உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.
அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.
இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை அதன் போக்கில் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் இவளுக்கோ இழந்தும் இழக்காத நிலை. அவன் இருக்கிறானா இல்லையா என்பதே இந்த நொடி வரை தெரியவில்லை.
வருகிறேன் என்று உறுதி கூறி சென்றவன் இன்று வரை வரவில்லை. வருவானா என்றும் தெரியவில்லை. வரமாட்டான் என்பது உறுதியானால் அவளது மனமும் ஒரு அமைதி நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
இங்கே எதுவும் தெரியாத நிலை, அதனால் அவள் மனதும் அடுத்தது என்ன என்று யோசிக்க அடம் பிடித்து அப்படியே நின்று விட்டது.
எழுந்து வாசல் கூட்டிவிட்டு, மாடிக்கு சென்று தொலைவில் தெரியும் கானல் காட்சிகளில் அவளவனை தேட தொடங்கிவிட்டாள்.
எழுந்து வந்த அவளது அப்பத்தா, மாடியில் அவள் அமர்ந்து இருக்கும் நிலை கண்டு உள்ளுக்குள் வருந்தினாலும், இப்படியே விட்டால் பூக்க வேண்டிய மொட்டு கருகி விடுமோ என்ற பயம் அவருக்கு வந்து இருந்தது.
நாளை நாங்கள் இல்லையென்றாலும் அவள் திடமாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கும் வலிமை ஏற்படுத்த நினைத்தார்.
“சும்மாவே ஒக்காந்து இருக்காம ஏதாவது வேலை பாத்தா தானே நாளு ஓடும் “, என்ற பாட்டியின் சொற்களை வழக்கம் போலவே அலட்சியப்படுத்திவிட்டு, மாடியில் இருக்கும் பூச்செடிகளுக்கு நீரூற்ற ஆரம்பித்தாள்.
கொல்லை பக்கம் வந்தவர் அங்கிருந்த தன் மகனை கண்ட பின், “காலைல எழுந்தா ஏதாவது வேலை செய்யலாம்ன்னு இல்லை.. எப்போ பாரு எதையாவது வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இருந்தா எல்லாம் சரியாகுமா என்ன? “, என பின் பக்க தோட்டத்தில் காய் கறிகளை பறித்தபடி பொலம்பிக்கொண்டு இருந்தார் விஜயா பாட்டி.
“காலைலயே ஆரம்பிக்காத மா .. அவளே நொந்து போய் இருக்கா“, தந்தை தனக்காக பாட்டியிடம் பேசுவது காதில் விழுந்தது.
“எத்தனை நாளைக்கு டா இப்படி வெறிச்சி பாத்துகிட்டு ஒக்காந்து இருப்பா ?”
“அவ மனசு ஆரட்டும் .. ஏதாவது சின்ன சின்ன வேலை பண்ணிட்டு தா இருக்கா“
“இப்டியே ரெண்டு வருஷம் போயிரிச்சி டா.. இவள இப்டி பாத்து பாத்தே என் மருமக நெஞ்சு வலில போய் சேர்ந்துட்டா.. நீயும் ஒழுங்கா ஒடம்ப கவனிக்காம இருக்க.. இப்படியே போனா இந்த வீட்ல மனுஷங்க இருக்கமாட்டாங்க டா..”, தனது பயத்தை மகனிடம் வெளிப்படையாக கூறினார்.
தண்ணீர் ஊற்றி கொண்டு இருந்தவள் இந்த பேச்சில் இவர்கள் இருக்கும் பக்கம் வந்து நின்றாள்.
“அந்த ஆண்டவனுக்கு இன்னும் நம்ம மேல கருணை வரல ஆத்தா .. என்ன பண்றது ?”
“அந்த சிறுக்கிக்கு தான் படிச்சும் புத்தி வேலை செய்யல உனக்கு என்ன ?”
“இப்போ என்ன பண்ணனும் ஆத்தா ? அந்த புள்ள இப்போ தான் மனசு தேத்த முயற்சி பண்ணிட்டு இருக்கு.. நீயே பேசி பேசி மறுபடியும் என் மகள நோகடிக்காத “, சற்று கோபத்துடன் கூறினார்.
“இந்தாடா.. எத்தனை நாளைக்கு மகளும் அப்பனும் இப்டி மூக்க சிந்திக்கிட்டே ஒக்காந்து இருப்பீங்க ? கைல சொத்து பத்து எவ்ளோ இருந்தாலும், வருமானம்-ன்னு ஒண்ணு பாக்கணும்.. அதே மாதிரி மனசும் ஒடம்பும் நல்லா இருக்கணும்னாலும் வேலை செஞ்சா தான் சரியா இருக்கும்.. வானத்த வெறிச்சி பாத்து அவளுக்கு என்ன வந்துச்சி? அவள பாத்து கண்ணீர் விட்டு உனக்கு என்ன வந்துச்சி ?”
“இப்போ என்ன பண்ணணும்ங்கற ஆத்தா ?”
“அவள வயல பாத்துக்க அனுப்பு .. நீ மில்லுக்கு கெளம்பு .. போனவன் போயிட்டான் .. திரும்பி வரமாட்டான்ன்னு நல்லா புத்தில நிக்க வச்சிட்டு இங்க உசுரோட இருக்கறவரை பொழைக்க வழி பாக்கணும்”
“அப்பத்தா .. அவரு வருவாரு “, என கோபமாக கூறியபடி அங்கே வந்தாள்.
“அவன் வரட்டும் வராம போகட்டும் .. இன்னும் எத்தனை நாளைக்கு வேலை வெட்டிய பாக்காம ஒக்காந்து இருப்ப ? உனக்குன்னு என்ன சேர்த்து வச்சி இருக்க ?”
“அவ என் மக ஆத்தா .. அவளுக்கு தான் எல்லாமே ..”
“குடுக்கறத காப்பாத்திக்கற நினைப்பு அவளுக்கு இருக்கான்னு மொத பாப்போம் டா .. இனிமே அவளும் வேலை பாத்து வருமானம் பாத்தா தான் இந்த வீட்ல எடம் நிலைக்கும்..”, என்று கூறியதும் தந்தை மகள் இருவரும் அதிர்ந்து பாட்டியை பார்த்தனர்.
“என்னையவும் என் மகளையும் வெளிய போக சொல்றியா ஆத்தா ?”
“இது உன் வீடுடா கிறுக்கா.. உன் அப்பனும் நானும் கஷ்டபட்டு உருவாக்கி உன் கைல குடுத்தத, நீ தக்க வச்சி பெருக்குன .. உன் மகளுக்கு அந்த தெறம் இருக்கான்னு தெரியாம அவளுக்கு என்ன குடுக்கறது? “
“இப்போ என்ன தான் ஆத்தா நீ சொல்ல வர்ற ?”
“அவ இனிமே வயல பாத்து வருமானம் பண்ணனும். அப்ப தான் இந்த வீட்லையும், ஊருலையும் அவளுக்கும் மரியாதை இருக்கும்”
“இப்போ என்ன அப்பத்தா.. இங்க இருந்து உன் சொத்தை நான் சும்மா ஒக்காந்து திங்கறேன்னு சொல்றியா ?”
“அதுல என்ன சந்தேகம் ? நாளைக்கு உன் அப்பன் இல்லைன்னாஹ் நீ யார்கிட்ட கை ஏந்துவ?”
இந்த கேள்வி தந்தை மகள் இருவருக்கும் நிதர்சனத்தை கத்தி போல குத்தி உணர்த்தியது.
சிறிது நேரம் யோசித்தவர் பின், “அந்த புள்ளைக்கு வயல பத்தி ஒண்ணுமே தெரியாது ஆத்தா “, யோசனையுடன் கூறினார்.
“அதுலாம் அவ கத்துக்குவா… நீ கெளம்பு .. நான் அவள கெளப்பி அனுப்பறேன் “, என அடுத்த வேலையை பார்க்க சென்றார் பாட்டி.
மீண்டும் முற்றத்தை வெறித்து பார்த்து அமர்ந்தவளை, சமைக்க நிறுத்தி வைத்துவிட்டு வெளியே சென்றார்.
சமையல் வேலையில் கவனம் இல்லாமல் ஏனோ தானோ என்று நிற்கும் பேத்தியைக் கண்டு பெருமூச்சு விட்டபடி, அடுத்த வேலைகளைப் பார்த்தார்.
அந்த நாள் அவளை வயலிற்கு கட்டாயமாக அனுப்பி வைத்தார். அவளும் சுரத்தையின்றி ஒரு வார காலமாக சென்று வந்துக் கொண்டு இருந்தாள்.
விஜயா பாட்டி அவளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வந்து கொண்டு இருந்தார்.
அவளும் அவளை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஏதேனும் ஒரு வேலையில் மூழ்க வைத்துக் கொண்டு நாட்களை கடத்தினாள்.
ஆனாலும் அவளுக்கு அவள் சுயமாக நிற்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இன்னும் வரவே இல்லை. எதற்கு எடுத்தாலும் அப்பத்தாவிடமும், தந்தையிடமும் வந்து நின்றாள்.
இவளை இன்னும் என்ன செய்து சுயமாக நிற்கவைப்பது என்று நினைக்கையில் தெருவில் சீமாறு விற்றுக் கொண்டு போகும் சத்தம் கேட்டது.
“அடியே இவளே.. சீக்கிரம் ஓடு .. சீமாறு போகுது நிறுத்து “, எனக் கூறினார்.
“நீ கூப்பிட்டா ஊருக்கே கேக்கும்.. நீயே போய் கூப்பிடு அப்பத்தா“
“சத்து கெட்டவ.. ஒரு சொல்லுல ஒடுறாளா பாரு.. அடுப்ப கவனி “, என அவளைத் திட்டிவிட்டு வாசலுக்கு வந்தார்.
“காமாட்சி .. அடியே காமாட்சி .. சீமாற கொண்டு வா“, என வாசலில் இருந்துக் கத்தினார்.
“வரேன் ஆத்தா .. “
“சீமாறு எவ்ளோ டி ?”
“அறுவது ரூவா ஆத்தா .. “
“என்ன டி இந்த வெல சொல்ற .. அம்பது தான் குடுப்பேன் .. “
“உன்கிட்ட பேச முடியுமா ஆத்தா .. நீ எவ்ளோ குடுக்கறியோ குடு நான் வாங்கிக்கறேன்.. “
“என்ன காமாட்சி பெரியம்மா .. அதான் உன் பேத்தி படிச்சு பெரிய ஆபீசரு ஆகிட்டாளே இன்னும் எதுக்கு சீமாற சொமந்துட்டு இருக்க ?”, அந்த பக்கம் வந்து கொண்டிருந்த பெண்மணி கேட்டார்.
“அவளையும் இந்த சீமாற சொமந்து தான் ஆளாக்குனேன்.. இந்த சீமாறு தான் எனக்கு சோறு போட்டு மரியாதையா வாழ வழி காட்டிச்சி.. இத என்னால மறக்க முடியாதுல்ல”, காமாட்சியின் குரலில் உள்ளே இருந்தவள், உள்கட்டில் இருந்தே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“அதான் ஆளாக்கிட்டியே இன்னும் ஏன் கஷ்டப்படற ?”, மற்றொரு பெண்மணி சீமாறை எடுத்துப் பார்த்தபடிக் கேட்டார்.
“அவ ஆளானது அவளுக்கு தான் ஆகும் .. எனக்கு நான் தானே பாக்கணும் “
“என்ன பெரியம்மா இப்பிடி சொல்லிபுட்ட .. உன் பேத்தி உன்ன பாத்துக்காதா என்ன ?”
“அவ எனைய ராணியாட்டம் பாத்துக்கறா கண்ணு .. அதுக்காக நான் அவ சம்பாத்தியத்துல செலவு பண்ண முடியுமா ?”
“உனக்கு இந்த வயசுக்கு மேல என்ன செலவு இருக்கு ?”
“எனக்கு இன்னும் 3 பொண்ணுங்க வீட்டு பேர பிள்ளைங்க இருக்கு.. அதுங்களுக்கு ஒரு கல்யாணம் காட்சிக்கு சீர் செய்ய நான் வேற ஆளுகிட்ட கையேந்தி நிக்கணுமா ? என் பேத்தியா இருந்தாலும் கை ஏந்தி நிக்கறது தப்பு தான்.. ஒடம்புல தெம்பு இருக்க வரை இன்னொருத்தர் கைய எதிர்பார்த்து வாழ கூடாதுல ஆத்தா..”
“சரி தான் டி .. நீ எண்ணிக்கி தப்பா பேசி இருக்க ? உன்ன பாத்து தானே புருஷன பறிகொடுத்தவ எல்லாம் தைரியமா கை வேலை செய்ய ஆரம்பிச்சாங்க .. பத்து மாறு எடுத்துகிட்டேன் டி “
“பத்து எடுத்தா உனக்கும் பத்தாது எனக்கும் பத்தாது ஆத்தா .. இன்னும் ஒண்ணு எடு “
“யாரு டி இவ .. வீட்டுக்கு எவ்ளோ வேணுமோ அவளோ தாணு வாங்க முடியும்”
“ஏன் ஆத்தா ஒண்ணு எடுத்தா என்னவாம் .. பாத்தா எடுத்தா பத்தாது.. எட்டா எடுத்தா எட்டாது .. இப்டி தாணு ஊருல சொல்வாங்க அதான் நானும் சொன்னேன் .. உனக்கும் நெறஞ்சி இருக்கணும் எனக்கும் நெறையணும் ..”
“சரி சரி .. மொத்தம் பதிநொன்னு .. அடியே இவளே காச எடுத்துட்டு வா “, என உள்ளே திரும்பாமலே சத்தம் கொடுத்தார்.
“பாப்பா உள்ளார இருந்தா காதுல விழுமா ?”, காமாட்சி.
“அவ வெளிய நின்னு உன்ன தான் வேடிக்கை பாத்துட்டு இருந்தா டி “, என சிரிப்புடன் கூறினார் பாட்டி.
“என்னைய வேடிக்கை பாக்க நான் என்ன கூத்துக்காரியாட்டமா வேஷம் போட்டு வந்து இருக்கேன் “
“உன் வெளி வேஷம் அவ பாத்தா போதும் டி.. போனவன நெனைச்சி இன்னும் மருகிக்கிட்டு இருக்கா, அதான் நெம்பி விட ஒவ்வொரு வேலையா பாக்கறேன்”, பாட்டியின் கூற்றில் இருந்த வலி காமாட்சிக்கும் புரிந்தது. அவரும் அந்த சூழ்நிலையை கடந்து வந்தவர் தானே..
“இந்தா அப்பத்தா .. நான் குளிச்சிட்டு வயலுக்கு போறேன் .. கூட லக்ஷ்மி அக்காவ கூட்டிட்டு போறேன்.. நானே சமைச்சி வச்சிடறேன்.. “, என கூறினாள்.
“நீ போய் கெளம்பு .. இன்னிக்கி நாத்து நடவு இருக்கு.. இப்போ இருந்து பாரு அப்பதான் புரியும்.. நானும் கொஞ்ச நேரத்துல வரேன்.. மதியத்துக்கு சமைச்சி கொண்டு வரேன் “, என முகத்தில் கணிவு காட்டாமல் செயலில் காட்டிக் கொண்டு இருந்தார் பாட்டி.
“சரி அப்பத்தா ..”, என்று திரும்பியவள் நின்று காமாட்சியிடம், “எனக்கு உரைக்க வச்சிட்ட அத்த .. நானும் இனி கையேந்தி நிக்க மாட்டேன்”, எனக் கூறிவிட்டு வயலுக்கு புறப்பட தயாராக சென்றாள் நித்யகல்யாணி.
நமது வாழ்க்கை பயணத்தில் இறுதி வரை நம்முடன் பயணிப்பவர் யாரும் இல்லை. யார் இருந்தாலும் இல்லையென்றாலும் நமது உடலில் உயிர் உள்ளவரை நமது பயணம் தொடரும். இப்பயணத்தில் சுயத்துடன் கூடிய சுய சம்பாத்தியமும் மிகவும் அவசியம் என்பதை உணர்வோம்.
அன்புடன்,
ஆலோன் மகரி