வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் .. பிரதிலிபில நான் படிக்க வந்த நாள் முதல் அறிமுகமானவர். மிகவும் சிறந்த வாசகர். பரந்த வாசக அனுபவம் உள்ளவர்.
யாருன்னு தெரிஞ்சிக்கலாமா ?
வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – சுந்தரராஜன். வேதரத்தினம்
நண்பர்கள் அழைப்பது சுந்தர் ஜி . வீட்டில் பாபு. வயது 52. திருமணம் ஆகி மனைவி இரு மகன்கள். மனைவி கிண்டர் கார்டன் ஆசிரியர். பெரியவன் கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு செல்கிறார். சிறியவன் கல்லூரி இரண்டாம் ஆண்டு.
2. படிப்பு – பி. காம். கம்ப்யூட்டர் டேலி மற்றும் ஹார்ட்வேர்.
3. தொழில்/வேலை –
நிறைய வேலைகள் பார்த்து உள்ளேன். தற்போது தனியார் டேலி ஆசிரியர் மற்றும் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு தந்தையிடம் நிறையவே கேள்விகள் கேட்பேன்… எனக்கு எட்டு வயதாகும் போது ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அவருக்கே பதில் சொல்ல முடியாமல் பழைய புத்தகக் கடையில் நிறைய புத்தகங்கள் வாங்கி இதில் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கும், புதிய பல கேள்விகள் பிறக்கும் என்று ஊக்குவித்தார். பெரும்பாலும் வார இதழ்கள்.. குறிப்பாக கல்கண்டு. அதில் ஆரம்பித்து துண்டு பேப்பர் வரை விடவில்லை.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
என்னுடைய மிகப்பெரிய ஆசை புத்தகங்கள் படிப்பது. சிறுவயதில் படிப்பு மற்றும் விளையாட்டு முடிந்ததும்…. இப்போது நேரம் கிடைக்கும் போது எல்லாம்… மதியம் மற்றும் பெரும்பாலும் இரவில்… பல நாட்களில் விடிய விடிய…
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
பெரும்பாலும் கைபேசி தான் அதிகம். ஆனால் புத்தகங்கள் படிப்பது போல் கைபேசி சுவையாக இல்லை.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
அப்படி எல்லாம் தனிப்பட்ட கணக்கு வழக்கு எதுவும் இல்லை. நான் சற்று வேகமாக படிப்பவன் என்பதால் சில சமயங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை படித்து முடித்து விடுவேன். பல புத்தகங்களை திரும்ப திரும்ப படித்து குறித்து கூட வைத்துக் கொண்டு படிப்பேன்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
கண்டிப்பாக பேப்பர் புத்தகங்கள் வாசிப்பதில் தான் முழுமை பெறுவதாக உணர்கிறேன்.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
நிறைய கற்றுக்கொண்டேன் இன்னும் கற்றுக் கொள்கிறேன். படித்ததில் கற்றது இது தான்…….
கற்றது கை மண் அளவு…. கல்லாதது உலகளவு இன்னும் உள்ளது என்பதே….
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
ரொம்ப ரொம்ப அதிகம் பேசுகிறேன் என்று கூறுகிறார்கள்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
முதலில் ஆசிரியர் மட்டும் தான்… இரண்டாவது விமர்சனங்கள் வழியாக… இதன் மூலமாகத் தான் புதிய எழுத்தாளர்களை அறிந்து படிக்க முடிகிறது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?
(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
எல்லாமே… அறிவியல் புனைவு… நகைச்சுவை…. சரித்திரம்… இலக்கியம்… குடும்பம்… காதல்.. வரலாறு…. சாகசம்… புராண கதைகள்.. இதில் குறிப்பிட்ட மதம் என்று இல்லை… மர்மம்… திகில்… ரொமாண்டிக்… ஆன்மீகம். இந்த வரிசையில் புத்தகங்கள் தேர்வு செய்வேன்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நான் எந்த புத்தகங்கள் படித்தாலும் அதிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள நினைப்பேன்… அதனால் எழுத்தாளர் உடன் என் உறவு ஒரு ஆசிரியர் மாணவர் உறவு போலவே நினைக்கிறேன்
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
என் வாழ்வு ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை தான். இதில் முக்கிய திருப்பம் திடுக்கிடும் நிகழ்வுகள் என்று இதுவரை இல்லை. ஆகையால் ஒரு… ஒரேயொரு புத்தகத்தால் வாழ்வில் முக்கிய திருப்பம் எதுவும் வரவில்லை. ஈவன் இராமாயணம் மகாபாரதம்….
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
எனக்கு அப்படி ஒரு மாற்றம் தெரியவில்லை. ஒருவேளை காலங்கள் மாறுவதால் காலத்துக்கு ஏற்ற மாறிவரும் எழுத்தாளர்கள் அனைவருமே சரியான வழியில் தான் செல்கிறார்கள். அப்போதைய எழுத்தாளர்களைக் கொண்டாடும் காரணம் அவர்களுக்கு இப்போதுள்ள வசதிகள் இல்லாமல் எழுதியதால் மட்டுமே தான்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
இன்றைய காலச் சூழலில் ஆங்கிலத்தில் தமிழ் எழுதுவதை விட தமிழில் ஆங்கிலம் எழுதினால் தான் தமிழ் வளர வாய்ப்புள்ளது. உதாரணமாக Tamil என்று எழுதுவதை விட இங்லீஷ் என்று எழுதினால் தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
எனக்கு வாசிப்பதில் பாரபட்சம் இல்லை. எல்லாம் சரிதான். ஒரு வட்டார நிகழ்வுகள் பற்றி எழுதும் போது அந்த வட்டார மொழியில் எழுதுவது ரொம்ப நெருக்கமாக உணர வைக்கும்… உதாரணமாக கி. ராஜநாராயணன், ஜெயமோகன். தற்போது பிரபு தர்மராஜ்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சப்தம், பார்த்திபன் கனவு, கடல் புறா, கயல்விழி, வேங்கையின் மைந்தன்… மற்றும் பல..
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
வெறும் காதல் போர் அடிக்கிறது. ஒருவேளை வயதான காரணத்தால் இருக்கலாம். குடும்ப காதல் கதைகள் ரொம்ப ரொம்ப அவசியம் தேவை என்பது என் கருத்து.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
கண்டிப்பாக பிடிக்கும். கண்டிப்பாக ரொம்ப ரொம்ப கண்டிப்பாக வாசிப்பேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
என் வேலை நேரம் உணவு மற்றும் தூங்கும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும்… வீட்டில் எனக்கு சீக்கிரம் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்ற கருத்து ஓடுகிறது.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
அவசியம் கருத்துக்கள் கொடுப்பேன். தனிப்பட்ட முறையில் தனிப் பதிவாக விமர்சனம் கொடுத்ததில்லை.. அதேபோல் தவறுகளை ரொம்ப மேலோட்டமாக தான் சுட்டிக்காட்டுவேன். முதல் காரணம்… நாம் என்ன தான் உண்மை காரணம் சொல்லி தவறுகளை விமர்சித்தாலும் அவர்கள் மனதை பாதித்து எழுதும் திறன் மற்றும் ஆர்வத்தை குறைக்கும். இரண்டாவது எனக்கு சண்டை சச்சரவு வேண்டாம் என்பதால் பாஸிட்டிவ் கமெண்ட் மட்டுமே. பதிவு எனக்கு ஒப்புமை இல்லை என்றால் நல்ல பதிவு என்று கூறி விட்டு நகர்ந்து விடுவேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
பொன்னியின் செல்வன்
கடல் புறா
கொலையுதிர் காலம்
சித்ராங்கதா
நான் மதிவதனி மதனின் வதனி
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
90 களில் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த ஏன் எதற்கு எப்படி என்ற சுஜாதா அறிவியல் கேள்வி பதிலில் ட்சுனாமி ஜப்பானிய மொழியில் துறைமுக அலை…. பற்றி தெளிவாக எழுதியிருப்பார்… 2004 லில் வந்த நிஜ ட்சுனாமியின் போது, நான் ட்சுனாமி என்பது நிஜம், பசிபிக் பெருங்கடலில் மட்டுமே வராது. நமக்கும் வரலாம். இது கடல் கோள் அல்லது ஆழிப்பேரலை என்று சங்க காலத்தில் கூறிய சொற்றொடர் உண்மை என்பதை உணர்ந்த நாள். அதேபோல் 80 களில் வந்த கொலையுதிர் காலம் கதையில் லேசர் ஹோலோகிராஃபிக் மூலம் முப்பரிமாண உருவம் வெட்டவெளியில் உருவாக்க முடியும் என்று எழுதி இருந்தார். 2K வில் அதுவும் சாதிக்கப் பட்டது… அதேபோல் மோகமுள் படித்து திருவையாறு கும்பகோணம் என்று அலைந்து திரிந்து பார்த்த காலம்… மறக்க முடியாதது.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நல்ல கருத்துக்கள் சொல்லும் கதை கட்டுரைகளுக்கு ஆதரவு இல்லை என்று பெரும்பான்மையான எழுத்தாளர்கள், ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஆக மாறுவது வருத்தமாக இருக்கிறது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
உண்மையான காரணம் கூறவேண்டும் என்றால் படிப்பதற்கு குறைந்த வாய்ப்பு மற்றும் நேரமின்மை காரணமாக புத்தகம் தேர்தெடுக்க பயன்பட்ட உத்தி தான் ஆசிரியர் தேர்வு.. சில ஆளுமை மிக்க வாசகர்கள் சிறிது நேரம் செலவிட்டு புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்து விமர்சனங்கள் வழியாக மற்றவர்களுக்கு தெரிவித்தால் பலர் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்க வைக்கலாம். அடுத்த வழி நல்ல எழுத்தாளர்கள் என்ற அங்கிகாரம் பெற்றவர்கள் நடுவராக இருந்து போட்டி வைத்து நல்ல கதைகளைப் படித்து விமர்சனங்கள் மற்றும் பரிசுகள் வழியாக நல்ல கதைகளை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம். ஆசிரியர்களின் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி மற்றும் வாசகர்களின் தெளிவான அன்பயாஸ்ட் ஒப்பீனியன் மூலம் கதை தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை ஒரு நல்ல உதாரணமாக இருக்கலாம்
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
சுஜாதா… கல்கி… அகிலன்… தி. ஜானகிராமன்… சாண்டில்யன்….. மு.மேத்தா. ஞாபகத்தில் வந்தவர்கள். விடுபட்ட வர்கள் கோபிக்க வேண்டாம்.
இக்கால எழுத்தாளர் ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது. அதிலும் பிரதிலிபியில் ஞாபகம் வந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் முப்பது பேர். அதனால் விட்டு விடலாம்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
கதை ஆரம்பத்திலேயே ஹீரோ ஹீரோயின் வில்லன் முக்கிய ட்விஸ்ட் தரும் நபர்கள் என்ற இன்ட்ரோ வந்து இருக்க வேண்டும். புதிதாக நடுவில் முக்கிய கேரக்டர் இன்ட்ரோ என்பது வலிந்து கதையை கொண்டு செல்லும் முயற்சி போல தோன்றும். தேவையில்லாமல் வர்ணனைகள் கதையை சுவாரசியம் இழக்க வைக்கும். ஹோம் ஒர்க் இல்லாமல் கதை எழுதுவது மிகவும் தவறான விஷயம். இன்னும் நிறைய தோன்றியது. ஆனால் இதையெல்லாம் சொல்ல எனக்கு தகுதி உள்ளதா என்று கூட எனக்கு தெரியாது.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
எனக்கு எழுத்தில் பால் வேறுபாடுகள் ரொம்ப தெரியவில்லை. இருபாலாரும் ரொம்ப அருமையாக எழுதுகிறார்கள்.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
நிறைவேறாத ஆசை சுஜாதாவை சந்தித்து பேசினால் போதும் என்று நினைத்த காலம் உண்டு
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எதிர்மறை முடிவு என்று தெரிந்தால் கண்டிப்பாக படிக்கவே மாட்டேன். சில சமயங்களில் படிக்கும் நிலையில் மனம் ரொம்ப பாதிப்பு அடைந்து ரொம்ப கஷ்டமாக ரொம்ப டவுன் ஆக ஃபீல் பண்ணுவேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
தென்றல் குடும்பத்தில் ஆடியோ கதை உருவாக்கத்தில் நானும் பங்கு பெற்று நிறைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து பேசியுள்ளேன். அது தவிர வேறு ஆடியோ கதை கேட்டது இல்லை. எனக்கு படிப்பது போல் அதில் சுவாரசியம் வரவில்லை.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
வாழ்க்கையின் நிதர்சனம் அது தான். கண்டிப்பாக ஒரு முடிவில் ஒரு ஆரம்பம் உள்ளது… ஆனால் அது இரண்டாம் பாகம் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
கடமையை செய். பலன் தானாகவே… என்ன…. சில சமயங்களில் சற்று தாமதமாக வரும்… ஆனால் கண்டிப்பாக வரும். எழுத்தாளர் என்பவர் சாதாரணமான ஆள் இல்லை. அவர் படைப்பவர்… பல தாக்கங்களை உருவாக்கும் வல்லமை கொண்டவர். ஒரு தாய் ஒரு கடவுள் போன்றவர். அந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி.
அருமையான நிமிடங்கள் சுந்தர்ஜி அவர்களே..
உங்களை போன்ற விரிந்த வாசக அனுபவம் உள்ளவர்கள் தான் இன்றைய எழுத்தாளர்களுக்கு முக்கியமான வழிகாட்டி. அத்தகுதி உங்களை போன்றவர்களுக்கு தான் அதிகம் உண்டு.
மிகவும் இயல்பான சிந்தனை மற்றும் அனுபவ அறிவு இரண்டும் உங்களுடன் உரையாடிய நிமிடங்களில் நாங்கள் உணர்ந்தோம். உங்களின் வாசிப்பு அனுபவம் தரும் விஷயங்கள், புதிதாய் எழுத வரும் எங்களை போன்றோருக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதை மறுக்க முடியாது. எனது பணிவான நனி நன்றிகள்.
வாசிப்பை சுவாசிப்போம்..