12 – மீள்நுழை நெஞ்சே
“தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா கனியின் வீட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள்.
“நிஜம் தான் டி.. உன்ன இப்பவே தூக்கிட்டு போயிடறேன் ?”, எனக் கூறியபடி அவளின் அத்தை மகன் அருகில் வந்து நின்றான்.
“இன்னும் நீ வெளிய தான் சுத்திக்கிட்டு இருக்கியா மனோஜ்.. இந்நேரம் நீ பண்ற திருட்டு தனத்துக்கு ஜெயில்ல இருப்பன்னு தானே நெனைச்சேன்.. அந்த கூட்டுகடைல என்னென்ன திருடின?”, என அவளும் அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடிக் கேள்விக் கேட்டாள்.
“யார் சொன்னா ? தேவ இல்லாத விசயத்த எல்லாம் நீ ஏன் நம்பற துவா? உன்மேல நான் எவ்ளோ ஆசை வச்சிருக்கேன் தெரியுமா ? இப்ப நீ சரின்னு சொல்லு உடனே கல்யாணம் பண்ணிக்கறேன் “, என வழிந்தபடி அவளை உரச அருகில் வந்தான்.
“அந்த பக்கம் தள்ளி நில்லு .. நான் கால் தவறி உன்னை மிதிச்சிட போறேன்.. அப்பறம் அந்த பொண்ணு .. அவ பேரு என்ன ?”, என யோசித்தபடி, “மைனா.. மைனா தானே? அந்த பொண்ணு வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பன்னு சொல்ல நீ இருக்கணும் பாரு..”, எனக் கூறி முடித்து அவனை முறைத்தாள்.
“அது.. அதுலாம் .. பொய் துவா.. அதுலாம் நீ நம்பாத.. நான் உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்..”, எனக் கூறியபடி அவன் கண்கள் அவள் உடலில் வரைமுறை இன்றி ஊர்ந்தது, “நல்லா தான் வளந்து இருக்க துவா.. வெளியூறு தண்ணி உன்ன இன்னும் பாலிஷ் பண்ணிடிச்சி.. சும்மா சுண்டி இழுக்குது..”, என அவள் தோள் தொட அருகில் வந்தான்.
“உள்ளுரு தண்ணிய விட உனக்கு காய்ச்சின தண்ணி அதிகம் மெத்தன போக்கு குடுக்குது போல மனோஜ்.. ஆனா பாரு என் வேலை தான் சாஃப்ட்வேர்.. நான் இன்னும் அதே துவாரகா தான். கம்பு எடுத்தா உன் மண்டைய உடைக்காம வைக்க முடியாது.. இன்னொரு தடவ கிட்ட உரசுர மாறி வந்து நின்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன்”
“ஹாஹாஹா .. என் மாமன் மகள நான் உரசாம யாரு உரசுவா ? அப்பறம் வீட்டுக்கு வரேன்.. ஏதோ வெளிநாடு போறியாம்.. எப்டி போறன்னு பாக்கறேன் டி “, எனக் கூறிவிட்டு மீண்டும் அவளை இடிக்க அருகில் வந்தான்.
அவன் பார்வை அவளைக் கோபவெறி கொள்ளச் செய்ய அவன் வண்டியில் ஏறும் போது ஸ்டாண்ட்-ஐ உதைத்து விட அவன் வண்டியோடு கீழே விழுந்தான்.
அவனைத் திரும்பி கூட பார்க்காமல் அவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
“ஹே.. துவா..”, எனப் பின்னே அவன் கத்துவது காதில் விழாதது போல அவள் முன்னே செல்வது, அவனை இன்னும் வன்மம் கொள்ளச் செய்தது.
“என்ன முகம் எல்லாம் கடுகடுன்னு இருக்கு.. யாரு என்ன செஞ்சாங்க இந்த செல்லத்த?”, எனக் கனிமொழி அவளின் முகம் பார்த்துக் கேட்டாள்.
“அந்த மனோஜ் எருமை தான்.. அந்த கண்ண புடுங்கி எப்ப எறியபோறேன் தெரியல.. ஆளும் பார்வையும்..”, என எரிச்சலுடன் கூறினாள்.
“நீ என்ன செஞ்ச?”, என கேள்வியில் நின்றாள் கனிமொழி.
“நான் என்ன பண்ணிட்டேன் .. வண்டி ஸ்டாண்ட் தள்ளி விட்டுட்டு வந்துட்டேன்”, எனக் கூறிவிட்டு கனியின் அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டாள்.
“அப்போ நீ இங்க இருக்க பத்து நாளும் பஞ்சாயத்து இருக்குன்னு சொல்லு..”, எனக் கூறியபடிக் காயவைத்த துணிகளை மடித்து பீரோவில் வைத்துக் கொண்டிருந்தாள்.
“அதுலாம் நம்ம பொது வாழ்க்கைல சகஜம் கனி பேபி.. நீ சொல்லு இப்ப என்ன பாட்டு போடலாம் ? நல்லா டான்ஸ் ஆடி ரொம்ப நாள் ஆச்சி.. இப்ப நாம ராத்திரி வரைக்கும் நல்லா ஆடணும் அப்போ தான் எங்கம்மா போட்ட சோறு செரிக்கும் கனி”, என வயிற்றைத் தடவியபடிக் கூறினாள்.
“வயிறு முட்ட தின்னுட்டு, சண்டையும் இழுத்து விட்டுட்டு இப்ப வந்து குத்தாட்டம் போடணும்ங்கற .. உங்கப்பத்தா கொஞ்ச நேரத்துல ஊர கூட்ட போகுது ..”
“அது எப்பவும் பண்றது தானே .. விடு.. நம்ம இந்த பத்து நாள் வேற லெவல்ல என்ஜாய் பண்ணனும்.. வா டி கனி பேபி”, எனப் பேசிப் பேசி கனியுடன் அன்றைய பொழுதை இனிமையாகக் கடக்க அத்தனையும் செய்தாள்.
“வரேன் வரேன்.. எங்கம்மா உனக்காக உளுந்து ஊற வச்சிட்டு போய் இருக்கு.. அத ஆட்டி வைக்கணும்.. ரெண்டு பாட்டு தான்”, எனப் பேசிக்கொண்டு அவளும் ஆட ஆரம்பித்தாள்.
இரண்டு பாட்டு இருபது ஆனது.. நேரமும் பறந்தது.. இருவரும் நாக்க மூக்க பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர்.
“என்ன இவ்ளோ சத்தமா பாட்டு கேட்டுகிட்டு இருக்கா?”, எனப் பேசியபடி மரகதம் உள்ளே வந்தார்.
அவரின் பின்னோடு மாதவியும் துவாரகாவிற்காக வந்தார். துவாரகாவும், கனிமொழியும் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருப்பது பார்த்து இருவரும் அப்படியே அறை வாயிலில் நின்றனர்.
மாதவி அவர்கள் ஆடுவதை பார்த்து சிரித்தபடி போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். மரகதம் உள்ளே செல்ல முயலும் போது, அவரைத் தடுத்து இன்னும் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கக் கூறினார்.
நாக்க மூக்க முடிந்து வசீகரா ஆரம்பித்தது. இத்தனை நேரம் வேகமாக ஆடியதற்கு மாறாக இருவரும் மெதுவாக அந்த ராகத்திற்கு ஏற்ப ஒருவரை ஒருவர் பார்த்து ஆட ஆரம்பித்தனர்.
பருவ வயதின் குறும்பும், இருவரின் நளினமான நடனமும் பெரியவர்களைச் சிரிப்புடன் இரசிக்க வைத்தது.
“உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் ..”, என்ற வரி வரும் போது, துவாரகா கனிமொழியை ஒரு போர்வைக்குள் சுற்றி தன்னருகில் இழுத்துக் கொண்டாள்.
அதன் பின் இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுவது பார்த்து மரகதமும், மாதவியும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கனிமொழி முதலில் பார்த்துவிட்டு அந்த போர்வை விட்டு வெளியே வந்து அசடு வழிந்தபடி நின்றாள். துவாரகா இன்னும் அந்த இசை வெள்ளத்தில் நீந்திக்கொண்டே கனிமொழியை பின்னிருந்து பிடிக்க முயன்று மரகதத்தை இழுத்து போர்வைக்குள் சுற்றிக் கொண்டு கட்டிப்பிடித்தபடிக் கடைசி வரிகளுக்கு உணர்வுப் பூர்வமாக ஆட, மரகதம் அவளை நிறுத்திப் பிடித்து முறைத்துக் கொண்டிருந்தார்.
அப்போதும் அவள் அவர் கைகளைப் பிடித்தபடிக் கண்மூடி ஆடிக்கொண்டே சுற்றி வர முயல மாதவி அந்தப் பாட்டை நிறுத்தினார்.
“சோ .. நல்லா பீல் பண்ணி ஆடும் போது தான் கரண்ட் போகும்..”, என இசை நின்ற எரிச்சலில் கூறியபடிக் கண் திறக்க, மரகதம் அவளை முறைத்தபடி நின்றிருந்தார்.
“அத்த.. நீங்க எப்ப இந்த போர்வைக்குள்ள வந்தீங்க ? கனி எங்க?”, எனச் சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கேட்டாள்.
“அவங்களா வரல நீ தான் கைய பிடிச்சி இழுத்து நிக்க வச்ச டி என் அருமை மகளே ..”, எனக் கூறியபடி மாதவி அருகே வந்தார்.
“சித்தி..”, எனச் சிரித்தபடி அவரின் அருகில் சென்று அவருடன் ஆட முயன்றாள்.
“இங்க நீ ஆடு.. அங்க உன் அப்பத்தா கால்ல சலங்கை இல்லாம வாய்ல ஆடிட்டு இருக்காங்க.. என்ன டி பண்ண அவன?”, என அவளைப் பிடித்து அமரவைத்துக் கேட்டார்.
“நான் என்ன பண்னேன் ? ஒண்ணும் பண்ணல “, எனக் கூறிவிட்டு லேப்டாப் எடுத்து, அடுத்து என்ன பாட்டு போடலாம் எனப் பார்க்க ஆரம்பித்தாள்.
“என்ன நடந்துச்சின்னு சொல்லு.. அவன்மேல பைக் விழுந்து அடிபட்டு இருக்கறத பாத்துட்டு தான் வரேன் ..”, எனக் கூறிவிட்டு அவள் முகம் பார்த்தார்.
“அவன் பார்த்த பார்வைக்கும், பேசுன பேச்சுக்கும் இன்னும் உயிரோட இருக்கான்னு நெனைச்சிகோங்க சித்தி .. பொறுக்கித்தனத்துல போட்டி வச்சா அவன் மொதல் பத்துக்குள்ள வருவான்.. ஊருக்கு நான் கெளம்பறவரைக்கும் அவன என் கண்ணு முன்னால வரவேணாம்-ன்னு சொல்லுங்க.. அப்பறம் போட்டு தள்ளிட்டு போயிடுவேன்”
“அந்த பய பண்றது எல்லாமே அப்டி தான் இருக்கு மாதவி.. பாவம் அந்த மைனா புள்ள.. இவன நம்பி வயித்துல புள்ளைய வாங்கிட்டு நிக்குது.. அதுக்கு ஒரு வழி பண்ணக்கூடாதா ? தம்பிக்கிட்ட சொல்லு.. “, என மரகதமும் மாதவியிடம் முறையிட்டார்.
“எங்க அத்தாச்சி.. எத்தன தான் சொன்னாலும் அந்த பய திருந்தற மாதிரி தெரியல.. அவங்க அம்மாவே கண்டுக்காம சுத்தறாங்க.. நாம என்ன சொல்றது? பெரிய மாமாவும் எவ்வளவோ சொல்லிட்டாரு .. அந்த கடை பிரச்சனைல இனிமே இந்த வீட்டு வாசபடி மிதிக்காத .. நீயே பாத்துக்கன்னு சொன்னதுல இருந்து வீட்ல இருக்க பெரியவங்க வாய் மூடாம எல்லாத்துக்கும் சண்டைக்கு வந்துகிட்டு இருக்காங்க.. இதோ இப்ப இவளும் வெளிநாடு போக நாங்க சரின்னு சொல்லிட்டோம்ன்னு இன்னும் அதிகமா இருக்கு பேச்சு.. இவள அவ்ளோ பேசுறாங்க.. வாழ வேண்டிய புள்ளைன்னு நெனைக்கறதே இல்ல.. அக்கா தான் அவங்க இவள திட்டறத நெனைச்சி வெசனம் பட்டுட்டே இருக்காங்க..”, எனப் பெருமூச்சு விட்டபடிக் கூறிவிட்டு அமர்ந்தார்.
“எதுக்கு தான் எங்கத்தைக்கு இவ்ளோ பொறாமையோ தெரியல.. எல்லாமே அவங்க ரத்தம் தானே.. ஒரு நேரம் போல ஒரு சொல்லு பலிச்சிட்டா என்ன பண்றது? நல்லதா இருந்தா பரவால .. அவங்க திட்டறத பாத்தா எனக்கே அவளோ கோவம் வருது.. பவானி அத்தாச்சி எல்லாம் எப்படி தான் இவங்கள பொறுத்து இத்தன வருஷம் ஒண்ணா இருக்காங்களோ ?”, என மரகதம் உளுந்தை உரலில் போட்டுவிட்டு எண்ணைக் காய வைக்க வாணலி எடுத்தார்.
“என்ன சொல்றது அத்தாச்சி? சின்னதுல இருந்தே இவள அவங்களுக்கு பிடிக்கல.. அந்த பயலுக்கு கட்டி வைக்க முயற்சி பண்ணாங்க, பெரிய மாமா அந்த பேச்சே எடுக்க கூடாதுன்னு சொன்ன அப்றம் தான் இவமேல இவ்ளோ வெறுப்ப கொட்டறாங்க .. ஏதோ புள்ள திட மனசா இருக்கவும் அவங்க பேச்ச பெருசா எடுத்துக்காம போறா.. “, உரலில் உளுந்தைத் தள்ளியபடிப் பேசிகொண்டு இருந்தார்.
“இருந்தாலும் சின்ன புள்ளை தான் மாதவி.. புள்ள மனசுல வார்த்தை தங்கிட்டா அப்பறம் என்ன பண்றது? முடிஞ்சவரை அவங்கள விட்டு தூரமா இருக்கறது தான் நல்லது”, மரகதம் தன் மனதில் பட்டத்தைக் கூறினார்.
“அதான் அக்காவும் மாமாவும் வெளிய அனுப்பிட்டாங்க.. “
“சரி அந்த மைனா புள்ள பஞ்சாயத்து எப்ப ?”
“ரெண்டு நாளைல வருது அத்தாச்சி.. “
“என்ன சொல்ல போறாங்க அண்ணனும் தம்பியும்?”
“பாவம் சேர்க்காம இருக்க தான் சொல்லுவாங்க.. ஊரு பெரியமனுஷங்கள பாக்க தான் போய் இருக்காங்க.. அதுக்குள்ள எங்க நாத்தனார் மூக்க சிந்த வீட்டுக்கு வந்துட்டாங்க.. அதான் நான் அங்க பேசி அனுப்பிட்டு இங்க வந்தேன்.. முடிஞ்சா ராத்திரி இங்கனயே இருக்கட்டும்.. அந்த பஞ்சாயத்து முடிஞ்சி வீட்டுக்கு வந்தா போதும்ன்னு அக்கா உங்ககிட்ட சொல்லிட்டு வர சொன்னாங்க..”
“அதுக்கு என்ன மாதவி.. இது அவ வீடு.. எத்தன நாள் வேணா இருக்கட்டும் .. பொட்ட புள்ளைங்க சாபம் என்னிக்கும் வாங்கிட கூடாது.. நானே அந்த பய மைனா புள்ள கூட சுத்தறத பாத்து இருக்கேன்.. சாட்சிக்கு நானும் கூட வரேன்.. ஆத்தா அப்பன் இல்லாத புள்ள.. தாலி கட்டி ஒழுங்கா குடும்பம் நடத்த வச்சிடுங்க..”, எனக் கூறினார்.
“எது சரியோ அது நடக்கட்டும் அத்தாச்சி.. துணிய அப்பறம் குடுத்து விடறேன்.. அவகிட்ட நீங்களே இங்க இருக்க சொல்லறமாதிரி சொல்லிடுங்க.. இல்லைன்னா இவளும் ஒரு பக்கம் குதிப்பா.. வரேன் அத்தாச்சி”, என எழுந்தார்.
“இரு மாதவி.. வடை போட்டுட்டேன் .. வீட்ல எங்கண்ண தம்பிக்கும் கொண்டு போவியாம்..”, என ஒரு பாத்திரம் நிறையப் போட்டு அவரிடம் கொடுத்தார்.
“எங்களுக்கு எல்லாம் குடுக்க மாட்டீங்க உங்கண்ண தம்பிங்களுக்கு மட்டும் தானா ?”, என மாதவி சிரிப்புடன் வம்பிழுத்தார்.
“உங்களுக்கு இல்லாமலா ஆத்தா.. எங்கத்தைய சமாளிக்கற உங்களுக்கு நான் கறி கொழம்பு ஆக்கி போடறேன்.. வெறும் வடை அதுக்கு போதாதுல்ல”, என அவரும் சிரிப்புடன் அவரை அனுப்பி வைத்தார்.
இது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கனியும், துவாரகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுச் சிரித்தனர்.