
இணையத்தில் வாங்க : http://www.wecanshopping.com/
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
கதை ஆர்வமிருந்தும் வாசிக்க இயலாதவர்களுக்கு ஆடியோ நாவல்கள் உபயோகமானவை. இன்றைய இணையதள வளர்ச்சியில், இவை யாவுமே அவசியமான ஒன்று தான். கதாசிரியரின் அனுமதி பெற்று கதையை வாசித்தால் நன்று.
நானும் தற்பொழுது தான் ஆரம்பித்து உள்ளேன்.
https://www.youtube.com/watch?v=Q2Q6Gg-mAMY&t=47s
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
முதலில் எழுத்து நடை, கதைக் கரு, கதையை நகர்த்தும் விதம், அதன் பின் விளம்பரம்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
ஒரு அத்தியாயம் கூட, எனது விருப்பமின்றி எழுதியது இல்லை.
18. உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
முதல் கதை, மனதின் வார்த்தைகள் புரியாதோ – கிண்டலில் நல்ல வரவேற்பு, ராயல்டியை பெற்றுத் தந்தது. ஆனால் பாண்டிக் குடும்பம் எனும் கதை அணிவகுப்பின் கீழ் என்னை அடையாளம் காண்கிறார்கள்.
19. கதைக் கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்குக் கொடுப்பீர்கள் ?
கதைக் கரு தான் முதல் விதை. அதுவே துளிர்த்து, வளர்ந்து கதையையும், கதாபாத்திரங்களையும் தேடிக் கொள்ளும்.
என் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கக் கூட அவ்வளவு யோசித்தது இல்லை. கதாபாத்திரங்களுக்காக மிகவும் மெனக்கெடுவேன். என் கதைக்குப் பொருந்தும் பெயராக மட்டுமே வைப்பேன்.
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
முதல் போட்டி – நான் கதையை முழுவதுமாக முடித்த போட்டி, சகாப்தம் தளத்தின் வண்ணங்கள், தொடர் கதை போட்டி. இரண்டு பிரிவில் கதை எழுதி, கிராமியம் பிரிவில் பச்சை வண்ணத்தில் முதல் பரிசு கிடைத்தது.
கிழக்கு சீமை என அழைக்கப்படும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப் பட்டது.
சிந்தா – ஜீவநதியவள்
21. எதிர்வினை கருத்துக்களை எப்படிக் கையாள்கிறீர்கள்?
இதுவரை பெரிதாக எதிர்மறை கருத்துக்கள் வந்தது இல்லை. அதிக கதாபாத்திரங்கள் இருப்பதையும், கதையின் நீளம் அதிகம், பெரிய கதை என்பன போன்ற விமர்சனங்கள் வந்தது உண்டு. ஆனால் அதுவே தான் என் பலம். நம்ம டிசைன் அப்படி, இந்த குறையைத் தவிர்க்க முயல்வோம்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை, கவிதை, தொடர்கதை, நாவல், சிறுகதை) ஏன் ?
எல்லாமே எழுதத் தான் ஆசை. இன்னும் வாழ்க்கை இருக்கே, எழுதுவோம்.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாகச் சென்றடைவதில்லை?
முதலில், இந்த எழுத்தாளர் இப்படித் தான் என்ற முத்திரை விழுந்து விடுகிறது. அந்த எழுத்தாளருக்கும் அந்த ஜெனேர் நன்றாக வருமாக இருக்கும். அதை மாற்றி, புதிதாக முயற்சிக்கும் பொழுது, எழுத்தாளர் எங்கேனும் கோட்டை விட்டிருக்கலாம். சுவாரஸ்யமாகச் சொன்னால், எந்த கதையும் மக்களைச் சென்றடையும். கால தாமதம் வேண்டுமானால் ஆகலாம்.
24. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இன்னும் இல்லை. குடும்பத்தோடு தானே இருக்கிறோம், சிறுகதையில் கூட கூட்டுக் குடும்பத்தைக் கொண்டு வரும் ஆள் நான். இனிமே முயற்சி செய்வோம்.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
ஒவ்வொருவருக்கான விருப்பம் உண்டு, அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் புத்தக வாசிப்பில் வயதுக்கேற்ற ஒரு வளர்ச்சி வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும்.
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
30000 வார்த்தைகளிலிருந்தால் தான் புத்தகம் போட எளிது என்பதே, இப்போது தான் தெரிந்து கொண்டேன். என் கதைகள் எல்லாமே மிக அதிக வார்த்தைகளைக் கொண்டது. உங்கள் கதைக் கருவைப் பொறுத்து வார்த்தைகளைத் தீர்மானியுங்கள்.
27. எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
எழுதுபவர்கள் ஏன் பயனடைவது இல்லை. எழுதும் பொழுதே தான், நமது எண்ணம் எழுத்தில் வந்து விடுகிறதே, அதுவே பெரிய சாதனை தான். இன்றைய இயந்திர கதியில், திருட்டு pdf மூலமாக வேணும் உங்கள் எழுத்து வாசகரைச் சென்றடைகிறதே, அது அடுத்த சாதனை.
பொருளாதார ரீதியான பயன் இல்லை எனக் குறைபட்டால், அது அந்த காலத்தை விட தற்போது சிறப்பாகவே உள்ளது. முற்காலத்தில் எழுத்தாளராவதே பிரம்ம பிரயத்தனம், வருவாய் அதை விட மோசம். அவர்களின் மனக்குறைக்குச் செவி கொடுத்த விதியின் பயனாக, இன்றைய எழுத்தாளர்கள் இந்த அளவேனும் வருவாய் பெற்றுப் பயனடைகின்றனர்.
விவசாயியை விட இடைத்தரகர் தான், அதிகம் பயன் பெறுவார், அது அவரின் வாக்கு சாதுரியம், அதற்காக, விவசாய வேலையை விட்டு, விவசாயி சந்தைக்கு அலைய முடியாது இல்லையா ?
தற்போதைய உலகம், தங்கள் புத்தகங்களை தாங்களே பதிப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை தந்துள்ளது. முந்தைய கால எழுத்தாளர்களுக்கு எழுதுவது மட்டுமே பிரதானம். இன்றைய எழுத்தாளருக்கு, கதை எழுதுவது, திருத்தம் செய்வது, சரியான தளத்தில் பதிவேற்றுவது, விளம்பரம் செய்வது என ஏகப்பட்ட வேலை உள்ளது . இது தான் உங்கள் தொழிலென இறங்கி விட்டால், அதை முழுமையாக செய்யுங்கள். பொறுமையாக செயுங்கள், பதட்டமின்றி செயுங்கள், கால தாமதம் ஆனாலும், உங்கள் உழைப்பின் பயன் உங்களைத் தேடி வரும். விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள், அதுவே உங்களை, உங்கள் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும். வாசகர்களோடு எப்போதும் தொடர்பில் இருங்கள்.
28. உங்கள் தனித் தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
எழுத்து நடை, கதைகளைக் காட்சிப் படுத்தும் விதம். வட்டார வழக்கு, கதாபாத்திரங்கள்.
29. உங்களது கவிதை, பிடித்த வாக்கியம், பழமொழி (பைனல் பஞ்ச்).
என் ,
எண்ணங்களின் இயல் வடிவம்,
எழுத்துக் கோர்வை
உணர்வுகளோடு இணைந்த உயிரோட்டம்
என் படைப்புகள் .
30. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
Blog:
https://senbagadeepam.blogspot.com/
தீபா செண்பகம் ‘s எழுத்துப் பெட்டகம். இதில் என்னுடைய கதைகளின் விவரம் லிங்க் எல்லாமே இருக்கும்.
நாவல்கள்
1. மனதின் வார்த்தைகள் புரியாதோ
2. தளிர்மனம் யாரைத் தேடுதோ
பாண்டிக் குடும்பம் கதைகள்
3. மனச தாடி என் மணிக்குயிலே
4. தான்வி கல்யாண வைபோகமே
5. மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.
6. சிந்தா -ஜீவநதியவள்
7. ஹாசினி சந்திரா
8. நீயே எந்தன் மகளாய் – பதிப்பு புத்தகம்.
9.யார் இந்த நிலவு – ongoing
youtube :
https://www.youtube.com/watch?v=Q2Q6Gg-mAMY&t=47s
அமேசான் கிண்டில் :
https://www.amazon.in/deepa-senbagam/e/B08NHMXC3Y%3Fref=dbs_a_mng_rwt_scns_share
ஆலோன் மகரி blog ல் , எழுத்துப் பயணத்தில், எழுத்தாளரைப் பற்றி எழுதும் முன், அவர் எழுத்தை வாசித்து, புரிந்து அதன் பின், அவர்களைப் பற்றிய முன்னுரையோடு பகிர்கிறார்.
என் கதையை அப்படி, சாதாரணமாக ஓரிரு நாளில் வாசித்து விட இயலாது, அவ்வளவு பெரிதாக எழுதுவேன். அதையும் பொறுமையாக வாசித்து பேட்டி கண்டிருப்பதற்கே பாராட்டுக்கள். உங்கள் எழுத்துப் பணிக்கு இடையில், இதற்கும் நேரம் ஒதுக்குவதற்கும் பாராட்டுக்கள்.
இந்த பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி டியர்.
ரொம்ப அருமையான பயணம் தீபா ம்மா.. உங்களோட நேர்காணல் ஒரு அனுபவமுள்ள வாசகி எழுத்தாளராக மாறிய பாதை மற்றும் அதில் இருக்கும் தெளிவும் புரிதலும் நிச்சயம் எங்களை போன்ற ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு மிக பெரிய வழிகாட்டுதல்.
இவங்க கதை படிக்க கொஞ்சம் இல்ல நெறையவே நேரம் தேவை தான். ஆனால் அந்த நேரம் போறதே நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு நம்மல அவங்க எழுத்து கட்டி போடும்.
இவங்களுக்கு வட்டார மொழி ரொம்ப அருமையா வருது. இவங்களும் மதுரை பக்கம்ங்கறதால ஒவ்வொரு வார்த்தைளையும் உயிரோட்டம் இருக்கும்.
பாண்டி கதைல முதல் கதை மட்டும் தான் படிச்சேன். அதை படிச்சிட்டு தான் இவங்கள பிடிச்சி நேர்காணலுக்கு கேட்டேன். இவங்க உடனே குடுத்துட்டாங்க நான் தான் உங்களுக்கு குடுக்க கொஞ்சம் தாமதம் பண்ணிட்டேன்.
இவங்க எழுத்துபிழை இல்லாத தமிழ், உணர்வுகள் உணர்ச்சிகளை கடத்தும் எழுத்து, நம்மல சாட்டையால விலாசும் சில வசனங்கள், கூட்டு குடும்ப சூழல், அதுல வர்ற பிரச்சனை, மறுமணம் செய்யும் நாயகி, அவளுக்குள்ள நடக்கும் மனப்போராட்டம் இப்படி எல்லாமே ரொம்ப எதார்த்தமா கதைல ரொம்ப அருமையா காட்டி இருப்பாங்க.
பாண்டி குடும்பத்தின் மற்ற கதைகளும் சீக்கிரம் படிக்கணும். கண்டிப்பா எல்லாருமே நேரம் எடுத்து இவங்க கதைகளை படிக்கலாம். படிச்சா தான் இவங்க சொல்லி இருக்க விஷயங்கள் உங்களுக்கும் புரியும். ரொம்ப நாளைக்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் பட்டியல்ல ஒரு புது பெயர் இவங்க தான் சேர்ந்து இருக்காங்க.
இவங்க எழுத்தில் உயிர்ப்பு இருக்கு, கூடவே நம்மல கடத்தும் மாயமும் இருக்கு. யாரும் இவங்க எழுத்த மிஸ் பண்ண கூடாது.
நீங்க பெரிய பெரிய உயரங்களை தொடனும் தீபாம்மா.. உங்க எழுத்து உங்களுக்கு ஒரு தனி இடத்த கண்டிப்பா பிடிச்சி குடுக்கும். எப்பவும் எழுத்துகிட்டே இருங்க. நிறைய கதைகளை எழுதுங்க. படிக்க எல்லாரும் தயாரா இருக்கோம்.
உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்..
இன்னிக்கி தீபாம்மா கூட நம்ம போன பயணம் பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன்.. மீண்டும் ஒரு அருமையான எழுத்தாளரோட வரேன்..