14 – அர்ஜுன நந்தன்
அவன் அவளை நோக்கி கையோங்கிக் கொண்டே அருகில் போக அவளும் பயப்படாமல் ஒரு அடி கூட நகராது அவனை எதிர்கொண்டு நின்றாள்.
அவன் அவளது கன்னத்தை பதம் பார்க்கும் சமயம், அவள் அவனது கையை இழுத்துச் சுற்றிக் காலில் அடித்துக் கீழே சாய்க்க, அவன் அவளது யோசனை அறிந்து அவள் காலை இவனது காலில் கட்டிக் கொண்டு படுத்து கீழே தள்ள முயற்சிக்கவும் அவள் லாவகமாய் தப்பி எகிரி வேறு பக்கம் குதித்து நின்றாள்.
“பரவால்ல இன்னும் சொல்லி குடுத்தத மறக்காம இருக்க”, நெடுமாறன்.
“மறக்கர மாதிரி இந்த வித்தைய நான் பழகலயே “, பூவழகி.
“சரிதான் பூவழகி, எங்க புடிச்ச இந்த பேர?”, சிரித்துக் கொண்டே கேட்டான் நெடுமாறன்.
“அது யாரோ கூப்டு கேட்டது, உன் அப்பா என் பேர கேட்டதும் அது தான் நியாபகம் வந்துச்சு .சொல்லிட்டேன். இப்ப யோசிச்சா ரொம்ப பழைய பேரா இருக்கோன்னு தோணுது “, பூவழகி.
“சரி எதுக்கு இப்ப இங்க வந்து இருக்க? “, நெடுமாறன் புருவம் உயர்த்திக் கேட்டான்.
“போகப் போக உனக்கு புரியும். நான் கிளம்பறேன்”, பூவழகி.
“நில்லு. இங்க உன் இஷ்டத்துக்கு எல்லாம் இருக்க முடியாது. இனிமே நீ இங்க தான் தங்கணும்”, அதட்டலாய் கூறினான் நெடுமாறன்.
“அப்படி எல்லாம் இருக்க முடியாது. வேலைக்கு தான் சேந்தேன் அடிமையா சேரல”, கோபத்தை அடக்கியக் குரலில் கூறினாள் பூவழகி.
“இங்க என் பேச்ச கேட்டா தான் நீ வேலைல இருக்க முடியும்”,விடாது விவாதித்தான் நெடுமாறனும்.
“நான் உன்கிட்ட சேரல, உன் அப்பா கிட்ட தான் சேந்து இருக்கேன். உன்னால முடிஞ்சா என்னைய வேலைய விட்டு அனுப்பு”, திமிராய் கூறிக் கண்களில் கூலர்ஸ் அணிந்து கதவைத் திறந்துக் கொண்டு வெளியேறினாள் பூவழகி.
“திமிரு மட்டும் குறையவே இல்ல இவளுக்கு”,முணுமுணுத்து விட்டு காலை தரையில் உதைத்தான் நெடுமாறன்.
“பாண்டி இவ எங்க தங்கி இருக்கான்னு அட்ரஸ் வாங்கு, போன் நம்பரும் வாங்கிட்டு அனுப்பு “, கூறிவிட்டு மேலே சென்றுவிட்டான் நெடுமாறன்.
அவளும் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்ல எத்தனிக்கும் போது, அவள் பைக் இங்கு இல்லை என்பது நினைவில் வர, என்ன செய்வது ? என யோசித்துக் கொண்டு இருந்தாள்.
பாண்டி ஒரு வண்டிச் சாவியை அவள் கையில் கொடுத்தான். அவள் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, “நெடுமாறன் தம்பி தான் உனக்கு இந்த வண்டிய குடுக்கச் சொன்னாங்க பூவு” .
பின் சரியென்று வாங்கிக் கொண்டு பறந்தாள்.
போய் நேராக நின்றது ஒரு லேடிஸ் ஹாஸ்டல் முன்பு. வண்டியை அங்கே நிறுத்திவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
நெடுமாறன் அவள் வண்டியை வாங்கிக் கொண்டுச் சென்றதும் அந்தப் பைக்கில் பொறுத்தபட்டு இருந்த ஜி.பி.எஸ்யை இயக்க ஆரம்பித்தான். அது சென்று நின்ற இடத்தை குறித்துக் கொண்டுப் படுத்துவிட்டான்.
இரவு 2 மணிக்கு அவள் வீட்டினுள் செல்லப் பரிதியும் செந்திலும் அவளுக்காகக் காத்து இருந்தனர்.
“ஹாய் டார்லிங் இன்னும் இங்க தான் இருக்கியா? ஹாய் சீனியர் இன்னிக்கும் பசிக்கிது சாப்பாடு இருக்கா?”, யாத்ரா@ பூவழகி.
“நீ போன விஷயம் என்னாச்சி?”, பரிதி.
கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சக்சஸ் என்று கூறிய பின் தான் அவர்கள் இருவருக்கும் மூச்சு நிதானமாக வந்தது. அவளை காணும் வரையிலும் இருவரும் இறுக்கமாகவே இருந்தனர்.
“அங்க யாருக்கும் உன் மேல சந்தேகம் வரல தானே?”, செந்தில்.
யாத்ரா மனதில் நெடுமாறனை நினைத்துக் கொண்டு இல்லையென தலையசைத்தாள்.
“வாய தொறந்து பேசு டி”, பரிதி.
“டார்லிங் அந்த சேரலாதனுக்கு எத்தனை பசங்க?”, யாத்ரா.
“இரண்டு பசங்க ஒரு பொண்ணு”, செந்தில்.
“அவங்க எல்லாரோட போட்டோவும் இருக்கா?” ,யாத்ரா.
“ஒரு பையனோட போட்டோ மட்டும் தான் கிடைச்சது. மத்த ரெண்டு பேரோட போட்டோ கிடைக்கல”,செந்தில்.
“சரி தேடுங்க கிடைக்குதான்னு பாக்கலாம்”,யாத்ரா.
அவளின் பதிலில் வித்தியாசம் உணர்ந்தவர்கள் என்னவென்று விசாரிக்க ஒன்றுமில்லையென சமாளித்தாள்.
“சீனியர் எனக்கு சாப்பாடு எங்க?”, யாத்ரா.
“அங்க என்ன நடந்துச்சு முழுசா சொல்லு டா “,பரிதி அவள் தலைக்கோதிக் கொண்டு கேட்டாள்.
“ஒரு சரக்கு கடத்திட்டு வந்த என் திறமைய வச்சி வேலைய கன்பார்ம் பண்ணான் அந்த சேரலாதன், அவன் பையன் நெடுமாறனும் இருந்தான்”, யாத்ரா
“நெடுமாறன் இவனா”, எனத் தன் கையில் இருந்தப் புகைபடத்தைக் காட்டிக் கேட்டான் செந்தில்.
“இவன் இல்ல. ஆனா அங்க இருந்தவன் பேரும் நெடுமாறன் தான் சொன்னாங்க”, குழப்பமாக்க் கூறினாள் யாத்ரா. பின் ஏதோ தோன்ற,
“அந்த பரத் பையன் எங்க?”,யாத்ரா.
“அவன் தூங்கிட்டு இருக்கான்”, செந்தில்.
நெடு நெடுவென அவன் அறைக்குள் சென்றவள் ஒரு பக்கெட் தண்ணீரை அவன் மீது ஊற்றினாள்.
“இங்க எல்லாரும் தலைய பிச்சிட்டு இருக்கோம் நீ தூங்கறியா?”,யாத்ரா.
தண்ணீர் ஊற்றியதில் அடித்துப் பிடித்து எழுந்தவன் திரு திருவென விழித்தான்.
“ஏன் மேடம் தண்ணிய ஊத்தினீங்க?”, பரத்.
“அப்படி என்னடா உனக்கு இந்த நேரத்துல தூக்கம்? எந்திரிடா”,யாத்ரா.
அவள் நின்றக் கோலம் பார்த்து அவன் பயந்து எழுந்து நின்றான். “இப்ப தான் மேடம் செந்தில் சார் தூங்க சொன்னாருன்னு வந்து தூங்கினேன் “,பரத்.
“அந்த ஆளுக்கு தான் அறிவு இல்ல, உனக்கு எங்க போச்சி?”,கடுகடுத்தாள் யாத்ரா.
“அடேய் ஏன்டா என்னைய கோர்த்து விட்ற? இந்த நேரத்துல தூங்காமா எந்த நேரத்துல தூங்குவாங்களாம். நீயும் பேயும் தான் முழிச்சிட்டு இருப்பீங்க மனுசங்க தூங்குவாங்க”, செந்தில்.
அவனை முறைத்து விட்டு டைனிங் டேபில் மேல் இருந்த ஹாட்பாக்ஸ்யைத் திறந்து சாப்பிடத் தொடங்கினாள் யாத்ரா.
பரிதியும் செந்திலும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ சரியில்லை எனத் தலையசைத்து புரிந்து கொண்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் யாத்ரா பரத்தை அழைத்து, “இனிமே தினமும் அந்த லேடீஸ் ஹாஸ்டல்ல நீ என்ன டிராப் பண்ணணும். காலைல சார்ப் 8க்கு அங்க போகணும் . இப்ப போய் தூங்கு “, கூறிவிட்டு இவளும் தூங்கச் சென்றாள்.
“பரிதி என்ன நடந்து இருக்கும், நம்ம ரவுடி இவ்வளவு டென்சன்ல இருக்கா?”, செந்தில்.
“எதாவது இருக்கும். யாராவது இவள கடுப்படிச்சி இருப்பாங்க”, பரிதி.
“அப்ப அவன் செத்தான். யார் பெத்த புள்ளயோ இவகிட்ட அடிவாங்க போறான்”, செந்தில்.
“சேரலாதன் பெத்த புள்ளையா தான் இருக்கும் செந்தில். நீங்க இவள டிராக் பண்ணுங்க அப்ப தான் இவ என்ன பண்றான்னு நமக்கு தெரியும். எதாவது வில்லங்கத்த இழுத்துக்குவா அப்பறம் இவள சேப் பண்றது கஷ்டமாகிறும்”, பரிதி.
“இவ்ளோ ரிஸ்க் எடுத்து இவள அங்க அனுப்பனுமா பரிதி?”, செந்தில் கவலையுடன் கேட்டான்.
“நமக்கு வேற வழி இல்ல செந்தில். இவள தவிர யாரும் இந்த வேலைய செய்யவும் முடியாது. நாளைக்கு அந்த வெண்பா பிரண்ட் மதுரை வராலாம் போய் பாத்துருங்க, பரத் அ கூட்டிட்டு போங்க”, பரிதி.
“சரிமா. உன்கிட்ட குடுத்த டீடைல்ஸ் வச்சி எதாவது கெஸ் பண்ண முடிஞ்சதா? யாரு இவங்களுக்கு பின்னாடி இருக்கறதுன்னு?”, செந்தில்.
“இல்ல செந்தில். நாளைக்கு இருந்து நீங்க எடுத்த லிஸ்ட்ல இருக்கறவங்களுக்கு பணம் போக போகுதுன்னு டிஐஜி சொன்னாரு. அந்த 20 – 30 ஊருல இருக்கற ஸ்டேசன்ல நமக்கு சாதகமா இருக்கற ஆளுங்கள போடச் சொல்லி இருக்கேன். நம்ம பார்வைக்கு வராம எப்.ஐ.ஆர் போடாத மாதிரி பாத்துக்க சொன்னேன்”, பரிதி.
“அது எப்படி பரிதி முடியும்? இந்த ஊருக்குள்ள இப்ப ஸ்டேசன்ல கொறஞ்சது 2 பேராவது இவனுங்க ஆளுங்க இருப்பாங்க. எப்.ஐஆர் போடாமயே நிறைய டீலிங் போயிட்டு இருக்கு. எல்லா இடத்துலயும் நம்ம ஆளுங்கள போடறது கஷ்டம். டிஐஜி நடவடிக்கை எல்லாமே மானிடரிங்ல இருக்கு. சஸ்பெக்ட் பண்ணினா நமக்கு தான் லாஸ்”, செந்தில்.
“புரியிது செந்தில் பட் நான் ஸ்பெஷல் விங்அ கூட்டிட்டு வர வரைக்கும் நிலைமை நம்ம கன்ட்ரோல்ல இருக்கனும். அதுக்காக தான் ஸ்டெப்ஸ் எடுக்கறேன். அந்த குப்பம் இவனுங்க பேருக்கு ரெஜிஸ்டர் ஆக கூடாது. நம்ம நாட்டுக்கே பெரிய கேடு அப்படி நாம நடக்க விட்டா”, பெரு மூச்சு எறிந்தாள் பரிதி.
“இன்னும் 4 நாள் நம்ம ரவுடி எப்படியும் டீடைல்ஸ் கொண்டு வந்துடுவா”, செந்தில் சமாதனம் கூறினான் தனக்கும் சேர்த்து.
“சரி நான் கிளம்பறேன் அவ உடம்புல டிராக்கிங் சிப் இன்செர்ட் பண்ணிடுங்க. அவளுக்கு அது தெரிய வேணாம்”, பரிதி கூறிச் சென்றுவிட்டாள்.
யாத்ராவின் அறைக்கு சென்ற செந்தில் அவள் குழந்தைப் போல உறங்குவதைக் கண்டு மென்னகை புரிந்தான். அவள் உடலில் டிராக்கிங் சிப்பை செலுத்தி விட்டு தன் அறைக்கு சென்றுப் படுத்தான்.
ரெண்டும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சிகிட்டாலும் பாசம் கொள்ளை கொள்ளையா வச்சி இருக்குதுங்க போல……..
அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சேரலாதன் இல்லத்தில் இருந்தாள் பூவழகி @ யாத்ரா.
நெடுமாறன் அப்பொழுது தான் அந்த வீட்டிற்குள் வந்தான், இவளைக் கண்டும் காணாமல் அவன் வேலையைச் செய்துக் கொண்டிருந்தான்.
இவளும் திமிரானப் பார்வைக் கொண்டு அவனை பார்த்துவிட்டு, அங்கு நடப்பவற்றை கவனித்துக் கொண்டு இருந்தாள்.
சேரலாதன் வரவும் எழுந்து நின்றாள் கடுப்போடு.
“ஏ பொண்ணு உன் பேரு என்ன ?”, சேரலாதன்.
“பூவழகிங்க ஐயா”, என பாண்டி பதிலுரைத்தான்.
சேரலாதன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளிடம்,”என் பையன் கிட்ட துப்பாக்கி வாங்கி சுட கத்துக்கோ. அப்பறம் உனக்கு சம்பளம் எவ்வளவு வேணும்?”.
“அதுலாம் எதுக்குபா அவகிட்ட கேட்டுட்டு நாம குடுக்கறத வாங்கிட்டு போகட்டும்”, நெடுமாறன் இடையில் புகுந்தான்.
“எனக்கு மாசம் ஐம்பதாயிரம் வேணும் சார். இங்க என்ன பண்ணனும்னு சொன்னா வேலைய ஆரம்பிச்சுருவேன்”, பூவழகி.
“நான் 15 வருஷமா ஐயா கூட இருக்கேன் எனக்கே 20 ஆயிரம் தான் சம்பளம் உனக்கு 50 கேக்குதா?”, பாண்டி நடுவில் பேசினான்.
“நான் தங்கி இருக்கற ஹாஸ்டல் வாடகை மாசம் 10 ஆயிரம் அது போக மத்த செலவு சேமிப்புன்னு இருக்கு. அது மட்டுமில்ல கம்ப்யூட்டர்ல இருந்து துப்பாக்கி வேலை வரைக்கும் பாப்பேன்”, கடுப்பாக கூறினாள்.
“சரி சரி. பொம்பள புள்ள செலவு இருக்கும். மாறா இந்த பொண்ணுக்கு 50ஆயிரம் சம்பளம் போட்ரு. துப்பாக்கியும் குடுத்துட்டு, சுட சொல்லி குடுக்க ஆள போடு. நீ அந்த ஈ-மைல் சொன்னல அத இந்த புள்ளைக்கி காட்டு இதால புரிஞ்சிக்க முடியுதான்னு பாப்போம்”, சேரலாதன்.
“அத எதுக்கு இவகிட்ட காட்டணும் . நாமளே பாத்துக்கலாம்பா. புதுசா வந்தவங்கள நம்பறது கஷ்டம்”, அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கூறினான் நெடுமாறன்.
“அட இந்த புள்ள மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம ராமுக்கு நல்லா தெரிஞ்ச புள்ளதான். நீ இங்க பாத்துக்க நான் உன் அத்தை வீட்டுக்கு போய் புது நர்ஸ்அ பாத்துட்டு அப்படியே கட்சி ஆபீஸ் போறேன். வரட்டா”,சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அவன் கிளம்பியதும் அவளை அழைத்துக் கொண்டு நெடுமாறன் மாடிப் பின்கட்டிற்கு சென்றான். அவளும் ஏதும் பேசாமல் அந்த வீட்டைக் கண்களால் அளந்துக் கொண்டுச் சென்றாள்.
அங்கே அவளை வெளியே நிற்க வைத்து விட்டு, உள்ளே சென்று ஒரு கைத் துப்பாக்கி சைலன்சர்வுடன் அவளிடம் குடுத்தான்.
அதை வாங்கியவள் அதைச் சுற்றிபிடித்து பார்த்தாள்.
“எப்படி சுடறதுன்னு பாக்கறியா?”, நக்கலாகக் கேட்டான் நெடுமாறன்.
அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு “எப்ப இருந்து இந்த தொழில் பண்ண ஆரம்பிச்ச? ரொம்ப நல்லவன் வேஷம்லா போட்ட. கடைசியில உன் அப்பன் கூடவே சேந்துட்ட” ,முகம் சுழித்து அமர்த்தலாய் அவளும் வினவினாள்.
“உண்மைய சொல்லு எதுக்கு இங்க வந்த?”, நெடுமாறன்.
எதுவும் கூறாமல் அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து, “கேக்கறேன்ல பதில் சொல்லு டி”,நெடுமாறன்.
“என் வேலைய பாக்க வந்து இருக்கேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாத”,அவன் கையை உதறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
கீழே வந்தவளிடம் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்பட்டது. அதில் அவள் ஆராய ஆரம்பித்ததும், “மாட்டினீங்க டா எல்லாரும்”,என கூறி மர்மமாகப் புன்னகைத்தாள் பூவழகி @ யாத்ரா.