15 – அகரநதி
அடுத்த நாள் காலையில் அனைவரும் கோவிலில் இருந்து கலச குடத்தை எடுத்துக் கொண்டு தீர்த்தம் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தனர்.
அகரனும் சரணும் வேஷ்டி கட்டி, இடுப்பில் துண்டு கட்டியபடி கைகளில் குடத்தை எடுத்துக்கொண்டுப் பெரியவர்களைப் பின்தொடர்ந்தனர்.
“சித்தப்பா… யாள் எங்க காணோம்?”, சரண் கண்ணனிடம் கேட்டான்.
“ரெடி ஆகிட்டு இருந்தா சரண். நேரா ஆத்தங்கரைக்கு வந்திடறேன்னு என்னை முன்ன அனுப்பிட்டா”, கண்ணன்.
“தண்ணி எடுக்க என்ன அப்படி ரெடி ஆகறா?”, சரண்.
“வருவா டா. நீயே கடைசி நிமிஷத்துல தான் வந்த. உன் தங்கச்சி எப்படி இருப்பா?”,அகரன் கேலியாக கூறினான்.
“அதான் வந்துட்டேன்ல. அவ இன்னும் வரல. முதல்ல அவதான்டா எடுக்கணும். அதான் கேட்டேன்”, சரண்.
“அதோ வந்துட்டா பாரு”, என தூரத்தில் அவர்களுக்கு எதிர்புறத்தில் ஓடி வந்தாள் நதி.
மஞ்சள் தாவணி பாவாடையில் சற்றுமுன்னே குளித்து அலங்காரம் ஏதும் இல்லாமல் வெறும் பொட்டை மட்டும் நெற்றியில் வைத்து வேர்க்க விறுவிறுக்க மஞ்சள் மைனாவென பறந்து வந்தாள்.
அகரனின் கண்கள் அவளை காதலுடன் வருடிக் கொண்டு இருக்க, இன்னும் மூவரின் கண்கள் இவளை ஒவ்வொரு விதமான உணர்வுடன் பார்த்தது.
மரகதம்மாளின் மகள் வழி பிள்ளைகளான வினய், அவளை திமிருடன் துகிலுகிக்கும் பார்வையை பார்க்க, சரிதா அவளை வெறுப்புடனும் இவள் எல்லாம் தனக்கு போட்டியா என்பதைப் போல பார்த்தாள்.
சக்ரதேவ் அவளை கனிவான பார்வைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இவர்களைக் கண்டுகொள்ளாது வந்த நதியாள் நேராக அகரனுக்கும் சரணுக்கும் நடுவில் வந்து நின்று தன் தந்தையின் கையில் இருந்துக் குடத்தை வாங்கிக் கொண்டாள்..
இந்த வருடம் தான் அனைத்து சம்பிரதாயங்கள் மற்றும் மரியாதையை இவள் ஏற்கப்போவதால் சற்று ஆர்வத்துடனும், கடமையை சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும் வந்து இருந்தாள்.
கோவில் பூசாரி குடும்பத்து பெண்ணை முன்னே அழைக்க நதியாளை முன் விட்டு அகரனும் சரணும் அவளிற்கு பின்னால் நின்றனர்.
“வாம்மா நதியாள்….எப்படி இருக்க?”, கோவில் பூசாரி.
“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க மாமி எல்லாம் எப்படி இருக்கீங்க?”, நதியாள்.
“எல்லாரும் ஷேமமமா இருக்கோம் ஆண்டவன் புண்ணியத்துல. இந்த வருஷம் முதல் மரியாதையை ஏத்துக்க தயாரா வந்து இருக்கியா ?”, கோவில் பூசாரி.
“ஆமாம் மாமா. இப்ப என்ன பண்ணணும் சொல்லுங்க”, நதியாள்.
“நல்லது குழந்த. இப்படி வந்து குடத்த அப்பா கைல குடுத்துட்டு இருபத்தோரு முறை கிழக்கு நோக்கி ஆத்துல முங்கி எந்திரி”, கோவில் பூசாரி அவளை அருகே அழைத்துக் கூறினார்.
“பூசாரி ஒரு நிமிஷம்”, மரகதம்மாள் அவரை அழைத்தார்.
“என் பேத்தியும் வந்து இருக்கா. அவளையும் செய்ய சொல்லலாம்ல”, மரகதம்மாள்.
“கிழவி ஏதோ பிரச்சினைய கிளப்புது மச்சான்”,சரண்.
“இது பெரிய தலைங்க ஏரியா நாம நடக்குதுன்னு முதல்ல வேடிக்கை பாப்போம்…. “, என்ன அகரனும் சரணின் காதில் முணு முணுத்தான்.
“உங்க பேத்தியா? உங்க பையனுக்கு ஒரே பையன் மட்டும் தானே மரகதம்மா”, பூசாரி.
“என் பொண்ணோட பொண்ணு பூசாரி. அவளும் என் பேத்தி தானே”, மரகதம்மா.
“அம்மா….உங்களுக்கு பேத்தியா இருக்கலாம் ஆனா இந்த முதல் மரியாதை உங்க நாலு வீட்ல பொறந்த பெண்களுக்கு மட்டும் தான். அப்படி பெண் பிள்ளைகள் இல்லைன்னா வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தான் குடுக்கணும். மகள வேற வீட்டுக்கு கல்யாணம் செய்து அனுப்பினப்பறம் அவங்க இத செய்ய முடியாது”, பூசாரி.
“அவ என் பேரன கட்டிக்கறவ. அவளுக்கும் உரிமை இருக்குல்ல”, மரகதம்மாள்.
“கல்யாணம் ஆகிடுத்தா?”, பூசாரி.
“இல்லை”, மரகதம்மாள்.
“அப்ப நீங்க இப்படி கேக்க கூடாது. கல்யாணமே ஆகி இருந்தாலும் குடுக்க முடியாது. நதியாள் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போனா தான் அடுத்து யாருக்குன்னு யோசிப்போம். இந்த வருஷம் நதியாள் தான் எல்லாத்தையும் செய்யனும் தவிர அவ நேரடி பெண் வாரிசு. என்ன சுந்தரம் மாமா அமைதியா இருக்கேள் சொல்லுங்கோ”, பூசாரி.
“மரகதம்மா… நதியாளுக்கு தான் நேரடி வாரிசுங்குற உரிமை இருக்கு. மகள் வழி பேத்திக்கு இந்த அந்தஸ்த்த குடுக்கற வழக்கம் இல்ல”, சுந்தரம்.
மீண்டும் ஏதோ மரகதம்மாள் பேச வாய்திறக்கும் சமயம் சந்திரகாந்தன் அங்கு வந்து சேர்ந்தார்.
“ரொம்ப நேரம் ஆகிடுச்சா மாமா? அம்மா நதியாள் தீர்த்தம் எடு. பூசாரி பூஜைய ஆரம்பிங்க”, என படபடவென அடுத்த வேலையைப் பற்றிக் கூறிப் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிட்டார்.
“சரி. நதியாள் கிழக்கு பாத்து கொஞ்சம் ஆழமா இருக்கற இடத்துல இறங்கி நில்லு. தீர்த்தம் எடுக்கற ஆம்பள பசங்களும் வந்து நில்லுங்க”, என அனைவரையும் அழைத்தார் பூசாரி.
பூசாரி ஆற்றில் இறங்கி தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காண்பித்தார். கற்பூரத்தை வெற்றிலையில் வைத்து ஆற்றில் விட்டபிறகு நதியாளை இருபத்தியோரு முறை மூழ்கி எழக் கூறினார்.
அகரனும் சரணும் அவளுக்கு இருபுறமும் நின்று கொண்டனர். சரணின் அருகில் சக்ரதேவ் நின்றிருந்தான்.
நதியாள் மூழ்கி எழுந்ததும்,” ஆம்பள பசங்க மூனு பேரும் பதினெட்டு தடவை முங்கி எந்திரிங்கோ”, பூசாரி.
நடந்த சம்பாஷனைகளில் கோபமுற்ற மரகதம்மாள் முன்னே சென்றுவிட வினையனும், சரிதாவும் அங்கேயே நின்று நடப்பதைக் கவனித்தனர்.
நதியாள் ஆற்றில் இறங்கியதும் ஆர்வமான வினய் அவள் தொப்பளாக நனைந்தபின் பார்க்கும் காட்சிக்காக ஆவலாகக் காத்து நின்றான்.
சரிதா நதியாளுக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் அவள் செய்யும் செயல்களை கோபமுடனும் வெறுப்புடனும் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இதில் விருப்பமில்லாமல் பாட்டியின் சொல்லுக்காக தான் வந்து நின்றாள். ஆனால் அனைவரின் முன்னிலையிலும் தான் நிராகரிக்கபட்டதன் கோபமும் நதியாளின் மீதான வெறுப்பு வன்மமாக மாறிக்கொண்டு இருந்தது.
நதியாள் மூழ்கி எழுந்ததும் ஆற்றில் இருந்து இருபத்தியோரு குடம் தண்ணீரை முதலில் மொண்டுக் கொடுத்தாள். அதன்பின் தான் தூக்கும் குடத்தில் தண்ணீர் நிறைத்து இடுப்பில் வைத்துக்கொண்டு கரையேறி வந்தாள்.
இத்தனை முறை மூழ்கியும் நதியாளின் ஆடை சிறிது கூட விலகவில்லை, அவள் உடலுடன் ஒட்டவுமில்லை. கண்ணியமான தோற்றத்துடனேயே குடத்தை எடுத்துக் கொண்டு மேல் வந்தவளை கண்டு வினய் ஏமாற்றம் அடைந்தான்.
அகரனும் சரணும் கூட அவளின் ஆடை பற்றி சிறிது கவலைக் கொண்டு இருந்தனர். இப்பொழுது அவளின் தோற்றத்தில் திருப்தி கொண்டு, அவரவர் குடத்தில் நீர் எடுத்துக் கொண்டுக் கரைக்கு வந்தனர்.
நதியாளின் கழுத்தில் மாலையிட்டு நெற்றியில் குங்குமம் வைத்து கொள்ள கூறினர். அவளும் விபூதி குங்குமம் இட்டுக்கொண்டாள். குடத்தை தலையில் வைத்துக்கொள்ள கூறவும் சிதம்பரம் அவளுக்கு உதவினார்.
அகரன், சரண், சக்ரதேவ் மூவருக்கும் அதே போல மாலையிட்டு விபூதி குங்குமம் இடச்சொல்லி குடத்தை தோளில் சுமந்து வர கூறினார் பூசாரி.
ஊரில் உள்ள மற்றவர்களும் அவர்களின் பின் குடங்களில் தீர்த்தம் ஏந்திக் கோவிலுக்குக் கொண்டுச் செல்ல ஆயத்தமாக வந்து நின்றனர்.
மேளதாளத்துடன் ஊர்வலம் தொடங்கிக் கோவிலை நோக்கிச் சென்றது.
அனைவருக்கும் முன்னே மஞ்சள் உடையில் வந்த நதியாளை கண்டவர்கள் அவளின் முகத்தைக் கண்டு வணங்கத்தொடங்கினர். அவளின் முகத்தில் பவித்தரமான அழகுடன், தெய்வக்களையும் சேர்ந்து பார்ப்பவரை பயபக்தியுடன் கையெடுத்து கும்பிட வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
பூசாரியும் ஒரு நிமிடம் அவளின் தீட்சண்யமான முகத்தைக் கண்டு உறைந்து நின்றார்.
சுந்தரம், பரமசிவம் ,சிதம்பரம், கண்ணன் ,மாந்தோப்பு தாத்தா, சந்திரகாந்த் அனைவரும் பின்னே ஆளுக்கொரு குடங்களுடன் வந்துக் கொண்டு இருந்தனர்.
கோவில் வந்ததும் நதியாளின் தீர்த்தம் முதலில் அனைத்து சந்நதியில் இருந்த தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
மற்றவர்கள் கொண்டு வந்த தீர்த்தங்களும் அனைத்து கருவறையிலும் பாத்திரங்களில் ஊற்றி வைக்கப்பட்டது.
பின் மாட்டு தொழுவத்தில் தயாராக இருந்த பால் குடத்தையும் நதியாள் மற்றும் மற்ற மூவரையும் எடுத்து வந்து கொடுக்கச் சொல்லினர்.
பூசாரி கூறிய அனைத்தும் எடுத்து வந்து கற்பகிரகங்ளுக்கு கொண்டு வந்து சேர்த்தனர் நால்வரும்.
“என்ன மாமா முடிஞ்சதா?”, சரண்.
“என்னடா அம்பி அதுக்குள்ள டயர்ட் ஆகிட்டியா?”, பூசாரி.
“பின்னே… காலையில் இருந்து தண்ணீர் கூட குடிக்கல. எத்தனை குடம் தூக்கி இருக்கோம். எப்ப இந்த வேலை முடியும்?”, சரண்.
“திருவிழான்னா சும்மாவா. நீங்க நாலு குடும்பம் தானே எல்லாத்தையும் செய்யணும். இத்தனை வருஷம் பிள்ளைகள் யாரும் வரல. இந்த வருஷம் தான் வந்திருக்கேள். அந்த பொண்குழந்தய பாரு எதுவும் பேசாம சொன்னத எல்லாம் அலுப்பில்லாம செஞ்சிண்டு இருக்கா. ஆம்பள பையன் நீ இப்படி அலுத்துக்கலாமோ?”, பூசாரி.
“கொஞ்சம் பாலாவது குடுத்துட்டு தூக்க சொல்லுங்க மாமா. தூக்க எனர்ஜி வேணுமோன்னோ”,சரண்.
“இந்த காலை பூஜை வேலைய முடிச்சிட்டு பால் பழம் சாப்பிட்டுக்கலாம். மதியம் தான் எல்லா சந்நதி தெய்வத்துக்கும் பரிபூரண அபிஷேக ஆரத்தி, அதுக்கப்பறம் அன்னதானம் செஞ்சபிறகு தான் நீங்க அன்னம் சாப்பிடணும். புரிஞ்சதோ நோக்கு?”, பூசாரி.
“பால் பழமா? என்ன மாமா? இப்படின்னு தெரிஞ்சி இருந்தா நான் ஊருக்கே வந்து இருக்கமாட்டேனே”, சரண்.
“வாங்க சரண். இதுல்லாம் இனிமே நாமதானே செய்யணும்”, சக்ரதேவ் அழைத்தான்.
“அதுக்குன்னு சாப்பிடாமயா?”, சரண் சோர்வாகத் தூணைப் பிடித்தபடி அமர்ந்தான்.
“போக போக பழகிடும் சரண் வாங்க. இன்னும் பத்து குடம் தான்”, சக்ரதேவ்.
“இன்னும் பத்தா… மச்சான்….”, என அகரனை அழைத்தான் சரண்.
“என்னடா ?”, அகரன்.
“இன்னும் பத்து குடம் தூக்கணுமாம்டா… வந்து ஹெல்ப் பண்ணு டா”, சரண்.
“சரணா…. உங்களுக்கு குடுத்த வேலைய நீங்க பாருங்க எங்களுக்கு குடுத்தத நாங்க பாக்கறோம். அகன் வா போலாம் நமக்கு இன்னும் நாலு தான் இருக்கு”, என நதியாள் அகரனை இழுத்துக் கொண்டுச் சென்றாள்.
“ராட்சசி…. ஊருக்கு போய் வச்சிக்கறேன் கச்சேரிய. இங்க உன்னை ஒரு வார்த்தை பேச விடமாட்டேங்கறாங்க எல்லாரும்”, முணு முணுத்துக் கொண்டுக் குடத்தைத் தூக்கச் சென்றான் சரண்.
“ஏன் சரண் டயர்ட் ஆகிட்டீங்களா?”, சக்ரதேவ்.
“ஆமா தேவ். விடிகாலைல குடம் தூக்க ஆரம்பிச்சோம் இன்னும் முடியல. உங்களுக்கு பசிக்கலியா?”, சரண்.
“பசிக்குது தான். ஆனா சாமி விஷயம் அதனால எல்லாம் முடிச்சிட்டு சாப்பிடலாம். அவங்க முடிக்கப்போறாங்க”, எனக் கூறி சரணை இழுத்துச் சென்றான் சக்ரதேவ்.
“அவங்க கம்மியா தூக்கறாங்க போல தேவ்”, சரண்.
“இல்ல சரண் நாம தான் கம்மியா தூக்கறோம். அகரனும் நதியாளும் நீங்க தூக்க சிரமம் படுவீங்கன்னு இருபது குடத்துக்கு மேல நீங்க தூக்க வேண்டியத தூக்கிட்டு போய் குடுத்துட்டாங்க. நமக்கு இந்த விங் மட்டும் தான் அவங்க மூனு விங்ல இருக்கற கருவறைக்கு கொண்டு போயிட்டு இருக்காங்க”, சக்ரதேவ்.
“கணக்கு போட்டு பாருங்க இரண்டும் எதாவது பிராடு தனம் செஞ்சி இருக்கும்ங்க”, சரண் புலம்பிக்கொண்டே இரண்டு குடத்தை இரண்டு பக்கம் தூக்கிச் சென்றான்.
“பாத்தியா அகன். இவனுக்காக நாம தூக்கினா நம்மள பிராடுன்னு சொல்றான். இவன என்ன செஞ்சா தகும்?”, நதியாள்.
“ஊருக்கு போய் வச்சிக்கலாம். நீ சீக்கிரம் நம்ம கம்பெனிக்கு வந்து இவன கவனிச்சிக்க நதிமா”, அகரன்.
“வரேன். அதுக்கப்பறம் தெரியும் இந்த நதியாள் பத்தி அவனுக்கு”, நதியாள்.
(இத்தனை வேலைலயும் பயபுள்ள அவன் விஷயத்துல கரெக்டா இருக்கான் பாருங்க நட்பூஸ்…)
“பிள்ளைங்களா…. எல்லாத்தையும் பேஷா இடம் சேத்திட்டேள். எல்லாரும் போய் குளிச்சிட்டு பால் பழம் சாப்பிட்டுட்டு வேஷ்டி சட்டையில வந்துடுங்க. நதியாள் சேலை கட்டிண்டு அலங்காரத்தோட வரணும். பெரியவா எல்லாரும் நேரமா வந்துடுங்கோ”, பூசாரி.
“அப்பாடா. இப்பவாது விட்டாங்களே. அம்மா…அம்மா….எனக்கு பசிக்குதும்மா. எங்கம்மா இருக்க?”, சரண் தன் தாயைத் தேடிச் சென்றான்.
“நதிமா…. கால் வலிக்குதா? நாம கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போலாமா?”, அகரன்.
“இல்ல அகன். அப்படியே மெல்ல மெல்ல நடக்கலாம். சேரி வேற கட்டணும்”, நதியாள்.
“அகரன் கார்ல போகலாம்ல ?”, சக்ரதேவ்.
“இல்ல வரப்பு வழியா போனா ஐஞ்சே நிமிஷம் தான்”, நதியாள்.
“யாள் குட்டி….”, செல்லம்மாள்.
“என்ன பெரியம்மா?”, நதியாள்.
“நில்லுங்க ஒரு நிமிஷம்…தேவ் தம்பி உங்க அம்மா வீட்ல உங்களுக்காக காத்து இருக்காங்க. வெரசா தயாராகி அம்மாவையும், பாட்டியையும் அழைச்சிட்டு வந்துடுங்க”, செல்லம்மாள்.
“சரிங்கத்தை. வரேன் அகரன், வரேன் நதியாள் “, சக்ரதேவ் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டுச் சென்றான்.
“அகரா சரண் எங்க?”, செல்லம்மாள்.
“உங்கள தேடி தான் வந்தான் அத்த. நீங்க பாக்கலியா? ரொம்ப பசிக்குதுன்னு சொன்னான்”, அகரன்.
“அச்சச்சோ… இவனுக்கு பசி வந்தா எதையும் பாக்கமாட்டானே. அபிஷேகம் முடியாம சாப்பிடகூடாது வேற. எங்க போய் தொலைஞ்சான். சரி நீ போய் தயாராகு. யாள் குட்டி நீயும் அகரன் கூடவே போ. நான் சரண யாராயாவது கூட்டிட்டு வர சொல்லிட்டு வரேன். அம்மாவும் அங்க தான் இருக்கா”, செல்லம்மாள் கூறிவிட்டு பரமசிவத்தைத் தேடிச் சென்றாள்.
“பசி தாங்கமாட்டானா அகன் அவன்?”, நதியாள் நடந்தபடிக் கேட்டாள்.
“ஆமா நதி. பசி வந்துட்டா அவ்வளவு தான் யார் இருக்காங்க இல்லைன்னு எல்லாம் பாக்கமாட்டான். அப்படி கலவரம் பண்ணிடுவான் சாப்பிடற வரைக்கும். நல்லா சாப்பிட்டுட்டு வேலை செய்ய ஆரம்பிச்சா மறுபடியும் பசி எடுக்கற வரைக்கும் எதுவும் தொந்தரவு தரமாட்டான் பேச மாட்டான்”, எனக் கூறிச் சிரித்தான் அகரன்.
நதியாளும் சிரித்துக்கொண்டே அகரனைப் பார்க்க இத்தனை நேரம் இல்லாத ஒரு உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.
நதியாள் அகரன் தன்னுடன் தோளுரசி வெற்றுடம்புடன் நடந்து வருவதைக் கண்டு உள்ளுக்குள் இனம்புரியா உணர்வில் வீழ்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை துண்டில் அழுந்த துடைத்தபடி முடியை கோதிவிட்டுக் கொண்டு நடந்தபடி பேசினான்.
அவனின் உயரத்திற்கேற்ற வலுவான உடற்கட்டு, தினமும் உடற்பயிற்சி செய்வதன் விளைவாக இரும்பாக மாறி இருந்தது. சிவந்த மேனியுடன் பறந்து விரிந்த மார்பும், அகன்ற தோள்களும் என ஆண்களின் இலக்கணமென தன்னருகே வருபவனை ஓர் இரசிக்கும் பார்வையுடன் தன்னை அறியாமல் இரசித்தபடி வந்தாள்.
அவள் அமைதியாக வரவும் அகரன்.அவள் தோள் பற்றி ,”நதிமா என்னாச்சி அமைதியாகிட்ட? உனக்கும் பசி எடுத்து இருக்கும்ல. எங்கள விட உனக்கு தான் வேலை ஜாஸ்தி. வீடு வந்துடிச்சி போனதும் அம்மாவ பால் குடுக்க சொல்றேன். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சி ரெடி ஆனா போதும். வா சீக்கிரம் போலாம்”, என அவளின் கரங்களைப் பற்றியபடி வேகமாக நடந்தான்.
இருவரும் கைபிடித்து வருவதைக் கண்ட ராதாவும் திலகவதியும் மனம்நிறைய பார்த்தனர். அகரன் நதியாள் இருவருக்குள்ளும் இருந்த அன்பா, பாசமா? காதலா? ஏதோ ஒன்று அவர்கள் இருவரையும் இணைத்து பார்பவர்களுக்கு நிறைவையும் , சந்தோஷத்தையும் கொடுத்தது.
ராதாவும் திலகவதியும் இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தனர். உள்ளே வந்தவர்கள் இவர்கள் இப்படி நிற்பதைக் கண்டு,”என்னாச்சி இவங்களுக்கு?”, நதியாள் கேட்டாள்.
“அம்மா… அம்மா….”, என திலகவதியை உலுக்கினான்.
“ஹான்…”, என ஒரே நேரத்தில் ராதாவும் திலகவதியும் சுயநிலையடைந்தனர்.
“நதிக்கு பசி எடுத்துரிச்சி.. பால் பழம் குடுங்க. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன்”, எனக் கூறிவிட்டு மாடிப்படி ஏறினான் அகரன்.
“திலாத்தை என்னாச்சி?”, நதியாள்.
“ஒன்னும் இல்ல. வா பால் பழம் சாப்பிட்டு குளிக்க போவியாம். ராதா குழந்தைக்கு பழத்தை குடு நான் பால் காய்ச்சிக் கொண்டு வரேன்”, என அடுப்படிக்கு சென்றார்.
“அம்மா…. சீக்கிரம். பசி பயங்கரமா எடுக்குது. பாவம் அகனுக்கும் பசி எடுத்துரிச்சி ஆனா சாப்பிடாம ஓடிட்டான். அவனுக்கும் கட் பண்ணி குடுங்க நான் குடுத்துட்டு வரேன்”, நதியாள்.
“சரிடா. இந்தா இத குடுத்துட்டு வா. நான் உனக்கு கட் பண்ணி வைக்கறேன்”, ராதா ஒரு தட்டை நதியிடம் கொடுத்தனுப்பினார்.
தட்டை வாங்கியவள் அகரனின் அறைக்கு ஓடினாள்.
“அகன்… அகன்…”, நதியாள்.
“உள்ள வா நதிமா”, அகரன்.
“இந்தா இத முதல்ல சாப்பிடு”, எனப் பழத்தட்டைக் கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியா?”,அகரன்.
“இல்ல. கீழ அம்மா எனக்கு கட் பண்ணிட்டு இருக்காங்க. இத நீ சாப்பிடு. எல்லாம் சாப்பிட்டு தான் குளிக்க போகணும். நீ குளிச்சதும் பால் கொண்டு வந்து தரேன்”,நதியாள்.
“இந்தா முதல்ல நீ சாப்பிடு”,என ஒரு ஆப்பிள் துண்டை அவளுக்கு ஊட்டினான் அகரன்.
“நான் கீழ போய் சாப்பிடறேன் இப்ப நீ சாப்பிடு”, என அவனுக்கு ஊட்டினாள் நதி.
“நதிமா. உனக்கு கால் வலிக்கல?”, அகரன்.
“லைட்டா… சுடுதண்ணில குளிச்சா சரியாகிடும். நீயும் சுடுதண்ணில குளி. ரெடி ஆகிட்டு வரேன்”, என வெளியே புறப்பட்டாள் நதி.
“நதிமா…. எப்பவும் எனக்கு இப்படி எல்லாமே நீயே செய்வியா?”, அகரன் ஒருவித ஏக்கத்துடன் கேட்டான்.
நதியாள் அவனின் பேச்சை முழுதாய் கேட்காமலே கீழிருந்து ராதா அழைக்கவும் நிற்காமல் சென்றுவிட்டாள்.அகரனின் கேள்வி காற்றோடு கலந்தது.
அகரன் பெருமூச்செறிந்தபடி பழத்தை சாப்பிட்டுவிட்டு குளிக்கச் செல்லும் சமயம் சரண் உள்ளே வந்தான்.
கீழே வந்தவள் பால் சிறிது அருந்தி பழமும் சாப்பிட்டுவிட்டு குளிக்கச்சென்றாள்.
குளித்துவிட்டு வந்ததும் அகரனுக்கும், சரணுக்கும் பால் எடுத்து கொண்டு மேலே சென்றாள்.
“எரும மாடு சரணா. இந்தா பால். இது அகனுக்கு. நீயே எல்லாத்தையும் குடிச்சிடாத”, நதியாள்.
“யாள் குட்டி வாடா ரெடி ஆகு”, என செல்லம்மாள் குரல் கொடுக்க கீழே ஓடினாள்.
“நடக்கறாளா பாரு.. ஓடிட்டே இருக்கா… எப்பதான் நடக்க கத்துக்குவாளோ?”, சரண் முணுமுணுத்தான்.
“என்னடா தனியா பேசிட்டு இருக்க?”, எனக் கேட்டபடி அகரன் குளித்துவிட்டு வந்தான்.
“எல்லாம் அந்த வாலு தான். நடக்கறதே இல்ல. ஓடிட்டே தான் இருக்கா இன்னமும்”, சரண்.
“அதுக்குள்ள ரெடி ஆகிட்டாளா?”, அகரன்.
“இல்ல குளிச்சிட்டா. பால் கொண்டு வந்து குடுத்துட்டு கீழ கூப்பிட்டதும் ஓடிட்டா”, சரண் அகரனுக்கு பால் எடுத்துக் கொடுத்தான்.
“ஹாஹா…. இது தெரிஞ்ச விஷயம் தானே டா”,அகரன்.
“அது தெரிஞ்ச விஷயம் தான். இன்னமும் பத்து வயசு பொண்ணு மாதிரி ஓடிட்டே இருந்தா எப்படி? அப்பறம் உன் பாடு தான் கஷ்டம் மச்சான்”, சரண்.
“அது என் கவலை உனக்கு என்ன? நதிய குறை சொல்லிட்டே இருக்காத. அவளுக்கு தெரியும் எப்ப எப்படி நடந்துக்கணும்னு”, அகரன் அவளை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.
“சரிதான். நீயாச்சி. அவளாச்சி… நான் ரெடி ஆகறேன். சீக்கிரம் ரெடி ஆகி கீழ வா. சும்மா சொல்லக்கூடாது அந்த ராட்சசி நல்லா தான் சர்ட் செலக்ட் பண்ணி இருக்கா. அழகா ஒரு போட்டோ எடு வந்து என்னை”, சரண் கண்ணாடி முன் நின்று வேஷ்டியை சரி செய்தபடிக் கூறினான்.
“ம்ம்… அவள ராட்சசினு சொன்னதால எடுக்கமாட்டேன் போடா”, அகரன்.
“மச்சான்…”, சரண்.
“என்ன?”, அகரன்.
“சரி நான் செல்பி எடுத்துக்கறேன் போ. நீ என்ன கலர் போடப்போற?”, சரண்.
“நதி என்ன கலர் சேரி கட்டுவா?”, அகரன்.
“கேட்டுட்டு வரவா?”, சரண்.
“வேணாம். பாப்போம் நான் நேவி புளூ போடறேன். நான் எடுத்தது கட்றாளா நீ எடுத்தது கட்றாளான்னு”, அகரன் கூறிவிட்டு அம்சமாக தயாராகி கீழே வந்தான்.
அதே சமயம் நதியும் புடவை கட்டி தலைமுடியை லூசாக பின்னலிட்டு லேசான ஒப்பனையில் கதவை திறந்து வெளியே வந்தாள்.
அகரனின் கண்கள் விரிந்தது விரிந்தபடியே நின்றுவிட்டது. எதிரில் தங்கமயிலென அகரன் எடுத்து கொடுத்தப் புடவைக்கு, கான்ட்ராஸ்ட் கலரில் ப்ளவுஸ் அணிந்து, பாந்தமாக பிளீட்ஸ் எடுத்து தங்கசிலை என வெளியே வந்தவளை அகரனின் கண்களும் மனமும் ஒரு நொடி கூட தவறாது படம் பிடித்தபடி இருந்தது.
“பெரியம்மா நான் ரெடி”, என வந்து நின்றவளை தாயுள்ளம் மூன்றும் பிரமித்து பார்த்தபடி நின்றனர். மெல்லிய அலங்காரத்திலே தங்கமென ஜொலிப்பவளைக் கண்டு உள்ளம் பூரித்து போனது மூவருக்கும்.
“இந்த நகை எல்லாம் போடணும் வா. வெறும் ஒரு செயின் மட்டும் போட்டுட்டு இருக்க. அந்த தோட கழட்டு. இந்தா மாட்டிலோட இத போடு. திலகாண்ணி அவ கைக்கு இந்த வளையல போடுங்க. ராதா இந்தா நெத்தி சுட்டி வை. அப்படியே நில்லு”, என செல்லம்மாள் ஒவ்வொன்றாய் அவளுக்கு அணிவித்தார்.
“பெரியம்மா… என்ன இது? இவ்வளவு நகை. இவ்வளவு வேணாம். ஒரு நெக்லஸ் போதும். இரண்டு வளையல் போதும் திலாத்தை. அம்மா நெத்தி சுட்டி எல்லாம் வேணாம்மா. ரொம்ப ஓவரா இருக்கும்மா….”, நதியாள் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.
“இதுல்லாம் போட்டுகிட்டு தான் பூஜைக்கு நிக்கணும். பொம்பள புள்ள இது கூட போட்டுக்காம என்ன? அமைதியா இரு. எல்லாம் போட்டுட்டு பாத்தா எப்படி இருக்கும் தெரியுமா? ராஜகுமாரியாட்டம் இருப்ப. வேணான்னு சொல்லக்கூடாது யாள் குட்டி”, செல்லம்மாள்.
“பெரியம்மா வேணாம்….. அகனை கண்டதும்… பாரு அகன் இப்படி பொம்மைக்கு மாட்ற மாதிரி மாட்டிகிட்டு இருக்காங்க. ஹெல்ப் மீ ப்ளீஸ்…”, என அவனைக் கெஞ்சினாள்.
“போட்டுக்க டா. அழகா இருக்கும்”, அகரன் கனவில் பேசுவதைப் போல பேசினான்.
“சரணா… நீயாவது காப்பாத்துடா”, நதியாள்.
“இன்னிக்காவது பொண்ணு மாதிரி இரு”, சரண்.
“போடாங்…அகன் நீ ஹெல்ப் பண்ணு டா”, நதியாள்.
“என்ன சொன்ன?”, அகரன் கண்கள் மின்ன கேட்டான்.
“ஹெல்ப் பண்ண சொன்னேன்”, நதியாள்.
“புல்லா சொல்லு”, அகரன்.
“ஹெல்ப் மீ அகன்”,, நதியாள்.
“இல்ல.. இன்னும் ஒரு வார்த்தைய விட்டுட்ட”, அகரன்.
சற்று யோசித்தவள் ,”அகன் ஹெல்ப் பண்ணு டா… ப்ளீஸ் டா”, எனக் கூறினாள்.
“இட் சவுண்ட்ஸ் சோ ஸ்வீட் டியர். ஐ வில் ஹெல்ப் யூ”, என அருகில் வந்தான் அகரன்.
அவளின் கழுத்தில் போட்டு இருந்த நான்கு ஆரத்தை கலட்டி விட்டு வைரத்தில் இருந்த சோக்கரையும் ஒரு மீடியும் சைஸ் வைர ஹாரத்தையும் அணிவித்தான். பின் தோடில் நேராக இருந்த மாட்டிலை அவளின் காதிற்கு பின் கொண்டு சென்று முடியில் மாட்டினான். கைகளில் தங்க வளையல்கள் இரண்டை போட்டு முன்னும் பின்னும் வைர வளையல் போட்டுவிட்டான்.
பெரிய வங்கியை கலட்டி விட்டு, இரத்தினத்தில் செய்து இருந்த சிறிய அளவு காப்பை மாட்டினான். பின் இடுப்பிற்கு சிறியதாக சங்கிலி போல் இருந்த ஒட்டியாணத்தை அவளின் சேலை மடுப்புகளை முன்புறம் கீழே சரி செய்து மேலே அவளை சரி செய்யச்சொல்லி கொக்கி மாட்டினான், அந்த இடத்தில் இரண்டு பெரிய பூக்கள் ஒன்றை ஒன்று பற்றிய படி இருந்தது.
நெற்றியில் சுட்டி சிறியதாக இருக்க அதை கூந்தலில் மறைத்து அதன் டாலர் மட்டும் தெரியும்படி செய்தான். காலில் மெல்லிய கொலுசு அணிவித்தான். கைகளில் இரண்டு பெரிய மோதிரம் சிறிய வைர மோதிரமும் அணிவித்தான்.
அண்ணைமார்கள் விருப்பபடியும், நதியின் விருப்பபடியும் அலங்காரத்தைச் செய்து இருந்தான் அகரன்.
திலகவதி மல்லிகை பூவைக் கொண்டு வந்து தலை நிறைய வைத்துவிட்டார்.
அவளை முழு அலங்காரத்தில் கண்ட அகரனுக்கு மனம் ஒரு நிலையிலேயே இல்லை. அப்படியே அவளை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாமாவென சிந்திக்க ஆரம்பித்து இருந்தான்.
“மச்சான்…”, அகரன்.
“என்னடா?”, சரண்.
“நதிய பாரேன். எவ்வளவு அழகா இருக்கா. இன்னிக்கே நான் கல்யாணம் பண்ணிகிட்டா?”,அகரன்.
“அடேய்… என்னடா பேச்சு இது?”, சரண் அதிர்ந்துக் கேட்டான்.
“சத்தியமா டா. வெயிட் பண்றது ரொம்ப கஷ்டம்னு இப்ப தான் புரியுது. மனசு நான் சொல்ற பேச்ச கேக்கமாட்டேங்குது டா மச்சான். சீக்கிரம் உடனே கல்யாணம் பண்ண ஏதாவது ஐடியா குடு டா”, அகரன்.
“உன் தாத்தா பாட்டி கிட்ட சொல்லு கோவில்ல வச்சே உடனே கல்யாணம் நடத்திடுவாங்க”,சரண் கலாய்த்தான்.
“நிஜமாவா? சொன்னா உடனே கல்யாணம் செஞ்சி வச்சிடுவாங்களா?”, அகரன் சிறுபிள்ளையாக கேட்டான்.
“மச்சான். ஏன்டா இப்படி ஆகிட்ட? அவள லவ் பண்ண வைக்கணும் இரண்டு பேரும் லவ் பண்ணி அப்பறம் தான் கல்யாணம்னு சொல்லுவன்னு பாத்தா உடனே கல்யாணம் பண்ண சொல்ற… நதியாள் ஒத்துக்கணும்ல. அவ சின்ன பொண்ணு டா. மனச கன்ட்ரோல் பண்ணு. நம்ம கம்பெனிக்கு வரட்டும் அப்பறம் இத பத்தி அவகிட்ட பேசறேன். எதாவது ஏடாகூடமா செஞ்சி என்னை அடி வாங்க வச்சிடாத”,சரண்.
“ம்ம்… ஆமால்ல… அவ பர்ஸ்ட் என்னை லவ் பண்ணணும்ல…. சரி வையிட் பண்றேன். மச்சான் என்னை உன் கைபிடிலயே வச்சிக்க தனியா அவகூட மட்டும் விட்டுடாத டா”, அகரன்.
“சரி சரி. வா கிளம்பளாம். அம்மா… போலாமா?”, சரண்.
“இரு டா. புள்ளைய ஒரு போட்டோ எடுங்கடா இரண்டு பேரும். எவ்வளவு அழகா இருக்கா. என் ராசாத்தி”, என அவளுக்கு நெட்டி முறித்தார்.
“வாங்க மாடிக்கு போலாம். அங்க நல்லா இருக்கும் லைட்டிங்”, நதியாள் என அகரன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.
“சரி மூனு பேரும் போட்டோ எடுத்துட்டு பத்து நிமிஷத்துல வாங்க. நாங்க அர்ச்சனை தட்டு எடுத்து வைக்கறோம்”, திலகவதி.
“வாவ் அகன் நானும் நீயும் சேம் பிஞ்ச். கிவ் மீ கிட்கேட்”, நதியாள் அகரனின் கைகளில் கிள்ளி கேட்டாள்.
“அவுச்…. சரி வாங்கி தரேன். எல்லாரும் டைரிமில்க் கேப்பாங்க நீ கிட்கேட் கேக்கற?”,கைகளைத் தேய்த்தபடிக் கேட்டான்.
“வலிக்குதா அகன்”, என கிள்ளிய இடத்தில் அவன் கைகளை தள்ளிவிட்டு தன் கைகளால் தேய்த்து விட்டபடி,”ஆமா. டைரிமில்க் எனக்கு பிடிக்காது. கிட்கேட் தான் பிடிக்கும். இல்லைன்னா மில்க் சாக்லேட் வாங்கி குடு. சரணா இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கடா. இன்னிக்கு எல்லா பொண்ணுங்களும் உன்ன தான் சைட் அடிக்க போகுது”, நதியாள்.
“நன்றி இளவரசி…”, எனப் பாதிக் குனிந்து கூறினான் சரண்.
“இது ஓவர் டா”, நதியாள்.
“உன்ன பாத்தா அப்படி தான் இருக்க யாள். பர்ஸ்ட் டைம் உன்ன இப்படி பாக்கறேன். நீ பெரிய மனுசி ஆனப்ப கூட நான் வரல”, சரண்.
“ஆமா. நீங்க இரண்டு பேரும் தான் ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு ஊற சுத்திட்டு இருந்தீங்க. சரி இப்ப மூனு பேரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம். அகன் உன்கிட்ட செல்பி ஸ்டிக் இருக்கா?”, நதியாள்.
“இல்ல டா. டைமர் செட் பண்ணி எடுக்கலாம் வா”, அகரன்.
மேலே மாடியில் சுற்றி பூச்செடிகள் தொட்டியில் வைக்கபட்டு இருந்தது. அதற்கு மேலே தண்ணீர் தொட்டி போகும் படிகட்டுகளில் போனில் டைமர் செட் செய்து பல ஆங்கிலில் போட்டோ எடுத்தனர்.
மூவராய், இருவராய், அகரனும் நதியும் இணைந்து நிற்கையில் சரண் போட்டோ எடுத்தான். பின் நேரம் ஆவதை உணர்ந்து மூவரும் கீழே வந்து ஆளுக்கொரு தட்டை கைகளில் ஏந்தியபடி நடக்கத் தொடங்கினர்.
கோவிலில் இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க அபிஷேகம் முடிந்து தெய்வத்திற்கு உடுத்தும் துணியை நதியாள் கைகளில் கொடுத்து அனைத்து சந்நதியிலும் கொடுக்கக் கூறினார் பூசாரி.
அகரன், சரண், சக்ரதேவ் மூவரும் அவளுக்கு தட்டுகளில் அடுக்கி கொடுத்து அவளுக்கு உதவி செய்தனர்.
மரகதீஸ்வரர் சந்நதியில் பெரியவர்கள் அனைவரும் நின்று இருக்க சிறியவர்கள் அங்கு வந்து நின்றனர்.
அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டி நல்ல படியாக உச்சிகால பூஜை நடந்து முடிந்தது.
அன்னதானம் செய்யுமிடத்திற்கு வந்தவர்கள் அங்கு நடந்து கொண்டிருந்த கலாட்டாவில் சற்றே ஸ்தம்பித்து நின்றனர்.
அனைவரும் அப்படியே நிற்பதைக் கண்ட நதியாள் முன்னே வந்து பார்க்க, அங்கு நடக்கும் கூத்தை கண்டவள் கோபமுற்று நேராக அங்கே அலப்பறை செய்துக் கொண்டு இருந்தவனின் கன்னத்தில் ஒன்று விட்டாள்……
நதியாள் யார அடிச்சான்னு அடுத்த பதிவில் பார்க்கலாம் நட்பூஸ்……