3 – மீள்நுழை நெஞ்சே
“என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது.
“2 இட்லி “
“இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர்.
“சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள்.
“துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட ? ஒரு இயல்பான சிரிப்பு கூட ஏன் பெருசா தெரியுது ?” , அவள் மனதிடம் அவளே கேட்டுக் கொண்டாள்.
கடந்த பதினெட்டு மாதங்களாக அவள் கடந்து வந்த நிகழ்வுகளும், நினைவுகளும் அவளை இதுவரை பைத்தியமாக்காமல் இருப்பதே சற்று ஆச்சரியமான விஷயம் தான்.
“சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, பெருசா இருக்குதுன்னு ஆட்டம் போட்டா, சிறுசா இருக்கறதும் நிலைக்காதுன்னு .. இல்லாத படிப்ப மக படிச்சிட்டானு ஊருல எவன் பொண்ணு கேட்டாலும், அது சொத்தை இது நொள்ளைனு சொல்லி இப்போ மொத்தமும் போய்டிச்சில்ல .. இதுக்கு தான் சொல்றது பொட்ட கழுதைய பொட்டச்சியா தான் நடத்தனும்னு .. ஒரு மாசம் கூட வாழாம தாலிய அறுத்து எறிஞ்சிட்டு வந்து நிக்கறா “, அவளின் அப்பத்தா கிழவி குத்தியது.
“இந்தாம்மா .. உனக்கு அறிவு இருக்கா இல்லயா ? எந்த நேரத்துல என்ன பேசற ?”, சிறிய மகன் அதட்டியதும் கழுத்தைத் திருப்பிக் கொண்டு, “இனிமேலாவது நான் சொல்றத கேளுங்க .. அவள மூலைல ஓக்கார வச்சா தான் அறிவு வரும்“, என மீண்டும் குத்தியது.
“அம்மா…. அந்த புள்ளைய கண்டா உனக்கு ஆவாது தான்… அதுக்குன்னு அந்த புள்ள வாழ்க்கை என்னாகுமோன்னு நாங்க பதறுரப்ப கூட நீ இப்படி பேசறது நல்லா இல்ல”, எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.
“ம்ம்க்கும்…. மொச புடிக்கற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதுங்கற மாதிரி தான்டா எவ நல்லா வாழுவா ? எவ மூலியாகி மூலைல உக்காருவான்னு சொல்வாங்க… நான் அவள சரியா கணிச்சி வச்சி தான் சொல்றேன்… அவ எதுக்கும் லாயக்கு படமாட்டா…. உருப்படவும் மாட்டா”, என அது கத்தியது உள்ளறையில் இருந்த துவாரகாவிற்கு நன்றாகவே காதில் விழுந்தது.
“ஏன்த்தை இப்படி பேசறீங்க… அவ உங்க பேத்தி தானே…. அந்த பாசம் கொஞ்சம் கூடவா உங்களுக்கு இல்லாம போச்சு”, என சிறிய மருமகள் கேட்டதற்கு ஒரு முறைப்பைக் கொடுத்துவிட்டு, எழுந்து திண்ணைக்குச் சென்று அமர்ந்துவிட்டது.
துவாரகாவின் தாயிற்கு இவர்களின் பேச்சில் நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து, சற்று சிரமப்பட்டுக் காப்பாற்றி இல்லம் கொண்டு வந்து சேர்த்து இருந்தனர்.
இந்த பேச்சுக்கள் எல்லாம் எப்போதும் கேட்பது தான். துவாரகா சமீபமாக கடைப்பிடித்து வரும் அமைதியை, இப்போதும் பிடித்துக்கொண்டு, இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டு கொண்டு செய்து நாட்களைக் கடத்தினாள்.
“ஏன் ஆச்சி .. உங்க பேத்தி விவாகரத்து வாங்க போறளாமே அப்படியா ?”, என ஒரு உறவுக்கார பெண்மணி திண்ணையில் அமர்ந்துக் கேட்டார்.
“அவ அது மட்டுமா வாங்கறா? என் குடும்ப மானத்தையும் சந்தி சிரிக்க வச்சிட்டு தான் இருக்கா.. அப்போவே நான் சொன்ன மாதிரி அவல வீட்டுகுள்ள அடக்கி வச்சி இருந்தா இந்நேரம் என் பசங்களுக்கு இப்டி ஒரு அவமானம் வந்து இருக்குமா ? என் பேச்ச யாரு கேட்டா ?”, என ஒரு கேள்வி கேட்டவருக்கு அவள் பிறந்தது முதல் அவள் செய்த அனைத்து விஷயங்களும் குற்றமாகவே வாசிக்கப்பட்டது.
ஊரில் போவோர் வருவோர் அனைவருக்கும் இவளின் அப்பத்தாவே பத்தை பதினாராயிரம் ஆக்கி, பேசி பேசி ஊதி அவளின் மீதான அவதூறுகளை வளர்த்தார்.
வாசலில் கேட்கும் சத்தத்தை எல்லாம் அவள் காதில் நுழையவிடுவதே இல்லை.. நேரத்திற்கு அனைவருக்கும் சாப்பாடு முதல் டீ காப்பி, சத்து கஞ்சி வரையிலும் கொடுத்து விடுவாள்.
“இந்தாம்மா…. இந்த மருந்த சாப்புடு… “, என தாயை எழுப்பி மருந்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
“நில்லு துவாரகா…. எத்தன நாளைக்கு இப்படியே இருக்கலாம்னு இருக்க? என்ன முடிவு எடுத்திருக்க?”, அவளின் தாய் கேட்டார்.
“எல்லாம் முடிஞ்சி போச்சி. கேஸ் குடுத்து இருக்கேன். நம்ம பொருளெல்லாம் இங்க கொண்டு வந்து சேத்தணும். டிவோர்ஸ் வாங்கணும்.. அவ்வளவு தான்”, பிசிறடிக்காத குரலில் கூறினாள்.
“அதுக்கு அப்பறம்?”, அவளின் தாய் தன் மகள் வாழ்வை எண்ணி பயந்தபடிக் கேட்டார்.
“அதுக்கு அப்பறம் என்ன.. எதாவது வேலைய தேடிக்க போறேன்.. எதுவும் யோசன பண்ணாம நீ தூங்கு.. உன் உடம்ப சரி பண்ணு”, எனக் கூறிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அவள் தாய் பவானி அவளை பரிதவிப்புடன் பார்த்துவிட்டு மருந்தின் மயக்கத்தில் மீண்டும் உறங்கினார்..
நன்றாக வேலை செய்துக்கொண்டிருந்தவளுக்கு அவ்வப்போது வயிற்றில் வலியும், எலும்பில் பலமின்மையும் ஏற்படத்தொடங்கியது.
அதை என்னவென்று மருத்துவமனை சென்று பார்க்க, அவளுக்கு கொடுக்கப்பட்ட போதை மருந்தினாலும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் மருந்தை உட்கொண்டதால் இரத்தம் உறிஞ்சப்பட்டு, அது உற்பத்தியாவதும் வெகுவாக குறைந்திருந்தது.
தன் நிலையை நொந்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. இதிலிருந்து முழுதாக மீண்டு வர சித்த வைத்தியத்தின் துணையை நாடினாள்.
“இன்னும் எத்தன நாளைக்கு இவளுக்கு செலவு பண்ணிக்கிட்டு இருக்கறது ?”, என்ற அப்பத்தாவின் கேள்வி நடுகூடத்தில் இருந்த அத்தனை பேரையும் திடுக்கிட வைத்தது.
“இது என்ன கேள்விம்மா?”, அருணாச்சலம் கேட்டார்.
“அடுத்து இன்னும் 2 பொண்ணு 2 பசங்க இருக்காங்க டா.. சீக்கிரம் இவள எங்கயாவது தள்ளிவிடு.. அடுத்த வேலைய ஆரம்பிக்கணும். என் பேரனுக்கு வயசு கூடிட்டே போகுது.. அவனுக்கு கல்யாணம் பண்ண தான் அடுத்து சின்ன குட்டிங்களுக்கு பண்ண முடியும்..”
“இப்போ அவனுக்கு என்ன அவசரம்?”
“என்ன அவசரமா ? பொண்ணு காத்துட்டு இருக்கு.. ஆறு மாசமா அலஞ்சி திரிஞ்சி அவ நெனைச்சது சாதிச்சிட்டால்ல.. இன்னும் என்ன ?”, என்ற கேள்வியில் துவாரகா அவரை உணர்வுகளற்றப் பார்வைப் பார்த்தாள்.
“இந்தாம்மா சப்பாத்தி … வேற என்ன வேணும்….?”, என சர்வர் கேட்டார்.
“சாப்டு சொல்றேன்”
“சீக்கிரம்மா கடைய சாத்தணும்”, என அவர் அவசரப்படுத்திவிட்டு சென்றார்.
“அண்ணா ஒரு டீ”, எனக் கூறிவிட்டு பத்து நிமிடத்தில் அவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் வெளியேறிய நொடி அந்தக் கடையும் சாற்றப்பட்டது.
அவள் பலதரப்பட்ட யோசனைகளுடன் நடந்து மீண்டும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
“மேடம் அவங்க கண்ணு முழிச்சிட்டாங்க”, என அந்த நர்ஸ் கூறியதும் வேகமாக வந்து அந்த பெண்ணைப் பார்த்தாள்.
லேசாக கண்ணை திறந்து திறந்து மூடியபடி எழுந்து அமர, அந்த பெண் சிரமப்பட துவாரகா அருகில் சென்று உதவி செய்தாள்.
“இப்ப எப்படி இருக்கு மேம்?”, என துவாரகா கேட்டாள்.
“பெட்டர்… நீங்க?”, என அந்த பெண் கேட்டார்.
“அவங்க தான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தாங்க. ப்ளட்டும் குடுத்து இருக்காங்க”, எனக் கூறியபடி நர்ஸ் உள்ளே வந்து ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு சென்றார்.
“ரொம்ப தேங்க்ஸ்…. “, என வலியில் முகத்தை சுருக்கியபடி அந்த பெண்மணி கூறினார்.
“பரவால்லங்க… உங்க வீட்டுக்கு கால் பண்ணி யாராவது வரசொல்லுங்க… இந்தாங்க உங்க திங்க்ஸ்”, என்று ஒரு கவரை அவரிடம் கொடுத்தாள்..
“யாரும் இந்த ஊர்ல இல்ல…. நான் கால் பண்ணிக்கறேன்… உங்க உதவிக்கு ரொம்ப நன்றி…. நீங்க எங்க இருக்கீங்க?”, என அவளைக் கேட்டார்.
“நான் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கேன்… உங்களுக்கு துணைக்கு இப்ப யாராவது தேவை.. இங்க யாரும் இல்லையா?”, என மீண்டும் கேட்டாள்.
“நாளைக்கு என் பொண்ணு இந்தியா வரா.. அவள கூட்டிட்டு போக தான் நான் வந்தேன்… அவ வந்ததும் பாத்துப்பா…. “, என சற்றே சிரமத்துடன் கூறினார்..
“அப்ப இன்னிக்கு நைட்?”, என துவாரகா தயங்கி நிற்க, நர்ஸ் உள்ளே வந்து, “நாங்க பாத்துக்கறோம்.. நீங்க காலைல வந்து பாருங்க மேம்”, எனக் கூறினார்.
“ஓக்கே பாத்துக்கோங்க நான் காலைல வரேன்…. நீங்க ரெஸ்ட் எடுங்க மேம்… நான் வரேன்…. டேக் கேர்… “, எனக் கூறிவிட்டு தன் பொருட்களை எடுக்க கப்போர்டிடம் சென்றாள்.
“உன் பேர் என்னம்மா?”
“துவாரகா மேம்”
“நான் அன்பரசி…. இதான் என் கார்ட்… “, என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
கஷ்டப்பட்டு முகத்தை சிரிப்பது போல வைத்துவிட்டு சொல்லிக்கொண்டு வெளியே நடந்தாள்.
“நர்ஸ்… இந்த மொபைல் சார்ஜ் போடுங்க…. இன்னொரு மொபைல் பர்ஸ்ல இருக்கும்… அத எடுத்துக்குடுங்க”, எனக் கேட்டார்.
“இந்தாங்க மேம்…. “
“இந்த பொண்ணு காலைல இருந்து கூடவே இருந்தாங்களா?”, எனக் கேட்டார் அன்பரசி.
“ஆமா மேம். உங்கள அட்மிட் பண்ணதுல இருந்து இங்க தான் இருக்காங்க. இப்ப தான் சாப்டவே போயிட்டு வராங்க… ப்ளட் லாஸ்னு சொன்னதும் யோசிக்காம இரத்தமும் கேட்டு குடுத்தாங்க…. நல்ல பொண்ணு… ஆனா ஊருக்கு புதுசு போல”, என தன் மனதில் பட்டதைக் கூறினார் நர்ஸ்.
“ம்ம்…. “, என யோசித்தபடி போனில் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு உறக்கத்திற்குச் சென்றார்.
ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தவள் வார்டனிடம் பேசிவிட்டு தன்னறைக்கு வந்தாள்.
“துவா… இன்னிக்கு ஏதோ உருப்படியா செஞ்சி இருக்கோம்…. இதே மாதிரி தினம் ஒன்னு உருப்படியா செய்யணும்….”, என தனக்குத் தானே கூறிக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
காலையில் இருந்து இருந்த மருந்து நெடி இப்போது சற்று குறைந்து, புத்துணர்வு பெற்றாள்.
வாங்கியிருந்த போனில் தன் பழைய சிம்கார்ட்டை எடுத்துப் போட்டாள்.
போட்டதும் போன் வந்தது அவள் தோழியிடம் இருந்து.
ஒரு வெற்றுப்பார்வைப் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள்.
“எங்க டி போன? எங்க இருக்க? சொல்லாம கொல்லாம இப்படி கிளம்பி போயிட்டியே டி? எங்க இருக்க? என்ன பண்ற? சாப்டியா?”, என கனிமொழி படபடவென கேட்டாள்.
“கொஞ்சம் மூச்சு விடு கனி… நான் வேலை விஷயமா தான் வந்து இருக்கேன். அப்பாக்கு லெட்டர் எழுதி வச்சிட்டு தான் வந்தேன்… எனக்கு கொஞ்சம் ஆசுவாசம் வேணும் கனி… கொஞ்சம் தனியா இருக்கணும்…”, என மெதுவாகக் கூறினாள்.
“அதுக்காக இப்படியா கிளம்பி போவ? ஏற்கனவே உன்னபத்தி ஊருக்குள்ள ஏகப்பட்ட வதந்தி சுத்துது… இப்ப அதுக்கு நீயே தீனியும் போட்ற தெரியுமா?”, தனியே சென்று விட்டாளே என்ற ஆதங்கத்துடன் பேசினாள் கனி.
“நான் வீட்ல இருந்தப்பவே ஓடி போயிட்டேன்னு பேசினவங்க இப்ப கொஞ்சம் தைரியமா பேசுவாங்க.. அப்பத்தா கிழவிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்… இன்னும் என்ன என்ன பேசணுமோ பேசிக்கட்டும் கனி… எவனுக்கும் நான் என்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல…”, என சற்றே காட்டமாக பதில் கொடுத்தாள்.
“அப்படி இல்ல துவா. ..”
“போதும் கனி…. என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க… நான் வேலை விஷயமா தான் வந்திருக்கேன்… ஒரே அடியா வந்திருந்தா இந்த நம்பர ஏன் இன்னும் வச்சிருக்க போறேன்… அப்பா கோவமா இருப்பாரு தான் ஆனா புரிஞ்சிப்பாரு… அம்மா கத்தும்… அப்பறம் அமைதி ஆகிடும்… என்னை கொஞ்சம் தாராளமா மூச்சு விட விடுங்களேன்”, என்ற கெஞ்சல் அவள் வார்த்தைகளில் தெரிந்தது.
“சரி… தினமும் என்கிட்ட பேசணும்… “, என கனி அவள் வார்த்தைகளில் அமைதியாகி சிறிது சமாதானம் ஆனாள்.
“ம்ம்… நான் வைக்கறேன்…. தூங்க போறேன்… “, எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இந்த பக்கம் கனியுடன் துவாரகாவின் மொத்த குடும்பமும் அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தது.
“பாத்தியா டா மனோகரா…. இவ்ளோ நடந்தும் இந்த சிறுக்கிக்கு இருக்கற திமிரு கொஞ்சம் கூட கொறையவே இல்ல…. எல்லாம் நீங்க குடுத்த இடம் தான்டா…. என்ன வேலைய இவ பாத்து கிழிக்கப் போறாளாம்…? ஓடுகாலி சிறுக்கி….”, என அப்பத்தா கிழவி பேசிக்கொண்டே போனது.
அருணாச்சலம் கனிமொழியை தனியே அழைத்து சில விஷயங்களைப் பேசிவிட்டு உறங்க அனுப்பினார்.
“மனோகரா… என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல. இனிமேலும் பண்ணமாட்டா…. யாருக்கும் அவள நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல… அம்மாவ கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் வச்சிரு…. பவானி தண்ணி காய்ச்சி கொண்டு வா”, என எல்லாரின் வாயையும் அடக்கிவிட்டு உள்ளே சென்றார்.
“அக்கா .. இந்தாங்க தண்ணி காய்ச்சிட்டேன்…. நீங்க எதுவும் நினைச்சிக்காம போய் படுங்க… பாப்பா வேலை விஷயமா இரண்டு மாசமா நம்மகிட்ட பேசிகிட்டே தானே இருந்துச்சி… கொஞ்சம் வெளியே இருந்துட்டு வந்தா அவளுக்கும் தேவலை தானே… கவலைபடாம இருங்க… “, என மனோகரனின் மனைவி மாதவி பவானிக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பக்கத்து இல்லம் சென்றார்.
அண்ணன் தம்பி இருவரும் அருகருகில் இல்லம் கட்டி தொழிலும் பார்த்து சரியாக இரு வீட்டிற்கும் செய்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் அக்கா மகனுக்கு துவாரகாவை கேட்டபோது அதனை மறுத்துவிட்டதால் அப்பத்தா கிழவி, அந்த கோபத்தை இன்று வரை வார்த்தையில் விஷம் ஏற்றி பேசி வருகிறது.
எப்படியோ அம்மாவை தேற்றிவிட்டு அங்கிருந்து தன் வாழ்க்கை பாதையைத் தேடி அவளும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
இனி அவள் வாழ்க்கை எவ்வழி பயணிக்குமோ ?