16 – காற்றின் நுண்ணுறவு
மெல்ல வல்லகி மனதில் நடந்ததை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, பாலா சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்துக்கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் ஏறிய உடன் தூங்கியிருந்தாலும் இடையில் கண்விழித்தபோது அவர்களை யாரோ கண்காணிப்பது போல ஒரு உணர்வு தோன்ற தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து நான்கு சீட் பின்னே அமர்ந்திருந்தவனின் பார்வை இவர்களிடமே நிலைத்திருந்தது.
நடுஇரவில் அவன் உறங்காமல் தங்களையே பார்ப்பதை உணர்ந்தவள் அப்போதிருந்து உறங்காமல் மற்ற யாரேனும் தங்களை கண்காணிக்கிறார்களா என சுற்றிலும் பார்வையை விட்டாள்.
அவன் அவ்வப்போது எதையோ போனில் டைப் செய்வது கண்டு சந்தேகம் கூடியதால் நித்திரையை துரத்திவிட்டு வல்லகியின் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
சில மாதங்களுக்கு பிறகு தாய் தந்தையை பார்க்கப்போகும் ஆர்வமும், தாயிற்கு முடியாத நேரத்தில் உடனிருந்து கவனிக்கமுடியாமல் போன வேதனையும் வல்லகியை சுற்றம் மறக்கச் செய்திருந்தது.
இவர்கள் சொந்த ஊருக்கு ஏறும் பஸ்ஸில் அவனும் ஏறி பயணித்ததால், இன்னும் உள்ளுக்குள் பயந்துபோன பாலா வல்லகியைப் பார்த்தாள்.
அவள் இன்னும் ஏதோ யோசனையில் இருப்பது கண்டு சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே வந்தவள், இத்தனை நேரம் தொடர்ந்து வந்தவன் பின்தொடரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்து வல்லகியையும் முடுக்கினாள்.
“வா வகி.. சீக்கிரம் நடக்கலாம்”
“ம்ம்ம்…. “, என்றபடி அப்போது தான் பாலாவின் முகத்தை பார்த்த வல்லகி அவளின் முகத்தில் இருக்கும் பயத்தைக் கண்டு , “என்னாச்சி பாலா? ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்து இருக்கு? பயந்தமாதிரி இருக்க…”, என சந்தேகமாகக் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல…. இவ்வளவு நாள் கழிச்சி ஊருக்குள்ள வரோம். அப்பா அம்மாவ சீக்கிரம் போய் பாக்கலாம்ணு தான். வேகமா நட…”
“அவங்கள பார்க்க ஆர்வம் வந்தா சந்தோஷம் தானே வரணும்.. உனக்கு ஏன் பயம் வருது?”
“இந்த க்ராஸ் கொஸ்டினுக்கு கொறச்சல் இல்ல….. சுத்தி நடக்கறத கவனிக்காம எந்த உலகத்துல இருக்காளோ இவ…”, என முனகியபடி நடந்தவளை சட்டென வல்லகி பிடித்து தன் பக்கம் இழுத்தாள்.
கார் ஒன்று அவர்களை உரசியபடிக் கடந்துச் சென்றது.
“நீ எந்த உலகத்துல இருக்க பாலா…. ஒரு செகண்ட் கவனிக்காம போயிருந்தாலும் அடிபட்டிருக்கும்…. ஜாக்கிரதையா நட… நீ இந்த பக்கம் வா என தனக்கு மறுபக்கம் அவளை நடக்கச் சொல்லி இழுத்து நிறுத்தினாள்.
“வகி….. “
“சொல்லு பாலா….”.
“நம்மல யாரோ பாலோ பண்ற மாதிரி இருக்கு… “
“யாரு பாலா?”
“தெர்ல… ஒருத்தன் பஸ்ல இருந்து நம்மல நோட் பண்ணிட்டே வந்த மாதிரி இருந்தது. நம்ம ஊரு பஸ்ல கூட ஏறினான். ஆனா எங்க எறங்கினான்னு தெர்ல”, மீண்டும் சுற்றிலும் பார்த்தபடிக் கூறினாள்.
“நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனதுல இருந்து நிறைய பேரு நம்மல பாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க வகி…. நீ முன்ன பாத்து நட… “, என அமைதியாக கூறிவிட்டு நடந்தாள்.
“என்ன சொல்ற? அப்ப இருந்து யாரு பாலோ பண்றாங்க? ஏன் பண்றாங்க?”, பாலா அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“தெர்ல… “, எனக் கூறியவள் சட்டென நின்று வேகமாக மூச்செடுக்க ஆரம்பித்தாள்.
ஏதேதோ காட்சிகள் மங்கலாக தெரிந்தது. சிறிது நேரத்தில் உடல் அதிர்ந்து துள்ளிக்கொண்டு அவ்விடம் விட்டுத் தள்ளி நின்றாள்.
வல்லகி அதிர்ந்து அவ்வாறு தள்ளி நிற்கவும் தன் கைப்பையில் இருந்த மாத்திரை எடுத்துக் கொடுத்தாள்.
“வே …. வேணாம்….. இங்க….. இங்க என்னமோ நடந்திருக்கு…. சீக்கிரம் அப்பாவ கேளு”, என தலையை பிடித்தபடி அவ்விடத்திலேயே அமர்ந்துக்கொண்டாள்.
வல்லகி வீட்டின் தெருமுனை தான் அது. இரண்டாவது வீடே வல்லகியுடையது என்பதால் பாலா அவசரமாக ஓடினாள்.
அந்த நேரம் வல்லகியின் தந்தை எதேச்சையாக வெளியே வர, பாலா ஓடி வருவதுக் கண்டு பதற்றமடைந்து, அவரும் அவளை நோக்கி ஓடி வந்தார்.
“என்னடா வதனிம்மா… ஏன் இப்படி ஓடி வர்ற? வல்லகி எங்க?”, என பதற்றமாகக் கேட்டார்.
“அப்பா…. அவ அங்க இருக்கா… அந்த இடத்துல எதாவது நடந்ததா?”, எனக் கேட்டபடி அவரை அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்தாள்.
“செல்லம்மா…. ஏன்டா இங்க உட்கார்ந்திருக்க? என்னாச்சி? அடிபட்டது வலிக்குதா டா?”, என அவளை அணைத்து அவளை ஆராய்ந்தபடிக் கேட்டார்.
“அப்பா…. இங்க….. இங்க என்ன நடந்தது? ஏதோ மனச பாதிக்கற விஷயம் அதீதமா நடந்திருக்கு… உங்களுக்கு தெரியுமா?”, இம்முறை தன்னைத் திடப்படுத்தியபடிக் கேட்டாள்.
“இங்க என்னடா நடந்திருக்கும்? நீ ஏன் இப்படி கேக்கற? எனக்கு புரியலடா….. நீங்க வீட்டுக்கு வாங்க… எந்திரி டா செல்லம்மா”, என அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
இன்னும் வல்லகி அதே தோரணையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்க பாலா தான் அவருக்கு அவளுக்குள் நடக்கும் மாற்றங்களைக் கூறினாள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் அவளின் ரிப்போர்ட்களைக் கேட்டார்.
அனைத்தையும் ஆராய்ந்தவர் யாருக்கோ அழைத்து தன் வீட்டிற்கு இன்று கட்டாயம் வந்தே ஆகவேண்டும் என கட்டளையிட்டுவிட்டு வல்லகியின் அருகில் வந்து அமர்ந்தார்.
“செல்லம்மா…. உன்ன செக் பண்ண டாக்டர் நம்பர் குடுடா…..”
அவரிடன் தன் மொபைலை கொடுத்துவிட்டு தன் தாயைக் காணச் சென்றாள்.
அவளுக்கு முன் பாலா அவரின் அருகில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“பாத்தீங்களாம்மா… என் சமையல் சாப்டு வகி எப்படி குண்டாகிட்டான்னு… நான் அவ்ளோ நல்லா சமைக்கறேன்….. நான் சொன்னா நம்பமாட்டேன்னு சொன்னீங்க நீங்களே பாருங்க”, என வல்லகியை அருகில் அமரச் சொல்லிவிட்டு ஹாலிற்குச் சென்றாள்.
வகி அம்மாவின் கால்கள் செயல் இழந்து இருப்பதுக் கண்டு கண்களில் குளம் கட்டியது.
தாயின் தோளில் முகம் புதைத்து சத்தமாகவே அழ ஆரம்பித்திருந்தாள்.
அவளின் அழுகை அவளுள் அழுத்திக்கொண்டிருக்கும் வேதனைகளைக் கண்ணீர் வழியே வெளியேற்றியது.
அரை மணிநேரம் வரை அவளை யாரும் சமாதானம் செய்யவில்லை அழக்கூடாது எனவும் கூறிவில்லை.
அவள் மனதை அழுத்தியிருக்கும் பாரம் குறைய அவளை நன்றாக அழ விட்டனர்.
ஹாலில் இருந்த வல்லகியின் தந்தையும் அவள் அழும் சத்தம் கேட்டு கண்கலங்கினாலும், தன் ஒரு மகளையாவது பாதுகாத்திட வேண்டும் என உறுதி கொண்டு நிரல்யனைத் தொடர்புகொண்டார்.
“ஹலோ…. நான் தமிழோவியன் வல்லகியோட அப்பா பேசறேன்… “
“சொல்லுங்க சார்.. நான் டாக்டர் நிரல்யன் “
“உங்ககிட்ட என் பொண்ணு ஹெல்த் விஷயமா கொஞ்சம் பேசணும். இப்ப பேசலாமா?”, எனக் கேட்டார்.
“அண்ணா…. நான் ரெடி…. வாங்க போலாம்… ஸ்கூல்க்கு டைம் ஆச்சி”, என சாக்க்ஷி போசும் சத்தம் போனிலும் கேட்டது.
“சாக்ஷி ட்ரைவர கூட்டிட்டு போறியா டா? அண்ணா நாளைக்கு கூட்டிட்டு போறேன்…”, என நிரல்யன் தயக்கத்துடன் கூறினான்.
“இன்னிக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் அண்ணா…. நீ தானே அண்ணா வரணும்.. நீ இல்லாம போனா திட்டுவாங்கண்ணா… ப்ளீஸ்ண்ணா… ஒன் ஹவர் மட்டும் வாங்க…. “, என சாக்க்ஷி கெஞ்சலாக கேட்பது உணர்ந்து,”டாக்டர் நிரல்யன் நீங்க உங்க சிஸ்டர் வர்க் முடிச்சிட்டு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க… நாம பேச ஆரம்பிச்சா லேட் ஆகும்”, எனக் கூறிவிட்டு போனை வைத்தார்.
அவரின் குரலில் இருந்த எதுவோ ஒன்று நிரல்யனை மறுமொழி உரைக்க விடாமல் தடுத்து, அவர் கூறியது போல செய்ய வைத்தது.
“அப்பா…. அந்த டாக்டர் யார்கிட்டயோ வகிய காட்டணும்னு சொன்னாரு. அதையும் மறக்காம கேளுங்க…. அவ சில சமயத்துல மூச்சு விட கஷ்டப்படறது பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா”, பாலா தாளாத வருத்தமும் வலியும் கலந்து கூறினாள்.
“சரிடா…. உங்கம்மாவும் அப்பாவும் ஊருக்கு போய் இருக்காங்க டா. நீ இங்கயே இரு… நான் போய் சாப்பிட ரெடி பண்றேன் குளிச்சிட்டு வாடா”, எனக் கூறிவிட்டு தன் மனைவி இருக்கும் அறையை எட்டிப் பார்த்தார்.
வல்லகி தாயின் தோள்களைக் கட்டியபடி உறங்கி இருந்தாள்.
மனைவி நிலவரசியைப் பார்த்தவர் அவர் முகத்தில் இருந்த பாதி முறுவல், மீதியைத் தேடியது.
மீதி முறுவலுக்கு காரணமாக வேண்டியவள் ராகவியை தன்னுடன் இறுக்கமாக பிணைத்தபடி அந்த கட்டிடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுக் கொண்டிருந்தாள்.
“ரா… சீக்கிரம் அந்த கயிற பிடி… அத பிடிச்சிட்டு சீக்கிரம் இறங்கு … “, என ஹஸ்கி குரலில் கூறியபடி சத்தம் எழுப்பாமல், தானும் இந்த கயிற்றில் இருந்து அடுத்த கயிற்றிற்குத் தாவ முயன்றாள்.
ராகவி பயந்தபடி , “பேபி… நாம தப்பிக்கவேணாம். மாட்டினா மறுபடியும் அவன் உன்னை அடிப்பான்..”, என அழுதப்படிக் கூறியவளை தீயென முறைத்துவிட்டு அவளை மலமலவென கீழே இறங்க வைத்தாள்.
அன்று ஏனோ காவலுக்கு நின்றவர்கள் சற்று அசட்டையாக இருந்ததால் சட்டென கையில் கயிற்றை வைத்து மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இறங்க முடிவெடுத்து விட்டாள் சுடரெழில் நாச்சியார்.
“காலைல தானே அவ்வளவு அடி விழுந்து காயம் ஆச்சி… மறுபடியும் ஏன் பேபி இப்படி பண்ணணும்? “, தரையில் குதித்துவிட்டுக் கேட்டாள்.
“காயத்துக்கு வீட்ல போய் பத்து போட்டுக்கலாம்னு தான்…. பேசாம வா…. “, என அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்த கார் ஒன்றில் டிக்கி கதவை திறந்து இருவரும் அமர்ந்துக்கொண்டனர்.
“இது எங்க போகும்? இது அவனுங்க கார் தானே….”, ராகவி.
“ஸ்ஸ் “, என வாயில் விரல் வைத்து காட்டிவிட்டு முன்னே காட்டினாள்.
யோகேஷ்வரன் அவசரமாக வண்டியில் வந்து ஏறி, உடனே புறப்பட ஆணையிட்டான்.
“கோ பார்ஸ்ட்…. பாஸ் வந்திருப்பாரு…. இடியட்ஸ்… அவர் போன் பண்ணத ஏன் யாரும் இவ்வளவு நேரம் எனக்கு சொல்லல? ஷிட் ஷிட்….. அவர் மட்டும் நான் அங்க போறதுக்கு முன்ன வந்திருந்தா அத்தனை பேரும் செத்தீங்க “, என மிரட்டலும் புலம்பலுமாக தனியார் ப்ளைட் நிற்கும் ஏர்ட்ரம் சென்றான்.
அவன் உள்ளே நுழைவதற்கும் ப்ளேன் தரை இறங்குவதற்கும் சரியாக இருந்தது.
நீளமான பெருமூச்சொன்றை விட்டுவிட்டு காரைவிட்டு இறங்கி நின்றான்.
அதித் ஒவிஸ்கர் என்று நினைந்திருந்தவனுக்கு ப்ளைட்டில் இருந்து இறங்கி வருபவனைக் கண்டு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.
அவன்…… ம்ரிதுல் ……..