1 – மீள்நுழை நெஞ்சே
அந்த நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலை தான் தனக்கு இன்று கிடைத்த இடமென கருதி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் அருகில் சென்று பார்த்துவிட்டு ஒரு பக்கமாக அவளும் அமர்ந்தாள்.
கையில் இருந்த அனைத்தும் போய்விட்டது. இனி என்ன செய்வது?
அந்த எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை … மனம் எதையும் உணர மறந்து வெகு நாட்களாகி போனது.
வாழ்க்கையே சூன்யமான பிறகு எதுவும் அவளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இன்று அவள் வெளிநாடு சென்றுவிட வேண்டுமென்று, சொந்த ஊரில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கிளம்பி சென்னை வந்தாள்.
சாப்பிட சென்ற இடத்தில் அவளது பொருட்கள் அனைத்தும் மாயமாகி இருந்தன.
அவளுக்கு அந்த ஹோட்டல் முதலாளி அதிகபட்சமாக அவளது பொருட்களை தேடித் தருமாறு அங்கு வந்திருந்த காவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
கையில் பணமில்லாமல் உண்ணவும் அவள் விரும்பவில்லை. சொல்லியிருந்த இரண்டு இட்லியையும் வேண்டாமென கூறிவிட்டு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து விட்டு நடக்கத் தொடங்கினாள்.
சுமார் ஒரு மணிநேர நடையில் எங்கு சொல்கிறோம், என்ன செய்வது என்ற எந்த யோசனையும் இன்றி கால் போன போக்கில் நடந்தவள் ஒரு கட்டத்தில் காலில் வலியும், காலி வயிற்றில் அமிலமும் அதிகளவில் சுரந்த பின் தான் நின்றாள்.
நேரம் இரவு பதினொன்றை நெருங்கி இருக்கும்.
“என்ன பண்ண போற துவா? “, என்று அவளின் தோழி கேட்ட கேள்வி இன்னமும் அவளுக்கு உரைக்கவில்லை.
“என்ன பண்ணட்டும் கனி? எனக்கு எல்லாமே மறத்து போச்சிடி…. எதையும் யோசிக்க என் மூளை தயாரா இல்லை…. நான் என்ன பண்ணட்டும்?”, என அவள் தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
“யாரும்மா அது…. “, என ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒருத்தி அமர்ந்திருப்பதுக் கண்டுக் கேட்டார்.
அவள் அவரை பார்த்துவிட்டு எழுந்தாள்.
“ஏம்மா நீ ஸ்டேஷன்ல வந்து பேக் காணோம்ன்னு கம்ப்ளைண்ட் குடுத்த பொண்ணு தானே… இங்க என்ன பண்ற?”, என நெற்றியைச் சுருக்கியபடிக் கேட்டார்.
“ஆமா சார்…. “
“நீ ஏன்ம்மா இங்க உக்காந்திருக்க?”
“என்ன பண்றது-ன்னு தெர்ல சார்… எல்லாமே என் பேக்ல தான் இருக்கு… ” எனக் கூறி அமைதியானாள்.
“அதுக்காக இங்கயாமா வந்து உக்காருவ? நீ என்னோட வா”, என அவளை வம்படியாக வண்டியில் அழைத்துச் சென்றார்.
“ஏன்ம்மா யாருக்காவது போன் பண்ணா வந்து கூட்டிட்டு போவாங்கள்ல… இப்படி இந்நேரத்துல தனியா உக்காந்திருக்க… நாடு இருக்கற நிலைமை உனக்கு தெரியும் தானு?”, என வண்டியை ஓட்டியபடிக் கேட்டார்.
அவள் பதிலேதும் கூறவில்லை… முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
“சொல்லாம வீட்ட விட்டு வந்துட்டியா பொண்ணு?”, அவர் அவள் முகத்தில் ஏதும் காட்டாது இருப்பதைக் கண்ணாடி வழியாகக் கண்டு கேட்டார்.
“என்னை தேடவும் யாரும் இல்ல சார்… “, என விரக்தியுடன் கூறிய பதிலில் சொந்த பிரச்சினை என்று அறிந்துக்கொண்டார்.
“சரி உன்ன பக்கத்துல லேடிஸ் ஹாஸ்டல்ல இப்ப விடறேன்… காலைல ஸ்டேஷன் வாம்மா”, என அவளை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த லேடிஸ் ஹாஸ்டலில் தங்கவைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றார்.
“இன்னிக்கு இங்க தங்கிக்க மா… “, என ஒரு சிறிய ஒற்றை படுக்கையறையை அவளுக்கு ஒதுக்கிக் கொடுத்தார் அந்த வார்டன் பெண்மணி.
“தேங்கஸ் மேம்”, என அவருக்கு நன்றியுரைத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
அவள் கண்களைத் தாண்டி வெளியேற கண்ணீர் துளிகள் பிரயத்தனப்படுவதை உணர்ந்ததும், முகம் இறுக அதை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
கண்முன்னே பல நிகழ்வுகளும் சதிராட அனைத்தையும் துறந்து, முற்றிலும் மறந்து எங்காவது ஓடிவிட வேண்டும் என்பது மட்டுமே, அவள் மனதிலும், மூளையிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே எண்ணம்.
“எனக்கு யாரும் வேணாம்… யாரும் என்னை பத்தி கவலைபடவும் வேணாம்…. எனக்கு என்னை பாத்துக்க தெரியும்…. எல்லாரும் வெளியே போங்க”, என அவள் அன்று கத்தியதும், அவளின் மேல் விழுந்த சேற்று சொற்கள் இவ்வளவு தான் என்றில்லை.
அதற்குபின் நிகழ்ந்த யாவும், அவள் கருத்திலும், மனதிலும் பதியவில்லை. அதுவும் நன்மைக்கே என்று எண்ணியவள் அவளது ஒரே தோழி கனிமொழி மட்டுமே.
இப்போது அவளிடம் கூட எதுவும் சொல்லாமல் தான் ஊரை விட்டு ஓடி வந்திருந்தாள் இல்லையில்லை…… அனைவரையும் விலகி வந்திருக்கிறாள்.
அவளுக்கு தேவை ஒரு புதிய சூழ்நிலை, புதிய முயற்சிகள், ஒரு புதிய தனிப்பாதை….
தனிமையின்றி எதுவும் இல்லை இனி….
அவள் துவாரகா….. பெயரில் இருக்கும் பாதை அவள் வாழ்வில் தான் காணாமல் போனது….
சில மாதங்களுக்கு முன்பு வரையினில் சுற்றத்தாருக்கும், உறவினர்களுக்கும் பெரும் மதிப்பிற்குறியவளாக இருந்தவள்.
அவளிடம் இருக்கும் நேர்மறை அதிர்வுகளும், நேர்மறையான வார்த்தைகளும் பார்ப்பவர் அனைவருக்கும் வாரி வாரி வழங்குபவள்.
“இந்த தடவ என்னாகுமோ தெர்லம்மா…. மனசுக்கு பக்கு பக்குன்னு இருக்கு”, என அவர் அவளிடம் புலம்ப, “கவலையே படாதீங்க மாமா…. எல்லாம் நல்ல படியா நடக்கும்…. அதையும் நீங்களே நாளைக்கு வந்து சொல்வீங்க பாருங்க”, என சிரித்தபடி அவருக்கு நேர்மறை எண்ணங்களை பேச்சிலேயே விதைத்து வளர்த்து அனுப்பி வைப்பாள்.
அவள் வாய்வழி மொழிந்ததாலோ, அவருக்கு ஏற்பட்ட நேர்மறை எண்ணத்தினாலோ அந்த காரியம் சுபமாக முடியும். அது போல பலரின் மனதினில் நேர்மறை எண்ணங்களை விதைத்தவளுக்கு, வாழ்வே சூன்யமாகும் என யாரும் எண்ணவில்லை.
“இவளுக்கு மெத்த படிச்ச திமிரு அதிகம்க்கா… அதான் இப்படி ஆகிரிச்சி”, என பக்கத்துவீட்டு பெண்மணி பேச, “கொஞ்சமா ஆட்டம் போட்டாங்க … இதெல்லாம் தேவை தான்”, என அவளின் சொந்தக்கார பெண்மணி தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துச் செல்வதைக் கண்டு வேதனைக் கலந்தச் சிரிப்பு வெளிப்பட்டது.
“அம்மாடி .. ராசாத்தி…. நீ மனசு வச்சா உன் அப்பாகிட்ட சொல்லலாம்… கொஞ்சம் இந்த அத்தைக்காக பேச கூடாதா?”, என அதே உறவுக்கார பெண்மணி பல மாதங்களுக்கு முன் தந்தையிடம் ஒரு சிபாரிசுக்கு தன்னை அனுப்ப கொஞ்சியது அந்த நேரம் நினைவில் வந்தது.
“எல்லாருமே சுயநலமா தான் இருந்திருக்காங்க போல”, என தன் மடமையை எண்ணி மீண்டும் சிரித்துக் கொண்டாள்.
“சிரிடியம்மா… நல்லா சிரி….. அத்தனையும் கெடுத்துட்டு வந்து இங்க உக்காந்து நல்லா சிரி…. இந்த வீட்ல இருக்கறவங்களையும் கெடுக்க தானே இப்ப நீ வந்திருக்க?”, என ஒரு வயதான பாட்டி அவளைத் திட்டினார்.
அவள் அவரை எதுவும் கூறாமல் பார்த்துவிட்டு, வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டாள்.
“இந்த திமிரு தாண்டி உன்ன இப்படி உக்கார வச்சிருக்கு…. பொம்பள புள்ளைக்கு கொஞ்சமாது அடக்கம் வேணும்…. வர்ற போற அத்தனை ஆளுங்ககிட்டயும் பேசிட்டு, சிரிச்சிட்டு இருந்தல்ல… உன் அப்பனும் சொன்னத ஒன்னு கூட காது குடுத்து கேக்கல…. அதான் இப்ப அனுபவிக்கறீங்க…. சிரிக்கறா பாரு சிரிப்பு…. இவ கெட்டதும் இல்லாம என் பேத்தி வாழ்க்கையவும் கெடுக்க வந்துட்டா”, என வரைமுறையின்றி அவர் திட்டிக்கொண்டிருக்க, அவள் அவரை அலட்சியம் செய்துவிட்டு மாடிக்கு சென்றாள்.
“பாத்தியா டா…. நான் பேசிட்டு இருக்கேன்… அவ பாட்டுக்கு நிக்காம போறா… இவளுக்காக நீங்க எல்லாம் வக்காளத்து வேற வாங்கறீங்க….. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ… உடனே என் பேத்திக்கு சொன்னபடி கல்யாணம் நடந்தாகணும்….. “, என அவர் எகிற ஆரம்பித்தார்.
யாருக்கும் மற்றவரின் மனநிலையில் அக்கறையில்லை. உற்றவராக இருந்தாலும் மனம் என்ற ஒன்று இருப்பதை யாரும் மதிக்கவும் கற்பதில்லை, அதன் வலியையும் உணர்வதில்லை.
கீழே ஒரு பிரளயமே நடந்துக் கொண்டிருக்க இவள் மீண்டும் வெற்று பார்வையையே பார்த்துக்கொண்டிருந்தாள் .
“இங்க பாருங்க அத்த… எங்க வீட்டு பொண்ணு நொந்து போய் இருக்கு… இந்த சமயத்துல பையன் கல்யாணத்த எங்களால பண்ண முடியாது”, அவளின் சித்தப்பா பேசினார்.
“அதுக்கு என் பேத்திய மருமக ஆக்கிக்கறேன்னு சொன்ன வார்த்தை மாறுவீங்களா சாமிகளா?”, தன் மகன் வயிற்று பேத்தியை இந்த வீட்டின் மருமகள் ஆக்கியே தீரவேண்டும் என்கிற முடிவுடன் பேசினார் அந்த பாட்டி.
“என்ன பேசறீங்க நீங்க? இதுல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா? அந்த புள்ள தாலிய அதுவே அறுத்து எரிஞ்சிட்டு வீட்டுக்கு வந்திருக்கு… இன்னும் எதுவும் பைசல் பண்ணல… அதுக்குள்ள நீங்க இப்படி பேசறீங்க? நாங்க எப்ப உங்களுக்கு வார்த்தை குடுத்தோம்? பொண்ணு கல்யாணம் முடிஞ்சி பையனுக்கு பேச்சு எடுக்கறப்ப பாக்கலாம்னு தான் சொன்னோம்…. உங்களுக்கு அவசரம்னா உங்க பேத்திய எப்ப வேணா யாருக்கு வேணா கட்டிக்குடுங்க…. “, என வாக்குவாதம் நீண்டது.
பின்னர் ஒரு பாதி உறவினர்கள் அவர்களை ஏசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
இத்தனையும் பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் தந்தை அருணாச்சலம் அவளைத் தேடி மேலே வந்தார்.
“அம்மாடி ராகா…..”, என்றழைத்த தந்தையின் குரலில் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.