11 – மீள்நுழை நெஞ்சே
“கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா.
“எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் போட்டுட்டே வர்ற ?”, எனக் கத்தியபடி கனிமொழி கிணற்றடியில் இருந்து எழுந்து வந்தாள்.
“இந்தா.. உனக்கு புடிச்ச வாழப்பூ .. நானே செஞ்சேன்”, எனக் கையில இருந்தக் கிண்ணத்தைக் கொடுத்தாள்.
“ம்ம்.. நல்ல வாசனை.. மதியம் சாப்டுக்கறேன்.. வீட்ல என்னாச்சி ? சரின்னு சொல்லிட்டாங்களா ?”, என அவளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தைக் கவனித்துக் கேட்டாள்.
“ஆமா கனி.. சரின்னு சொல்லிட்டாங்க.. இன்னும் இருவது நாள்ல நான் பறக்க போறேன்”, என அவளைக் கட்டிக்கொண்டுச் சுற்றினாள்.
“ஏன் துவாரகா.. இப்போ போனா எப்ப வருவ? காலா காலத்துல கல்யாணம் பண்ணா தானே நல்லது..”, எனக் கூறியபடி கனியின் அம்மா அங்கே வந்தார்.
‘மறுபடியுமா ?’ , என துவாரகா கனியின் முகத்தை பார்த்தாள். அவள் வாயிற்குள் சிரித்துக்கொண்டு ‘பேசு’ எனத் தலையாட்டினாள்.
“இங்க வந்து முதல் உக்காருங்க அத்த..”, என அவரை அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்து, அவரின் காலடியில் அவளும் அமர்ந்தாள்.
“இந்தாடி .. மேல உக்காரு.. ஏன் காலுக்கு கீழ உக்காருற ?”, என அவர் பதறவும், “அட எப்பவும் உங்க காலுக்கு மருதாணி வைக்க நான் இப்படி தானே உக்காருவேன்.. இப்ப என்னவாம் ?”, எனக் கேட்டாள்.
“இப்ப நீ எவ்ளோ பெரிய வேல பாக்கற ..? வெளிநாடு வேற போக போற.. இப்புடி உக்காந்தா நல்லாவா இருக்கு ?”
“சரித்த.. இப்ப நான் வேலைக்கு போகாம இருந்தா இப்புடி கீழ உக்காந்தா சரியா ?”, என அவரின் முகத்தைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“அப்பவும் இப்புடி உக்கார கூடாது தான் டி.. இப்ப உனக்குன்னு ஒரு உத்தியோகம் இருக்கு.. அதுக்காவது நாங்க மரியாத குடுக்கணும்ல துவாரகா..”
“ஹான் .. இப்ப சொன்னீங்க பாருங்க .. இது தான் பாயிண்ட்.. பாத்தியா கனி நம்ம அத்த செம ஷார்ப்.. சும்மா இருக்கறப்போ இல்லாத மரியாதையும், மதிப்பும் நான் சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எப்டி குடுக்கறிங்க ..? “
“அது..”. என அவர் ஆரம்பிக்கும் முன், ”இருங்க நான் சொல்லி முடிச்சிடறேன் ..”, என அவரைத் தடுத்தாள்.
“வேலைக்கு போறதால.. அந்த வேலைக்கு நீங்க மரியாதை தரீங்க.. அதான் விஷயம். அந்த வேலை எங்களுக்கு மரியாதை வாங்கி தருது, சுயமா தைரியமா நிக்க சொல்லி தருது, பொருளாதார சுதந்திரம்னா என்னனு சொல்லி தருது, திடீருன்னு பெரிய இழப்பு ஏற்பட்டா கூட யாரையும் சார்ந்து வாழாம இருக்க வைக்குது .. இன்னும் நெறைய நல்ல விஷயங்களை எல்லாம் அது குடுக்குது. அதனால பொம்பள புள்ளைங்க வேலைக்கு போனா எவ்ளோ நல்ல விஷயம் இருக்குன்னு பாருங்க..”, எனக் கூறிவிட்டு அவரைப் பார்த்தாள்.
கனிமொழியின் அம்மா அவளின் முகம் பார்த்துவிட்டுக் கனிமொழியைப் பார்த்தார்.
“இப்ப சொல்லுங்க வாழ்க்கைல கல்யாணம் முக்கியம் தான் ஆனா அது மட்டுமே முக்கியம் இல்லை தானே அத்த..?”
“சரி தான் டி.. கனி நீ உனக்கு கெடச்ச வேலைக்கு போ..”, எனக் கூறிவிட்டு எழுந்து கணவரின் புகைப்படம் முன்பு நின்றார்.
பதின்ம வயதில் திருமணம் முடித்து, உடனே கையில் ஒரு குழந்தையும் வந்துவிட்டது. கனிக்கு ஏழு வயதாகும் போது, அவளின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
திடீரென ஏற்பட்ட இழப்பில் கனியின் அம்மா நிலைக்குலைந்துப் போய்விட்டார். கணவரின் வீட்டாரும் அவரைக் கைவிட்டு விட, மீண்டும் பிறந்தகம் வந்தவரை தம்பி மனைவி குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரின் தந்தையின் துணையோடு, தாயின் வழி சொத்தாக வந்த இந்த வீட்டில் வாழ ஆரம்பித்தார்.
“அம்மாடி மரகதம்.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மா.. நான் இன்னும் எவ்ளோ நாள் இருப்பேன்ன்னு தெர்ல.. உனக்கும் உன் பொண்ணுக்கும் ஒரு பாதுகாப்பு வேணும் ம்மா”, என அவரின் தந்தைக் கூறினார்.
“வேணாம் ப்பா.. எனக்கு என் பொண்ணு மட்டும் போதும்.. மறுபடியும் என்னால சித்ரவதபட முடியாது. .. கடவுள் கண்டிப்பா எங்கள கைவிட மாட்டாரு..”
“எங்கம்மா இருக்கான் கடவுள்.. நேத்து அந்த குடிகாரன் உன்ன நாசம் பண்ண பாத்தானே.. அப்ப யாரு வந்தா? நீயா தானே அவன்கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்திருக்க.. உன் முகத்த நேத்து அப்புடி பாத்ததுல இருந்து எனக்கு மனசு பதறிகிட்டே இருக்கு மா..”, எனக் கண்களில் நீருடன் கூறினார்.
“எப்பவும் யாராவது வந்து என்னை காப்பாத்துவாங்கன்னு எதிர்பாக்கறது தப்புப்பா.. இத நான் என் புருஷன் செத்தப்பவே புரிஞ்சிக்கிட்டேன்.. என்னையும் என் பொண்ணையும் நானே பாத்துக்கறேன்.. இனி கல்யாண பேச்சு என்கிட்ட எடுக்காதீங்க..”, என உறுதியாகக் கூறிவிட்டுத் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்.
இளவயதில் கணவனை இழந்துவிட்டால், என்ன என்ன கஷ்டங்களும், இம்சைகளும் ஏற்படுமோ அத்தனையும் கடந்து வந்து இன்று கனிமொழியை ஆளாக்கி விட்டார். அவளும் பள்ளி குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கத் தகுதிப் பெற்று விட்டாள், வாத்தியாராக……
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக் கூடத்தில் ஒரு பணியிடம் காலியாக இருக்கிறது என்று தெரிய வந்ததும், அங்கு வேலைக்கு செல்ல அம்மாவிடம் பேசும்போது தான் அவளுக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று வேலைக்குச் செல்ல வேண்டாமென கூறிவிட்டார்.
இப்போது துவாரகா கூறியதில் இருந்த உண்மைச் சுட மகளை சுயமாக நிற்கக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
“என்னடி ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் போல?”, எனக் கனி துவாரகாவைப் பார்த்து கேட்டாள்.
“அடிக்கணும்ல.. அப்பத்தானே திங்க முடியும்..”, என கனி அம்மா செய்து வைத்த இறால் தொக்கைச் சுவைத்தபடிக் கூறினாள்.
“சரி.. எத்தன நாள் இங்க இருப்ப ?”
“பத்து நாள்.. மீதி பத்து நாள் அங்க.. நீயும் என்கூட கிளம்பி வர”
“என் வேலைக்கு யாரு போவா ? நீ ஃப்ளைட் ஏறுற அன்னிக்கி வரேன்..”
“நம்ம எப்ப தாண்டி சிட்டில ஊரு சுத்தறது ?”, துவாரகா முகத்தைச் சுருக்கிக்கொண்டுக் கேட்டாள்.
“நீ அமெரிக்கா போய்ட்டு வா.. அப்பறம் நம்ம போலாம்..”, என அவள் முகத்தை நேராக்கியபடிக் கூறினாள்.
“நீயும் கம்முன்னு அமெரிக்கா வாயேன்.. “
“ஏன் ரெண்டு பேரும் உலகத்த சுத்திக்கிட்டு வாங்களேன் .. வந்து சாப்டுங்க வாங்க டி .. “ , என மரகதம் சத்தம் போட்டார்.
“தொக்கு மட்டும் குடுங்க அத்த.. அங்க அம்மா பாத்துகிட்டு இருப்பாங்க.. நான் சாயந்தரமா வரேன்.. இனிப்பு உளுந்து வடை செஞ்சி வைங்க..”, எனக் கூறிவிட்டு தன் வீட்டிற்கு ஓடினாள்.
“மெனு வேற.. நான் சொல்லி நீ என்னிக்காவது செய்றியா ம்மா ? அவ வந்தா மட்டும் எல்லாமே செய்யற ..”, என கனி செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
“உங்க நாடகம் எல்லாம் தெரியும் டி.. வந்து சீக்கிரம் சாப்புடு.. நான் வயலுக்கு போகணும்.. கீரை எல்லாம் எவ்ளோ எடுதாங்களோ தெர்ல ..”, எனக் கூறிவிட்டு அவரும் சாப்பிட்டுவிட்டு அவசரமாகக் கிளம்பினார்.
தந்தையின் சொத்தாக வந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறு சிறு பயிர்களைச் சாகுபடிச் செய்து, தனது வாழ்வை நடத்தி வருகிறார் மரகதம்.
கனிமொழிக்கு பதிமூன்று வயதான போது மரகதத்தின் தந்தையும் இறந்துவிட்டார். ஆனால் தனது சொத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலமும், ஐந்து லட்ச ரூபாய் பணமும் ஒதுக்கி வைத்தத்தைக் கொண்டு மரகதம் தன் அளவில் மரியாதையான வாழ்வை வாழப் போதுமானதாக இருந்தது.
நிலத்தில் விதைத்த அனைத்தும் கணிசமான லாபம் கொடுத்து இயற்கையும் அவருக்கு உதவியது.
“இவ்ளோ நேரமா ? சீக்கிரம் வரச்சொன்னேன் ல?”, என பவானி அவளை முறைத்தபடிப் பரிமாற ஆரம்பித்தார்.
“அத்தைகிட்ட பேசிட்டு இருந்தேன் மா.. அதான் லேட்..”, எனக் கூறிவிட்டு அவருக்கு முதல் கவளை உணவைக் கொடுத்துவிட்டு உண்ண ஆரம்பித்தாள். வீட்டில் உண்ணும் போது தினம் ஒரு வேளையாவது இப்படி தான் நடக்கும். பவானியும் சிரித்தபடி அவளுக்குப் பிடித்த வகைகளை அதிகமாகப் பரிமாறுவார்.
அவளின் அண்ணன் அதற்கு அவரிடம் சண்டைக்கு நிற்பான். அவனுக்குப் பிடித்தது கூட சில சமயம் அவளுக்கு அதிகமாகப் பரிமாறப்படும்.
“குட்டி.. என்ன என்ன வாங்கணும்? புது துணி எத்தன எடுக்கணும்? ஊருக்கு கொண்டு போக பெட்டி, மத்த ஜாமானம் எல்லாம் லிஸ்ட் போடு.. நாளைக்கு டவுன் போய் ஒண்ணா வாங்கிடலாம்”, எனக் கூறியபடி அப்பாவும் சிற்றப்பாவும் வந்தனர்.
“நான் ஏற்கனவே முக்கால்வாசி வாங்கிட்டேன் சித்தப்பா.. சமையல் பொடி எல்லாம் மட்டும் தான் இனி வாங்கணும்..”
“அது அங்க இருக்காதா டி ?”, பவானி அவளுக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வைத்தபடிக் கேட்டார்.
“அங்க எல்லா எடத்துலையும் கெடைக்காது ம்மா.. இந்தியன் ஸ்டோர்ஸ் எல்லாம் கம்மியா தான் இருக்கும்.. நம்ம தங்கி இருக்கற எடத்துல இருந்து கொறஞ்சது ரெண்டு மூணு மணிநேரம் போக வேண்டியதா தான் இருக்கும். .. “, என அவள் கூறியதும் பவானி ஆச்சர்யப்பட்டு, “அப்பறம் அவங்க எல்லாம் என்ன தான் சாப்பிடுவாங்க ?”, என முகவாயில் கைவைத்துக் கேட்டார்.
“எல்லாம் காஞ்சி போன பிரட் தான்”, எனக் கூறியபடி மாதவி வந்தார்.
“இந்தா துவா உனக்கு புடிச்ச காடை வறுவல்”, என அவர் ஒரு பிளேட் வைத்தார்.
வழக்கமாக நடக்கும் கவனிப்பை விட இப்போது பல மடங்கு அதிகமாக நடந்துக் கொண்டிருந்தது.
“மனோகரா.. புள்ளைக்கு பணம் பாங்க்ல அனுப்பிவிடணும்.. அங்க எடுத்து செலவு பண்ண வேணும்ல.. அத பாங்க்ல பேசி என்னனு பாரு..”, எனச் அருணாச்சலம் கூறியதும் , “அப்பா.. அதுலாம் என் ஆபீஸ்ல பாத்துப்பாங்க.. நானும் அதுக்கு தகுந்த ஏற்பாடு பண்ணிட்டேன்.. நீங்க கவல படாதீங்க.. பணத்த பத்திரமா வைங்க அம்மாவுக்கும் சித்திக்கும் ஆளுக்கு ரெண்டு தங்க வளையல் வாங்கி போடணும்.. என்ன ருசி .. ஆஹா ..”, என விரல்களை நக்கியபடி எழுந்தாள்.
“இருக்கறது போதும் .. இனி உனக்கு தான் வாங்கணும்.. “, எனக் கூறிவிட்டு இருவரும் அங்கிருந்துச் சென்று விட்டனர்.
“பாத்தீங்களா க்கா.. நமக்கு வாங்கணும்ன்னு சொன்னா என்ன சொல்லிட்டு போறாங்கன்னு..?”, மாதவி கேட்க, “இருக்கட்டும்.. எங்க போயிடுவாங்க.. பேசிக்கலாம் விடு மாதவி”, எனக் கூறிவிட்டு அடுத்த வேளை உணவுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
“அம்மா.. நான் கனி வீட்டுக்கு போயிட்டு வரேன்.. ராத்திரி அங்கயே சாப்பிட்டு வந்துடுவேன்.. எனக்கு எதுவும் செய்யாத..”, எனக் கூறிவிட்டு தனது லேப்டாப் தூக்கிக் கொண்டு அங்கே சென்றாள்.
“ஹம்ம்.. இனி இவளுங்க அக்கப்போரு சரியா இருக்கும்.. ஊருக்குள்ள என்ன என்ன வம்பு இந்த பத்து நாள் இழுப்பாங்களோ தெர்ல.. நான் ராத்திரி ஆரா மீன் கொழம்பு வைக்கலாம்ன்னு இருந்தேன்.. இப்ப இவ அங்க ஓடிட்டா.. என்னக்கா பண்றது?”
“கொழம்பு வச்சிடு மாதவி.. நாளைக்கு அதுவே விட்டுடலாம்.. நாளைக்கு இவள கூட்டிக்கிட்டு கடைக்கு போயிட்டு வந்துடலாம்.. தோடு செயின் எல்லாம் அங்க எப்டி போடுவாங்களோ அப்புடி எடுத்துக்கட்டும். நீ தம்பிகிட்ட சொல்லி வண்டி கொண்டு வர சொல்லிடு..”
“மாமா கிட்ட சொல்லணும்ல க்கா.. “, என மாதவி கேட்டதும், “அவரு பொண்ணுக்குன்னு சொன்னா சரின்னுடுவாரு.. நான் சொல்லிடறேன்.. நீ தம்பிகிட்ட சொல்லு.. அப்டியே நமக்கு மாத்த வேண்டியது இருந்தா மாத்திக்கலாம்..”
“சரிக்கா.. “
“நீ மீன் கொழம்பு மட்டும் வை.. ராத்திரி உனக்கும் சேத்து நான் பண்ணிடறேன்”, எனக் கூறி அனுப்பி வைத்தார்.
“சரிக்கா..”
“அடாவடி பண்றவளுக்கு அரசபோகம் நடக்குதோ ? அப்புடி என்னடி ஒரு அடக்கம் இல்லாத பொட்டச்சி.. வீட்ல ஒரு வார்த்த சொல்லாம நாடு விட்டு நாடு போக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்து சொல்றா.. நீங்களும் அவளுக்கு மண்டைய ஆட்டுறிங்க .. என்னிக்கி இருந்தாலும் நான் சொல்றமாதிரி இவ எதுக்கும் லாயக்கி படாம மூலைல தான் உக்கார போறா .. இது நடக்குதா இல்லயான்னு பாருங்க டி”, என அப்பத்தா கிழவி பாக்குடன் இவர்களையும் இடித்துக்கொண்டு இருந்தது.