சக்கரை உளுந்து வடை
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எங்கடா ஒரு போஸ்ட் போட்டுட்டு சமையல் பத்தி ஒண்ணுமே சொல்ல காணோமே ன்னு நினைச்சிங்களா ? வாய்ப்பு இல்லை தான் . இதோ நம்ம முதல்ல ஒரு ஸ்வீடோட ஆரம்பிக்கலாம் .. இது ஒரு பாரம்பரியமான இனிப்பு . இதுல இருக்க சத்து அண்ட் டேஸ்ட் அற்புதமா இருக்கும் .
இனி ஆரம்பிக்கலாம் ..
தேவையான பொருட்கள் :
- உளுந்து – 1 படி (தோல் நீக்கியது )
- தேங்காய் – 2 மூடி
- சீரகம் – கொஞ்சம்
- சர்க்கரை (அ) கற்கண்டு – தேவையான அளவு (1kg : 1/2kg ) குறைந்தபட்ச அளவு .
(வெறும் உளுந்து மற்றும் சக்கரை மட்டும் போட்டும் இதை செய்யலாம் .. )
செய்முறை :
- உளுந்தை நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் .
- ஊறிய பின் நன்றாக வடிகட்டி உளுந்தை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .
- உரலில் உளுந்து , தேங்காய் , சீரகம் போட்டு கம்மியாக நீர் விட்டு சிறிது நேரம் ஆட்டவும் .
- அதிகமாக நீர் ஊற்ற கூடாது . பொசு பொசு என்ற பதம் வந்ததும் சர்க்கரை (அ) கற்கண்டு இனிப்புக்கு தேவையான அளவு அதே உரலில் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் ஆட்டவும் .
- மாவை தனியாக பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும் .
- வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு , சிறிய அளவில் வடை போல கையில் தட்டி வாணலியில் போடவும் .
- மென் சிகப்பு நிறத்தில் இருந்து , நன்கு சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும் .
இதோ சூடான சக்கரை உளுந்து வடை தயார்..
இதில் நெய் ஊற்றி, வாழைபழம் போட்டு பிசைத்து சாப்பிட்டால் வெகு ருசியாக இருக்கும் .
இதை “வடேவு“ என்று ஒரு சில மக்கள் கூறுவர் . இது அவர்களின் முக்கியமான இனிப்பு வகை.
முக்கியமாக ஒரு பெண் பூப்பு எய்தியதும் , திருமணம் செய்யும் போதும் இந்த இனிப்பு அவர்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இனிப்பில்லாமல் அவர்கள் விசேஷங்கள் ஆரம்பிப்பது இல்லை என்றே கூறலாம் .
தாய் மாமன் திருமணத்திற்கு முன் பெண் / மாப்பிள்ளை நழுங்கு செய்வது போன்ற விசேஷங்களில் இது தான் முக்கியமாக விருந்தில் வைத்து முதலில் சாப்பிட கூறுவர் .
உளுந்து நமக்கு என்ன என்ன நல்ல விஷயங்களை கொடுக்கிறது என்று இப்போது பார்ப்போம் .
- மாத விடாய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வடையை மாதம் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட அந்த பிரச்சனை குறைவதை உணரலாம் .
- உளுந்து நம் எழும்புகளுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது .
- புரத சத்து அதிகம் கொண்டது .
எல்லாமே அளவா சாப்பிடலாம் ஆரோக்கியமா இருக்கலாம் ..