“டேய் இந்த தடவ நான்சொல்ற மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம் டா.. அவனை ஒரு வழி பண்ணிடணும் “, ஆகாஷ் ஆர்வமாக பேசிக்கொண்டு இருந்தான்.
“ஆமா டா .. இந்த வருஷத்த அவன் மறக்கவே கூடாது .. அப்படி பண்ணனும் எல்லாத்தையும் .. டேய் வினித் கேக் ஆர்டர் பண்ணிட்ட தானே “, கணேஷ் கேட்டான்.
“அதுலாம் பண்ணிட்டேன் டா .. இந்த ஃப்ளேவர் அவனுக்கு கண்டிப்பா பிடிக்கும் டா “
“பாக்கறேன் .. அவன் மட்டும் ஏதாவது கேவலமா சொல்லட்டும் அப்பறம் பேசிக்கறேன் உன்ன “, இந்தரஜித் கூறினான்.
“சரி டா .. இப்போ வேற அவன் வீட்ல இருக்கான்.. அவங்க அம்மா வெளிய விடுவாங்களா ?”
“அதுலாம் அவனை தூக்கிட்டு போய்டலாம் டா .. அதான் ஆகாஷ் இருக்கானே”
“நான் என்ன குட்டி யானை வண்டியா டா ? எல்லாரும் ஒரு கை குடுத்தா தான் தூக்க முடியும் .. “
“இல்லயா பின்ன .. ஜிம் பாடின்னு பீலா விடற.. அவன தனிய தூக்க மாட்டியா ?”, கணேஷ் கலாய்த்தான்.
“நான் லோடு மேன் இல்ல நாயே .. “
“எங்களுக்கு நீ தான் மச்சி ஆல் ரவுண்டர் அர்னால்ட்“, இந்தரஜித் கணேஷ் உடன் சேர்ந்து கொண்டு பேசினான்.
“சாவடிச்சிடுவேன் டா .. ஒழுங்கா டைம்க்கு எல்லாரும் வந்து சேருங்க .. நான் போய் டெகரேஷன் பண்ண தேவையான திங்க்ஸ் வாங்கறேன்.. “
“என்னடா டெகரேஷன்? அவன தூக்கறோம், விஷ் பண்றோம்.. கேக் வெற்றோம் .. பாட்டில வாய்ல கவுத்தறோம் “, வினித்.
“டேய் .. பாட்டில் எல்லாம் அவன் தானடா வாங்கி தரணும் .. அதுக்கு எல்லாம் கைல காசு இல்ல”, ஆகாஷ்.
“நம்ம பத்ரி டா .. நமக்கு வாங்கி தராமா யாருக்கு தருவான்.. பாத்துக்கலாம் வா “, இந்தரஜித்.
“என்னமோ ? சரி எத்தன மணிக்கு தூக்கறது ?”, ஆகாஷ்.
“அத அப்பறம் பேசிக்கலாம் டா .. இப்போ காலேஜ்க்கு டைம் ஆச்சி கெளம்புங்க “, என கூறி விட்டு அனைவரும் கல்லூரி செல்ல தயாராக சென்றனர்.
வினித் அப்படியே சட்டையை மட்டும் மாற்றி கொண்டு தலைமுடி வார நின்றான்.
“டேய் இன்னிக்கும் குளிக்கலியா நீ ?”, கணேஷ் கோபமாக கேட்டான் .
“அதுலாம் யாரு டா பண்றது ? சண்டே பாத்துக்கலாம் “, வினித் கூறிவிட்டு விடுதி அறையில் இருந்து கிளம்பினான்.
“டேய் இந்திரா .. அவன ஒழுங்கா இன்னிக்கி குளிக்க வச்சி தான் பார்ட்டிக்கு கூட்டிட்டு போகணும் .. “
“அவன குளிப்பாட்ட என்னால முடியாது .. நீயே வேணா அவன கால்-ல படுக்க வச்சி குளிப்பாட்டிக்க ”, இந்தரஜித் சிரித்தபடி கூறினான்.
“டேய் அவன் குளிக்காம வந்து என் பெட் ல படுக்கறான் டா .. நாத்தம் கொடல பெறட்டுது “, ஆகாஷும் கூறினான்.
“டேய் சின்ன பசங்க மாறி கம்ப்ளைண்ட் பண்ணாம போய் நீங்க மொத குளிச்சிட்டு வாங்க டா “, இந்திரா இருவரையும் தூரத்தினான்.
“ஆனாலும் இந்த வினித் பரதேசி இப்டி இருக்க கூடாது டா .. என் வீட்ல பல்லு வெளக்காம என் அம்மா காப்பி கூட தர மாட்டாங்க .. இவன் வீட்ல எப்டி டா இருப்பான் ?”, ஆகாஷ் தயாராகியபடி கேட்டான்.
“அதுக்கு அவன் வீட்ல இருந்தா தானு.. அந்த எருமை தான் வீட்டுக்கே போகாதே “, கணேஷ் .
“இன்னுமா டா ? பாவம் டா அவன் பாட்டி .. இவ்ளோ கொடுமை தாத்தா கூட செஞ்சி இருக்க மாட்டாரு”, இந்தரஜித் .
“என்ன செய்ய ? அம்மா இல்லைன்னா இதான் நிலைமை.. ஏதோ அந்த பாட்டியாது இருக்காங்கன்னு சந்தோஷ படணும்”, கணேஷ்.
“ஆமா டா .. நேத்து என் அம்மா கிட்ட அவன் அவ்ளோ நேரம் பேசினான் டா .. எனக்குமே பாக்க பாவமா போச்சி “, ஆகாஷ்.
“அப்ப உன் அம்மா கிட்ட அவன ஒரு மாசம் விட்டா போதும் .. மிஸ்டர். கிளீன் ஆகிடுவான் “, கணேஷ் .
“நல்ல ஐடியா மச்சி .. இந்த தடவ அவனையும் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் .. டேய் நம்ம எப்போ டா எல்லார் வீட்டுக்கும் ஒண்ணா போறது ?”, ஆகாஷ்.
“படம் பார்த்து ரொம்ப கெட்டு போற டா நீ .. இந்த தடவை எல்லாரும் பிளான் பண்ணலாம் .. பத்ரி வீடு மொதல் இல்லைனா கடைசி வச்சிக்கிட்டா சரியா இருக்கும் “, என பேசியபடி மெஸ் வந்தனர்.
“டேய் .. இன்னிக்கும் அணுகுண்டு தான் டா “
“இது ஒரு வாரம் முன்ன பண்ணது போல டா “
“சத்யமா இதுக்கு மேல என்னால இந்த கொடுமைய அனுபவிக்க முடியாது டா “
“டேய் மச்சிஸ் .. உங்களுக்காக டிபன் கொண்டு வந்து இருக்கேன் டா “, என கூறிய படி பத்ரி வந்தான்.
“வாடா தெய்வமே .. நல்ல நேரத்துல வந்த”, என கூறியபடி அவன் கையில் இருந்தா ஹாட் பேக்-ஐ வாங்கி அதில் இருந்த உணவை உண்ண ஆரம்பித்தனர்.
“வினித் எங்க டா ?”, ஆகாஷ் சாப்பிட்ட படி கேட்டான்.
“அவன் வீட்ல சாப்டுட்டு இருக்கான் டா ..” , பத்ரி .
“அவன் எப்ப வந்தான் அங்க ?”, கணேஷ் .
“அரை மணி நேரம் முன்ன தான் .. நீங்க தான் குளிக்க லேட் பண்ணீங்கலாம் .. அம்மா உங்கள இனிமே வீட்டுக்கு வந்து சாப்பிட சொன்னாங்க டா “, பத்ரி அனைவருக்கும் பரிமாறியபடி கூறினான்.
“அவன் குளிச்சா தானு .. ஷர்ட்-அ மட்டும் மாத்திட்டு போய்ட்டான் டா “, கணேஷ்.
“அம்மாவுக்கு எதுக்கு டா சிரமம் ? “, இந்தரஜித்.
“டெய்லி ஹாட்பேக் ரெடி பண்றதுக்கு வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு வேலை மிச்சம் “, பத்ரி சிரித்தபடி கூறினான்.
“இருந்தாலும் .. “, ஆகாஷ் இழுத்தான்.
“மூடு .. தின்னுட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சி தூக்கிட்டு வா .. ஈவினிங் வீட்ல வந்து அம்மாகிட்ட பேசிக்கோங்க “, பத்ரி அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான்.
ஒரு வழியாக அனைத்து கலாட்டாவும் செய்து விட்டு அனைத்து மாணவ கூட்டமும் கல்லூரிக்குள் நுழைந்தது.
“மச்சி இன்னிக்கி யாரு யாரு கிளாஸ் இருக்கு ?”, தனக்கு முன் அமர்ந்து இருந்த ஒருவனிடம் கேட்டான் பத்ரி.
“காலைல லேப் மச்சி .. மதியம் ஏதோ ஃபங்சன் இருக்காம் “
“யாரு லேப் டா ?”, கணேஷ்.
அப்போது வினித் கத்தியபடி உள்ளே வந்து, “டேய் மச்சான் .. இன்னிக்கி ஆஸ்ட்ரிச் மண்டையன் லேப் இருக்கு டா”
“அய்யய்யோ .. அந்த ஆளு நோட் இல்லாம உள்ள விடமாட்டானே .. நான் கொண்டு வரல டா “, ஆகாஷ் .
“என்ன டா சொல்ற ?”, பத்ரி அதிர்ச்சியாக கேட்டான்.
“ஷாக்-அ கொர மச்சி .. அந்த கழிசடை இன்னும் நோட்-ஏ போடல டா “, இந்தரஜித் .
“அப்பறம் என்ன டா கொண்டு வரலங்கற .. பரதேசி.. தண்டம் “, பத்ரி ஆகாஷ் தலையில் அடித்தான்.
“போடலன்னாலும் கொண்டு வர முடியாது-ல மச்சான்”, ஆகாஷ் பல்லை இளித்தபடி கூறினான்.
“ச்சீ .. வாய மூடு .. நாப்பத்தி ரெண்டும் தெரியுது “
“டேய் இப்போ நமக்கு 28 தான்டா இருக்கும் .. இனிமே தான் நாலு முளைக்கும் “, வினித்.
“அத புடுங்கி மண்ணுல நட்டு வை .. இப்போ நோட் இல்ல .. என்ன பண்ணலாம் ?”, கணேஷ்.
“நோட் இல்லாதவன் எல்லாம் வெளிய போய்டு “, என பேராசிரியர் கூறியதும் பாதிக்கு மேல் மாணவர்கள் வெளியே சென்றனர்.
“அப்டியே எல்லாரும் பி. டி மாஸ்டர்-அ போய் பாருங்க “
“எதுக்கு சார் ?”
“கிரவுண்ட்-ல புடுங்கற வேலை இருக்கும் போய் பாருங்க டா “, பேராசிரியர் இன்னும் சில நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்து அனுப்பி வைத்தார் .
“ஏன்டா இந்த ஆளு இவ்ளோ டென்ஷன் ஆகறான் ?”, இந்தரஜித்.
“bp இருக்கும் மச்சான் .. சரி வா போய் அந்த ஆள பாக்கலாம் “, கணேஷ்.
“டேய் .. படத்துக்கு போலாமா ?”, பத்ரி.
“வாய்ப்பே இல்ல .. ஒழுங்கா கிரவுண்ட் போலாம் வாங்க “, வினித்.
“என்னடா இவன் ? படத்துக்கு மட்டும் வரவே மாட்டேங்கறான்”, ஆகாஷ்.
“அவனுக்கு தான் படம்னாலே அலர்ஜி-ன்னு தெரியும் ல .. வாங்க ஏதோ ஃபங்சன்-ன்னு சொன்னாங்க .. என்னனு பாப்போம் “, கணேஷ்.
அனைவரும் விழாவிற்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தனர்.
இரவு ஏழு மணிக்கு தான் அனைவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது.
“எப்பா டேய் .. ஒரு வாரம் லீவு வேணும் டா .. முடியல டா “, கணேஷ் முதுகைப் பிடித்துக் கொண்டு கூறினான்.
“பேசாம இருவது ரூபா குடுத்து ஒரு நோட் வாங்கிட்டு அந்த ஆளு பின்னாடி போய் இருக்கலாம் “, ஆகாஷ்.
“இன்னிக்கி செமயா போச்சி மச்சி “, வினித் .
“மனுஷனா டா நீ ?”, பத்ரி அவனை அடித்தான்.
“சரி வாங்க கேண்டீன் போலாம் “, இந்தரஜித்.
“பசங்களா .. “, அவர்களின் பி. டி மாஸ்டர் அவர்களை அழைத்தார்.
“அய்யய்யோ .. மறுபடியும் அந்த ஆளு கூப்பிடறான் டா “, ஆகாஷ் அதிர்ச்சியுடன் கூறினான்.
“ஓடிடலாமா ?”, கணேஷ்.
“வாய மூடுங்க .. போய் என்னனு கேக்கலாம் “, இந்தரஜித்.
“சொல்லுங்க சார் “, வினித்.
“இந்தாங்கபா .. இன்னிக்கி வேலை செஞ்சதுக்கு ஸ்டைபன் “, என சில நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
“நம்ம காலேஜ் ஃபங்சன் சார் .. இதுக்கு எதுக்கு பணம் ?”, இந்தரஜித்.
“இன்னிக்கி வந்தவங்க குடுத்தது டா .. இந்தாங்க .. “, என அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.
“இத என்.ஜி.ஓ பாக்ஸ்ல போற்றலாம் மச்சி “, வினித்.
“சரி நீ போட்டுட்டு வா .. நாங்க முன்ன கேண்டீன் போறோம் “, கணேஷ்.
“இந்த நேரம் கேண்டீன்ல ஒண்ணும் இருக்காது .. வாங்க ஹோட்டல் போலாம் “, பத்ரி.
“இதயே நீ பர்த்டே ட்ரீட்-ணு சொல்லி ஏமாத்த மாட்டியே “, ஆகாஷ்.
“மாட்டேன் டா.. வாங்க “, பத்ரி அவன் முதுகில் அடித்து அழைத்து சென்றான்.
அனைவரும் ஒரு கையேந்தி பவனில் வயிறார உண்டு முடித்து விட்டு, பதிரியின் இல்லம் வந்து அவனை விட்டுவிட்டு, விடுதிக்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் , “டேய் .. டைம் ஆச்சி டா “, ஆகாஷ் அனைவரையும் எழுப்பினான்.
“கேக் வாங்க யார் போறீங்க ?”, கணேஷ்.
“நானே போறேன் டா”, வினித்.
“சரி மறக்காம பிலாஸ்ட் , ஸ்ப்ரே எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடு”
அனைவரும் விடுதியில் இருந்து பத்ரி இல்லம் சென்றனர். முன்பே அவன் தாயிடம் சொன்னதால், அவர் இவர்கள் வந்ததும் வீட்டு கதவை திறந்து விட்டார்.
“அவன் தூங்கிட்டு இருக்கானா ? முழிச்சிட்டு இருக்கானா ம்மா ?”, கணேஷ்.
“இப்போ தான் தூங்கினான் .. போங்க நான் அப்பறம் வரேன் “, என அவன் அம்மா உள்ளே சென்று விட்டார்.
அவன் அறைக்கு வெளியே சில அலங்கார தோரணங்களை தொங்க விட்டனர்.
“மச்சான் .. எல்லாம் ஓகே தானே ?”, வினித் மீண்டும் ஒரு முறை கேட்டு கொண்டான்.
“ஓகே டா “
“சரி வாங்க அவன தூக்கிட்டு வரலாம் “
ஆளுக்கு ஒரு பக்கமாக அவனை தூக்கி கொண்டு வந்து ஷோபாவில் போட்டனர்.
“மச்சான் .. ஹாப்பி பொறந்த நாள் டா “, என கோரசாக அனைவரும் கத்தினர் .
“தாங்க்ஸ் மச்சிஸ் “, என கூறி அனைவரையும் அணைத்து கொண்டான்.
பின் கேக் வெட்ட ஏற்பாடு செய்தனர்.
அப்போது பத்ரியின் தாயும் வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
கேக் வெட்டி அனைவரும் முகத்தில் பூசி விளையாடி விட்டு, அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகினர்.
அனைவரின் சந்தோஷ கூச்சலும் , சிறிது நேரத்தில் பதற்றமாக ஒலித்தது.
பத்ரியின் அம்மா என்னவென்று பார்க்க மேல செல்லும் போது, பத்ரியை தூக்கி கொண்டு அனைவரும் கீழே வந்தனர்.
பத்ரி மூச்சு பேச்சு இல்லாமல் தலை தொங்கி இருந்தான். தலையில் ரத்தம் வழிந்து, அவனைத் தூக்கி சென்ற இடம் முழுதும் ரத்தமாக இருந்தது.
அதை கண்டு பதறிய, பத்ரியின் தாயும் ஒன்றும் புரியாமல் அவர்கள் பின்னால் ஓடினார்.
“என்னாச்சி பா அவனுக்கு ?’, என அவர் பின்னோடே கேட்டபடி ஓடி வந்தார்.
நள்ளிரவு நேரத்தில் இவர்களின் கூச்சல் அருகில் இருந்தவர்களையும் எழுப்பியது.
பத்ரியின் தலையில் இருந்து ரத்தம் நிற்காமல் வழிந்த படி இருக்க, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான்.
“என்னடா நடந்தது ? நல்லா தானே இருந்தான் .. பேச்சு மூச்சு இல்லாம இப்போ கடக்கறான் .. என்ன நடந்துச்சின்னு சொல்லுங்க டா “, பத்ரியின் தாய் அனைவரையும் பார்த்துக் கேட்டார்.
“அம்மா .. அது .. “, என அனைவரும் கண்களில் வழியும் நீருடன் தயங்கி நின்றனர்.
“நிறைய பிளட் ரொம்ப லாஸ் ஆகி இருக்கு .. ஒடனே இந்த குரூப் பிளட் வேணும் .. ஆளுங்கள ஏற்பாடு பண்ணுங்க “, என டாக்டர் சொல்லி சென்றதும்.
நண்பர்கள் பத்ரியின் ரத்த பிரிவு உள்ள, தங்கள் மற்ற நண்பர்களை விடுதியில் இருந்து உடனே அழைத்து வந்தனர்.
என்ன நடந்தது என்று புரியாமல் பத்ரியின் தாயார் நிலை கலங்கி அமர்ந்து இருந்தார்.
“டாக்டர் .. அவனுக்கு என்ன ஆச்சி ?“, வினித்.
“படிக்கற பசங்க தானே நீங்க எல்லாரும் .. அறிவு இல்லயா ? உங்க விளையாட்டு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாருங்க .. இன்னும் 2 நாளைக்கு எங்களால ஒண்ணும் சொல்ல முடியாது .. “, என டாக்டர் திட்டி விட்டு சென்றதும் பத்ரியின் தாய் அவர்கள் முன் வந்து நின்றார்.
“என்னடா நடந்துச்சி ? என் பையன என்ன செஞ்சீங்க ?”
அனைவரும் மௌனமாகத் தலைக் கவிழ்ந்து நின்றனர்.
“சொல்லுங்க டா “
“அம்மா .. எங்கள மன்னிச்சிடுங்க மா .. நாங்க அவனுக்கு பர்த்டே விஷ் தான் மா செஞ்ஜோம்.. ஆனா அது இப்டி ஆகும்ணு நினைக்கலம்மா .. “, என அனைவரும் அவர் கால்களில் விழுந்தனர்.
“என்னடா செஞ்சீங்க ? அத சொல்லுங்க டா .. அவனுக்கு எப்டி தலைல அடி பட்டுச்சி ?”
“மேடம் .. “ , என அழைத்தபடி நர்ஸ் வரவும், அவர் அங்கிருந்து டாக்டரை காண சென்றார்.
“டாக்டர் .. என் பையன் எப்டி இருக்கான் ?”, தவிப்புடன் கேட்டார்.
“நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள கண்ணு முழிச்சிட்டா பிரச்சனை இல்ல மா .. முதுகு எழும்பு தான் அதிகமா அடி வாங்கி இருக்கு.. 2 எழும்பு நகந்து இருக்கு “
“எப்டி டாக்டர் ? எனக்கு புரியல “, அதிர்வுடன் கேட்டார்.
“இப்போ இருக்கற பசங்களுக்கு அறிவு வேலை செய்யறது இல்லன்னு தான் சொல்லணும் .. பர்த்டே விஷ்-அ ஹேண்ட் ஷேக் செஞ்சி பண்றது இல்ல .. அந்த பையன தூக்கி போட்டு அடிக்கறது , முதுகுல ஒரே சமயத்துல நாலு ஐஞ்சி பேர் விடாம அடிக்கறது , கை கால பிடிச்சி கிட்டு முதுகுல ஒதைக்கறதுன்னு தான் பண்றாங்க .. அதோட விளைவு இப்டி தான் இருக்கு “
“அப்போ இவனுக்கும் “, என கேட்டு நிறுத்தினார்.
“ஆமா .. பசங்க அடிச்சத்துல தான் முதுகு எழும்பு நகந்து இருக்கு , தூக்கி போட்டு பிடிக்கறப்போ தலை பலமா தரைல மோதி இருக்கு”
என்ன கூறுவது என புரியாமல் அவர் அதிர்வுடன் அமர்ந்து இருந்தார்.
“இப்போ என் பையன் ?”, அதற்க்கு மேல் கேட்க முடியாமல் திணறினார்.
“நாளைக்கு கண்ணு முழிக்கற வரைக்கும் எதுவும் சொல்ல முடியாது .. தைரியமா இருங்க ..“, எனக் கூறி அனுப்பி வைத்தார்.
பத்ரியின் அம்மா முகத்தை காண யாருக்கும் தைரியம் இல்லை. தலை கவிழ்ந்தபடி அனைவரும் பத்ரி இருந்த அறை வாயிலில், அவன் உயிர் பிழைக்க தவம் இருந்தனர்.
அடுத்த நாள் மதியம் பத்ரி கண் விழித்தான். டாக்டர் அவனை முழுவதுமாக பரிசோதித்து விட்டு அவன் தாயை அழைத்தார்.
“இனிமே உயிருக்கு ஆபத்து இல்ல. ரெண்டு மாசம் நடக்க முடியாது .. ஜாக்கிரதையா பாத்துகோங்க “, என கூறினார்.
அதைக் கேட்டு ஆகாஷ் தரையில் மண்டியிட்டு அழுது கரைந்தான். தன்னால் தானே .. அனைத்தும் .. அனைத்தும் நிகழ்ந்தது என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான். மற்றவர்களும் தலையில் அடித்துக் கொண்டனர்.
யாரும் யாரையும் தேற்ற முனையவில்லை.
“அம்மா .. நான் பக்கத்துல இருந்து பத்ரி-அ கவனிச்சிக்கறேன் .. எங்க விளையாட்டு தனத்தால இப்டி ஆகும்-ன்னு யாரும் எதிர்பாக்கல.. அவனுக்கு ஒண்ணும் ஆகாது மா .. “, என அவர் காலடியில் அமர்ந்துக் கூறினான்.
அவர் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து விட்டு கதறி அழுதார். அவரின் அழுகை மாணவர்களை ரணமாக்கியது.
இன்றைய கால கட்டத்தில் இது போன்ற கொண்டாட்டத்தினால் பல உயிர்கள் உலகை விட்டு சென்று கொண்டு உள்ளன. இந்த மாதிரியான விளையாட்டு விபரீதம் ஆகி வருகிறது. நம் உடன் பயணிப்பவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் ஆகாமல் கொண்டாடுவோம்.
அன்புடன்,
ஆலோன் மகரி