அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா.
“இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கு.. முடிச்சிட்டு வெளிய போலாம்னு சொல்லலாம்.. கண்டிப்பா ஏதாவது ஒரு பக்கி வரும் ..”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து முடித்தாள்.
அவள் வதனா .. ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி வேலைப் பார்க்கிறாள். நிச்சயமாக ஐ.டி வேலை அல்ல.. கணிசமான வருமானம் கிடைக்கும் பார்சல் துறையில் ஒரு வேலை.
“ஹே வதனா .. இன்னிக்கி என்ன சமைச்சு இருக்க?”, எனக் கேட்டபடி ஒரு பெண் அங்கே வந்தாள்.
அந்த பகுதியில் பெரும்பாலும் இது போன்ற வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவே ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம், ஒரு பாத்ரூம் கொண்ட வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. ஒரு அறையே ஒரு வீடாக இருந்தது என்றும் கூறலாம்.
“இல்ல ஜோதி.. ஒரே சலுப்பா இருக்கு.. வீட்டு நெனப்பாவே இருக்கு .. கொஞ்சம் வீட்ட ஒதுங்க வச்சிட்டு வரேன் வெளிய போலாமா?”, எனக் கேட்டாள்.
“என்னாச்சி டா?”
“ஊருக்கு போய் நாலு மாசம் ஆகுது.. அதான்..”, என மெல்ல இழுத்தாள்.
“உன் மொதலாளிக்கு இன்னும் உனக்கு பணம் முழுசா குடுக்க மனசு வரலியா? “
“கொஞ்சம் இந்த மாசம் கஷ்டம்.. அடுத்த மாசம் தரேன்னு சொல்லி இருக்காரு.. காசு இல்லாம நான் ஊருக்கும் போக முடியாது.. என் அக்கா புருஷன் நான் வீட்டுக்குள்ள போறதுக்குள்ள வந்து நிப்பாரு.. “
“இவனுங்க எல்லாம் இன்னும் எத்தன வருசம் போனாலும் திருந்தமாட்டாங்க.. குடுக்கறவங்கள சொல்லணும்.. நீங்க மொத திருந்துங்க டா”, எனக் காட்டமாகவே கூறினாள் ஜோதி.
“ஊரோட வாழறப்ப அதுக்கு தகுந்தமாறி தான் இருந்தாகணும் ஜோதி.. உன்ன போல என் அக்கா புரட்சியும் பேச மாட்டா, தைரியமாவும் இருக்கமாட்டா..”, என வேதனைக் கலந்தச் சிரிப்புடன் கூறினாள்.
“மாற்றம் நம்ம வீட்ல இருந்து ஆரம்பிக்கணும்ன்னு உனக்கு யாரும் சொல்லல போலவே வதனா.. நம்ம மொத மாறினா தான் ஊரும் மாறும்”
“சரி சரி.. நீ பேசி முடிக்கறதுக்குள்ள நான் வேலைய முடிச்சிடறேன்.. அப்டியே வேற ஏதாவது பேசு ஜோதி”, என விளையாட்டாகப் பேச்சை மாற்றினாள்.
அவளுக்கு தெரியும் ஜோதி இன்று முழுக்க பேசினாலும் அவளின் கருத்தில் இருந்து சற்றும் பின் வாங்க மாட்டாள். வீணான பேச்சு வார்த்தை மனக்கசப்பில் தான் முடியும்.
“சரி எங்க போலாம்னு இருக்க?”, ஜோதியும் அவள் எண்ணம் புரிந்து வேறு பேச்சை ஆரம்பித்தாள்.
“எங்கயாவது வெளிய போய் சாப்டு வரலாமா?”, எனக் கேட்டாள்.
“சரி .. வேற யாரு யாரு வராங்க?”
“இன்னும் நான் யார்கிட்டயும் சொல்லல.. இனிமே தான் கேக்கணும்.. நீயே சொல்லு யார் யார கேக்கலாம்..”, எனக் கேட்டாள்.
“அ…. .. .. “, என அவள் ஆரம்பிக்கும் போது மற்றொரு பெண் உள்ளே வந்தாள்.
“அக்கா.. அக்கா.. ஜோதி அக்கா இங்க இருக்காங்களா?”, என கேட்டபடி உள்ளே ஓடி வந்தாள்.
“என்னடா.. நான் இங்க தான் இருக்கேன்..”
“நம்ம எலந்தபழ ஆச்சி கீழ விழுந்துட்டாங்கலாம்.. உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க..”, என மூச்சுவாங்கக் கூறினாள்.
“எப்போ? என்னாச்சி?”, என ஜோதியும் வேகமாகக் கேட்டபடி வெளியே சென்றாள்.
“என்னமோ எடுக்க மேல ஏறி இருக்காங்க போல.. தடுமாறி விழுந்துட்டாங்கலாம் க்கா.. “
“இந்த கெழவிக்கு எதுக்கு இந்த வேல? யாரையாவது கூப்பிட்டு எடுக்க சொல்லாம..”, என முனகியபடி அந்த எலந்தபழ ஆச்சியின் வீட்டிற்கு சென்றாள்.
ஏற்கனவே நிறைய கூட்டம் கூடி இருந்தது. அந்த பகுதியில் வசிக்கும் முக்கால் வாசி பேருக்கு அந்த பாட்டி தான் உணவு போடும் தெய்வம். வீட்டில் சமைக்க முடியாதவர்களுக்கும், சமைக்க நேரம் வாய்க்காதவர்களுக்கும் வயிற்றை நிரப்பும் அட்சய கைகள்.
“நகருங்க.. நகருங்க..”, எனக் கூட்டத்தை விளக்கியபடி ஜோதி உள்ளே சென்றாள்.
“என்ன ஆச்சி ? எதுக்கு இப்ப நீ சர்கஸ் பண்ண ?”, எனக் கேட்டபடி ஜோதி அவரின் கால்களைப் பார்த்தாள்.
“இரும்பு சட்டி எடுக்க ஏறினேன் டி.. கொஞ்சம் தடுமாறிட்டேன் ..”, எனக் கால்களை நீவி விட்டபடிப் பேசினார்.
“சரி வா ஆஸ்பத்திரி போலாம்.. ரத்தம் கட்டி இருந்தாலும் ரெண்டு நாளுல சரியாகிடும்..”, என ஜோதி அவரை எழ கூறினாள்.
“நான் கூட்டுச்சோறுக்கு போகணும் டி.. அப்பறம் ஆஸ்பத்திரிக்கு போயிக்கறேன்..”, என மெல்ல எழுந்தார்.
“எந்த சோறுக்கு போகணும்னாலும் மொத எந்திரிச்சி நிக்கணும்.. நிக்கவே முடியல பாரு”, என அன்போடு அதட்டி அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.
அங்கே அவரை முழுதாகப் பரிசோதித்து, ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தனர்.
“பாட்டி.. இந்த மாத்திர நாலு நாளைக்கு சாப்பிடுங்க.. நாளைக்கும் வலி அதிகமா இருந்தா வந்து ஒரு ஊசி போட்டுட்டு போங்க..”, என அந்த நர்ஸ் சொல்லியனுப்பினார்.
“சரி கண்ணு.. நான் கெளம்பரேன் ..”, என எழுந்து மெல்ல சுவற்றைப் பிடித்தபடி வெளியே வந்து நின்றார்.
“நர்ஸக்கா .. பாட்டிக்கு ஒண்ணும் இல்லயே .. “, என ஜோதி கேட்டாள்.
“ஒண்ணும் இல்லம்மா.. லேசா ரத்தம் தான் கட்டி இருக்கு.. சுடுதண்ணி ஊத்திக்க சொல்லுங்க.. ரெண்டு வேலைக்கும் மாத்திர மறக்காம சாப்பிட வைங்க போதும்.. “, எனக் கூறிவிட்டு, அடுத்து மருத்துவரை பார்க்க வந்த மக்களை காண சென்றுவிட்டார்.
ஜோதி மாத்திரையைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே எலந்தபழ ஆச்சி சுவற்றை பிடிக்காமலே நடந்துச் செல்ல முயன்றுக் கொண்டு இருந்தார்.
“இந்த வயசுலையும் இவ்ளோ மனதைரியம் தான் இதுக்கு.. “, எனத் தனக்குள் கூறியபடி அவரின் அருகில் சென்றாள்.
“வாங்க போலாம் ..”, என அவரின் கையைப் பிடித்தாள்.
“பிடிக்காத டி.. நானே நடக்கறேன்.. போய் பாத்தரம் எடுத்துக்கிட்டு கூட்டாஞ்சோறுக்கு போகணும்..”, எனக் கூறினார்.
“எங்க போய் கூட்டாஞ்சோறு ஆக்க போற நீ? அப்ப இருந்து இதயே சொல்லிக்கிட்டு இருக்க.. கால இப்டி வச்சிக்கிட்டு அப்டி எங்க போகணும் உனக்கு?”
“சொன்னா உனக்கு புரியாது. இதே ஆட்டோவ வீட்ல நிக்க சொல்லு. நான் போயிட்டு வந்துடறேன்”
“சொன்னா ஒரு பேச்சு கேக்கறியா ஆச்சி நீ?”, எனப் பேசியபடி ஆட்டோ ஓட்டுனரிடம் இல்லம் செல்லக் கூறினாள்.
வீடு வந்ததும் ஜோதியை உள்ளே இருக்கும் பையுடன், சில பாத்திரங்களை எடுத்து வரச் சொன்னார்.
“அப்புடியே உனக்கு பேச்சு தொணைக்கு ஒருத்தர கூப்டுக்க டி”, எனக் கூறிவிட்டு பைகளில் இருக்கும் சாமானை எல்லாம் சரி பார்த்தார்.
ஆட்டோ வந்ததும் வதனா அங்கே வந்தாள்.
“ஜோதி.. டாக்டர் என்ன சொன்னாங்க?”
“அவங்க என்ன சொன்னாலும் இவங்க கேட்டா தானே.. இதோ பொறப்பட்டாச்சி ஊர்வலத்துக்கு..”, என ஆச்சியைக் கைக்காட்டினாள்.
“எங்க பாட்டி இவ்ளோ எடுத்துட்டு கெளம்பரிங்க ? ரெஸ்ட் எடுக்கலியா ?”, என வதனாவும் கேட்டாள்.
“வந்து வண்டில ஏறுங்க டி.. அங்க போய் பாத்துக்கலாம்..”, என இருவரையும் அவசரப்படுத்தினார்.
“நீ வீட்ட பூட்டிட்டு வா .. நாமளும் போயிட்டு வரலாம்”, என ஜோதி கூறியதும் வதனா, தனக்கு தேவையான உடமைகளை எடுத்துக்கொண்டு வந்தாள்.
ஜோதியும் தன் வீட்டை பூட்டியக் கையோடு, ஆச்சியின் வீட்டையும் பூட்டிக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.
ஆச்சியின் வழிகாட்டுதல்படி அது பக்கத்து ஊரின் குளத்தங்கரையில் சென்று நின்றது.
அங்கே இவரை போலவே இன்னும் 15 பேர் இருந்தனர். ஆண் பெண் என எல்லாம் கலந்து ஆச்சியின் வயதை ஒத்தவர்கள் அங்கே சமைக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
“இங்க தான்.. நிறுத்து தம்பி.. எறங்குங்கடி ..”, எனக் கூறிவிட்டு வலி கொண்ட காலையும் பொருட்படுத்தாமல் வேகமாக இறங்கினார்.
“ஓய் .. தங்கம் வந்துட்டா டோய் .. “, என ஒரு தாத்தா சந்தோஷ கூச்சலுடன் கூவிக்கொண்டு ஆட்டோ அருகில் வந்தார்.
“ஏன் இவ்ளோ தாமசம் தங்கம்.. நீ வருவியோ மாட்டியோன்னு இவ்ளோ நேரமா மங்கா பொலம்பிக்கிட்டே இருந்தா.. “, எனப் பேசிக்கொண்டே ஆச்சி நொண்டி நடப்பதுக் கண்டு, “என்னாச்சி தங்கம்? ஏன் நொண்டி நடக்கற?”, எனப் பதறியபடிக் கேட்டார்.
“போன தடவ மங்கா இரும்பு சட்டி கொண்டு வரணும்-ன்னு சொல்லிவிட்டா ராசு.. அத மேல இருந்து எடுக்கறப்ப கொஞ்சம் தடுமாறி விழுந்துட்டேன்.. ஒண்ணும் இல்ல .. வா போய் எல்லாரையும் பாக்கலாம்..”, எனப் பேசியபடி கூரைக்குள்ளே சென்றார்.
ஜோதியும், வதனாவும் ஆச்சி எடுத்து வந்த பைகளைத் தூக்கி வந்துக் கூரைக்குள் வைத்துவிட்டு, ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“மங்கா .. அடியே மங்கா .. வெரசா வா இங்க..”, என அந்த தாத்தா, தங்கம் பாட்டியை வசதியாக அமரவைத்துவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் மற்றவர்கள் ஆச்சியை சூழ்ந்து கொண்டனர்.
“என்னாச்சி தங்கம்?’
“எனை நினைச்சிட்டு எங்க போய் விழுந்த?”, என ஒருவர் கேட்டார்.
“உன்னைய]நெனைச்சா நான் சவக்குழில தான் விழணும்.. குத்துகல்லாட்டம் தானே இருக்கேன் அதனால உன்ன நெனைக்கல”, ஆச்சியும் நக்கல் நைய்யாண்டியுடன் அனைவருக்கும் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
“ஏன் இப்புடி கத்திக்கிட்டே கெடக்கீங்க ? தண்ணி எடுக்க தானே போனேன்.. “, என அவரும் கத்தியபடி படி ஏறி வந்தார்.
“தங்கம் வந்துட்டா டி.. நீ ஏதோ கொண்டார சொன்னியாம் .. அத எடுக்க போய் விழுந்து நொண்டிக்கிட்டு வரா .. நீ என்னடி சொன்ன?“, என அதட்டினார்.
“என்னாச்சி? நான் என்ன சொன்னேன்..? ”, என அவரும் பதறியபடி வேகமாக வந்தார்.
அங்கே கூட்டம் கூடி நிற்கும் அனைவரையும் கண்ட மங்கா பாட்டி, “ சரி தான்.. தங்கம் வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா எல்லாரும்? எல்லாருக்கும் என்ன வேல குடுத்தேன்? எல்லா கெழவனும் போய் அத பாருங்க..”, என அதட்டினார்.
“நீ மட்டும் இன்னும் கொமரியா மங்கா ? நீயும் கெழவி தான்..”
“நான் கொமரின்னு சொன்னா நீ பேசு.. போய் ஆளுக்கு ஒரு பக்கம் வேல பாத்தா தான் நேரத்துல சமையல் முடியும்.. போங்கயா ..”
“ராசு.. உனக்காக பாக்கறேன் ..”
“இல்லைன்னா என்ன கிழிப்ப ரங்கா.. உன் சம்சாரம் நாளைக்கு என்னைய பாக்க வரா.. கொஞ்சம் கவனிக்க சொல்றேன் இரு”
“கம்முன்னு இரு டி.. நீ போ ரங்கா.. அவ கெடக்கா .. வாங்க நாம அடுப்ப பத்த வைப்போம்..”, என ராசு தாத்தாவும் அவர்களுடன் நடந்தார்.
“என்னாச்சி தங்கம்?”, என குடத்தை ஜோதியிடம் கொடுத்துவிட்டு, அருகில் வந்து கேட்டார்.
“இவ்ளோ நேரம் பஞ்சாயத்து நடத்திட்டு பொறுமையா வந்து கேக்கற”, ஆச்சி முகத்தை திருப்பிக் கொண்டார்.
“உன்ன பாத்ததும் அத்தன ஆம்பள கூட்டமும் கூடி நின்னா நான் தானே உன்ன அவங்க கிட்ட இருந்து காப்பத்தணும் தங்கம்”, என ஆச்சியின் முகவாய்க்கட்டையை திருப்பி கொஞ்சளுடன் கூறினார்.
“ஹாஹாஹா .. நெசம் தான்.. நீ மட்டும் தான் அப்பா இருந்து இப்பவரை என்னைய காப்பாத்தற .. “
“காலு எப்டி இருக்கு?”
“ஒண்ணும் இல்ல மங்கா.. லேசா ரத்தம் கட்டி இருக்கு அவளோ தான்.. எல்லாரும் வந்துட்டாங்களா ? வேலைய ஆரம்பிச்சாச்சா ?”, என மங்காவின் கைகளை பிடித்தபடி பேசினார்.
“இன்னும் அந்த தெக்கத்தெருக்காரங்க மட்டும் வரல தங்கம் .. “, என ராசு தாத்தா கூறிவிட்டு மற்றவர்களை அழைக்க சென்றார்.
“அவங்க எல்லாம் நேரமா வந்துட்டா தான் பனமரம் ஒரே நாள்ல பூத்துடுமே ..”, என மங்கா பாட்டி நொடித்துக்கொண்டு எழுந்தார்.
“இந்தா குட்டி.. மசமசன்னு நீக்காம வந்து இந்த வெங்காயம் தக்காளி எல்லாம் அறிஞ்சி வைங்க.. நான் மீன கழுவி கொண்டு வரேன்.. தங்கம் .. இன்னிக்கி நீ ஒரு வேலையும் பாக்கவேணாம்.. வாய்ல சொல்லு போதும்.. கிண்டற வேலைக்கு இந்த குட்டிங்கள விட்டுறலாம் ..”, என பேசியபடியே அரை மூட்டை தக்காளி வெங்காயத்தை எடுத்து போட்டுவிட்டு போனார்.
தங்கம் பாட்டி சிரித்தபடி ஜோதியை பார்த்தார்.
“உன் ஃபிரண்ட்ஸ் கெட்- டூ- கெதர் தான் கூட்டாஞ்சோறு ன்னு சொன்னியா ஆச்சி?”, என முறைத்தபடி கேட்டாள்.
“அந்த பலகைய இங்க எடுத்து போடு.. நானும் ஒரு பக்கம் அரியரேன்.. இது வருஷத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா ரெண்டு தடவை நடக்கும் டி.. இந்த தடவை வரவங்க அடுத்த தடவை வருவாங்களா-ன்னு தெரியாது.. ஆனாலும் விடாம நானும் மாங்காவும் செஞ்சிட்டு வரோம்.. இது ஒரு சந்தோஷம்..”, என ஏதோ நினைவுகளில் மூழ்கியபடி பேசினார்.
“இத தானே நாங்களும் கெட் டூ கெதர்-ன்னு சொல்றோம்..”, வதனா.
“அது என்ன எழவோ.. எங்களுக்கு கூட்டாஞ்சோறு தான் இது.. சின்ன வயசுல வீட்ல இருந்து ஆளுக்கு ஒரு பொருள் கொண்டு வந்து சமைக்க தெரியாம சமைச்சி, எல்லாரும் ஒண்ணா வேலை செஞ்சி, ஒண்ணா ஒக்காந்து செஞ்சி கூடி சாப்பிடற ருசி இருக்கே.. அது அமிர்தத்துல கூட கெடையாது டி.. ஒண்ணுமண்ணா எல்லாரும் எவ்ளோ சண்டை இருந்தாலும் இந்த நாளுக்காக வருவாங்க.. எங்க காலம் முடிய போகுது.. ஏதோ ஒரு பௌர்ணமில நம்ம இப்டி இங்க இருந்தோம்.. இவங்க கூட பேசினோம்ங்கற நெனப்பு தான் எங்க நாள கொண்டு போகுது.. அடுத்த தடவை வரை எங்கள்ல எத்தன பேரு இங்க இருப்பாங்க-ன்னு யாருக்கும் தெரியாது .. ஆனா இன்னிக்கி இருக்கற சந்தோஷம் தான் அடுத்த தடவை பாத்தாலும் பாக்கலானாலும் நிக்க போகுது.. “
வதனாவும், ஜோதியும் ஆச்சியின் பேச்சில் இருக்கும் உண்மையை உள்வாங்கிக் கொண்டு இருந்தனர்.
“தங்கம் .. நீ ஒண்ணும் பண்ணாத .. நாங்க பத்துக்கரோம் .. “, என நான்கு பேர் உள்ளே வந்து எலந்தபழ ஆச்சியின் கையில் இருந்த கத்தியை வாங்கி கொண்டனர்.
அவர்களின் கதையை பேசியபடி சிரித்துக்கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர்.
“இங்கயும் நீ தான் சமையலா ஆச்சி?”, என ஜோதி கேட்டாள்.
“நாங்க கூட்டாஞ்சோறு பண்ண ஆரம்பிச்ச காலத்துல இருந்து தங்கம் தான் செய்வா கண்ணு.. கூட ராசுவும், மாரியண்ணனும் நின்னு செய்வாங்க .. இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க இந்த குளக்கரையே மணக்கும்.. “, என ஒரு தாத்தா கூறினார்.
“ராசு தாத்தா.. நம்ம வந்தப்ப உங்க கை பிடிச்சி கூட்டிட்டு வந்தாரே அவரா ?”, என வதனா கேட்டாள்.
“ஆமா கண்ணு.. மாரியண்ணன் போன கூட்டாஞ்சோறு முடிஞ்ச பத்தாவது நாள் போய் சேர்ந்துட்டான்.. இப்ப போன மாசம்.. நம்ம காத்தாயி போயிட்டா .. ரொம்ப எதிர்பாத்துட்டு இருந்தா தங்கம்.. அதுக்குள்ள அவளுக்கு என்ன அவசரம் .. இந்த கூட்டாஞ்சோறு முடிஞ்சி போலாம்ல.. “, என துளிர்த்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு கூறினார்.
“அவளுக்கும் மாரிக்கும் ஒரு எலைய போற்றலாம் கருப்பா.. விடு.. இங்க இருக்கவங்க கிட்ட பேசு நீ.. அவங்க உசுரு இங்க தான் இருக்கும்.. நம்ம கூட தான் இருக்காங்க எல்லாம்.. சீக்கிரம்.. அந்த அம்மி கல்லுல அரைக்கர வேலைய ஆரம்பிங்க.. நேரம் ஆவுது..”, என ஆச்சி அவர்களை தேற்றியபடி அடுத்தடுத்த வேலைகளை கூறி அனைவரையும் துரிதப்படுத்தினார்.
அங்கிருந்தவர்களே அனைத்தும் ஒருவர் மாறி ஒருவர் உதவிக்கொண்டு பல வகையான உணர்வுகள் கடத்தும் கதையை பேசியபடி சமைத்துக்கொண்டு இருந்தனர்.
“மங்கா .. சீக்கிரம் வா.. ஊறவச்ச மீன எடு.. கல்லுல போட்டு எடுக்கலாம்..”
“நீ கம்முன்னு இரு தங்கம்.. இந்தா குட்டி இங்க வா.. மலமலன்னு ரெண்டு பேரும் இந்த குண்டாவூல இருக்க மீன கல்லுல போட்டு எடுங்க.. பதமா நல்லா வேகவச்சி எடுக்கணும்.. “, என அவர்களுக்கு செயல்முறை விளக்கங்களை கூறிவிட்டு தங்கம் ஆச்சியை அழைத்து கொண்டு குளக்கரை படிக்கட்டில் அமர வைத்தார்.
“என்ன மங்கா? அங்க வேல கெடக்கு இங்க ஒக்காந்து என்ன பண்றது ?”
“கொஞ்ச நேரம் வாய மூடு தங்கம்”, என கூறிவிட்டு அவரது காலை எடுத்து மடியில் வைத்து மூலிகை எண்ணையை தடவ ஆரம்பித்தார்.
தங்கம் ஆச்சி மங்காவின் தலையை கோதிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தார்.
“நம்மல இங்க அடுப்பு முன்ன ஒக்கார வச்சிட்டு ரெண்டு பேரும் அங்க போய் கொஞ்சிக்கறாங்க பாரு”, ஜோதி சிரித்தபடி கூறினாள். வதனா அங்கிருந்த சூழ்நிலையை தன்னகத்தே பத்திரப்படுத்தினாள்.
தோராயமாக அங்கே ஒரு பதினைந்து முதல் பதினெட்டு பேர் இருந்தனர். அனைவருக்கும் சில வயசு வித்தியாசமும் இருந்தது. ஆனால் அந்த காலத்தில் ஒன்றாக விளையாடி, ஓடி திரிந்த அத்தனை பேரும் பேசிக்கொண்டும், தன் மனகஷ்டங்களை கொட்டிக்கொண்டும், அனைவரும் ஒன்றாக இருக்கும் சமயம் இது என்கிற மகிழ்ச்சி அனைவரிடமும் நிறைந்து இருந்தது.
அனைவருக்கும் எளிதில் ஜீரணம் ஆகும் பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டு இருந்தது. சூரியன் மறைந்து மெல்ல நிலவு மேலெழுந்தது.
அன்றைய பௌர்ணமி மிகவும் விசேஷமானதும் கூட.. அந்த குலத்தின் நடுநாயகத்தில் நிலவு வருகிறது. நீரில் பார்த்தால், குளத்திற்கு வெள்ளை பொட்டு வைத்தது போல இருக்கும்.
நன்கு செழித்து வளர்ந்த நிலவு தன் முழு வளர்ச்சியையும், முழு தேஜசையும் அனைவருக்கும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
மின் விளக்குகள் எல்லாம் அணைத்துவிட்டு, நிலவின் ஒளியில் அனைவரும் குளத்தின் அருகில் சுற்றி அனைவருக்கும் பரிமாறிக்கொண்டு உண்ண அமர்ந்தனர்.
மாரியண்ணனுக்கும், காத்தாயிக்கும் இரண்டு இலை போட்டு அனைத்தும் வைத்தனர்.
அவர்களின் செய்கையை ஜோதியும், வதனாவும் மனதில் நிலவிய சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் சந்தித்த காலம் முதல், இன்று அவர்கள் படும் இன்னல்கள் வரை அனைத்தும் அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டது. பல ஏற்ற தாழ்வுகள் அவர்களின் இடையே இருந்தாலும், அறியா வயதில் ஏற்பட்ட பிணைப்பு இன்றும் அதே அன்புடன் தொடர்வது தான் அன்றைய நாளின் “சூடாமணி” என்று கூறவேண்டும்.
ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு, பாசம், நேசம், சிறு வயது ஈர்ப்பு, சேராத காதல், சேர்ந்த காதல், என அனைத்தும் அவர்களோடு இருந்தது.
அனைவரும் உண்டு முடித்ததும், கையில் சிறு சிறு டப்பா கொடுக்கப் பட்டது.
சில நாட்களுக்கு அவர்களுக்கு தேவையான தொக்கு வகையும் அங்கேயே தயாரித்து கொடுத்து அனுப்பினார் மங்காவும், தங்கமும்.
“மங்கா.. தங்கம்.. மறுபடியும் பாக்கலாம்.. “, என அனைவரும் கூறிக்கொண்டு புறப்பட்டனர்.
பிரியா விடை கொடுத்து அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
இறுதியாக எழந்த பல ஆச்சியும் கிளம்பினார்.
“தங்கம்.. இந்த எண்ணைய கால ராவு தேய்ச்சிக்க.. ரெண்டு நாளுல வரேன் வீட்டுக்கு.. “, என மங்கா அணைத்து வழியனுப்பி வைத்தார்.
ராசு தாத்தாவும், மங்கா பாட்டியும் அங்கிருக்கும் பொருட்களை ஒதுங்க வைத்துவிட்டே இல்லம் செல்வர்.
வீடு சேர்ந்ததும் ஆச்சி சென்று படுத்து விட்டார். அவருடன் ஜோதியும் வதனாவும் படுத்துக் கொண்டனர்.
ஆச்சியின் முகத்தில் நிறைவு கொண்ட மென்னகை படர்ந்திருந்தது. ஜோதி அதை கண்டு வதனாவிடம், “நாமளும் கூட்டாஞ்சோறு செய்லாமா ?”, எனக் கேட்டாள்.