13 – அகரநதி
“டேய் இப்படி சொன்னா எப்படி டா? ஒன்னு லவ் பண்றேன்னு சொல்லு இல்லையா பிரண்ட்னு சொல்லு.இரண்டுக்கும் சேராம இப்படி சொன்னா நான் எப்படி எடுத்துக்க?”, சரண் தலையை சொறிந்தபடிக் கேட்டான்.
“எனக்கே தெர்ல மச்சான். அவகிட்ட நான் எத எதிர்பார்க்கிறேன்னு. ஆனா அவகூடவே நான் எப்பவும் இருக்கணும். அது மட்டும் தான் என் மனசுல இருக்கு. அவள யாரும் ஹர்ட் பண்ணாம பாத்துக்கணும், அவ ஆசைபடறது எல்லாமே செஞ்சி குடுக்கணும், அவ எது கேட்டாலும், அந்த செகண்ட் வாங்கி தரணும், அவ என்ன செய்ய ஆசைபடறாளோ அதையெல்லாம் செஞ்சிகுடுக்கணும். மொத்தத்துல அவளோட வாழ்க்கைல நான் எல்லா இடத்துலயும், எல்லா நேரத்துலயும் அவகூடவே இருக்கணும், அவள சந்தோஷமா வச்சிக்கணும். வெறும் காதல்னு ஒரு வார்த்தைல அத நான் சொல்லமுடியாது டா”, அகரன் கனவுலகில் சஞ்சரித்தபடி கூறிக்கொண்டு இருந்தான்.
“ஹ்ம்ம்….. சுத்தம்….. மொத்தமா கழண்டுரிச்சி…. இனி நம்ம உயிர வாங்கப்போறான்”, என முணுமுணுத்துக்கொண்டான் சரண்.
“சரண்…. மச்சான்…. நம்ம வீட்ல நான் நதிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா ஒத்துப்பாங்க தானே?”, அகரன் தயங்கித் தயங்கிக் கேட்டான்.
“அத உன் மீனு கிட்ட போய் கேளு. என்கிட்ட கேட்டா?” , சரண்.
“நீ தான்டா நதி வீட்ல பேசணும்”, அகரன்.
“ஏது நானா? ஏன்டா இப்படி படுத்தற என்னை?”, சரண்.
“என்னடா…. இத்தனை வருஷமா மச்சான்னு கூப்பிடற உன் தங்கச்சிய கட்டிகுடுக்கமாட்டியா?”, அகரன் அவனின் தோளில் அடித்துக் கேட்டான்.
“அத அடிக்காம கேள்றா எரும… இங்க பாரு நீ நல்ல பையன், சொந்தமா தொழில் நடத்துற உனக்கு பொண்ணு குடுக்க எல்லாரும் ரெடியா தான் இருப்பாங்க. ஆனா ஏன் நீ யாள கேக்கறன்னு எனக்கு தெர்ல. ஆனாலும் அவள நீ எப்படியெல்லாம் பாத்துக்கணும்னு சொன்னியோ அதுல்லாம் நிச்சயமா வெறும் காதல் மட்டும் இருந்தா நடக்காது. காதலையும் தாண்டி ஆத்மார்த்த உறவா இருந்தா தான் சாத்தியம். அவளையும், அவ பண்ற சேட்டையும் பொறுத்துகிட்டு வாழ்றது ரொம்பவே கஷ்டம் மச்சான். நல்லா யோசிச்சிக்க. டைம் இருக்கு. இப்போதிக்கு யாளுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்ல.. அத யாளும் ஒத்துக்கமாட்டா. அதனால உன்ன நீ தெளிவாக்கிக்க ,அவள சமாளிக்க முடியுமான்னும் யோசிச்சி சொல்லு. நானே சித்தப்பாகிட்ட பேசறேன்”, சரண் நீளமாக பேசி முடித்தான்.
“சரி மச்சான். ஆனா நதி எப்பவும் எனக்குதான். அது மட்டும் உறுதி”, அகரன் சிரித்தபடிக் கீழிறங்கினான்.
“பாவம் வீட்டுக்கு ஒத்த புள்ள இப்படி பித்து பிடிச்சி திரியுதே..”, என சரண் புலம்பிக்கொண்டே பின்னால் வந்தான்.
“டேய்… சரணா…. இங்க வாடா”, நதியாள்.
“அண்ணன்னு மரியாதையா கூப்பிடறியா நீ? எப்ப பாரு பேர சொல்லி வாடா போடான்னு கூப்பிடறது”, சரண்.
“மரியாதை எல்லாம் நாங்களா குடுக்கணும். நீயா கேட்டு வாங்கக்கூடாது டா சரணா”, நதியாள்.
“நீ குடுத்துட்டாலும். என்ன விஷயம் சொல்லு”, சரண்.
“இங்க வாடா முதல்ல…அகனையும் கூட்டிட்டு வா”, நதியாள்.
“எங்க இருக்க நீ ?சத்தம் மட்டும் தான் வருது”, சரண்.
“இங்க சுந்தா ரூம்ல இருக்கேன் வாடா எரும”, நதியாள்.
“சீக்கிரம் போலாம் வா மச்சான் இல்லைன்னா இன்னும் என்ன என்ன சொல்வாளோ தெரியாது”, எனக் கூறிச் சரண் அகரனை இழுத்துக்கொண்டுச் சென்றான்.
“வாங்கடா பேராண்டிகளா”, சுந்தரம் தாத்தா அறையினுள் அழைத்தார்.
“என்ன தாத்தா?”, எனக் கேட்டபடி அகரன் அவரின் அருகில் அமர்ந்தான்.
“இந்தா துணி எடுத்துட்டு வர சொன்னேன். பிடிச்சத எடுத்துக்கங்க”, சுந்தரம் தாத்தா.
“என்ன திடீர்னு இப்ப புது துணி?”, சரண்.
“திருவிழாக்கு தான். எப்பவும் உன் அப்பாகிட்ட குடுத்து அனுப்புவேன். இப்ப தான் இங்கனயே நீ இருக்கல்ல நீ பிடிச்சத எடுத்துக்க. வேஷ்டி தான் கட்டணும். சட்டை உங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கங்க”, சுந்தரம்.
“அகன்..உனக்கு இது நல்லா இருக்கும். இந்த கலர் உனக்கு பிடிச்சி இருக்கா?”, நதி இரண்டு சட்டைகளை அவனிடம் காட்டினாள்.
“சந்தனம் கலர் நல்லா இருக்கும் அவனுக்கு. ஆனாலும் டார்க் கலர் எடுக்கலாமே”, சரண்.
“நான் அகன தான் கேட்டேன். உனக்கு அந்த பக்கம் இருக்கு பாரு லைட் ஆரஞ்ச் க்ரீம் கலரும் , க்ரே சர்ட்டும் அது உனக்கு பைனல்”, நதியாள்.
“என்னால ஒத்துக்க முடியாது. எனக்கு பிடிச்சத நான் தான் எடுத்துப்பேன்”, சரண்.
“பெரியப்பா கிட்ட சொல்லிட்டேன். நான் சொல்றது தான் நீ எடுத்தாகணும். இல்லைன்னா இப்பவே கால் பண்ணி வரசொல்வேன்”, நதியாள்.
“அவர்கிட்ட திட்டுவாங்கறதுக்கு இவ குடுக்கறத போட்டுக்கலாம்”, என முணுமுணுத்துவிட்டு ,”அப்ப அவனுக்கும் நீயே செலக்ட் பண்ணு”, சரண்.
“பொறுமை சரணா. அத தான் பண்ணப்போறேன். என்ன அகன் உனக்கு இந்த சான்டல் சர்ட், அப்பறம் அந்த நேவி புளூ சர்ட். இரண்டு பேருக்கும் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி எடுத்துட்டேன். நாளைக்கும், நாளை மறுநாளும் இது தான் நீங்க போடணும். சுந்தா மத்தது எல்லாம் அனுப்பிடு மாமாக்கு அப்பாக்கு பெரியப்பாக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.உனக்கும் ஸ்பெஷலா எடுத்துட்டேன்”,நதியாள்.
“ஹேய்…. நீயே எல்லாருக்கும் எடுத்துட்டியா?”, சரண்.
“ஆமா…. இந்த வருஷம் என் செலக்சன் தான் எல்லாருக்கும். இந்த வருஷமாது உன்ன பொண்ணுங்க திரும்பி பாக்கட்டும்னு தான் நானே உனக்கும் செலக்ட் பண்ணேன் டா சரணா”, நதியாள்.
“நான்லாம் தெருவுல இறங்கி நடந்து வந்தா எத்தனை பொண்ணுங்க தெரியுமா என்னை சைட் அடிப்பாங்க”, சரண்.
“ஹிஹிஹி… குட் ஜோக் சரணா. அடுத்த மாசம் சிரிக்கறேன்”, நதியாள் சிரிக்காமல் அவனைக் கலாய்த்தாள்.
“உன்ன… “, சரண் அடிக்க எந்திரிக்க அகரன் அவனை அடக்கினான்.
“நதிமா உனக்கு டிரஸ் நான் செலக்ட் பண்ணவா?”, அகரன்.
“ம்ம்…. சரி அகன். புடவை செக்க்ஷன் சாயந்திரம் வருமாம். அப்ப நீயே எனக்கு செலக்ட் பண்ணு”,நதியாள்.
“நானும் என் ஆசை தங்கச்சிக்கு செலக்ட் பண்ணலாம்னு இருக்கேன்”, சரண்.
“அத நான் பாக்காமலே ரிஜக்ட் பண்ணலாம்னு இருக்கேன்”, நதியாள்.
“நீ செலக்ட் பண்ணத நான் எடுத்துகிட்டேன்ல. அதே மாதிரி நான் எடுத்து குடுக்கறத நீ எடுத்துட்டு தான் ஆகணும்”, சரண்.
“அப்படியா சரணா. எனக்கு நீ எடுத்து தரியா? எத்தனை டிரஸ் எடுத்து தருவ?”,நதியாள் மந்திரப்புன்னகை உதிர்த்தபடிக் கேட்டாள்.
“நீ எத்தனை கேட்டாளும்”, சரண்.
“டேய்.. மச்சான்…”, அகரன் சரணைச் சுரண்டினான்.
“இரு மச்சான். சொல்லிட்டு இருக்கேன்ல”,சரண் அவனை கையைத் தட்டிவிட்டான்.
“சரி. பிராமிஸா எடுத்து தருவ தானே?”, நதியாள் கையை நீட்டி கேட்டாள்.
“அட. உன் தலைல அடிச்சி சொல்றேன். சத்தியமா எடுத்து தரேன் நீ எத்தனை கேட்டாளும்”, சரண்.
“பாத்துக்கோங்க சுந்தா, அகன். நீங்க தான் சாட்சி. இவன் எனக்கு டிரஸ் எடுத்து தரேன்னு சொல்லி சத்தியம் செஞ்சி இருக்கான்”, நதியாள் மர்மமாகப் புன்னகைத்தபடிக் கூறினாள்.
“ஹாஹா… நான் சாட்சி சொல்ல ரெடி நதிகுட்டி. என்னப்பா அகரா… நீயும் தானே”, என மீசையை நீவியபடிக் கேட்டார் சுந்தரம் தாத்தா.
“ஆமாம் தாத்தா. நானும் சாட்சி தான். சிட்டில கூட நானே சாட்சி”,எனக் கண்ணடித்துக் கூறினான் அகரன்.
“டபுள் ஓகே அகன்”, என நதியாள் அவனின் கைகளில் ஹைபை அடித்தாள்.
“என்ன நடக்குது இங்க?”,சரண் யோசித்தபடிக் கேட்டு அவர்களின் செய்கையில் குழம்பினான்.
“ஒன்னும் இல்ல சரணா”, நதியாள்.
“சாப்பிட வாங்க எல்லாரும்”, மீனாட்சி பாட்டி சத்தம் கொடுத்தார்.
“வந்துட்டோம் பாட்டி”, என நதியாள் முதலில் ஒடினாள்.
“அத்தை… எல்லாம் ரெடியா? வாசனை ஆள தூக்குது”, என வாசனையை உள்இழுத்தவாறு கேட்டாள்.
“வா உட்கார்”, என அவளை உட்கார வைத்தார் திலகவதி.
“நீங்களும் உக்காருங்க”, நதியாள்.
“நீங்க சாப்பிடுங்க. நானும் பாட்டியும் அப்பறம் சாப்பிடறோம்”, திலகவதி.
“ம்ம்… சரி அப்ப நானும் உங்க கூடவே சாப்பிடறேன்”, நதியாள்.
“நீ முதல்ல உட்கார். உனக்கு பசி எடுத்து இருக்கும்”, திலகவதி.
“இல்ல. தாத்தா மாமா அகன் சரணுக்கு முதல்ல பறிமாறலாம். அப்பறம் நாம மூனு பேரும் ஒன்னா உக்காந்துக்கலாம்”, நதியாள்.
“நதிகுட்டி….”, திலகவதி அவளைக் கட்டாயப்படுத்தினார்.
“நான் சொன்னது தான் பைனல். அவங்க முதல்ல சாப்பிடட்டும். நாம ஒன்னா சாப்பிடலாம். சுந்தா வாங்க இங்க உக்காருங்க. சரணா போய் மாமாவ கூட்டிட்டு வா. அகன் நீ சுந்தா பக்கத்துல உட்கார். நான் பறிமாறுறேன் இன்னிக்கி”, நதியாள்.
“என்ன இது? நீ உட்காராம நின்னுட்டு இருக்க?”, மீனாட்சி பாட்டி.
“நம்ம கூட சாப்பிடறாளாம் அத்தை. சொன்னா கேட்கமாட்டேங்குறா”, திலகவதி.
“மீனு நான் சொல்றது தான் கேக்கணும். பர்ஸ்ட் அவங்க சாப்பிடட்டும். அப்பறம் நாம பொறுமையா நிறைய சாப்பிடலாம்”, நதியாள்.
“சரி. இந்தா…உனக்கு புடிக்குமேன்னு முந்திரிகேக் பண்ணேன். இத முதல்ல நீ சாப்பிடு”, மீனாட்சி பாட்டி ஒரு துண்டு அவளின் வாயில் ஊட்டினார்.
“ம்ம்ம்ம்…. மீனு….. சூப்பர்ர்ர்ர்ர்…. வாயில வச்சதும் கரைஞ்சிடிச்சி. நெய்யும் கரெக்டா இருக்கு. அத தனியா எடுத்து வை அப்பறம் ஒரு பிடி பிடிக்குறேன்”,,நதியாள்.
“அது எடுத்து வச்சிட்டேன். எங்க இந்த சிதம்பரம் இன்னும் காணோம்”, மீனாட்சி.
“வந்துட்டேன் மா”, கூறியபடி சிதம்பரம் கைகளைக் கழுவிக்கொண்டு வந்தமர்ந்தார்.
“வாய்யா…நேரமாச்சில்ல… திலகா பறிமாறும்மா”, மீனாட்சி.
“இருங்க நான் பறிமாறுறேன்”, நதியாள் முதலில் இனிப்பை அனைவருக்கும் பறிமாறினாள்.
“என்னம்மா நதிய உட்கார வைக்காம பறிமாற விடறீங்க. விருந்தே அவளுக்காக தானே. என்ன திலகா?”, சிதம்பரம் கேட்டார்.
“நான் தான் மாமா பறிமாறனும்னு சொன்னேன். நான் அத்தை பாட்டி மூனு பேரும் ஒன்னா உட்காந்துக்கறோம்”, நதியாள்.
“அப்ப எங்க கூட உட்கார மாட்டியா நதிக்குட்டி?”, சிதம்பரம்.
“அப்படி இல்ல மாமா. நான் பொறுமையா சாப்பிடுவேன். நாங்க மூனு பேரும் எதாவது பேசிட்டே சாப்பிடுவோம் அதுக்காக தான். கெடா விருந்து வைக்கறப்ப சொல்லுங்க உங்க கூட சாப்பிடறேன்”, நதியாள் பேசிக்கொண்டே அனைத்தையும் பறிமாறினாள்.
“சைவத்துக்கு இந்த மாமா கூட உட்கார மாட்ட. சரி திருவிழா முடிஞ்சதும் உனக்காகவே ஸ்பெஷலா விருந்து வைக்கறேன்”, சிதம்பரம்.
“தேங்க்ஸ் மாமா”, சிரித்தபடிக் கூறினாள்.
“பாத்தியா மச்சான் சைவம் உள்ள இறங்கறது கஷ்டம்னு இப்ப நம்ம கூட உட்காரல. அசைவத்துல எல்லாம் காலியாகிடும்னு அப்ப உங்கப்பா கூட முதல் பந்தில உட்கார்ந்து சாப்பிடறாளாம். எவ்வளவு நேக்கா பேசறா…? நமக்கு ஏன் இது தெரியாம போச்சி?”, சரண் அகரனின் காதைக் கடித்தான்.
“உனக்குன்னு சொல்லு மச்சான். உன் தங்கச்சி உன்கிட்ட நேக்கா பேசி சத்தியத்த வாங்கிட்டா. வச்சி செய்யப்போறா இனி அதுக்கு தயாரா இருந்துக்க”, அகரன்.
“என்னடா சத்தியம்?”, சரண் புரியாமல் கேட்டான்.
“அங்க என்னடா முணுமுணுப்பு சாப்பிடறப்ப? பேசாம சாப்பிடுங்க”, மீனாட்சி சத்தம் போடவும் இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அகரனின் கண்கள் நதியை சுற்றியபடியே இருந்ததை, பெரியவர்கள் நால்வரும் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தனர். சுந்தரமும் மீனாட்சியும் சிரிப்புடன் தலையசைக்க, திகலவதியும் சிதம்பரமும் அகரனின் கண்களில் தெரியும் சந்தோஷத்தையும், அன்பையும் கண்டு தங்களுக்குள் மனநிறைவு பெற்றனர்.
சாப்பிட்ட இலைகளை வேலையாளை வைத்து எடுத்தபின் திலகவதி புது இலையைப் போட்டு பொறியல் அனைத்தும் பறிமாறினார்.
மீனாட்சி பாட்டி கப்பில் நுங்கு பாயாசத்தை ஊற்றிக் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச்சொன்னார்.
“ராசாத்தி…இன்னொரு கப் குடுறா”, சுந்தரம் தாத்தா.
“போதும் சுந்தா. ரொம்ப இனிப்பா இருக்கு. உனக்கு இவ்வளவு இனிப்பு ஒத்துக்காதுல்ல”, நதியாள்.
“என் தங்கம்ல. இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும்”, என அவளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினார்.
“சரி ஆனா ஒரு கண்டிசன்”, நதியாள்.
“நான் சாயந்திரம் ஒரு ஜூஸ் குடுப்பேன் அதை மறுக்காம குடிக்கறதா வாக்கு குடு எக்ஸ்ட்ரா இரண்டு கப் தரேன்”, நதியாள்.
“சரி இப்ப குடு”, சுந்தரம்.
“இந்தாங்க இரண்டு கப் .. ரூமுக்குள்ள போயி சாப்பிடுங்க. மீனா பாத்தா சத்தம் போடும். நாங்க சாப்பிட்டு வரதுக்குள்ள குடிச்சிறுங்க”, நதியாள்.
“என் ராசாத்தி…..”,என அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு தன் அறைக்கு விரைந்தார்.
“என்ன மிஸ்டர் சுந்தரம்க்கு மட்டும் தனி கவனிப்பு நடக்குது போல?”, கேட்டபடி அகரன் அருகில் வந்தான்.
“அது ஒன்னும் இல்ல. பாயாசம் எக்ஸ்ட்ரா கப் கேட்டாரு அதான் குடுத்தேன்”, நதியாள்.
“அப்ப எனக்கும் கேட்டா கிடைக்குமா?”, அகரன் விஷமமாக கேட்டான்.
“உனக்கு சுகர் இல்லதானே? இந்தா எல்லாத்தையும் நீயே குடிச்சிடு”, என ட்ரேவை அவன் கையில் கொடுத்தாள்.
“எனக்கு இது வேணாம்”, அகரன்.
“வேறென்ன வேணும் அகன்?”, நதியாள்.
“அது…..”,அகரன் எச்சிலை விழுங்கியபடி ஆரம்பித்தான்.
“டேய் மச்சான். இங்க என்ன பண்ற? வா ஆபீஸ்ல இருந்து கால் வந்துச்சு முக்கியமான விஷயம். மெயில் அனுப்பனுமாம். இது என்ன பாயாசமா? சரி இன்னொரு ட்ரே மேல கொண்டு வா யாள்”, சரண் படபடவென பேசியபடி அகரனை இழுத்துக்கொண்டு சென்றான்.
“இருடா வரேன்…. ஏன்டா இப்ப இழுத்துட்டு போற?”, அகரன் எரிச்சலுடன் வினவினான்.
“அவகிட்ட நீ பேசினத பாத்தேன். உன் முழியே சரியில்ல அதான் இழுத்துட்டு வந்தேன். மவனே நீ மட்டும் இடக்குமடக்கா எதாவது கேட்டு இருந்தன்னு வை நம்ம இரண்டு பேரையும் தான் கருப்பசாமிக்கு வெட்டி இருப்பாங்க. உனக்கே இன்னும் தெளிவாகல அதுக்குள்ள என்ன கொஞ்சல் வேண்டி கெடக்கு?”, சரண்.
“அதுல்லாம் அவ ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டா”, அகரன்.
“அப்படியா ? சார் எத அவகிட்ட கேக்கலாம்னு இருந்தீங்க?”, சரண்.
“கன்னத்துல சின்னதா முத்தம் தான்”, அகரன்.
“அடேய்…. அவ ஒன்னும் பத்து வயசு பாப்பா இல்ல நீ கேட்டதும் குடுக்க”, சரண் அதிர்ச்சியுடன் கூறினான்.
“அது இல்ல மச்சான். அவ ஆக்டீவிட்டீஸ் எல்லாம் இன்னும் என்கிட்ட அப்படியே இருக்கா இல்ல சேஞ்ச் ஆகி இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்னு பாத்தேன்”, அகரன்.
“டேய்.. நாம இருக்கறது கிராமம். நம்ம வீட்டு ஆளுங்க முன்ன எக்குதப்பா எதாவது நடந்து தொலைஞ்ச உன்னோட சேத்து என்னையும் தான்டா டின்னு கட்டுவானுங்க. கொஞ்சம் பொறுமையா இருடா ராசா. முதல்ல அவகிட்ட பேசி பழகு அதுக்கப்பறம் கொஞ்சறத வச்சிக்க”, சரண்.
“தேங்க்ஸ்டா மச்சான். நான் போய் நதிக்கு சாப்பாடு பறிமாறிட்டு வரேன்”, அகரன் சரணின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சென்றான்.
“அய்யய்யோ…. இவனுக்கு அவளே தேவல போலவே. இந்த கிறுக்கன எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியலியே… இதுங்க கல்யாணம் நடக்கறதுக்கு முன்ன எனக்கு கருமாதி பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்”,சரண் புலம்பிக்கொண்டே கீழே வந்தான்.
கீழே வந்தவன் அங்கு நடப்பதைக் கண்டு அப்படியே நின்றான். நதிக்கு அகரனும் திலகவதியும் மாறி மாறி ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.
அவளும் கதைப் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
“என்ன நடக்குதுன்னே தெரியலியே… எனக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரிதான்”, சரண் தனக்குத்தானே பேசிக்கொண்டு அவர்கள் அருகில் சென்று அமர்ந்தான்.
நதியாள் முகத்தில் நவரசமும் தழும்ப பேசிக்கொண்டு இருந்தாள். அவள் பேசுவதை மீனாட்சியும், திலகாவும் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டு இருக்க, அகரன் மட்டும் சம்பந்தமே இல்லாமல் உம் கொட்டிக்கொண்டு இருந்தான். அவளின் பேச்சு சுவாரஸ்யத்தில் மற்றவர்கள் கவனிக்கவில்லை, ஆனால் சரண் அகரனை தான் முழுதாக கவனித்தபடி இருந்தான்.
இந்த அகரன் சரணுக்கே முற்றிலும் புதியவன். அகரனின் கண்களில் தெரியும் அன்பும், நதியை வட்டமிடும் கருமணியில் யாதென்றே பிரிக்கமுடியாத உணர்வாய், நதியின் உறவும் உரிமையும் தனக்கே என்ற பாவனை வழிந்தது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரியென்று சரணும் நதியின் பேச்சில் லயித்துவிட்டான்.
மாலையில் பரமசிவம், கண்ணன், மாந்தோப்பு தாத்தாவுடன் இன்னும் சிலர் திருவிழா ஏற்பாடுகள் பற்றிப் பேச வந்தனர்.
அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பார்ச்சூனர் கார் ஒன்று வாசலில் வந்து நின்றது. அதில் இருந்து ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் பளிச்சென்ற முகத்துடன், உயரத்திற்கேற்ற உடற்கட்டுடன், அலை அலையான கேசத்தை ஒருபக்கம் கோதியபடி அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபடி இறங்கினான் அவன்.