வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
வந்துட்டேன் .. மறுபடியும் ஒரு அட்டகாசமான எழுத்தாளரோட வந்துட்டேன் . இவர பத்தி சொல்லணும்னா.. இவரோட சிறப்பே நம்ம வாழ்க்கைல நம்ம தினம் கடந்து வர்ற பிரச்சனைகள இவர் ஒண்ணு ஒண்ணா நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டராரு..
இவரோட தனி தன்மை எவ்ளோ சென்சிடிவ் பிரச்சனையா இருந்தாலும், அதை இவர் எழுத்துல குடுக்கற விதம் இருக்கே ..
அப்பபாப்பா .. அதுக்கு தாங்க நான் அவரோட தீவிர வாசகி ஆகிட்டேன் .. என்னை போலவே நிறைய பேர் இங்க அவரோட விசிறிகள் இருக்கீங்க .. நமக்காக இவர அங்க இங்கனு தாவி அவர பிடிச்சி நம்ம பயணத்துல இணைச்சிட்டேன்..
வாங்க யாருன்னு பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1.புனைபெயர் – Karthi Sounder
2.இயற்பெயர் – Karthi Sounder
3.படிப்பு – B.Tech
4.தொழில் – Software Consultant
5.பிடித்த வழக்கங்கள் –
பழக்கம் என்று சொல்லாமல் போதை என்று சொல்லலாம்.. முன்பு புத்தகங்கள் இப்போது குழந்தைகள். குடும்பமாய் எங்காவது அடிக்கடி காணாமல் போகும் பழக்கம் தான் இப்போதைய மிகப்பெரிய வழக்கம்.
6. கனவு –
தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் சென்று விவசாயம் பார்த்தபடி வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான நிலையை அடைய ஓடிக்கொண்டிருக்கிறேன்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
எழுத்தின் மீது என்று சொல்லாமல் தமிழின் மீது என்று சொல்லலாம். தமிழ் மொழியின் மீது ஒரு ஈர்ப்பு காதல் உண்டு. அதுவே பின்னாளில் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது. சுருங்கச்சொன்னால் தாய் பேசவைத்தாள், தமிழ்த்தாய் எழுதவைத்தாள்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
சரியாக சொன்னால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நாட்களிலேயே சிறுவர்மலர் படிக்கும் பழக்கத்தில் ஆரம்பித்தது தான் எனது வாசிப்பு பயணம். அன்று படித்த கதைகளில் இன்றும் என் மனதில் நிற்கும் கதைகள் – பனி மனிதன், காலம், மாற்றம், செவ்வந்தியப்பன் என்று நீண்டுகொண்டே செல்லும். வாசிப்பில், கற்பனையில் நான் என்ன நினைக்கிறேனோ, என்னவாக நினைக்கிறேன அத்தனை பிரமாண்டம் கொள்ளும் அந்த காட்சியும். வாசிப்பின் போதையை இதைவிட எளிதாக விவரிக்க முடியாது.
கண்டதை படி, பண்டிதனாவாய் என்பது பழமொழி. எனது வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் சொல் இது.
9. உங்களை எழுத தூண்டியது எது?
எனது மகளும் ப்ரதிலிபியும். தாம்பத்தியம் என்னும் கதையை அவள் பிறக்காவிட்டால் நான் எழுதியிருக்கமாட்டேனோ என்று அநேகம் முறை யோசித்திருக்கிறேன். Postpartum depression (மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு/மனஅழுத்தம்) என்பதன் வீரியம் அவள் பிறந்தபின் எங்கள் குடும்பத்தில் சற்றே அதிகமாக இருந்தது. மனஅழுத்தம் குறித்து நன்றாக தெரிந்தும் புரிந்துமே பிரச்சனைகள் ஏராளமாய் இருக்க, இதெல்லாம் தெரியாமலே இன்னும் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுமோ என்று யோசித்தேன். எல்லோருக்கும் புரியும் வண்ணம், அதே சமயம் படிக்கவும் தூண்டும் வண்ணம் எழுதலாம் என்றே எழுத ஆரம்பித்தேன். எழுதலாம் என்று முடிவு செய்தபோது ‘இங்கே எழுது’ என்று பிரதிலிபி அணைத்துக்கொண்டது.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
மே 5, 2019
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
சர்வ நிச்சயமாக…. பலர் நான் எழுதிய சமூக பிரச்சனைகளை அவர்களும் சந்தித்ததாகவும், அது என்ன என்று தெரியாமல் கஷ்டப்பட்டதாகவும், எனது கதையை படித்து அதை புரிந்துகொண்டு, அதை கடந்துவந்ததாகவும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டுள்ளனர். முதல் கதைக்கு மட்டுமல்ல, அனைத்து படைப்புகளுக்குமே அந்த தன்மை உண்டு. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் நான் எழுதவந்ததன் நோக்கமே அடிபட்டுவிடும்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
Pen is mightier than sword என்று நீங்கள் வாசித்தது இல்லையா?
எழுத்து என்று வரும்போது, அது அறிவு சார்ந்து வருகிறதே. அறிவு மாற்றத்தை கொண்டு வருமே.
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் உலகில் நாம் மின்னூல் (ebook) அல்லது reading app பயன்படுத்துகிறோம் என்றாலும் புத்தகங்களில் வாசிப்பது என்பது வேறு விதமான அனுபவம். புத்தகம் என்ற ஒன்று நம்மிடம் வரும்போது, பிறர் நமக்கு கையெழுதிட்டோ, அல்லது நாம் நமது பெயரை அதில் எழுதியோ தான் பயன்படுத்துகிறோம். என்னுடையது, எனக்கு கிடைத்தது என்கிற இதமான உணர்வு ஒரு மின்னூலை காசுகொடுத்து வாங்கினாலும் கிடைக்காது. ஒரு புத்தகத்தை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவமும் நினைவுகளும் தரும். நமது குறிப்புகளாய் புத்தகத்தில் அடிக்கோடிட்டு குறிப்புகள் எழுதி நாம் வாசிக்கும்போது, நமது நினைவுகளோடு கலந்துவிடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூட அதையே சொல்கிறார்கள் – மின்னூலில் வாசிப்பதை விட புத்தகத்தில் வாசிப்பது அதிகமாக நமக்கு நினைவில் இருக்குமென்று.
இதையெல்லாம் மீறிய எனது கருத்து – புத்தகங்களை சுலபமாக திருட முடியாது, அதேபோல விற்கவும் முடியாது. ஆனால் மின்னூலை சுலபமாக திருடலாம் விற்கலாம்.
14. நீங்கள் பதிபித்த பதிப்புபுத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இதுவரை நான் எழுதிய படைப்புகள் விவரம் கீழே. புத்தகமாய் வாங்க எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்- [email protected]
தாம்பத்தியம்
தொட்டாச்சிணுங்கி (பாகம் 1 & 2)
வினோதமானவளே (பாகம் 1 & 2)
உயிர்க்கொல்லி
அத்தா
கார்த்தி சௌந்தரின் கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)
ஆபாசமல்ல
கண்ணாடித்திரைகள்
தபுதாரன்
இப்படிக்கு நானல்ல (எழுதிக் கொண்டிருக்கிறேன்)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஆடியோ புத்தகங்கள் என்பது நமது வாசிப்பு நேரத்தை சுலபமாக்கித்தர ஏற்படுத்தப்பட்டது. வாசிக்க நேரமில்லை என்னும் பட்சத்தில், எனக்காக ஒருவர் வாசிக்க, நான் அதை கேட்டபடி வேறு வேலைளையும் செய்துகொள்ளலாம். உதாரணமாக உடற்பயிற்சி செய்துகொண்டே நான் ஆடியோபுத்தகம் கேட்கலாம் ஆனால் அதை வாசிக்கமுடியாது. புத்தகத்தில் கவனம் இருக்குமா அல்லது செய்யும் வேலையில் கவனம் இருக்குமா என்பது கேட்பவருக்கே வெளிச்சம். ஆடியோபுத்தகம் என்றாலும் அதற்கு நேரம் ஒதுக்கி கவனித்தால் மட்டுமே அந்த புத்தகத்தை நாம் படித்ததாக கருதமுடியும். கேட்பது வேறு… கவனிப்பது வேறு…
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
எழுத்தாளரின் வெற்றி என்பது எழுதிய படைப்புகள் மூலம் பணம் சம்பாதிப்பதிலோ, பிரபலமடைவதிலோ அல்லது எழுத்துலகில் நிறைய தொடர்புகளை பெறுவதிலோ இல்லை. படைப்பை படிப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமாவது வந்தால் அதுவே ஒரு எழுத்தாளரின் வெற்றி.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
நான் இதுவரை எழுதிய நாவல்கள்/ சிறுகதைகள் எல்லாமே கண்டிப்பாக இதை எழுதி வாசகர்களுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் எழுதப்பட்டது. எழுதியிருக்க வேண்டாமோ என்று மனதில் அவ்வப்போது தோன்றும் விஷயம் ஒன்றே ஒன்று தான் – முதல் நாவலில் கதைக்கு நடுவே அநேக சினிமா பாடல் வரிகளை சேர்த்திருந்தேன். கன்னி எழுத்து என்பதால், அநேகர் படிக்கவேண்டும் என்று அப்படி எழுதினேன் என்றாலும் அவற்றை பின்னாளில் நீக்கியிருக்கலாமோ என்று யோசித்திருக்கிறேன். இருந்தாலும் அவற்றை நீக்கவில்லை. முதல் குழந்தை என்பதால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எல்லாமே என்று தான் சொல்லவேண்டும். எழுதத்தெரியும் என்ற அங்கீகாரத்தை முதல் படைப்பு கொடுத்தது. அதை தக்கவைத்துக்கொள்ள அடுத்த படைப்புகள் உதவியது.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
ஒரு விஷயத்தை பற்றி எழுதவேண்டும் என்று தோணும்போது அதுவே கதையின் கரு என்று முடிவு செய்து அதற்கான கதையையும் கதாபாத்திரங்களையும் அதன் பின்பே யோசித்து முடிவு செய்வேன். அதிகமான மெனக்கெடல் கதையின் தலைப்பிற்கே எடுத்துள்ளேன். எனது படைப்புகளை முழுவதுமாய் படித்துமுடிக்கும்வரை தலைப்பிற்கான காரணம் புரியாது…படித்துமுடித்தபின், உண்மையில் அந்த தலைப்பு சரிதான் என்று தோன்றும்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
“உயிர்க்கொல்லி” என்ற சிறுகதை ப்ரதிலிபி தளத்தில் நடந்த தவமாய் தவமிருந்து போட்டியில் முதல் இடம் பிடித்தது.
“தாய்மை” என்ற கவிதையும் அதே போட்டியில் குறிப்பிடத்தக்க கவிதைகளில் முதல் இடம் பிடித்தது.
“அத்தா” என்ற சிறுகதை ப்ரதிலிபி தளத்தில் நடந்த வாரணமாயிரம் போட்டியில் முதல் இடம் பிடித்தது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ஆரம்பத்தில் எதிர்வினை கருத்துக்களை பார்க்கும்போது கோபம் வந்தது உண்மையே. இப்போது உணர்ச்சிகளுக்கு இடம்கொடுப்பதில்லை. எனது படைப்புகளை வாசித்து அதற்கான விமர்சனத்தை ஒருவர் சொல்லும்போது, அதில் இருக்கும் நிறைகுறைகளை ஏற்றுக்கொள்கிறேன், அவற்றை
அடுத்தடுத்த படைப்புகளில் திருத்தியும் உள்ளேன். மற்றபடி வேண்டுமென்றே விமர்சிப்பவர்களுக்கு புன்னகை மட்டுமே அதிகபட்ச எதிர்வினை.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
எல்லாமே..ஆனால் கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்ற காரணம் தவிர,சிறுவயதில்
இருந்தே அந்த பழக்கம் இருக்கிறது .
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
எல்லா காலகட்டத்திலும் ஒரு படைப்பினுடைய தரம் அப்படியே தான் இருக்கும். வாசகனின் தேர்வை பொறுத்து அந்த படைப்பு பார்க்கப்பட்டால் அப்படிதான் தோன்றும்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
உயிர்க்கொல்லி
மருத்துவம் சார்ந்து என்றாலும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் கொண்ட கதை.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று பட்டியலிடுவதை விட, புத்தகங்கள் படிக்கவேண்டும் என்ற கருத்து ஆழமாக விதைக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கும் படி இல்லாமல் பொழுதை ஆக்குவதற்கு என்று படிக்கவேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தேர்வு செய்யுங்கள்.
படிக்க ஆரம்பிக்கிறேன், எதை படிக்க என்று கேட்பவர்களுக்கு நான் எப்போதும் சொல்லும் புத்தகம் – கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன். அது ஆரம்பம் மட்டுமே. முடிவு அல்ல…
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
2000 வார்த்தைகளுக்குள் இருந்தால் சிறுகதை, 20000 என்றால் குறுநாவல் அதற்குமேல் என்றால் நாவல். இதுதான் சராசரி அளவுகோல் என்றாலும் எழுத்தாளரின் கையில் தான் இருக்கிறது.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை.
அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
பணம் மட்டுமே எழுதுவதில் எதிர்பார்க்கப்படும் பயன் என்றால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
பணம் சம்பாதிப்பதற்கு கிண்டில் போல எண்ணற்ற தளங்கள் இருக்கிறது.
பணம் சம்பாரிப்பதை தவிர்த்து, எழுதுவதில் அநேக பயன்கள் இருக்கிறது. நம்முடைய தகவல் தொடர்பு திறன் மேம்படுத்தப்படும், மன அழுத்தம் குறையும், யதார்த்தத்தை பற்றிய விழிப்புணர்வு வரும், நிறைய படிக்கத்தோன்றும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் பயன்கள் என்ற வகுப்பில் வராதா?
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
பத்தோடு பதினொன்றாக இருக்காதே என்ற தன்மை
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
எனக்கு மிகவும் பிடித்த, எப்போதும் என் கண்பார்வையில் அடிக்கடி படும் இடத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் வாக்கியம் இது தான்:
“தன் வேலைகளில் எல்லாம் ஜாக்கிரதையாய் இருப்பவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். நீதிமொழிகள் 22:29”
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி : https://tamil.pratilipi.com/user/karthi-sounder-00x9c699h9
கிண்டியில் வாசிக்க- https://www.amazon.com/~/e/B08HQSBPHZ
நம்ம கார்த்தி சகோதரரோட கதை மட்டும் இல்லைங்க பதிலும் கத்தி தான் .. அவரோட பயணம் எப்பவும் தொடரணும் நாமளும் அவர் எழுத்தோட பயணிக்கணும் ..
இவரோட பேசினது உங்களுக்கு நல்ல மனநிலையும் மகிழ்ச்சியும் கொடுத்து இருக்கும்னு நெனைக்கறேன் … கண்ணாடி திரைகள்காக ரொம்ப நாளா காத்திருக்கோம் .. நம்ம சகோதரர் சீக்கிரமே நமக்கு கொடுப்பார்னு நம்பிக்கையோட இன்னிக்கி பயணம் அடுத்த கட்டத்துக்கு தொடர போகுது ..
அடுத்து நம்மளோட லவ்லி பெர்சன தூக்கிட்டு வரேன் ..