13 – ருத்ராதித்யன்
“ஒரு நிமிஷம் நிறுத்து டா.. . நீயும் நானும் பேசற கேப்புல இரண்டு பேரு ஓடிட்டாங்க பாரு”, என நந்து யாத்ரா, ஆதியை பற்றிக் கூறினான்.
“நீயே போய் பாரு.. எனக்கு உள்ள ஒரு வேலை இருக்கு வரேன்”, என அர்ஜுன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிரஞ்சீவை அழைத்தான்.
“மாப்ள…. சிவி….. டேய் சிவி …. மாப்ள….”, என அழைத்தபடி சென்றவன் எதிரில் தாய் கயல் வந்து நின்றார்.
ஒரு கையை இடுப்பில் வைத்து, மறுகையில் கரண்டியை இறுக்கமாகப் பிடித்தபடி, “என்ன கூப்ட?”, எனக் கேட்டார்.
“மாப்ளைய கூப்டேன் மா.. அவன் எங்க?”, என அர்ஜுன் தாயின் முறைப்பை கண்டுக்கொள்ளாமல் மீண்டும் கேட்டான்.
“அவனா? அவர் நம்ம வீட்டு மாப்ள… அவர இப்படி தான் மரியாதை இல்லாம கூப்டுவியா? வர வர கொஞ்சம் கூட மட்டு மரியாதை தெரியறது இல்ல டா உனக்கு”, என கரண்டியால் அவனை அடிக்க ஆரம்பித்தார்.
“அய்யோ.. அம்மா… சாரி மா…. நான் எப்பவும் போல கூப்டுட்டேன்…. அடிக்காதம்மா… வலிக்குது…..”, என அர்ஜுன் கத்தியபடி முதுகை மறைத்தபடி குதித்துக்கொண்டிருந்தான்.
அவன் கையை பிடித்தவாறு அங்கயற்கண்ணியும் விடாமல் அடித்தார்.
“கயல்… என்ன இது?”, என கேட்டபடி தமிழன்பன் அங்கே வந்தார்.
“மாப்ளைய கொஞ்சம் கூட மரியாதை இல்லாம கூப்டுட்டு இருக்கான்ங்க…”, எனக் கூறி மீண்டும் அவனை இரண்டு அடி அடித்தார்.
“ஆஆ… அம்மா… என்னம்மா இப்படி அடிக்கற? போ உனக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல”, என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு முற்றத்தூணைக் கட்டிப்பிடித்து நின்றுக் கொண்டான்.
இது அவன் சிறுவயது பழக்கம். யாராவது திட்டினாலோ அடித்தாலோ முற்றத்தூணை கட்டியபடி நின்று கொள்வான். ஒரு நாள் ஆனாலும் அந்த இடம் விட்டு நகரமாட்டான்..
அதைக் கண்டதும் அங்கயற்கண்ணியின் கண்கள் தானாக கலங்க, அவனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டார்.
“சாரி டா அஜ்ஜு கண்ணா…. ரொம்ப வலிச்சதா?”, என அவன் முதுகை தடவி கொடுத்தபடிக் கேட்டார்.
“என்ன கயல் இது? நீயே அடிக்கற நீயே சமாதானமும் பண்ற.. அப்பறம் எனக்கு என்ன தான் வேலை?”, என தமிழன்பன் சிரித்தபடிக் கேட்டார்.
“உங்களுக்கு ஏன்ங்க பொறாமை? நம்ம பையனை நான் அடிச்சேன்… இப்ப சமாதானம் பண்றேன்… போங்க… போய் வேலைய பாருங்க…. அஜ்ஜு கண்ணா இன்னும் எங்க வலிக்குது….? அம்மா பலமா அடிச்சிட்டேனா?”, என அவன் உடலை ஆராய்ந்தவாறு கேட்டார்.
தாயின் முகத்தையே பார்த்தபடி இருந்தவன் தூணை விட்டு தாயைக் கட்டிக் கொண்டான்.
மகன் அணைத்ததும் முதலில் குழம்பி பின் அவனை அணைத்துக்கொண்டார்..
“ஏன்ம்மா என்கிட்ட பேச இவ்வளவு தயங்கறீங்க? உங்கள நீங்களே வறுத்திக்க கூடாதுன்னு நான் பலமுறை சொல்லி இருக்கேன்ல”, என மென்மையாக பேசினான்.
பல வருடங்கள் கழித்து இன்று தன் மகன் மீண்டும் பழைய அர்ஜுனாக பேசியது அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
“இல்லடா கண்ணா….. நீ என்கிட்ட சுத்தமா மறைச்சிட்டல்ல…. போ… நான் உன்கிட்ட பேசமாட்டேன்”, என அவனை விட்டு அந்த பக்கம் திரும்பிக்கொண்டார்.
“நான் என்ன மறைச்சேன்?”, என முகத்தை பாவமாக வைத்தபடிக் கேட்டான்.
“உனக்கு தெரியாதா?”, என மீண்டும் முறைத்தார் கயல்.
“நிஜமா தெரியாது மா…. காட் ப்ராமிஸ்…”, என தலையில் கைவைத்துக் கூறினான்.
அந்த செயலில் ஐந்து வயது அர்ஜுன் அவர் கண்முன்னால் வந்து சென்றான்.
“டேய் ..டேய்… கடவுள் மேல சத்தியம் பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… பாவம் டா அவரு….”, கயல்.
“அவரா பாவம்? சத்தியமா இல்ல… அவர் இதுபோல எத்தனை சத்தியத்த வேணா தாங்குவாறும்மா…. நீ சொல்லு நான் என்ன மறைச்சேன்? “, என மீண்டும் அங்கேயே வந்தான்.
“ஏன்டா கண்ணா உன் வேலைபத்தி என்கிட்ட சொல்லல? சென்னைல வேலை… அங்க இருந்து டெல்லி அனுப்பிட்டாங்கன்னு சொன்ன… ஆனா இவ்வளவு ஆபத்தான வேலைன்னு ஏன்டா சொல்லல?”, இப்போது கயல் சிறுகுழந்தையாக பேசினார்.
தமிழன்பன் தாயுக்கும் மகனுக்கும் நடுவில் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டார்.
“சொன்னா நீ விடமாட்டியேம்மா …”, என சிரித்தபடி சொன்னவன் ஒரு நொடி நிதானித்து, “அம்மா… நீ சின்ன வயசுல நிறைய கதைல நாட்டுக்காக பாடுபட்டவங்கள பத்தி சொல்லுவ… தாய்நாட்டுக்காக அவங்க பட்ற கஷ்டமும் ரொம்ப இஷ்டமா தான் இருக்கும்னு சொல்லி இருக்க… அந்த இஷ்டம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க தான் நான் சேர்ந்தேன். அந்த இஷ்டம் மேல இப்ப காதல் வந்துரிச்சிம்மா…. அதான் என்னால அதை விடமுடியல… நீயே சொல்லு.. காதல விடமுடியுமாம்மா?”, என தாயிடம் கேள்வி கேட்டான்..
இல்லையென அவர் தலையாட்டவும், “அதான்ம்மா நானும் விடல… நீ என்னை நினைச்சி கவலைபடாதம்மா….”, என அவரை அணைத்தபடி சோபாவில் அமர்ந்து பேசினான்.
“அதென்ன உன்னபத்தி மட்டும்… நம்ம யாத்ராவ பத்தியும் தான் கவலை… உன்ன விட அவளுக்கு இன்னும் ஆபத்து அதிகமாமே… நம்ம வீட்டு பொண்ணு டா… நம்ம தொழில் இருக்கு எஸ்டேட் இருக்கு அதை வந்து பாத்துக்கோங்களேன் இரண்டு பேரும்”, என தன் மனதில் உள்ளதை கூறினார்.
“அப்பா…. அம்மா கப்போர்ட்ல இருக்க புக் எல்லாத்தையும் நான் எடுத்து வெளியே போடப்போறேன்…. இனிமே எந்த புக்கும் நீங்க வாங்கித் தரக்கூடாது”, என தந்தையிடம் தாவினான்.
“என்ன? என் புக் ஏன்டா எடுத்து போடணும்? புக்ல கைய வச்ச நீ அவ்வளவு தான் சொல்லிட்டேன்…. ஏங்க பாருங்க…. இவன் என்ன சொல்றான்னு”, என பொங்கி எழுந்து விட்டார் அங்கயற்கண்ணி.
“நீ தானே என் வேலைய பாத்துட்டு போக சொன்ன.. நீயாச்சி அவனாச்சி…. என்னை இழுக்காத கயல்….”, என அவர் கூறிவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டார்.
அர்ஜுன் சிரித்தபடி, “நீங்க உங்க புக் எவ்வளவு நேசிக்கறீங்களோ அத விட அதிகமா நானும் ரதுவும் எங்க வேலைய நேசிக்கிறோம்மா…. எங்களுக்கு ஒன்னும் ஆகாது… உன் மருமக ஆகவும் விடமாட்டா… நானும் அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்…. உங்க மனசுல இருக்க பயத்தை தூக்கிப் போட்டுட்டு உங்க மருமகளுக்கு வக்கனையா சமைச்சி போடுங்க… அவ இன்னிக்கே கிளம்பறா”
“இன்னைக்கேவா?”, என அவர் முகம் சோர்ந்து போனது.
“அவனும் தான் கிளம்பறான்மா”, எனக் கூறியபடி ஆதி உள்நுழைந்தான்.
“நீயுமா? நீ இன்னும் ஒரு மாசம் இங்க இருப்பேன்னு தானே சொன்ன என்கிட்ட”, என அவனிடம் சண்டையிட்டார்.
“ஏன்டா?”, என அர்ஜுன் ஆதியை முறைத்தான்.
“சொல்றத முழுசா சொல்லிடணும் டா”, எனக் கூறி சத்தமாக சிரித்தான்.
“சிரிக்காத டா “
“சிரிப்பேன் டா”, என இன்னும் சத்தமாக சிரித்தான் ஆதி.
அர்ஜுன் ஆதியை அடிக்க போக அவன் ஓட ஆரம்பித்தான்.
“டேய் நில்றா….”
“முடியாது…”
“ஒழுங்கா ஒரு அடி வாங்கிக்க”
“நீ ஒரு அடியோட நிறுத்துவியாடா”
“ஆதி…..”
“அஜ்ஜு…”
என இரண்டு பேரும் கத்தியபடி வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர்.
இவர்கள் ஓடுவதைக் கண்ட தீரன் கட்டை அவிழ்த்துக்கொண்டு இருவரின் பின்னால் ஓடியது.
சாமியய்யா தீரன் ஓடுவதுக் கண்டு, “தம்பி தீரன் உங்க பின்னாடி வரான்”, எனக் கத்தினார்.
“ம்மாஆஆஆஆ”, என கத்தியபடி தீரன் அவர்கள் இருவரையும் தொடர்ந்தும் முன்னேயும் பின்னேயும் மாறி மாறி ஓடிவந்து விளையாண்டது.
ஆதியும் அர்ஜுனும் அதையும் தங்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
இருவரும் கத்தும் சத்தம் கேட்டு கீழே வந்த சிரஞ்சீவ் தீரனும் ஓடிவருவதைக் கண்டு மீண்டும் மாடிக்கு ஓடினான்.
“ஏன் சஞ்சு இப்படி ஓடி வர்றீங்க?”, எனக் கேட்டபடி இதழி அருகில் வந்தாள்.
“அங்க பாரு உன் அண்ணணுங்க பண்றத”, என புல்வெளியில் தீரனுடன் இருவரும் ஓடிப்பிடித்து கட்டிக்கொண்டு விளையாடுவதைக் காட்டினான்.
“ஹாஹாஹா…. இவனுங்க இப்படி விளையாண்டு ரொம்ப வருஷம் ஆகுது சஞ்சு…. ஆனா இந்த கண்ணுகுட்டி அவனுங்க கூட ஒட்டி கிட்டது தான் அதிசயம்…. “, என அண்ணன்களை பார்த்தவாறு பேசினாள் இதழி.
“ஏன் எந்த மிருகமும் உன் அண்ணனுங்க பக்கத்துல வராதா?”
“வரும்… அதையும் டீம் பிரிச்சி விட்டு அதுங்கள அடிச்சிக்க விட்டுட்டு இவனுங்க வேடிக்கை தான் பாப்பானுங்க… ஒருத்தன் டீம் மிருகம் இன்னொருத்தன்கிட்ட போகாது… அப்படி வளப்பானுங்க இரண்டு பேரும்…. ஆடு மாடு கோழின்னு அத்தனை சண்டையும் இவனுங்க வீட்ல இருந்தா நடக்கும். கடைசில அதுங்க எல்லாம் டயர்ட் ஆகி போயிடும். இவனுங்க அடிச்சிகிட்டு இருப்பானுங்க”, என சிறுவயது நினைவுகளை அசைபோட்டபடி கூறினாள்.
சிவிக்கும் கஜாவின் நினைவு வந்து உதட்டில் மென்னகை மலர்ந்தது.
“ஆனா… இந்த கண்ணுகுட்டி வித்யாசமா இருக்கு சஞ்சு… ஒரு மாசம் கூட ஆகல பாருங்க காளை கணக்கா எவ்வளவு கம்பீரமா அழகா இருக்கு…. “.
“மூனு காளையும் தான் விளையாடுது… உன் அண்ணணுங்க மட்டும் எப்படி இருக்கானுங்க…”
“நீங்க மட்டும் எப்படி இருக்கீங்களாம்?”, என இதழி ஒரு புருவம் உயர்த்தி வினவ அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ முகை பேபி”, என அவளிடம் வழிந்தான்.
“அய்யே… தொடைங்க… வாங்க கீழ போலாம்”, என முன்னே நடந்தவளை தடுத்து, “இரு அவனுங்க விளையாட்ட முடிக்கட்டும் அப்பறம் போலாம்”, என கூறிவிட்டு போனில் அவர்கள் விளையாடுவதை படம்பிடிக்க ஆரம்பித்தான்.
இங்கே கீழே யாத்ராவும் அர்ஜுன் பேச ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் வீடியோ எடுத்தபடி தான் இருந்தாள்.
தீரன் துள்ளியபடி ஆதிக்கும் அர்ஜுனுக்கும் நடுவில் நின்று கொண்டு தலையை ஆட்டியும் இருவரையும் முட்டியும் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தது.
நந்துவும் யாத்ராவிடம், “இவனுங்கள திருத்தமுடியாது”, எனக் கூறினான்.
“ஏன் இப்ப திருந்தற அளவுக்கு என் டார்லிங்ஸ் என்ன பண்ணிட்டாங்க?”, என கேட்டாள்.
மேலே இதழி சொன்னதை நந்து யாத்ராவிடம் கூறினான்..
“இரண்டு பேரும் மன்னனா இருந்திருக்க வேண்டியவங்க… பட் இப்ப அந்த காலம் இல்ல.. அதான் இப்படி செஞ்சிருப்பாங்க… ரைட் விடு… நீ நான் சொன்னத கலெக்ட் பண்ணிட்டு கூப்டு… நாம நைட் பாக்கலாம்”, என அவனை அனுப்பி வைத்தாள்.
அவர்கள் இன்னும் விளையாடியபடி இருப்பது கண்டு ,”ஸ்டாப்”, என யாத்ரா கத்தவும் அவளிடம் ஓடியது.
“தீரா… வேணாம்டா… காலைலயே நாம விளையாடிட்டோம்… சாயந்திரம் தான் இனி.. நான் வரமாட்டேன்…. “, என யாத்ரா ஓடவும் தீரன் அவளை துறத்த அர்ஜுனும் ஆதியும் தீரனை உற்சாகப்படுத்தி உடன் ஓடிக்கொண்டிருந்தனர்.
“சாப்பாடு ரெடி”, என கயல் கத்தவும் யாத்ரா தீரன் மேல் ஏறி குதித்து வீட்டிற்குள் ஓடினாள்.
தீரன் அவள் சென்றதைப் பார்த்து முழித்தபடி நின்றது. அர்ஜுனும் ஆதியும் அதைப் பார்த்து சிரிக்க அவர்களை தலையால் முட்டியுது.
“சரி சரி….அவ சாப்பாடுன்னு சொன்னா ஓடிருவா… நீயும் போய் தண்ணி குடி”, என ஆதி தீரன் முதுகில் நீவிவிட்டபடிக் கூறினான்.
‘முடியாது’ என தலையை ஆட்டிவிட்டு மீண்டும் துள்ளியது.
“போதும் தீரா…. சாயந்திரம் விளையாடலாம். உன் அம்மா பாரு உனக்காக காத்திருக்காங்க… போய் பால் குடி போ…. “, என அர்ஜுன் சமாதானப்படுத்தினான்.
அவனையும் தலையில் முட்டி கீழே தள்ளி விளையாட அழைத்தது.
“என்னடா இவன்?”, என அர்ஜுன் கேட்க, “நீ எழுந்திரி… இரண்டு பேரும் நடந்தா கூடவே வருவான். அங்க அவன விட்டுட்டு உள்ள போலாம்”, என ஆதி கூறவும் இருவரும் தீரன் மேல் கைபோட்டபடி அதனிடம் பேசிக்கொண்டே நடந்தனர்.
இருவரும் இரண்டு பக்கம் நடக்க தீரன் சந்தோஷமாக துள்ளியபடி நடுவில் நடந்தது.
சாமியய்யா கயிற்றை இழுத்துக்கொண்டு சென்று கட்டினார்.
“நீ கொஞ்ச நேரம் தூங்கு.. நாம சாயந்திரம் விளையாடலாம்”, என இருவரும் கூறிவிட்டு குளிக்கச் சென்றனர்.
நானிலன் காலேஜ் கிளம்பி வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றான். அருகில் ஒரு வயோதிகர் வந்து அமர்ந்தார்.
“ஐயா … ரொம்ப காலமா எங்கம்மா காத்திருக்கா… வழி சொல்லுயா”, என அவனிடம் கேட்டார்.
“எந்த ஊருக்கு நீங்க போகணும் தாத்தா?”, நானிலன்.
“உனக்கு தெரிஞ்ச ஊரு தான்… சீக்கிரம் வழி காமி…. “
“எந்த ஊருன்னு சொன்னாதானே தாத்தா வழி சொல்ல முடியும்”, நானிலன் அலுத்தபடி பதில் சொன்னான்.
“குடும்பத்துல துக்கம் நடந்துடிச்சின்னு சலிச்சிக்கறியா யா?”, அவன் கண்களை பார்த்தபடிக் கேட்டார்.
“யார் நீங்க?”, என அதிர்ச்சியுடன் கேட்டான்..
“எல்லாம் தெரியும் கண்ணு…. நீ அம்மாவ தேடி போற வழிய கண்டுபிடி உன் குடும்பத்த சுத்துன விஷக்கொடி பட்டுபோயிறும்”, எனக் கூறியபடி அங்கிருந்து எழுந்து நடந்தார்.
“தாத்தா…..தாத்தா….”, இவன் அழைக்க அழைக்க அவர் திரும்பாமல் நடந்து சென்று ஒரு திருப்பத்தில் மறைந்தார்.
“டேய் நிலன்… வாடா…. பஸ் வந்துடிச்சி”, என தோழன் அழைக்கவும் குழப்பத்துடன் பஸ்ஸில் ஏறினான்.