10 – காற்றின் நுண்ணுறவு
இவர்களுக்கு விபத்து நடந்ததும் தர்மதீரன் மனதில் பெரும் குழப்பமும், பயமும் தோன்றி இருந்தது.
கருணாகரன் அவனை அழைத்தபோது நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார்.
“என்ன தர்மா இது…. ஏதோ அவன் ஆபீஸ்ல சின்ன கையாடல் பண்றான், மிஸ்பிஹேவ் பண்றான்னு தானே நினைச்சிருந்தோம். இப்ப நடக்கறத பாத்தா பெரிய தப்பான விஷயங்கள் நிறைய பண்றான் போலவே….. உங்க ஏஜென்சில என்ன சொல்றாங்க?”, கருணாகரன்.
“இனிமே தான் போய் பாக்கணும் சார். சுதாகருக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயம் சொன்னதும், இன்னும் ஒரு மணி நேரத்துல வரசொல்லி இருக்காங்க…. நான் அங்க பேசிட்டு வரேன்…. நீங்க அந்த வல்லகி பாலா வீட்டுக்கு பேசிடுங்க… கொஞ்சம் யாராவது வந்து பார்த்தா பரவால்ல…. ”
“சரி தர்மா… நான் பாக்கறேன்…. நீங்க கிளம்புங்க…. போலீஸ்ல இன்பார்ம் பண்றத பத்தி பேசுங்க”
“சரிங்க சார். வச்சிடறேன்”
இங்கே பாலா வல்லகியின் இல்லத்திற்கு முதல் அழைத்தாள் நீண்ட நேரமாக அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க தன் இல்லத்திற்கு அழைத்தாள்.
“ஹலோ….. அம்மா…. நான் பாலா பேசறேன்…. இன்னிக்கு காலைல வகிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிரிச்சி…. “
“…………….”
“இல்ல எனக்கு ஒன்னும் இல்லம்மா…. என்னை வகி காப்பாத்திட்டா…. அவளுக்கு தான் தலைல அடி பட்டுரிச்சிம்மா … நான் இப்ப தான் மயக்கத்துல இருந்து முழிச்சேன்… அவ தூங்கிட்டு இருக்கா…. அவங்க வீட்டுக்கு போன் செஞ்சா யாரும் எடுக்கல… அங்க போய் சொல்லிட்டு கிளம்பி வாங்கம்மா…. “, பாலா அழாத குறையாகப் பேசி முடித்தாள்.
“……………….”
“சரிம்மா…. நான் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ கால் பண்றேன்.. “
தர்மதீரன் தனியார் டிடெக்டீவ் ஏஜென்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சுதாகரும், தர்மனும் கடந்த மூன்று ஆண்டுகளாக போலீஸ் வேலைக்கு முயற்சித்தபடி இந்த வேலையைப் பார்த்து வருகின்றனர்.
லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த காலத்தில் முயற்சிப்பது மிகவும் கடினமான விஷயம் தான். அதை இருவரும் செய்து வருதவால் தான் அனைத்து தகுதிகளும் இருந்தும் இன்னும் விரும்பும் பணியில் இடம்பெறாமல் இருக்கிறார்களோ….. என்னவோ ?????
ஷார்ப் டிடெக்டீவ் ஏஜென்சி, காலை பதினோரு மணியளவில் தர்மதீரன் அங்குச் சென்றான்.
“என்ன நடக்குது தர்மா? சுதாகருக்கு எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சி? நீங்க எங்க போனீங்க? “, மாவழுதி, க்ரைம் ஹெட்.
“நான் அந்த ஜிதேஷ் பத்தி டீடைல்ஸ் கிடைக்குமான்னு தான் தேடிட்டு இருந்தேன் ஹெட். என்னை தேடி வழக்கம் போல சுதா வந்தப்ப தான் கார்ல அடிச்சிட்டாங்க. பட் நான் அங்க பக்கத்துல இருந்ததால நல்லதா போச்சு….”
“இன்னும் வேற யாருக்கு அடிபட்டு இருக்கு?”.
“நேத்து எனக்கு ஹெல்ப் பண்ணதா சொன்னேனே ஹெட். அந்த பொண்ணு வல்லகி. அவங்களையும் கார்ல தான் அடிச்சு தூக்கி இருக்காங்க”
“அவன் ஏதோ பணம் தான் ஆபீஸ்ல அடிக்கறானு நம்மகிட்ட வந்து கண்டுபிடிக்க கேட்டாங்க. இப்ப ஆள தூக்கற அளவுக்கு அவனுக்கு ஆள்பலம் இருக்குன்னா பெரிய விஷயம் பண்றான் போலவே”, க்ரைம் ஹெட் யோசித்தபடி ஜிதேஷ் பற்றின விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
சுதாகர் அந்த பார்சலில் இருந்து கைப்பற்றிய பொருட்கள் அங்கே கொண்டு வரப்பட்டது. அதை பார்க்கும் போதே சோழன் உள்ளே வந்தார். ஷார்ப் டிடெக்டீவ் ஏஜென்சி உருவாக்கி நடத்திக்கொண்டிருப்பவர்.
“வழுதி…… அந்த நீளமான பொருள் ம்யூசியம்ல இருந்து திருடப்பட்டு இருக்கு. இந்த சாவியும் கர்நாடகல இருக்க ஒரு அரண்மனைல இருந்து திருடி இருக்காங்க. அந்த இரண்டு சின்ன பொருட்களும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல இருந்து எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். நீங்க ஐ.பிக்கு உடனே தகவல் கொடுங்க….”, எனக் கூறியவர் மீண்டும் தர்மதீரனிடம் இதற்கு முன் நடந்தவற்றை விசாரித்தார்.
“ம்ம்… தர்மா….. அந்த பொண்ணுங்க பேரு என்ன?”
“வல்லகி, பாலா….”
“அவங்க இரண்டு பேருக்கும் வேற எதாவது தெரியுமா ஜிதேஷ் சம்பந்தமா ?”
“இல்ல … அவன இதுவரை அவங்க சரியா பார்த்தது கூட இல்ல சார்”
“சரி… நாம இன்டெலின்ஸ் ப்யூரோகிட்ட போறது தான் நல்லது…. பெரிய பேக்ரவுண்ட் இல்லாமா நாலு இடத்துல திருடறது கஷ்டம்…. ஜிதேஷ்க்கு அவ்ளோ பெரிய நெட்வொர்க் இருக்கா?”
“வாய்ப்பில்ல சார். அவன் பெரிய கைக்கிட்ட சிக்கி இருக்கான்னு தான் தோணுது. நேத்து கூட அவங்க உன்ன விடமாட்டாங்கன்னு தான் சொன்னான். அவனுக்கு அந்த பார்சல் கிடைக்கலன்னு பயம் தான். திமிரோ அதிகாரமோ அதிகம் இல்ல. இந்த பொருள வாங்கறதுல தான் படபடப்பா இருந்தான்”, தர்மா யோசித்தபடியே கூறினான்.
“சரி… நாம இத தனியா ஹேண்டில் பண்றது சரிவராது. கவர்மெண்ட் பார்வைக்கு கொண்டு போகலாம். நீ சுதாகர பாத்துட்டு பேசு….. ஆளுங்க தேவைபட்டா கூப்டுக்க… நான் வழுதிகிட்ட பேசிக்கறேன்….”, எனக் கூறி கம்பீரமாக திரும்பி நடந்தார்.
“தர்மா…. அந்த பொண்ணு மேலயும் ஒரு கண்ணு இருக்கட்டும்… அல்லக்கைங்க எப்பவும் அசிங்கமான வழில தான் பழி தீர்த்துக்க பார்ப்பாங்க… அந்த ஜிதேஷ அந்த பொண்ணு அடிச்சது அவனுக்கு பெரிய அவமானம். சோ….”, எனப் பாதியில் விட்டதை தர்மதீரன் புரிந்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
பாலா வல்லகியை பாவமாக பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
எப்பொழுது வல்லகி எழுந்து தன்னிடம் பேசுவாள் என உறங்காமல் பார்த்தபடி இருந்தபோது அந்த ஜிதேஷ் ஆட்களுடன் உள்ளே நுழைந்தான்.
“ஏய்…. நீ …. நீ எப்படி இங்க? எதுக்கு இங்க வந்த? வெளிய போ முதல்ல…. போ…. டாக்டர்…. நர்ஸ்….. “, எனக் கத்தினாள்.
அவள் சத்தம் கேட்டு நர்ஸூடன் இரண்டு பேர் உள்ள வந்து ஜிதேஷை அதட்ட, அவன் ஆட்களிடம் அவர்களை அடித்துக் கட்டிபோட உத்திரவிட்டு வல்லகியை நோக்கிச் சென்றான்.
விக்டர் என்பவன் வல்லகி இருந்தக் கட்டிலை இழுக்க, செடிகளை விட்டு தூரமாக அவளின் கட்டிலை இழுத்ததும் அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
பாலா அவர்களை தடுக்க முயன்றுத் தோற்றுக்கொண்டிருந்தாள்.
“டேய்….. அவள எங்க டா தூக்கிட்டு போக பாக்கறீங்க? நீங்க தானே ஆக்ஸிடெண்ட் செஞ்சீங்க…. விட்றுங்க டா…. அவ எதுவும் பண்ணல…. அந்த தர்மா சார் தான் எல்லாமே பண்ணாரு…..”, பாலா ஜிதேஷை வல்லகி அருகில் நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தாள்.
“என் மேல கைவச்சி அவ தப்பு பண்ணிட்டா… அதுக்கு அவள என்ன பண்றேன்னு பாரு… நீ நகரு… இல்ல நீயும் நாஸ்தி ஆகிடுவ”, ஜிதேஷ் அவளை அவன் வழி விட்டு தள்ளினான்.
“வேணாம் ஜிதேஷ்…. அவள விட்று … நீ என் தலைல கைவச்சதால தான் அவ உன்ன அடிச்சா…. மறுபடியும் தப்பு பண்ணாத… அவள விட்று… “
அவளை ஜிதேஷ் ஓங்கி அறைந்ததும் அவள் மீண்டும் மூர்ச்சையாகி கீழே விழுந்தாள்.
“பாஸ் … இதுக்கு மூச்சு இழுத்துக்கீனுது….. இத்த இப்டியே வுட்டாலே போதும்… அதுவா பூட்டுக்கும்…… இத்த ஏன் தூக்கின்னு போவூணும்?”
“என் மேல இவ கைவச்சதுக்கு நானும் இவ மேல கை வச்சே ஆகணும்…. அவள தூக்கு.. ஆக்ஸிஜன் மாஸ்க் சிலிண்டரோட இழுத்துட்டு வா….”
“அதுல்லாம் ஒன்னி போடல… செடி தான் வச்சிருக்கானுவ…. அத்த வேணா இரண்டு தூக்கியாறவா?”
“எப்டியோ அவள உயிரோட தூக்கிட்டு வந்து சேருங்க டா”, என முன்னே நடந்தான்.
வல்லகியின் மூக்கிற்கு அருகே ஒரு செடியைக் காட்டியதும் மூச்சு சீராவதைக் கண்ட அடியாள், “அட…. இத்த பாரு மாமே…. செடிய காட்னா மூச்சு நல்லா வுடுது…. நல்ல சோக்காகீதுல்ல….. இத்த மாறியே மத்த கேஸுக்கும் இருந்தா ஆஸ்பத்திரி செலவே இல்லாம பூடும்ல….. டேய்…. பக்கத்துல இருக்க தொட்டிய ஆளுக்கு இரண்டு இட்டாங்க டா…. ஒட்டுனாபோலவே வாங்கடா புட்டுக்க போவுது மூச்சி வுடமுடியாம”, எனக் கூறியபடி அவளைத் தூக்கிக்கொண்டு செடிகளை மட்டும் அவளருகில் காட்டிக் கடத்தினர்.
அந்த ஆம்னி வேனில் அவளைப் படுக்கவைத்துச் செடிகளை அருகிலேயே வைத்தனர்.
சிட்டி லிமிட் தாண்டும் வரை ஜிதேஷ் தலை தூக்காமல் பதுங்கி இருந்தான்.
மாலை நேரத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில் நூழைந்தனர்.
பாரஸ்ட் டிபார்ட்மெண்டை பலமாகக் கவனித்துவிட்டு, அடர்ந்தகாட்டின் முன்வரை வண்டியில் வந்தவர்கள் அதற்குமேல் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.
அந்த காட்டில் அவளை இறக்கவும் அவளின் சுவாசம் தாறுமாறாக எகிற ஆரம்பித்தது.
“ண்ணா…. ண்ணா…. பார்ட்டி புட்டுக்கும் போலண்ணா…. மூச்ச எப்பிடி வுடுது பாரு…”, ஒரு அடியாள் கத்தினான்.
“சனியனே… அந்த பூச்சட்டிய மூக்காண்ட வைடா…. பரதேசி பரதேசி…. இத்த உசுரோட குடுத்தா தான் துட்டு”, மற்றவன் திட்டினான்.
“சார்… அந்த பார்ட்டி மூச்சு வுட்றதே பெருசாக்கீது….. இந்த காட்டுக்குள்ளாற இட்டுண்ணு போயி எதாவது ஆயிறபோது சார்….. பாரஸ்ட் ஆளுங்க இத்தோட எங்கள பார்த்த நொங்கெடுப்பானுங்க…. “, ஒருவன் புலம்பினான்.
“விக்டர்…. நீ கேட்டத விட நாலு மடங்கு தரேன்…. என்னையும் அவளையும் சேப்பா பாத்துக்கறது தான் உன் வேலை. உங்க குடும்பத்துக்கு தேவையானது இந்நேரம் போய் சேர்ந்து இருக்கும்”, ஜிதேஷ் பேசியபடியே ஆந்திரா எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தான்.
ஆள் மாற்றி ஆள் வல்லகியைத் தூக்கிக்கொண்டு நடந்தனர்.
இரவு நேரம் ஆனதும் ஓய்வெடுக்கவும், உணவு ஏற்பாடு செய்யவும் ஆட்களை ஏவிவிட்டு, ஒரு பாறையில் அவளை கிடத்திவிட்டு வேலையைப் பார்த்தனர்.
அவளை அவர்கள் கிடத்தி இருந்தது அஞ்சனப்பாறை….
சித்தர்கள் மூலிகையை அரைக்கும் பாறைக்கல் தான் அஞ்சனப்பாறை எனப்படும். அதில் அவளை உட்கார்ந்த வாக்கில் அமர்த்திவிட்டு அருகில் பூந்தொட்டி வைக்கும் சமயம் அது கீழே உடைந்துவிட அருகில் படந்திருந்த செடிகளை வேருடன் பறித்து அவளைச் சுற்றி மண் நிரப்பி அதில் செடிகளை வைத்தனர்.
“டேய்… டேய்….. விஷச்செடிகீது வச்சிட போறீங்கோ….. அப்பறம் அது புட்டுக்கும்… “
“ண்ணா….. தொட்டி கீய வுழுந்து உடஞ்சிச்சிண்ணா ….. அவசரத்துல இன்னா செடின்னு ஆராய்ச்சி பண்ணிகின்னு இருக்கவா? எல்லாம் நல்ல செடியாத்தான் இருக்கும்…. இந்த பக்கம் தான் சித்தர் சாமிங்க நிறைய இருப்பாங்கன்னு எங்க ஆயா கத சொல்லி கேட்டுக்கீறேன்….. அவுங்க நல்ல செடி இருக்க எடத்துல தானு இருப்பாங்க…..”, அறிவுபூர்வமாக ஒருவன் கூறினான்.
“டேய்…. கழிசட…. பண்ணாட…. எந்த காலத்துல இன்னா கத வூட்டுகினு இக்கீற நீ….. ”
“நீயே வந்து பாத்து நட்டுவச்சிக்க ண்ணா…. எனக்கு நல்ல செடி கெட்ட செடிலாம் தெரியாது…. எல்லாமே செடி அவ்ளோ தான்” , சலித்துக்கொண்டு அவன் சென்றுவிட்டான்.
“இவன் வேற…. அந்தாளு உடம்பு சரியில்லாத புள்ளைய தூக்கின்னு வாரவச்சி சாவடிக்கறான்…. சே….. “, என புலம்பியபடி அவனுக்கு மனதில் நல்லதாக தோன்றிய செடிகளை பிடுங்கி வந்து வல்லகியின் சுவாசத்தடையை போக்க முயன்றான்.
வல்லகியின் அதரத்தில் மிகவும் மெலிதாய் ஒரு முறுவல் பூத்ததோ எனத் தோன்றியது.
நல்ல கலவையான வாசனைகள் அந்த செடிகளில் இருந்து வந்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் போன் பேசிவிட்டு வந்த ஜிதேஷ், “டேய்…. இப்டி மண்ண கொட்டி வச்சிருக்கீங்க…. எதாவது அந்த பொண்ணு மேல ஏறி கடிச்சிட போகுதுடா….”, ஜிதேஷ் வல்லகியின் நிலையைப் பார்த்துக் கத்தினான்.
“கம்முனு இரு சாரு….. அந்த கல்லாண்ட எறும்பு கூட பூவல… இங்குட்டு தான் அத்தனையும் இருக்கு…. அது அப்டியே குந்திகினு தூங்கட்டும்.. நீ வந்து துண்ணு சார்”, என அழைத்தான்.
ஜிதேஷ் அவளின் அருகில் சென்று பார்த்தபோது மண்ணில் இருந்த எறும்புகள், பூச்சிகள் அனைத்தும் அவளை நெருங்காமல் வெளியே ஓடுவதைக் கண்டு குழப்பமாக பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“சார்…. எத்தினி நேரம் சார் இன்னும் போவணும்?”
“நாளைக்கு காலைல போயிடலாம் விக்டர்…. காட்டுக்குள்ள ஒரு பங்களா இருக்காம். அங்க தான் போகணும்…. “, எனக் கூறிவிட்டு வல்லகியின் அருகில் இருவரும் மற்றவர்கள் ஜிதேஷின் அருகிலும் படுத்தனர்.
வல்லகியைச் சுற்றி பல வகையான செடிகளுள் அறிய வகை மூலிகைகளும் இருந்தது தான் சிறப்பாக இருந்தது.
இரண்டு ஜாம காலம் அவளின் நாசியில் மூலிகையின் வாசம் ஏறியபடி இருக்க, மூன்றாம் ஜாமம் இருவர் அவள் அருகில் அரூபமாக வந்து உருவம் பெற்று அமர்ந்தனர்.
பித்தனைப் போல தோற்றம், குளித்து பல நூற்றாண்டுகள் இருக்கும் அப்படியான அழுக்கு அவர்கள் உடலில், ஆனால் கண்கள் சூரியனும் தன் ஜ்வாலை போதவில்லை என வருந்தும் அளவிற்கான சுடருடன் இருந்தது.
இடையில் இருந்து ஒரு செடியின் நார் எடுத்து நன்றாக கசக்கி அவளின் நாசி ஓட்டை வழியாக நான்கு சொட்டுக்கள் விட்டனர்.
பின்னர் கமண்டலத்தில் இருந்த நீரை எடுத்து அவள் கண்கள் திறந்து மூன்று சொட்டுக்கள் விட்டு, காதிலும் அதே போல விட்டனர்.
இடையில் இருந்த மற்றொரு மண் குடுவையில் இருந்த மூலிசைச் சாற்றை அவளின் வாய்வழியாகப் புகட்டினர்.
அதில் அவள் சற்று இரும்பவும் சற்று அவளின் முதுகில் தடவி விட்டு, தொண்டைக்குழியையும் தடவி விட்டு மீண்டும் மீதமிருந்த சாற்றை அவள் வாயில் ஊற்றிவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் சென்று மேலும் சில இலை கொடி வேர் என பலதும் கலந்து அவளருகில் பரப்பிவிட்டுச் சென்றனர்.
விடிகாலையில் விக்டர் எழுந்து பார்த்தபோது வல்லகியிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு ஜிதேஷை எழுப்பினான்.
பிணம் போல சரிந்துக் கிடந்தவளைக் கண்டு ஜிதேஷூம் பதறினான்.
“என்ன விக்டர் பண்றது…. மூச்சே சுத்தமா இல்ல…. உடம்பும் ஜில்லுன்னு போயிடிச்சி….”
“நான் தான் அப்பவே சொன்னேன்ல சார்….. பூட்ட கேஸ தூக்கின்னு போயி இன்னா பண்ண போறன்னு…. பாரு நிஜமா புட்டுகிச்சி போல…. எங்க ஆருக்கும் இங்க நாடி பாக்க கூட தெரியாது……”, விக்டர் தலையை சொறிந்தபடி மற்றவர்களை எழுப்பினான்.
“இன்னாச்சி ண்ணா….. கிளம்பணுமா?”
“அது கிளம்பிரிச்சி போல செங்கு….. மூச்சே காணோம் அந்த புள்ளையாண்ட….”
“ராவுல பாத்தப்ப கூட மூச்சு நல்லா தான்னா வூட்டுட்டு இருந்துச்சி…. நான் முழிச்சி பாத்தேனே…. “, எனக் கூறியபடி அருகில் சென்று பார்த்தான்.
வல்லகியிடம் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை…. உடலும் நொடிக்கு நொடி ஜில்லிட்டு போய் கொண்டே இருந்தது.
“இப்ப இன்னான்னா பண்றது…. இத்த அப்டியே போட்டுட்டு போனாலும் பிரச்சனை… பேசாம புதைச்சிறலாமா?”, மற்றொருவன் கேட்டான்.
“ஹேய்…..”, ஜிதேஷ் பதறினான்.
“இன்னா சார் கத்துற…. வேற என்ன பண்றது இத்த வச்சிகினு…. நாங்க தூக்கின்னு வந்ததுதான் மிச்சம்… ஒன்னித்திக்கும் ஆவுல இது…. அப்படி இங்கன எதாவது பள்ளம் தோண்டி பொதசைச்சா தான் நமக்கு தலிவலி இர்க்காது… இன்னா விக்டரு நான் சொல்றது?”
“பசங்க சொல்ற மாறி செஞ்சா தான் சேப்டி சார்…. இப்ப பள்ளம் தோண்ட ஆரம்பிச்சா தான் விடியங்காட்டியும் நீ சொன்ன பாதைக்கு பூவ முடியும்”
ஜிதேஷ் அரைகுறையாக கண்களால் வல்லகியின் உடலை மேய்ந்தபடி சரியென்று தலையசைத்தான்.
பள்ளம் தோண்ட இடத்தை தேடிய போது ஏற்கனவே அந்த அஞ்சனக்கல்லிற்கு பத்தடி தள்ளி ஒரு பள்ளத்தில் காய்ந்த இலைகள் வேர்கள் இருப்பதைக் கண்டு அதிலேயே அவளையும் போட்டு மண் கொண்டு மூடிவிட்டு அவர்கள் அங்கிருந்துச் சென்றனர்.
அரூபமாக அவர்கள் இருவரும் புன்னகையுடன் பார்த்தபடி வல்லகியைப் புதைத்த இடத்தில் நின்றிருந்தனர்.