2 – மீள்நுழை நெஞ்சே
“சொல்லுங்கப்பா…. “, என்றுக் கூறி எழுந்தாள்.
“உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?”, என அவள் தலையை வருடியபடிக் கேட்டார் அருணாச்சலம்.
வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், “அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப பேச முடியாம விலகி வந்துட்டேன்…..”, எனக் கூறி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“இப்பவும் நீ பேசணும்டா ராகா…. சொல்லப்போனா இனிமே தான் நீ பேசணும்”, என அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினார்.
“என்னப்பா பேசறது? எனக்கு சொல்லி சொல்லி சலிச்சி போயிரிச்சிப்பா…. இன்னும் எத்தனை பேருக்கு என்னை நான் நிரூபிக்கணும்? “, என்ற அவளது கேள்வியில் இருந்த வலியுணர்வு, தந்தையாக அவரை பெரும் மனபாரத்திற்கு ஆளாக்கியது.
“அதுக்காக நீ விலகி வந்துட்டா எல்லாமே சரியாகுமா டா?”, அவள் உடைந்து விடக்கூடாது என்பதற்காக பேச்சை வளர்த்தார்.
“சரியாகுமான்னு தெரியாதுப்பா…. ஆனா அந்த கழுத்தை நெறிக்கற சூழ்நிலைல இருந்து நான் கொஞ்சம் விலகி வந்து மூச்சு விட்டுக்கறேன்…. “, என்று நிறுத்தியவள் சற்று அமைதிக் காத்து, “ஆனா என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலப்பா….”, எனக் கூறி கண்களில் குளம்கட்டி இருந்த நீரை வெளியேற விடாமல் செய்ய, சற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
தந்தையின் முன்னே அழ அவளுக்கு விருப்பம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அழவே விருப்பம் இல்லை.
பெரியவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த வாழ்க்கை தான். சொந்த விருப்பமென்று தனியே எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.
துரித கதியில் நடந்தேறிய அனைத்தும் மனதில் பதியவுமில்லை. குடும்பத்தாரின் மேல் இருந்த நம்பிக்கையினால் அவளும் எதையும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
மிக நெருங்கிய நண்பர் குடும்பத்தின் வழியே வந்த சம்பந்தம். அவர்கள் அத்தனை வாக்குறுதிகளை வாரி இரைத்ததால் அப்பாவும், சிற்றப்பாவும் விசாரித்தவரை திருப்திக் கொண்டு மேற்கொண்டு பேச்சை வளர்த்தனர்.
அனைத்தும் நல்லபடியாக முடிந்து திருமணமும் நடந்தேறியது.
“என்ன கல்யாண பொண்ணே இவ்வளவு ஜாலியா இருக்க.. முகத்துல வெக்கத்தயே காணோம்”, என்ற மாமன் மகளின் கேலிக்கு,” அதுல்லாம் பிறவிலையே இல்லாத விஷயம் மேடம்…. நீங்க இப்பவரை மூஞ்ச பாக்கவே அவ்ளோ வெக்கப்படறீங்களாம் நேத்து கூட அண்ணன் சொல்லி வருத்தப்பட்டாரு… ஆனா எப்படி புள்ளைய மட்டும் எட்டே மாசத்துல பெத்தன்னு தான் தெரியல”, என அவளை இவள் கேலி செய்து இடத்தைக் கலகலப்பாக்கினாள்.
திருமணத்திற்குன்டான நாணம் ஏதுமின்றி சகஜமாகவே உரையாடி அனைவரையும் வேடிக்கைப் பேசிச் சிரிக்கவைத்தாள்.
நொடியில் அவளது வாழ்வு இருண்டு, அவளை குடும்பமென்னும் கூட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டது.
உடன் இருந்தவர்களே குழிப்பறித்தார்கள் எனும் உண்மை தெரிய வந்தபோது …. இறுகத் தொடங்கினாள்…..
“பொண்ணு.. ஏம்மா பொண்ணு”, என அவளை ஒரு வயதான மூதாட்டி அழைத்தார்..
“ஆஹ்…. என்ன பாட்டி?”, என தன் சிந்தனைச் சுழலில் இருந்து வெளியே வந்துக் கேட்டாள்.
“ஏன்ம்மா உக்காந்துட்டே தூங்கினியா? உன்ன பாக்க ஏட்டு வந்திருக்காரு…. சீக்கிரம் மூஞ்ச கழுவின்னு வா”, எனக் கூறிவிட்டு சென்றார்.
நடுஇரவில் இருந்து உழன்றுக் கொண்டிருந்தேனா? எனத் தன்னைத் தானே கேட்டபடி எழுந்து முகம் கழுவிவிட்டு வெளியே சென்றாள்.
“ஏன்ம்மா… உன் பேரு என்ன?”, ஏட்டு.
“துவாரகா சார்…..”
“ஒருத்தன கொஞ்ச நேரம் முன்ன பிடிச்சோம். அவன்கிட்ட சில பேக் இருந்தது. அதுல உன்னுது இருக்கான்னு வந்து பாரு”, என அவளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
வார்டன் பெண்ணிடம் தலையசைத்து விடைப்பெற்றுக்கொண்டு, அவர் பின்னே நடந்தாள்.
“இதுல உன்னுது எதாவது இருக்கா பாரும்மா…”, எனக் கூறிவிட்டு தன்னிடம் சென்று அமர்ந்துவிட்டார்.
அங்கே குவிந்திருந்தப் பைகளைப் பார்த்தபோது , இவளைப் போலவே சிலர் அனைத்தும் தொலைத்துவிட்டு எங்கே அமர்ந்திருக்கிறார்களோ? என்ற எண்ணம் எழாமல் இல்லை…
அவள் கொண்டு வந்திருந்த பையில் இரண்டைக் காணவில்லை. கெட்டதிலும் நல்லதாக அவளது பாஸ்போர்ட் சகித ஆவணங்கள் இருந்த பை மட்டும் கிடைத்தது.
சில உடைகளுடன் அவற்றை அவள் வரும்போது திணித்திருந்த காரணத்தால் அதை திருடியவன் கவனிக்கவில்லை போலும். இல்லை இதாவது விட்டுவைப்போம் என்று நினைத்தானா என்றும் தெரியவில்லை.
அவளுக்கு தற்சமயம் தேவையானவை அவளுக்கு திரும்பவும் கிடைத்திருந்தது.
“என்னம்மா எதாவது இருக்கா இல்லியா?”, நேற்று அவளை ஹாஸ்டலில் தங்க வைத்த கான்ஸ்டபிள் வந்துக் கேட்டார்.
“ஒரு பேக் மட்டும் இருக்கு சார். என் பாஸ்போர்ட் இதுல தான் இருக்கு… இப்ப எனக்கு இது போதும் சார்”, என்ற அவளது குரலில், அவர் அவளை அனுமானிக்க முயன்றார்.
“சரி லெட்டர் எழுதி குடுத்துட்டு வாங்கிக்க மா….. வீட்ல நீ சொல்லிட்டு வரலன்னு தெரியுது… அதனால உன்னபத்தி எல்லாத்தையும் எழுதி குடுத்துட்டு நீ போ”, எனக் கூறி தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.
காவல் நிலைய எழுத்தாளரிடம் சென்றவள் அவளது விவரங்களை எழுதிக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அந்த பையுடன் வெளியே வந்தாள்.
தனது லேப்டாப்பை துணியில் சுற்றி வைத்ததால், அதுவும் இப்போது அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
“லேப் இருக்கு.. இது போதும்…. “, என நினைத்து வெளியே வந்து ஏடிஎம்யில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹாஸ்டல் சென்றாள்.
வெளிநாடு செல்லும் வரை இங்கேயே தங்க முடிவெடுத்து, அதற்குன்டான பணத்தைச் செலுத்திவிட்டு அறைக்குச் சென்றாள்.
“இன்னிக்கு ஒரு நாள் அதுல தங்கிக்கோ மா… நாளைக்கு உனக்கு ரூம் அரேன்ஞ் பண்ணிடறேன்”, என்று கூறிய வார்டனிடம், அருகில் கடைவீதி இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.
குளித்து முடித்து கையிலிருந்த துணியைப் போட்டுக்கொண்டு, கடைவீதிக்குச் செல்ல தயாரானாள்.
ஒரு கிலோமீட்டருக்கு அதிக தூரம், ஆனால் அவள் நடந்தே செல்லலாம் என வேடிக்கைப் பார்க்காமல் ஏதோ யோசனையில் நடந்துக் கொண்டே இருந்தாள்.
கடைவீதியில் ஒரு போன் வாங்கிக்கொண்டு, தேவையான சில துணிகளையும் எடுத்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு திரும்ப நடக்கத் தொடங்கினாள்.
வழியில் ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்திருக்க, கூட்டத்தில், “ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க”, என யாரோ கத்துவதும், அதுவே பல முறை எதிரொலிப்பதுமாக இருக்க, இவள் கால் செய்துவிட்டு ஆம்புலன்ஸில் உடன் ஏறிச் சென்றாள்.
“நிறைய இரத்தம் போய் இருக்கு.. நீங்க அவங்க ரிலேடீவ்வா?”, என ஒரு நர்ஸ் கேட்டார்.
“இல்லை… ரோட்ல அடிபட்டு கிடந்தாங்க … என்ன ப்ளட் குரூப்?”, என அடுத்த கேள்விக்கு தாவினாள்.
“ஓ பாஸிட்டிவ்…. கைல இப்ப ஸ்டாக் இல்ல….”, என நர்ஸ் கூற, “எனக்கும் அதே க்ரூப் தான்.. நான் தரேன்”, என அவருடன் நடந்தாள்.
“ஆப்ரேஷன்கு இது பத்தாது… உங்களுக்கு தெரிஞ்ச யாராவது இருந்தா வரசொல்லுங்க”
“நான் ஊருக்கு புதுசு.. எனக்கு இங்க யாரையும் தெரியாது”, எனக் கண்மூடி படுத்துக்கொண்டாள்.
எளிதில் கிடைக்கக்கூடிய இரத்தவகையாதலால் பாதகமின்றி சிறிது நேரத்தில் மற்றொரு கொடையாளர் கிடைத்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை நடந்து முடிந்தது.
“மேடம்… அவங்க கண் முழிக்க இன்னும் நேரம் ஆகும்… அவங்க ரிலேட்டீவ்ஸ் வரசொல்லுங்க…”, நர்ஸ்.
“எனக்கு தெரியாது… அவங்க கண்ணு முழிச்சப்பறம் அவங்களையே கேட்டுக்கோங்க…. இந்தாங்க அவங்க திங்க்ஸ்”, என தன்னிடம் கொடுத்திருந்த அந்த பெண்மணியின் பொருட்களை திருப்பிக் கொடுத்தாள்.
“நீங்க பாட்டுக்கு கிளம்பினா ஹாஸ்பிடல் பில் யாரு கட்டுவா? இருங்க.. அவங்க முழிச்சப்பறம் போங்க….”, என கறாராக பேசிவிட்டு சென்றார் நர்ஸ்.
“ம்ம்…. மனுஷத்தன்மை இருந்தாலும் தப்பு, இல்லைன்னாலும் தப்பு போல…. ஹெல்ப் பண்ண வந்தவங்கள இப்படி தான் நடத்துவாங்களா? “, என முணுமுணுத்தபடி தன்னிடம் இருந்த பணத்தை வைத்து மருத்துவமனை பில் கட்டிவிட்டு, ஐசியு அறையருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
பகல் கடந்து இரவு தொடர்ந்தது. சுமார் பத்து மணியளவில் அவளே ஹாஸ்டலுக்கு போன் செய்து விவரம் கூறினாள்.
“உனக்கு ஏன்ம்மா வேண்டாத வேல… போன் பண்ணிட்டு கிளம்பி வராம அங்கயே உக்காந்துட்டு …..சீக்கிரம் வாங்க… இல்லைன்னா கேட் க்ளோஸ் பண்ணிடுவேன்”, என வார்டன் பெண்மணி கூறிவிட்டு பட்டென அழைப்பை வைத்துவிட்டார்.
“ம்ம்…. இந்த லேடி வேற எப்ப முழிப்பாங்க தெர்ல”, என யோசித்தபடி வராண்டாவில் நடந்தாள்.
இரத்தம் கொடுத்த மயக்கமும் சேர்ந்து அவளை பலவீனமாக்கியிருந்தது.
“நர்ஸ்… அவங்க எப்படி இருக்காங்க…? எப்ப கண் முழிப்பாங்க?”
“கொஞ்ச நேரத்துல முழிக்க வாய்ப்பிருக்கு.. நீங்க போய் சாப்டு வாங்க நான் இங்க தான் இருப்பேன்”, என அந்த நர்ஸ் சற்று மென்மையாக பேசினார்.
“இல்ல பரவால்ல… நான் ஹாஸ்டல் போகணும்…”, எனக் கூறித் தயங்கினாள்.
“ப்ளட் டொனேட் பண்ணதுல இருந்து ஒரு க்ளாஸ் ஜூஸ் தான் குடிச்சி இருக்கீங்க.. நீங்க சாப்டலன்னா பக்கத்துலையே இன்னொரு பெட் உங்களுக்கு போட வேண்டியதா இருக்கும்… போய் சாப்டு வாங்க… உங்க திங்க்ஸ் ரூம்குள்ள கப்போர்ட்ல வச்சிட்டு போங்க… “, எனச் சிரித்தபடி கூறினார் அவர்.
அவள் கடந்த வந்த சில மாதங்களில் எவ்வித உள்நோக்கமும் இல்லாத இயல்பான சிரிப்பைக் காண்கிறாள்.
அந்த சிரிப்பில் கேலி இல்லை, வன்மம் இல்லை, காமமும் இல்லை…
இயல்பான சிரிப்பு….
அதைக் கண்டதும் அவள் மனதில் ஒரு வலி ஏற்பட்டது, “சாதாரண சிரிப்பையே அதிசயமா பாக்கற மாதிரி இருக்கோமா? நம்ம மனநிலை அவ்ளோ பலவீனமாகிடிச்சா?”, என்ற கேள்வி அவளை அரிக்கத் தொடங்கியது.
வராத சிரிப்பைக் கஷ்டப்பட்டு உதட்டை இளித்துக் காட்டிவிட்டு கேன்டீன் சென்றாள்.
“எல்லாம் காலி மா… பக்கத்துல ஹோட்டல் இருக்கு.. அங்க போங்க…. சீக்கிரம் போங்க இல்லைன்னா அங்கயும் முடிஞ்சிடும்”, என கேன்டீனில் இருந்த மனிதர் கூற, சற்று எட்ட நடை போட்டு, மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தாள்.
கண்படும் தூரத்தில் ஒரு நடுத்தர உணவகம் இயங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டுவிட்டு நர்ஸ் சிரித்த சிரிப்பையே யோசித்தபடி நடந்தாள்.
“நாம சிரிச்சி எத்தன மாசம் ஆகுது? அந்த இயல்பான சிரிப்பு நமக்கு வருமா? சிரிக்க வருமா? “, என்று அவளே அவளை கேள்விக்கேட்டு குடைந்துக்கொண்டிருந்தாள்.
வேதனைச் சிரிப்பன்றி வேறெந்த சிரிப்பும் அவள் உதடுகள் பல மாதங்களாக அறியவில்லை… அவள் மனமும் சிரிப்பென்ற ஒன்றை மறந்தே விட்டிருந்தது.
இன்று எந்த விகல்பமும் இல்லாத ஒரு இயல்பான சிரிப்பு அவளை உலுக்கியதும் இயல்பு தானே??