31 – அகரநதி
சரணுக்கு போன் கால் வந்தததும் பதற்றமாய் மூவரும் கிளம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு மதுரன் வரவேற்பறையில் நின்றிருந்தான். அவனைக் கண்ட நதியாள் யோசனையாக அகரனைப் பார்க்க , அகரன் சரணைப் பார்த்தான்.
“அவர் தான் கால் பண்ணாரு. அப்பாக்கு ஆக்சிடெண்ட்னு…”, சரண் பதில் கொடுத்தபடி அவனருகில் சென்றான்.
“பெரியப்பாக்கா? என்னாச்சி?”, நதியாள் பதறிப்போய் கேட்டாள்.
“ஆமா. சஞ்சய், மாமா ,அப்பா எல்லாரும் ரோட் ஓரமா நின்னுட்டு இருந்து இருக்காங்க. ஈ.சி.ஆர்ல ஏதோ ரேஸ் நடந்து இருக்கு. அப்ப ஒரு பைக் அப்பா மேல மோதிரிச்சாம். மதுரன் அங்க பக்கத்துல இருந்தப்ப பாத்துட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்காரு. சஞ்சய் கிட்ட விசாரிச்சப்பறம் எனக்கு கால் பண்ணிருக்காரு”, சரண் கூறியபடி மதுரன் அருகில் நிற்க சஞ்சயும் அவர்களைக் கண்டு அருகில் வந்தான்.
“ஜெய் பெரியப்பா எங்க? “, என நதியாள் அவனிடம் கேட்டு அவர் இருந்த அறைக்கு ஓடினாள்.
“நத்திங் டு வொர்ரி மிஸ் நதியாள். சின்ன காயம் தான்”, மதுரன் கூறுவதற்குள் அவள் பரமசிவத்தின் அறைக்கு ஓடிவிட்டாள்.
“தேங்க்யூ மிஸ்டர். மதுரன் “, அகரன்.
“இது நம்ம கடமை அகரன். ஒரு மனுசன் காயப்பட்டு இருக்கறப்ப அவங்களுக்கு நாம தான் உதவி செஞ்சி தேத்ததணும். வாங்க போய் அங்கிள்அ பாக்கலாம்”, மதுரன்.
“நீ மாமாவ போய் பாரு. நான் டாக்டர் பாத்துட்டு வரேன்”, என அகரன் சரணிடம் கூறிவிட்டு சஞ்சயை அழைத்துக்கொண்டு டாக்டரைக் காணச் சென்றான்..
“பெரியப்பா உங்களுக்கு ஒன்னும் இல்ல தானே…. அடி பலமா? ரொம்ப வலிக்குதா? பெரியம்மா கிட்ட சொல்லிட்டிங்களா? ஜாக்கிரதையா இருந்து இருக்கலாம்ல?”, நதியாள் அவரின் அருகில் அமர்ந்து அவரைக் கண்களால் அளந்தபடி வேறெங்கேனும் அடிபட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.
“எனக்கு ஒன்னும் இல்லடா குட்டி. நான் நல்லா இருக்கேன். கால் தான் கொஞ்சம் வலி மத்தபடி ஒன்னும் இல்ல டா”,பரமசிவம் அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.
“நதி குட்டி. பெரியப்பாக்கு ஒன்னும் இல்ல. பாரு கால்ல தான் சின்னதா கட்டு போட்டு இருக்காங்க. வேற எங்கயும் காயம் இல்ல. நல்ல சமயத்துல அந்த தம்பி கீழ விழாம பிடிச்சிட்டாரு அதனால நல்லதா போச்சு. அந்த தம்பிக்கு தான் நன்றி சொல்லணும். எனக்குமே மனசு பதறிடிச்சு அந்த வண்டி மாமாவ இடிச்சதும்”, சிதம்பரம் தன் மனம் இன்னும் பதறுவதை மறைத்துப் பேசினார்.
நதியாள் மதுரன் அருகில் வந்து ,” ரொம்ப நன்றி மிஸ்டர் மதுரன். சரியான நேரத்துல என் பெரியப்பாவ பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்திட்டீங்க. தேங்க்ஸ் எ லாட்”, என அவன் கைபிடித்து நன்றிக் கூறினாள்.
நதியாளின் ஸ்பரிசத்தில் மதுரன் தனக்குள் நிகழும் மாறுதல்களை வெளிக்காட்டாமல் இருக்க மிகவுமே சிரமப்பட்டான். அவளின் மேல் பலமான ஈர்ப்பு இருப்பது உண்மை தான். ஆனால் அவளின் இந்த ஸ்பரிசம் அவன் மனதை ஆழமாக அசைத்துப் பார்த்தது. அவள் மனமாற நன்றி உரைக்கவே கையைப் பிடித்தாள், ஆனாலும் அதில் ஏதோ ஒன்று இவனைத் தாக்கியது.
இத்தனை ஆண்டுகளில் பல பெண்களை கடந்து வந்தவன். இந்த பெண்ணிடம் தடுமாறுவது ஏன் என்பதை தான் அவளைப் பார்த்த கணம் முதல் யோசித்துக்கொண்டிருக்கிறான். அவன் கடந்த வந்த பெண்கள் அளவுக்கு இவள் அத்தனை அழகியும் இல்லை தான். ஆனாலும் ஏதோ ஒன்று இவளிடம் ஈர்க்கிறது. அதை மதுரன் தன் மனதில் யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
“இது மனிதாபிமானம் தான் மிஸ் நதியாள். எல்லாருக்கும் இருக்கற ஒன்னு தான். அதுக்கப்பறம் விசாரிக்கறப்ப சரணோட அப்பான்னு தெரிஞ்சது”, மதுரன் முயன்று தன்னைச் சாதாரணமாகக் காட்டிக்கொண்டான்.
“தேங்க்யூ மிஸ்டர் மதுரன். உங்களுக்கு ரொம்பவே கடமை பட்டு இருக்கேன்”, சரண் உணர்வு பூர்வமாக கூறினான்.
“அட விடுங்கப்பா. இத்தனை தேங்க்ஸ் சொல்றதுக்கு பதிலா ஒரு டீ ஆர் காப்பி வாங்கி குடுத்தா பரவால்ல. குளிருக்கு இதமா இருக்கும்”, மதுரன்.
“வீட்டுக்கு வாங்க தம்பி உங்களுக்கு விருந்தே வச்சிடறோம்”, சிதம்பரம்.
“கண்டிப்பா ஒரு நாள் வரேன் அங்கிள். உங்க ஊரு நல்லா இருக்கும்னு மைரா சொல்லி இருக்கா. அதுக்காகவே ஒரு தடவை வரணும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்”, மதுரன்.
“நல்லது …. “, சிதம்பரம்.
“ஆமா…என் பொண்டாட்டி உங்களுக்கு ஒரு வாரமே விருந்து வைப்பா இது தெரிஞ்சா. யாள் குட்டி பெரியம்மா கிட்ட சொல்லாத. ஊர்ல யாருக்கும் தெரிய வேணாம். தெரிஞ்சா தேவையில்லாம பதறுவாங்க எல்லாரும். சரண் நீயும் உன் அம்மாகிட்ட சொல்லாத”, பரமசிவம்.
“சரிப்பா….”, சரண்.
“சார்…. டிஸ்சார்ஞ் பண்ணியாச்சி. அங்கிளுக்கு மெடிசனும் வாங்கிட்டோம். கிளம்பலாமா?”, எனக் கேட்டு சஞ்சயுடன் அகரனும் வந்தான்.
“அப்பா… கிளம்பலாமா?”, சரண் பரமசிவத்தின் அருகில் சென்றான்.
“கிளம்பலாம் பா……. நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்”, பரமசிவம் கூறியபடி கீழே இறங்கினார்.
“நாளைக்குலாம் நான் அனுப்ப மாட்டேன். இன்னும் நாலு நாள் கழிச்சி டாக்டர பாத்துட்டு தான் போகணும்”, நதியாள்.
“இன்னும் நாலு நாள் முடியாது டா. ஊர்ல பெரியம்மா தனியா கஷ்டப்படுவா டா”, பரமசிவம்.
“அதுல்லாம் முடியாது. டேய் சரணா… நான் பெரியப்பாவ பாத்துக்கணும். சோ ஆபீஸ் வரமாட்டேன் அவர் ஊருக்கு கிளம்பறவரை”, நதியாள்.
“மேடம் அப்பறம் பிராஜெக்ட் யார் பண்ணுவா?”, சரண்.
“நீயே பண்ணு டா. அண்ணன் தானே இத கூட பண்ணமாட்டியா?”, நதியாள்.
“ஆமாமா….அண்ணன்ஆ இருந்துட்டு இதக்கூட பண்ணலன்னா எப்படி சரண்? மிஸ் நதியாள். நீங்க சொல்றது சரிதான். பட் இரண்டு நாள்ல எனக்கு நீங்க டிசைன்ஸ் எல்லாம் மாடிபை பண்ணி தர்றதா சொன்னீங்களே. அத எப்ப பண்ணுவீங்க?”, மதுரன்.
“அது அகன் செஞ்சி குடுப்பான்”, நதியாள் அகரனைப் பார்த்தாள்.
“சாரி நதிமா. அது நீ தான் கமிட் பண்ணிகிட்ட…… சோ நீ தான் பண்ணணும்”, அகரன் தன் கைவிரித்துக் கூறினான்.
“டேய்…. என்னங்கடா ? சரி நானே வீட்ல இருந்து செஞ்சி தரேன்….. மிஸ்டர் மதுரன் உங்களுக்கு இரண்டு நாள்ல கான்செப்ட் ரெடி பண்ணிட்டு சொல்றேன். நீங்க நாளைக்கு ஸ்டெல்லாவையும் திலீப்கையும் மீட் பண்ண முடியுமா?”, நதியாள்.
“தனி தனியா நான் பாக்கமுடியாது . ஒரே நாள்ல முடிச்சா தான் நான் மத்த வேலைய பாக்க முடியும் மிஸ். நதியாள்”, மதுரன் அவள் இல்லாமல் மற்றவர்களை மட்டும் சந்திக்க இயலாது என்ற எண்ணத்தில்.
“யாள்… அவர் எங்கள மாறி உனக்கு தகுந்தாமாதிரிலாம் டைம் குடுக்கமாட்டாரு. அவருக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு. அவர் குடுக்கற டைம்ல தான் நாம பாக்கணும்….. வர்க் முடிச்சு காட்டணும். டோன்ட் ஆஸ்க் அகெய்ன் லைக் திஸ்”, சரண் அவளை அதட்டினான்.
“சரி. சாரி மிஸ்டர் மதுரன். நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு உங்க அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கறேன். தேங்க்ஸ் பார் எவரிதிங்”, எனக் கூறி பரமசிவத்தின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.
அகரனும் மதுரனும் நதியாளின் கோபத்தை இரசித்தபடி அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். சமீபமாக அகரனின் மேல் நதியாள் கொண்டுள்ள கோபம் காதலினால் தான் என்பதை அறிந்தவன், அவளை மேலும் சீண்டி விளையாடி அவளின் காதலை வெளிபடுத்த வைக்க திட்டம் போட்டுள்ளான் அவன். மதுரன் அவளை பார்த்த நொடி முதல் அவளின் அசைவுகள், நடவடிக்கை …ஏன் கண் சிமிட்டுவதைக் கூட விடாமல் தனக்குள் பதிவு செய்து கொண்டிருக்கிறான். ஹோட்டலில் உன் எல்லையில் நில் என்று கூறிய நதியின் முகத்தில் இருந்தது எச்சரிக்கை செய்யும் பாவனை.
இப்பொழுது அவளின் குடும்ப நபர்களின் முன்னே அவளின் உரிமையான உரையாடல்கள், அதட்டல், பாசம், அக்கரை, உரிமையான கோபம் என அனைத்தும் அவனை வெகுவாக கவர்ந்துக் கொண்டு இருந்தது. அவளின் முகத்தில் தோன்றும் அத்தனை மாறுதல்களும் அத்தனை இரசனைமிக்கதாக இருந்ததோ என்னவோ அவளை இருவரும் கண்களால் படம் பிடித்தபடி இருந்தனர்.
அகரனின் பார்வையை கண்ட சஞ்சய் அவனருகில் நின்ற மதுரனின் பார்வையும் நதியாளின் மேல் அளவுக்கு அதிகமாகப் பதிவதை உணர்ந்து சரணிடம் சைகை செய்தான்.
சரணும் கண்களை மூடி திறந்து அவனுக்கு தெரியும் என்று உணர்த்தினான்.
“வாங்க மதுரன். காபி சாப்பிட்டு வரலாம்”, அகரன் அழைக்க சரண் சஞ்சய் என அனைவரும் சென்றனர்.
“மாமா உங்களுக்கு காப்பி வாங்கி அனுப்பவா?”, சரண்.
“வேணாம் சரண். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் குடிச்சேன். நீங்க போயிட்டு வாங்க. நானும் நதியும் மாமாவ கூட்டிட்டு மெல்ல முன்ன வந்துடறோம். நீங்க கார் எடுத்துட்டு வந்துடுங்க”, சிதம்பரம்.
“சரி மாமா. நான் போன் பண்ணப்பறம் கிளம்புங்க போதும்”, சரண்.
வெளியே நடந்தபடி ,”சஞ்சய்…. என்னாச்சி? மிஷினரி பாக்க போறதா தானே சொன்னீங்க?”, அகரன்.
“அதுல்லாம் மதியமே புக் பண்ணிட்டோம் சார். அங்கிளுக்கு தெரிஞ்சவங்க அங்க இருக்காங்கன்னு பாக்கலாம்னு போனோம். அங்க தான் இப்படி நடந்துடிச்சி”, சஞ்சய்.
“யாரு இருக்காங்க? எனக்கு தெரிஞ்சி இங்க அப்பா மாமா இரண்டு பேருக்கும் தெரிஞ்சவங்க அந்த ஏரியால யாரும் இல்லையே”, சரண் யோசனையுடன் கூறினான்.
“தெரியல சார். நாங்க அட்ரஸ் வச்சி தேடிட்டு இருந்தப்ப தான் ஆக்சிடெண்ட் ஆகிரிச்சி”, சஞ்சய்.
“அங்கிள் கிட்ட கேட்டா பிராப்ளம் சால்வ். இவர் உங்க கம்பெனில வர்க் பண்றாரா அகரன்?”, மதுரன் சஞ்சயைக் காட்டிக் கேட்டான்.
“இல்ல. இவன் நதியாள் பிரண்ட். பிராஜெக்ட்காக வந்து இருக்கான். மொத்தம் ஆறு பேர் வந்து இருக்காங்க”, சரண்.
“ஹோ…. பிராஜெக்ட் பண்ண வந்தவங்க கிட்ட உங்க மெயின் பிராஜெக்ட் டிசைன்ஸ் பண்ண சொல்லி இருக்கீங்க…. அவங்க மேல அவ்வளவு நம்பிக்கையா? அவ்வளவு டேலெண்ட் ஸ்டூடெண்ட்ஸ் ஆ எல்லாரும்?”, மதுரன்.
“வாய்ப்பு கெடச்சா தானே மதுரன் திறமைய நிரூபிக்க முடியும். அவங்கள ட்ரை தான் பண்ண சொன்னோம். நல்லா இருந்தது அதான் உங்களுக்கும் காட்டினோம். நல்ல பசங்க. தவிர நதியாள் கேட்டு இல்லன்னு நானும் சரணும் சொல்ல முடியாதே”, எனக் கூறி அகரன் சிரித்தான்.
“ஆமா. அவங்க கிட்ட மறுக்கறது கஷ்டம் தான். ஆனா அவங்களும் நல்லா டிசைன் பண்ணி இருக்காங்க. மைரா சொல்றப்ப உங்க கம்பெனி பத்தி கேள்விபட்டு இருந்தேன். அதனால தான் ட்ரை பண்ணலாம்னு சரின்னு சொன்னேன். இப்ப ஸ்டார் ஹோட்டல் கட்டணும்னு நான் சொன்னதால, என் அப்பா மைரா கம்பெனிகூட ஜாயின் பண்ணி சொந்த காசுல பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க. அதான் என் தனி பணத்துல அவங்க கூட பார்ட்னரா ஜாயின் ஆகி இருக்கேன்”, மதுரன்.
“ஓஓ…தட்ஸ் ரியலி க்ரேட் மிஸ்டர்.மதுரன். கன்க்ராட்ஸ்”, என சரணும் அகரனும் கைக்குழுக்கினர்.
“நோ பார்மாலிட்டீஸ் காய்ஸ்..கால் மீ பை நேம். தட்ஸ் எனஃப். லெட்ஸ் பீ பிரண்ட்ஸ்……?”, மதுரன் நட்பிற்காக கைக் கொடுத்தான்.
“இல்ல…அது …”, சரண் தயங்க, அகரன் ,” ஓக்கே… பிரண்ட்ஸ் மது”, என கைக்குழுக்கினான்.
பின் அகரனை பார்த்துவிட்டு சரணும் கைக்குழுக்க மூவரும் பல விசயங்களைப் பற்றி பேசியபடி கார் பார்க்கிங் வந்தனர். சஞ்சயை மற்றவர்களை அழைத்து வரும்படி கூறி அனுப்பிவிட்டு இவர்கள் கார் எடுத்தனர்.
“சரி. நாங்க கிளம்பறோம். ஒரு நாள் வீட்டுக்கு வா மதுரா”, அகரன்.
“சரிடா… நீங்களும் வீட்டுக்கு வரணும். என் அப்பாக்கு உங்கள இன்ட்ரோ குடுக்கணும். உங்க வீடு எங்க இருக்கு?”, மதுரன்.
“நாங்க இரண்டு பேரும் இருக்கறது ******** அபார்மெண்ட்ல. இப்ப நதியாள் இருக்கற வீட்ல தான் ஸ்டே பண்ணி இருக்கோம். தாத்தா அப்பா எல்லாம் வந்ததால ஒரே இடத்துல இருக்கணும்னு யாள் அடம். பெரியவங்களும் வாங்கடான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க”, சரண்.
“ஓஓ…. அவங்க எங்க இருக்காங்க?”, மதுரன்.
“******** ஏரியால பிரண்ட்ஸோட இருக்கா”, அகரன்.
“சரி. ஒரு நாள் நானும் வரேன்”, மதுரன்.
“சரி. பாய். அவங்க வந்துட்டாங்க”, சரண்.
அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். அங்கே உள்ளே போகும் போதே உள்ளிருந்து சத்தம் காதைப் பிளந்தது.
யாரோ இருவர் சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர். ஸ்டெல்லாவின் குரல் தான் இவர்கள் காரை விட்டு இறங்கும் சமயம் கேட்டது.
“கெட் அவுட் ….”, என ஸ்டெல்லா யாரிடமோ கத்திக்கொண்டு இருந்தாள்.