13 – மீள்நுழை நெஞ்சே
கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள்.
“நீ என்ன யோசிக்கற ?”, கனி அவளிடம் திருப்பிக் கேட்டாள்.
“நான் ஒண்ணுமே யோசிக்கல கனி.. இந்த இடம்.. இந்த வாசனை.. இந்த சூழல் .. இத மனசுக்குள்ள சேமிக்க முயற்சி பண்றேன்..”, என வீசும் காற்றில் அலைபாயும் கூந்தல் கற்றைகளை ஒதுக்கியபடிக் கூறினாள்.
“அந்த மைனா பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்”, எனக் கனி கூறிவிட்டு அவளைப் பார்த்தாள்.
“அதப்பத்தி யோசிக்க என்ன இருக்கு? அவன பத்தி நல்லா தெரிஞ்சும் போய் ஏமாந்து இருக்கா.. “, எனக் கோபத்துடன் பேசினாள் துவாரகா.
“அவன் எவ்ளோ நடிப்பான்-ன்னு நமக்கு நல்லாவே தெரியும் துவா.. அவளும் அவன்கிட்ட அப்படி தான் ஏமாந்து இருக்கா.. ஒரு தடவ அவன்கிட்ட ஏமாந்து போனதால வாழ்க்கை முழுக்க அவனுக்கு கீழ அடிமையா வாழணுமா அவ?”, எனக் கனி கேட்டாள்.
“இல்ல தான் கனி.. நம்ம பேசறது இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு புரியாது.. புரிஞ்சிக்கவும் மாட்டாங்க.. தவிர .. மைனா இத எப்டி எடுத்துப்பா ? அதுவும் நாம பாக்கணும்”, என இந்த விஷயத்தில் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் காட்டினாள்.
“நேர்ல பேசி பாக்கலாம்.. அவன மாதிரி ஒருத்தனுக்கு எந்த பொண்ணும் கழுத்த நீட்டி காலம் முழுக்க கஷ்டப்படக்கூடாது..”
“உண்மை தான்.. ராத்திரி தூங்கறது இங்க தான்னு முடிவு ஆகிரிச்சி.. பேசிக்கலாம்.. “, எனக் கூறிவிட்டு இருவரும் மேலே இருந்த செடிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
மரகதம் இருவருக்கும் மேலேயே சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார்.
“எதுக்கு அத்த இவ்ளோ தூக்கிட்டு மேல வரீங்க? ஒரு சத்தம் குடுத்தா கீழ வந்து இருப்போம்ல“, எனச் செல்லமாகக் கடிந்துக் கொண்டாள்.
“இருக்கட்டும் டி.. நீ வேற வெளிநாடு போற.. போனா எம்புட்டு நாள் ஆகுமோ தெர்ல நீ திரும்ப வரதுக்கு .. ரெண்டு நாள் இங்க இருவேன்.. “, என அவள் தாடையைப் பிடித்துக் கொஞ்சியபடிக் கேட்டார்.
“சித்தி சொல்லிட்டு போனாங்களா அத்த ?”, என அவரை பின்னிருந்துக் கட்டியபடிக் கேட்டாள்.
“ஏன் டி .. நான் உன்ன இங்க தங்க சொன்னதே இல்லையா? உன் சித்தி சொன்னா தான் விடறேனா ?”, எனக் கோபித்தார்.
“சரி சரி.. அதுக்குள்ள இந்த மூக்குக்கு மேல கோவம் வருது .. நாலு நாள் இங்கயே இருக்கேன்.. பொருள் எல்லாம் குடுத்து விட சொல்லிடறேன்.. இப்ப சாப்பிடலாமா? வாசனை ஆள தூக்குது..“, எனக் கூடையில் இருந்தப் பாத்திரங்களை எடுத்து முகர்ந்தபடிப் பிரித்து வைத்தாள்.
“இந்தா.. இனிப்பு வடை.. நெய் ஊத்தி பெசஞ்சி கொண்டு வந்துட்டேன்”, எனச் சின்னப் பாத்திரத்தை எடுத்து இருவருக்கும் ஊட்டிவிட்டார்.
“யம்மா .. நானும் வெளிநாடு போறேன்னு சொன்னா தான் ஊட்டி விடுவ போல.. ஆனாலும் இதுலாம் அதிகம் பாத்துக்க”, என கனியும் அவரிடம் உணவை வாங்கியபடிப் பேசினாள்.
“ரொம்ப பேசாத.. இந்தா சாப்பிடுங்க .. நான் தோசை ஊத்தி கொண்டு வரேன்”, என எழுந்து கீழே சென்றார்.
“பாத்தியா துவா.. எங்கம்மா எப்டி எல்லாம் சமாளிக்குது.. சரி உன் புண்ணியத்துல நானும் நல்லா சாப்டுக்கறேன் இப்ப”
“இல்லைன்னா மட்டும்.. தினம் காலைல உங்கம்மா தானே டி உனக்கு ஊட்டி விடறாங்க.. ஒரு நாள் எனக்கு ஊட்டினதுக்கு இவ்ளோ வயிதெரிச்சலா உனக்கு?”
“சரி சரி.. அத ஏன் இப்ப இழுக்கற.. இந்தா நானும் உனக்கு ஊட்டி விடறேன்.. “, என அவளும் கோழி ஈரல் எடுத்து ஊட்டிவிட்டாள்.
“வரலாற கெளறினா தான் காரியம் நடக்குது .. இரு வச்சிக்கறேன் உன்ன “, எனக் கூறியபடி அவளும் கனிக்கு ஊட்டிவிட்டாள்.
மரகதம் மூவருக்கும் தோசைச் சுட்டுக்கொண்டு மேலே வந்தார்.
“என்ன டி பேசிக்கிட்டே இருக்கீங்க? இன்னும் அப்படியே இருக்கு கறியெல்லாம்.. பேசாம சாப்பிடுங்க டி”, எனத் தோசையை இருவருக்கும் தட்டில் வைத்தார்.
“உங்களுக்கு கொஞ்சமா வச்சி இருக்கோம் அத்த.. எங்க பங்கு நாங்க சாப்டுட்டோம் .. இதுவே ரொம்ப ஜாஸ்தி”, எனப் பெருமூச்சு விட்டாள்.
“வயசு பிள்ளைங்க இப்ப நல்லா சாப்பிட்டா தான் உடம்புல தெம்பு இருக்கும்.. நல்லா நெறைய சாப்பிடுங்க டி.. அப்பறம் புள்ள பெக்க கூட தெம்பு இல்லாம மருந்து மாத்திர திங்கற மாதிரி ஆகிடும்.. “, என அதட்டி ஆளுக்கு மூன்று தோசை சாப்பிட வைத்த பிறகே விட்டார்.
“எங்களுக்கு தெம்பு இல்லைன்னா எங்க புருஷங்கள பெத்துக்க சொல்லிடுவோம் .. ஒரு ஹிந்தி படம் அன்னிக்கி சொன்னேன்ல.. அப்புடி..”, எனக் கண்ணடித்துச் சிரித்தனர் இருவரும்.
“அதுலாம் நடப்புக்கு ஆகுமா டி? புள்ளைய சுமக்கறது எவ்ளோ சுகம்ன்னு சுமந்து பாருங்க டி.. அப்ப தெரியும் .. இந்த உடம்ப அதுக்காகவே சாமி உருவாக்கி இருக்கான். அத தாங்கற வலிமையும் குடுத்து இருக்கான்.. வெட்டி பேச்சு பேசாம நல்லா சாப்பிட்டு உடம்ப நல்லபடியா வச்சிக்கோங்க டி.. ஆம்பளைங்கள விட பொம்பளைங்களுக்கு தான் தெரம் அதிகமா வேணும்..”, எனக் கூறியபடி அவரும் சாப்பிட்டு எழுந்தார்.
அவரை மெல்ல கீழே வருமாறு கூறிவிட்டு, கூடையில் பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டு இருவரும் படிகளில் இறங்கினர்.
சிட்டுக்குருவி போல சுற்றித் திரியும் இருவரையும் கண்டு மரகதம் மனம் நிறைந்து இதழில் மென்னகைச் சூடிக்கொண்டபடி, மாடியை ஒருமுறை சுற்றிப் பார்த்து, செடி வைத்திருக்கும் தொட்டிகளைச் சரிப்பார்த்து விட்டு கீழே சென்றார்.
“நான் தான் வைப்பேன்..”
“இல்ல நான் தான் வைப்பேன்..”
“நான் தான்”
“இல்ல நான் தான்”, என இருவரும் எதற்கோ சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.
“என்ன டி சண்டை அதுக்குள்ள? இப்ப தானே கீழ வந்தீங்க?”, என அதட்டியபடி மரகதம் சமையலறை உள்ளே வந்தார்.
“அத்த.. நான் தான் சீம்பால் கலக்குவேன் .. இவ விடமாட்டேங்கறா..“, எனத் துவாரகா சிறு குழந்தைப் போல புகார் கூறினாள்.
“அம்மா அவ போன தடவ வைக்கறேன்னு பாத்திரம் தீஞ்சி போச்சி .. இந்த முறை நான் தான் வைப்பேன்.. “, எனக் கனியும் அவள் பங்கு வாதத்தைக் கூறினாள்.
“ரெண்டு பேரும் வெளிய போங்க.. இது சாமிக்கு நாளைக்கு கொண்டு போகணும். நானே செஞ்சிக்கறேன்.. நீங்க வயல் வரைக்கும் போய் மோட்டார் ரூம் பூட்டி இருக்கான்னு பாத்துட்டு சாவி வாங்கிட்டு வாங்க. அந்த அமாவாச பய பூட்டிட்டு சாவி கொண்டு வந்து தரேன்னு சொன்னான் இன்னும் காணோம்“, என இருவரையும் அங்கிருந்துத் துரத்திவிட்டார்.
தோழிகள் இருவரும் முகத்தை வெட்டித் திருப்பிக்கொண்டு அறைக்குள் சென்று டார்ச், சிறிய மடக்கு கத்தி சகிதம் வெளியே வந்தனர்.
எந்த இடமாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் மட்டுமே இருக்கிறது என்று இருவருக்கும் அவர்களின் தாய்மார்கள் சிறுவயதில் இருந்தே நன்றாக போதித்து, தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொள்ள வைத்திருந்தனர்.
“அங்க இங்கன்னு சுத்தாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க டி..”, என உள்ளிருந்து மரகதம் கூறியது இவர்களின் காதுகளை எட்டவில்லை.
இருவரும் பேசியபடி வயற்காடு இருக்கும் திக்கில் நடக்க ஆரம்பித்தனர்.
“என்ன ராணிகளா எங்க இந்நேரம் ஊர்வலம் போறீங்க?”, என ஒரு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கிழவி கேட்டது.
“காவக்காக்க தான் கெழவி.. நீ நிம்மதியா தூங்கு. உன் தண்டட்டிய யாரும் களவாடிட்டு போகாம நாங்க பாத்துக்கறோம்..“, என இருவரும் கேலியாகப் பதில் கூறினர்.
“ஊரு இருக்கற இருப்புக்கு நீங்க தான் போய் நிக்கணும் .. சீக்கிரம் வீடு போய் சேருங்க டி.. காலி பயலுக நடமாட்டம் அதிகமா இருக்கு .. வெறுங்கையோட போவாதீங்க ..”, எனக் கூறினார்.
“அவளுங்கள காவலுக்கு விட்டா ஊரே அலறிடும் ஆத்தா.. நீ உள்ள வா.. நேரமாச்சி அடுபடிய சுத்தம் பண்ணனும் .. “, என அவரின் மகள் உள்ளே அழைத்துச் சென்றார்.
“ஏன் கனி அந்த அளவுக்கா ஊரு மாறி போச்சி? நான் கொஞ்ச நாள் ஊர்ல இல்ல அதுக்காக இப்படியா ?”, என துவாரகா கேட்டாள்.
“நீ இருந்துட்டா மட்டும் ? உனக்கும் சேத்து உங்கப்பா ஜாமீன் வாங்க அழைஞ்சிட்டு இருப்பாரு அவளோ தான்.. ஊருக்குள்ள பொழப்பு தேடி நெறைய பேர் புதுசா வந்திருக்காங்க.. அவங்களால தான் அடிக்கடி பிரச்சனை வருதுன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க“, எனக் கனி அமாவாசை எனும் நபர் அந்த பக்கம் நடமாடுகிறாரா என்று பார்த்தபடிப் பேசினாள்.
“ஊரு சொல்றது இருக்கட்டும். டீச்சர் அம்மா என்ன சொல்றீங்க?”
“பொழப்பு தேடி வந்த ஆளுங்க வேலை நல்லா பண்றாங்க. வேலைய ஒழுங்கா செய்யாம சுத்திக்கிட்டு இருந்த உள்ளூரு பயலுங்களுக்கு இப்போ வேலை இல்லை. அவனுங்க இவங்ககிட்ட அடிக்கடி பிரச்சனை தகராறு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எனக்கு இப்டி தான் தெரியுது”, எனக் கூறியபடி வந்தவள் ஒரு தெருவிற்குள் ஓடினாள்.
“ஏன்டி ஓடற?”, என துலாவும் கத்திக்கொண்டே ஓடினாள்.
“சத்தம் போடாம வா”, எனக் கூறிவிட்டு இருள் போர்த்திய பாதைக்குள் இருவரும் ஓடினர்.
சிறிது தூரம் ஓடி வந்து ஒரு வீட்டின் மறைவில் நின்று கனி யாரையோ கவனித்துக் கொண்டு இருந்தாள்.
“யார டி தொரத்திட்டு வந்த ?”, துவாவும் கண்களை சுழற்றியபடி மெதுவாக கனியிடம் கேட்டாள்.
“அமாவாசை தான்”
“எங்க?”, எனப் பார்வையை அலையவிட்டாள்.
“தோ.. அந்த மொதலியார் வீட்டுல“, என அவள் கைக்காட்டும் போது, அமாவாசை ஒரு மோட்டாரை அங்கே கோணியில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
“நம்ம மோட்டார் தானே ?”
“ஆமா .. இன்னிக்கி இருக்கு இவனுக்கு ..”, எனக் கூறியபடி கனி நேராக அங்கே சென்றாள்.
“என்ன மொதலியாரே .. மோட்டர எந்த வெலைக்கு எடுக்கறீங்க ?”
“எப்புடியும் மூவாயிரம் குடுப்பாரு கனி.. என்ன மாமா நான் சொல்றது சரி தானே ?”, எனக் கேட்டபடி துவாவும் அங்கே வந்தாள்.
“அடடே .. வாங்க வாங்க.. ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க .. என்ன சேதி ?”, என அவர் அவனைச் செல்லும்படிச் செய்கைச் செய்தார்.
“அட .. நில்லு அமாவாச .. பேசி நல்ல வெலை வாங்கி தரேன்“, என துவா மெல்ல பின்னால் நகர்ந்தவனைப் பிடித்து அருகில் நிறுத்தினாள்.
“வேணா துவா .. தெரியாம பண்ணிட்டேன்.. என்னைய விட்ரு.. “, என அமாவாசை கெஞ்ச ஆரம்பித்தான்.
“ஏன் மொதலியாரே எதுக்கு இந்த வேல உங்களுக்கு ?“, என கனி அவரிடம் கேட்டாள்.
“இல்ல புள்ள.. அவன் ஆத்தாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.. அவசரத்துக்கு அடமானம் வச்சிட்டு எடுத்துக்கறேன்னு சொன்னான்”, என இழுத்தார்.
“அவனுக்கு ஏது நெலம் ? ஏது கெணறு ? என்ன மாமா இது? உங்க ரேஞ்ச் என்ன நீங்க பண்றது என்ன ?”, என துவா சிரித்தபடிக் கேட்டாள்.
“அது.. அது .. ஆ..“, என அவர் தடுமாறவும், “இந்த மோட்டார் கொண்டு வந்து அங்க மாட்ட சொல்லுங்க.. நாளைக்கு அம்மாவ வச்சி பேசிக்கலாம்”, எனக் கனி முறைப்புடன் கூறவும் அமாவாசை அவர்களுடன் நடந்தான். உடன் முதலியாரிடம் வேலை செய்யும் ஒருவன் வந்து மோட்டாரை அங்கே வைத்து இணைப்பு சரிப் பார்த்துவிட்டுச் சென்றான்.
கனி ஒருமுறை வயலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து துவா அருகில் அமர்ந்தாள். அமாவாசை அரை நாற்காலி நிலையில் நின்றுக் கொண்டிருந்தான்.
“ஏன் அமாவாச ஏன் இப்டி பண்ண?”, என துவா சினிமா டயலாக் பாணியில் கேட்டாள்.