வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர்.. இவங்களோட பேசினா நிமிஷங்கள் எல்லாமே அற்புதமா இருந்தது. ஒரு நல்ல வாசகரின் பார்வையை நாமளும் இன்னிக்கி பாக்கலாம்..
வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – சிந்து கிருஷ்ணமூர்த்தி
2. படிப்பு – B.Tech, உயிரித் தொழில்நுட்பம்
3. தொழில்/வேலை:
தற்பொழுது இல்லத்தரசி. இரண்டு வருடமாக எழுத முயற்சித்து கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
முக்கிய குறிப்பு – இங்கு நான் ஒரு வாசகியாக மட்டுமே பதிலளித்துள்ளேன்.
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
ஆறாம் வகுப்பு படிக்கையிலிருந்தே வாசிக்கிறேன். அப்பொழுதெல்லாம் வார பத்திரிகைகளில் வரும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என ஒன்று விடாமல் வாசித்து விடுவதுண்டு. பின் பாக்கெட் நாவல்கள் என வாசிப்பு மெல்ல விரிந்தது. புத்தகம் என முறையாக வாசிக்கத் தொடங்கியது பதினோராம் வகுப்பு படிக்கையில் வீட்டில் பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கியபோதிலிருந்து தான்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
வாசிப்பிற்கு சூழ்நிலைகளோ நேரம் காலமோ ஏதும் பார்க்க மாட்டேன். ஆனால் மனம் கனத்த நேரத்திலும், குழப்பமான நேரங்களிலும், எதனையும் சிந்தினை செய்யாது புத்தகங்களில் மூழ்கிவிடுவேன். ஏதேனும் படித்து முடித்த பின் மனம் சற்று தெளிவடையும். ஆதலால் இன்றுவரை அப்பழக்கத்தைத் தொடர்கிறேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இரண்டு வழி வாசிப்பனுபவமும் உண்டு. ஆனால் என் மனதிற்கு நிறைவை தருவது புத்தகங்கள் வழி வாசிப்பு தான்.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வருடா வருடம் புத்தகங்கள் வாங்குவதில்லை. ஆனால் ஒரு வருடத்தில் இரு முறை மூன்று முறை கூட வாங்குவதுண்டு. வாங்கும் அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன். மீச்சிறு நூலகம் ஒன்று வைக்குமளவு வீட்டில் புத்தகங்கள் உண்டு.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
எனக்கு வாசிப்பின் முழுமையை தருவது அச்சுப் புத்தகங்களே.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
எனது முதல் புத்தகம் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வை படித்தப்போது என்னையறிமால் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. நான்கு நாட்கள் வரை சரியான உறக்கமில்லை உணவில்லை. அப்பாவிடமும் வீட்டிலும் ‘ஏன் ஆதித்த கரிகாலன கொன்னாங்க?’ என புலம்பிக் கரைந்ததுண்டு. அதன்பின் அப்படி ஒரு தாக்கம் விளைந்தது வேல. ராமமூர்த்தி அவர்களின் குற்றப் பரம்பரை படித்தப்பொழுது.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
கட்டாயம் உண்டு. வாசிக்க வாசிக்க மனித உணர்வுகளை பற்றிய புரிதல்கள் என்னுள் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஒருவர் ஒன்றை என்னிடம் கூறும்பொழுது அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. மெதுவாக அவருக்கு புரியும்படி பிரச்சனை தீர்வதற்கான வழிகளை கூறியிருக்கிறேன். குணாதிசயங்கள் மாற்றிகொண்டது உண்டா என்றால் கட்டாயம் உண்டு. சிறு வயதில் கண் மண் தெரியாமல் கோபம் வரும் வாசிக்க ஆரம்பித்தப் பிறகு கோபம் படிப்படியாகக் குறைந்து இப்பொழுது ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் கத்தி விடுவேன் இப்பொழுது கோபம் குறையும் வரை ஒரு வார்த்தையும் உதிர்ப்பதில்லை.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
தலைப்பே என்ன மாதிரியான கதையென சிறு குறிப்பு தந்துவிடும். அதன்பின் பார்ப்பது முன்னுரையை தான். Don’t judge a book by it’s cover என்பார்கள் ஆனால் அட்டைப்படமும் சில நேரம் வாசகர்களை தன்புறம் ஈர்ப்பதை மறுக்கவியலாது. எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுதும் உடனிருக்கும் புத்தகங்களில் அட்டைப் படமாக திரை பிரபலங்களின் படங்கள் இருப்பது பிடிக்காது. முன்னுரை படித்து பிடித்திருந்தாலும் அப்புத்தகங்களை தவிர்த்து விடுவேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
முதல் பிடித்தமெனில் வரலாறும் இலக்கியமும் தான். இரண்டாமிடத்தில் திகில், மர்மம், அறிவியல் புனைவு, அரசியல் போன்றவை. அதன்பின் அனைவருக்கும் பிடித்த காதல், குடும்ப கதைகள்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நிறைய படியுங்கள். படிப்பதினால் அறிவு விரிவடையும் என பெரியோர் கூறுவதுண்டு. அப்படி பார்த்தால் எழுத்தின் மூலம் ஏதோ ஒன்றை கற்றுத் தரும் எழுத்தாளர்களும் ஒரு வகையில் ஆசிரியர்கள் தான். சில வேளைகளில் நல்ல தோழர்களாக தெரிகிறார்கள்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
முக்கிய திருப்பமெனில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் தான். அதனை படித்தபின் தான் என் வாசிப்பு வளர்ந்தது. நிறைய புத்தகங்கள் தேடி, வாங்கி படிக்கத் தொடங்கினேன். அதோடு நம் தமிழக வரலாற்றின் பக்கம் என் பார்வையை திருப்பிய பெருமையெல்லாம் முழுக்க முழுக்க பொன்னியின் செல்வனையே சேரும்.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் தகவல்கள் திரட்ட நிறைய வாசிக்க நேர்ந்தது. அலைந்து திரிந்து தரவுகள் திரட்ட வேண்டிய சூழல் இருந்தது. இன்றைய எழுத்தாளர்களுக்கு இணையத்தில் அனைத்தும் கிடைக்கின்றது.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக. நான் படித்தக் காலத்தில் ஆங்கிலம் பேசினால் தான் மரியாதை என்றொரு நிலை இருந்தது. அந்த நிலை இப்பொழுது இல்லையே. நிறைய எழுத்தாளர்கள் இணையத்தில் இருக்கின்றனர். அதுவும் கொரோனாவிற்கு பிறகு நிறைய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். இன்னொரு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி. அன்று பேனா பிடித்து எழுதியவர்கள் இன்று கைப்பேசியில் தட்டச்சு செய்கிறார்களே.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
ஒரு கதையின் கரு, கதைக்களம், நடக்கும் இடம், சூழல் எந்த மொழியை வேண்டுகிறதோ அதுவே வாசிக்கும்போது எனக்கு நெருக்கமாக இருக்கிறது. உதாரணமாக கிராமக் கதைகளில் வட்டார மொழி வழக்குகள் இருந்தால் படிக்கும்போதே அது நம்மை அச்சூழலுக்கு இழுத்துச் சென்றுவிடும். வரலாறு, சரித்திரம், இலக்கியமெனில் கண்டிப்பாக செந்தமிழ் தான் மனதிற்கு நெருக்கம்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வரலாற்று நாவல்கள் அதிகம் வாசிப்பதுண்டு. எப்பொழுதுமான பிடித்தம் பொன்னியின் செல்வன். சமீபத்திய பிடித்தம் வேள்பாரி, படைவீடு. பின் மீனாட்சி அடைக்கப்பன் அவர்கள் எழுதிய அனைத்து வரலாற்று நாவல்களும் பிடிக்கும்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
E book, இணைய வழி வாசிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படுவது காதல்/குடும்ப நாவல்கள் தான். நிறைய நல்ல கதைகள் வருகின்றன. பெரும்பான்மையான கதைகள் ஒரு பத்து பதினைந்து வருடம் முன்பு இருந்த குடும்ப பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் மட்டுமே கூறுகின்றன. சில கதைகள் தான் தற்காலத்தில் இருக்கும் குடும்பச் சூழல், பிரச்சனைகள் அதன் தீர்வுகள் என விவரிக்கின்றன. முக்கியமாக இன்றைய காதல்/ குடும்ப கதைகளில் பெருகி வரும் anti hero, anti heroin கதைகளெல்லாம் பெரும் வருத்தத்தை அளிக்கின்றன. அதுவும் ஒருபுறம் நாயகன் நாயகியை அடிப்பது, அவள் அனுமதியல்லாது திருமணம் செய்துக் கொள்வது, பின் அனுமதியில்லாது உறவுக் கொள்வதென்றால், மறுபுறம் நாயகி தன் பெற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவது, அடவாடித் தனமாக நடந்துக் கொள்வது, ஆணுக்கு நிகர் பெண்ணென பெண்ணியத்தின் சாராம்சம் புரியாது தண்ணியடிப்பது தம்மடிப்பது என வரும் காட்சிகளெல்லாம் படிக்கும்பொழுது ‘இந்த நாடு எதை நோக்கிடா போய்ட்ருக்கு’ மொமன்ட். அம்மாதிரி கதைகள் எழுதும் முன் அப்படிப்பட்ட ஒருவனுக்கோ ஒருத்திக்கோ தன் வீட்டு பிள்ளைகளை கட்டி வைப்பார்களா? என எழுத்தாளர்கள் சற்று சிந்தித்தால் நலம்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு கொண்ட கதைகளை தேடிப் படிப்பதுண்டு. அறிவியல் கதைகள் வாசிப்பதுண்டு. இணைய எழுத்தாளர்களில் மீனாட்சி அடைக்கப்பன் அவர்களின் அறிவியல் புனைவுகள் என் தனி விருப்பத்திற்குரியவை.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
தினமும் நேரம் ஒதுக்குவதில்லை. ஆனால் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது ஏதேனும் வாசித்து விடுவதுண்டு. அது இலக்கியமாகவோ கதைகளாகவோ இருக்கும்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
பொதுவெளியில் அதிகம் விமர்சனம் கொடுத்ததில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் பேசும் எழுத்தாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறேன். பொதுவெளியில் கொடுத்த முதல் விமர்சனமெனில் கனவுக் காதலி ருத்திதா அவர்களின் கூர்முனைப் போர் கதைக்கு கொடுத்திருக்கிறேன். தவறுகளை நயமாக எழுத்தாளரின் மனது புண்படாதப்படி எடுத்துரைப்பதே என் பழக்கம்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
பொன்னியின் செல்வன், உடையார், பார்த்திபன் கனவு, வேள்பாரி, படைவீடு.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
மறக்க முடியாத காட்சி எனில் பொன்னியின் செல்வனில் பூங்குழலி வந்தியத்தேவனை இலங்கை அழைத்துச் செல்வாள். இரவில் பயணம் தொடங்கும் காலையில் கண்விழிக்கையில் வந்தியத்தேவன் எதிரே தெரியும் மரகதத்தீவின் எழிலில் பிரமித்து நிற்பதாய் ஓர் காட்சி வரும். அதில் கல்கி மரகதத்தீவை பற்றி வர்ணித்த விதம் கண்முன் தீவை தூக்கி வந்து வைத்துவிடும். மனதைத்தொட்ட விஷயங்களெனில் ஆன்லைன் வாசிப்பிற்கு வந்த புதிதில் நிறைய கோதுமைநிற, தங்கநிற நாயகிகள் கொண்ட கதைகளை படித்துக் கொண்டிருக்கையில் இரண்டு கதைகளில் மாநிற, அதற்கும் கீழ் நிறம் கொண்ட பெண்கள் நாயகிகளாக இருந்தது ‘அப்பாடா! சிலரால் இது தான் அழகென்று வரையறுக்கப்பட்டிருக்கும் வட்டத்திற்குள் சிக்காத எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்’ என மன நிம்மதியளித்தது. தகவல்கள் எனில் திருநங்கைகளின் வாழ்க்கை பற்றி ஓரளவு வரைதான் அறிந்திருந்தேன் சாராமோகனின் உயிர்மெய் மூலம் அவர்களின் வாழ்வியல் முறையும், அவர்கள் எதிர்கொள்ளும் உணர்வு போராட்டங்களுமென முழுதாக அறிந்துக் கொண்டேன்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக எழுத வருகிறார்கள். அன்றுபோல் இன்று எழுத்தை அச்சில் ஏற்றிட பதிப்பகம் பதிப்பகமாக அலையத் தேவையில்லை. ஆன்லைன் எழுத்தாளர்களில் பிரிவினைகளை காண முடிகிறது. சில வேலைகளில் அவர்களிடும் சண்டைகள் மிகுந்த கவலையளிக்கின்றன. தனக்கு பிடித்த எழுத்தாளரென்று வாசகர்கள் சிலர், விமர்சித்த வாசகரையோ அல்லது எழுத்தாளரையோ பொதுவெளியில் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது. இணையமெங்கும் பொங்கல் போஸ்ட்கள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. அதேபோல் கதைத் திருட்டும் ஏராளமாய் நடக்கின்றது. ஒரே பாணி கதைகளை நிறைய காண முடிகிறது. சில எழுத்தாளர்கள் கூற கேட்டிருக்கிறேன் எழுத வந்தப்பிறகு அதிகம் வாசிப்பதில்லை வாசித்தால் அதன் தாக்கம் தங்கள் எழுத்தில் வெளிப்படுமென பயப்படுவதாகக் கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை எழுத வந்தப்பிறகு தான் அதிகம் வாசிக்க வேண்டும். உங்களுக்கென தனித்துவமான எழுத்து பாணி இருக்கையில் வாசித்தலின் தாக்கம் வெளிப்படுமென அச்சம் கொள்ள தேவையில்லை. வாசிக்க வாசிக்க உங்கள் எழுத்து மெருகேறும். இது என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் கற்றுக் கொண்டிருப்பது. ஆகையால் வாசிப்பதை நிறுத்திவிடாதீர்களென எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். ஒருபுறம் நிறைய எழுத்தாளர்கள் உருவாவது மகிழ்ச்சியளித்தாலும், மறுபுறம் எழுத்தாளர்களுக்குள் இருக்கும் பிரிவினையும் சண்டைகளும் மிகுந்த கவலையளிக்கின்றன. அதேப்போல் நிறைய எழுத்தாளர்கள் தங்களுக்கு காதல்/ குடும்ப கதைகள் தான் வருமென எல்லைக்கோடு வகுத்துக் கொள்கின்றனர். சிலர் காதல்/குடும்ப கதைகளை தான் வாசகர்கள் பெருமளவில் விரும்புகிறார்கள், படிக்கிறார்கள் என அம்மாதிரி கதைகளே எழுதுவதுண்டு. அதைவிடுத்து திகில், மர்மம், வரலாறு, அறிவியல் புனைவு…. என முடிந்த வரை அனைத்து பிரிவுக் கதைகளையும் எழுத முயற்சிக்க வேண்டும். அனைத்து பிரிவுகளுக்கும் தனி தனி வாசகர்கள் உண்டு. அதற்காக அக்கதைகளை எழுத வேண்டாமென கூறவில்லை ஒரு கதையாவது வேறு பிரிவில் முயற்சித்தால் நலமென்றே கூறுகிறேன். யாருக்கு தெரியும் காதல்/ குடும்பம் கதைகள் எழுதும் உங்களுக்குள் நல்ல திகில் கதை எழுதும் திறனோ அல்லது வரலாற்று கதை எழுதும் திறனோ ஒளிந்திருக்கலாமல்லவா. முயற்சித்துப் பாருங்கள்.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
அன்று வாசகர்களே ஒருக்கதையினை அடுத்தவர்களுக்கு கொண்டு சேர்ப்பவர்களாக இருந்தனர். தனக்கு தெரிந்தவர், நண்பர் யாரேனும் இக்கதை நன்றாக இருக்கிறது படித்துப் பார் என கூறினால் அதனை வாங்கி படித்து, அதை தனக்குத் தெரிந்த இன்னும் நால்வருக்கு பரிந்துரைத்தனர். அதோடு பெரும் தலைவர்கள் சிலர் படிக்கும் புத்தகங்களை அவர்களின் தொண்டர்கள் தேடிப் பிடித்து படித்து பிரபலமாக்கினர். இப்படி சில கதைகள் பத்திரிகைகளில் வெளி வந்து பிரபலமடையும் கதைகளென ஒருக்கதை பிடித்ததும், அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் மற்ற படைப்புகளையும் வாங்கி படித்தார்கள். சிலருக்கு ஒரு சில எழுத்தாளர்களின் எழுத்து பாணி பிடித்து அவர்களுடைய படைப்புகளையே தொடர்ந்து வாசித்தனர். எனக்குத் தெரிந்து இப்படி தான் சில எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் பிரபலமடைந்திருக்கக் கூடும். அதே காரணங்கள் இக்காலத்திற்கும் பொருந்தும். ஆனால் இக்காலத்தில் எழுத்தாளர்களே தங்கள் படைப்புகளை இணையத்தில் பல வழிகளில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சில கதைகள் அதிக பிரபலமடையாதிருப்பதற்கு எண்ணிலடங்கா கதைகள் இணையத்தில் கிடைப்பதனாலும், பெருவாரியான வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டுமே விரும்புவதும், வாசிப்பு இன்னும் விரிவடையாததும் காரணங்களாக இருக்கலாம்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
பிடித்த அன்றைய ஐவர் :
கல்கி– வர்ணனைகளில் வித்தகர். சூழல் சுழலை உருவாக்குவதில் வல்லவர்.
பாலக்குமாரன்– எழுத்து பாணியும் அவரின் வரலாற்று மீதான பற்றும்.
இந்திரா சௌந்தரராஜன்– ஆன்மீகமாக எழுதினாலும் அறிவியலை கலந்து எழுதும் விதம், மொழி நடை.
ராஜேஷ்குமார்– கதை நகர்த்தும் விதமும், கதையில் முடிச்சுகளை இட்டு அவிழ்க்கும் விதமும் விறுவிறுப்பும்.
சாண்டில்யன்- மொழி அறிவும் கற்பனை வளமும்.
பிடித்த இன்றைய ஐவர் :
சு.வெங்கடேசன்– இலக்கிய செறிவும் இயற்கை பற்றிய அறிவும்.
தமிழ்மகன்– வரலாற்றின் மீதான பற்றும் தேடல்களும்.
வேல. ராமமூர்த்தி– வட்டார வழக்கும் யதார்த்தமும்.
மீனாட்சி அடைக்கப்பன்– தமிழ் நடையும் சிந்தனையும்.
நந்தினி சுகுமாரன்– யதார்த்தமும் மொழி நடையும்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
வரலாற்று கதையெனில் வரலாற்றை திரிக்காத புனைவாக இருக்க வேண்டும்.
அறிவியல் புனைவு எனில் தரவுகளும் சான்றுகளும் உண்மையாக இருக்க வேண்டும்.
திகில், மர்மமெனில் விறுவிறுப்பும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும்
மற்ற கதைகளெனில் யதார்த்தமும், வாழ்வியல் கருத்தோ, சமூகக் கருத்தோ அல்லது குறைந்தபட்ச சமூக அக்கறையாவது இருக்க வேண்டும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
மொழி ஆளுமை இருவரிடமும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் மொழி ஆளுமையின் விகிதம் அதிகம். ஆனால் இணைய வழி வாசிப்பிற்கு வந்த பிறகு ஒரு பெண் எழுத்தாளரின் மொழி ஆளுமை கண்டு வியக்கிறேன். அவர் வேறு யாருமல்ல மீனாட்சி அடைக்கப்பன் அக்கா தான்.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
கல்கி மற்றும் பாலக்குமாரன் இருவரது கையொப்பம் வாங்குவது சாத்தியமல்ல ஆனால் ஆசையுண்டு. அவர்களை விடுத்தால் சு.வெங்கடேசன் அவர்களை நேரில் சந்தித்து கையொப்பம் வாங்க வேண்டும். எப்பொழுது என் கதையை புத்தகமாக போடலாமென்று நம்பிக்கை வருகிறதோ அக்கதைக்கு மீனாட்சி அடைக்கப்பன் அக்கா முகவுரை எழுதி கையொப்பமிட வேண்டுமென்று ஒரு ஆசையிருக்கிறது.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதைக்கு தேவையான பட்சத்தில் எதிர்மறை முடிவுகள் இருக்கலாம். எல்லாக் கதைகளும் நேர்மறை முடிவுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஒரு கதையின் எதிர்மறை முடிவுகளோ, இல்லை நிகழ்வுகளோ எதுவாயினும் மனம் கனமாகும். அதிலிருந்து மீள வேறு வேலைகளில் கவனம் பதிப்பதோ, இல்லை இசைக் கேட்பதோ, இல்லை நகைச்சுவைக் காண்பதோ, இல்லை பிடித்தவர்களிடம் உரையாடுவதோ, இதில் ஏதோ ஒன்று செய்தால் என் மனநிலை சமனாகும்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
இதுவரை கேட்டதில்லை. ஆதலால் அதனை பற்றி ஏதும் அறியேன்.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது எழுத்தாளர்களின் முடிவு. வாசகர்களின் விருப்பம். சில கதைக் களங்கள் அப்படி பட்ட தொடக்கங்களை அவையே வேண்டும். ஆதலால் ஒரு கதையிலிருந்து மற்றொரு கதை இருக்கலாம்.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எழுத்தாளர்களிடம் சில கோரிக்கைகள் வைக்க விரும்புகிறேன்.
எழுத்து எனும் பொதுவெளிக்கு வந்தப்பிறகு நேர்மறை விமர்சனங்கள், எதிர்மறை விமர்சனங்கள் இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்டும். நேர்மறை விமர்சனங்களை ஏற்குமளவு பல எழுத்தாளர்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை ஏற்க மனத் திண்மையில்லை. ஒரு வாசகர் கூறும் கருத்து ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் this is not your cup of tea என அடுத்த வேலையை பாருங்கள் அவ்வளவு தானே. இதற்கு ஏன் வீண் வருத்தமும் மன உளைச்சலும் அடைய வேண்டும். இந்த பக்குவம் ஒரு எழுத்தாளருக்கு மிக முக்கியம்.
நிறைய காதல் / குடும்ப கதைகளில் மஞ்சள் கயிறு மேஜிக் என்றொரு வார்த்தை இடம்பெறுகிறது. அதனை தயவு செய்து தவிருங்கள். யதார்த்த வாழ்வில் அந்த மேஜிக்கெல்லாம் நிகழ்கிறதா என பாருங்கள். இளைய தலைமுறையினர் பலர் படிக்கிறார்கள். திருமணம் பற்றி அவர்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும் அவர்களுக்குள் இச்சொல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என சற்று சிந்தியுங்கள். அடுத்து நாயகன், நாயகி பற்றிய வர்ணனைகளில் நிறம், உயரம் போன்றவற்றை தவிர்ப்பது நலம். சில எழுத்தாளர்கள் கதையின் நாயகன், நாயகி இப்படி தான் இருப்பார்களென சில பிரபலங்களின் புகைப்படங்களை இணைப்பதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் அது அவ்வளவு உவப்பானதாக இல்லை. கற்பனை எழுத்தாளர், வாசகர் இருவருக்கும் உரித்தானது. ஆதலால் கற்பனை என்பது எழுத்தாளருக்கு மட்டுமல்ல வாசகருக்கும் விரிய வேண்டும். உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் கற்பனை திறனை வளர்க்க வேண்டும்.
வசனங்கள் மட்டுமே கதையாக சில கதைகள் இருக்கின்றன. காட்சி விவரிப்பும் வர்ணனைகளும் குறைந்து வருகின்றன. வர்ணனைகள் அற்ற கதைகள் என்னை பொறுத்தவரை வறண்ட நிலம் போல. சூழல் சுழலை உருவாக்குவதில் கல்கி கைத்தேர்ந்தவர். காட்சியமைப்பை விவரிக்கும் விதமும் இடம் மற்றும் சூழலின் வர்ணனைகளும் சுழலாய் சுழன்று கதைக்குள் இழுத்துச் செல்லும். ஆகையால் கதைகளில் ஆங்காங்கே வர்ணனைகளும் காட்சி விவரிப்பும் விளக்கங்களும் இருக்கலாம். அடுத்து வசனங்கள் பத்தி பத்தியாக இருக்க வேண்டுமென்பதில்லை. வேண்டிய இடங்களில் பெரிய வசனங்கள் வைக்கலாம். சில இடங்களில் பெரிய வசனங்கள் கூற முடியாததை ஒரு வரி கூறி விடும். உதாரணமாக வேள்பாரியில் ‘மையூர்கிழாரின் இந்த முடிவு அனைத்து முடிவுக்கும் காரணமாகப் போகிறது’ என்றொரு வசனம் வரும். அவ்வசனத்தின் அடர்த்தியும் பொருளும் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகள் எத்தகையதாக இருக்குமென சொல்லாமல் சொல்லும். இப்படி ஒரு வரியில் கூட வசனங்கள் வைக்கலாம்.
அடுத்து சொற்களை மாற்றி எழுதுதல். உதாரணங்கள்,
ஞாபகம் – நியாபகம்
கௌரவம் – கவுரவம்
இதுபோல பல இருக்கின்றன. சொற்களை மாற்றி எழுதுவதை தவிருங்கள்.
அதே போல் ஒரு சொல்லை உபயோகிக்கும் முன் அச்சொல்லின் பொருளறியுங்கள். அருகாமை என்பது தொலைவு என்று பொருள் கொண்ட சொல் ஆனால் அதனை அருகில் என வரும்படி உபயோகிப்பது எந்த வகையில் சரி. அனைவரும் புரிந்துக் கொள்கிறார்களென அதை தொடர்ந்து உபயோகிக்காதீர்கள். தந்தையில்லா குடும்பத்தில் தலைமகன் தந்தை ஸ்தனாத்திலிருந்து அனைத்தும் செய்தால் அவனை தந்தையென அழைக்க முடியுமா? அது போல் தான் இதுவும். அருகாமைக்கு பதில் அருகண்மை என பயன்படுத்தலாம். ஒரு சொல்லின் பொருளை விக்கிப்பீடியாவில் தேடாதீர்கள். விக்கிப்பீடியாவில் நீங்களும் நானும் கூட ஒரு சொல்லிற்கு பொருள் விளக்கம் தர இயலும். தமிழ் அகராதி, நிகண்டுகள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன அதை உபயோகியுங்கள்.
அடுத்து வரலாற்று நாவல் எழுதும் முன் தரவுகளும், சான்றுகளும் இல்லாது உங்கள் கற்பனையை அப்படி தான் நடந்ததென உண்மை போல் எழுதாதீர்கள். ஏனெனில் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை வைத்து பலக் கதைகள் இணையத்தில் வித விதமாக இரகரகமாக வலம் வருகின்றன.
ஒரு கதையில் அவன் ஒரு நாழிகை நின்று அவளை பார்த்தான் என்றொரு வரியை படித்து விழி பிதுங்கி விட்டேன். ‘ஏன்டா அவன் அவ்ளோ நேரம் நின்னு அவளை பார்க்கணும்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன்.’ பிறகு தான் புரிந்தது நாழிகையை விநாடி, நொடி என நினைத்து அவ்வெழுத்தாளர் உபயோகித்திருப்பது. ஏனெனில் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். இதேபோல் கொத்தளக் கோட்டையை இருப்பிடமாக்கிக் கொண்டனர் என்று கூறிவிட்டு அதனை அரண்மனை போல் சித்தரித்திருந்ததைப் படித்துவிட்டு ‘நாம சரியா படிச்சோமா இல்லையா. இல்லனா நமக்கு தெரிஞ்சது தப்பான்ற குழப்பத்துக்கு போய்ட்டேன்.” ஏனெனில் கோட்டை என்பது அரண்மனைகளும் மக்களின் வசிப்பிடங்களும் கொண்ட அனைத்து வசிதகளையும் கொண்ட ஒரு நகரமைப்பின் காவல் அரணாக எழுப்பப்டும் மதில். அதன் மூலைகளில் சற்று துருத்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு தான் கொத்தளம். கோட்டை முற்றுகையிடப்படும் காலங்களில் எதிர் தாக்குதல் நடத்த, பொறிகள் பொறுத்த வசதியான இடம் தான் கொத்தளம். ஆகையால் ஒன்றை கூறும் முன் அது சரிதானா என ஒன்றிற்கு நான்கு முறை சரி பார்த்து பதிவிடுங்கள்.
இறுதியாக அச்சுப்புத்தகங்களில் திரை பிரபலங்களின் புகைப்படங்களை அட்டைப்படமாக வைப்பதை முடிந்த வரை தவிருங்கள். ஏனெனில் ஆன்லைன் வாசகர்கள் மனநிலையும் அச்சு புத்தகங்கள் வாசிப்போரின் மனநிலையும் வேறு வேறு.
இவையெல்லாம் நெடு நாட்களாக எம்மனதை நெருடிய விடயங்களில் முக்கியமானவைகள். இத்தவறுகளெல்லாம் நான் செய்யவில்லையா என கேட்டால் எழுத ஆரம்பித்த புதிதில் அதிக ஆர்வக்கோளாறில், நானும் எல்லாத் தவறுகளையும் புரிந்திருக்கிறேன். இருக் கதைகளை எழுதியப் பிறகே ஒரு கதையில் என்னென்ன காட்சிகள் வைக்க வேண்டும் கதையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென புரிப்பட ஆரம்பித்தது. ஆதலால் முந்தைய கதையை விட அடுத்த கதை சிறப்பாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு என் தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை உங்கள் கதைக்கு உங்களை விட சிறந்த வாசகரோ விமர்சகரோ இருக்க முடியாது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான். ஆனால் குறையுள்ள பிள்ளையை அன்னை கண்டித்து திருத்தாவிட்டால் எதிர்காலத்தில் பிள்ளையின் வாழ்க்கை என்னவாகும்? அதேபோல் குறையிருந்தால் திருத்திக் கொள்வதில் தவறில்லை.
ஒரு எழுத்தாளருக்கு சமூக பொறுப்பும் அக்கறையும் அதிகம் இருத்தல் வேண்டும். காலம் கடந்து நிற்கும் எழுத்து உங்கள் பெயரை கூறிக் கொண்டேயிருக்கும் என்ற அதிக அக்கறையோடு எழுதுங்கள். அடுத்த தலைமுறைக்கு மொழியை கடத்தும் தலையாயக் கடமையொன்று உங்கள் தோளில் இருக்கிறதென்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இயன்ற வரை சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, இலக்கணப் பிழை இல்லாது எழுதுங்கள். இங்கு எழுத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம். சிறந்த கதைச் சொல்லிகள் எழுத்தாளராக மாட்டார்கள்.
இவ்வளவு நேரம் என் கருத்துகளை பொறுமையாகப் படித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நனி நன்றி. நெடு நாட்களாக பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்த விடயங்களை பகிர வாய்ப்பமைத்து கொடுத்த ஆலோன் மகரி அவர்களுக்கு என் உள்ளார்ந்த நன்றி. நனி நன்றி சகி.
எத்தனை அழகான நிமிடங்கள் நாம் இவருடன் பயணித்தது.. ஒரு தேர்ந்த வாசகரின் பார்வையை சரியாக காட்டிவிட்டீர்கள். புத்தகம் கையில் தொட்டு படிப்பவரின் மனநிலை என்பது இப்படி தான் எதார்த்தம் முதல் எதிர்கால தொலைநோக்கு கொண்டு இருக்கும் என்று மீண்டும் நான் உணர்கிறேன்.
உங்களின் பொன்னான நேரத்தினை, சரியான ஆழமான கருத்துகள் கூறி எங்களின் நேரத்தையும் பொன்னாக மாற்றியமைக்கு நன்றிகள் சகி.
வாசிப்பை சுவாசிப்போம் ..