18 – அகரநதி
குண்டத்தைத் தாண்டி கோவிலுக்குள் வந்தவள், சாமி தரிசனம் முடித்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றும் சமயம் நடைத் தள்ளாட, மயக்கம் போட்டு விழுந்தாள்.
அவள் பின்னே வந்த அகரனும் சரணும் அவளைத் தாங்கிப் பிடித்தனர்.
“நதிமா… நதி….”, அகரன் அவளின் கன்னத்தைத் தட்டினான்.
“யாள்குட்டி… குட்டிமா… கண்ண தொற டா. என்னாச்சி உனக்கு?”, சரண்.
“என்னாச்சி அகர்?”, என்றபடி தேவ் வர, அவனின் பின்னே வந்தவர்கள் அனைவரும் கூடி நின்று விட்டனர்.
பின் மரகதம்மாள் அந்த பக்கம் வர, கூட்டம் கூடி நிற்பதைப் பார்த்துவிட்டு நதியாள் மயங்கிக் கிடப்பதையும் கண்டார். பின் ,” எல்லாரும் நகருங்க. காத்து வரட்டும். தம்பி அகரா புள்ளைய தூக்கிட்டு அந்த தூண் மண்டபத்துக்கு வா. நான் ஆகாரம் கொண்டு வர சொல்லிட்டு வரேன்”, எனக் கூறிப் பிரசாத கூடத்திற்கு விரைந்தார்.
“டேய் வினய். போய் பிரசாதம் ஒரு தட்டுல சீக்கிரம் வாங்கிட்டு வா. அந்த தண்ணி பாட்டில குடு” , என அவன் கைகளில் இருந்த பாட்டிலைப் பிடுங்கி தண்ணீர் பிடித்துக் கொண்டு வேகமாக நதியாள் இருக்கும் இடம் நோக்கி சென்றார்.
“பாட்டி எங்க வாங்கிட்டு வரட்டும்?”, வினய்.
“தூண் மண்டபத்துக்கு வாடா. அந்த பொண்ணு மயங்கி கிடக்கு. சீக்கிரம்”, சொல்லிக்கொண்டே நிற்காமல் சென்றார் மரகதம்மாள்.
அதற்குள் விஷயம் தெரிந்து அங்கு நம் பெரியவர்கள் கூடிவிட்டனர்.
“அகரா.. என்னாச்சி என் பேத்திக்கு?”, சுந்தரம்.
“ஒன்னுமில்ல தாத்தா. இரண்டு நாளா வேலை அதிகம் காலைல இருந்து சாப்பிடல அதான் மயங்கிட்டா போல”, அகரன் அவளின் கைகளைச் சூடுப் பறக்கத் தேய்த்தான்.
“தள்ளுங்க. அகரா இந்தா தண்ணீர். முகத்துல அடி. அம்மாடி ராதா வாயில தண்ணிய ஊத்து உம்பொண்ணுக்கு”, என மரகதம்மாள் தான் கொண்டு வந்த பாட்டிலைக் கொடுத்தார்.
சரணும், மாந்தோப்பு தாத்தாவும் துண்டில் அவளுக்கு விசிறியபடி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“கொடுங்க அத்தை நானே குடுக்கறேன்”, என அகரன் தண்ணீர் பாட்டிலை வாங்கினான்.
“இந்தாங்க தம்பி. பாத்து”, என அருகில் அமர்ந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.
அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டுத் தண்ணீரை அவளுக்குப் புகட்டினான் அகரன்.
“என்னாச்சி குழந்தைக்கு?”, என செல்லம்மாளும் சிதம்பரமும் பதற்றத்துடன் வந்தனர்.
“மயங்கிட்டா மா. இன்னும் கண்ணு முழிக்கல. டேய் அகர் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம் டா”, சரண் கவலையுடன் கூறினான்.
“இரு டா. கொஞ்சம் அசையறா….கண்ணு முழிச்சிக்குவா”, சுந்தரம்.
மெதுவாய் கண்விழித்தவள் அகரனின் நெஞ்சினில் தான் படுத்திருப்பதைக் கண்டு தான் மயங்கியதை யூகித்தாள்.
“அப்பாடா கண்ண தொறந்துட்டா… யாள் என்னாச்சி உனக்கு ? ஏன் மயங்கிட்ட?”, சரண் அவசரமாகப் பக்கத்தில் வந்து அவளின் அருகில் அமர்ந்து அவளின் கையைப் பிடித்துக்கொண்டான்.
“ஒன்னுமில்ல சரணா. டயர்ட். சாப்டலியா அதான். அகன் தண்ணி குடு”, நதியாள் அகரனிடம் இருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தாள்.
வினய் அவள் அகரனின் நெஞ்சில் சாய்ந்தபடி இருந்த பொழுதே வந்தவன், அவள் கண் விழித்தப் பிறகுப் பிரசாதத் தட்டைக் கொண்டு வந்துக் கொடுத்தான். அவனின் நெஞ்சில் கோபக்கனல் எரிந்துக் கொண்டிருந்தது அவர்களின் நெருக்கத்தைக் கண்டு.
“என்ன வினய் ஏதோ கருகுது போல?”, எனக் கேட்டபடி சரிதா வந்து நின்றாள்.
“ஒன்னுமில்ல”, வினய் பற்களுக்கிடையில் வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.
“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற?” , சரிதா நக்கலாக வினவினாள்.
“அங்க பாரு இன்னும் லவ் சீன் முடியல”,என சரிதா கூற, தலை நிமிர்த்திய வினய் அகரன் நதிக்கு ஊட்டிவிடுவதைக் கண்டு இன்னும் எரிந்தான்.
மரகதம்மாள்,”ஏன் பொண்ணு காலைல பால் கூட குடிக்கலியா?”, என கேட்டார்.
“இல்ல பாட்டி. எதுவும் குடிக்கல. விரதம் முடிஞ்சி பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். பூசாரி மாமாவும் எதுவும் குடிக்காம பூமிதிக்கறது நல்லதுனு சொன்னாரு”, சாப்பிட்டபடிக் கூறினாள் நதி.
“இது தான் முதல் வருஷம் இப்பவே ஏன் இவ்வளவு வருத்திக்கற? இனிமே பால் குடிச்சிக்க. இப்ப பாரு எல்லாரும் பயந்துட்டாங்க”, மரகதம்மாள்.
“சரி பாட்டி. போதும் அகன்”, நதியாள்.
“இந்த பிளேட்ல இருக்கறத சாப்பிட்டா தான் விடுவேன். எதுவும் பேசாம கம்முனு வாய தொற”, அகரன் அதட்டினான்.
“போதும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்”, நதியாள்.
“தம்பி தானே ஊட்டுது சாப்பிடு டா”, செல்லம்மாள், மறுப்பேதும் கூறாமல் அகரன் ஊட்டிவிட நதியாள் சாப்பிட்டு முடித்தாள்.
“இன்னும் கொஞ்சம் போட்டுட்டு வரவா?”, செல்லம்மாள்.
“போதும் பெரியம்மா. தோப்பு தாத்தா நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கவா கொஞ்ச நேரம்?”,நதியாள்.
“நாலு பேரும் போய் ஓய்வு எடுங்க கண்ணு. இனி இராத்திரி ஐயனார் பூசைக்கு நீங்க வந்தா போதும். மத்தத நாங்க பாத்துக்கறோம்”, மாந்தோப்பு தாத்தா.
“அம்மா… வீட்டு சாவி குடு”, நதியாள்.
“அம்மாடி நம்ம வீட்ல படுத்துக்க. பசங்களும் அங்கயே தூங்கட்டும். ஏன் தனியா இருக்க?”, சிதம்பரம்.
“ஆமா. அகரன் தம்பி கூடவே போ. அத்தை ரூம்ல உன் டிரஸ் வச்சி இருக்கேன். மாத்திட்டு படு. நான் மதியத்துக்கு மேல வரேன். அப்பாவும் இங்க தான் இருப்பாங்க ராத்திரி பூசை முடியற வரைக்கும். நீ தனியா இருக்க வேணாம்”, ராதா.
“சரி. காலை பூஜை அவ்வளவு தானா?”, நதியாள்.
“அவ்வளவு தான். நீங்க புறப்படுங்க கண்ணுங்களா. அகரா பாத்து கூட்டிட்டு போங்க”, சுந்தரம்.
“சரி தாத்தா. சரண் இவள பிடி. நான் எந்திரிக்கணும்”, அகரன் கூற நதியாள் சற்று நிமிரவும், சரண் அவளைப் பிடித்துக் கொண்டான்.
“தேவ் நீ என்ன பண்ற?”, சரண்.
“நான் வீட்டுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு என் மொபைல் எடுத்துட்டு வரேன்”, தேவ்.
“சரி. நாங்க முன்ன போறோம். நீ வா”, சரண்.
“யாள். தலைக்கு ஊத்திக்க கூடாது. தலைய தொவட்டிக்க. சாயங்காலம் பூஜைக்கு வரப்ப தலைக்கு குளிச்சிக்க”, ராதா.
“சரிம்மா..”, நதியாள்.
மூவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.
“அகன் நான் தூங்கறேன் கொஞ்ச நேரம்”,நதியாள்.
“இரு கொஞ்சம் பால் குடிச்சிட்டு தூங்கு”, அகரன் பால் காய்ச்ச சென்றான்.
“ஹேய்..தலைமுடி காய வைக்கணும். நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் முடிய பிரிச்சிவிடறேன்”, சரண் அதட்டினான்.
“ஹம்ம்…. சரி”, என ஐந்து நிமிடத்தில் ஸ்கர்டும் டாப்பும் அணிந்து வெளியே வந்தாள்.
வெந்தய நிற டாப்பும் அடர்பச்சை நிற ஸ்கர்டும் அணிந்து வெளியே வந்தவளைக் கண்டு அகரன் மெய்மறந்து நின்றான்.
“இவளுக்கு எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கு. அகரா… நேத்து மாதிரி இன்னிக்கும் பண்ணிடாத. அப்பறம் கஷ்டம் உனக்கு தான்”, எனத் தனக்குத் தானே அகரன் சொல்லிக்கொண்டான்.
“சரணா…. எங்க இருக்க?”, நதியாள்.
“இங்க வா நதிமா. நான் தொவட்டிவிடறேன்.இந்தா பால் குடி”, அகரன் அழைத்து அவள் கையில் கொடுத்தான்.
“ம்ம்… அகன் நான் அந்த சோபால படுத்துக்கறேன். அப்படியே நீ தொவட்டு”,என ஒரு சோபாவில் படுத்துக் கொண்டாள்.
படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
பின் சரண் துணி மாற்றிக்கொண்டு சூடாக பால் காய்ச்சிக் கொண்டு வந்தான். அகரனும் துணி மாற்றிக்கொண்டு வர இருவரும் பால் குடித்துவிட்டு, பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அவர்களும் சோபாவில் அமர்ந்தனர்.
“யாளுக்கு நல்லா நீளமான முடில்ல அகர்”, சரண்.
“ம்ம்…”, அகரன் அவளைப் பார்த்துக்கொண்டே கூறினான்.
“ஒரு டைம் பாத்தா சின்ன புள்ளமாதிரி நடக்கறா… ஒரு டைம் பெரிய மனுசி மாதிரி நடக்கறா.. பட் அவகூட இருந்தா டைம் போறதே தெரியலல்ல”, சரண்.
“ம்ம்”, அகரன் அவளை இரசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“ஹாய் சரண்,அகர்…”, எனக் கூறியபடி தேவ்வும் வினயும் வந்தனர்.
“ஹோ… நதியாள் இங்கயே தூங்கிட்டாங்களா? இப்ப எப்படி இருக்காங்க பரவால்லையா?”, தேவ்.
“பரவால்ல தேவ். வாங்க உக்காருங்க. அகர் நீ அவள ரூம்ல படுக்க வச்சிட்டு வாடா”, சரண்.
“தூங்கறவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்ணணும். நாம வெளியே உக்காந்துக்களாமே”, வினய் நதியாளின் உடலைக் கண்களால் மேய்ந்தபடிக் கூறினான்.
“அதுல்லாம் இல்ல. அவ அகெய்ன் தூங்கிடுவா”, அகரன் வினயை ஒருமாதிரி பார்த்துவிட்டு நதியாளைத் தூக்கினான்.
“என்ன அகன்?”, நதியாள் தூக்கம் கலைந்துக் கேட்டாள்.
“நீ ரூம்ல படுத்துக்க நதிமா. நானே தூக்கிட்டு போய் விடறேன்”, அகரன்.
“சரி”, என அவன் கழுத்தைக் கட்டியபடி மீண்டும் அவன் தோளில் சாய்ந்துவிட்டாள் நதி.
அகரன் அவளைத் தன்னறைக்குக் கொண்டுச் சென்றுப் படுக்க வைத்துவிட்டு, அவள் மேல் போர்வையைப் போர்த்திவிட்டு பால்கனி கதவைச் சாற்றினான்.
“அகன் பால்கனி திறந்தே இருக்கட்டும்.ஏசி வேணாம். ஐ நீட் பிரஸ் ஏர்”, நதியாள்.
“சரிடா. நீ தூங்கு. நானும் சரணும் கீழ இருக்கோம். எதாவது வேணும்னா சத்தம் குடு”, அகரன்.
“சரி. குட் நைட்”, எனத் தலையனையைக் கட்டிபிடித்தபடித் தூங்க ஆரம்பித்தாள் நதி.
அவள் தலையனையை இறுக்கமாகக் கட்டியபடி உறங்குவதைக் கண்ட அகரன் “ஹ்ம்ம்…நான் இருக்க வேண்டிய இடத்துல அது இருக்கு”, என மனதிற்குள் முனகிவிட்டுச் சென்றான்.
“என்னடா படுத்துட்டாளா?”, சரண்.
“ம்ம். தூங்கவச்சிட்டு தான் வரேன்”, அகரன்.
“அவங்க என்ன சின்ன குழந்தையா தூங்க வைக்கறதுக்கு? இது கொஞ்சம் ஓவரா இல்லையா உங்களுக்கு?”, வினய்.
“அவ எங்களுக்கு குழந்தை தான் வினய்”, சரண் சற்றே காட்டமாகக் கூறினான்.
“தேவ். … இன்னும் எத்தனை நாள் இங்க ஸ்டே?”, அகரன்.
“நாளைக்கு விருந்து முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பறோம் அகர். பாட்டி அத்தை இவங்க இரண்டு பேரும் மட்டும் கொஞ்ச நாள் இருந்துட்டு வருவாங்க. நான் க்ஷோரூம் ஓபனிங் இன்விடேசன் அனுப்பறேன். கண்டிப்பா நீ, சரண், நதியாள் எல்லாரும் வரணும்”, தேவ்.
“அவளுக்கு செம் வருதுன்னு சொன்னா. லீவ் இருந்தா கூட்டிட்டு வரோம் தேவ்”, அகரன்.
“சரண் தானே அண்ணன். நீங்க எல்லா இன்பர்மேஷனும் தெரிஞ்சி வச்சி இருக்கீங்க நதியாள் பத்தி”, வினய்.
“நாங்க மூனு பேரும் ரொம்ப க்ளோஸ் மிஸ்டர் வினய். புதுசா வந்தவங்களுக்கு புரியாது. நீங்க அப்படியே இருந்துக்கறது நல்லது”, சரண் அவனை பார்வையாலும் எட்ட நிறுத்தினான்.
“வினய் அவங்க சின்ன வயசுல இருந்து க்ளோஸா இருக்காங்க.அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் உனக்கு என்ன? வந்த இடத்துல பிரச்சினை க்ரியேட் பண்ணாத”,தேவ்வும் சற்றே காட்டமாக கூறினான்.
“நான் சும்மா கேட்டேன் அத்தான். அக்கா கால் பண்றா. நான் கிளம்பறேன்”, என அங்கிருந்து கிளம்பினான் வினய் ,அகரனை முறைத்துப் பார்த்துக்கொண்டே .
சரணிற்கும் அகரனிற்கும் வினயின் பார்வையும் பேச்சும் சரியாக இல்லை என்பதை நன்குப் புரிந்துக் கொண்டனர்.
“சாரி அகர் சரண். அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்”,தேவ்.
“தேவ் நீ ஏன் சாரி கேக்கற?விடு. நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காத”, சரண்.
“என்ன சரண்?”, தேவ்.
“அவன் பார்வையும் சரியில்ல, பேச்சும் சரியில்ல. எப்பவும் நீ அவன்மேல ஒரு கண்ணு வச்சி இருக்கறது நல்லது. அவன் என்ன பண்றான்?”,சரண்.
“அவன் சும்மா தான் இருக்கான். அவங்க அப்பா பிஸ்னஸ்ல எல்லாம் லாஸ் ஆகிடிச்சின்னு யாருக்கும் தெரியாம ஊரவிட்டு ஓடிட்டாரு ஆறு மாசத்துக்கு முன்னாடி. அப்ப இருந்து நாம தான் பாத்துக்கறோம். பாட்டி எங்க கூடவே அவங்கள வச்சிகக்களாமான்னு கேட்டுட்டு இருக்காங்க”, தேவ்.
“ம்ம். அது உங்க பேமிலி விருப்பம். ஆனா ஒரு கண்ணு வச்சிக்க”, சரண்.
“சரி சரண்”, தேவ்வும் சற்றே யோசனையுடன் கூறினான்.
அப்பறம் ஏதேதோ கதைப் பேசிவிட்டு அவர்களும் உறங்கினர்.
மாலை பூஜைக்கு இவர்களை அழைக்க செல்லம்மாளும் சிதம்பரமும் வந்தனர் வீட்டிற்கு.
உள்ளே வந்தவர்கள் அசந்து உறங்கிக் கொண்டு இருப்பவர்களைக் கண்டு ,”பாவம் பசங்க ரொம்ப அசதியாகிட்டாங்க போல”, செல்லம்மாள்.
“இருக்கும் கா. நாம இத்தனை வருஷம் பண்ணோம் இப்பதானே இவங்க பண்றாங்க. நீங்க நதிய எழுப்புங்க. நான் இவங்கள எழுப்பிட்டு தயாராகி முன்ன கிளம்பி மத்தவங்கள அனுப்பி வைக்கறேன்”, சிதம்பரம்.
“சரிப்பா… எங்க படுத்திருக்கா தெர்ல”, செல்லம்மாள் சொல்லிக்கொண்டே நதியை தேடிச் சென்றார்.
“தம்பி அகரா..சரண்…. தேவ்…எந்திரிங்கப்பா… மதியம் சாப்பிடக்கூட எந்திரிக்கல யாரும்… குளிச்சி தயாராகுங்க ஐயனார் பூசை இருக்கு”, சிதம்பரம் அவர்களை எழுப்பிவிட்டுத் தன்னறைக்குச் சென்றார்.
“இவ எங்க இருக்கா? கீழ காணோமே”, செல்லம்மாள் தனக்குத் தானே பேசிக்கொண்டு வந்தார்.
“அவ என் ரூம்ல தூங்கறா அத்தை… நான் எழுப்பி அனுப்பறேன்”, அகரன்.
“சீக்கிரம் வரச்சொல்லுங்க தம்பி. அவளுக்கு அலங்காரம் பண்ணிட்டு தான் நான் தயாராகணும்”, செல்லம்மாள்.
“அம்மா அவ பண்ணிக்குவா. நீ போய் ரெடி ஆகு. நாங்க அவள கூட்டிட்டு வரோம்”, சரண்.
“இந்தா… இந்த பைல இருக்க துணியும் நகையும் போட்டு கூட்டிட்டு வாங்க. நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்”, செல்லம்மாள் சரணின் கைகளில் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“நீ கீழ தாத்தா ரூம்ல குளிச்சிட்டு ரெடி ஆகு. நான் அவள எழுப்பி விட்டுட்டு வரேன்”, அகரன்.
“சரிடா….”, என சரண் தன் உடைகளை எடுத்துக்கொண்டுக் குளிக்கச்சென்றான்.
மேலே வந்த அகரன் ரூமைத் திறந்து உள்ளே சென்றுப் பார்க்க நதியாள் குழந்தையைப் போல தன் உடலின் மேல் தலையனையை கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தாள்.
“இவளுக்கு எதையாவது பிடிச்சிட்டே தூங்கணும் போல… உலகம் மறந்து தூங்கிட்டு இருக்கா… “, என மனதிற்குள் பேசிக்கொண்டு அருகில் சென்றான்.
அவளை போர்த்தியிருந்த போர்வை தனியாக கீழே கிடந்தது. ஸ்கர்ட் சற்றே மேலேறி டாப்பும் அதே போல் இருக்க அகரன் அவளை தொடாமல் அதை சரி செய்துவிட்டு அவளை எழுப்பினான்.
“நதிமா.. எந்திரி டா”, அகரன் அவளின் கன்னத்தைத் தட்டினான்.
“இன்னும் கொஞ்ச நேரம்மா… தூக்கமா வருது”, அன்னையிடம் பேசுவதாக நினைத்து அகரனின் மடியில் படுத்து அவன் இடையைக் கட்டிக்கொண்டாள் நதி.
அவளின் செயலில் மென்னகைக் கொண்ட அகரன்,”நதிமா…. நாளைக்கு தூங்கிக்கலாம். இப்ப எந்திரிச்சி ரெடி ஆகு. கோவிலுக்கு போகணும்ல” .
“கெடாவிருந்து எப்பம்மா போடுவாங்க? நான் அதையெல்லாம் போட்டோ எடுத்து பிரண்ட்ஸ்அ கடுப்பேத்தணும்”, தூக்கத்திலேயே உலறினாள் நதி.
“அவங்கள அப்பறம் நேர்லயே கடுப்பு ஏத்தலாம் இப்ப எந்திரி பேபி”,என அவளின் நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு இதமாக இதழ் ஒற்றினான் அகரன்.
“அம்மா நீ பேபின்னா கூப்ட?”, சற்றே தூக்கம் கலைந்து இருந்தது அவனின் இதழ் ஒற்றுதலில் நதியாளுக்கு.
“அம்மா இல்ல… உன் அகன்…. எந்திரிமா… குளிச்சி ரெடி ஆகு”, என அவளின் கன்னத்தை அவளுக்கு வலிக்காமல் கிள்ளினான்.
“அகன்…. குட் மார்னிங்….நீ எப்ப எங்க வீட்டுக்கு வந்த?”, நதியாள்.
“சரியா போச்சு. நீ என் பெட்ரூம்ல படுத்துட்டு நான் எப்ப உன் வீட்டுக்கு வந்தேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்”, அகரன்.
“ஹான்….. சாரி அகன்… தூங்கினதும் மறந்துட்டேன். கோவிலுக்கு போகணும்ல… நான் முப்பது நிமிஷத்துல ரெடி ஆகிட்டு வந்துடறேன்”, எனக் கீழே ஓட எத்தனித்தாள்.
“ஹேய் இரு. கீழ அப்பா ரெடி ஆகிட்டு இருக்காங்க. சரண் தாத்தா ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்கான்”, அகரன்.
“நான் எங்க ரெடி ஆகறது?”, நதியாள்.
“இங்கயே குளிச்சி ரெடி ஆகு”, அகரன்.
“அப்ப நீ?”, நதியாள்.
“நான் கீழ தாத்தா ரூம்ல ரெடி ஆகறேன். இந்தா இந்த கவர்ல இருக்க டிரஸ் ஜுவல்ஸ் போட்டுக்க. அத்தை குடுத்துட்டு போய் இருக்காங்க. அவங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”, அகரன் செல்லம்மாள் கொடுத்ததைக் கொடுத்துவிட்டு தன் உடையை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் அறையை சாற்றிவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்து தன் உடையை எடுத்தாள்.
சட்னி கலரும் கிளிப்பச்சையும் கலந்த நிறம். கண்களை உறுத்தாது பாந்தமாக அவளுக்கு பொருந்தியது. புடவையைக் கட்டியவள் கண்ணாடி முன் நின்றுச் சரிபார்த்துக்கொண்டாள்.
லேசான முக ஒப்பனை முடித்து முடியை காயவைத்தாள். அந்த சமயம் சரண் கதவைத் தட்டினான்.
“வரேன்….”, எனக் கதவை திறந்துப் பார்த்தாள்.
“என்ன சரணா? பிஸ்தா க்ரீன் சர்ட் செமயா இருக்குடா உனக்கு”, என அவன் உடையைப் பார்த்தபடிக் கூறினாள்.
“தேங்க்யூ டியர் சிஸ்டர்”,சரண் தலைத் தாழ்த்தி அவளது பாராட்டை ஏற்றுக்கொண்டான்.
“என்ன எல்லாரும் ரெடியா? எனக்கு முடி மட்டும் காயணும். 5 நிமிஷம் டா சரணா”, நதியாள்.
“எவ்வளவு ஈரமா இருக்கு பாரு. டேய் அகர் உன் ஹேர் டிரையர் எங்கடா இருக்கு?”, சரண் மேலிருந்து கத்தினான்.
“வேணா. நான் அதுல்லாம் யூஸ் பண்ணமாட்டேன். லூசா கிளிப் போட்டு பின்னிக்கறேன்”, நதியாள்.
“ஓ… நேசுரல்லா இருக்கணுமோ. சரி திரும்பு பர்ஸ்ட் நல்லா தொவட்டலாம்”, எனத் துண்டை எடுத்து அவளின் முடியை நன்றாக துவட்டிவிட்டான் சரண்.
அவனின் செயலில் நதியாள் மென்னகைக் கொண்டு அவனுக்கு வாகாக அமர்ந்து முடியைக் கொடுத்தாள் நதி.
“அடடா…. கண்கொள்ளா காட்சி…அண்ணன் தங்கச்சி பாசம் கரைய உடச்சிட்டு ஓடுது போலவே”, அகரன் நக்கலடித்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“டேய் கண்ணு வைக்காத…. இப்ப தான் நாங்க கொஞ்சம் அமைதியா இருக்கோம். நாரதர் வேல பாத்து மறுபடியும் எங்கள அடிச்சிக்க வச்சிடாத”, சரண் சிரிப்புடன் கூறினான்.
“இதோ பார்ரா…. இத்தனை வருஷம் நான் உங்களுக்கு நடுவுல வந்து உங்களுக்குள்ள பிரச்சினை பண்ணமாதிரி பேசற… நீ அவள பாக்ககூட போகாம ஊர் சுத்திட்டு இருத்தது எல்லாம் மறந்து பேச்சா மச்சான்”, அகரன்.
“வேணாம்டா. இப்ப உனக்கு என்ன? இத நீ பண்ணணும் அது தானே வந்து தொவட்டி விடு”, என எழுந்தான் சரண்.
“இரு நீ அத பண்ணு. நதிமா ஜுவல்ஸ் இன்னும் போட்டுக்கலியா? எங்க எடு நான் உனக்கு போட்டு விடறேன்”,அகரன்.
“அகன்…இது நைட் தானே… சிம்பிளா ஒரு சையின் போட்டா போதும். ப்ளீஸ் அதிகமா வேணாம்”, நதியாள் கண்களைச் சுருக்கிக் கேட்டாள்.
“உனக்கும் பெரியவங்களுக்கும் சேடிஸ்பை ஆகறமாதிரி நான் போடறேன். ஓகேவா?”, அகரன்.
“இப்படி சொல்லி தான் நேத்து அத்தனைய மாட்டிவிட்ட எனக்கு”, உதட்டைச் சுழித்துத் திரும்பிக் கொண்டாள் நதி.
“சரி சிம்பிளா இன்னிக்கு போட்டுக்கோ”, எனக் கூறிவிட்டு அகரன் அந்த நகைப் பெட்டியைத் திறந்தான்.
ரூபி கற்கள் பதித்த மீடியம் சைஸ் நெக்ளஸ் , அதற்கு செட்டான தோடு, ஆன்டிக் டிசைன் ஒற்றை வளையல் இரண்டு கைகளுக்கும், மோதிரம் என எடுத்துக் கொடுத்தான் அகரன்.
“தலை பின்னிட்டு வா. நாங்களே போட்டு விடறோம்”,சரண்.
“என்னடா என்மேல் பாசம் ரொம்ப பொங்குது போலவே?! என்ன விஷயம்?”, நதியாள் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வினவினாள்.
“ஒரு விஷயமும் இல்ல. ரொம்ப டயர்டா இருக்க.. மயங்கி வேற விழுந்த அதான்”, சரண்.
“ம்ம்… சரி நடத்துங்க..”, எனத் தலையைப் பின்னலிட்டு அவர்கள் முன் அமர்ந்தாள்.
அகரன் அவளுக்கு நெக்லஸ் அணிவிக்க, சரண் அவளின் கைகளில் வளையலும் மோதிரமும் போட்டுவிட்டான். தோடுகளை அகரன் போட்டுவிட, காலில் கொலுசை சரண் மாட்டினான்.
பத்து நிமிடத்தில் மூவரும் ஒன்றாக கீழே வர திலகவதியும் ராதாவும் கண்குளிரக் கண்டனர்.
“அப்படியே நில்லுங்க ராசாக்களா”, என சரோஜாதேவி பாட்டி உப்பு மிளகாய் மூவருக்கும் சுற்றி போட்டார்.
“ஊரு கண்ணு முழுக்க உங்க மேல தான் இருக்கு”, என மீனாட்சி பாட்டியும் நெட்டி முறித்தார்.
“ஓகே. நாங்க ரெடி. கிளம்பலாமா?”, நதியாள்.
“இருடா. தாத்தா வராங்க. அகரா… சாமி ரூம்ல அருவா இருக்கு எடுத்துக்க. இன்னிக்கு பூசை முடிஞ்சதும் ஐயனார் கைல குடுத்துடலாம். நீ கம்பெனி ஆரம்பிச்சி நல்ல நிலைமைக்கு உசரணும்னு நான் வேண்டிகிட்டது. நினைச்ச மாதிரி இப்ப நல்லா வந்துட்டு இருக்கு. இன்னிக்கு காணிக்கை சாத்திடலாம்”, மீனாட்சி.
“சரி பாட்டி எடுத்துக்கறேன்”,அகரன் பூஜை அறைக்குச் சென்றான்.
அவனின் பின்னே வால் பிடித்த மாதிரி சரணும் நதியாளும் சென்றனர்.
“வாவ்….. சூப்பர் அருவா அகன்”,என நதியாள் அருவாளைக் கண்டு கூறினாள்.
“அதுல என்ன இருக்கு வாவ்னு சொல்ல?”, சரண்.
“அருவாள்ல நிறைய விதம் இருக்காம் சரணா. ஐயனாருக்குன்னா ஸ்பெஷலா செஞ்சி குடுப்பாங்களாம். எவ்வளவு சார்ப்பா இருக்கு பாரு”, நதியாள் அருவாளைத் தொட்டுப் பார்த்தபடிக் கூறினாள்.
“சரி கைய கிளிச்சிக்காத. இங்க வா. தாத்தா வந்துட்டு இருக்காங்க”, என சரண் அவளை இழுத்துத் தன்னருகில் நிறுத்திக்கொண்டான்.
பின் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலுக்குக் கிளம்பினர்.
அகரன் கைகளில் அருவாளைத் தூக்கிக் கொண்டுக் கம்பீரமாக நடந்து வந்தான். அமைதி நிலவும் முகத்துடன் கையில் அருவாள் என பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்தான்.
அருகிலே சரணும் நதியும் வலவலத்துக் கொண்டே வந்தனர்.
இரவு பூஜை தொடங்க அமைதியாக நின்றிருந்தனர். ஐயனார் கோவில் பூசாரி சாமியாடி வாக்கு சொல்லி, பூசை, படையல் என அனைத்தும் முடிய நடு இரவாகி விட்டது.
அடுத்த நாள் கெடாவிருந்து இருப்பதாக கூறி மக்களை சாப்பிட அழைப்புவிடுத்து அனைவரும் வீடு திரும்பினர்.
காலை லேட்டாக எழுந்த நதி பொறுமையாகக் குளித்துவிட்டு நேவி புளூ ஜீன்ஸ், எமரால்டு புளூ கலர் குர்தி அணிந்து கீழே வந்தாள்.
“இன்னிக்கு இந்த சாக்கு துணிய தூக்கி போட்டுகிட்டியா? இரண்டு நாளா லட்சணமா பொண்ணா புடவை கட்டினப்ப எவ்வளவு நல்லா இருந்தது? இன்னிக்கும் கட்டிக்கலாம்ல”, ராதா வழக்கமானப் பாட்டை ஆரம்பித்தார்.
“இங்க பாரு ராதா. இரண்டு நாள் கோவில் திருவிழான்னு இருந்துச்சி அதான் நீ சொன்னத அமைதியா உடுத்திகிட்டேன். இனிமே என்னிஷ்டம் தான். இதுதான் எனக்கு வசதியா இருக்கு. எப்ப விருந்துக்கு போறோம்?”, நதியாள் ராதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டுப் பேசினாள்.
“இப்ப கிளம்பறது தான். உன்ன திலகாண்ணி காலைக்கு அங்க வரச்சொன்னாங்க. கிளம்பு. நான் இங்க வேலைய முடிச்சிட்டு வீடு பூட்டிட்டு வரேன். அப்பா நேரமா விருந்து தயாரிக்கற இடத்துக்கு போயிட்டாங்க”,ராதா அவளின் கையில் பால் கொடுத்துவிட்டு சென்றார்.
“சரிம்மா… நான் முன்ன போறேன். சீக்கிரம் வந்துடு. எதாவதுன்னா போன் பண்ணு”, எனப் பாலைக் குடித்துவிட்டுதித் துள்ளியபடிக் கிளம்பினாள் நதி.