வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எல்லாரும் எப்படி இருக்கீங்க ? நவராத்திரி வேலை எல்லாருக்கும் பெண்டு கழட்டும் னு நினைக்கறேன் .. சரி அந்த பிசி ஷெட்யூல் ல நம்ம ஒரு சூப்பர் எழுத்தாளரோட ஒரு இனிமையான பயணம் போகலாம் வாங்க ..
இவங்கள பத்தி தெரிஞ்சிக்க ஒரு கதை தலைப்பு போதும் . அந்த ஒரு கதைல இவங்க நம்மள சிரிக்க வச்சாங்க , காதல் பண்ண வச்சாங்க , அழுக வச்சாங்க , கோவபட வச்சாங்க , ஏங்க வச்சாங்க , கடைசியா அப்பாடா ன்னு ஒரு பெரு மூச்சு விட வச்சாங்க ..
இவங்க வளர்ந்த எழுத்தாளர் . இவங்க கதைகளுக்கு நம்ம எல்லாருமே விசிறிகள் தான் ..
இவங்க நெல்லை தமிழும் , எழுத்து நடையும் , சொல்ற விஷயங்களும், நம்மள அப்படியே கட்டி போட்டு வைக்கற உணர்வு குவியலுமான வார்த்தைகளும் இப்படி சொல்லிட்டே போகலாம் .
இரண்டாவது முறையா மனசு அளவுல ஒரு பெரிய பாதிப்பு , அதுவும் ரொம்ப நாள், நான் அந்த கதைகுள்ளயே சுத்திட்டு இருந்தது அந்த கதைல தான் .. இப்பவும் அந்த கதை நினைச்சா அப்டி ஒரு மயக்கம் குடுக்கற எழுத்து அவங்களோடது ..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – தமிழ் மதுரா
2. படிப்பு – M.E
3. தொழில் – Software Engg
4. பிடித்த வழக்கங்கள் –
Early morning office commute, crispy rava dosa with hot filter coffee, Reading books
5. கனவு –
தினம் தினம் வித விதமா வரும். லேட்டஸ்ட் கனவு ஒரு பெரிய குடும்ப கதையை எழுதணும்.
6. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன? –
மனிதர்களின் பல வகையான குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு தந்திருக்கு.
7. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
ஒரு மனிதரை சிந்திக்க வைப்பதும், வழி நடத்துவதும் வாசிப்பே. அதுக்கு நானும் விதி விலக்கில்லை.
8. உங்களை எழுத தூண்டியது எது? –
ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கதை சொல்லிகளே. அதையும் தாண்டி அதனை எழுத்து வடிவில் கொண்டுவர மொழியின் மீது கொண்ட காதல் உதவி செய்யும். சோக முடிவு கொண்ட கதைகளை படிக்கும்போது இந்தக் கதை இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என்று நானும் பகிர்ந்து இருக்கிறேன். அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவண்ணம் கதை எழுதத் தூண்டியது ஒருவேளை எனக்கு பாடம் எடுத்த தமிழ் அம்மாக்களாய் இருக்கலாம். தமிழ் செய்யுள்களை அப்படியே உணர்ச்சி பொங்க சொல்வார்கள். எங்களையும் பாடல்களை பிரித்து பொருள்களை படிக்கச் சொல்வார்கள். இதெல்லாம் தமிழை ரசிக்க வைத்தது என்று நினைக்கிறேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? –
சிறு வயதில் சிறுவர் கதைகள் எழுத முயற்சித்து இருக்கிறேன். ஆனால் எப்படி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது என்று தெரியாது. பின்னர் ஒரு பாசிட்டிவ் உணர்வைத் தரும் கதையாக 2010இல் ஆன்லைனில் ‘மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்’ எழுதினேன்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
உண்டு. சிலர் கதையில் எழுதிய சில வரிகள் அவர்களுக்கு முக்கியமான முடிவுகளை எடுக்க உதவியதாகவும், சிலர் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர் கொள்ள தைரியம் தந்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள். சரயு, ஜிஷ்ணு கதாபாத்திரங்களின் தன்மையால் கவரப்பட்டு அவர்களின் பெயரை தங்களது குழந்தைகளுக்கு சூட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ? –
கண்டிப்பாக. உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய சாதனையாளர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல படிப்பாளிகளே.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதிப்புப் புத்தகம் மனதுக்கு நெருக்கமானது.
மின்னூல் காலத்தின் கட்டாயம். என்னைப் போன்ற வெளிநாட்டு வாசிகளுக்கு மின்னூல் ஒரு வரம்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
18 novels.
Thirumagal nilayam, www.udumalai.com, www.marinabooks.com, wecanshopping.com இவற்றில் எனது புத்தகங்கள் கிடைக்கும். கோவிட் சமயத்தில் கடைகள் பற்றி எனக்கு ஐடியா இல்லை.
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ? –
மின்னூலைப் போலவே ஆடியோ புத்தகங்களும் காலத்தின் கட்டாயம். போன வருடம் வரை எனக்கு ஆடியோ நாவல்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்போது நாவல்களைக் கேட்க ஆரம்பித்தவுடன். ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் மதுரா சானலின் ஆடியோ நாவல் மட்டுமின்றி ஹஷாஸ்ரீ, கிருஷ்ணப்ரியா, இந்திரா செல்வம், சபரி, பத்மா கிரகதுரை என்று அது ஒரு அழகான உலகமாக இருக்கிறது. சமைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் கேட்டு விடலாம். முயற்சித்துப் பாருங்கள்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ? –
எந்த ஒரு சிறு குறையும் இல்லாமலும், இல்லை எல்லாருக்கும் பிடித்த மாதிரியும் ஒரு படைப்பினை உருவாக்குவது கடினம். உங்களது சின்ன சின்ன தவறுகளை பொருட்படுத்தாது உங்களது கதையை வாசகர் முழுமையாகப் படித்து முடித்துவிட்டார் என்றால் உங்களது முதுகினை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாஸ் மார்க் வாங்கி விட்டீர்கள்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ? –
இல்லை. எனக்கு முழுமையான திருப்தி வந்த பின்னரே எழுதுவேன். எழுத ஆரம்பித்த புதிதில் எழுதிய சில கதைகளை இப்போது சில திருத்தங்கள் செய்யலாமே என்று தோன்றினாலும் செய்ததில்லை. அந்த பொழுதில் அந்த கதைக்கரு மனதில் உருவானபோது ஒரு புளோவில் என்ன எழுதினேனோ அது அப்படியே இருக்கட்டும் என்ற எண்ணம் கூட ஒரு காரணம்.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ? –
மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய், ஒரு கல் ஒரு கண்ணாடி, என்னைக் கொண்டாடப் பிறந்தவளே, அத்தை மகனே என் அத்தான் என்று படிப்படியாகவே எனது பயணம் இருந்தது. சித்ராங்கதா, உன்னிடம் மயங்குகிறேன் இவற்றில் இருந்த காதல் என்னை பெரும்பாலான வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ? –
பெரும்பாலும் பார்த்த, கேள்விப்பட்ட சம்பவங்களைக் கொண்டே தேர்ந்தெடுக்கிறேன். அந்த சம்பவங்களை நீங்களும் பத்திரிக்கையிலோ இல்லை தொலைக்காட்சி மூலமாகவோ கேள்விப்பட்டிருக்கலாம்.
உதாரணமாக அத்தை மகனே என் அத்தானே நாவலை சொல்லலாம். இந்த நாவலை படித்த ஒன்றிரெண்டு பெயர் என்ன இது இப்படி ஒரு வில்லத்தனமான பெண்ணாக சுந்தரி கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் இந்தக் கதைக்கரு நான் கேள்விப்பட்ட சிறு சம்பவம்தான். இரண்டு கசின்ஸ், இருவரில் தங்கைக்கு முதலில் திருமணமாகிவிட்டது. அக்காவுக்கு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிப் போனது. அக்கா, தங்கையின் கணவரின் மின்னஞ்சலை எப்படியோ பெற்று நேரடியாக அவருக்கு மின்னஞ்சல் செய்ய ஆரம்பிக்கிறார். எதோ விவரங்களைக் கேட்பதை போல ஆரம்பித்து, தங்கையை அப்படியே ஒதுக்கிவிட்டு வலுக்கட்டாயமாக தங்கையின் கணவருடன் மட்டும் பேசுகிறார். அவர்கள் குடும்பத்தைக் குழப்ப நினைக்கிறார். இதனையே கற்பனை கலந்து அத்தை மகனே நாவலாக எழுதினேன்.
கணவன் மேல் பொய்யாக வரதட்சணை புகார் அளித்த பெண்களைப் பற்றிய செய்திகள்தான் கடவுள் அமைத்த மேடையில் சிவபாலனின் கதை ஆயிற்று. நாத்தனாரின் பொஸசிவ் குணம்தான் வைஷாலியின் வாழ்க்கை.
கதைக்கரு தேர்ந்தெடுத்ததும் பெரும்பாலும் எனக்கு பரிட்சயமான இடத்தில்தான் கதையினை அமைப்பேன். தெரியாத விஷயங்கள் என்றால் அந்தத் துறையினைச் சேர்ந்தவர்களை அணுகி சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வேன். ஆன்மிகம், மருத்துவ தகவல்கள் என்றால் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
போட்டி போடாமலேயே ஆயிரக்கணக்கான உள்ளங்களில் ஒரு சிறு இடம்.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்? –
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள். அனைவருக்கும் எனது கதை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. This is not my cup of tea என்பதை அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் சொல்கிறார்கள். காரணம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்வேன். இல்லை என்றால் கடந்து சென்று விடுவேன்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ? –
சிறுவர் கதைகள். என்னவோ சிறுவர் கதைகளைப் படிக்கும்போது நாமும் மனதளவில் சிறுவர்களாகி விடுவோம். மற்றபடி ஆங்கிலத்தில் இருக்கும் அளவுக்கு தமிழில் சிறுவர் கதைகளுக்கு நாம் முக்கியத்துவம் தருவது இல்லை என்ற ஒரு ஆதங்கமும் உண்டு.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை? –
முன்பெல்லாம் வேலை முடிந்ததும் படிப்பதற்கு என்று நூலகம், வாசகர் குழு என்று இருக்கும். பல தரப்பட்ட நூல்களை படிப்பார்கள் விவாதிப்பார்கள். இப்போது இருக்கும் பிசி லைஃபில், இந்த கோவிட் காலத்தில் எல்லாரும் எதோ ஒரு அழுத்தத்தில் இருக்கிறோம். கிடைக்கும் ஒரு சில மணி நேரத்தில் இலகுவாக மனதை பாதிக்காத,நம்மை கண்ணீர் சிந்த வைக்காத கதைதான் பலரின் சாய்ஸ்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு) –
சிறுவர் கதைகள் எழுதி இருக்கிறேன்.
அம்மாச்சி கதைகள் பாகம் – 1, சில்புல்லின் வால், நீல தேவதை, முட்டைகோஸ் கணக்கு இப்படி சில. எனது தளத்தில் நீங்கள் படிக்கலாம்.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன? –
திருக்குறள். இன்றளவும் சில குறள்கள் நமது வாழ்வில் எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பது வியப்புக்குரியது.
ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை – இந்த காலத்து ஈ எம் ஐ பத்தி சொல்வது போலவே இருக்கா?
இந்தக் காலத்தில் வேலைக்கு போய் நொந்து நூடுல்ஸாகி ஒவ்வொரு நாளும் வெற்றிகரமா குடும்பம் நடத்துறவர் தவயோகிகளை விட சிறந்தவராம்.
சோசியல் மீடியாவில் மனதில் தோன்றிய கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்துபவர்களுக்கு – கனி இருக்க நச்சுக்காய் கவர்ந்தற்று.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
கதைக்கருவைப் பொறுத்து வார்த்தை அளவுகள் அமையும். பல கதாபாத்திரங்கள் வைத்து ஒரு குடும்பக் கதையினை எழுதும்போது வாசகர்களுக்கு விளக்க,பதிய வைக்க அதிகமான வார்த்தைகள் எழுத நேரிடும். வார்த்தைகள் அளவினைப் பொறுத்தவரை படைப்பாளர்தான் தீர்மானிக்க முடியும்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன? –
பயன் என்றால் என்ன என்பது இங்கு பெரிய கேள்வி. மனத்திருப்தி என்றால் உங்களுக்காக எழுதுங்கள், போஸ்ட் பண்ணுங்க, முடிந்ததும் அடுத்த கதையில் மனதை செலுத்துங்க. பணம்தான் பயன் என்று நீங்கள் நினைத்தால் முன்பை விட இப்போதுதான் சந்தர்ப்பங்கள் அதிகம். அமேசான், ஆன்லைன் தளங்கள் என்று வந்துவிட்டது, பதிப்பகத் துறை எளிமையாகிவிட்டது, ஆடியோ நாவல்கள் வெளியிடலாம். இவற்றை சரியாக உபயோகித்தால் எழுத்து லாபகரமானதாகவே இருக்கும்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ? –
என்னோட எளிமையான மொழி நடை மற்றும் தேர்ந்தெடுக்கும் கதைக்கருன்னு நினைக்கிறேன்.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்). –
வெற்றி என்பது நீங்கள் விரும்புவதைப் பெறுவது. மகிழ்ச்சி என்பது நீங்கள் பெறுவதை விரும்புவது.
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
எனது படைப்புகளை www.tamilmadhura.com தளத்தில் நீங்கள் படிக்கலாம்.
அது தவிர ப்ரதிலிபி தளத்திலும் கதைகளைப் பதிவிட்டிருக்கிறேன். ப்ரதிலிபி தமிழ் மதுரா
Youtube link – Tamil Madhura – YouTube
31. தமிழ் மதுரா தளத்தில் கோடை காலக் காற்றே நாவல் முடிந்துவிட்டது. அடுத்த நாவல் எப்போது?
அடுத்த நாவலை விரைவில் தொடங்க இருக்கிறேன். தலைப்பு – செம்பருத்தி. மகரியின் புதிய தளத்தில் கதையின் தலைப்பினை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி. உங்களுக்குப் பிடித்தவாறு ஒரு எளிமையான காதல் கதையாக இருக்கும்.
கதை தலைப்பு மற்றும் கவர் பேஜ் இங்கே ..
https://drive.google.com/file/d/1DYtRZVFb2Ardo6pOOLWr-vtvAZHpdUGA/view?usp=sharing
இதோ நம்ம ஸ்வீட் ஹார்ட் தமிழ் மதுரா சிஸ் கூட நம்ம பயணம் உங்க எல்லாருக்கும் பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன் ..
உங்க எழுத்துல எப்பவும் நாங்க நிமிர்வும், மன தைரியமும் தான் பாத்துட்டு வரோம் சிஸ் ..
உங்க கைல வசியம் இருக்கு அதான் எங்களை இப்டி கட்டி போட்டு வச்சி இருக்கு.
உங்களோட புது கதை அறிவிப்பு நீங்க இங்க குடுத்தது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் சிஸ் ..
“சித்ராங்கதா” எங்க எல்லார் மனசுலையும் ஆழமா பதிஞ்சி போன ஒரு கதை . நீங்க இது போல நிறைய கதைகளை எங்களுக்கு குடுக்கணும் . நானும் உங்களோட தீவிர விசிறிகள்ல ஒருத்தி-னு இங்க பதிவு பண்றேன் சிஸ் ..
நீங்க இன்னும் பெரிய பெரிய உயரங்களை அடையனும் சிஸ் . உங்க எழுத்து பணி எப்பவும் தொடரணும் ..
உங்க எல்லா முயற்சிகளுக்கும் எங்க எல்லாரோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
சீக்கிரம் அடுத்து ஒரு இறகு போன்ற எழுத்தாளரோட வரேன் ..