வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்….
“அர்ஜுன நந்தன்” எனது முதலாவது நாவல். அதன் தொடர்ச்சியாக இந்த கதை பயணம் செய்யும். அதனால் அந்த கதையை படிச்சிட்டு இதை படிக்க வாங்க… வாரம் ஒரு அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்… இத்தனை கால காத்திருப்புக்கு நன்றி, இனி கதையை தொடங்கலாம் வாங்க……
1 – ருத்ராதித்யன்
“காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே….. காற்றில்லா இடத்திலும் உந்தன் அருள் பரவி நிறைந்திருக்கும்….. எத்தனை பிறவிகள் எடுத்தும்…. எத்தனை குணங்கள் கொண்டும்…. மாறாத ஆன்ம ஒளியாய் உந்தன் மேல் நான் வைத்த காதல் மட்டும் நீங்காமல் தொடர்ந்து வருகிறதடா….. இன்னும் எத்தனை காலம் என்னை காக்கவைப்பாய்? இன்னும் நான் அனுபவிக்கும் கர்மம் ஏதும் இருக்கிறதா? எக்கடனும் நிறுத்தி வைக்காமல் இக்கணமே முடித்திட அருள் செய்யடா பரம்பொருளே …… ஓம் சிவாயநம…. நமசிவாய….. அப்பனே சதாசிவா…. பரமேஷ்வரா….. சொக்கநாதா….. “, என பூஜை அறையில் கம்பீரமாக எழுபது வயதைக் கடந்த ஓர் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் அமர்ந்து சிவபெருமானை மனதார பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார் அவர்.
“ஐயா…….”, பவ்யமாக மெதுவாக ஒரு குரல் அவரை அழைத்தது.
“என்ன வேலா ?”, அவர்.
“பாப்பா……”, எனத் தயங்கினார் வேலன்.
“வரசொல்லு…”, அவர்.
“இன்னும் எந்திரிக்கலங்க ஐயா…. எழுப்ப ஆள் அனுப்பினேன் ஆனாலும் இன்னும்…..”, என தயங்கினார் வேலன்.
“இன்னிக்கு கோவில்ல ஹோமம் இருக்குன்னு தெரியும்ல …. இன்னும் எழுந்திரிக்கலன்னா யாரு ஏற்பாடு பாக்கறது?”, கோபமாக பேசியபடி நெற்றி நிறைய திருநீறு பூசி மீண்டும் இறைவனை மனதார நினைத்து முகத்தில் புன்சிரிப்பு படர வெளியே வந்தார் அந்த பெரிய மனிதர்.
“இதோ ஐயா… நானே போறேனுங்க….”, எனக் கூறி வேலன் திரும்பினார்.
“இரு… நானே போறேன். அவளுக்கு பால் கொண்டு வா. நாட்டுசக்கரை போட்டு கொடு”, அவர்.
“சரிங்கய்யா”, என உள்ளே ஓடியவர் கையில் வெள்ளி டம்ளரில் பாலோடு வந்தார்.
அதற்குள் பெரியவர் தன் கைத்தடியுடன் படிகளில் ஏற ஆரம்பித்தார்.
அட அட அட….. என்னா கம்பீரம் ? என்னா தோரணை? இவருக்கு கைல அந்த கைத்தடியே தேவையில்ல, அத எவ்ளோ ஸ்டைலா பிடிச்சிட்டு ஏறுறார், ஆனா மறந்தும் அதை ஊனி நடக்கல…..
அந்த பெரிய அகலமான கிரானைட் கற்கள் பதித்த படிகளில் அத்தனை வேகமாக இரண்டாம் தளத்திற்கு ஏறி வந்தார். வேலனும் உடன் அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஏறினார்.
பெரிய மற்றும் நுண்ணிய வேலைபாடுகள் செய்த கதவு…. அதில் அந்த காலத்தில் நிச்சயம் வைர வைடூரியங்களை பதித்து வைத்து இருப்பர், தற்பொழுது இருக்கும் காலத்தில் அதை அப்படி வைக்கமுடியாது. ஆதலால் தற்சமயம் அலங்கார கற்களை பதித்து இருந்தனர்.
அந்த கதவை திறக்கவே இரண்டு பேர் வேண்டும், இவர் அசிரத்தையாக ஒரே கையில் திறந்து உள்ளே போறாரு…
‘அடேங்கப்பா….எவ்வளவு பெரிய ரூமு….. சந்திரமுகி படத்துல ரஜினிகாந்த் சொல்றாப்பல மைதானம் மாதிரில இருக்கு. இதுல தனியா எந்த பாப்பா தூங்குது??? பயமா இருக்காது இதுல தனியா தூங்க?’
அதோ அங்க பெரிய தொட்டில் இருக்கு.. அதுல தான் பாப்பா தூங்குது போல.. வாங்க போய் எழுப்பலாம்….
நமக்கு முன்ன அந்த பெரியவர் எழுப்பிட்டு இருக்காரு வாங்க பக்கத்துல போய் பாக்கலாம்….
அவள் படுத்திருப்பதோ பெரிய ஊஞ்சல். கட்டிலை ஊஞ்சலாக மாற்றியிருந்தனர். எப்பொழுது வேண்டுமானாலும் அதை ஊஞ்சலாகவும் அசையாத கட்டிலாகவும் ஒரு அழுத்தம் அதன் காலில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
தற்சமயம் வேலன் அதை ஆடாத கட்டிலாக மாற்ற ஒரு விசையை அழுத்த அது திடமாக நின்றது.
பெரியவர் ஒரு பக்கமாக அமர்ந்து, “சிங்கம்மா.…. எந்திரிடா…. நேரமாச்சி…. உனக்காக பால் கொண்டு வந்து இருக்கேன் குடிச்சிட்டு ரெடியாகு டா. இன்னிக்கு கோவில்ல ஹோமம் இருக்குல்ல….”, அவர் அவளின் தலையை வருடியபடி மெல்லமாக இதமாக கைக்குழந்தையை கொஞ்சுவதைப் போல பேசி எழுப்பிக்கொண்டிருந்தார்.
“ம்ம்…..”, என அவள் சத்தம் கொடுத்து மீண்டும் மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
“சிங்கம்மா.…. எந்திரி டா. பாரு உனக்காக தாத்தா மேல வந்து எழுப்பறேன்”, என அவர் மீண்டும் அவளின் தலையைக் கோதி கன்னத்தை வருடினார்.
அவரின் அன்பு மிகுந்த சொல்லும் வருடலும் அவளின் முகத்தில் மென்னகையை வரவழைத்தது.
“தனுப்பா….. லவ் யூ “, என தூக்க கலக்கத்தில் பேசியபடி எழுந்து அவரின் தோளில் சாய்ந்து அவரைக் கட்டிக் கொண்டாள் அவள்.
“எழுந்திரி சிங்கம்மா…. நேரம் ஆகுதுல்ல…. சீக்கிரம் கிளம்பணும்….”, அவர்.
“இன்னும் கொஞ்ச நேரம் தனுப்பா…..”, என செல்லம் கொஞ்சியபடி மீண்டும் உறங்கினாள்.
“சிங்கம்மா…. “, என அழுத்தமாக அவர் அழைக்க, “நன்றாக கண் திறந்து பார்த்தவள்,” ஹ்ம்ம்கும்ம்…..”, என குழந்தையாக சிணுங்கினாள்.
“ஐயா…. உங்கள பாக்க தர்மகர்த்தா வந்திருக்காருங்க….”, என மற்றொரு வேலையாள் அறைக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தார்.
“என்ன வேணுமோ குடிக்க கேட்டு குடு. இதோ வந்துடறேன்”, என பதிலளித்தவர் தன் பேத்தியை பார்த்தார்.
இப்பொழுது அவள் தூக்கம் முழுதாக கலைந்து அவரை முறைத்தபடி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன சிங்கம்மா? ஏன் அப்படி பாக்கறீங்க?”, அவர்.
“தனஜ்செய ரணதேவ் விக்கிரமர் ஒரு முடிவோட தான் இருக்கார் போல”, செல்லம் கொஞ்சிய குரல் கனீரென இப்பொழுது வெளி வந்தது அவளிடம்.
“நான் ஏற்கனவே சொன்னது தான் சிங்கம்மா… அதுல மாற்றம் இல்ல. சீக்கிரம் தயாராகி வாங்க நாம கிளம்பலாம். இதுக்கு மேலயும் என் பரமனையும் தாயையும் விட்டு இருக்கமுடியாது”, ரணதேவ்.
“உங்க பரமனுக்காக நம்மல நம்பி இங்க இருக்கறவங்கள விட்டுட்டு வரசொல்றீங்க தனுப்பா. என்னால அப்படி வரமுடியாது. நீங்க போங்க. நான் பூஜைல மட்டும் கலந்துக்கறேன். இந்த ஊரவிட்டு என்னால வரமுடியாது. நீங்களும் அங்க தங்கவேணாம்”, அவள்.
“நான் யாரையும் விட்டுட்டு வர சொல்லல சிங்கம்மா. நம்ம இடத்துக்கு போகலாம்னு சொல்றேன். உனக்காக இத்தனை வருஷம் இங்க அங்கன்னு இருந்தாச்சி. இது போக வேண்டிய சமயம். நாம போய் தான் ஆகணும். நமக்கான கடமைகள் அங்கயும் காத்திருக்கு. இப்ப தனஞ்ஜெய ரணதேவ் விக்கிரமனா சொல்றேன். கிளம்பு அங்க தான் இனி நம்ம வாழ்க்கைய வாழணும்”, எனக் கூறி எழுந்து நடக்கத் துவங்கனார்.
பின் ஒரு நொடி நின்று திரும்பி, “ஆருத்ர சிங்கமாதேவி ….. இனி இதைபத்தி பேச வேணாம். நேரமாச்சி. பத்து மணிக்கு புறப்பட தயாரா இருங்க. உங்க உடைமைகள ஏற்கனவே அங்க அனுப்பிட்டேன். இன்னிக்கு போட வேண்டிய துணி மட்டும் தான் இங்க இருக்கு. வம்ச வாரிசா நீங்க இன்னிக்கு நடந்து தான் ஆகணும்”, எனக் கூறிவிட்டு நிற்காமல் வெடுவெடுவென நடந்து சென்றார் ரணதேவ்.
அவரை ஒரு முறை கலவையான உணர்வு கொண்டு பார்த்தவள் தன் பெயருக்கேற்றார் போல நிமிர்ந்து எழுந்தாள்.
“வேலனய்யா…. நீங்க போங்க. நான் அரைமணி நேரத்துல வந்துடறேன். தனுப்பாவுக்கு முதல் சாப்பிட குடுத்துடுங்க”, ஆருத்ரா.
“இன்னிக்கு ஐயா விரதமுங்க பாப்பா. சாயந்திரம் தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டாருங்க”, வேலன்.
“சரி… அப்ப நானும் அவர் சாப்பிடறப்ப சாப்பிடறேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு தயாரா இருங்க வண்டிய வரசொல்றேன். எல்லாரும் தேவையானத எடுத்துட்டு வந்துடுங்க”, ஆருத்ரா தீர்க்கமான பார்வையுடன் கூறினாள்.
“சரிங்க பாப்பா. பால் குடுச்சிடுங்க”, வேலன்.
பாலை எடுத்து கடகடவென சூடாக வாயில் கவிழ்த்தவள் குளிக்கச் சென்றாள்.
“இவ்வளவு சூடா இருக்கு பால்…. எப்படி பாப்பா ஒரே முட்டா குடிக்குதோ? இனிமேலாவது இரண்டு பேரும் சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் ஆண்டவா”, என வேலன் மனதுள் வேண்டுதல் வைத்து கதவை அடைத்துக் கொண்டு கீழே வந்தார்.
அந்த வீடு பத்தி பாக்கலாம் வாங்க நட்பூஸ்…
அத வீடுன்னு சொல்றத விட அரண்மனைனு தான் சொல்லணும். அவ்வளவு பெருசா இருக்கு. நம்ம மைசூர் அரண்மனைல பாதி இருக்கும் அது….
வீடு முழுக்க அலங்காரப் பொருட்கள், பித்தளை, செம்பு, வெள்ளியா இருக்கு. சாப்பிடற சாப்பாடுல இருந்து குடிக்கற டம்ளர் வரைக்கும் வெள்ளி தான் இப்ப யூஸ் பண்றாங்க. இதுக்கு முன்ன தங்கம் யூஸ் பண்ணி இருக்கலாம்….
இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னென்னா….. அங்க வேலை செய்றவங்க கூட வெள்ளி பாத்திரம்ல தான் சாப்பிடறாங்க. அதுல வேலைபாடு கொஞ்சம் கம்மி அவ்வளவு தான் மத்தபடி அங்கிருக்கறவங்க அத்தனை பேரும் மரியாதையோட தான் நடத்தப்படறாங்க.. வேலைக்காரங்கன்னு யாரையும் தரக்குறைவா பேசறதும் இல்ல, நடத்தறதும் இல்ல…
வேலை செய்றவங்களும் அந்த வீட்டுக்கு விஸ்வாசமா, பொறுப்பா தன் எல்லைல நின்னுக்கறாங்க…
குளித்து முடித்து தலைமுடியை காயவைத்து, லூசாக பின்னல் இட்டு, இடைக்கும் கீழே தொங்கும் கார்குழல் அசைந்தாட, கம்பீரமும், நளினமும் சேர்ந்து செய்த கலவைப் போல, பெண்ணவள் சிங்க நடையிட்டு நிதானமாக, அழுத்தமாக பாதம் பதித்து படிகளில் இறங்கி வந்தாள்.
தூய்மையான பருத்தி நூல் சேலை அவளின் வதனத்தை வலிக்காமல் படிந்திருக்க, கைகளில் ஒரு பக்கம் கடிகாரமும், மறுகையில் வைர பிரேஸ்லெட்டும் அணிந்திருந்தாள்.
ஒற்றை மாணிக்க கல் அவளின் கழுத்தை அலங்கரிக்க, காதில் மரகத கற்கள் பதித்த அளவான சிறிய தோடு அணிந்திருந்தாள்.
5′ 7″ உயரம், அதற்கேற்ற திடமான வாளிப்பான உடலமைப்பு, புருவங்கள் வில்லென வளையாவிட்டாலும், ஒற்றை புருவத்தை மேல் உயர்த்தி அவள் பார்க்கும் பார்வையில் அரசனும் உண்மை உரைத்து கைக்கட்டி நிற்கவேண்டும்.
கூர்மையான விழிகள், எடுப்பான நாசி, எப்பொழுதும் மென்னகை சிந்தும் இதழ்கள் என பாவையவள் பாராளும் பராசக்தியாகவே காட்சி தந்தாள் பார்ப்பவர் கண்களுக்கு.
“தர்மகர்த்தா ஐயா எப்படி இருக்கீங்க? ஊருல எல்லாரும் சௌக்கியமா?”, எனக் கேட்டபடி இறங்கி வந்து அவருக்கு எதிரில் அமர்ந்தாள்.
“உங்க கண்காணிப்புலையும், ஐயாவோட அன்புனாலையும் எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா…. இனி நீங்க அங்கவே தங்கிட்டா எங்களுக்கு அத விட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல”, தர்மகர்த்தா எழுந்து வணக்கம் வைத்துவிட்டு பதிலளித்தார்.
“அதான் உங்க ஐயாகிட்ட மாசத்துல நாலு நாள் நேர்ல வந்து பேசி காரியத்த சாதிச்சிட்டீங்களே… சரி நடக்கறது நடக்கட்டும். கிளம்பலாமா தனுப்பா?”, அவரிடம் பதில் கொடுத்துவிட்டு ரணதேவ்விடம் கேள்வியில் முடித்தாள் ஆருத்ரா.
“போலாம் சிங்கம்மா. உன் கையால என் பரமனை தூக்கிட்டு வா போகலாம்”, ரணதேவ்.
ஆருத்ரா பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு பூஜையறைக்குள் சென்று அங்கிருந்த சிவப்பு நிற லிங்கத்தை ஒருமுறை வணங்கிவிட்டு தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
இரண்டு கை அகலமும், ஒரு முழம் உயரமும் உடைய அந்த லிங்கம் பவளத்தினால் செய்யப்பட்டது. ஆண்டாண்டு காலமாக இவளின் வம்சாவழியினர் இதை பாதுகாத்து பூஜித்து வருகின்றனர்.
லிங்கத்துடன் வெளியே வந்தவளை அனைவரும் வணங்கிவிட்டு புறப்பட தயாராகினர்.
வெள்ளை நிற பென்ஸில் ஆருத்ராவும், ரணதேவ்வும் ஏறிக்கொள்ள, தர்மகர்த்தா தன் காரில் ஏறிக்கொண்டார். இருபது பேர் அமரும் வாகனத்தில் அந்த வீட்டில் இருந்த வேலையாட்கள் ஏறிக்கொள்ள அனைவரும் அம்புவி நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.