15 – ருத்ராதித்யன்
ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்..
“எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?”, என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி.
“பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்”, என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்.
“ஏன்டா அவ சொன்னா உனக்கு அறிவில்ல.. உன் பைக் வீட்ல இருந்து எடுத்துட்டு போனல்ல.. அது எங்க?”
“பைக் பூவழகி சொன்ன இடத்துல நிறுத்திட்டு வந்துட்டேன் பாஸ்…. இன்னொரு மிஷன் வந்திருக்காம்…. அதான் முன்னேற்பாடு பண்றோம்”, என அவன் திறந்த புத்தகமாக கூறவும் ஆதி யாத்ராவை முறைத்தபடி அர்ஜுனுக்கு அழைத்தான்.
“டேய் என்னடா நடக்குது…? நீ தான் கேஸ் விஷயமா போறேன்னு போன… இப்ப இவ இங்க ஜான்கிட்ட என்னென்னமோ சொல்லிட்டு இருக்கா…. காட்டுக்குள்ள போறேன்னு நின்னுட்டு இருக்கா… நான் இப்ப அனுப்பமாட்டேன். அதை அவளுக்கு புரியற மாதிரி சொல்லி வீட்டுக்கு கிளம்பி வரச்சொல்லு என்கூட”, எனக் கூறிவிட்டு யாத்ராவிடம் போனை எறிந்தான்.
“அத்தான்…. எவ்ளோ காஸ்ட்லி போன்… நானே உங்களுக்காக பாத்து பாத்து வாங்கி குடுத்தேன்.. அதை இப்படி தூக்கி போட்றீங்களே…. கொஞ்சம் கூட பொறுப்பில்ல அத்தான் உங்களுக்கு”, என அவனைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்தபடி பேசிவிட்டு, “செழியன் … என் டார்லிங் குடுத்த புது கேஸ். அதுக்கு தான் பத்து நாள் லீவும்… ஜான் என்கூட இருக்கான்… அத்தானுக்கு புரியவை… “, எனக் கூறிவிட்டு மீண்டும் ஆதியிடம் அருகில் வந்து அவன் கைப்பிடித்து போனைப் பத்திரமாக வைத்தாள்.
“என்னால இப்படி இந்த நேரத்துல அனுப்ப முடியாது அர்ஜுன் .. சொல்லு அவகிட்ட”, என மீண்டும் அவள் கையில் கொடுத்தான்..
“நானும் சொல்லிட்டேன் செழியன் நீங்க சொல்லுங்க”, என மீண்டும் அவன் பக்கம் தள்ளினாள்.
இப்படியாக பதினைந்து நிமிடம் கழித்து ஆதி ஒருவாராக சமாதானம் ஆகி, “டேய் அஜ்ஜு.. எதுவரை போய் இருக்க?”.
“நாங்க டில்லில இறங்கிட்டோம் ண்ணா”, என நந்து பதிலளித்தான்.
“என்னடா நீ பேசற… அவன் எங்க?”.
“போன் எடுத்தா மொத எங்கள பேச விடணும் ண்ணா…. நீங்க இரண்டு பேரே பேசறதுக்கு இவனுக்கு ஏன் போன் போட்றீங்க? அவன் டில்லில இறங்கினதும் போன் என்கிட்ட குடுத்துட்டான்.. தூங்கிட்டு இருக்கான். அந்த பிசாச காட்ல தள்ளிவிட்டுட்டு நீங்களும் வீட்ல போய் தூங்குங்க”, எனக் கூறி நந்து வைத்துவிட்டான்.
யாத்ராவும் ஆதியும் சிரித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,
“அத்தான் நீங்களும் இந்த தடவை கண்டு பிடிக்கல தானே?”, எனக் கேட்டாள்.
“ஆமா…. அவன் ஹலோன்னு சொல்றப்ப நான் சரியா கவனிக்கல”, எனக் கூறிவிட்டு சிரித்தான்.
வளரும் மதியின் ஒளியில் அவன் சிரித்தபடி ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மற்றொரு கையை காரில் ஊன்றி சாய்ந்து நிற்கும் அழகைக் கண்டு யாத்ரா ஒரு நொடி திகைத்துவிட்டாள்.
இத்தனை அழகும், கம்பீரமும் உள்ள ஒருவன் தன்னை குழந்தையாக பாவித்து, அனைத்தும் செய்வது கண்டு அவனுக்கு ஏற்ற வாழ்க்கைதுணை தன் மூலமாகவே அமையவேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் தாஸ் ஐவருடன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
“ஹேய் தாஸ்… ஆளே மாறிட்ட… உன் தொப்பை எல்லாம் எங்க போச்சி?”, என யாத்ரா அவன் கைக்குலுக்கி விசாரித்தாள்.
“அதுலாம் நீங்க என்னை அடிச்சப்பவே குறைய ஆரம்பிச்சிரிச்சி யாத்ராம்மா… நீங்க நல்லா இருக்கீங்களா?”, என நன்றிப் பார்வையுடன் கேட்டான்.
“எனக்கு என்ன குறைச்சல் தாஸ்? நான் எது சொன்னாலும் செய்யதுறதுக்கு ஜான், எனக்கு வேணும்கிறத பாத்து பாத்து செய்யறதுக்கு என் அத்தான், அன்பா திட்றதுக்கு நாலு குடும்பம், என்னை எல்லையில்லாம காதலிக்க என் செழியன்… இத்தனை பேர் இருக்கறப்ப எனக்கு என்ன கவலை?”, எனக் கூறிவிட்டு கண்களை கூர்மையாக்கினாள்.
இடதுபக்க காட்டில் வெளிச்சம் விட்டு விட்டு தெரியவும், “அத்தான் நான் கிளம்பறேன். தாஸ் இரண்டு பேர மலைக்கு அந்த பக்கம் அனுப்பி அவங்க எந்த ரோட்ல போறாங்கன்னு பாக்க சொல்லு. ஜான் வா போலாம்… தாஸ் நீ அத்தான வீட்ல விட்டுட்டு எனக்கு போன் பண்ணு”, எனக் கூறிவிட்டு தோள்பையை மாட்டியபடி காட்டிற்குள் ஓடினாள்.
ஜானும் ஆதியிடம் தலையசைத்துவிட்டு அவள் பின்னாலே ஓடினான்.
ஆதி, “நான் போய்க்கறேன் நீ அவளுக்கு துணையா போ தாஸ்”, எனக் கூறி வண்டி எடுத்தான்..
“இல்லைங்கய்யா… யாத்ராம்மா ஏதோ காரணமா தான் என்னை வீட்டுக்கு போக சொல்லி இருக்காங்க”, எனக் கூறிவிட்டு ஆதியை தொடர்ந்து இல்லம் வந்தான்.
“அம்மா…. ஆதி ஐயா வீட்டுக்குள்ள போயிட்டாரு… அடுத்து என்ன பண்றது”, என தொலைபேசியில் அழைத்துக்கேட்டான்.
“வீட்ட சுத்தி புதுசா யாராவது நடமாட்றாங்களான்னு பாரு தாஸ்…. என்ன பண்றாங்கன்னு மட்டும் கவனி…. ஆள போட்டோ எடுத்து ஜான் நம்பருக்கு அனுப்பு”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
தாஸ் தன்னுடன் வந்த மற்ற இருவரையும் அழைத்து விவரம் கூறி ஆங்காங்கே பதுங்கி இருந்து நோட்டம் விடச் சொன்னான்.
டில்லியில் இறங்கியதும் அர்ஜுன் பரிதியை தொடர்பு கொள்ள முயன்றுக்கொண்டிருந்தான்.
“என்னடா லைன் எடுக்கலியா இன்னும்?”, நந்து.
“இல்ல…. இன்னும் ஸ்பாட் எவ்வளவு தூரத்துல இருக்கு?”, அர்ஜுன் அவனுக்கு கொடுத்திருந்த பைல்களை ஆராய்ந்தபடிக் கேட்டான்.
“இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்…. இந்த கேஸ் நமக்கு எதுக்கு டா குடுத்திருக்காங்க? இது வைல்ட் லைப் க்ரைம் டிபார்ட்மெண்ட் தானே பாக்கணும்?”, சிதறி கிடக்கும் மிருக உடல்களின் புகைப்படங்களைப் பார்த்தபடிக் கேட்டான் நந்து.
“இது பாரு….. “, என மற்றொரு படத்தைக் காட்டினான்.
அதில் ஒரு மனிதன் அவன் மேல் தோள் நீக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்தது.
அதைக் கண்ட நந்துவும் அர்ஜுனும், “இது அதுவா?”, எனக் கேட்டான்.
“இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்”, என அர்ஜுன் கூறிவிட்டு செந்திலுக்கு அழைத்தான்.
“சொல்லு அர்ஜுன்… என்ன பண்ற? விஷேசம் முடிஞ்சதா?”, உற்சாகமாக கேட்டான்.
“அதுல்லாம் நல்லா நடந்தது செந்தில். பரிதிகிட்ட பேசணும்… நான் ட்ரை பண்ணேன்… கிடைக்கல… அதான் உங்களுக்கு கூப்டேன்”
“பரிதி மினிஸ்டர் கூட மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா… நான் பாத்துட்டு சொல்றேன் அர்ஜுன்”, எனக் கூறி வைத்துவிட்டான்.
அர்ஜுன் யோசனையுடன் வெளியே பார்வையைப் பதித்தபடி வந்தான்.
மதுரை தாண்டி இருந்த அந்த லேப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு உயிரினம் மீண்டெழுந்துக் கொண்டிருந்தது.
அதன் நீளம் மட்டும் 30 அங்குலம் இருக்க, அதன் வால் கொடுக்கு ஒரு அடி உயரத்தில் நீண்டு இருந்தது.
முன் கொடுக்கும், அதன் கால்களும், கருநீல நிறமும் கொண்ட தேளைக் கண்டாலே ஜன்னி வரும் அளவிற்கு பேரழகாய் இருந்தது.
முன்கொடுக்கை தட்டும் சத்தமும், அடைத்துவைத்திருந்த பெட்டியை அது இடிக்கும் போது ஏற்படும் சத்தமும் , அந்த நள்ளிரவு நேரத்தில் பெரும் பீதியை கிளப்பியது.
அந்த பெட்டியை பயத்தோடு பார்த்தபடி சகஸ்ராவும், கண்மயாவும் அதனருகில் அதன் நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.
“மாயா….. நாம கண்டிப்பா இங்க இருக்கணுமா?”, சகஸ்ரா பயத்துடன் முணுமுணுத்தாள்.
“நம்ம இங்க இருந்து தான் ஆகணும் சரா…. தவிர முக்கயமான வேலை நமக்கு இங்க தான் இருக்கு”, எனக் கூறியபடி மாஸ்க்கை மேலேற்றிக்கொண்டு அந்த பெட்டியின் ஒருபக்க வாயிலை திறக்க, அந்த தேள் வேகத்துடன் பெரிய பெட்டிக்குள் நுழைந்தது.
அங்கிருந்த எலிகளை அது முன்கொடுக்கைக் கொண்டு ஒரே வெட்டில் இரண்டு துண்டாக்கியது கண்டு சகஸ்ராவிற்கு பேச்சு சுத்தமாக வரவில்லை.
“சபாஷ்….. கண்மயா…. சொன்னமாதிரி சரியா ஆக்டிவேட் பண்ணிட்டியே”, என அவளை பாராட்டியபடி ஒருவன் அங்கே வந்தான்.