12 – அர்ஜுன நந்தன்
பரிதி அதிகாலையில் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை முடித்து விட்டு குளித்து தயாராகி வந்தாள். அப்பொழுது டிஐஜி அவளின் பர்ஸனல் எண்ணிற்கு அழைத்தார்.
“குட் மார்னிங் அங்கிள்”, பரிதி.
“குட் மார்னிங் பரிதி. நம்ம பில்டிங்ல ஒருத்தன நேத்து நைட் கட்டிபோட்டுட்டு போனிங்களா?”, டிஐஜி.
“ஆமா அங்கிள். அவன் என்னைய பாலோ பண்ணிட்டு செந்தில் இருக்கற வீட்டுக்கு வந்துட்டான். அதான் அவன அடிச்சி அங்க கட்டினாங்க”, பரிதி.
“செந்தில் இருக்கற இடம் தெரிஞ்சி போச்சா? வேற இடம் பாக்கவா?”, டிஐஜி.
“நேத்தே வேற இடத்துல மாத்திகிட்டாங்க அங்கிள். கொஞ்சம் கவர்மெண்ட் ஆக்சஸ் அப்பப்போ செய்யறதா இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராம உங்க டிபார்ட்மெண்ட்ல பாத்துகோங்க. கொஞ்ச நாளைக்கு உங்க பார்வைக்கு வராம எந்த கேஸ்யும் எப்ஐஆர் போடக்கூடாது”, பரிதி.
“நாம டீல் பண்ற பிரச்சினை பெருசு தான், ஆனா எனக்கு தெரியாம எப்ஐஆர் போடாதன்னு நான் சொன்னாலே தேவையில்லாத பேச்சு வரும். நான் வேணா சம்பந்தப்பட்ட இடத்துல நம்ம ஆளுங்கள போடறதுக்கு ஏற்பாடு பண்றேன் ஆனா எந்த அளவுக்கு அது சக்சஸ் ஆகும்னு தெரியாது”, டிஐஜி.
“சரி பாருங்க அங்கிள். அந்த கோவில்ல அரெஸ்ட் பண்ண பசங்கள வெளிய விட்ருங்க”,பரிதி.
“சரி மா. இன்னொரு ஏஜெண்ட் வந்துட்டதா பரத் சொன்னான். நான் எப்ப பாக்கலாம் பரிதி?”, டிஐஜி.
“அவ நினைக்கறப்ப உங்கள வந்து பார்ப்பா அங்கிள். அவகிட்ட பாத்து பேசுங்க ரொம்ப மோசமானவ மாட்டிக்காதீங்க”, சிரித்துக் கொண்டே கூறினாள் பரிதி.
“ஏன்மா அப்படி சொல்ற? பொறுப்பான வேலைல இருக்கறவங்க தானு. அதுல என்ன மோசம்?”, டிஐஜி.
“அங்கிள் நீங்க போலீஸ் இப்படி யோசிச்சா எப்படி? வெளியே சிங்கம் உள்ளே பச்சபுள்ளையா? “, பரிதி கிண்டலடித்தாள்.
“ஹாஹா… என் பொண்ணு கிட்ட போலீஸா பேசணுமானு பாத்தா நீ அத தான் எதிர்பாக்கற . சரி . வச்சிடறேன். எதாவதுன்னா கூப்பிடு மா”, டிஐஜி.
இவர்கள் உரையாடிக் கொண்டு இருந்த சமயம் யாத்ரா கண்விழித்து செந்திலிடம் டீ கேட்டுச் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
“சீனியர் ஒரு டீ”, யாத்ரா.
” வந்து போட்டு குடி”, செந்தில்.
” ஒரு டீ கூட போட்டு தரமாட்டிங்களா?”, யாத்ரா.
“மாட்டேன்”, செந்தில்.
“போங்க அப்பறம் அக்கா கிட்ட நீங்க இரண்டு வருசத்துக்கு முன்ன செஞ்ச விஷயத்த போட்டு குடுத்துறுவேன்”, யாத்ரா.
“சொல்லிக்கோ”, சிரித்துக் கொண்டே கூறினான் செந்தில்.
“என்ன பயபுள்ள அசராம பதில் சொல்லுது. என்ன நடந்தது வீட்ல அக்கா கிட்ட கேக்கணுமே” மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டு இருந்தாள் யாத்ரா.
“சீனியர் ஒரு டீ போட்டு குடுங்க தலவலி ஆரம்பிக்குது எனக்கு”, யாத்ரா.
பரத் டீ கொண்டு வந்து குடுத்தான். ஒரு புன்சிரிப்புடன் நன்றி உரைத்து வாங்கிக் கொண்டாள் .
பின் குளித்து தயாராகி நேற்று கட்டி வைத்தவனை விசாரிக்கச் சென்றாள் யாத்ரா.
பரத் செந்திலிடம்,” சார் நாமலும் அங்க போகணும்ல?”.
“இவ அவன விசாரிக்கனும்னு போறா, போன் பண்ணுவா அப்ப போலாம். நீ நர்ஸ் ரெடி பண்ணு. நான் சிஸ்டம்ல வேலை முடிச்சிட்டு வரேன்”, செந்தில்.
செந்தில் அதுவரை கிடைத்த தகவல்களை தலைமைக்குத் தெரியப் படுத்திவிட்டு பரிதி கூறியபடி காவ்யா ஜுவல்லர்ஸ் சென்றான். .
அங்கே அப்பொழுது தான் கடையைத் திறந்து நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதனதன் ரேக்குகளில் அடிக்கிக் கொண்டு இருந்தனர். யாரும் அறியாமல் செந்தில் சந்திரகேசவன் அறைக்குச் சென்று பக் வைத்துவிட்டு அந்தப் பிரத்தியேக லாக்கரின் சிஸ்டத்தை கவனித்துவிட்டு வந்தான்.
பின் அந்த கோவிலுக்குச் சென்றான். அங்கே தரிசனம் முடித்து கோவிலை சுற்றி வந்து போட்டோ எடுத்துக் கொண்டு அந்த சுரங்க வழி இருக்கும் இடத்தில் எப்படி இயக்குவது என யோசித்துக் கொண்டு இருந்தான்.
அந்தப் பக்கம் வந்தக் கோவில் தலைமை நிர்வாகி அங்கே யாரையும் நிற்கவிடாமல் செய்துவிட பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனக் கோவிலை நோட்டம் விட்டுக் கொண்டு வந்தான். பார்வைக்கு அந்தக் கோவிலில் வித்தியாசமான நடவடிக்கை எதுவும் இல்லை, ஆனால் ஆள் மாற்றி ஆள் காவல் இருப்பதும் யாரும் அந்தச் சுரங்கம் பக்கம் போகாமல் செய்வதும் நன்றாகச் செந்திலுக்குப் புரிந்தது.
அந்த கோவிலில் இன்னும் ஏதோ மர்மம் இருப்பதாக செந்திலுக்குத் தோன்றியது. சந்தேகமான விஷயங்களை மனதில் குறித்துக் கொண்டான்.
அந்த அடியாள் என்ன ஆனான் போய் பாக்கலாம் மக்களே. அந்த ரவுடி என்ன பாடு படுத்தறாளோ அந்த புள்ளைய.
அந்தக் கட்டிடத்திற்கு வந்த யாத்ரா அங்கு கட்டி வைத்து இருந்தவனைப் பார்த்தாள்.
இன்னும் மயக்கம் தெளியாமல் இருந்தான். முகத்தில் தண்ணீர் அடித்து அவனது கட்டுகளை அவிழ்தாள். பின் அவனுக்கு வாங்கி வந்த டிபனைக் கொடுத்தாள். அவளும் எதுவும் பேசவில்லை அவனும் பேசவில்லை தப்பிக்கவும் முயற்சி செய்யவில்லை. சாப்பிட்டு முடித்தவன் அவள் முன்னே அமர்ந்தான்.
அவளும் கையில் துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தாள். அவள் எதிரே அமர்ந்தவனை ஒரு புருவம் உயர்த்திப் பார்த்து விட்டு அவளும் நேராய் அவனைப் பார்த்தாள்.
“நான் சந்தனபாண்டியன் சொல்லி தான் அந்த கலெக்டர பாலோ பண்ணேன்”, அடியாள்.
“உன்கிட்ட நான் எதுவும் கேக்கலயே”, யாத்ரா.
“பின்ன எதுக்கு கட்டி வச்சு இருக்கீங்க?”, அடியாள்.
“டைம் பாஸ் “, யாத்ரா.
அவனுக்கு கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது.
“உங்களுக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா?”, அடியாள்.
“நானா உன்ன பிடிக்கலையே”, அசால்டாக பதில் கூறினாள் யாத்ரா துப்பாக்கியில் விளையாடிக் கொண்டே.
“அப்ப நான் போலாமா?”
“முடிஞ்சா போ”, யாத்ரா.
அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
“போலயா ?”, திமிராய் புருவம் உயர்த்திக் கேட்டாள் யாத்ரா.
“சரி உனக்கு தெரிஞ்ச விஷயத்த கக்கிட்டு ஓடிடு”, யாத்ரா.
“எனக்கு ஒன்னும் தெரியாது”, அடியாள்.
“நீ தானே சொன்ன சந்தனபாண்டியன் அனுப்பி வந்தேன்னு”, யாத்ரா.
“ஆமா. பாலோ பண்ண சொன்னாங்க. பண்ணேன்”, அடியாள்.
“அப்படியா ராமு நீ ஆள தானே அனுப்புவ…… நீயே ஏன் வந்த? இது உன் போஸ்டிங்க்கு செட் ஆகலயே “, யாத்ரா.
அவன் அதிர்ந்து அவளைப் பார்த்தான். தன் பெயர் அவளுக்கு எப்படித் தெரியும். நான் நிச்சயம் என் பெயரைக் கூறவில்லை. யோசித்தபடி நின்றான்.
“ரொம்ப யோசிக்காத உக்காரு ராமு”, யாத்ரா.
ஏதோ நாம் வசமாக சிக்கிக் கொண்டோம் என நினைத்து அமர்ந்தான் வருவது வரட்டும் என.
“அந்த அசிஸ்டண்ட் எங்க இருக்கான்?”, யாத்ரா.
“யாரும் அப்படி எனக்கு தெரியாது”, ராமு.
“யாருன்னு தெரியாமத் தான் அவனயும் அவன் குடும்பத்தையும் அடச்சி வச்சி இருக்கீங்களா ?”, யாத்ரா.
“அதுல்லாம் தெரியாது. ஐயா சொல்றத செய்வேன் அவ்வளவு தான்”, ராமு.
“ஓஹோ….. கொய்யா சொல்றத மட்டும் தான் செய்வியோ? அப்பறம் ஏன்டா சேரலாதன் பையன்கிட்ட அசிஸ்டண்ட் வேணும்னா பணம் இவ்வளவு வேணும்னு பேரம் பேசிட்டு இருந்த? உன் கொய்யா தான் பேரம் பேச்ச் சொன்னானா?”, யாத்ரா நக்கலாக வினவினாள்.
ராமுவிற்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாது என நினைத்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது என மண்டைய குழம்பிக் கொண்டு இருந்தான்.
“என்ன ராமு எப்படி தெரிஞ்சதுன்னு யோசிக்கறியா? ரொம்ப மண்டைய ஒடச்சிக்காத. அத நானே ஒடைக்கறேன். அதுக்கு முன்ன நான் சொல்றத நீ செய்யனும். செய்வியா?”, யாத்ரா.
“நான் எதுக்கு செய்யனும். மாட்டேன் “, ராமு.
“அப்படியெல்லாம் சொல்லப்பிடாது தம்பி. நீ கண்டிப்பா செய்வ. எனக்குத் தெரியும்”, யாத்ரா.
அவன் கண்களில் கலவரம் தெரிந்தது.
“உன் வயசுக்கு உன்ன நான் தம்பின்னு கூப்பிடக் கூடாதுல. பரவால்ல விடு . உன் பொண்ணு இப்ப எங்க இருக்கு ?”, யாத்ரா.
“எனக்கு பொண்ணே இல்ல “, ராமு.
“அப்படியா. அப்ப இது உன் பொண்ணு இல்லியா? “, போனில் ஒரு குழந்தையின் புகைப்படம் காட்டினாள். கைகளும் வாயும் கட்டப்பட்டு மயக்கமாக கிடந்தது ஒரு பெண் குழந்தை.
“சாக்க்ஷி. ஏய் அவள விட்ரு .உன்ன கொன்னுடுவேன். அவள எதுவும் பண்ணிடாத”,ராமு ஆவேசமாய் கத்தினான்.
“ஸ்ஸ்….. கத்தாத. நான் சொல்றத நீ செஞ்சா நான் உன் பொண்ண ஒன்னும் பண்ண மாட்டேன். என்ன செய்வியா?”, யாத்ரா.
அவன் பல குழப்பங்களுடன் அமர்ந்து இருந்தான். அவன் குழந்தை மதுரை மருத்துவமனையில் இருந்தது. அங்கிருந்து எப்படி இவளிடம் வந்தது? யார் இவள்? அது அவன் குழந்தை என யாரும் அறியாத போது இவள் எப்படி அறிந்தாள்?
“யார் நீங்க? ஏன் என் பொண்ண கடத்திவச்சி இருக்கீங்க? அந்த கலெக்டருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? “, ராமு.
“அது உனக்கு தேவை இல்லாத விஷயம். நான் சொல்றத மட்டும் நீ செஞ்சா போதும். இல்லன்னா உன் செட்டப்பும் என்கிட்டத் தான் இருக்கும்”, யாத்ரா.
“நீங்க போலீசா இருக்க முடியாது. அந்த வீட்டுக்குள்ள அப்பதான் குதிச்சேன் உடனே என்னைய அடிச்சி இங்க வந்து போட்டுட்டு போய்டீங்க. உங்களுக்கு எப்படி என்னை தெரியும்? “,ராமு.
“நான் சொல்றத செய்டா தம்பி. என்கிட்ட கேள்வி கேக்காத. முடியுமா முடியாதா?”, யாத்ரா.
“நீங்க யாருன்னு சொல்லுங்க”, ராமு.
இவன் வேலைக்கு ஆகமாட்டான். அவள் யாருக்கோ போன் செய்தாள்,”டேய் அந்த டிக்கெட்ட தூக்குங்க டா. லைவ் ல காமிங்க”.
வீடியோ கால் வர அதை ஆன் செய்து அவனிடம் காட்டினாள். அவனது காதலி கடத்தப்பட்டுத் தூக்கிச் செல்வதை.
அவன் பதறிப்போய், “வேணாம் அவள விட்ருங்க மேடம். நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்”.
“ஏண்டா பொண்ண பாத்து பதறல இவள கடத்திட்டு போறதுக்கு பதறுற. உன் குழந்தை பாசம் அவ்வளவு தானா?”, யாத்ரா முகத்தில் வெப்பம் ஏறக் கேட்டாள்.
“அவ என் பொண்டாட்டி. அந்த குழந்தை அவளோடது. இப்ப தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம். இந்த தொழில விட்டுட்டு வர சொன்னா. இந்த்த் தொழில விட்டா உயிரும் சேந்து விடனும். அதான் நிறைய பணம் இருந்தா தூரமா போலாம்னு சேரலாதன் பையன்கிட்ட பேரம் பேசினேன். இது ஐயாவுக்கு தெரியாது”, ராமு.
“சரிதான். கள்ள காதலா?”
“இல்ல. நானும் அவளும் காதலிச்சோம் அவ வீட்ல வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டாங்க. அதுக்கப்பறம் அவள நான் பாக்கல இப்ப 6 மாசத்துக்கு முன்ன தான் அவ கட்டிட கூலி வேலை செய்யறத பாத்தேன். அவ புருஷன் செத்துட்டானாம். அந்த குழந்தைக்கும் ஏதோ வியாதி இருக்கு சரி பண்ண நிறைய பணம் வேணும்னு சொன்னாங்க. அவ அம்மா கிட்ட குழந்தைய விட்டு ஆஸ்பத்திரியில் டெஸ்ட் பண்ண சொல்லி விட்டுட்டு வந்தா. அது எப்படி உங்ககிட்ட சிக்கிச்சி தெரியல. மொத்தமா இந்த தொழில தல முழுகிவிட்டு போக தான் அப்படி செஞ்சேன்”, ராமு.
“பார்ரா…. இந்த பிலாஸ்பேக் நல்லா இருக்கே. திருந்தறவன் கடைசியா லம்பா அடிச்சிட்டு திருந்தப் போற. சரி உன் வாழ்க்கை உன் இஷ்டம். இப்ப நான் சொல்றத செய்”, யாத்ரா.
“என்ன பண்ணணும் மேடம்?”, ராமு.
“அந்த சேரலாதன் கிட்ட என்னைய வேலைக்கு சேத்து விடு. அதுவும் அவன் கூடவே இருக்கற மாதிரி”, யாத்ரா.
“இது என்னால எப்படி முடியும்? கஷ்டம் மேடம்”, ராமு.
“கஷ்டமான வேலைய இஷ்டப்பட்டு செஞ்சா கஷ்டம் தெரியாது ராமு. நீ நாளைக்கு எனக்கு வேலை வாங்கி தர”, யாத்ரா.
ராமு திருதிருவென விழித்தபடி அமர்ந்து இருந்தான்.