17 – அகரநதி
காதலில் விழுந்த அகரன் முதல் முறையாக நதியாளின் முன்நெற்றியிலும், கன்னத்திலும் இதழ் முத்திரைப் பதித்தான்.
அகரனின் செயலில் திகைத்து நின்ற நதி என்ன சொல்வதென அறியாது உறைந்து நின்றாள்.
அகரனும் அவ்விடம் விட்டு நகராது அங்கேயே அவளின் முகத்தை பார்த்தபடி நிற்க, இப்படியே இன்னும் சில நொடிகள் சென்று இருந்தாலும் என்ன நடந்து இருக்குமோ?
நல்லவேலை சரண் சத்தம்போட்டு அவர்களின் நிலையைக் கலைத்து,” யாள்…உன்ன பாக்க வரதன் வந்து இருக்கான். போய் பேசு.. நான் ஜுவல்ஸ் எடுத்துட்டு வரேன். டேய் அகர் தேவுக்கு உன் டிரஸ் குடு. சேஞ்ச் பண்ணணுமாம்”.
நதி சற்றுக் குழப்பத்துடன் அவ்விடம் விட்டு நகரலாமா வேண்டாமா என யோசித்தபடி நிற்க, மீண்டும் சரண் அவளை அழைத்து கீழே அனுப்பிவிட்டு அகரனை அவன் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாற்றினான்.
“ஏன்டா…..ஏன் இப்படி பண்ண?”, சரண்.
“நான் என்னடா பண்ணேன்?”, அகரன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கேட்டான்.
“இன்னும் இரண்டு செகன்ட் நான் லேட் பண்ணி இருந்தாலும் இந்நேரம் உன் மூஞ்சில வாஸ்துவ மாத்தி வச்சிருப்பா டா என் தங்கச்சி. நான் தான் காலைலயே சொன்னேன்ல எக்குதப்பா எதுவும் செய்யாதன்னு”, சரண் பொறிந்துத் தள்ளினான்.
“நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு இப்படி திட்ற”,அகரன்.
“இதுக்கு மேல என்னடா பண்ணணும்? எரும மாடே…. அவளுக்கு முத்தம் குடுத்தது தப்பு இல்ல?”, சரண்.
“டேய் மச்சான்… காலைல இருந்து நதி கூடவே இருக்காளா. இன்னிக்கு வேற ரொம்ப அழகா புடவை கட்டிட்டு இருந்தாளா… அதான்டா சின்னதா ஒரு முத்தம் அதுவும் இரண்டு பேரும் விழற சமயத்துல அவ கண்ண பாத்தேனா எனக்கு சுத்தி வேற எதுவுமே தெரியல, தப்பாவும் தோணலடா மனசுல பட்டத பண்ணிட்டேன். யாஹூ…… செம கிக்கா இருக்கு மச்சான்”, என லேசாக வெட்கப்பட்டுக் கூறினான் அகரன்.
“கருமம் கருமம் இந்த கன்றாவிய வேற நான் பாக்கணுமா…. அவளும் ஏதோ ஷாக்ல இருந்தா அதனால இப்போதிக்கு தப்பிச்ச. எப்ப எப்படி ரியாக்ட் ஆவான்னு சத்தியமா எனக்கு தெரியாது. எதுக்கும் ஜாக்கிரதையா என்கூடவே இரு. அவகூட தனியா போகாத அப்பறம் உன் உசுருக்கு உத்திரவாதம் இல்லடா மச்சான். சொன்னா கேளு டா”, சரண்.
“என் நதி அப்படி எல்லாம் பண்ணமாட்டா டா. அவளுக்கும் என்மேல லவ் இருக்கு டா. அவ கண்ண பாத்து நான் எப்படி உலகத்த மறக்கறேனோ, அப்படி தான் அவளும் என் கண்ண பாத்தா உறைஞ்சு போய் நிக்கிறா.. அது லவ் தானேடா?”, அகரன் சிறுபிள்ளைப் போலப் பேசினான்.
“இங்க பாரு. அவ பத்து வயசு குழந்தை இல்ல கிஸ் பண்ணா சிரிச்சிட்டே கம்முன்னு போறதுக்கு. இதுக்கு மேல இப்படி எல்லாம் பண்ணாத. அவ்வளவு தான் சொல்வேன். வா ஒரு செட் டிராக் பேண்ட் டீ சர்ட் அவனுக்கு குடு. அவ பக்கம் போகாம என் பக்கத்துலயே இருக்கற ஊருக்கு போற வரைக்கும். எதுவும் பேசாத. வா கீழ போலாம். அவ ஜுவல்ஸ் எடுத்துக்கறேன்”, எனக் கப்போர்டைத் திறந்து எடுத்துக் கொண்டு, சரண் முன்னே வர அகரன் தேவுக்குக் கொடுக்க டிரஸ் எடுத்து வந்தான்.
வரதன் முன்கட்டில் இருப்பதாக தேவ் கூறவும் அவள் முன்னே சென்றாள். அவளுக்குத் துணையாக தேவ்வும் உடன் வந்தான்.
“என்ன வரதா? என்னை பாக்கணும்னு சொன்னியா?”, நதியாள் அவனை அமரச் சொல்லித் தானும் அமர்ந்தாள்.
“உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்மா”, வரதன் தயங்கியபடிக் கூறினான்.
“தெளிவா பேசற. தெளிஞ்சிரிச்சா வரதா?”, நதியாள் சற்றே கடுமையுடன் கேட்டாள்.
வரதன் பதில் பேசாமல் அமைதியாக தலையைக் குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“தேவ் சமையல் கட்ல மோர் இருக்கும் சரண கொண்டு வர சொல்லுங்க”, நதியாள்.
“சரி யாள்”, எனக் கூறி தேவ் உள்ளே சென்றான்.
“வரதன்னா….”, நதியாள்.
“வரதன்னா….இங்க என்னை பாரு”, நதியாள்.
“சாரி பாப்பா”, வரதன்.
“இந்த பழக்கத்த விடுன்னு உன்கிட்ட அப்பவே சொன்னேன். நீ இன்னும் மாறலல்ல.. என் பேச்சுக்கு அவ்வளவு தான் உன்கிட்ட மரியாதை அப்படிதானே?”, நதியாள்.
“அய்யய்யோ அப்படி எல்லாம் இல்ல பாப்பா. முன்ன மாதிரி எல்லாம் இப்ப குடிக்கறது இல்ல. உடம்பு வலி அதிகமா இருந்தா தான். இன்னிக்கு பழைய சிநேகிதன பாத்தேன் அவன் கூப்பிட்டான்னு போய் தான்…… இனிமே இப்படி பண்ணமாட்டேன் பாப்பா”, சிறுபிள்ளைப் போல காரணம் கூறினார் வரதன்.
“நான் மன்னிக்கறதுக்கு இதுல எதுவும் இல்ல வரதன்னா….நீங்க தான் என்னை மன்னிக்கணும். அத்தனை பேர் முன்னாடி அவசரப்பட்டு அடிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, நதியாள் முகத்தில் வருத்தத்துடன் கூறினாள்.
“அச்சச்சோ… நீ ஏன் பாப்பா என்கிட்ட மன்னிப்பு கேக்கற. உனக்கு இல்லாத உரிமையா. சின்னதுல இருந்து உங்கள என் தோள்ல தூக்கி போட்டு வளத்தி இருக்கேன். சின்னவயசுல விளையாட்டுல தப்பு பண்ணா அடிப்பீங்களே அப்படி தான் எனக்கு இதுவும். இத பெரிசு பண்ணாதீங்க. கோவில்ல இப்படி நான் கலாட்டா பண்ணது தப்பு, அதான் உங்கள பாத்து ஒரு வாட்டி பேசினா பரவால்லன்னு வந்தேன்”, வரதன்.
“அப்படி உரிமை இருக்குன்னு வாய் தான் சொல்லுது. நான் சொல்றத மட்டும் கேக்கமாட்டேங்கறீங்க வரதன்னா. எப்ப நீ குடிபழக்கத்த விட்டுட்டன்னு தெரிஞ்சிக்கறனோ அப்ப உங்ககிட்ட உரிமையோட பேசறேன். இப்ப நான் யாரோ தான் உங்களுக்கு”, நதியாள்.
“இப்படியெல்லாம் சொல்லாத பாப்பா. எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. இனிமே சத்தியமா நான் குடிக்கமாட்டேன். என்னை நம்பும்மா. நீங்க யாரோன்னு மட்டும் சொல்லாதீங்க”, பதறியபடிக் கூறினார் வரதன்.
“அத நீங்க செஞ்சிப்பறம் பாக்கலாம். இதோ மோர் வந்துரிச்சி குடிச்சிட்டு இவங்க கிட்ட பேசிட்டு இருங்க”, என உள்ளே எழுந்துச் சென்றாள் நதி.
“சரணா மோர் குடுத்துட்டு ஒரு நிமிஷம் உள்ள வா”, நதியாள்.
“சரி யாள். அகர் இங்க இரு. வரேன்”, சரண்.
“வாங்க வரதன்னா. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சவுக்கியமா?”, அகரன்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க பாத்து பல வருஷம் ஆச்சி. இவங்க தான் மரகதம்மா பேரனா?”, தேவ்வை சுட்டிக்காட்டிக் கேட்டார் வரதன்.
“ஆமா. நான் சக்ரதேவ். இப்ப தான் உங்கள முதல்முறையா பாக்கறேன்”, சக்ரதேவ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நல்லது தம்பி”, வரதன்.
“வரதன்னா.நதி சின்னபொண்ணு கோவத்துல கை நீட்டிட்டா. மனசுல வச்சிக்காதீங்க”, அகரன்.
“அட என்ன தம்பி நீங்க? சின்ன புள்ளையா இருக்கறப்ப விளையாட்டுல தப்பு பண்ணாலும் இப்படி தான் அடிப்பாங்க பாப்பா. எனக்கு இது அப்படி தான். கோவில்ல நான் குடிச்சிட்டு கலாட்டா பண்ணது தப்பு. அதுக்கு தான் பாப்பாகிட்ட மன்னிப்பு கேக்க வந்தேன்”,வரதன் திறந்த மனதுடன் பதிலளித்தார்.
அகரனுக்கும், தேவ்விற்கும் சற்றே இது ஆச்சியமாகத்தான் இருந்தது. ஒரு சிறு பெண் தன்னை அடித்தும் அதை அவமானமாக கருதாமல், அந்தப் பெண்ணைக் குழந்தையாக பாவித்து பேசுவதும், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதும், எத்தகைய வெள்ளை மனம் இவருக்கு.
“தேங்க்ஸ் வரதன்னா…”, அகரன்.
“விடுங்க தம்பி. நான் கிளம்பறேன். நைட்டுக்கு போய் சமைக்கணும்”, என வரதன் கிளம்பும் சமயம் நதி அவரை அழைத்தாள்.
“வரதன்னா….ஒரு நிமிஷம் நில்லுங்க”, எனக் கைகளில் சில கவருடன் வந்தாள் நதி.
“என்ன பாப்பா இதுல்லாம்?”, வரதன்.
“இது உங்களுக்கு எடுத்து வச்சது தான். நேத்து குடுக்க மறந்துட்டேன். இந்தாங்க. இது அண்ணிக்கு . இது பசங்களுக்கு. இது உங்களுக்கு. அப்பறம் உங்ககூட வேலை செய்றவங்க எத்தனை பேருன்னு சொன்னா அவங்களுக்கும் துணி எடுத்து குடுத்துடுவேன். தாத்தா உங்கள கேக்கச் சொன்னாரு”, நதியாள் துணிக் கவர்களைக் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
“எதுக்கு பாப்பா இவ்வளவு?”, வரதன் சற்றே சங்கத்துடன் கேட்டார்.
“எதுவும் பேசக்கூடாது. அண்ணியும் பசங்களும் நாளைக்கு வரணும். எத்தனை பேருன்னு சொல்லிட்டு போங்க”, நதியாள்.
“மொத்தம் 15 பேர் பாப்பா”,வரதன்.
“சரி நைட் அவங்களுக்கு துணி வந்துடும். அங்க வந்து குடுத்துடறோம் நாங்க”, நதியாள்.
“சரி வரேன் பாப்பா. வரேன் தம்பி எல்லாருக்கும்”, என அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினார்.
அவர் சென்றதும் உள்ளே வந்த நதியாள் பாட்டியின் அறைக்கு சென்று ஓய்வெடுப்பதாகக் கூறிச் சென்றுப் படுத்துக் கொண்டாள்.
“அப்பாடா….. நல்ல வேல நீ பண்ணத அவ மறந்துட்டா போல”, சரண் அகரனின் காதில் முணுமுனணுத்தான்.
“அகன்….”, உள்ளிருந்து நதி குரல் கொடுத்தாள்.
“அச்சச்சோ… நியாபகம் வந்துரிச்சி போல டா. வா நானும் கூட வரேன்”, சரண்.
“இல்ல. நீ வெளியவே இரு. நான் மட்டும் உள்ள போறேன்”, அகரன் கூறிவிட்டு உள்ளே சென்றான்.
“இங்க வா”, என நதி அவளின் அருகில் அவனை அழைத்தாள்.
“பக்கத்துல வர சொல்றா அடிப்பாளோ?”, என மனதிற்குள் எண்ணியபடி முகத்தில் எதுவும் காட்டாமல் அருகில் சென்று அமர்ந்தான்.
“என்ன நதிமா?”, அகரன்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன எனக்கு என்ன குடுத்த நீ?”, நதியாள் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு வினவினாள்.
“அது இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்தியா அதான் பழக்க தோஷத்துல விஷ்….”, என அகரன் கூறிமுடிக்கும் முன் அவள் இவனின் கன்னத்தில் இதழ் பதித்து இருந்தாள்.
அவளின் இதழ் ஒற்றலில் இன்பமாக அதிர்ந்தவன் அவளை காதலுடன் திரும்பிப் பார்க்க, அவள் பத்து வயது சிறுமியென அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“நம்ம ஸ்கூல்ல இப்படிதான் அகன் தினமும் பண்ணுவோம். அதுவும் அந்த ஆனுவல் டேல நான் ஸ்கைபுளூ கலர் பிராக் போட்டுட்டு இருந்தப்ப நீ இப்படித்தான் கிஸ் பண்ண. அதே மாதிரி இன்னிக்கும்”, என அவள் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போனாள்.
அகரனுக்கோ மனதிற்குள் இவள் இதற்கு தன்னை அடித்து இருந்தால் கூட பரவாயில்லை என எண்ணினான்.
“சரண் சொன்னதுல சின்ன திருத்தம் . இன்னும் இவ பத்து வயசு குழத்தையா தான் இருக்கா”, என தனக்கு தானே பேசிக்கொண்டான் அகரன்.
“ஏன் அகன்?”, நதியாள்.
“இல்ல நீ இன்னும் பத்து வயசு குழந்தை இல்லன்னு சரண் சொன்னான்”, அகரன்.
“எங்க அவன்? வர சொல்லு. டேய்…சரணா…”, நதியாள்.
“என்ன யாள்?”,சரண் முழித்தபடி வந்து நின்றான்.
“நீ எப்படி டா அப்படி சொல்லலாம்?”, நதியாள்.
“நான் எப்படி சொன்னேன்?”, சரண்.
“நான் பத்து வயசு குழந்தை இல்லைன்னு”, நதியாள்.
“இல்லையா பின்ன?”, சரண்.
“என் அகனுக்கு நான் எப்பவும் பத்து வயசு குழந்தை தான். அதே ஸ்கூல்ல இப்ப கூட போய் ஜாயின் பண்ணிக்குவோம். இல்ல அகன்?”, என அகரனைக் கேட்டாள் நதி.
“அகரா…. இப்படியே போனா உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது. இவ அதே ஐஞ்சாங் கிளாஸ் போவா நாம டுவல்த் மறுபடியும் எழுதிட்டே இருக்கணும். எப்படி இவளுக்கு புரிய வைக்கறது”, என மனதிற்குள் எண்ணியபடி அவளைப் பார்த்தான் அகரன்.
அகரன் அமைதியாக இருப்பதைக் கண்டு ,” என்ன அகன் அமைதியாகிட்ட… பதில் சொல்லு”, நதியாள் அவன் தோளில் சாய்ந்தபடிக் கேட்டாள்.
“ஒன்னுமில்ல நதிமா. நீ என்ன டைட்டில் பேஸ்ல ப்ராஜெக்ட் பண்ணப்போற?”, அகரன் பேச்சை மாற்றினான்.
“இன்டீரியர் ஓட கார்டெனிங்கும் சேத்து பண்ணலாம்னு ஐடியா இருக்கு அகன். பட் எந்த அளவுக்கு வர்க்அவுட் ஆகும்னு தெரியல”, நதியாள்.
சரண் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியபடி வெளியே வந்தான்.
வந்தவன் முன் கட்டிற்கு வந்து வயிற்றை பிடித்துக்கொண்டுச் சிரித்தான். அவனின் சத்தம் கேட்ட அகரன்,”நதிமா.. இப்ப நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இதோ வரேன்”, என அறையை சாற்றிவிட்டு முன்கட்டிற்கு வந்தான்.
அங்கே தேவ் சரணை விநோதமாகப் பார்த்தபடி நின்று இருந்தான்,”இவன் ஏன் இப்படி சிரிக்கறான். உள்ள என்ன நடந்தது?”,என மனதிற்குள் எண்ணியபடி அகரன் வருவதைப் பார்த்தான்.
“நிறுத்து டா… இதுக்கு மேல சிரிக்காத… உன்ன கொன்னுடுவேன்”, அகரன் பல்லைக் கடித்தபடிக் கூறினான்.
“இல்ல மச்சான். நீ இப்ப அதே யூனிபார்ம் போட்டுகிட்டு ,அவளும் இரட்டை ஜடை போட்டுகிட்டு, பேக்அ மாட்டிகிட்டு இரண்டு பேரும் ஸ்கூல் போனா எப்படி இருக்கும்னு நினைச்சி பாத்தேன். என்னால சிரிப்ப அடக்க முடியலடா….”, எனக் கூறி மீண்டும் சிரித்தான்.
“போதும் நிறுத்து. இதுக்கு மேல சிரிச்ச பல்ல தட்டி கைல குடுத்துடுவேன்”, என கை முஷ்டியை இறுக்கியபடி சரணின் அருகில் சென்றான் அகரன்.
“என்னப்பா நடக்குது? யார் இப்ப ஸ்கூலுக்கு போகணும்? உள்ள என்ன நடந்தது?”, தேவ்.
“அது ஒன்னும் இல்ல தேவ். நான் அகர் நதி மூனு பேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். நாங்க டுவல்த் படிக்கறப்ப நதி அதே ஸ்கூல்ல பிப்த் படிச்சா. செம வாலு. எப்ப பாரு அகர் கூடவே தான் இருப்பா. யார் பேச்சையும் கேக்கமாட்டா. அகர் சொன்னா மட்டும் கேட்டுக்குவா. எங்களோடவே கிளாஸ்ல, லேப்ல ன்னு கூடவே தான் இருப்பா. அதான் இப்ப அவ சொன்னா அதே பிப்த் படிக்கற குழத்தை தான் நான் அகனுக்குனு . அதான் இரண்டு பேரும் அந்த கெட்அப்ல இப்ப போனா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்”, சரண்.
“அகரன் அவங்க மனசுல நீங்க ஆழமா பதிஞ்சிட்டீங்க. அவங்கள ரொம்ப அன்பா கேரிங்க பாத்துகிட்டதால உங்ககூடவே அதே மாதிரி இருக்கனும்னு நினைக்கறாங்க போல”, சக்ரதேவ்.
“ஆமா தேவ். பட் ஐ லவ் ஹர். ஐ வான்ட் டூ மேரி ஹர். அத எப்படி அவளுக்கு புரிய வைக்கறதுன்னு தான் தெரியல”, அகரன் தலையை அழுந்தக் கோதியபடி அருகில் இருந்தத் திண்ணையில் அமர்ந்தான்.
“ஹோ….. தட்ஸ் கூல்… ப்ரபோஸ் பண்ணுங்க அகரன். உங்கள புரிஞ்சிப்பாங்கள்ள”, சக்ரதேவ்.
“அது தான் இப்ப பிரச்சினையே. அவ எப்படி ரியாக்ட் ஆவான்னு எங்களுக்கு தெரியல. இத்தனை வருஷம் கழிச்சி இப்பதான் பாக்கறோம். எதாவது சொல்லி இருக்கறதும் கெட்டுச்சின்னா என்ன பண்றது?”, சரண்.
“ஒன்னு பண்ணுங்க. அவங்களும் இப்ப பைனல் இயர். கண்டிப்பா பிராஜெக்ட் இருக்கும் உங்க கம்பெனில பண்ண சொல்லுங்க. இரண்டு பேரும் பழகினா உங்களுக்கும் ஐடியா கிடைக்கும் அவங்களுக்கும் உங்க மேல லவ் வர சான்சஸ் இருக்குல்ல”, சக்ரதேவ்.
“அதுல்லாம் அவளே சொல்லிட்டா. படிப்பு முடிஞ்சி எங்க கம்பெனில தான் லைப்லாங் இருக்க போறேன்னு. இந்த விஷயத்த எப்படி அப்ரோச் பண்றதுன்னு தான் இப்ப யோசனை”, சரண்.
“இங்க பாருங்க அகரன். ஷீ டூ லவ்ஸ் யூ. அது அடல்ட் லவ்ஆ மாற டைம் குடுக்கணும். உங்க கூடவே இருந்தா அது தானா நடக்கும். கிவ் ஹர் சம் டைம்”,சக்ரதேவ்.
“அது தான் நானும் யோசிச்சி இருக்கேன். தேவ் இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும். யாருக்கும் தெரிய வேணாம். அவகிட்ட சம்மதம் வாங்கிட்டு நானே வீட்ல பேசறேன்”, அகரன்.
“ஓகே. இட்ஸ் ஃபர்காட்டன் ஹியர் இட்செல்ப்…”, சக்ரதேவ்.
“தேங்க்யூ தேவ். சரி வாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம். நாளைக்கு பூமிதிக்கணும்”, அகரன்.
“ஆமால்ல ….. இதெல்லாம் இத்தனை வருஷம் நாம பாக்காம இருந்துட்டோமே மச்சான். தேவ் உனக்கு தெரியுமா?”, சரண்.
“இல்ல சரண். தாத்தா இருந்தப்ப ஒரு டைம் வந்தேன் அப்ப பாட்டியும் தாத்தாவும் மிதிச்சாங்க. அதுக்கப்பறம் நான் ஹாஸ்டல் போயிட்டேன். இப்ப தான் வரேன் இங்க”, சக்ரதேவ்.
“சரி இனிமே நாம தானே பண்ணணும் இப்ப இருந்து கரெக்டா தெரிஞ்சிட்டு பண்ணலாம்”, அகரன் கூற மற்ற இருவரும் ஆமோதித்துவிட்டு சோபாக்களில் சாய்ந்தனர்.
இங்க ஜோசியம் பாக்க போன கூட்டம் என்னாச்சின்னு பாக்கலாம் வாங்க மக்களே….
மதியம் கோவிலில் சாப்பிட்டு முடித்ததும் நாளை விஷேசத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பித்து, நம்பகமானவர்களிடம் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, மொத்த குடும்பமும் இரண்டு பெரிய கார்களில் ஜோசியர் வீட்டை நோக்கிப் பறந்தன.
“ஏங்க ஜோசியர் என்ன சொல்வாரு?”, சரோஜாதேவி.
“எல்லாம் நல்லதே சொல்வாரு. இன்னும் பத்து நிமிஷம் தான் அங்க கேட்டுக்க எல்லாத்தையும்”, மாந்தோப்பு தாத்தா.
அங்கே சென்றுக்கொண்டிருந்த அத்தனை பேர் மனதிலும் ஜோசியர் நல்லவிதமாகக் கூறவேண்டும் என்கிற வேண்டுதலே இருந்தது.
மிகவும் பழமையான வீட்டின் முன் நம்மாட்கள் சென்ற வாகனம் நின்றது.
அந்த சுற்று வட்டாரத்தில் இவர் தான் பிரபலமான ஜோதிடர். அவர் கணித்துச் சொன்னால் அப்படியே நடக்கும் என்பதால் அனைவரும் அவரை நாடி வந்தனர்.
“வாங்க சுந்தரம் ஐயா. வாங்க வாங்க. தோப்புக்காரரே எப்படி இருக்கீங்க? அடடே வீட்டு எஜமானி அம்மாக்களோட எல்லாரும் வந்து இருக்கீங்க. என்ன சமாச்சாரம்?”, வந்தவர்களை வரவேற்று உபசரித்தார் ஜோசியர்.
“ஜோசியரய்யா எப்படி இருக்கீங்க? திருவிழா நடக்கறப்ப கூட வரது இல்ல”, மாந்தோப்பு தாத்தா விசாரித்தார்.
“சாயங்கால பூஜைக்கு வந்துடுலாம்னு இருந்தேன். வந்தா நாளைக்கு பூமிதி பாத்துட்டு உச்சிகால பூஜையும் முடிச்சிட்டு தான் கிளம்புவேன்”, ஜோசியர்.
“சரி சரி. நல்லது.வாங்க”, சுந்தரம்.
“என்ன விஷயம் நாலு குடும்பமும் ஒன்னா வந்து இருக்கீங்க”, ஜோசியர்.
“எங்க பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் பண்ணலாம்னு யோசனை இருக்கு. நீங்க அவங்க ஜாதகத்த பாத்து சொன்னா மேற்கொண்டு வேலைய ஆரம்பிச்சிடுவோம்”, சரோஜாதேவி.
“யார் யாருக்கு?”,ஜோசியர்.
“எங்க பொண்ணு நதியாளுக்கும் அகரனுக்கும் தான் ஐயா”, ராதா.
“பேஸ் பேஸ்…. குழந்தைக்கு கல்யாணம் வயசு வந்துடுச்சா? நல்லா துறு துறுன்னு இருப்பா. நல்ல தெளிவான குழந்தை. இப்ப என்ன படிக்கிறா?”, ஜோசியர்.
“இப்ப காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறா ஐயா. மாமா அகரனுக்கு கேட்டாங்க எங்களுக்கும் இஷ்டம், அவங்களுக்கு பொருத்தம் எப்படி இருக்குன்னு பாத்துட்டா எங்க மனசும் சந்தோஷப்படும்”, பரமசிவம்.
“பாத்துடலாம் சிவம். உன் பையனுக்கும் இப்ப அகரன் வயசு தானே?”, ஜோசியர்.
“ஆமாங்கய்யா…அவனுக்கும் எப்ப நேரம் கூடி வரும்னு பாத்து சொல்லுங்க. முதல்ல எங்க பொண்ணுக்கு பாருங்க”, செல்லம்மாள்.
“ஹாஹா…. சிறப்பா பாத்துடலாம். ஜாதகம் குடுங்க”, ஜோசியர்.
“இந்தாங்க ஐயா”, என மீனாட்சி எடுத்துக் கொடுத்தார் தான் கொண்டு வந்த பையில் இருந்து.
ஜாதகத்தை வாங்கிய ஜோசியர் இறைவன் படங்களின் முன்னால் வைத்து மனமாரப் பிரார்த்தித்துக்கொண்டு இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்தார்.
பின் இருவரின் தசாபலன்கள், அடுத்தடுத்து மாறும் கிரகங்களின் பலன்கள் என அனைத்தும் கணக்கிட்டார்.
“இரண்டு பேரோட ஜாதகமும் நல்ல யோக ஜாதகம். இரண்டு பேருமே வீட்டுக்கு ஒரே வாரிசு. அதனால தங்கதட்டுல தான் தாங்கி வளத்தி இருக்கீங்க. தனி தனியா இரண்டு பேருமே நல்லா பேரும் புகழும் சேக்கற ஜாதக அமைப்பு உடையவங்க தான். நடக்கற தெசாபுத்தி, இனி வர கிரக சஞ்ஜாரங்களும், இரண்டு பேருக்கும் ஏறுமுகத்த தான் குடுக்கும். நல்ல திறமைசாலிங்க. தனியா பெரிய நிறுவனத்தை உருவாக்குற வாய்ப்பும் இருக்கு. நல் எண்ணங்களும், சுய ஒழுக்கமும் இருக்கறதால நல்ல மேன்மையான நிலையை அடைவாங்க. நாலு பேருக்கு அவங்க கேக்காமயே உதவுற குணமும் இரண்டு பேருக்கும் இருக்கு.பொண்ணு கொஞ்சம் சத்தம் குடுத்து வேலை வாங்குவா , பையன் அமைதியா இருந்தே காரியத்த நடத்திப்பான்”, ஜோசியர்.
“ஐயா…இரண்டு பேருக்கும் கல்யாண பொருத்தம் இருக்கு தானே?”, சிதம்பரம்.
“இரு சிதம்பரம் அடுத்து அது தான்”, ஜோசியர்.
“இரண்டு பேருக்கும் பொருத்தம் பத்தும் பக்குவமா பொருந்துது. வசியப்பொருத்தம் அதீதமா இருக்கு. இப்பவே அவங்க இரண்டு பேரும் ஒன்னாவே தான் சுத்திட்டு இருப்பாங்க. சரியா?”, ஜோசியர்.
“ஆமாங்கய்யா.. இன்னிக்கு காலைல இருந்து இரண்டு பேரும் தான் கோவில்ல பாதி வேலைக்கு மேல பாத்தாங்க.. பாக்கற எங்களுக்கு கண்ணும் மனசும் நிறைஞ்சு போச்சி”, திலகவதி.
“சரி தான். பையனுக்கு ஏற்கனவே பொண்ணு மேல ஈர்ப்பு வந்துடிச்சி. பொண்ணே வேணான்னு சொன்னாலும் உங்க பையன் இனி அவள விடமாட்டான். பேசி பேசியே அவள அவன் வழிக்கு கொண்டு வந்துடுவான். ஆனா….”, ஜோசியர்.
“என்னங்கய்யா?”, சரோஜாதேவி.
“பொண்ணு பையன் இரண்டு பேருக்குமே கண்டம் ஒன்னு இருக்கு. அதுவும் கொஞ்ச மாசத்துல இருக்கு”, ஜோசியர்.
“என்ன சொல்றீங்க? இரண்டு பேரும் சேர்ந்தாவா?”, சுந்தரம் மனம் பதறக் கேட்டார்.
“இல்ல சுந்தரமய்யா. தனி தனியாவே அவங்களுக்கு கண்டம் இருக்கு. இன்னும் சொல்லப்போனா இரண்டு பேரும் ஒன்னா இருந்தா அந்த கண்டத்தினால பாதிப்பு குறையும்”, ஜோசியர்.
“ரொம்ப ஆபத்தான கண்டமாங்கய்யா?”, கவலையுடன் வினவினார் ராதா.
“இல்லம்மா. சின்னதா அடிபடும். கை கால் எழும்பு உடையும். உயிருக்கு ஆபத்து இல்ல. இவங்க சேந்து இருந்தா அதுவும் இருக்காது. சின்னதா சிராய்ப்பு மாதிரி போயிடும்”, ஜோசியர்.
“அப்ப அவங்களுக்கு உடனே கல்யாணம் செஞ்சிடலாமா?”, கண்ணன்.
“அவசரப்படாதீங்க. பொண்ணு படிப்ப முடிக்கட்டும். ஆனா இந்த பொண்ணுக்கு இந்த பையன் தான். நீங்களே வேணாம்னு நினைச்சாலும் இவங்க இரண்டு பேரும் தான் வாழ்க்கைல சேருவாங்க நல்லா வாழ்வாங்க”, ஜோசியர்.
“கல்யாணம் பண்ணிட்டா கண்டத்தினால வர ஆபத்து குறையும்னு சொல்றீங்கள்ள ஐயா. செஞ்சிட்டா அவங்களும் சந்தோஷமா பத்திரமா இருப்பாங்கள்ள”, சரோஜாதேவி.
“உண்மை தான் மா. ஆனா அவங்களுக்கு இப்ப கல்யாணம் பண்ற சமயம் கூடி வரல. இன்னும் ஒரு வருஷத்துக்கு அப்பறம் தான் செய்ய முடியும்”,ஜோசியர்.
“அப்ப என்ன பண்றது ஜோசியரே?”, சுந்தரம்.
“ஆறு ஏழு மாசத்துக்குள்ள நிச்சயம் செஞ்சிட்டு பொண்ணையும் பையனையும் வச்சி ஒரு யாகம் செஞ்சி தாயத்து கட்டிடலாம். கல்யாணம் முடிஞ்சதும் ஒரு மலைகோயிலுக்கு விரதம் இருந்து போயிட்டு வரணும் . முடிஞ்ச வரைக்கும் இரண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கிறது நல்லது. வேலை சம்பந்தமாவோ இல்ல தங்கற இடத்துல பக்கத்துலயோ”, ஜோசியர்.
“ஏன் அத்தனை மாசம் தள்ளனும்? உடனே இந்த வாரம் நிச்சயம் பண்ணிடலாம்ல ஐயா?”, சிதம்பரம்.
“ம்ம்… பையனும் பொண்ணும் ஒத்துப்பாங்களா? இரண்டு பேரும் மனசு ஒத்து சம்மதிச்சா தான் அவங்களுக்கு நல்லது”, ஜோசியர்.
“நாங்க பேசி ஒத்துக்க வைக்கறோம்”, ராதாவும் செல்லம்மாவும் ஒரே நேரத்தில் கூறினர்.
“சரி பண்ணுங்க. எல்லாம் நல்லபடியா நடக்க மரகதீஸ்வரர் அருள் செய்யட்டும்”, என ஜோசியர் மனதார வேண்டிக்கொண்டுக் கூறினார்.
“ஐயா. சரணுக்கு பாருங்க”, ராதா.
“பாக்கறேன் மா”, ஜோசியர்.
“அவனும் அகரனும் சேந்து தான் இப்ப கம்பெனி நடத்தறாங்க. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லைல”, பரமசிவம்.
“அதுல்லாம் ஒன்னும் இல்ல சிவம். அகரனுக்கும் சரணுக்கும் வியாபாரத்துல கூட்டு வச்சிக்கறதால எந்த குறையும் இல்ல. இரண்டு பேரும் இன்னும் நிறைய செய்வாங்க நல்ல நிலைமைக்கு வருவாங்க. உங்க பையனுக்கு கல்யாணம் இன்னும் இரண்டு வருஷம் போகட்டும். அவனே பாத்தாலும் நல்ல பொண்ணா தான் இருக்கும் . அதனால எதாவது அப்படி அவன் சொன்னாலும் கவலைபடாதீங்க”, ஜோசியர்.
“ஐயா.. வேறவங்க பொண்ண சொல்லிட்டா என்ன பண்றது?”, பரமசிவம்.
“அப்படியெல்லாம் தெரியாதவங்களா வராது கவலைப்படாதீங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்”, ஜோசியர்.
“சரிங்கய்யா.. பசங்க எல்லாரும் நல்லா இருந்தா போதும்”, செல்லம்மாள்.
“ம்ம்… தோப்புக்காரரே….உங்க பொண்ணு எங்க இருக்காங்க? இன்னும் உங்க மாப்பிள்ளை சமாதானம் ஆகலியா?”, ஜோசியர்.
“இல்ல ஜோசியரே. அவ நல்லா இருந்தா போதும்னு நாங்க அமைதியா இருக்கோம். காலம் மாறும். எங்கப்பனும் அம்மாவும் அப்படியே எங்கள விட்டுட மாட்டாங்கன்னு நம்பிக்கை இருக்கு”, மாந்தோப்பு தாத்தா கனத்த மனதுடன் கூறினார்.
“கவலைபடாதீங்க பெரியப்பா நாங்க எல்லாம் இருக்கோம்ல”, செல்லம்மாள்.
“அதனால தான் கண்ணு இன்னும் எங்க கட்ட நடமாடுது”, சரோஜாதேவி.
“சரி மொத நிச்சயம் பண்ற வேலைய பாப்போம் . புள்ளைகிட்ட பதமா எடுத்து சொல்லி ஒப்புதல் வாங்குங்க”, மாந்தோப்பு தாத்தா.
“என்ன சுந்தரமய்யா யோசனைல இருக்கீங்க?”,ஜோசியர்.
“இல்லை நேத்து விளையாட்டுக்கு கல்யாணம் பத்தி பேசினப்பவே நதிகுட்டிக்கு கோவம் வந்து எந்திரிச்சி போயிட்டா. இன்னிக்கு நாம உண்மையா ஏற்பாடு பண்றத பத்தி சொன்னா எப்படி எடுத்துக்குவான்னு தான்”, சுந்தரம்.
“எடுத்து சொன்னா புரிஞ்சிக்குவா பெரியப்பா. அத நாங்க பாத்துக்கறோம்”, ராதா.
“புள்ளைய கட்டாயம் படுத்தக்கூடாது ராதா. அவளுக்கும் அகரன பிடிக்கும் ஆனா அவ நிறைய படிக்கணும் சொந்த கால்ல நிக்கணும்னு தான் நினைக்கறா. அதனால அதுக்கு நாம வழி பண்ணிட்டு இதபத்தி பேசலாம்”,சுந்தரம்.
“அப்ப என்னிக்கு நிச்சயம் வச்சிக்கலாம்?”, சிதம்பரம்.
“நதி படிப்பு முடிய இன்னும் எத்தனை மாசம் இருக்கு?”, சுந்தரம்.
“இன்னும் ஆறுமாசம் இருக்கு மாமா”, கண்ணன்.
“சரி அது முடிஞ்சி அகரன் கிட்ட பேசி அவ ஆசைக்கும் வழி செஞ்சிட்டு நிச்சயத்த ஊரரிய வச்சிக்கலாம். ஜோசியர சாட்சியா வச்சி இப்பவே எங்க அகரனுக்கு நதியாள் தான்னு நாம உறுதி படுத்திக்கலாம். சரியா?”, சுந்தரம்.
“எங்களுக்கு பரிபூரண சம்மதம் மாமா”, கண்ணனும் பரமசிவமும் ஒரு நேரத்தில் சந்தோஷத்துடன் கூறினர்.ராதா செல்லம்மாள் திலகவதி மூவரும் கையைப் பற்றிச் சிரித்துக்கொண்டனர்.
“நல்ல யோசனை தான். அகரன் கிட்ட எப்ப சொல்லலாம்?”, மாந்தோப்பு தாத்தா.
“நதியாள் படிப்பு முடியட்டும். இரண்டு பேரும் அதுவரை எந்த நிர்பந்தமும் இல்லாம பழகட்டும். அவங்களுக்குள்ள இந்த இடைபட்ட சமயத்துல எதாவது கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் வந்துட்டா நமக்கும் வேலை சுலபம் ஆகிடும்ல”, சுந்தரம்.
“அதுவும் சரிதான். கண்டிப்பா அதுக்கும் வாய்ப்பு இருக்கு”, ஜோசியர்.
“சரி வாங்க ஜோசியரே கிளம்பலாம்”, சுந்தரம்.
ஒருவழியாக எல்லாம் பேசி முடித்து அனைவரும் கிளம்பி வீடு வந்துச் சேர்ந்தனர்.
சிறியவர்கள் நால்வரும் அசதியில் தூங்கிக்கொண்டு இருக்க, இவர்கள் வந்து அவர்களை எழுப்பி இரவு பூஜையைப் பார்க்க அனுப்பிவிட்டு, அடுத்தநாள் காலை பூமிதிக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.
முதலில் நதியாள் தான் இறங்க வேண்டும் என்று கூறி அவளுக்கு சிவப்பு புடவை உடுத்தி மஞ்சள் நீர் ஊற்றி மாலையிட்டு கைகளில் சிறிய திரிசூலம் கொடுத்துத் தயார்படுத்தினர்.
சிறியவர்கள் நால்வரும் மனதை ஒருநிலைபடுத்தி, தூய்மையான எண்ணமும் புத்தியும் கொண்டு தெய்வத்தை நினைத்துப் பூமிதிக்கத் தயாராகினர்.
முதலில் கோவில் பூசாரி கையில் உற்சவ சிலையுடன் இறங்க, அடுத்து நதியாள் அகரன் சரண் தேவ் என அனைவரும் இறங்கினர். பின் ஊர் மக்கள் இறங்க ஆரம்பித்தனர்.
குண்டத்தைத் தாண்டி கோவிலுக்குள் வந்த நதியாள் சாமி தரிசனம் முடிந்து திரும்பும் போது மயக்கம் போட்டு விழுந்தாள்.
அவளுக்கு பின்னால் வந்த அகரனும் சரணும் அவளைத் தாங்கிப்பிடித்தனர்.