10 – வேரோடும் நிழல்கள்
“எப்படி சொல்ல வைப்பீங்க?” விஷாலி கேட்டாள்.
“தெரியல. ஆனா அவ மனசார என்னை நேசிச்சி கல்யாணம் பண்ணிக்குவா.. அதுக்கு எல்லா வகைலையும் நான் முயற்சி எடுப்பேன்.”
“அவ உங்க முகத்தையே பாக்கமாட்டா அப்படி இருக்கறப்போ எப்படி அவள காதலிக்க வைப்பீங்க?” விஷாலி காட்டத்துடன் கேட்டாள்.
“எம்மா.. ஏன்மா உனக்கு உன் ஃப்ரெண்ட் வாழ்க்கை மேல அக்கறை இல்லயா?” பார்த்திபன் கேட்டான்.
“இருக்கு அதனால் தான் இவ்ளோ பொறுமையா நான் பேசிட்டு இருக்கேன். சொல்லுங்க மிஸ்டர். நீரஜ் எப்படி அவள சம்மதிக்க வைப்பீங்க?” என விஷாலி மெல்ல அவன் அருகே வந்தாள்.
நீரஜ் என்ன சொல்வதென புரியாமல் நண்பனைப் பார்த்தான். அவன் பேசு என கண்கள் காட்டவும் நீரஜ் தரணியைப் பார்த்தான்.
தரணி உள்ளே புகுந்து, “எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. இந்த டிஸ்கஷன் எல்லாம் இங்க தான் நடக்கணுமா? இது என் கிளினிக். அடுத்து அப்பாயின்மெண்ட் இருக்கு.” என அவன் கூறியதும் விஷாலி அவனை முறைத்தாள்.
“இதுவும் உங்க பேசண்ட் பத்தின விசயம். இந்த விஷயத்துக்காக தான் நீங்க அவளுக்கு முக்கியமா ட்ரீட்மெண்ட் பண்ண போறீங்க. சோ அவள பத்தின டிஸ்கஷன் நடக்கறப்போ நீங்களும் தான் இருக்கணும்.” என விஷாலி கூறிய தொனியில் தரணி சிரிப்புடன் தலையாட்டினான்.
“உங்க நம்பர் குடுத்தா இன்னும் நெறைய பேசறது இருக்கு, அதுவும் பேசிக்கலாம் ஷாலி..” என தரணி கூறிய விதத்தில் சக்திசிவன் அவனை வினோதமாகப் பார்த்தான்.
“ம்ம். சசி..” என அவனுக்கு எண்ணைக் கொடுக்கும்படி கண் காட்டியவள் நீரஜ் அருகே வந்து, “எனக்கு நிழலினி வாழ்க்கை இதுக்கு மேல நல்லா இருக்கணும். ரொம்பவே நல்லா இருக்கணும். தனிமைல இனி அவ அழவே கூடாது. அதே போல சண்டை நடக்கறத பாத்து தனக்குள்ள சுருங்கிடக் கூடாது. அவ இயல்ப அவ மீட்டு எடுக்கணும். அவளோட உணர்வுகள அவ உணரனும். இது எல்லாம் சாதாரணமா கண்டிப்பா நடக்காது..”
“நீயே நடக்க விடமாட்ட போலவே..” என பார்த்தி கூறியதும் கிரிஜா அவன் கையில் கிள்ளினாள்.
விஷாலி அவனை முறைத்து வாயிற்குள் முணுமுணுத்துவிட்டு நீரஜை பார்த்து, “உங்களால அவளோட வாழ முடியுமா? சந்தோஷமா வாழணும். நீங்க தியாகம் பண்ணக்கூடாது. உங்க அன்பை அவள உணர வைக்கணும். அதே மாதிரி அவகிட்ட இருந்து வாங்கவும் உங்களுக்கு தெரியணும்.”
“ஏம்மா விஷாலி.. எல்லாத்தயும் இப்பவே கேட்டா அவன் என்ன சொல்வான்? அதான் அவள அவ சம்மதத்தோட கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்ல. அதுக்கு நம்ம எல்லாரும் உதவி பண்ணுவோம். என் மச்சான் நிழலினிய கண்டிப்பா ரொம்ப நல்லா பாத்துப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இவன் மட்டுமில்ல இவனோட குடும்பம் மொத்தமும் அதுக்கு தகுந்த மாதிரி தான் இருக்காங்க. அதனால கல்யாணம் ஆகரவரைக்கும் தான் இப்போ நம்ம தீயா வேலை செய்யணும். அப்பறம் அவனும், அவன் குடும்பமும் வேலை செஞ்சிக்கும். நிழலினியும் சராசரி பொண்ணா, புருஷன் புள்ள குடும்பத்த நேசிக்கற பொண்ணா மாறிடும்.” என பார்த்தி இடைப்புகுந்தான்.
“ஆமா விஷாலினி.. கல்யாணம் செஞ்சி வைக்க தான் நம்ம கொஞ்சம் கஷ்டப்படணும், அதுக்கப்பறம் குடும்பம்னா என்னனு நிழலினி அவங்க வீட்டுக்கு போனாலே புரிஞ்சிக்குவா..” என கிரிஜாவும் கூறினாள்.
“ஆனா இவரு எதுவும் பேசலியே?’ என நீரஜைப் பார்த்தாள்.
“சொல்றத விட செஞ்சி காட்ட நெனைக்கறேன் சிஸ்டர்..” என நீரஜ் புன்னகையுடன் கூறினான்.
“சோ.. இப்ப நிழலினிக்கு எங்க இருந்து ஸ்டார்ட் பண்ணனும்?” என சக்திக் கேட்டான்.
“அவங்க மனசு இறுக்கம் குறையணும் சசி… அதுக்கு அவங்கள வெளிய எங்கயாவது ஒரு மாசம் இல்லைன்னா ரெண்டு மாசம் கூட்டி போகணும். அப்போ தான் அவங்க எப்டி இருக்காங்கன்னு பாத்து மேற்கொண்டு நம்ம எப்டி கொண்டு போகலாம்னு முடிவு பண்ணனும்.” என தரணி கூறினான்.
“ஒண்ணு ரெண்டு மாசமா?” என சக்திசிவன் யோசித்தான்.
“அது கொஞ்சம் கஷ்டம் தான் டாக்டர். அடுத்து ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே வருது. அதுக்கபறம் பெரிய பசங்க போர்ட் எக்ஸாம் வந்துரும். இவ லீவு போடவே முடியாது..” என விஷாலி கூறினாள்.
“ஒரே அடியா ரெண்டு மாசம்ன்னு இல்லாம ஒரு பத்து நாள் வெளிய போயிட்டு வந்துட்டு, கொஞ்ச நாள் கழிச்சி மறுபடியும் போலாம் தானே?” நீரஜ் கேட்டான்.
“பத்து நாள்ல அவங்க மனசு அமைதியாகாது நீரஜ்..”
“டாக்டர் நமக்கு அவங்க இறுக்கம் குறைக்கணும் அதுக்கு அவங்க பாக்காத புது இடங்களுக்கு ட்ரிப் போலாம் தானே.. அப்படி போனா கொஞ்சம் மனசு மாறும் இல்லையா?” எனக் கேட்டான்.
“இதுவும் நல்ல ஐடியா தான். போயிட்டு வந்து அவங்க மனசு எப்படி இருக்குன்னு ஒரு டெஸ்ட் வச்சி பாத்துக்கலாம்..” எனக் கூறியவன் அமைதியாகி மீண்டும் நீரஜைப் பார்த்து, “நீரஜ்.. இது உடைஞ்ச கண்ணாடி. இத எடுக்கறப்போ கண்டிப்பா உங்களுக்கும் காயம் ஏற்படும். அந்த வலியில நீங்க இன்னும் கொஞ்சம் அதை உடைச்சிடக் கூடாது. அதனால எப்பவும் வார்த்தைலையும், செயல்லையும் கவனமா இருங்க..” எனக் கூறினான்.
“நிச்சயமா டாக்டர். உங்க உதவி ரொம்பவே எனக்கு தேவைப்படும். அப்பப்போ உங்கள வந்து பாப்பேன்.” எனக் கூறி நீரஜ் சக்திசிவனிடம் சென்றான்.
“இங்க நிலாவ கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சக்தி. என்னையும் நம்பினதுக்கு நன்றி..”
“அந்த நம்பிக்கைய காப்பாத்தற மாதிரி நடந்துக்கோங்க.. உங்கள பாத்ததும் நினி ஏன் முறைச்சிட்டு போனா?” என விஷாலி கேட்டாள்.
“அவங்க நேத்து பார்க்ல எதையோ வெறிச்சிட்டு ரொம்ப நேரமா உக்காந்திருந்தாங்க.. எனக்கு அத பாத்து கஷ்டமா போச்சி அதான் அவங்ககிட்ட போய் என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டேன்..” எனக் கூறிவிட்டு தரணியைப் பார்த்தான்.
“நல்ல ஷாக் ட்ரீட்மெண்ட் தான் நீரஜ்.. அவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க?”
“அவங்க வாழ்க்கைல கல்யாணம் குடும்பம்ங்கற வார்த்தைக்கே இடமில்லைன்னு சொல்லிட்டு வெளிய போனாங்க. அதுக்கப்பறம் தான் அவங்க கோவில் போய் மண்டபத்துல உக்காந்திருந்ததும், சக்தி கோவில் மூடறப்போ நிலாவ ஹோட்டல் கூட்டிட்டு போனாரு. அங்கிருந்து விஷாலி அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. ரெண்டு பேரும் வீட்டுக்கு போறவரைக்கும் நானும் அவங்க பின்னாடி தான் போயிட்டு இருந்தேன்..”
விஷாலி அவன் கூறியதைக் கேட்டு முறைக்க, சக்திசிவன் முழிக்க, பார்த்தி வியக்க, தரணி சிரித்தான்.
“நல்ல திசைதிருப்புதல் தான் அது. ஆனா அவங்க இன்னிக்கி உங்கள பாத்து முறைச்சா, அந்த பிரம்மைல மூழ்கியிருந்தப்போ கூட உங்கள ஞாபகம் வச்சிருந்து இருக்காங்கன்னு தான் அர்த்தம். முடிஞ்சவரை அவங்கள சாஃப்ட் அஹ் ஹாண்டில் பண்ணுங்க.. வாழ்த்துகள்..” என தரணி கூறிவிட்டு சில விஷயங்களை அனைவருக்கும் பொதுவாக கூறினான்.
விஷாலியின் மீது அதிகமாக அவனது விழிகள் படருவதை அனைவரும் கண்டனர். ஒரு கட்டத்தில் விஷாலியும் கண்டு முறைக்க தரணி சிறிது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அவள் மீது அவனுக்கு உண்டான ஈர்ப்பு மட்டும் கட்டுக்கடங்காமல் வளர்ந்துக் கொண்டே இருந்தது.
அதன்பின் அனைவரும் அங்கிருந்து கிளம்பி கிரிஜாவும், பார்த்தியும் சந்திக்கும் வழக்கமான இடத்திற்கு வந்து அமர்ந்தனர். அந்த அரசமரத்தின் அடியில் முன்பு பிள்ளையார் இருந்தார். பல வருடங்களுக்கு முன் நடந்த பிரச்சினையில் அந்த பிள்ளையாரை ஊருக்குள் ஒரு கோவிலில் கொண்டு வைத்துவிட்டனர். ஆனால் நூறாண்டு கால அரச மரத்தினை சுற்றி அமர திட்டு கட்டி, இன்னும் சில சிமெண்ட் இருக்கைகளை ஆங்காங்கே போட்டு வைத்திருந்தனர். அருகிலேயே ஓர் வாய்க்காலும் ஓடிக் கொண்டிருந்தது. வெயில் சூடு அவர்களை தொடாத அளவிற்கு மரம் நன்கு அடர்ந்து வளர்ந்திருந்தது. ஒரு சிறிய பார்க் போல அரசமரத்தினை சுற்றி அமர வழிவகை செய்து வைத்திருந்தனர். சலசலக்கும் நீரிணை கண்டபடி அங்கே அமர்ந்திருந்தால் நிச்சயம் மனமும், புத்தியும் அமைதியாகும்.
“இப்ப எங்க போலாம்?” என முதலில் பார்த்தி ஆரம்பித்தான்.
“இருங்க இருங்க நீங்க சொல்றமாதிரி எல்லாம் அவள அப்படி வீட்ல இருந்து கெளப்பிட முடியாது. அவ அப்பா அம்மா ஆயிரம் கேள்வி கேப்பாங்க..” விஷாலி கூறினாள்.
“அதுலாம் சமாளிக்க தான் நீங்க இருக்கீங்களே விஷாலி. அவங்க இதுவரை எங்க எல்லாம் போய் இருக்காங்க? அவங்க போகணும்ன்னு ஆசைப்படர இடம், இப்படி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க..” என நீரஜ் கூறினான்.
“அவளுக்கு மலை ஏற ரொம்ப பிடிக்கும். நாங்க காலேஜ் படிச்சப்போ ஒரு டிரெக்கிங் கூட்டிட்டு போனாங்க.. அதுல அவ ரொம்பவே சந்தோஷமா இருந்தா.. ஒரு நாளைக்கு 6-8 கிலோமீட்டர் நடந்து நாங்க முடியாம உக்காந்தபோ கூட அவ கொஞ்சம் கூட சோர்வே படாம எங்களுக்கு நெறைய உதவி பண்ணா.. மலை ஏற கூட்டிட்டு போனா எப்பிடியும் 5-6 நாள் ஆகும்.”
“மலை ஏறணுமா ? எம்மா இந்த வண்டில போற ஊருக்கு எல்லாம் போக கூடாதா?” பார்த்தி அவளிடம் பாய்ந்தான்.
“இப்ப எதுக்கு அவகிட்ட சண்டைக்கு போறீங்க? எனக்குமே மலை ஏற ரொம்ப பிடிக்கும். நமக்கு கல்யாணம் ஆனதும் போகணும்ன்னு சில இடம் எல்லாம் பாத்து வச்சிருக்கேன். இப்போ நம்ம எல்லாரும் போனா நிழலினி பத்தி நமக்கும் புரியும். அவளுக்கும் அண்ணா மேல ஒரு நல்ல அபிப்ராயம் வரும். விஷாலி நான் சில டிரெக்கிங் கம்பெனி எல்லாம் பாத்து வச்சிருக்கேன். அது பாக்கலாமா இல்ல நம்மலே எல்லாத்தயும் ரெடி பண்ணிட்டு போலாமா?” என கிரிஜா பார்த்திபனை அடக்கிவிட்டு விஷாலி அருகே சென்று அமர்ந்து பயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
“டேய் மச்சான்.. நீ லவ் பண்ண நான் ஏண்டா மலை ஏறணும்? இதுலாம் அநியாயம் டா.. எனக்கு மலை ஏற எல்லாம் சுத்தமா இஷ்டம் இல்ல. தயவு செஞ்சி பிளான மாத்த வை..” என நீரஜிடம் சென்று புலம்பினான்.
“எனக்குமே இந்த ஐடியா நல்லா இருக்குன்னு தோணுது டா. இப்போ மத்த டூரிஸ்டு ஸ்பாட் எல்லாம் போனா கூட்டம் நெறைய இருக்கும். நிலா என்னை பாக்க கூட மாட்டா. இதுவே மலை ஏற போனா, ஒரு குரூப் அஹ் தான் போகணும். ஒருத்தர இன்னொருத்தர் கண்டிப்பா கவனிக்கணும். நிலா கண்டிப்பா என்னை கவனிப்பா டா. இத மிஸ் பண்ணக்கூடாது. உடனே ஒரு மலைய புடிக்கறேன். என் காதல் அஹ் உச்சில நிறுத்தறேன்..” என நீரஜும் தனக்கு தெரிந்த நண்பர்களில் மலை ஏறுபவனை அலைபேசியில் தேட தொடங்கினான்.
சக்திசிவனும், பார்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “இவன் காதலுக்கு என்னை மலை ஏத்தி பலி குடுக்க பாக்கறானே..” என வாய்விட்டுப் புலம்பினான்.
“ப்ரதர்.. உங்களுக்கு மலை ஏற புடிக்காதா?” சக்தி கேட்டான்.
“ஒரு தடவ வெள்ளியங்கிரி போய்ட்டு படாதபாடு பட்டேன் ப்ரதர். அதான் பயம்.. உங்களுக்கு?”
“எனக்கும் மலை ஏற பிடிக்காது ப்ரதர். ஆனா இந்த ராட்சசி விடமாட்டா. அப்போவே என்னை மலை ஏத்தி கூட்டிட்டு போய் திரும்பறப்பவே வைரஸ் காய்ச்சல் வந்து சரியாக ஒரு மாசம் ஆச்சி.. இப்போ என்ன ஆகுமோ?” என அவனும் புலம்பினான்.