7 – மீள்நுழை நெஞ்சே
“எதுக்கு க்கா இதுலாம் ?”
“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார்.
“பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள்.
“நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்ட .. நில்லு..”, என அவளையும் அவர்கள் அருகில் நிற்க வைத்து நான்கு பேருக்கும் ஆரத்தி எடுக்கக் கூறினார்.
“வசந்தி .. நீ வாசல்ல கொட்டிட்டு வா.. நான் அவங்களுக்கு ஜூஸ் எடுத்து வைக்கறேன்”, எனக் கூறிவிட்டு தங்கை மகளை அணைத்தபடி உள்ளே வந்தார்.
விகாஷ் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை அன்பரசியுடன் படுக்க வைத்துவிட்டு, துவாரகா வெளியே வந்தாள்.
பத்மினி தேவி மித்ராவிடம் பேசிக்கொண்டே அனைவருக்கும் குடிக்கப் பழரசத்தை எடுத்து வந்தார்.
“எல்லாமே சரியா அங்க முடிச்சிட்ட தானே மித்துபொண்ணு.. அவன் வந்து இங்க எந்த பிரச்சனையும் பண்ண விடக்கூடாது.. “
“அதுலாம் ஒண்ணும் வராது மினிம்மா.. அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே ..”, என வருத்தம் தோய்ந்த முறுவலை உதிர்த்தாள்.
“நாங்க இருக்கோம் தான் டா.. ஆனா எப்பவும் நீ யாரையும் முழுசா நம்பவும் கூடாது, சார்ந்து இருக்கவும் கூடாது.. அத நல்லா ஞாபகம் வச்சிக்க“, என அவளுக்கு தைரியம் கூறியபடி வந்தவர், எதிரில் துவாரகா வரவும், “எடுத்துக்க துவாரகா .. இங்க உக்காரு மா வந்துடரேன்“, எனப் புன்னகை முகத்துடன் கொடுத்துவிட்டுத் தங்கையைக் காண சென்றார்.
“அன்பு.. இந்தா இத குடி.. கொஞ்ச நேரம் கழிச்சி சாப்டலாம் ..”, எனக் கூறிக் கொடுத்துவிட்டு, விகாஷின் தலையை வருடிவிட்டார்.
“அத்தான் எங்க க்கா ?”, என பழரசம் அருந்தியபடிக் கேட்டார்.
“முகில் கூப்பிட்டான்னு போனாரு .. ரெண்டு பேரும் ஒண்ணா வந்துடுவாங்க.. நீங்க குளிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க..”
“மித்தும்மா.. துவாரகாவுக்கு ரூம் அரேஞ்ச் பண்ணி குடுத்துடு டா.. வசந்திகிட்ட மேல ரூம் ரெடி பண்ண சொல்லி இருந்தேன் .. பாவம் ரொம்ப நேரம் அவ தான் டிரைவ் பண்ணா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்”
“சரிம்மா..” , எனக் கூறிவிட்டு மித்ரா சென்றதும், பத்மினி தேவி தங்கை முகத்தைப் பார்த்தார்.
“என்ன க்கா ?”, தன் முகத்தை ஆழமாக ஆராயும் தமக்கையிடம் கேட்டார்.
“மனசுல எவ்ளோ நேரம் அடக்கி வைப்ப அன்பு.. கண்ணீர் விட்டு பாரத்த கொறச்சிடு“, எனக் கையை தடவிக் கொடுத்து கூறினார்.
“கண்ணீர் காலம் முழுக்க விட்டுட்டு தான் க்கா இருக்கேன்.. என் பொண்ணு வாழ்க்கையும் இப்டி ஆனது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. இனிமே இவ என்ன பண்ண போறாளோ ? கை கொழந்தையோட அன்னிக்கி நான் விதவையா நின்னேன் இன்னிக்கி இவ தாலிய கழட்டி போட்டுட்டு வந்து இருக்கா .. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலக்கா”, என அமைதியாக வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு கண் மூடினார்.
“அரசிம்மா .. “, என முகில் வந்து கைத்தொட்டதும் கண் விழித்து அவனைக் கட்டிக்கொண்டார்.
பத்மினி இருவரையும் உதட்டில் உறையும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“எப்டி இருக்கீங்க அரசிம்மா ?”, சிற்றன்னையை தோளில் சாய்த்தபடிக் கேட்டான்.
“உங்கள எல்லாம் விட்டு போயிடுவேனோன்னு ரொம்ப பயந்துட்டேன் டா.. ஆனா அந்த பொண்ணு ரூபத்துல கடவுள் வந்து காப்பாத்திட்டார்”, எனக் கூறிவிட்டு மெல்ல பின்னால் சாய்ந்து அமர்ந்தார்.
“அந்த பொண்ணு காப்பாத்திட்டான்னு சொல்லுங்க.. கடவுள்-ன்னு ஒருத்தர் இருந்தா என் அரசிம்மாவுக்கு இவ்ளோ கஷ்டம் குடுக்க மாட்டார். இப்போ என் பப்ளிமாஸும் இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கமாட்டா.. “, எனக் கூறியவன் குரலில் கோபம் நன்றாகவே தெரிந்தது.
“அமுதா.. உன் அரசிம்மா இப்பவும் அரசியா தான் டா இருக்கா.. எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. நீ ஃபிரெஷ் ஆகிட்டு வா சாப்டலாம் எல்லாரும்.. ரொம்ப தூரம் டிராவல் பண்ணிட்டு வந்து இருக்காங்க.. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்..”, என பத்மினி அனைவரையும் கிளப்பினார்.
“அக்கா .. நீங்க சாப்பிடுங்க .. நான் கொஞ்ச நேரம் முகில்கிட்ட பேசிட்டு வரேன்.. “, என அவர் கூறியதும், “ஆபீஸ் விஷயம் எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் அன்பு.. எழுந்து வா.. “, எனக் கண்டிப்புடன் கூறியதும் இருவரும் வாய் மூடி அமைதியாக எழுந்துச் சென்றனர்.
“மினி பேபி.. என்னை மெரட்டற மாதிரி எல்லாரையும் மெரட்டாத ..”, எனக் கூறியபடி பத்மினி தேவியின் கணவர் ராஜாங்கம் அங்கே வந்தார்.
“நீங்க மொதல் போய் கை கால் அலம்பிட்டு வாங்க.. வீட்ல கொழந்தை இருக்கான் இனிமே எல்லாரும் ரொம்ப சுத்தமா இருக்கணும்..”, என அவரையும் அனுப்பிவிட்டு வசந்தியை அழைத்துச் சாப்பிட எடுத்து வைக்கச் சொன்னார்.
மித்ரா கீழே வருவது பார்த்து, ”அந்த பொண்ணு எங்க மித்து ?”, எனக் கேட்டார்.
“குளிச்சிட்டு வரேன்னு சொன்னாங்க மினிம்மா .. “
“சரி .. கொழந்தை என்ன சாப்பிடுவான் ?”
“அவன் முழிச்ச அப்பறம் குடுத்துக்கறேன் மினிம்மா.. அவனுக்குதான் லாங் டிராவல் .. உடம்பு கெடாம இருந்தா போதும் “, எனச் சற்று கவலையுடன் கூறினாள்.
“உடம்பு கெட்டா சீக்கிரம் இந்த வெதர் அவனுக்கு செட் ஆகி சரியாகிடும் .. இப்போ சாப்பிடறியா அந்த பொண்ணு கூட சாப்பிடறியா ?”, எனக் கேட்டார்.
“பசிக்குது தான்.. பட் துவா வரட்டும் …”
“பசிச்சா உக்காந்து சாப்பிடு மித்து குட்டி.. அந்த பொண்ணு வரட்டும் “, எனக் கூறியபடி வந்து ராஜாங்கம் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
“டாடி ..”, என அவளும் அவரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
சிறு வயது முதல் அவள் நம்பும் முதல் ஆண். தந்தையை விவரம் தெரியும் முன்பே இழந்த மித்ரா, ராஜாங்கத்தை டாடி என்ற அழைப்பின் மூலம், அவரின் சொந்த மகளாகவே மாறிவிட்டாள்.
அவளின் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் உடன் நின்றவர் ராஜாங்கம் தான். இவளது திருமணத்தில் கூட அவள் விரும்புகிறேன் என்று கூறியது இவரிடம் தான்.
அவரும் பல இடத்தில் விசாரித்தபின் அன்பரசியிடம் அந்த பையன் பற்றிய விவரங்களைக் கூறி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூறினார்.
“எப்படி அத்தான்? நம்ம சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்வாங்க?”, என அன்பரசி தயங்கியபடிக் கூறினார்.
“அன்பு.. நானும் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன்.. நல்ல பையன் .. நல்ல குடும்பம்.. அவளுக்கு பிடிச்ச பையன கட்டிவச்சா அவளும் சந்தோஷமா இருப்பா.. ஒரு நாள் கூத்துக்கு வரவங்களுக்காக நம்ம பொண்ணோட மனச கஷ்ட படுத்தக்கூடாது.. “, எனப் பேசி திருமணத்தை நடத்தியவரே இவர் தான்.
இப்போது தங்களின் ஒரே மகள் இப்படி வந்து நிற்க காரணமும் நான் தானே என்கிற குற்றவுணர்ச்சி அவரைக் கொன்று கொண்டு இருப்பதும் நியாயம் தானே..
“எப்படி டா தங்கம் இருக்க ?”, அவரின் குரல் தழுதழுத்தது.
“நல்லா இருக்கேன் டாடி.. சாரி டாடி.. என்னை மன்னிச்சிடுங்க .. உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..”
“அதுலாம் ஒண்ணும் இல்லடா .. நீ ஏன்டா தனியா இவ்ளோ கஷ்டம் அனுபவிச்ச ? டாடிகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.. “, என ஆற்றாமையுடன் கேட்டார்.
“உங்கள கஷ்டப்படுத்த விரும்பல டாடி.. சமாளிச்சிடலாம்ன்னு நெனைச்சேன்.. ஆனா ..”, என அவள் விட்ட பெருமூச்சு சொல்லாமல் விட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்த்தியது.
“விடறா.. இனிமே டாடி கூட இருக்கேன்.. . சந்தோஷமா இரு.. நம்ம பாத்துக்கலாம்”, என அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து அமரவைத்தார்.
“துவா வரட்டும் டாடி.. நீங்க சாப்பிடுங்க .. “, என அவருக்கு பரிமாற ஆரம்பித்தாள்.
“நீயும் உக்காரு டா.. “, என அவளையும் அமரவைத்தார்.
“அப்பாவும் பொண்ணும் உக்காருங்க.. நாங்க அப்பறம் சாப்டுக்கறோம்.. முடியல உங்க சென்ட்டிமென்ட் ஸீன்.. டேய் பொண்ணு துவாரகா வாடா .. நீ இங்க வந்து உக்காரு .. “, என அவர்களை கலாய்த்துவிட்டு துவாரகாவை கைப்பிடித்து வந்து அமரவைத்தார்.
“நீங்களும் உட்காருங்க ஆண்ட்டி .. “, என துவாரகா கூறினாள்.
“கண்டிப்பா துவாரகா.. எல்லாரும் வந்துடட்டும் .. இவர் என் கணவர் ராஜாங்கம் .. இவன் என் பையன் முகிலமுதன்..”, என இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
“வணக்கம்” என எழுந்து நின்று பொதுவாக கைக்கூப்பி கூறிவிட்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றாள்.
“ரொம்ப நன்றி ம்மா.. எங்க அன்பு உயிர காப்பாத்திட்ட.. உக்காரு ம்மா”, என ராஜாங்கம் சிரித்தபடி அமரக்கூறினார்.
“ஒரு சகமனுஷியா செய்யவேண்டிய விஷயத்தை தான் செஞ்சேன் சார்.. அத பெருசா பேசவேணாம்..”, என அமைதியாகக் கூறினாள்.
“உங்களுக்கு அது சின்ன விஷயமா இருக்கலாம் துவாரகா எங்களுக்கு அது ரொம்ப பெருசு.. உங்க மனிதாபிமானத்தினால நாங்க பயன் அடைஞ்சி இருக்கோம்.. உங்கள சங்கடப்படுத்த விரும்பல ஆனாலும் ஒருமுறை நன்றி சொல்லிக்கறோம்..”, என முகிலமுதன் பிசிறில்லாத குரலில் கூறிவிட்டு மென்னகைப் புரிந்தான்.
அதற்கு துவாரகா தலையசைத்து ஏற்று கொண்டதோடு அமைதியாகிவிட்டாள். அவள் முகத்தில் சிறு முறுவல் கூட இல்லாதது கண்டு பத்மினி முதல் அனைவரும் அன்பரசியை பார்த்தனர்.
அன்பரசி பின்னர் சொல்கிறேன் என கண்களால் செய்கை செய்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.
அனைவரும் கனமான விஷயங்களை தவிர்த்து இயல்பாக இருக்க ஏதேதோ பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.
“ஆண்ட்டி.. நான் தூங்க போறேன்.. டையர்டா இருக்கு.. குட் நைட்”, எனப் பொதுவாகக் கூறிவிட்டு தனக்கு கொடுத்திருக்கும் அறைக்குச் சென்றுவிட்டாள்.
“ஏன் இந்த பொண்ணு சிரிக்கவும் மாட்டேங்கறா, பேசவும் மாட்டேங்கறா ?”, என ராஜாங்கம் கேட்டார்.
“அவளும் டிவோர்சீ தான் அத்தான்.. நெறைய வலிய பாத்து இருக்கா போல.. அதான் உள்ளுக்குள்ள சுருங்கிகிட்டா அத்தான்.. “, என அன்பரசி கூறவும் பத்மினி தேவி பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.
“இன்னிக்கி இருக்க இளைய சமுதாயத்துக்கு என்ன தான் பிரச்சனை மினி பேபி? நெறைய டிவோர்ஸ் இப்ப நம்மல சுத்தியே நடக்குது.. கொழந்தைங்க அவங்க இயல்ப தொலைச்சிட்டு வராங்க.. என் பொண்ணு மாதிரி தானே அவளும்.. இவள விட சின்ன பொண்ணு வேற.. மனசே பாரமா இருக்கு”, என வருத்தமாகக் கூறிவிட்டுத் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
“என்ன நடந்ததுன்னு எனக்கும் முழுசா தெரியாது அத்தான்.. என்னை காப்பாத்தினா, அப்பறம் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி வேலை வாங்கினா.. வெளிநாடு போறதா தான் சொன்னா, அவளுக்கு வேலை குடுத்த கம்பெனி இங்க ஒரு கம்பனிக்கு ப்ராஜக்ட் குடுத்து இருக்காங்க போல.. அத இவள முடிச்சிட்டு அங்க வர சொல்லி இருக்காங்க.. நம்ம வீட்டு பக்கம் தான் இருக்குன்னு நான் தான் கட்டாயம் செஞ்சி நம்ம வீட்ல தங்க கூட்டிட்டு வந்தேன்.. “, எனத் தனக்குத் தெரிந்த அவளது விவரங்களைக் கூறினார்.
முகிலமுதன் அமைதியாக மித்ராவை அணைத்தபடி இந்த சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டு இருந்தான். மித்ராவிற்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவும், அன்பும் கொடுக்கபட்டு இருந்தால் துவாரகா தன் இயல்பைத் தொலைத்திருக்க மாட்டாளோ என்று எண்ணினான்.
“எல்லாம் நல்லதுக்குன்னு நெனைப்போம் அன்பு.. எல்லாமே கடந்து போய் தான் ஆகணும்.. அந்த பொண்ணு தனியா நடக்கறா அவளோ தான்.. இங்க இருக்கற வரை நம்ம நல்லபடியா பாத்துக்கலாம்..”, என அந்த பேச்சை அத்துடன் முடித்து அனைவரையும் உறங்க அனுப்பிவைத்தார்.
அறைக்கு வந்த துவாரகா தன் தோழி கனிமொழிக்கு அழைத்தாள்.
“கோயம்புத்தூர் போயிட்டியா துவா?”, என எடுத்ததும் கேட்டாள்.
“வந்துட்டேன்.. அந்த ஆண்ட்டி வீட்ல தான் இருக்கேன். அவங்க என்னை தனியா போக விட மாட்றாங்க .. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல கனி..”, கூறியவள் சற்று அமைதிக் காத்தாள்.
நிமிடங்கள் அமைதியில் கரைந்தது. துவாரகாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மனிதர்களிடம் பேசவே மிகவும் வெறுப்பாக தான் இருக்கிறது அவளுக்கு.
“பிடிக்காத எடத்துல இருக்காதா துவா.. ஒரு ரெண்டு நாள் அவங்க சொன்னதுக்காக இருந்துட்டு ஹாஸ்டல் போய் தங்கிக்க.. ஏன் ரொம்ப யோசிக்கற?”
“அந்த கொழந்தைய விட்டு போறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு கனி.. கொஞ்ச நேரத்துல என் மனசு எல்லாம் லேசா பண்ணிட்டான் .. கொழந்தைங்க எல்லாரும் வரம் தான்ல.. அவங்க கூட இருந்தா போதும் மனசுக்கு அமைதி தானா வருது”, என விகாஷின் நினைவில் பேசினாள்.
“அப்போ ரெண்டு மாசம் தானே .. அங்கயே இரு.. மாசாமாசம் பணம் குடுத்துடு.. உனக்கும் சங்கடம் இருக்காது..” ,என தோழியின் மனதை உணர்ந்துக் கூறினாள்.
“அன்பு ஆண்ட்டி வாங்கிப்பாங்களா ? அதான் யோசனை.. தவிர பெரியவங்ககிட்ட என்ன பேசறதுன்னு தெரியல கனி.. ரொம்ப ஒரு மாறி இருக்கு.. “, எனத் தன் இயல்பு தொலைந்ததைச் சொல்லத் தெரியாமல் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“மனசுல இருக்கற குப்பை எல்லாம் எடுத்து வெளிய போடு துவா.. உன்ன நீயே காயப்படுத்திக்காத.. உன்னை நீ தான் வெளிய கொண்டு வரணும்.. எங்க பழைய துவா எங்களுக்கு வேணும்.. “, எனக் கூறிவிட்டு கனிமொழி வைத்துவிட்டாள்.
துவாரகா ஒரு பெருமூச்சு விட்டு தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
“என்னை நான் தேடி எடுக்க முடியுமா?”