வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த சுட்டி எழுத்தாளர் ….
இவங்க கதைல குடுக்கற திருநெல்வேலி பாஷைய படிக்கறப்போ, அவளோ இனிக்கும் .
நம்ம தமிழ் மொழி மட்டும் தாங்க எந்த ஊரு வழக்கத்துல பேசினாலும் இவ்ளோ இனிக்குது .. இவங்க நமக்கு திருநெல்வேலி இனிப்பா கதைல குடுக்கறாங்க ..
இவங்க பல வித்தியாசமான கரு எடுத்து எழுத்திட்டு வராங்க ..
காதல் ஒரு வரமா ? சாபமா ? ன்னு இவங்களுக்கு சந்தேகம் எல்லாம் வந்து அதுக்கு ஒரு கதையவே எழுதி இருக்காங்க ..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1.புனைப்பெயர் – சுந்தரி செழிலி
2. இயற்பெயர் – மாரி சுப்புலெட்சுமி
3. படிப்பு – B. Sc Chemistry
4. தொழில் –
IBPS Clerk பரிட்சைக்கு படிச்சுட்டு இருக்கேன்.. மற்றபடி தோணும்போது எழுதுற சின்ன எழுத்தாளர்.
5. பிடித்த வழக்கங்கள் –
கதைகள் வாசிப்பது மற்றும் எழுதுவது, பாடல்கள் கேட்பது, நண்பர்களுடன் அரட்டை.
6. கனவு –
என் எழுத்துக்கள் மேம்பட்டு சிறந்த சமூகம் மற்றும் காதல் கதை எழுத்தாளராக வேண்டும். என் கதைகள் புத்தகமாக அச்சிடப்பட்டு என் கைகளில் தவழ வேண்டும்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
பல உணர்வுபூர்வமான காதல் கதைகள் படிக்கும் போது ஏற்பட்ட புல்லரிப்பு.. அந்த கதாபாத்திரமாக நான் இருந்திருக்க கூடாதா..? என்ற ஆவல். படித்து முடித்த பின்பும் கற்பனை உலகில் இருந்து வெளிவர முடியாமல் இருந்த தருணம். இவ்வாறு பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
வாசிக்க ஆரம்பித்தால் நான் உலகை மறந்துவிடுவேன். சிலநேரம் என்னையே அந்த கதாபாத்திரமாக நினைத்து படித்ததுண்டு. நான் அனுபவித்து உணராத பல விஷயங்களை வாசிப்பின் மூலம் மட்டுமே தெரிந்து கொண்டேன். என் வாழ்நாளில் நான் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் செயல்களில் வாசிப்பும் ஒன்று.
9. உங்களை எழுத தூண்டியது எது?
வாசிப்பின் மேல் உள்ள ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து எழுத்தின் மீது ஒரு காதல் ஏற்பட, கவிதை எனும் துடுப்பினை எழுத்துலகம் எனும் கடலில் போட்டு ஆரம்பித்ததே என் பயணம். என் கவிதையை வாசித்த வாசகர்கள் சிலர் என்னை கதை எழுதும்படி ஊக்குவிக்க அவ்வாறு ஆரம்பித்தது தான் கதைப் பயணம்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
எழுத்து பயணத்தின் முதல் அடியாக 26 ஜனவரி 2020 அன்று என் முதல் கவிதையை எழுதினேன். என் முதல் நாவலை நான் தொடங்கிய நாள் 18 ஏப்ரல் 2020. சுருக்கமாக கூறவேண்டுமெனில் நான் ஒரு லாஃடௌன் எழுத்தாளர்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
வாசகர்கள் என் கதையை படித்துவிட்டு கூறும் உணர்வுபூர்வமான விமர்சனங்களின் வழியே சில நேரம் உணர்ந்திருக்கிறேன்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
அனைவருக்கும் வாசிப்பின் மீது ஆர்வமும், எழுத்தினை படிப்பவர்கள் தாங்கள் படித்த நல்ல விஷயங்களை தங்கள் வாழ்வில் பின்பற்றும் பழக்கம் உண்டெனில் கண்டிப்பாக மாற்ற முடியும் என்பது என் கருத்து.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மின்னூல் பலருக்கு உபயோகமாகவும் எளிமையாகவும் இருக்கிறது. எந்நேரமும் வாசித்து கொள்ளலாம் என்ற வசதியையும் தருகிறது. ஆயினும் பதிப்பு புத்தகத்தின் மூலம் வாசிக்கப்படும் உன்னத உணர்விற்கு மின்னூலில் படிக்கும் உணர்வு ஈடாகாது என்பது என் கருத்து. தங்கள் விரல்களினால் புத்தகத்தை வருடி, வாசிக்கும் ஆர்வத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்பதை கூட மறந்து, அந்த எழுத்தில் லயித்து பக்கம் பக்கமாக திருப்பி படிப்பதில் ஒரு தனி சுகமிருக்கிறது.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
என் கதைகளும் பதிப்பு புத்தகமாக வெளிவர வேண்டும்.. நான் எழுதிய என் புத்தகத்தை ஆசையாக வருட வேண்டும் என்பது என் தீராத ஆசை. அதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கூடிய விரைவில் என் ஆசை தீரும் என்று நம்புகிறேன். இப்பொழுது மின் புத்தகங்களாக மட்டும் வெளியிட்டிருக்கிறேன்.
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
சிலருக்கு வாசிப்பின் மீது அவ்வளவு ஆர்வமிருக்காது. ஆனால் யாரேனும் கதை கூறினால் அதனை ஆர்வமாக கேட்பார்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை தானே. கேட்பதில் ரசனை இருப்போருக்கும், படிக்க இயலாத மக்களுக்கும் ஆடியோ புத்தகங்கள் பெரிதும் உதவுகிறது. நானும் என் கதைகளை ஆடியோ புத்தகமாக கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன் சிலநாட்களாக.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
ஒரு எழுத்தாளரின் மனதிற்குள் அவர்களின் கதை எழுதி முடித்த பின்பு மனதிற்குள் ஒரு நிறைவான உணர்வு ஏற்படுகிறது என்றால் அதுவே அவர்களின் முதல் வெற்றியாக நான் கருதுவது.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இதுவரை அவ்வாறு எதையும் நான் நினைத்ததில்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எனது இரண்டாவது நாவலான “மௌனமாய் எரிகிறேன் காதலிலே” என்ற நாவல் தான் எனக்கான அங்கீகாரத்தை வாசகர்களிடையே பெற்று கொடுத்தது என்பேன்.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
ஏதேனும் கேள்விப்படும் வினோத விஷயங்களின் மூலம் தோன்றும் எண்ணங்களையும், சொந்த அனுபவத்தில் தோன்றிய விஷயங்களையும் ஒப்பிட்டு அதில் எனக்குள் தோன்றிய கற்பனையைப் புகட்டி தான் நான் கதை கருவை இதுவரை தேர்வுசெய்திருக்கிறேன். கதைக் கருவிற்கு பொருந்தும் விதமாக பிறகு கதாபாத்திரங்கள் தேர்வுசெய்வேன்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபி மார்ச் 2021 நடத்திய “சிங்கப்பெண்ணே” எனும் போட்டியில் நான் எழுதிய “சிங்கப்பெண்ணே” எனும் சிறுகதை (தற்பொழுது “வந்தாய் ரட்சகனே” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நடுவார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு “மார்ச் மாதத்தின் சிறந்த எழுத்தாளர்” என அச்சிடப்பட்டு மின் சான்றிதழ்கள் பெற்றது தான் நான் இதுவரை பெற்ற போட்டி பரிசு.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
என் தவறுகள் ஏதேனும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றி கூறி அதனைத் திருத்திக்கொள்ள முயல்வேன். வீணாக கூறப்படும் கருத்துக்களாக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
நான் அதிகமாக எழுத விரும்புவது கவிதைகளும் தொடர்கதைகளுமே. ஏனென்றால் கவிதைகள் என் உணர்வுகளின் சித்திரத்தை வார்த்தைகள் எனும் தூரிகை கொண்டு நான் விரும்பி வரைபவை. தொடர்கதைகள் வாசகர்களின் வரவேற்பை எனக்கு பெற்றுத்தந்து மேலும் மேலும் என்னை எழுத தூண்டுபவை.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
இக்கேள்விக்கு பதில் வாசகர்களின் ரசனையை பொறுத்தே அமையும். அவர்களின் ரசனைக்கு அது மாறுபட்டு இருப்பதால் கூட அதிகமாக சென்றடையாமல் இருக்கலாம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
எழுதியது உண்டு.
சிநேகமாய் நீ..! சிரித்துக்கொண்டே நான்..! (நட்பின் பெருமையைக் கூறும் சிறுகதை)
ஆணவம் அழித்த ஆணவள் (பெண்ணின் கொடுமையை எதிர்த்து ஒரு பெண்ணே துணிந்து போராடும் சமூக கதை)
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாக முதலில் நான் கருதுவது “இரகசியம்” என்ற மொழிபெயர்ப்பு புத்தகம். ஒருவரின் நேர்மறை சிந்தனைகள் எவ்வளவு சக்திவாய்ந்தது என்று உணர்த்தும் புத்தகம் அது.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
வார்த்தை அளவுகள் பற்றி கூற எதுவும் எனக்கு தோன்றவில்லை. அவரவர்களின் கற்பனையின் அளவுகோள் அது.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
தங்கள் எழுத்துக்களை வெளிஉலகிற்கு கொண்டு சேர்க்க இப்பொழுது அமேசான் கிண்டில், பிரதிலிபி போன்ற செயலிகள் மற்றும் பல இணைய தளங்களும் வந்துவிட்டன. அதில் தங்கள் எழுத்துக்களை பகிர்வதன்மூலம் எழுத்தாளர்கள் பயன்பெறலாம்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
காதல் மற்றும் நட்பு சார்ந்த உணர்வுகளை என் கதைகளில் உணர்வுபூர்வமாக உணரலாம் என நம்புகிறேன். இதை தான் என் தனி தன்மையாக கருதுகிறேன்.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
No can play your role better than you
(உன்னைவிட உன் பாத்திரத்தை யாராலும் சிறப்பாக செய்ய முடியாது)
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
அமேசான்
பிரதிலிபி :
என் அனைத்து படைப்புகளும் பிரதிலிபியில் இருக்கின்றன.
யூட்யூப்:
https://www.youtube.com/channel/UCbWGpzAMp0go1oJH6Iw7viw
(என் கதைகள் மற்றும் கவிதைகள் ஆடியோ வடிவில்)
இன்ஸ்டாகிராம் :
https://www.instagram.com/poems_of_sezhili/
“எழுத்து பயணத்தில் நம்முடன் இன்று” என்ற பகுதியில் என்னை பங்கேற்க அழைத்த ஆலோன் மகரி அக்காவிற்கும் என் எழுத்துப்பயணத்தை வாசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதோ பாத்தீங்களா நம்ம சுட்டி எழுத்தாளர் எவ்ளோ பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லி இருக்காங்கன்னு ..
சீக்கிரமே பதிப்பு புத்தகம் போடுவீங்க எழுத்தாளரே .. உங்க எழுத்தை கையில் ஏந்த நாங்களும் காத்துட்டு இருக்கோம் ..
“இது காதல் வரமா ? சாபமா ?” கதைல ஒரு பூத காதலை அழகா அருமையான கற்பனையோட இவங்க சொல்லி இருக்கற விதம் ரொம்ப நல்ல இருந்தது .
பொதுவாவே தென் தமிழக மக்கள் தமிழ் மொழி பிழை இல்லாம கையாழுவாங்க . இவங்க கதைகள்- லையும் நான் பிழை பார்க்கவே இல்லை .
“ஆணவம் அழித்த ஆணவள்” பாராட்ட பட வேண்டிய ஒரு படைப்பு . போட்டிக்காக எழுதி இருக்கீங்க அதில் வெற்றி பெற வாழ்த்துகள் சுந்தரி.
இவங்க எழுத்து பாத்தா ரொம்ப நாளா கதை எழுத்தற மாதிரி தான் இருக்கு . lockdown எழுத்தாளர் மாதிரி இல்லைங்க.
தெளிவான கதை போக்கு, கற்பனைய அழகா கதைல குடுக்கற விதம், பிழை இல்லாத சொற்கள், திருநெல்வேலி வட்டார மொழி, இப்டி நிறைய பலம் இவங்க எழுத்துல இருக்கு.
கூடவே கதைகாக எடுக்கற மெனக்கெடல், குடுக்கற தகவல்கள், எல்லாமே படிக்கற எல்லாருக்கும் புதிய விஷயங்களை தெறிஞ்சிக்க வைக்கும்.
நீ உன் பாங்க் எக்ஸாம்ல வெற்றி பெற எங்க எல்லாரோடா மனமார்ந்த வாழ்த்துகள் சுந்தரி..
எழுத்த எப்பவும் விடாதீங்க .. உங்க எழுத்துல பல அற்புதமான படைப்புகள் வரும். அதுக்காக நாங்களும் காத்து இருக்கோம்.
எழுத்து உலகத்துல பெரிய உயரங்களை அடையவும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் சுந்தரி .
கவிதைக்கும், தொடர்கதைக்கும் உங்க எண்ணங்களை தொடர்பு படுத்தி சொன்ன பதில் ரொம்ப அருமை .
உங்க எல்லா பதில்களும் உங்க தேடலும், உங்க முயற்சியையும் காட்டுது .. உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட வாழ்த்துகள் ..
நம்ம சுட்டி எழுத்தாளர் கூட வந்த பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்ன்னு நினைக்கறேன் ..
அடுத்து ஒரு அருமையான எழுத்தாளர கூட்டிட்டு வரேன் ..