13 – அர்ஜுன நந்தன்
யாத்ரா கூறிய வேலையை எப்படி செய்வது என ராமு யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் செந்திலும் பரத்தும் அங்கே வந்தனர்.
“என்ன அதிசயம் இன்னும் இவன உயிரோட விட்டு வச்சு இருக்க?”, செந்தில்.
“இவன் தான் என்னைய சேரலாதன் கிட்ட வேலைக்கு சேத்துவிட போறான்”, யாத்ரா.
“சந்தனபாண்டியன் கிட்ட சேத்துவிட சொன்னா ஈஸியா பண்ணுவான். சேரலாதன் கிட்ட எப்படி சேத்துவிட முடியும் மேம்”, பரத்.
“என்ன அதிசயம் பரத் என்கிட்ட டைரக்ட்ஆ பேசிட்ட. இவனுக்கும் சேரலாதன் பையனுக்கும் பெரிய டீலிங் நடக்குது, அதனால இவன் சொன்னா நடக்கும்”, யாத்ரா சிரிப்புடன் கூறினாள்.
“மேடம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”, ராமு.
“நீ எவ்ளோ டைம் வேணா எடுத்துக்க ஆனா நாளைக்கு நான் அங்க வேலைல இருக்கணும்”, யாத்ரா.
“அந்த நெடுமாறன் யாரையும் அவ்வளவு சீக்கிரம் தன்கிட்ட வேலைக்கு சேத்திக்க மாட்டான். நாளைக்கே நீங்க அங்க போறது கஷ்டம்”, எப்படியாவது அவகாசம் வாங்கிடும் நோக்கில் பேசினான் ராமு.
“சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லி என்னைய கோவபடுத்தாத ராமு. நான் கை வச்சா வேறமாதிரி போகும்”, யாத்ரா அமைதியாகக் கூறினாள்.
அவன் என்ன செய்வது என அறியாமல் அமர்ந்து இருந்தான்.
“சீக்கிரம் ஒரு வழிய கண்டுபிடி இல்லன்னா உன் காதலி தான் கஷ்டப்படுவா”, கூறி அறையில் இருந்தவர்களை அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டாள் யாத்ரா.
அவன் இருந்த அறையை தாழிட்டுவிட்டு வெளியே வந்தனர் மூவரும்.
“நீங்க ரெண்டு பேரும் போன வேலை என்னாச்சி?”, இருவரையும் பார்த்து கேட்டாள் .
“நான் வைக்க வேண்டியத வச்சிட்டேன். இந்தா டிவைஸ் கண்ட்ரோலர்”, செந்தில் சிறிதாக ஒரு பொருளை அவள் கையில் குடுத்தான்.
அதைப் பார்த்தவள் திருப்தியாகத் தலையசைத்து மீண்டும் செந்திலிடம் திருப்பி கொடுத்துவிட்டாள்.
“நர்ஸ் ரெடியா இருக்காங்க. எப்ப வெண்பா கிட்ட சொன்னாலும் ஜாயின் பண்ணிக்கலாம்”, பரத்.
“அந்த நர்ஸ் நம்பிக்கையானவங்களா? நாம என்ன பண்றோம் எதுக்கு பண்றோம்னு தெரியக்கூடாது அந்த பொண்ணுக்கு. அந்த பொண்ணு உடம்புல ஒரு ஜிபிஎஸ் டிராக்கர் இன்செர்ட் பண்ணிட்டு அங்க நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லுங்க. அங்க எது நடந்தாலும் நமக்கு தெரியணும் அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க சீனியர்”, யாத்ரா.
“அந்தபொண்ண எனக்கு நல்லா தெரியும். நான் மத்த விஷயத்த சொல்லிடுறேன் மேம். அங்க நடக்கறது தெரிஞ்சிக்க இந்த பொண்ண தினமும் மெஸேஜ் பண்ண சொல்லிடறேன்”, பரத்.
“அங்கயும் பக் வைக்கணும் தம்பி. அதுக்கு வெண்பாவோட உதவி வேணும்”, செந்தில்.
“சரி கேட்டு சொல்றேன் சார்”, பரத்.
“இவன் எப்படி உன்ன சேரலாதன் கிட்ட சேத்துவிடுவான் யாத்ரா?”, செந்தில்.
“இவன் சேரலாதன் கிட்ட இருந்து தான் சந்தனபாண்டியன் கிட்ட வேலைக்கு சேந்தான். இவன் சொன்னா அங்க வேற கேள்வி கேக்காம எனக்கு நான் கேக்கற வேலை கிடைக்கும்”, யாத்ரா.
இருவரும் சிறிது அதிர்ந்து அவளைப் பார்த்தனர்.
“அப்ப இவன் சேரலாதன் விசுவாசியா?”, செந்தில்.
“ஆமா. இந்த திட்டத்துக்கு சந்தனபாண்டியன சேரலாதன் சேத்திக்க காரணம் இவன் தான். நாளைக்கு பிரச்சினை வந்தாக் கூட அவன மாட்டிவிட்டுட்டு, சேரலாதன் எஸ்கேப் ஆகிறலாம்னு பிளான்”, யாத்ரா.
“அப்ப சந்திரகேசவனும் இதுல கூட்டா?”, செந்தில்.
“இல்ல. சந்திரகேசவன் கிட்ட வேற எதையோ எதிர்பார்த்து தான் அவனையும் சேத்து இருக்கான் சேரலாதன். சந்திரகேசவன் புதையல் கிடச்சா பழைய நகைகளை வச்சி வேறமாதிரி சம்பாதிக்க பிளான் பண்ணி இருக்கான். சந்தனபாண்டியன் சொல்றத செய்றான் அவ்வளவு தான். அவன்மேல ஏற்கனவே கோவில் கல்ல எடுக்கறான்னு கேஸ் இருக்கு. அதுல இதுவும் சேந்துடும், பட் உண்மை என்னனு யாருக்கும் தெரியாமயே போயிரும்”, யாத்ரா.
“இவன் நீ சொல்றத செய்வானா?”, செந்தில்.
“கண்டிப்பா செய்வான். இவன் குடும்பம் இப்ப என் கைல”, கண்ணடித்துச் சிரித்தாள் யாத்ரா.
செந்தில் ஒருமாதிரி தலையசைத்துக் கொண்டான். பரத் வழக்கம் போல முழித்துக் கொண்டு நின்றான்.
“சரி நீங்க கிளம்புங்க . வீட்ல மத்தத பேசிக்கலாம். நான் அவனுக்கு இன்னும் கொஞ்சம் டோஸ் ஏத்திட்டு வரேன்” , எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் .
“என்ன ராமு வழிய கண்டுபிடிச்சிட்டியா?” , யாத்ரா.
“மேடம் ….” , என்று இழுத்தான்.
“இத பாத்துட்டு பேசு “, அவனுக்கு முன்னால் அவளது கைப்பேசியில் எதையோ ஓடவிட்டு காட்டினாள் யாத்ரா.
” வேணாம் மேடம் விட்ருங்க பாவம் அவங்க ரெண்டு பேரும். நான் உங்கள சேரலாதன் ஐயாகிட்ட வேலைக்கு சேத்து விடறேன்”, ராமு.
அப்படி என்னத்த பாத்துட்டு சட்டுன்னு ஒத்துகிட்டான். வாங்க நாமளும் பாப்போம்.
அவன் காதலியும் அவள் குழந்தையையும் சுற்றி 5 நாய்கள் நின்று கொண்டு இருந்தன. அவர்கள் மேலே கறி துண்டுகள் போடப்பட்டு இருந்தன. கறியை கடிக்கிறேன் என்று ஒவ்வொன்றும் ஒரு கிலோவுக்கு குறையாமல் கடித்து எடுக்கும்.
அதுவும் அந்த சாக்லேட் கலர் நாயை பார்த்தாலே அடிவயிற்றில் உருண்டை உருள துவங்குகிறது. எத்தனை பெரிய பற்கள், அது வாயைத் திறந்தால் மனிதனின் தலையை முழுதாக நுழையும்.
எல்லாம் கறி தான் என நாய்கள் கடித்தால், ஒரு எலும்புக் கூட மிஞ்சாது ராமுவிற்கு அவர்களைப் புதைக்க .
யாத்ரா என்ன பொண்ணு நீ?
“குட் பாய் வா கிளம்பலாம்”, ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்துக்கொண்டு எழுந்து கிளம்பினாள் யாத்ரா.
அவனை பின்னே உட்காரவைத்து கொண்டு சேரலாதன் வீட்டிற்குச் சென்றாள் யாத்ரா.
அப்பொழுது வீட்டு தோட்டத்தில் அமர்ந்து இருந்த சேரலாதன் இந்த நேரத்தில் ராமு ஒரு பெண்ணுடன் வருவதைப் பார்த்துச் சற்று சிந்திக்கத் தொடங்கினான்.
“வணக்கம் ஐயா”, ராமு.
“வா ராமு என்ன இந்த நேரத்தில வந்து இருக்க. யார் இந்த பொண்ணு?”, சேரலாதன்.
“ஐயா கொஞ்சம் அப்படி வாங்களேன்”, பவ்யமாய் அழைத்தான் ராமு.
வா என்று கூறிவிட்டு நடந்தார்.
“ஐயா இந்த பொண்ணு நம்ம வேலைக்கு சரியா இருக்கும்ங்க”, ராமு.
“எந்த வேலைக்கு டா? நர்ஸ் வேலைக்கு தான் ஆளு கிடைச்சிடிச்சே”, சேரலாதன்.
“அதுக்கு இல்லைங்க ஐயா. மேலேடத்துல இருந்து சொல்ற ஒரு சில விஷயம் புரியலன்னு நல்லா கம்ப்யூட்டர் தெரிஞ்ச ஆளு வேணும்னு சொன்னீங்கள்ல?” ராமு.
“ஆமா. அதுக்கு இந்த பொண்ணு எதுக்கு? நாம என்ன மளிகை கடை கணக்கா பாக்கறோம். துப்பாக்கி பிடிக்க தெரியனும், தைரியம் வேணும் கண்ட நேரத்துல சரக்க வாங்க போகணும் வரணும். பொண்ணு சரிபட்டு வராது ராமு”, சேரலாதன்.
“ஐயா இந்த பொண்ணு சாதாரண ஆளு இல்ல. ஏற்கனவே கம்ப்யூட்டர் கம்பனில வேல செஞ்சி இருக்கு, அதுல எல்லா வித்தையும் தெரியும். துப்பாக்கி பிடிக்க கத்து குடுத்தா கத்துக்கும். அதோட அப்பா அம்மா சமீபத்துல இறந்துட்டாங்க அரசாங்கம் உதவி செய்யலன்னு கோவத்துல இருக்கு. நமக்கு விஸ்வாசமா இருக்கும். எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அதான் கூட்டி வந்தேன்”, சேரலாதன்.
“இந்த திட்டத்துல புது ஆள நுழைக்குணுமாடா? நெடுமாறனுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவான் டா”, சேரலாதன்.
“ஐயா இத விட நம்பிக்கையான ஆளு நமக்கு கிடைக்காது. சொல்ற வேலைய எப்பாடு பட்டாவது செஞ்சிடும். படிச்ச புள்ள நாம தப்பு செய்யறோம்னு தெரியாத அளவுக்கு செய்யும். ஆம்பள பசங்கள நம்பறது கஷ்டம் இந்த விஷயத்துல. பொண்ண யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க மாட்டாங்க . நீங்க வேணா சோதிச்சி பாருங்க”, ராமு.
எதோ யோசித்து விட்டு, ” சரி இன்னிக்கு இராத்திரி சின்ன கைமாத்தல் இருக்கு. ஆளுங்க கூட போய் எப்படி வேலை செய்யுதுன்னு பாத்துட்டு தான் சேத்திக்க முடியும்”, என்று கூறினான் சேரலாதன்.
“சரிங்க ஐயா. எத்தனை மணிக்கு வரணும்”, ராமு.
“இராத்திரி 11 மணிக்கு பழைய இரயில்வே கேட் கிட்ட நிக்க சொல்லு. நம்ம ஆளு ஒருத்தன் வருவான். அவன்கூட போய் கைமாத்திட்டு வரணும். கத்தி பிடிக்க தெரியுமா அந்த பொண்ணுக்கு”, சேரலாதன்.
ராமு மனதில் அவள் துப்பாக்கி சுழற்றியது நினைத்து கொண்டு “நல்லா கம்பு சுத்தும் ஐயா . கத்தியும் நல்லா சுத்தும்”.
“சரி பாக்கலாம். இந்நேரம் நீ சந்தனபாண்டியன் கூட தானே இருப்ப. இன்னிக்கு என்ன பண்றதா இருக்கான்?”சேரலாதன்.
“இன்னிக்கு கோவில்ல சுரங்க பாதைய பாக்க போறதா சொன்னாரு. அந்த குப்பத்த காலி பண்ண யார பாத்தா முடியும்னு ஆள விசாரிச்சிட்டு இருக்காருங்க “, ராமு.
“சரி. நீ கிளம்பு. நேரா போகாத சுத்தி போ”, சேரலாதன்.
“சரிங்க ஐயா”, ராமு.
யாத்ரா அருகில் வந்து சேரலாதனை கும்பிடச் சொன்னான் ராமு. அவளும் பவ்யமாக முகத்தை வைத்துக் கொண்டு கும்பிட்டாள்.
“ராமு கிட்ட சொல்லி இருக்கேன். கேட்டுக்க” , சேரலாதன்.
“சரிங்க சார்”, யாத்ரா.
“உன் பேரு என்ன?”, சேரலாதன்.
“பூவழகி “, யாத்ரா.
சிரித்துக் கொண்டே சேரலாதன் , “நல்லது . வேலைல கவனம் இருக்கணும்”.
“சரிங்க சார்”, யாத்ரா @ பூவழகி.
இருவரும் அவ்விடம் விட்டு கிளம்பி முன்னிருந்தக் கட்டிடத்திற்கு வந்தனர்.
“மேடம் நீங்க சொன்னமாதிரி வேலைல சேத்திட்டேன். அவங்கள விட்ருங்க”, ராமு.
“அவன் இன்னும் என்னைய சேத்திக்கல டிரையல் தானே பாக்கறதா சொன்னான் ராமு”, யாத்ரா யோசனையுடன் கூறினாள்.
ராமு அதிர்ந்து ,”உங்களுக்கு எப்படி தெரியும் “.
“நீ விட்ற மூச்சு கூட எனக்கு தெரிஞ்சி தான் போகும் வரும். இன்னும் உன்னால ஆக வேண்டியது நிறைய இருக்கு ராமு”, யாத்ரா.
“மேடம் இது அநியாயம். வேலைல சேத்தி விட்டா விட்டுடறதா சொன்னீங்க”, ராமு.
“கரெக்ட் . இப்ப விடதான் போறேன் ஆனா முழுசா இல்ல. சொல்றத எல்லாம் நீ கேட்டா தான் உன்னையும் விடுவேன் உன் குடுபத்தையும் விடுவேன்”, யாத்ரா.
ராமு செய்வதறியாது திகைத்து நின்றான். இவளிடம் இருந்து தப்பும் மார்க்கம் கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்துவிட்டான்.
“இன்னொரு விஷயம் உன் உடம்புல சிலத வச்சி தெச்சி இருக்கேன். எனக்கு தெரியாம எந்த மருந்தும் சாப்பிட கூடாது. சாப்டா செத்துறுவ. நீ எங்க போற வர எல்லாம் நான் கவனிச்சிட்டு தான் இருப்பேன். கொஞ்சம் நீ எடக்கு பண்ணாலும் நீயும் காலி உன் குடும்பமும் காலி நியாபகம் வச்சிக்க. நான் கூப்பிடறப்ப எல்லாம் நீ வரணும். புரியுதா?”, யாத்ரா.
பாவம் ராமு அடிதடி கட்டபஞ்சாயத்து கடத்தல் என இருந்தவனைத் தூக்கி வந்து எரிமலையில் நிற்க வைத்துவிட்டாள் இவள்.
அவன் எந்த மனநிலையில் இருக்கிறான் என அவனுக்கே புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.
அவன் எங்கோ வெறித்தபடி நிற்பதை பார்த்து சொடக்கு போட்டு அழைத்தாள்,”என்ன அப்படியே நிக்கற? என் பேரு என்ன?”.
“பூவழகி”.
“நான் சொல்றத கேக்கலன்னா என்ன ஆகும்?”
“நானும் என் குடும்பமும் இல்லாம போயிருவோம்”.
“நீ என்ன பண்ணணும்?”
“நீங்க சொல்றத மட்டும் தான் பண்ணணும்”
“பரவால்ல ராமு நீ டக்குன்னு கேச் பண்ணிட்ட. சந்தனபாண்டியன் அனுப்பின ஆளு நான் சொல்றத கேக்கமாட்டேன்னு ராவடி பண்ணி இப்ப இல்லாமயே போய்டான். அந்த பக்கம் அவன் பொணம் இருக்கு அத பொதச்சிடு”, ஏதோ பாராட்டு பத்திரம் வாசிப்பது போல் சொன்னவளைக் கண்டு விழிபிதுங்கி நின்றான்.
அவள் கூறியது போலவே அடுத்த அறையில் ஒருவன் தலைகீழாக இரத்தம் வழிந்தது எல்லாம் உறைந்து தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் நிலை கண்டு ராமு சொல்வதறியாமல் திகைத்து நின்றான். அத்தனைக் கோரமாக இருந்தது அந்த பிணத்தின் முகம்.
பரிதியை கொல்ல வந்தவன் நிலையை கண்டு யாத்ராவை எப்படி எடுத்து கொள்வதென புரியாமல் அமைதியாக நின்றான்.
“மேடம்”
“என்ன ராமு பொணம் ரொம்ப கனமா இருக்கா? நான் உதவி பண்ணவா?”
“வேணாம். நீங்க மட்டுமா இவன அடிச்சீங்க?”
ஆம் என தலையசைத்துவிட்டு ராமுவிடம் ஒரு செல்போனைக் கொடுத்தாள்.
“இனிமே இதை தான் நீ யூஸ் பண்ணணும். என் நம்பர் அதுல இருக்கு எதாவதுன்னா கூப்பிடு”.
அவனும் சரியென தலையசைத்து வாங்கிக் கொண்டான். பின் அந்தப் பிணத்தை அந்தக் கட்டிடத்தின் பின் இருந்தக் காட்டுப் பகுதியில் புதைத்துவிட்டு சந்தனபாண்டியன் குவாரிக்குச் சென்றுவிட்டான்.
இரவு 11 மணி பழைய இரயில்வே கேட்டில் காத்திருந்தாள் பூவழகி.
(இனிமே நாமலும் அப்படியே கூப்பிடுவோம் அப்ப தான் உங்களுக்கும் கன்பியூசன் இருக்காது நண்பர்களே).
அங்கே அவளுடன் சேரலாதன் அனுப்பிய ஆள் இரண்டு பேர் இருந்தனர். அவளும் ஆண்களைப் போல பேண்ட் சர்ட் அணிந்து, அதற்கு மேல் ஒரு ஸ்லீவ்லெஸ் ஜெர்கின் போட்டிருந்தாள்.
அப்பொழுது அங்கு அவர்கள் காத்திருந்த நபர்கள் காரில் வந்து இறங்கினர்.
இவர்கள் மூவரும் இவர்கள் கையில் இருந்த பெட்டியை அவர்களிடம் கொடுத்து விட்டு அவர்கள் காரில் இருந்த அட்டைபெட்டிகளை இவர்களின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அந்தச் சமயம் இரயில்வே போலீஸ் இவர்களைச் சுற்றி வலைக்க, பூவழகி சடாலென பெட்டிகளை அள்ளிப் போட்டு வண்டியைக் கிளப்பினாள். மற்ற இருவரில் ஒருவன் போலீஸிடம் மாட்டிக் கொண்டான்.
“சே…. எப்படி போலீஸ் வந்தாங்க?”, அடியாள்.
“சரக்கு கொண்டுபோய் சார் கிட்ட சேக்கணும். எந்த பக்கம் போகணும் சொல்லு”, பூவழகி.
“என்ன பூவு, நம்ம ஆளு அங்க மாட்டிகிட்டான்னு சொல்றேன், நீ பாட்டுக்கு சரக்கப் பத்தி பேசற”, அடியாள்.
அவள் ஒரு நொடி அவனை பார்த்து பின் போலீஸிடம் இருந்து தப்பி வேறு பாதையில் போய் கொண்டு இருந்தாள். அந்த நேரம் அந்த அடியாளுக்கு நெடுமாறனிடம் இருந்து போன் வந்தது.
“இரயில்வே போலீஸ் தகவல் தெரிஞ்சி வராங்கடா. நீங்க திரும்ப வந்துருங்க. சரக்கு அப்பறம் வாங்கிகலாம்” , நெடுமாறன்.
“சரக்கு வாங்கிட்டோம் அண்ணே. நம்ம ஆளு ஒருத்தன் தான் மாட்டிகிட்டான்”, அடியாள்.
“அப்படியா? சரக்கு இப்பதானேடா வந்து இருக்கும். போலீசும் அங்க இருக்கறப்ப எப்படி வாங்கினீங்க?”, நெடுமாறன்.
“நம்ம பூவு தாங்க ஐயா போலீஸ பாத்துட்டு சட்டுன்னு சரக்க உள்ள போடச் சொல்லி வண்டிய எடுத்து தப்ப வச்சிச்சி”, அடியாள்.
“பூவா? சரி நம்ம பழைய குடோனுக்கு வந்துடு அந்த பக்கம் போலீஸ் இல்ல இப்ப”, நெடுமாறன்.
அடியாள் சொன்னத் திசையில் அவளும் வண்டியைச் செலுத்தி 15 நிமிடத்தில் அந்தக் குடோனை அடைந்து இருந்தனர் இருவரும்.
அந்த அடியாள் இறங்கி பூவழகியை அறிமுகப் படுத்தினான்.
“ஐயா, இதாங்க பூவு”.
“பாண்டி சரக்கு சரியா போச்சா? அங்க ஒன்னும் விட்டுட்டு வரலியே ?”,எனப் பேசி கொண்டே அவளை பார்த்தான்.
பார்த்தவன் அவள் தோற்றத்தில் இருந்து கண்ணை எடுக்காமல் அவளையே அளந்தான்.
அவளும் அவனை கண்டாள். 6 அடிக்கும் அதிகமான உயரம், மாநிறம், கட்டுமஸ்தான உடல், முறுக்கிய மீசை என மதுரைக்கு உண்டான இலட்சணங்களுடன் இருந்தான். வேஷ்டி சட்டையில் மிகவும் கம்பீரமாகவே தென்பட்டான் நெடுமாறன்.
இருவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டுக் கொண்டு நின்றனர். அந்தச் சமயம் உள்ளே நுழைந்த சேரலாதன் பூவழிகியைப் பாராட்டினார்.
“சபாஷ் … நல்ல சமயோசித புத்தி உனக்கு. சரக்க மாட்டாம கொண்டு வந்துட்ட. இனிமே உனக்கு என்கிட்ட தான் வேலை. பொண்ணா இருந்தாலும் அசராம வேலைய முடிச்சிட்டு நிக்கற”, பெருமையாகப் பேசிக்கொண்டே இருந்தார் சேரலாதன்.
“யாருப்பா இந்த பொண்ணு?”, அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான் நெடுமாறன்.
“இந்த பொண்ணு பேரு பூவழகி. வேலை கேட்டு வந்துச்சி அதான் சோதிச்சி பாத்து வேலைக்கு சேத்துக்கலாம்னு இன்னிக்கு சரக்க மாத்த வர சொன்னேன். அந்த போலீஸுக்கு தகவல் சொன்னது நான் தான். பயப்படாம சரக்க கொண்டு வந்துரிச்சி டா. நல்ல திறமசாலி தான். பாத்துக்க நான் கிளம்பறேன்”,சேரலாதன் மேலும் அவன் காதில் ஏதோ ஓதிவிட்டு கிளம்பினான்.
அவன் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் கெஸ்ட்ஹவுஸ் போனான். வீடு வந்ததும் இறங்கி அவள் உள்ளே போனாள். அவனும் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டு அவளைப் பார்த்து கேட்டான்.
“உன் பேர எப்ப பூவழகின்னு மாத்தின?”, நெடுமாறன்.
“நேத்து தான்”, பூவழகி.
“உனக்கு என்ன திமிரு இருந்தா என்கிட்டயே இப்படி அலட்சியமா பேசுவ ?”எனக் கையை ஓங்கிக் கொண்டு அவளிடம் சென்றான்.
அவள் நேரான பார்வைக் கொண்டு ஒரு அடி கூட நகராமல் அப்படியே நின்றாள் அவனை நோக்கி…..