13 – காற்றின் நுண்ணுறவு
இங்கே ஆந்திரா பாரஸ்ட் ஆபீசர்கள் உதவியுடன் தர்மனும் இனியனும் தன் ஆட்களுடன் சென்னை வந்து சேர்ந்தனர்.
பழங்குடி மக்களுக்கு பல முறை நன்றி உரைத்துவிட்டு, வல்லகியை தர்மன் தூக்கிக் கொள்ள, அவள் அருகில் இருந்த செடிகளை இனியன் தூக்கிக்கொண்டு தனி வாகனத்தில் அவளை ஏற்றிக் கொண்டனர்.
அடுத்த நாள் காலை சென்னையை அடைந்ததும் வழுதி தர்மனை அழைத்தான்.
“தர்மா…. எங்க இருக்க? சீக்கிரம் நம்ம ஆபீஸ் வா….”, என இறுக்கமாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
வழுதியின் குரலில் இருந்த இறுக்கம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது.
“இனியன்…. என் சீப் கூப்பிடறாரு. நான் உடனே போகணும். இவங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணிடுங்க…. அங்க போயி நிலைமைய தெரிஞ்சிகிட்டு உங்களுக்கு கால் பண்றேன். உங்களுக்குமே அடுத்து ஆர்டர் வரலாம் “, எனக் கூறிவிட்டு வல்லகி அருகில் வந்து அவள் தலையை மெதுவாக கோதிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
நான்கு நாட்களாக வீட்டிற்கே செல்லாமல் அங்கும் இங்கும் சுற்றி அழைந்ததால், இல்லம் சென்று சுடுநீரில் குளித்து பத்தே நிமிடத்தில் தயாராகி தன் அலுவலகம் நோக்கி பைக்கில் சென்றான்.
அவன் அறியாமல் இரண்டு பைக் அவனைப் பின்தொடர்ந்தது.
“குட் மார்னிங் சீப்….. நிலைமை ரொம்ப சீரியஸா இருக்கா?”, கண்களில் கலக்கத்தை மறைக்க முயன்றபடிக் கேட்டான்.
வழுதி அவனை சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு ,” சுதாகர்….”, என குரல் கொடுத்தார்.
ஒரு கையில் கட்டுடன் நடந்து வந்தவன் தர்மனைக் கட்டித் தழுவிக்கொண்டான்.
“நீங்க இரண்டு பேரும் உடனே கிளம்புங்க…. உங்களுக்கு இனி இங்க வேலை இல்ல”, எனக் கூறி இருவரின் முகத்தையும் கூர்ந்துப் பார்த்தார்.
“ஏன் சீப்? நாங்க என்ன தப்பு பண்ணோம்?”, சுதாகர் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“முதல்ல இரண்டு பேரும் கிளம்புங்க…. உங்க செட்டில்மெண்ட் ரெடியா இருக்கு…. “, எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
“தர்மா …. என்னடா இது?”, சுதாகர் ஒன்றும் புரியாமல் வினவினான்.
“வா போலாம்… இனிமே நமக்கு இங்க வேலை இல்ல”, தர்மதீரனும் இறுக்கமான முகத்துடன் அங்கிருந்து தன் சகல இத்யாதிகளையும் வாங்கிக் கொண்டு, வழுதியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியேறினான்.
“டேய்… எங்கடா போற? அவங்க ஏன் நம்மல வேலைல இருந்து எடுத்தாங்க? ஒன்னும் புரியல டா….”, சுதாகர் குழப்பத்தில் உழன்றபடி கேள்விகள் கேட்டான்.
“அதான் சொல்லிட்டாங்களே நமக்கு இனி அங்க வேலை இல்லைன்னு… வா ஊர் பக்கம் போவோம்…. இவங்க அரசியலுக்கு நாம பலியானது போதும் சுதா”, எனக் கூறியபடி கடந்து சென்ற இரண்டு பைக்கையும் பின்னால் வரும் காரையும் கவனித்தபடி இவனும் பொறுமையாக வண்டியை ஓட்டினான்.
இருவரும் ஊருக்குச் சென்று என்ன செய்வது? என்ற சம்பாஷணை தொடங்கி கால் மணிநேரம் வரையிலும் தொடர்ந்தவர்கள், அடுத்து வந்த சிக்னலில் அவனை முந்திக்கொண்டுச் சென்றனர்.
இருவரும் தாங்கள் தங்கியிருந்த இல்லம் வந்து அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரயில் நிலையம் சென்றனர்.
ஒருவன் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெவ்வேறு வண்டியில் தங்களை தொடர்வதை கவனித்த தர்மன் சுதாகரிடம் தன் போக்கில் உரையாடியபடி இன்னும் யாரெல்லாம் தங்களை பின்தொடர்கின்றனர் என அறிய சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.
“மச்சான்…. அன்னிக்கு நீ சொன்னியே அது போலவே நடந்துடிச்சி பாரேன்….”, தர்மதீரன்.
“சோத்துக்கு அடுத்து என்ன பண்றதுன்னு புரியாம நானே காண்டுல இருக்கேன் நீ ஏன்டா இப்ப கண்டத சொல்லி என் உயிர வாங்கற… இது வேற வலிக்குது … சே…..”, என கையை சற்று வேகமாக அசைத்ததில் வலி எடுத்ததும் முகம் சுளித்தான்.
தர்மன் அவனுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்துவிட்டு கம்பார்ட்மெண்ட் பாத்ரூம் சென்றுவிட்டு வந்து தலையனைக்கு அடியில் துப்பாக்கியை வைத்தபடி அவனும் கண்மூடிப் படுத்தான்.
மதிய நேரமாதலாலும், அவர்கள் இருப்பது பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி கம்பார்ட்மெண்ட் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை.
இருந்தவர்களில் சிலரும் சென்னைத் தாண்டி இரண்டு மணி நேரத்தில் இறங்கியதால் இருபது பேர் கூட அங்கே இல்லை.
தர்மதீரன் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் உணர்ந்து மிகவும் சகஜமாக இருப்பது போலவே காட்டிக்கொண்டு, சுதாகருக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
சிதம்பரத்தில் இறங்கியவர்கள் ஏதோ ஒரு குக்கிராமம் செல்லும் பேருந்தில் ஏற பஸ்நிலையம் சென்றனர்.
சுதாகர் தர்மன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் உடன் நடந்தான்.
ஏதோ நடப்பதை சற்று முன்னர் தர்மதீரன் சிதம்பரத்திலே இறங்க வேண்டும் என்று கூறியதிலிருந்து புரிந்துக் கொண்டு அவனும் சுற்றிலும் பார்வையைச் செலுத்திப் பார்த்தான்.
தாங்கள் ஆபீஸில் இருந்து வெளி வரும் பொழுது தங்களைக் கடந்து சென்ற வண்டியில் இருந்த ஒருவன் இங்கு இருப்பதைக் கண்டு நிலைமைப் புரிந்து அமைதியாக இருந்தான்.
“சுதா… வாடா அந்த பஸ் தான் கடைசி…. இத விட்டா விடிய விடிய இங்கயே உட்கார்ந்திருக்கணும்”, என லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு முன்னே நடந்தான் தர்மதீரன்.
இவர்கள் பின்னேயே ஐந்து பேர் தொடர்ந்து வந்து அதே பேருந்தில் ஏறிக்கொண்டனர்.
இரவு நேரம் ஆள் அரவமற்ற இடம் இவர்களுடன் அந்த ஐந்து பேருமே இறங்கி நின்றனர்.
“டேய்…. பேசாம எங்க கூட நடந்தா உங்களுக்கு நல்லது… “, என சுதாகர் முதுகிலும் தர்மதீரன் முதுகிலும் கத்தியை வைத்தனர்.
தர்மனும் சுதாகரும் அமைதியாக லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு இரண்டடி நடக்க சடாரென திரும்பி பைகள் கொண்டே அவர்களைத் தாக்கி மயக்கமடையச் செய்தனர்.
தர்மன் விசில் அடிக்க ஒரு ஆம்னி டெம்போ அவ்விடம் வந்து அவர்களை அள்ளிக்கொண்டு இவர்களையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குள் நுழைந்தது.
“என்னடா நடக்குது இங்க? நம்ம ஆளுங்க இங்க எப்படி?”, சுதாகர் தர்மனை வினவினான்.
“ரொம்ப பெரிய இடம் நம்ம எடுத்த கேஸ்ல சம்பந்தப்பட்டு இருக்கு அதான் நம்மல வேலை விட்டு தூக்கிட்டு உலகத்த விட்டும் தூக்க ஆள் அனுப்பி இருக்காங்க. இனியன் என்ன ஆனான்னு தெரியல…. ஜோஸப்… எதாவது தகவல் இருக்கா?”, என வண்டி ஓட்டுபவரிடம் கேட்டான்.
“இல்ல தர்மா… ஆனா உங்கள சேப் பண்றது தான் எங்க ட்யூட்டி இப்ப… அங்க போய் பேசிக்கலாம்”, ஜோஸப்.
அங்கே இனியனுக்கும் இடமாற்றம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக மூன்று மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டான்.
இனியன் இடத்தில் வேறொருவர் பொறுப்பெடுத்துக்கொண்டு வல்லகிக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டு அந்த கேஸ் முடிந்ததாக பதிவேற்றினார்.
பாலா வல்லகியின் அருகிலேயே அமர்ந்திருந்தவள் வல்லகி கண் முழிக்கக் காத்திருந்தாள்.
இரண்டு போலீசார் வந்து இதுவரை நடந்தவற்றை எல்லாம் வல்லகியிடம் மட்டுமின்றி, யாரிடமும் உரைக்ககூடாது என மிரட்டிவிட்டுச் சென்றனர்.
பாலாவின் தாய் ஊரில் இருந்து போன் செய்து,” கண்ணு…. வல்லகி எப்படி டா இருக்கா?”
“இன்னும் மயக்கத்துல தான்மா இருக்கா. அவங்க அம்மா எப்படி இருக்காங்க? அப்பா வந்துட்டாரா?”
“அம்மாவுக்கு ஆபரேஷன் செஞ்சி பரவால்ல உயிர் பொழச்சிட்டாங்க. போலீஸ் கம்ப்ளையண்ட் குடுக்க போன அவங்க அப்பா பயந்துபோய் திரும்ப வந்துட்டாரு…. நீங்க ஜாக்கிரதையா இருங்க. நான் இன்னும் வல்லகிக்கு அடிபட்ட விஷயத்த சொல்லல. இப்ப தான் சொல்லப்போறேன். அந்த பொண்ணு கண்ணு முழிச்சி இருந்தா பரவால்லன்னு தான் இப்ப போன் பண்ணேன்…. நம்ம ஊர்ல என்னன்னமோ நடக்குது கண்ணு. யார் யாரோ வராங்க போறாங்க… ஒன்னும் நெலவரம் சரியில்ல… ஊர விட்டு யாரும் போகக்கூடாதுன்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்க. அதான் என்னால கிளம்பி வரமுடியல. ஒத்த புள்ள நீ என்ன பண்றியோன்னு கவலையா இருக்கு. உனக்கு ஒன்னும் இல்ல தானு… சமாளிச்சிக்கமா”, குரலில் வருத்தமும் பயமும் அக்கறையும் காட்டிக் கேட்டார்.
“எனக்கு ஒன்னும் இல்லம்மா… வகி தான் பாவம்…. நான் இங்க பாத்துக்கறேன். அவங்க அப்பாவ கொஞ்சம் கூடவே இருந்து பாத்துக்க சொல்லும்மா அப்பாவ….. இவ கண்ணு முழிச்சதும் சொல்றேன். நீயும் ஜாக்கிரதையா இரும்மா….”, தாயின் குரலில் தெரிந்த கலக்கத்தில் தன் கவலையை மறைத்து அவருக்கு தைரியம் கூறியபடி தனக்கும் சொல்லிக்கொண்டாள்.
“சரிம்மா… நான் வச்சிடறேன். பாத்துக்க… கவனமா இரு… கூட புள்ளைங்க இருக்கு தானே?”
“இருக்காங்க ம்மா….நான் வச்சிடறேன்”, எனக் கூறி பட்டென வைத்துவிட்டாள்.
வல்லகியின் குடும்பத்தைச் சுற்றி ஏதோ சதி நடக்கிறது என மட்டும் தெளிவாக பாலாவிற்கு புரிந்தது.
இதில் இருந்து தோழியையும் அவள் குடும்பத்தையும் எப்படி மீட்பதென தெரியாமல் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
“மிஸ் பாலா….”, இனியன்.
“வாங்க சார்… தர்மா சார் வரலியா?”, பாலா பின்னால் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இல்ல பாலா. அவர வேலைய விட்டு தூக்கிட்டாங்க ன்னு மட்டும் தான் தகவல் வந்தது. என்னையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. இங்க இருந்த கார்ட்ஸ் எல்லாம் எங்க?”, என அறையின் வெளியே இருந்த ஆட்களைக் காணாமல் கேட்டான்.
“அவங்க எல்லாம் மதியமே போயிட்டாங்க சார். என்னையும் யார்கிட்டயும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டு போனாங்க. என்ன சார் நடக்குது இங்க?”, பாலா தனக்குள் இருந்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“தெரியலங்க. இவங்க கண் முழிச்சாங்களா? எதாவது பேசினாங்களா?”, என வல்லகியைப் பார்த்தபடிக் கேட்டான்.
“இல்ல சார்…”
” கால் மீ பை நேம் … “
“நீங்க போலீஸ் உங்கள எப்படி பேர் சொல்லி கூப்பிடறது?”, பாலா தயங்கியபடிக் கூறினாள்.
“வாய்ல தான்ங்க…. “, யாழினியன் முறுவலித்தபடிக் கூறினான்.
பாலா முறைத்துவிட்டு, “இப்ப இந்த கவுன்டர் அவசியமா?”, எனக் கேட்டாள்.
“சரி…. நீங்க எதாவது சாப்டீங்களா? ரொம்ப டயர்டா இருக்கீங்க….”, அவளை ஆராய்ந்தபடிக் கேட்டான்.
“இல்ல… பரவால்ல வேணாம். இவள விட்டு நகரவே பயமா இருக்கு… அந்த ஜிதேஷ் மறுபடியும் வந்து தூக்கிட்டு போயிடுவானோன்னு யோசனையாவே இருக்கு”, பாலா கண்களை அகல விரித்து முகத்தில் பயமும் கவலையும் காட்டி பேசியது யாழினியனை இரசிக்கத்தூண்டியது எனலாம்.
“அதுக்காக பட்னி இருந்து நீங்களும் மயங்கிட்டா யாரு பாத்துக்குவா? இருங்க நான் வாங்கிட்டு வரேன். உங்க போன் குடுங்க”, என வாங்கி தன் நம்பரை பதிவு செய்துவிட்டு அவள் எண்ணையும் சேமித்துக்கொண்டான்.
“எமர்ஜென்சி ன்னா உடனே கூப்பிடுங்க… நான் பத்து நிமிஷத்துல வரேன்”, எனக் கூறிச் சென்றவன் சொன்னபடியே வந்தான்..
“நீங்க சாப்டீங்களா?”
“எனக்கும் சேத்து தான் வாங்கிட்டு வந்திருக்கேன். பிரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்”
பாலா முகம் கழுவி முகம் துடைத்தபடி அவனுக்கும் தட்டெடுத்து வைத்து தண்ணீர் பிடித்து வந்து வைத்தாள்.
இருவரும் அமைதியாக சாப்பிட்டு எழுந்தனர்.
இருவரின் மனதிலும் பல கேள்விகள் ஊற்றாக பெருக்கெடுத்தது. அதற்கான விடை தான் இருவருக்கும் புலப்படவில்லை.
பாலா தன் தாய் சற்றுமுன் கூறிய விஷயங்களை இனியனிடம் கூறிவிட்டு, “இவங்க குடும்பத்த மட்டும் டார்கெட் பண்றது யாரா இருக்கும் சார்?”
“அவங்க அக்கா ஆர்க்கியாலஜிஸ்ட் தானே”, யாழினியன் நெற்றியைச் சுறுக்கியபடிக் கேட்டான்.
“ஆமா சார். ப்ரொபசர் தசாதிபனோட அசிஸ்டெண்ட்-ஆ ரீசென்டா ஜாயின் ஆனாங்கன்னு வகி சொன்னா… “
“அங்க தான் ஏதோ விஷயம் இருக்கு. இவங்க கண் முழிச்சா நமக்கு எதாவது விடை தெரியலாம்”, எனக் கூறியவன் தான் வெளியே காவல் காப்பதாகக் கூறிவிட்டு, அவளைப் படுத்துறங்கச் சொன்னான்.
நடுசாம வேளையில் அரூபமாக வந்த மூதாட்டி அவளின் நெற்றியில் தைலம் போல ஏதோ தடவிவிட்டு, காதில் ஏதோ கூறி அவள் வாயில், தான் கொண்டுவந்த குடுவையில் இருந்த நீரைப் புகட்டினார்.
அவர் நீர் புகட்டிச் சென்ற பத்து நிமிடத்தில் வல்லகியைக் கொல்ல ஆட்கள் வந்தனர்.
கதவருகில் யாழினியன் இருப்பதைக் கண்டு முதலில் தயங்கி நின்றவர்கள் பின் முன்னேறினர்.
கதவிற்கு பத்தடிக்கு முன்பே இனியன் அவர்களைக் கண்டு, “என்னடா இன்னும் நீங்க திருந்தலியா? ஒரு பொண்ண கொல்ல இத்தன பேரா?”, என அங்கு வந்திருந்தவர்கள் முகங்களை தனக்குள் சேமித்துக்கொண்டு கைகளை நீட்டி ஒருவனை அழைத்தான்.
“நாங்க பத்து பேர் இருக்கோம். நீ ஒத்த ஆளு… பேசாம போயிடு சாரு…. உங்கம்மாவுக்கு ஒரே புள்ளையாமே.. உனக்கு எதுக்கு இந்த வேலை? “, என முன் நின்றவன் அவனை பார்த்து நக்கலாக கூறினான்.
“இது சினிமாவும் இல்ல நான் ஹீரோவும் இல்ல. ஆனா நான் கத்துகிட்ட வித்தைக்கு கொறஞ்சது ஐஞ்சு பேரை அடிப்பேன். இது ஹாஸ்பிடல் நம்ம ஆட்டத்த வெளியே போய் வச்சிக்கலாமா?”, முன்னே வந்தபடிக் கேட்டான்.
“கொல்றா முதல்ல அவன….”, என ஒருவன் ஆயுதம் ஏந்த அதை லாவகமாக அவன் கையில் இருந்து பறித்தவன் அவனை பலமாக அடித்தான்.
அவன் போட்ட சத்தத்தில் பாலா பதறி எழுந்து வெளியே வந்தாள்.
“சார்… யார் இவங்க?”
“நம்ம விருந்தாளிங்க தான். பலமா விருந்து போட்டுட்டு வரேன். வெளியே வராதீங்க…. கதவை பூட்டிக்கோங்க பாலா”, எனக் கூறிவிட்டு அடுத்தவனை தாக்கினான்.
இந்த சத்தத்தில் நர்ஸ் முதல் டாக்டர் வரை வந்து அவர்களை தடுக்க நினைத்து அடிபட்டுச் சுருண்டனர்.
“இங்க பாரு சாரு … நான் அந்த புள்ளைய மட்டும் கொன்னுட்டு போவ வந்தேன். நீ அனாவசியமா இத்தன பேர பலி குடுக்க வைக்காத…. நவுந்துடு…. இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல”, எரிச்சலுடன் கூறினான்..
“உன்ன அனுப்ச்சவன் யாருடா…? நான் இருக்கற வரைக்கும் அந்த பொண்ண தொட விடமாட்டேன்”, இனியன் ரௌத்திர முகத்துடன் கூறினான்.
“நான் இப்பவே அவள கொல்றேன். டேய் அந்தாள தட்டி தூர போடுங்கடா… எத்தனை பேர் வந்தாலும் சாச்சிட்டு போலாம்”, என ஆவேசமாக கத்திவிட்டு முன்னேறினான்.
இருவர் யாழினியனை பின்பக்கமாக தாக்கி நிலைகுலைய வைத்தனர்.
“இம்ச…. இவன முதல்ல கொல்றா… என்னா சலும்பல் பண்றான் “, என ஒருவன் அவனை வெட்டவந்தான்.
பாலா அவனை தடுக்கும் முன் வல்லகி அவளைத் தாண்டி வெளியே வந்து வெட்டவந்தவனின் கழுத்தில் விரல் கொண்டு அழுத்தம் கொடுக்க அப்படியே மயங்கி சரிந்தான்.
மற்றவர்களையும் மனோவேகத்தில் அவர்களின் வர்மத்தில் தாக்கி நிலைக்குலையச் செய்தாள்.
அடியாட்கள் அனைவரும் ஒரு நிமிடத்தில் செயல்பட முடியாமல் தவித்தபடி தரையில் கிடத்தியவளை பயத்துடன் பார்த்தபடி முணகவும் முடியாமல் கிடந்தனர்.
அவள் உடல் சில நொடிகள் நடுங்கி பின் சீரானது. அழுத்தமாக காலடிகள் பதித்து அறையின் உள்ளே சென்றவளின் தோரணை இதுநாள் வரையில் இல்லாத ஒன்றாக இருந்தது.